தா.சந்திரகுரு
1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் இரண்டாம் நாள் - கேரள மாநிலத்தின் அன்றைய முதல்வர் ஈ.கே.நாயனார் புதிதாக கண்ணூர் பல்கலைக்கழகத்தைத் துவக்கி வைத்தார். 1996 ஜனவரி முதல் நாள் முதல் 1999 டிசம்பர் 31 வரையிலும் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக பேரா.அப்துல் ரஹிமான் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார். புதிதாகத் துவங்கப்பட்ட அந்தப் பல்கலைக்கழகம் தேவையான நிதிக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, மிகவும் சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை அப்போது நிலவியது. அந்தச் சூழலில் 2000ஆம் ஆண்டு மே பதினைந்தாம் நாள் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பேராசிரியர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கான நிதியுதவிகளைப் பெறுவதற்காக, பல்கலைக்கழக மானியக்குழுவின் 12(B) அங்கீகாரத்தை உடனடியாகப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அதன் பொருட்டு அந்தப் பேராசிரியர் கண்ணூர் நகரத்தின் சிறிய வளாகத்திற்குள் மழை பெய்தால் ஒழுகக்கூடியதாக இருந்த வாடகைக் கட்டடங்களில் இயங்கி வந்த பல்கலைக்கழகத்தை மாங்காட்டுப்பரம்பாவில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த இரண்டாவது வளாகத்திற்கு மாற்றியமைப்பதற்கான ஏற்பாடுகளை துணைவேந்தராகப் பதவியேற்றவுடனேயே துவங்கினார். ஓராண்டு கடந்த நிலையில் மாநிலத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஏ.கே.அந்தோணி 2001 மே 17 அன்று மாநில முதல்வரானார்.
மாங்காட்டுப்பரம்பாவில் நூறு ஏக்கர் பரப்பளவில் பல்கலைக்கழகத்திற்கென்று
ஒதுக்கப்பட்ட இடத்தில் கட்டி முடிக்கப்பட்டிருந்த கட்டிடங்களுக்கு
பல்கலைக்கழக அலுவலகங்களை மாற்றியமைத்துக் கொள்வது என்று பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருந்த நிலையில்,
புதிதாகப் பதவியேற்ற அரசாங்கம் அந்த அலுவலகங்களை நகராட்சி எல்லைக்குள்ளாகவே வைத்துக் கொள்ள விரும்பியது. பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டிருந்த
துணைவேந்தருக்கு மாநில அரசுடன் மோத வேண்டிய நிலைமை உருவானது நெருக்கடிகள் முற்றின.
பல்கலைக்கழக இணை துணைவேந்தர் எம்.ஓ.கோஷி, பல்கலைக்கழகப் பதிவாளர் பி.எச்.சுப்ரமணியன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சி.பி.சிவதாஸ், ஜேம்ஸ் மேத்யூ, ஏ.ஜே.ஜோசப் ஆகியோருடன் 2001 ஆகஸ்ட் 28 அன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்களிடம் பல்கலைக்கழகத்தின் பிரச்சனைகளை அவர் மிக எளிமையாக விளக்கினார். பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகம் மாற்றப்படுகிற வரைக்கும் நகரில் இருக்கும் வேறொரு வாடகைக் கட்டிடத்தில் பல்கலைக்கழகம் இயங்க வேண்டும் என்று சிலர் கூறி வருவதைப் பற்றி துணைவேந்தரிடம் அப்போது கேள்வியெழுப்பப்பட்டது. ‘பல்கலைக்கழகம் என்றால் என்னவென்பதை அறியாதவர்களே அவ்வாறு கூறுகின்றனர். பல்கலைக்கழக அலுவலகங்கள் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் மாங்காட்டுப்பரம்பா வளாகத்திற்கு உடனடியாக மாற்றப்படவில்லை என்றால், மழையில் ஒழுகும் வாடகைக் கட்டங்களிலேயே மேலும் நான்கு வருடங்களுக்குப் பல்கலைக்கழகம் செயல்பட வேண்டியிருக்கும். வளாகத்தை மாற்றுவதில் ஏற்படுகின்ற அத்தகைய தாமதங்கள் பல்கலைக்கழக வளர்ச்சிக்கு முற்றிலும் இடையூறாகவே இருக்கும்’ என்று அவர் உறுதியாகப் பதிலளித்தார்.
