சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் (உபா) அருந்ததி ராய் மீது வழக்குத் தொடர தில்லி துணைநிலை ஆளுநர் வழங்கியுள்ள அனுமதி சட்டரீதியான எதிர்ப்பை எதிர்கொள்ளக் கூடியது

வி.வெங்கடேசன் 

ஃப்ரண்ட்லைன்

புதுதில்லியில் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்த கருத்துகளுக்காக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் எழுத்தாளர் அருந்ததி ராய், காஷ்மீரைச் சேர்ந்த கல்வியாளர் ஷேக் ஷோகத் ஹுசைன் ஆகியோர் மீது வழக்குத் தொடர தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா 2024ஆம் ஆண்டு ஜூன் பதினான்காம் நாள் அனுமதி அளித்தார். அவரது உத்தரவு ஆழ்ந்த ஈடுபாடின்றி வழங்கப்பட்டதாகக் கருத இடமிருப்பதால் குற்றம் சாட்டப்பட்டவரின் சட்டரீதியான எதிர்ப்பிற்கு ஆளாக நேரிடலாம் என்று நம்புவதற்கு உரிய காரணங்கள் உள்ளன. 

காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் அளித்த புகாரின் பேரில் புதுதில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 2010ஆம் ஆண்டு நவம்பர் இருபத்தியேழாம் நாள் திலக் மார்க் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான குழு ‘சுதந்திரமே (ஆசாதி) ஒரே வழி’ என்ற பதாகையின் கீழ் 2020ஆம் ஆண்டு அக்டோபர் இருபத்தியோராம் நாள் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த மாநாட்டில் அருந்ததி ராய், ஹுசைன் உள்ளிட்டோர் ஆவேசமான உரைகளை நிகழ்த்தியதாகப் புகார் அளிக்கப்பட்டது.   

குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A, 153B, 504, 505ஆவது பிரிவுகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பதின்மூன்றாவது பிரிவின்கீழ் வழக்குத் தொடர தில்லி காவல்துறை அனுமதி கோரியிருந்தது. அவர்கள் மீது 153A, 153B மற்றும் 505 ஆகிய மூன்று இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர துணைநிலை ஆளுநர் கடந்த ஆண்டு அனுமதி அளித்தார். மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிப்பது, நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்வது குறித்து இந்திய தண்டனைச் சட்டத்தின் 153Aஆவது பிரிவு கையாளுகிறது. அதே வேளையில் அந்தச் சட்டத்தின் 153Bஆவது பிரிவு தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதகமான குற்றச்சாட்டுகள், வலியுறுத்தல்களுக்குத் தண்டனை வழங்குவதாகவும்,  சட்டப் பிரிவு 505 அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு செய்வதைக் கையாளும் வகையிலும் இருக்கின்றன.  

மேற்குறிப்பிடப்பட்ட விதிகளுக்குட்பட்டு நீதிமன்றங்களால் விதிக்கப்படும் அதிகபட்ச சிறைத்தண்டனை மூன்று ஆண்டுகள் மட்டுமே. ஓராண்டிற்கு மேல் ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக இருந்தால், நீதிமன்றங்கள் அந்தக் குற்றங்களை குற்றங்கள் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் நாளுக்குப் பின்னர் கவனத்தில் எடுத்துக் கொள்வதைக் கட்டுப்படுத்துகின்ற வரம்புக் காலம் மூன்று ஆண்டுகள் என்று பிரிவு 468இன் துணைப்பிரிவு (2)[c] குறிப்பிடுகிறது. வரம்புக் காலம் முடிந்த பிறகு அந்தக் குற்றத்தை எந்தவொரு நீதிமன்றமும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 468ஆவது பிரிவின் துணைப் பிரிவு (2)இல் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் கவனத்தில் கொள்ளக் கூடாது. இந்தக் குறிப்பிட்ட வழக்கில் அந்த வரம்புக் காலம் 2013ஆம் ஆண்டு அக்டோபர் இருபத்தியோராம் நாளிலேயே முடிவிற்கு வந்து விட்டது இங்கே கவனிக்கத்தக்கது.   

தேசத்துரோகம் செய்பவர்களுக்குத் தண்டனை வழங்குகின்ற இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A பிரிவின் கீழ் துணைநிலை ஆளுநர் அனுமதி வழங்கியிருப்பதும் பொருளற்றதாகும். அருந்ததி ராய் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் அந்தச் சட்டப் பிரிவு பயன்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பிட்ட அந்தச் சட்டப் பிரிவிற்கெதிராக நிலுவையில் உள்ள வழக்கைக் கருத்தில் கொண்டு அதன் செயல்பாட்டை 2022ஆம் ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. சட்டப்பிரிவு 124A இன் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச சிறைத்தண்டனை ஆயுள் சிறைத்தண்டனையாகும். உச்ச நீதிமன்றம் அந்தச் சட்டத்தை நிறுத்தி வைக்காமல் இருந்திருந்தால், அது ஒருவேளை இந்த வழக்கில் வரம்புக் காலம் என்ற கட்டுப்பாட்டைத் தவிர்க்க உதவியிருக்கலாம்.      

காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்றும், அது ஆயுதப் படைகளால் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டது என்றும், ஜம்மு காஷ்மீர் இந்தியாவில் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர் கடுமையாகப் பிரச்சாரம் செய்தார் என்று அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் தீர விசாரிக்கப்பட வேண்டிய நிலையிலேயே இருக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்களைத் திரட்டி அவற்றை தர்க்கரீதியான உச்சகட்டத்திற்கு தில்லி காவல்துறை இன்னும் கொண்டு வரவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சையத் அலி ஷா கிலானி, சையது அப்துல் ரஹ்மான் கிலானி ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர துணைநிலை ஆளுநர் அனுமதி அளிப்பதற்கு ஏதுவாக மீதமுள்ள இரண்டு குற்றவாளிகளுக்கு எதிராக தில்லி காவல்துறை என்னவிதமான ஆதாரங்களைச் சேகரித்துள்ளது என்பது பற்றி  தெளிவாக எதுவும் தெரிய வரவில்லை.   

