ராஜினாமா செய்யுங்கள் - தலைவர்களைக் கேட்டுக் கொள்ளும் நம்பிக்கையிழந்து நிற்கின்ற மக்கள்

 டி.ஜே.எஸ்.ஜார்ஜ்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்


மற்றவர்கள் வெளிப்படையாகக் கூறத் தயங்குவதை டெலிகிராப் பத்திரிகை சற்றும் தயங்காது கூறியது. கொல்கத்தாவின் அந்த தினசரி பத்திரிகை ‘நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும். அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். அஜய் மோகன் பிஷ்ட் என்ற யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எளிமையாகக் கூறுவது சிறந்தது’ என்று கூறியது.  


இந்தப் பார்வை ஒன்றும் புதியதல்ல. பகிரங்கமாக இப்போது சொல்லப்படுவதே இதில் புதிதாக இருக்கின்றது. இந்தியாவின் பொது மனநிலை முற்றிலுமாக மாறியிருக்கிறது. மோடியின் பாசாங்குத்தனங்களாலும், இந்த அரசாங்கத்திற்கே உரிய தனித்த ஆணவத்தாலும் தளர்ந்து போயிருக்கின்ற மக்கள் நரேந்திர மோடியையும், நிர்வாகம் குறித்து அவரிடமுள்ள சுயநல அணுகுமுறையையும் வெளிப்படையாகத் தாக்குகின்ற தைரியத்தை இப்போது கண்டறிந்துள்ளனர். 


இந்தியா கண்டிருக்கும் தலைவர்களிலேயே மோடி ஒருவர் மட்டும் தான் தன்னை முன்னிறுத்திக் கொள்கின்ற ஆகப் பெரும் கலைஞராக இருந்திருக்கிறார். தான் ஆட்சிக்கு வந்ததிலிருந்துதான் இந்திய வரலாறு துவங்குகிறது என்ற தோற்றத்தை தன்னுடைய நடிப்புத் திறன் கொண்டு வர அவர் முயன்று வருகிறார். வெளிப்படையாக எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்துபவையாகவே அவரது மக்களுடனான தொடர்பிற்கான திட்டங்கள் இருக்கின்றன. கீழ்ப்படிதலுடன் தனக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் வாத்துகளுடன் அவர் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கும் படம் உங்களுடைய நினைவில் இருக்கிறதா?   


இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகளை உருவாக்கி  உலக சாதனையை இந்தியா படைத்திருந்த நாளில், தன்னுடைய மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பொம்மைகள் மற்றும் குழந்தைப் பருவத்தைப் பற்றி அவர் பேசிக் கொண்டிருந்தார். சுக்கான் இல்லாது அலைகின்ற இந்த நாடு மோடி-ஷா-பிஷ்ட் ராஜினாமா செய்ய வேண்டுமென்று கேட்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.


தன்னுடைய பிம்பம் குறித்து மிகுந்த கவனத்துடன் இருந்து வருகின்ற இந்தியப் பிரதமர் மோடி தன்னைக் குறித்து ஏற்கனவே இருந்து வந்த மதிப்பீடுகளை இந்த உலகம் திருத்தியமைத்துக் கொண்ட விதம் குறித்து நிச்சயம் இப்போது வருத்தத்தில் இருப்பார். ஆனாலும் நாட்டின் அனைத்து பிரச்சனைகளையும் தான் கொண்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தீர்த்து வைத்து விட்டதாக மோடி கூறியதை யாரால் மறக்க முடியும்? ‘மகத்தான தோல்வியடைந்த கொள்கை’ என்று ஜிஎஸ்டியை விவரித்த பொருளாதார வல்லுநர்கள் அது மோடியால் கொண்டு வரப்பட்ட மிகவும் மோசமான பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மீண்டும் நினைவூட்டுவதாகவே இருந்தது என்கின்றனர். 