பல்கலைக்கழக அலுவலகங்களை மாற்றுவது தொடர்பாக அதுவரையிலும்
நடந்துள்ள அனைத்தையும் துணைவேந்தர் விளக்கிக் கூறினார். அரசுடன் சில கருத்து வேறுபாடுகள்
இருந்த போதிலும், பல்கலைக்கழகத்திற்கு வேண்டிய அளவிற்கு நிலங்களை மாநில அரசாங்கம் ஒதுக்கித் தருமானால், பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகத்தை நகராட்சி
எல்லைக்குள்ளேயே வைத்துக் கொள்வதில் தங்களுக்கு எவ்விதமான ஆட்சேபணையும் இல்லை என்று
பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததைக் குறிப்பிட்ட துணைவேந்தர், நகராட்சி
எல்கைக்குள்ளாக தகுந்த ஓரிடத்தைத் தருவதற்கான திட்டம் எதனையும் அரசு தரப்பிலிருந்து
அறிவிக்க யாரும் முன்வரவில்லை என்பதையும் சுட்டிக் காட்டினார். அந்த நிலையில்,
இரண்டு மாதங்களுக்குள்ளாக நகராட்சிப் பகுதிக்குள் இடத்தைத் தேடித் தேர்வு செய்து தரும்
பணியை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும், கண்ணூர் நகராட்சியின் முன்னாள்
தலைவருமான பி.குன்னிமுகமது, தொட்டடா எஸ்.என்.கல்லூரியின் முன்னாள் முதல்வரான பேரா.ஓ.பி.தனலட்சுமி,
ஓய்வுபெற்ற அரசுப் பொறியாளர் எஸ்.பி.பவித்ரசாகர் ஆகிய மூவர் அடங்கிய குழுவிடம் பல்கலைக்கழகம்
ஒப்படைத்துள்ளது என்று கூறிய துணைவேந்தர் அந்தக் குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர்
14 அன்று நடைபெறவிருப்பதாகத் தெரிவித்தார்.
பல்வேறு இடங்களில் வளாகங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்ட
கண்ணூர் பல்கலைக்கழகத்தின் முதலாவது வளாகம் தலச்சேரியில் இருப்பதாகவும், இப்போது இரண்டாவது
வளாகமாக மாங்காட்டுப்பரம்பா வளாகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள்
பைய்யனூரில் மற்றொரு வளாகம் அமைக்கப்படுவதற்கான பணிகளைத்
துவங்கியுள்ளதாகவும் தெரிவித்த துணைவேந்தர், பல்கலைக்கழக மானியக் குழுவின் 12(B) அங்கீகாரத்தைப்
பெறுவதற்காகவே அலுவலகங்கள் புதிய வளாகத்திற்கு உடனடியாக மாற்றப்படுகின்றன என்று தெரிவித்தார்.
புதிய வளாகம் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், வாடகைக் கட்டிடங்களில் பல்கலைக்கழக
அலுவலகங்கள் இயங்குவது தணிக்கைத் தடையையே ஏற்படுத்தும் என்றும், பல்கலைக்கழகத்தின்
செயல்பாடுகளுக்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் 12(B)
அங்கீகாரம் உடனடித் தேவை எனவும், அந்த அங்கீகாரம் பெறப்படவில்லை எனில் பத்தாவது திட்ட
காலத்திற்கான ஐந்தாண்டு நிதியை பல்கலைக்கழகம் முழுமையாக இழக்க நேரிடும் என்றும் அவர்
விளக்கினார்.
பல்கலைக்கழகத்தில் நிலவி வந்த நிலைமையை எதிர்கொள்வதற்காக தான் எடுத்த
சரியான முடிவில் இறுதிவரை அந்த துணைவேந்தர் உறுதியாக நின்றார். பல்கலைக்கழக வளாகத்தை நிரந்தர வளாகத்திற்கு மாற்றியமைக்க முயல்வதன்
மூலம் பல்கலைக்கழகப் பணிகளுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தியதாக அன்றைய அரசாங்கத்திடமிருந்து
வந்த குற்றச்சாட்டுகளும், கண்ணூர் நகராட்சி எல்லைக்குள்ளே இருந்த மற்றுமொரு வாடகை வளாகத்திற்கு
பல்கலைக்கழகத்தை மாற்றிச் செயல்படுமாறு வந்த வற்புறுத்தல்களும் இருந்து வந்த நிலையில்,
பல்கலைக்கழகத்திற்கு 12(B) அங்கீகாரத்தை உடனடியாகப் பெற்று பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியை
உறுதிப்படுத்த வேண்டும் என்ற தேவைகள், அதற்கான உந்துதல்கள் என அனைத்து வகையிலும் சிரமப்பட்டு
தன்னுடைய பணிகளைச் சீராகத் தொடர வேண்டிய கட்டாயம் துணைவேந்தருக்கு இருந்தது.