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் 45ஆவது பிரிவை ஆழ்ந்து நோக்கும் போது, அதன் துணைப் பிரிவு (1) சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இழைக்கப்பட்ட குற்றத்தின் மீதான விசாரணைக்கு அனுமதி வழங்கக்கூடிய அதிகார அமைப்பு பற்றி கூறுவது தெரிய வரும். துணைப் பிரிவு (2)இல் அந்த அதிகார அமைப்பு அனுமதி வழங்கிடும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் குற்றம் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் மூன்றாவது அத்தியாயத்தின் கீழ் வரும் என்றால் மத்திய அரசு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு அதிகார அமைப்பின் மூலம் முன்னனுமதி வழங்கப்படவில்லையென்றால், நீதிமன்றம் அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது. அந்தக் குற்றம் நான்காவது மற்றும் ஆறாவது அத்தியாயங்களின் கீழ் வரும் போது, மத்திய அரசு அல்லது மாநில அரசு முன்னனுமதி வழங்காத வரையில் அந்தக் குற்றத்தை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது.

அருந்ததி ராய், ஹுசைன் ஆகியோருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தண்டனையைக் கையாளும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பதின்மூன்றாவது பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் மூன்றாவது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த விதியின் கீழ் நீதிமன்றத்தால் விதிக்கப்படும் அதிகபட்ச சிறைத்தண்டனை ஏழு ஆண்டுகளாகும்.     

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப் பிரிவு 45ஐ சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட விதிகள் - 2008 இன் னூன்றாவது மற்றும் நான்காவது விதிகளுடன் சேர்த்துப் படிக்க வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்படியான நடவடிக்கையில் காவல்துறை அதிகாரி ஒருவர் மூலம் வழக்கைப் பதிவுசெய்து அரசே காவல் துறை மூலமாக விசாரணையை மேற்கொள்கிறது. இந்த விதி ஒருவேளை தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்பதை அதனை இயற்றும் போதே உணர்ந்த மத்திய அரசு விசாரணையில் சேகரிக்கப்பட்ட முழு ஆதாரங்களையும் மறுபரிசீலனை செய்து வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பதைப் பரிந்துரை செய்வதற்கென்று சுயாதீனமான அதிகார அமைப்பை உருவாக்கியது. தன்னிச்சையாகச் செயல்படக் கூடும் என்று பலரும் அஞ்சிய காரணத்தால் இந்த ‘சுயாதீனமான அதிகார அமைப்பு’ இடைத்தாங்கலாக, வடிப்பானாகச் செயல்படும் என்பதால், அதுபோன்ற பாதுகாப்பு மிகவும் அவசியம் எனக் கருதப்பட்டது. 

விசாரணைக்கான அனுமதி குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 173இல் குறிப்பிடப்பட்டுள்ள இறுதி அறிக்கையின் ஒரு பகுதியாக இருக்கும் விசாரணை முகமையால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே வழங்கப்படுகிறது. விசாரணை முகமை தனது விசாரணையை முடிப்பதற்கு நூற்றியெண்பது நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.      

விசாரணை மேற்கொள்ளும் செயல்முறையும், அதிகார அமைப்பிடமிருந்து அனுமதியைப் பெறுவதற்கான செயல்முறையும் தனித்தனியானவை. குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 173இல் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை முகமை தாக்கல் செய்யும் இறுதி அறிக்கையே அதற்கான ஆதாரமாக இருக்கிறது என்று  சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட விதிகள் - 2008இன் மூன்றாவது விதி கருதுகிறது.  

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையைத் தயாரிக்கும் நிலையை தில்லி காவல்துறை நெருங்கி விட்டது என்று எவராலும் கூறி விட முடியாது. புலனாய்வு அதிகாரி சேகரித்த ஆதாரங்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கையை முழுமையாக ஆராயாமலேயே 45(2)ஆவது பிரிவின் கீழ் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஆணையம் வெளியிடும் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?   

அனுமதி வழங்குவதற்காக சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப் பிரிவு 45(2)ன் கீழ் வரும் அதிகார அமைப்பு விசாரணை அதிகாரியால் சேகரிக்கப்பட்ட சாட்சியங்களை முழுமையாகப் பயன்படுத்தி மத்திய அரசு, மாநில அரசு ஆகியவற்றின் பரிந்துரையின் அடிப்படையில் தன்னுடைய அறிக்கையைத் தயாரிக்க சட்டப்படி கடமைப்பட்டுள்ளது என்பதை மூன்றாவது விதி தெளிவாகக் கூறுகிறது. வெறும் சம்பிரதாயமாக இல்லாமல், தன்னுடைய ஈடுபாட்டை முழுமையாகப் பிரதிபலிப்பதாக அனுமதி வழங்கும் செயல் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அனுமதி உத்தரவின் செல்லுபடியாகும் தன்மை குறித்து ‘அனுமதி வழங்குவதை தகுதியான அதிகார அமைப்பு அனுப்பி வைக்கும் நேரத்தில் அனுமதிக்குப் போதுமான ஆவணங்கள் அந்த அதிகார அமைப்பிடம் இருப்பதாக அரசு தரப்பு நீதிமன்றத்தைத் திருப்திப்படுத்த வேண்டும். அனுமதி உத்தரவில் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளும், சூழ்நிலைகளும் மிக விரிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதால் அனுமதி உத்தரவிலிருந்தே அவை மிகத் தெளிவாகத் தெரிய வர வேண்டும்…’ என்று சிபிஐ எதிர் அசோக் குமார் அகர்வால் (2013) வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியது.

     

அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பொதுநலனையும், அனுமதி கோரப்பட்ட குற்றவாளிகளுக்குக் கிடைக்க வேண்டிய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு அனுமதி அளிப்பது தொடர்பான விதிகள் முழுமையான கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.   