தற்போது உருவாகியிருக்கும் நெருக்கடி குறித்து மோடி ஆற்றியிருக்கும் எதிர்வினையும் கொள்கையளவிலான மிகப் பெரும் தோல்வியாகவே அமைந்திருக்கிறது. மோடிக்குப் பிடித்தமான சென்ட்ரல் விஸ்டா (ரூ.20,000 கோடி மொத்த மதிப்பீட்டில்) என அழைக்கப்படுகின்ற திட்டத்தின்கீழ் மூன்று அரசு செயலகக் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான புதிய திட்டங்களை ஆரம்பித்து வைப்பதே கோவிட்டிற்கு எதிரான அவரது எதிர்வினையில் முக்கியமானதாக இருந்திருக்கிறது.  


உலகிலேயே மிக உயரமான சிலை, மிகப்பெரிய ஸ்டேடியம், மிகப்பெரிய செண்ட்ரல்  விஸ்டா ஆகியவற்றிற்காகச் செலவழிக்கப்படும் பணத்தைக் கொண்டு எத்தனை மருத்துவமனைகள், ஆக்சிஜன் ஆலைகள், தடுப்பூசி உற்பத்தி ஆலைகளைக் கட்டியிருக்க முடியும் என்று மக்கள் கேட்பது எந்த அமைச்சரின் காதுகளிலும் விழவில்லை.

மிக உயரமான சிலைகள், மிகப் பெரிய கட்டிடங்களைப் போன்று தங்களுடைய தற்பெருமையை ஆக்சிஜன் ஆலைகளைக் கொண்டு அவர்களால் அதிகரித்துக் கொள்ள முடியாது. தங்களுடைய சிறுமையை மற்றவர்கள்  பெருமையாகக் காண்பார்கள் என்ற நம்பிக்கையில் இதுபோன்ற காரியங்களை சிறிய மனிதர்கள் செய்கிறார்கள். மோடியிடம் உள்ள அளவிட முடியாத தற்பெருமையைக் குறைக்கும் வகையில் மக்கள் இப்போது திருப்பித் தாக்கி வருகிறார்கள்.

கோவிட் தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து மோடியின் புகைப்படத்தை அகற்ற வேண்டுமென்று பஞ்சாபில் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார். நாட்டின் தெற்குப் பகுதியில் வழங்கப்படுகின்ற தடுப்பூசி  சான்றிதழ்களில் மோடி படங்கள் இடம் பெறவில்லை. தென்னிந்தியா என்பது பஞ்சாப் அல்ல என்பதை அந்தப் பெரிய மனிதர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.


அரசாங்கம் இந்த நெருக்கடியை தவறாகக் கையாண்டிருப்பது உலகளவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘மிகவும் ஆபத்தான, வேகமான இரண்டாவது அலை இந்திய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளை சரிவின் விளிம்பிற்கு கொண்டு சென்றிருக்கிறது’ என்று வாஷிங்டனில் உள்ள நோய் இயக்கவியல் மையத்தின் இயக்குனர் கூறியுள்ளார் (அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக இருக்கிறார்). அவர் தொடர்ந்து கூறும் போது ‘இந்தியாவின் மெத்தனம் மற்றும் அரசாங்கத்திடம் தயாரிப்பு வேலைகள் இல்லாதிருந்தது போன்றவற்றின் நேரடி விளைவாகவே இதற்கு முன்னெப்போதுமில்லாத இந்த நெருக்கடி நிகழ்ந்திருக்கிறது’ என்றார். இப்போது இந்தியாவில் வாழ்க்கை நரகத்தில் இருப்பதைப் போன்று இருப்பதாகக் கூறிய தி கார்டியன் பத்திரிகை ‘பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கும் தன்னுடைய தவறுகளுக்கான திருத்தங்களை மோடி மேற்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளது.  