பல்வேறு இன்னல்களுக்கிடையே சற்றும் மனம் தளராது போராடி இறுதியில் பல்கலைக்கழக வளாகத்தை மாங்காட்டுப்பரம்பாவிற்கு மாற்றினார். அது மட்டுமல்ல - புதிதாக உருவாக்கப்பட்டிருந்த ஏழு துறைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் அந்தப் புதிய வளாகத்தில் உடனடியாக அவர் உருவாக்கினார். புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஒவ்வொரு துறையிலும் மூன்று ஆசிரியப் பணியிடங்களை நிரப்புவதற்கும், மேலும் இரண்டு புதிய துறைகளை உருவாக்குவதற்குமான ஏற்பாடுகளையும் செவ்வனே செய்து முடித்தார். அந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்திற்கான 12(B) அங்கீகாரத்தைப் பல்கலைக்கழக மானியக்குழுவிடம் இருந்து பெறுவதற்கான முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். துணைவேந்தரால் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சிகளின் பலனாக பல்கலைக்கழக மானியக் குழுவிடமிருந்து 12(B) அங்கீகாரத்தை கண்ணூர் பல்கலைக்கழகம் பெற்றது. அதன் விளைவாக பல்கலைக்கழகத்தின் அடிப்படை வளர்ச்சிக்கு வழிகோலும் வகையில் பத்தாவது திட்ட நிதியிலிருந்து நான்கரை கோடி ரூபாயை பல்கலைக்கழகத்தால் உடனடியாகப் பெற்றுக் கொள்ள முடிந்தது.
தொழிற்துறையுடன் பல்கலைக்கழகத்திற்கு உள்ள உறவைத்
தன்னுடைய பணிக்காலத்தில் செழுமைப்படுத்தியதுடன், புதுமையான பட்டமேற்படிப்புகள், பட்டய
வகுப்புகளையும் அந்தப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் அறிமுகப்படுத்தினார். அதுவரையிலும்
கண்ணூர் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்படாமல் இருந்த கல்விப்பேரவை உள்ளிட்ட
பல்கலைக்கழக அமைப்புகளை உடனடியாக உருவாக்கி பல்கலைக்கழக ஜனநாயகத்தை உறுதிப்படுத்தினார்.
இவையனைத்திற்கும் மேலாக தன்னுடைய துணைவேந்தர் பணிகளுக்கிடையில், இலக்கியம் மற்றும்
இலக்கியத் திறனாய்வு குறித்த வகுப்புகளை பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவர்களுக்கு
நடத்துவதற்கென்று தனியாக நேரத்தை ஒதுக்கி தலைசிறந்த பேராசிரியராகவும்
தனது பணியைச் செம்மையுறச் செய்து வந்தார் அந்தக் கல்வியாளர்.
அத்தகைய பேராண்மை கொண்ட அந்தப் பேராசிரியர் - பல்கலைக்கழகத்
துணைவேந்தர் - வேறு யாருமல்ல. மூட்டா சங்கத்தின் பொதுச் செயலாளராக, தலைவராக இருந்து
தமிழ்நாட்டு கல்லூரி ஆசிரியர்களைத் திறம்படத் தலைமையேற்று வழிநடத்தி, கல்லூரி ஆசிரியர்களின்
நலன் காத்திட அரும்பாடுபட்ட தொழிற்சங்கப் போராளியான பி.கே.ராஜன் தான் அவர்.
2024 ஜனவரி 14 - பேரா.பி.கே.ராஜன்
பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி
தென்கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தில் 1947 ஏப்ரல்
மாதம் பிறந்த ராஜன், 1970களில் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பணியாற்றிய
காலத்தில் மூட்டாவின் தலைமைப் பொறுப்பை ஏற்று கல்லூரி ஆசிரியர்களின் நலன்களைக் காத்திடுவதற்கான
இயக்கங்களைக் கட்டமைத்தார்.
மூட்டாவின் தொடக்க காலத்தைப் பற்றி பேரா.வெ.சண்முகசுந்தரம் குறிப்பிட்டதைப்போல பிறக்கும் போதே தொப்புள் கொடியைத் தூக்கிப் போட்டுக் கொண்டு மூட்டா போராடிய காலத்தில் பல்வேறு போராட்டங்களுக்குத் தலைமையேற்றுப் போராடி, கல்லூரிப் பேராசிரியர்கள் பல்வேறு அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கான வழியை வகுத்துக் கொடுத்தவர் பி.கே.ராஜன்.