முதல் தகவல் அறிக்கை, வெளிப்படுத்தல் அறிக்கைகள், சாட்சிகளின் வாக்குமூலங்கள், மீட்பு குறிப்புகள், வரைவு குற்றப்பத்திரிகை, தொடர்புடைய அனைத்து ஆவணங்கள் என்று ஒட்டு மொத்த பதிவையும் அனுமதி அளிக்கும் அதிகார அமைப்பிற்கு அரசு தரப்பு அனுப்பி வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அந்த வழக்கில் திட்டவட்டமாகக் கூறியது. அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பதிவேட்டில் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமான பொருள்/ஆவணம் ஏதேனும் இருந்தால், அவற்றின் அடிப்படையில் அனுமதி வழங்குவதை அதிகார அமைப்பு மறுக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.   

சம்பந்தப்பட்ட அனைத்து உண்மைகளையும்/பொருட்களையும் அதிகார அமைப்பு அறிந்து வைத்திருந்தது, அது சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது என்பது அனுமதி அளிக்கும் உத்தரவில் தெளிவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

தான் வழங்கியிருக்கும் அனுமதி குறித்து காரணத்தை விளக்கும் வகையிலான உத்தரவை துணைநிலை ஆளுநர் பொதுக்களத்தில் வெளியிடவில்லை என்பதால், அனுமதி வழங்குவதற்கு முன்பாக அவர் உச்ச நீதிமன்றம் கூறியவாறு தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாரா என்பதற்கான எந்தவித அறிகுறியும் கிடைக்கவில்லை.   

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வால் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட மற்றொரு வழக்கில் (2023 மே முதல் நாளன்று முடிவு செய்யப்பட்ட ஜட்ஜ்பிர் சிங் எதிர் தேசிய புலனாய்வு முகமை வழக்கு)  அனுமதி அளிக்கும் அதிகார அமைப்பைப் பொறுத்தவரை விசாரணை முகமையால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையை முழுமையாக ஆய்வு செய்த பிறகு அனுமதிக்கான பரிந்துரைகளை வழங்குவது கட்டாயம் என்றாக்கப்பட்டது.

காரணங்களை விளக்குகின்ற உத்தரவு எதுவும் துணைநிலை ஆளுநர் அலுவலகத்திலிருந்து வெளிவராத நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதித்திருப்பதில் உச்ச நீதிமன்றம் வகுத்துத் தந்துள்ள பாதுகாப்பு நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டிருக்கின்றனவா என்பது சந்தேகமே. .   

https://frontline.thehindu.com/columns/delhi-lg-sanction-for-arundhati-roy-prosecution-under-uapa-legal-issues/article68295917.ece


அருந்ததி ராயின் ‘தேசத்துரோக’ பேச்சு

(அவுட்லுக் இதழில் 2010ஆம் ஆண்டு டிசம்பர் முதல் நாளில் வெளியானது) 

குழுவினருக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்னிறுத்தி அருந்ததி ராய் மற்றும் பிறருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக இருந்த அருந்ததி ராயின் பேச்சு முழுவதுமாக இங்கே…

அருந்ததி ராய், சுத்தபிரதா சென்குப்தா, வரவர ராவ், சையத் அலி ஷா கிலானி, எஸ்.ஏ.ஆர்.கிலானி, ஷேக் சௌகத் ஹுசைன் ஆகியோர் தில்லியில் அக்டோபர் இருபத்தியோராம் நாள் நடைபெற்ற ‘ஆசாதி-தி ஒன்லி வே’ (சுதந்திரமே ஒரே வழி) என்ற கருத்தரங்கில் காஷ்மீர் பற்றி ஆற்றிய உரைகள் குறித்து ‘தேவையான விசாரணைகளுக்குப்’ பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக எந்தவொரு வழக்கையும் பதிவு செய்ய வேண்டியதில்லை என தில்லி காவல்துறை முடிவு செய்தது. உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ‘சகிப்புத்தன்மை, பொறுமையை அரசு கடைப்பிடிக்க வேண்டும்’ என்று கூறியிருந்த நிலையில், பாஜக தலைவர் அருண் ஜேட்லியின் விளம்பரப் பிரச்சார மேலாளரான சுஷில் பண்டிட் அந்த நிகழ்வுகள் குறித்து திருப்தி அடைந்தவராக இருக்கவில்லை. அந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று தில்லி மாஜிஸ்திரேட் முன்பு அவர் புகார் அளித்தார்.

124A (தேசத்துரோகம்). 153A (குழுவினருக்கு இடையே பகைமையை ஊக்குவித்தல்), 153B (தேசிய ஒருமைப்பாட்டிற்குப் பாதகமான குற்றச்சாட்டுகள், உறுதிப்படுத்துதல்கள்), 504 (அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கிலான அத்துமீறல்கள்), 505 (பொய்யான அறிக்கை, கலகம் அல்லது பொது அமைதிக்கு எதிரான குற்றங்களை இழைக்கும் நோக்கத்துடன் வதந்திகளைப் பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழ் நவம்பர் இருபத்தியொன்பதாம் நாளன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 121 (போர் அல்லது நாட்டிற்கு எதிரா போரை நடத்த முயல்வது) என்ற பிரிவின் கீழும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தை அணுகவிருப்பதாக புகார்தாரர்கள் வலியுறுத்தியிருந்தனர்.    

அருந்ததி ராய் இழைத்த குற்றம்தான் என்ன? அன்றைய தினம் அவர் என்ன பேசினார்? அவரது பேச்சின் எழுத்து வடிவம் இங்கே முழுமையாகத் தரப்படுகிறது:

S.A.R கிலானி: இப்போது அருந்ததி ராயைப் பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  

அருந்ததி ராய்: உங்களில் யாரிடமாவது வீசியெறிவதற்காக காலணிகள் ஏதேனும் இருந்தால் அவற்றை இப்போதே தயவு செய்து தூக்கி வீசுங்கள். 

பார்வையாளர்களில் சிலர்: நாங்கள் மிகவும் பண்பட்டவர்கள்...