‘ஆணவம், அதிநவீனவாதம், அதிகாரத்துவ செயல்திறனின்மை ஆகியவை இணைந்து மிகப் பெரிய அளவில் இந்த நெருக்கடியை உருவாக்கியுள்ளன’ என்று ஆஸ்திரேலிய செய்தித்தாள் கூறியிருந்தது. ரேடியோ பிரான்ஸ் மிகவும் வெளிப்படையாக ‘சுகாதாரம் இந்தியாவில் முழுமையாகச் சரிந்துள்ளது. அதற்கான முக்கிய குற்றவாளி நரேந்திர மோடி’ என்று கூறியது.

கோவிட்டுடன் போராடுவதில் மற்ற நாடுகளை விட இந்தியா மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்று கூறும் அளவிற்கு மோடி தடித்த தோலுடன் இருந்தார். உண்மையில் அதிகாரப்பூர்வ அலட்சியத்தின் நேரடி விளைவாகவே இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டில் கோவிட் எண்ணிக்கையில் இந்தியா உலகின் மூன்றாவது இடத்தில் இருந்தது. அங்கே மேற்கொள்ளப்பட்டிருந்த பரிசோதனைகள் மிகமிகக் குறைவாகவே இருந்தன.


ஒரு பெண் தனது சகோதரருக்கு ஆக்சிஜனைத் தேடி தில்லியில் ஒவ்வொரு இடமாகச் சென்று கொண்டிருந்தார். யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை, அவரது சகோதரர் இறந்து போனார். ‘மோடியா, தில்லி அரசா? யார் இதற்குப் பதில் சொல்வது? இந்த மோடி. . . அவர் எதற்காக என்னுடைய வாக்கைப் பெற்றார்? இந்த நாட்டை அவர் ஏன் இவ்வாறு அழித்துக் கொண்டிருக்கிறார்?’ என்று பெண்கள் கேமராக்களுக்கு முன்பாக உதவியற்று பெருங்குரல் எழுப்பிக் கொண்டிருந்தனர்.     

https://www.newindianexpress.com/opinions/columns/t-j-s-george/2021/may/02/desperate-people-tell-leaders-go-2297331.html

Comments

ஒரு தனிப்பட்ட மனிதர் இத்தனை கோடி மக்களின் கேடுகளுக்குக் காரணமாக இருந்தால் யாராக இருந்தாலும், குறிப்பாகப் பொறுப்புள்ள மற்றும் அதிகாரம் மிக்க தலைவராக இருந்தால் கண்டிப்பாக, தண்டிக்கப்பட வேண்டியவர்தான். விசயம் என்னவென்றால் அவரை ஆதரிப்பவர்களைத் திருத்துவதுதான்; அவர்களின் அறியாமையைப் போக்குவதுதான். ‘டெலிகிராப்’ பத்திரிக்கையின் செயல்பாடு ஒரு ஆரம்பமாக இருக்கட்டும். இத்தகைய வெளியீடுகள் மக்களின் ஆற்றாமையைப் போக்கும் ஒரு கருவியாகக் கூட இருக்கும்.
Vijayakumar said…
எந்தவொரு மனிதனாலும் வேடத்தை நீண்ட நாள் போடமுடியாது. என்றேனும் ஒரு நாள் களைந்து போகும். மோடியின் வேடம் களையத் தொடங்கியுள்ளது. நல்ல விஷயம் தான். இந்தியாவின் அரசியல் வெளியில் வடக்கு/ தெற்கு இடைவெளி விரிந்துகொண்டே செல்வது கவலையளிக்கிறது. கல்விப் பரவலில் பின் தங்கியிருக்கும் பீமாரி மாநிலங்கள் என்றழைக்கப்படும் பீஹார், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், சட்டிஷ்கர், போன்ற மாநிலங்களில் வாழும் மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வட இந்தியாவில் அவர் மீது கட்டப்பட்டுள்ள பிம்பத்தை மோடி காப்பாற்றிக்கொள்கிறார்.அதுவும் நீண்ட நாள் நிலைத்திருக்காது. அவர்களும் விழிப்புணர்வு கொள்வார்கள் என்று நம்புவோம். அதற்கான பணிகளையும் தொடங்குவோம்; தொடர்வோம்.