மதுரைப் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம் என்ற பெயரில்
அப்போது இயங்கி வந்த மூட்டா அமைப்பிற்குத் தலைமையேற்று பணியாற்றி வந்த பி.கே.ராஜன்
1978ஆம் ஆண்டு ஆகஸ்டு ஐந்தாம் நாள் சுற்றறிக்கையாகப் பயன்படுத்தச் சொல்லி மூட்டா பொறுப்பாளர்களுக்கு
கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார்.
மதுரைப் பல்கலைக்கழக ஆசிரியர் மன்றம்
ஆழ்வார்குறிச்சி
5.8.1978
கேரளா பல்கலைக்கழகத்தில் 1978 ஆகஸ்ட் 21 முதல் பணியாற்றிட
முடிவு செய்துள்ளதை அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். ஆகவே ஆகஸ்ட் 19 முதல்
தற்போதைய பணியிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தப் பகுதியில் ஆசிரியர் இயக்கத்துடன்
நான் கொண்டிருந்த உள்ளார்ந்த தொடர்புகளால் என்னைப் பொறுத்த வரை இந்த முடிவை எடுப்பது
மிகவும்
சிரமமாகவே இருந்தது. ஆயினும் தவிர்க்க முடியாத பல்வேறு காரணங்களால், கிடைத்திருக்கும்
புதிய பணியை ஏற்றுக் கொள்வதென்று இறுதியில் எனது மனதை மாற்றிக் கொண்டேன்.
நமது மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து இயக்கங்களுக்கும்
நீங்கள் அளித்து வந்திருக்கும் முழுமையான ஒத்துழைப்புக்கும், நீங்கள் மற்றும் உங்கள்
சகாக்கள் அனைவரும் என்னிடம் காட்டிய அளப்பரிய அன்பிற்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
கடந்த காலங்களில் நம்மால் கட்டப்பட்டிருக்கும் ஒற்றுமையின்
விளைவாக நமது மன்றம் வருங்காலங்களில் வீறுநடை போடும் என்பதில் எனக்கு
முழு நம்பிக்கை இருக்கிறது.
செய்யப்பட வேண்டிய மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆகஸ்ட்
13 அன்று கூடுகின்ற மூட்டா செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
நன்றி
தோழமையுடன்
(பி.கே.ராஜன்)
தலைவர், மூட்டா
தனது நன்றியை, நம்பிக்கையை மூட்டா உறுப்பினர்களுக்குத் தெரிவித்து மூட்டா தலைவர் பதவியிலிருந்து விலகிய பி.கே.ராஜன், கேரளா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகத் தனது பணியைத் தொடர்ந்தார். கேரளா பல்கலைக்கழகத்தில் தன்னுடைய முப்பத்தொரு ஆண்டு கால ஆசிரியப் பணியின் போது, தொலைநிலைக் கல்வித் துறையில் ஆங்கிலத் துறைப் பேராசிரியர், எட்டு ஆண்டு காலம் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர், பதினான்கு ஆண்டுகள் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர் என்று பல்வேறு தளங்களில் அயராது திறம்படப் பணியாற்றினார். தனது ஆசிரியப் பணியின் இறுதியில் மூன்றாண்டு காலம் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவியேற்றார். புதிதாகத் துவங்கப்பட்டிருந்த கண்ணூர் பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால வளர்ச்சியை உறுதிப்படுத்தி அதனை மேம்படுத்திய பேராசிரியர் பி.கே.ராஜன் 2004 மே 14 அன்று பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியிலிருந்து மனநிறைவுடன் ஓய்வு பெற்றார்.
பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கல்லூரி ஆசிரியராகப்
பணி துவங்கிய காலத்தில் மேற்கொண்ட ஆசிரியர் இயக்கப் பணிகளை
அவர் விட்டு விடவில்லை. 2006ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் பதின்மூன்றாம் நாள் இரவில் திருவனந்தபுரத்திலிருந்து அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரயில்
மூலம் ஒட்டப்பாலம் ரயில் நிலையத்தை நோக்கி அவர் பயணித்தார்.