அருந்ததி ராய்: நல்லது. மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பண்பட்டு இருப்பது சிறந்த விஷயம் அல்ல என்றாலும் அவ்வாறு கேள்விப்படுவது உண்மையில் மகிழ்ச்சியாகவே இருக்கிறது. எப்படி இருந்தாலும்…

[பார்வையாளர்களில் சிலர் குறுக்கிடுகின்றனர் (கேட்க முடியாததாக வீடியோவில் இருக்கிறது)]

S.A.R கிலானி: அதைப் பிறகு பேசலாம் - நீங்கள் பண்பட்டவர்கள் என்பதை இப்போது நிரூபியுங்கள்.

அருந்ததி ராய்: சுமார் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு முன்பு நான் ராஞ்சியில் இருந்தேன். நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கு எதிராக இந்திய அரசு நிகழ்த்திய ‘பசுமை வேட்டை நடவடிக்கை’ (ஆபரேஷன் கிரீன் ஹன்ட்) என்ற போருக்கு எதிரான மக்கள் தீர்ப்பாயம் அங்கே நடைபெறவிருந்தது. அந்த தீர்ப்பாயத்தில் இருந்து வெளியேறிய போது என்னுடைய முகத்தில் இடிக்குமாறு மைக்கை நீட்டிய தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ஒருவர் ‘மேடம், காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா, இல்லையா? காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா இல்லையா?’ என்று தொடர்ந்து மிகவும் ஆக்ரோஷமாக சுமார் ஐந்து முறை என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டார்.   

நான் அவரிடம் சொன்னேன் - ‘இங்கே பாருங்கள் - எவ்வளவு ஆக்ரோஷமாக, தொடர்ந்து இந்தக் கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டாலும் காஷ்மீர் ஒருபோதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததில்லை என்றே நான் பதில் கூறுவேன். இந்திய அரசும் கூட அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்பதை ஐநாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது அந்தக் கதையை இப்போது ஏன் மாற்ற முயல்கிறோம்? இங்கே பாருங்கள் -  இந்தியா இறையாண்மை கொண்ட தேசம், இறையாண்யுடனான ஜனநாயகம் என்று 1947ஆம் ஆண்டு நம்மிடம் கூறப்பட்டது. ஆனால் 1947ஆம் ஆண்டு நள்ளிரவில் இருந்து இந்திய அரசு என்ன செய்திருக்கிறது என்று பார்த்தால், இங்கே குடியேறியிருந்தவர்களின் கற்பனையால் - ஆங்கிலேயர்கள் 1899ஆம் ஆண்டில் இந்தியாவின் வரைபடத்தை வரைந்தனர் - சுதந்திர நாடாக மாறிய அந்தக் காலனிய நாடு சுதந்திரமடைந்த தருணத்திலேயே  காலனித்துவ சக்தியாக மாறிப் போனது.

மணிப்பூர், நாகாலாந்து, மிசோரமில் (ஒருவரின் தொலைபேசி ஒலிக்கிறது) மிசோரம், காஷ்மீர், தெலுங்கானாவில் நக்சல்பாரி கிளர்ச்சியின் போது, பஞ்சாப், ஹைதராபாத், கோவா, ஜுனாகரில் இந்திய அரசு ராணுவ ரீதியாக தலையிட்டது... நக்சலைட்டுகள் நீண்ட காலப் போரில் நம்பிக்கை கொண்டிருப்பதாக இந்திய அரசாங்கம், இந்திய அரசு, இந்திய மேல்தட்டினர் அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் 1947ஆம் ஆண்டில் இருந்து இடைவிடாமல் தனது சொந்த மக்களுக்கு எதிராக அல்லது தனது சொந்த மக்கள் என்று கூறிக் கொண்டவர்களுக்கு எதிராக நீடித்த போரை நடத்திய ஓர் அரசையே - இந்திய அரசு - உண்மையில் நாம் பார்த்திருக்கிறோம். எந்த மக்களுக்கு எதிராக அவர்கள் போர் தொடுத்தார்கள் என்று பார்த்தால் - நாகாக்கள், மிசோக்கள், மணிப்பூரிகள் மற்றும் அசாம், ஹைதராபாத், காஷ்மீர், பஞ்சாப் போன்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களே இருந்தனர். முஸ்லீம்கள், பழங்குடியினர், கிறிஸ்தவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் என்று சிறுபான்மையினராக இருந்தவர்கள் மீது உயர்சாதி ஹிந்து அரசின் முடிவில்லாத போராகவே அந்தப் போர் எப்போதும் இருந்துள்ளது. நம் நாட்டின் நவீன வரலாறாக அதுதான் இருக்கிறது.   

​​அமர்நாத் யாத்திரைக்காக 2007ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு எதிராக காஷ்மீரில் கிளர்ச்சி நடந்த சமயத்தில் நான் ஸ்ரீநகரில் இருந்தேன். அங்கே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இளம் பத்திரிகையாளர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன். இந்தியர் ஒருவர் சாலையில் தனியாக நடந்து செல்வதைக் கண்ட போது அதைத் தன்னால் நம்ப முடியவில்லை என்று என்னிடம் கூறிய அந்தப் பத்திரிகையாளர் ‘எனக்கென்று ஏதாவது உங்களால் கூற முடியுமா?’ என்று என்னிடம் கேட்டார். நான் ‘சரி, உங்களிடம் பேனா இருக்கிறதா?’ என்று அவரிடம்  கேட்டேன். ‘நான் கூறுவது தவறாக வெளிப்படுவதை நான் விரும்பவில்லை’ என்று அவரிடம் அதற்கான காரணம் சொன்னேன். ‘எழுதிக் கொள்ளுங்கள் - இந்தியாவிடமிருந்து காஷ்மீருக்கு சுதந்திரம் தேவைப்படுவதைப் போல காஷ்மீரிடமிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் தேவைப்படுகிறது’ என்றேன். இந்தியா என்று நான் சொன்னது இந்திய அரசைக் குறிக்கவில்லை, இந்திய மக்களை என்று அவரிடம் தெளிவுபடுத்தினேன். ஏனெனில் 1.2 கோடி மக்கள் வசிக்கும் அந்தப் பள்ளத்தாக்கு இன்றைக்கு காஷ்மீர் ஆக்கிரமிப்பின் விளைவாக ஏழு லட்சம் பாதுகாப்புப் படையினருடன் உலகிலேயே அதிகம் ராணுவமயமாக்கப்பட்ட மண்டலமாக இருந்து வருகிறது. அந்த ஆக்கிரமிப்பை இந்திய மக்களாகிய நாம் சகித்துக் கொள்வது ஒரு வகையில் நமது ரத்த ஓட்டத்தில் தார்மீகச் சீரழிவு கலந்து கொள்வதை அனுமதிப்பதைப் போலவே இருக்கிறது. 

ஊடகங்கள் இவற்றையெல்லாம் வெளிப்படுத்தாது பாசாங்குடன் இருக்க முயல்வது பற்றி நமக்கெல்லாம் நன்கு தெரியும்… ஒருவேளை அது நம் அனைவருக்கும் தெரியாமல் இருக்கலாம்… ஆனால் ஏகே-47 துப்பாக்கிகளின் வழியாக தங்கள் சுவாசத்தை உள்ளிழுத்து, வெளிவிடுவதைத் தவிர காஷ்மீரிகளுக்கு வேறு வழியில்லை என்பது காஷ்மீருக்குச் சென்ற நம் அனைவருக்குமே நன்கு தெரியும். எனவே ஊடகங்கள் கூறுவதைப் போல எதுவும் நடக்கவே இல்லை எனக் கருதுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. அங்கே பல விஷயங்கள் நடந்தேறியுள்ளன. ‘பொதுவாக்கெடுப்பு உங்களுக்கு எதற்கு? வாக்களிப்பு இருந்தது, மக்கள் இந்தியாவிற்காக வாக்களித்து இருக்கிறார்கள்’ என்று இந்திய அரசு ஒவ்வொரு முறை தேர்தலின் போதும் வாக்களிக்க வரும் மக்களிடம் கூறி வருகிறது.      

நாம் இப்போது நமது சிந்தனையைச் சற்று விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன். இன்றைக்கு நடக்கும் இந்தக் கூட்டம் குறித்து மிகப்  பெருமையாக இருக்கிறது - ஒருவகையில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க  கூட்டம் என்றே நினைக்கிறேன். இந்த வெற்று வல்லரசின் தலைநகரில் - எண்பத்து மூன்று கோடி மக்கள் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் வாழ்ந்து வரும் வல்லரசு - நடக்கின்ற இந்தக் கூட்டம் உண்மையிலே வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கூட்டமாகும். இந்தியக் குடிமகனாக ஒருவர் இப்போது எந்த இடத்தில் நிற்கிறார், அவரால் என்ன சொல்ல முடியும், என்ன சொல்ல அவர் அனுமதிக்கப்படுகிறார் என்பதை அறிவது ​​சில சமயங்களில் மிகவும் கடினமான காரியமாகவே இருக்கிறது. ஏனென்றால் மக்கள் இப்போது சுதந்திரம் குறித்த காஷ்மீரின் பிரச்சனைகளைப் பிரச்சனையாக்குவதற்காகப் பயன்படுத்துகின்ற வாதங்கள் அனைத்தும் பிரிட்டிஷ் காலனித்துவத்திடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக இந்தியா போராடிய போது இந்தியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டவையே. கொச்சையாகச் சொல்வதென்றால் அப்போது ‘பூர்வீகவாசிகள் சுதந்திரத்திற்கு தயாரானவர்களாக இல்லை, பூர்வீகவாசிகள் ஜனநாயகத்திற்குத் தயாராக இல்லை’ என்ற வாதமே முன்வைக்கப்பட்டது. பிற சிக்கல்கள் இருந்ததும் உண்மைதான். அதாவது அம்பேத்கர், காந்தி, நேருவுக்கு இடையே நடந்த பெரும் விவாதங்கள் - அவை உண்மையான விவாதங்களாக இருந்தன. இந்திய அரசு கடந்த அறுபது ஆண்டுகளாக என்னதான் செய்திருந்தாலும், சுதந்திரத்தின் பொருள் குறித்து இந்த நாட்டில் உள்ள மக்கள் வாதிட்டு, விவாதித்து அதனை விரிவுபடுத்திக் கொண்டுள்ளனர் என்பதே உண்மை.     

அணிசேரா நாடு என்று ஒருகாலத்தில் தன்னைத்தானே அழைத்துக் கொண்ட, பெருமிதத்துடன் தலை நிமிர்ந்து நின்ற இந்தியா இன்றைக்கு முழுக்கமுழுக்க அமெரிக்காவின் காலடியில் சாஷ்டாங்கமாக வீழ்ந்திருக்கும் நிலைக்கு வந்திருப்பதன் காரணமாக நமக்கான பலத்தை நாம் இழந்துள்ளோம்.  நம்மைச் சுரண்டுகின்ற காலனித்துவப் பொருளாதாரம் நம் மீது திணிக்கப்படுவதே இந்திய காவல்துறை, துணைராணுவம் மற்றும் மத்திய இந்தியா முழுவதும் ராணுவம் குவிக்கப்படுவதற்கான காரணமாக உள்ளது. சென்செக்ஸ் அதிக அளவிற்கு  அதிகரித்திருக்கும் போதிலும் நமது பொருளாதாரம் சீரழிந்து இன்றைக்கு நாம் அடிமைதேசமாகவே இருக்கிறோம்.      

காடுகளில் இருக்கும் மாவோயிஸ்டுகள் அல்லது தெருக்களில் கல் வீசுபவர்கள் என்று தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரும் போராளிகள் என நம் முதுகில் நாமே தட்டிக் கொள்வது நமக்கு மிகவும் எளிதாக இருப்பதே நான் இந்த உரையாடலை இன்னும் விரிவாக்க வேண்டும் என்று சொன்னதற்குக் காரணமாகும். உண்மையில் மிகவும் தீவிரமான ஒன்றை எதிர்த்துப் போராடி வருவதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆதிவாசிகளின் வில், அம்புகள் மற்றும் இளைஞர்களின் கைகளில் இருக்கும் கற்கள் போன்றவை இன்றியமையாதவைதான் என்றாலும் சுதந்திரத்தை அவை மட்டுமே நமக்குப் பெற்றுத் தந்து விடப் போவதில்லை என்பதால் என்னிடம் அச்சம் தோன்றுகிறது.