ஜனவரி பதினான்காம் நாள் ஒட்டப்பாலத்திற்கு அருகிலுள்ள சேர்புலச்சேரி என்ற இடத்தில்
கேரள மாநில பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் பாலக்காடு மாவட்ட மாநாடு
நடைபெற இருந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பி.கே.ராஜன் பயணித்த அம்ரிதா
எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்த நாள் காலை 6.50 மணிக்கு ஒட்டப்பாலம்
ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. ரயில் நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக
ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்கள் காத்துக் கொண்டிருந்தனர். என்ன நடந்தது என்று யாரும்
அறிந்திராத நிலையில் ரயில் நிலைய கேபின் அறையின் முன்பாக, ஓடுகின்ற ரயிலுக்கும் நடைமேடைக்கும்
இடையில் சிக்கி ராஜன் படுகாயமடைந்தார்.
தனது பயணத்தின் போது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ராஜன்
தான் இறங்க வேண்டிய ஒட்டப்பாலம் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கிளம்பி விட்டதை மிகவும்
தாமதாக உணர்ந்தாகவும், ரயில்நிலையத்திலிருந்து கிளம்பி விட்ட ரயிலிலிருந்து அவசரமாக
இறங்கிய போதில் அந்த விபத்து நேர்ந்தது என்றும் அந்த ரயிலில் பயணித்த சிலர் கூறினர்.
மிக மோசமான நிலையில் அங்கிருந்த தாலுகா மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, பின்னர் இறுதியாக திருச்சூர் மருத்துவமனைக்குக்
கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
பணி ஓய்வு பெற்ற பிறகும் பள்ளி ஆசிரியர்கள் சங்க மாநாட்டில்
கலந்து கொள்ள வந்த போது எதிர்பாராத வகையில் பி.கே.ராஜன் உயிரிழந்த துயர நிகழ்வு, ஆசிரியர்களின்
உரிமைகளைக் காப்பதற்கான இயக்கங்களை விடாது தன்னுடைய இறுதிக்காலம் வரையிலும் முன்னின்று
நடத்துவதில் ஐம்பத்தியொன்பதே வயதே ஆகியிருந்த தோழர் பி.கே.ராஜனுக்கிருந்த ஈடுபாட்டை
இன்றைக்கும் நமக்குச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது.
பேரா.பி.கே.ராஜன் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றுகின்ற வகையில், கண்ணூர் பல்கலைக்கழகம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள தனது நிலேஸ்வரம் வளாகத்திற்கு பி.கே.ராஜன் வளாகம் எனப் பெயர் சூட்டிக் கொண்டது. அங்கே பணியாற்றி வரும் பேராசிரியர்களுக்கான சிறப்பு விருதை பேரா.பி.கே.ராஜன் நினைவு விருது என்ற பெயரில் வழங்கியும், அவருடைய பெயரில் வருடாந்திர நினைவுச் சொற்பொழிவுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதுடன் மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகளையும் கண்ணூர் பல்கலைக்கழகம் தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி கல்லூரியில் பணிபுரிந்த காலத்தில் 1975ஆம் ஆண்டு பி.கே.ராஜனால் துவங்கப்பட்டு திருவனந்தபுரத்திலிருந்து வெளியான ‘லிட்க்ரிட்’ என்னும் இலக்கியத் திறனாய்வு இதழ் ஜூன், டிசம்பர் மாதங்களில் என்று ஆண்டுக்கு இருமுறை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் அண்மையில் தொன்னூற்றி மூன்றாவது இதழாக 2022 ஜூன் லிட்க்ரிட் இதழ் வெளிவந்துள்ளது. மெருகூட்டப்பட்ட அந்த இதழ் புதுப் பொலிவுடன் இணையத்திலும் http://www.littcrit.org/ வெளியாகி வருகிறது லிட்கிரிட் ஆய்விதழ் ஆண்டுதோறும் பி.கே.ராஜன் நினைவுச் சொற்பொழிவு நிகழ்விற்கான ஏற்பாடுகளைச் செய்து பேராசிரியரின் புகழைத் தொடர்ந்து பறைசாற்றி வருகிறது.
பதினேழாவது பி.கே.ராஜன் நினைவுச் சொற்பொழிவை 2023ஆம் ஆண்டு செப்டம்பர் இருபத்தியோராம் நாள் கேரள பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலாளர் கோபால் குரு ‘விலக்கி வைத்தலின் வெவ்வேறு முகங்கள்’ என்ற தலைப்பில் நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சியில் லிட்கிரிட் இதழின் தொன்னூற்றி ஐந்தாவது இதழை வெளியிட்ட பேராசிரியர் கோபால் குரு முதல் பிரதியை பேராசிரியர் மீனா டி.பிள்ளையிடம் வழங்கினார்.
பேராசிரியர் தோழர் பி.கே.ராஜன் நினைவைப் போற்றுவோம்…
Comments