சுதந்திரத்தைப் பெறுவதற்கு நாம் தந்திரோபாயத்துடன் இருக்க வேண்டும். நம்மை நாமே கேள்விகள் கேட்டுக் கொள்ள வேண்டும். கூட்டணிகளை, பொறுப்புள்ள கூட்டணிகளை உருவாக்கிட வேண்டும். ஏனெனில்... சோவியத் கம்யூனிசத்திற்கு எதிரான தனது போரை முதலாளித்துவம் 1986ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மலைகளில் வென்ற போது, உலகம் முழுக்க மாற்றம் ஏற்பட்டது. அதனால் உருவான ஒற்றைமுனை உலகில் தன்னை மறுசீரமைத்துக் கொண்ட போது இந்தியா இரண்டு விஷயங்களைச் செய்தது. பாபர் மசூதிக்கான பூட்டு மற்றொன்று இந்தியச் சந்தைகளுக்கான பூட்டு என்று இரண்டு பூட்டுகளை அந்த மறுசீரமைப்பு திறந்து வைத்தது. அதன் மூலம் ஹிந்து பாசிசம், ஹிந்துத்துவ பாசிசம் மற்றும் பொருளாதார சர்வாதிகாரம் என்று இருவகையான சர்வாதிகாரம் உருவானது.

அந்த இரண்டு சர்வாதிகாரங்களும் தங்கள் சொந்த வகையிலான பயங்கரவாதத்தை உருவாக்கித் தந்தன. விளைவாக இஸ்லாமிய பயங்கரவாதிகள், மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கிடைத்தனர். அந்தச் செயல்முறையே இந்த நாட்டில் எண்பது சதவிகித மக்களை ஒரு நாளைக்கு இருபது ரூபாய் என்ற நிலையில் வாழ வைத்துள்ளது. நம் அனைவரையும் அது பிளவுபடுத்தி வைத்ததன் காரணமாக, மிகுந்த ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய நாம் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதிலேயே நேரத்தைச் செலவிட்டு வருகிறோம்.     

மணிப்பூரில், நாகாலாந்தில் நடக்கும் போராட்டங்கள், காஷ்மீர் போராட்டம், மத்திய இந்தியாவில் நடக்கும் போராட்டத்தில் ஏழைகள், நடைபாதைவாசிகள், சிறுவியாபாரிகள், சேரிவாசிகளுக்கிடையே கூடுதல் ஒற்றுமை இருக்க வேண்டும். இந்தப் போராட்டங்களை நீதிக்கான சிந்தனை இணைத்து வைக்க வேண்டும். சில போராட்டங்கள் நீதிக்கானவையாக இல்லாமல் இருக்கலாம். விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற போன்ற இயக்கங்கள் நடத்துகின்ற போராட்டங்கள் பாசிசத்திற்கான போராட்டங்களாக, அநீதிக்கான போராட்டங்களாக மட்டுமே இருக்கின்றன. நம்மை அதுபோன்ற இயக்கங்களுடன் நாம் இணைத்துக் கொள்ள மாட்டோம். இயக்கங்கள் அனைத்தும், தெருவில் இறங்கியிருக்கும் அனைவரும், எழுப்புகின்ற முழக்கங்கள் அனைத்தும் நீதிக்கானவையாக இருப்பதில்லை.   

அமர்நாத் யாத்திரையின் போது காஷ்மீரில் தெருக்களில் இருந்தபோதும், சமீபத்தில் காஷ்மீருக்குச் சென்றதில்லை என்றாலும் இன்றும்கூட என்னால் போராட்டங்களைக் காண முடிந்துள்ளது. மக்கள் நடத்தும் போராட்டங்களைக் கண்டு. போராடும் இளைஞர்களின் போராட்டங்களைக் கண்டு என் மனம் ததும்புகிறது.  அவர்கள் வீழ்த்தப்படுவதை நான் விரும்பவில்லை. தங்களுடைய தலைவர்களால் அவர்கள் ஏமாற்றப்படுவதை நான் விரும்பவில்லை. ஏனென்றால் இந்தப் போராட்டம் நீதிக்கான போராட்டம் என்று உறுதியாக நம்புகிறேன். அது ‘எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதனால் மற்றவர்கள் நசுக்கப்பட்டாலும் பரவாயில்லை’ என்று தங்களுக்கான நீதியை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்ட போராட்டமாக இருக்கவில்லை. அவ்வாறு இருந்தால் அது சரியுமல்ல.    

ஸ்ரீநகரின் தெருக்களில் என் இதயம் நொறுங்கிப் போகுமாறு ‘பசியுடன், நிர்வாணமாக இருக்கும் ஹிந்துஸ்தான், உயிரினும் மேலான அன்பு பாகிஸ்தான்’ என்று மக்கள் முழக்கமிடுவதைக் கேட்டு 2007ஆம் ஆண்டு நான் எழுதியவை இன்னும் நன்கு நினைவில் இருக்கிறது. ‘அப்படியில்லை. பசியுடன், நிர்வாணமாக இருக்கும் ஹிந்துஸ்தானே உங்களுடன் இருக்கிறது. நியாயமான சமுதாயத்திற்காகப் போராடுகிறீர்கள் என்றால் அதிகாரமற்றவர்களுடன் உங்களை நீங்கள் இணைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறியிருந்தேன்.

இன்றைக்கு இங்கிருக்கும் இந்திய மக்கள் இந்திய அரசை எதிர்த்து தங்கள் வாழ்நாளைக் கழித்தவர்கள். நான் பெரிய அளவிலான அணைகளுக்கு எதிராக நர்மதா பள்ளத்தாக்கில் நடைபெற்ற போராட்டத்துடன் நீண்ட காலத் தொடர்புடையவள் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். என்னைப் பற்றி சொல்லும்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு, நர்மதா பள்ளத்தாக்கு என்று இரண்டு பள்ளத்தாக்குகளைப் பற்றி அதிகம் நினைத்துக் கொண்டிருப்பவள் நான் என்றே கூறிக் கொள்வேன். அடக்குமுறைகளைப் பற்றி நர்மதா பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் பேசுகிறார்கள் என்றாலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ளதைப் போன்ற அடக்குமுறையை அனுபவிக்காத காரணத்தால், அந்த மக்களுக்கு உண்மையில் அடக்குமுறை என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆனாலும் அவர்களிடம் இந்த பூமியின் - ஏகாதிபத்திய உலகின் பொருளாதாரக் கட்டமைப்புகள், அவை என்ன செய்யும் என்பது பற்றி, பெரிய அணைகள் சமத்துவமின்மையை எவ்வாறு உருவாக்கும் என்பது குறித்து  மிக  மிக நுட்பமான புரிதல் உள்ளது.      

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உங்களுக்கு ரகசிய நடவடிக்கைகள் மீதான அறுபது ஆண்டுகால அடக்குமுறை, உளவு பார்த்தல், உளவுத்துறை நடவடிக்கைகள், மரணங்கள், கொலைகள் குறித்த நுட்பமான புரிதல் உள்ளது. ஆனாலும் உலகம், பொருளாதாரக் கட்டமைப்புகள் எவ்வாறாக இருக்கின்றன என்பது குறித்த புரிதலில் இருந்து இன்றைக்கு உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்தானே? என்ன மாதிரியான காஷ்மீருக்காக நீங்கள் போராடப் போகிறீர்கள்? நாங்கள் அந்தப் போராட்டத்தில் உங்களுடன் இருப்பதால் - நாங்கள் உங்களோடுதான் இருக்கிறோம் - அது நீதிக்கான போராட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம், நம்புகிறோம். அறுபத்தி எட்டாயிரம் காஷ்மீரி முஸ்லீம்களைக் கொன்றுவிட்டு நம்மை மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ள முடியாது என்பதால் இந்திய அரசு நம் மீது வீசும்  ‘மதச்சார்பின்மை’ என்ற வார்த்தை வெறுமனே வெற்று வார்த்தையாகவே இருக்கிறது என்பதை நாம் இன்று நன்கு அறிந்திருக்கிறோம். குஜராத்தில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்படுவதை அனுமதித்து விட்டு நம்மை மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ள முடியாது. அதைக் கண்டு கொள்ளாமல் ‘சிறுபான்மையினர் மோசமாக நடத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்கிறோம்’ என்று நீங்கள் திரும்பிக் கொள்ள முடியாது. ஆக எந்த மாதிரியான நீதிக்காக நீங்கள் போராடுகிறீர்கள்? சுதந்திரம் பற்றி தங்களிடம் உள்ள சிந்தனையை இளைஞர்கள் மேலும் விரிவுபடுத்திக் கொள்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் எதிர்த்துப் போராடி வரும் அரசும், உங்கள் எதிரிகளும் உங்களைப் பிளவுபடுத்துவதற்கு அதையே பயன்படுத்துகிறார்கள். அதுவே உண்மை.      

[பார்வையாளர்களில் சிலர்: ‘பண்டிட்டுகளுக்கு என்ன ஆனது தெரியுமா? (அவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்கக்கூடியதாக இல்லை)….]

அருந்ததி ராய்: காஷ்மீரி பண்டிட்டுகளின் கதை எனக்குத் தெரியும். பனூன் காஷ்மீர் பண்டிதர்கள் சொன்ன கதை பொய் என்பதும் எனக்குத் தெரியும். இவ்வாறு சொல்வது, நான் அநீதி எதுவும் இழைக்கப்படவில்லை என்று  சொல்வதாகாது.

[பார்வையாளர்களில் சிலர் ஒரே நேரத்தில் குறுக்கீடு செய்ததால் பேசுவது தெளிவாகக் கேட்கவில்லை… ‘ஹிந்துக்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் தெரியுமா?’… ஒரே குழப்பம்.. யார் பேசுவதையும் கேட்க முடியவில்லை].

அருந்ததி ராய்: சரி. தொடரலாம் என்று நினைக்கிறேன்... (கூட்டத்தில் ஒரு பகுதியினர் கூச்சலாக வாதிடுகின்றனர்).

S.A.R கிலானி: அனைவரையும் இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அருந்ததி ராய்: சரி, இந்த இடையூறு ஒரு தவறான புரிதலின் அடிப்படையிலேயே   எழுந்ததாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இங்கே நீதி பற்றி நான் பேசத் தொடங்கினேன். நீதியைப் பற்றி பேச ஆரம்பித்த நான் காஷ்மீரி பண்டிட்டுகளுக்கு நடந்தது சோகம் என்றே சொல்ல வந்தேன். எனவே நீங்கள் அனைவரும் ஏன் கத்த ஆரம்பித்தீர்கள் என எனக்குத் தெரியவில்லை. அது ஒரு மிகப் பெரிய சோகம் என்றே நான் கருதுகிறேன். நியாயத்தைப் பற்றி பேசும்போது, ​​​​அது அனைவருக்குமான நியாயமாகவே இருக்க வேண்டும். இங்கே சிறுபான்மையினருக்கான - இன அடிப்படையில் அல்லது மதரீதியான அல்லது சாதி அடிப்படையிலான சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவருக்குமான இடம் பற்றி பேசும் நாம் பெரும்பான்மைவாதம் மீது நம்பிக்கை கொள்வதில்லை. அதனால்தான் காஷ்மீரில் உள்ள ஒவ்வொருவரும் எப்படிப்பட்ட சமூகத்திற்காக தாங்கள் போராடுகிறோம் என்பது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என்று நான் இங்கே கூறினேன். நீங்கள் போராடும் சமூகமான காஷ்மீர் மிகவும் பரந்துபட்ட சமூகம் என்பதால், அந்த விவாதம் இந்தப் போராட்டத்தை பிளவுபடுத்த முயலுகின்ற, சுதந்திரத்திற்கு எதிரான விமர்சகர்கள் அல்லது மக்களிடமிருந்து வர வேண்டியதில்லை. உங்களிடமிருந்தே அது எழ வேண்டும். அது ‘அவர்களுக்குச் சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாது, அவர்கள் கில்கிட், பல்திஸ்தானைக் குறித்து பேசுகிறார்களா, ஜம்முவைப் பற்றி என்ன சொல்கிறார்கள்? லடாக் பற்றி என்ன சொல்கிறார்கள்?’ என்று வெளியே இருந்து பேசுபவர்களுக்கான இடமாக இருக்கக் கூடாது. ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் தாங்களாக நடத்திக் கொள்ளக்கூடிய விவாதங்களாக மட்டுமே  அவை இருக்க வேண்டும். அவர்கள் இதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.   

கூச்சலிட்டு விஷயங்களைத் திசைதிருப்ப முயல்வது முற்றிலும் அர்த்தமற்றதாகும். ஏனென்றால் காஷ்மீரில் கழித்த அனைத்து நேரங்களிலும் பண்டிட்டுகளைத் திரும்ப வரவேற்கிறோம் என்று காஷ்மீர் மக்கள் சொல்வதை மட்டுமே நான் கேட்டிருக்கிறேன். அவ்வாறு கூறுவதை முழுமையாக நம்பும்  அங்கே வாழும் மக்களை நான் நன்கு அறிவேன். ஆக இந்த அரசியல் விவாதங்களை நடத்தும் போது காஷ்மீரில் சமீபத்தில் நடந்த போராட்டத்தைக் கவனித்துப் பார்த்திருக்கும் நான் நிராயுதபாணியான மக்கள், கற்களை ஆயுதமாக ஏந்திய இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பலரும் வீதிகளில் துப்பாக்கி ஏந்திய மிகப் பெரிய ராணுவத்தை எதிர்கொள்வதைக் கண்டு அவர்களுக்கு உதவி செய்ய முன்வரா விட்டாலும், அவர்களுக்கு மரியாதை அளிக்காமல் உலகில் எவராலும் இருக்க முடியாது என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.   

இந்த போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்கள், அதை மேலும் முன்னெடுத்துச் செல்ல நினைப்பவர்களின்  கைகளில்தான் தீர்வு இருக்கிறது. நீங்கள் அதை அப்படியே விட்டுவிட முடியாது. ஏனென்றால் மக்களைக் கொல்வது மட்டுமே இந்திய அரசின் மிகப்பெரிய தந்திரம் அல்ல என்பது உங்களுக்குத் தெரிந்ததே. அது அரசின் இரண்டாவது பெரிய தந்திரமாகும். காத்திருப்பு, காத்திருப்பு, காத்திருப்பு மற்றும் காத்திருப்பு என்று தொடர்ந்து காத்திருக்க வைப்பதன் மூலம் அனைவரின் ஆற்றல்களும் குறைந்து விடும் என்று நம்புவதே அரசிடமுள்ள சிறப்பான முதல் தந்திரமாகும். நெருக்கடி மேலாண்மை - சில நேரங்களில் அது ஒரு தேர்தலாக, சில நேரங்களில் வேறு ஏதாவது ஒன்றாக இருக்கலாம். ஆனால் தெருக்களில் நடக்கும் நேரடி மோதல் போன்ற ஏதாவதொன்றையே மக்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. இது ஏன் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் - நம்பமுடியாத அளவிற்கு அட்டூழியங்களைச் செய்யும் நாகா பட்டாலியன் சத்தீஸ்கரில் ஏன் இருக்கிறது என்று நாகாலாந்து மக்கள் தங்களைத் தாங்களே கண்டிப்பாகக் கேட்டுக் கொள்ள வேண்டும். சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப், ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் கொண்டு பள்ளத்தாக்கை அடைத்து வைத்ததை காஷ்மீரில் இவ்வளவு காலம் பார்த்துவிட்டு, சத்தீஸ்கருக்குப் போகும் வழியில் காஷ்மீரி பிஎஸ்எஃப். காஷ்மீரி சிஆர்பிஎஃப் சத்தீஸ்கரில் மக்களைக் கொல்வதைக் கண்டேன். கற்களை எறிவதைக் காட்டிலும் அதிக எதிர்ப்பைக் காட்டும் வழிகள் நடப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் ‘மக்களை இந்த அரசு எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறது?’ என்ற கேள்வியை உங்களிடம் நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும்.  

இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் அரசாக இருந்தாலும் அல்லது காஷ்மீர், நாகாலாந்து, சத்தீஸ்கரில் உள்ள இந்திய அரசாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய  ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை நிர்வகிக்க மேல்தட்டினரை உருவாக்கும் தொழிலில் ஈடுபடுவதால், நீங்கள் முதலில் உங்கள் எதிரியை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். புத்திசாலித்தனமாக, அரசியல் ரீதியாக - சர்வதேச அளவில், உள்நாட்டில் மற்றும் மற்ற எல்லா வழிகளிலும் - உங்களுக்கான கூட்டணியை தந்திரோபாயமான வழிகளில் நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் மீன் தொட்டியின் சுவர்கள் மீது ஆவேசமாக நீந்துகின்ற மீன்கள் மோதி இறுதியில் சோர்வடைந்து போவதைப் போல நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். ஏனெனில் அந்த சுவர்கள் மிகவும் வலுவானவை.   

இதனைக் கூறி உங்களிடமிருந்து நான் விடைபெறுகிறேன்: நீதியைப் பற்றி மட்டுமே சிந்தியுங்கள். அநீதியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். எனக்கு நீதி வேண்டும் - அது அடுத்த பையனுக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, அடுத்துள்ள பெண்ணுக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை’ என்று மட்டும் சொல்லாதீர்கள். ஏனெனில் நீதி என்பது ஒருமைப்பாட்டிற்கான திறவுகோலாக. ஒருமைப்பாடு உண்மையான எதிர்ப்பிற்கான திறவுகோலாக இருக்கிறது.     

நன்றி.

https://www.outlookindia.com/national/the-seditionist-speech-news-268505

 

Comments