தேசிய கல்விக் கொள்கை - 2020 தேவையில்லை; தமிழ்நாட்டிற்கென தனித்த கல்விக் கொள்கையே இன்றைய தேவை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் மேனாள் துணைவேந்தர் ஜவகர்நேசன் வலியுறுத்தல்

பேராசிரியர் லெ.ஜவகர்நேசன்



புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏன் அமலாக்கம் செய்திட வேண்டும், கல்விக் கொள்கை குறித்து எங்கெங்கு தவறான புரிதல்கள் உள்ளன, கல்விக் கொள்கையை அமலாக்கம் செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டிற்கு என்னென்ன விளைவுகள் ஏற்படும்’ என்பது குறித்து கடிதம் ஒன்றை அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரான பாலகுருசாமி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த ஜூன் 3 அன்று  அனுப்பி வைத்திருந்தார். அடுத்த நாள் பல்வேறு நாளிதழ்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்தக் கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.   

‘அண்மையில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தேவையில்லாத வகையில் எதிரான கருத்துகளைக் கூறி வருவதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். அவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்துகள் அந்தக் கொள்கையாவணத்தை முழுமையாகப் படிக்காமல், அதன் உள்ளடக்கத்தைச் சரியான முறையில் புரிந்து கொள்ளாமல் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளாகக் கூறப்பட்டுள்ளன. அவ்வாறான கருத்துகள் தரமான கல்வி குறித்த நுட்பமான பார்வை இல்லாமல் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது’ என்று கல்விக் கொள்கையை விமர்சிப்பவர்கள் மீது அந்தக் கடிதத்தில் மனம்போன போக்கில் குறை கூறியிருந்த பாலகுருசாமி ‘பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட, மாநிலங்கள் அளவில் ஏற்றத் தாழ்வுகள் உள்ள இந்தியாவைப் போன்ற பரந்துபட்ட தேசத்திற்குத் தேவையான, வலுவான இலக்குகளை உறுதி செய்வதற்கு ஒருங்கிணைந்த கல்வி குறித்த தேசிய அளவிலான கொள்கை இன்றியமையாதது, உலக அளவில் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 130ஆவது இடத்தில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் கல்வி முறையை மாற்றியமைப்பதற்கு புதிய தேசிய கல்விக் கொள்கை சரியான தருணத்தில் கொண்டு வரப்படுவது மிகவும் அவசியமாகும்’ என்று வலியுறுத்தியும் இருந்தார்.

மேலும் இந்த தேசிய கல்விக் கொள்கை குறித்து சில கட்டுக் கதைகள் தமிழ்நாட்டில் நிலவி வருவதாகக் கூறிய அவர் அவ்வாறு சொல்லப்படுகின்ற கட்டுக் கதைகள் என்று ‘இக்கொள்கை தமிழக மக்கள் மீது ஹிந்தியைத் திணிக்கிறது; மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கை சுமையானது; மூன்றாவது, ஐந்தாவது, எட்டாவது வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நடத்துவதால் மாணவர்கள் வடிகட்டப்படுவர்; இக்கல்விக் கொள்கை 'குலக் கல்வி' முறையை பள்ளிகளுக்குள் கொண்டு வரும்; நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் இக்கல்விக் கொள்கை எதிரானது; இந்தக் கல்விக் கொள்கையில் சமூக நீதிக்கு இடமில்லை; இந்த கொள்கை மாணவர் சேர்க்கையில் இருந்து வருகின்ற இடஒதுக்கீட்டைப் பாதிக்கும்; இக்கல்விக் கொள்கை கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கவும், கல்வியை வணிகமயமாக்கவும் ஊக்கமளிக்கிறது; இக்கொள்கை அதிக அளவில் தனியார் நிறுவனங்கள் அமைய ஊக்கமளிக்கிறது’ என்று மிக நீண்ட பட்டியலையும் வெளியிட்டிருந்தார்.

அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் வெளியிட்டிருந்த கட்டுக்கதைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திருமிகு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 2021 ஜுன் 09 அன்று எழுதிய வெளிப்படையான கடிதத்தை மைசூரு ஜேஎஸ்எஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரான பேராசிரியர் ஜவகர்நேசன் அவர்கள் வெளியிட்டுள்ளார். தன்னுடைய கடிதத்தில் தமிழ்நாட்டிற்கென தனித்த கல்விக் கொள்கைக்கான அவசியத்தையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.     

09 ஜூன் 2021

அனுப்புநர்

பேராசிரியர் லெ.ஜவகர்நேசன்

மேனாள் துணைவேந்தர்

ஜேஎஸ்எஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மைசூர்

63 வடக்கு ரத வீதி

சீர்காழி 609 110

மயிலாடுதுறை மாவட்டம்

பெறுநர்

உயர்திரு. மு.க.ஸ்டாலின்

மாண்புமிகு முதல்வர்

தமிழ்நாடு அரசு

நாமக்கல் கவிஞர் மாளிகை

புனித ஜார்ஜ் கோட்டை

சென்னை - 600 009


பொருள்: தேசிய கல்விக் கொள்கை-2020ஐ அமல்படுத்துமாறு மாநில அரசிடம் கோரிக்கை வைத்து அண்ணா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலகுருசாமி மாண்புமிகு முதலமைச்சருக்கு சமர்ப்பித்த கடிதம் குறித்தும், தமிழ்நாடு மாநிலத்திற்கான தனித்த கல்விக் கொள்கையை வகுக்குமாறு கோரியும்.


மதிப்பிற்குரிய ஐயா

மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள பொருள் தொடர்பாக, தேசிய கல்விக் கொள்கை - 2020ஐ (NEP - 2020) நிராகரிப்பது, தமிழ்நாடு மாநிலத்திற்கென்று தனித்த கல்விக் கொள்கையை வகுப்பது குறித்து உங்களிடமுள்ள இடைவிடாத நிலைப்பாட்டில் இருந்து நீங்கள் விலகி விடக் கூடாது என்று நான் உங்களிடம் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன். ‘தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாடு கல்வித் தரங்களை மேம்படுத்துவதற்கான தனது வாய்ப்பை இழந்து விடக்கூடும்’ என்ற தலைப்பில் தி ஹிந்து பத்திரிகையின் பெங்களூர் பதிப்பில் 2021 ஜூன் 04 அன்று வெளியானதொரு செய்திக் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்த, உங்கள் மதிப்புமிக்க அலுவலகத்திடம் பேராசிரியர் பலகுருசாமி சமர்ப்பித்துள்ள 2021 ஜூன் 03 நாளிட்ட கடிதத்திற்கான எதிர்வினையாகவே இந்த கடிதத்தை எழுதுமாறு நான் தூண்டப்பட்டேன். அந்தக் கட்டுரையில் பேராசிரியர் பாலகுருசாமியை மேற்கோள் காட்டி ‘தேசிய கல்விக் கொள்கை-2020இன் ஒரு பகுதியாக தமிழ்நாடு இருக்க விரும்பவில்லை எனில் கல்வித் தரங்களையும், சாதனைகளையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பை அது இழந்து விடும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.    

ஏமாற்றமடையும் வகையிலே தேசிய கல்விக் கொள்கை - 2020க்கு ஆதரவாக பேராசிரியர் பாலகுருசாமி கூறிய அந்தக் கூற்றுக்கள் ஆதாரமற்றவையாக, மேலோட்டமானவையாக, குழந்தைத்தனமானவையாக இருப்பதால் நான் அவற்றை ஆரம்பத்திலேயே நிராகரித்து விடுகிறேன். அவரது கருத்துகள் எவ்வித அறிவியல்பூர்வமான தளமும் இல்லாமல், போலி நாட்டுப்பற்று கொண்ட வலதுசாரி தேசியவாதிகளின் கருத்துக்களை வெறுமனே எதிரொலிப்பவையாகவே இருக்கின்றன. அவரது கருத்துகளுக்கு ஆக்கபூர்வமாகப் பதிலளிக்கவில்லை என்றால், அத்தகைய வெளிப்பாடுகள் மக்களையும், கொள்கை வகுப்பாளர்களையும் தவறாக வழிநடத்தக்கூடும் என்றே நான் பயப்படுகிறேன். எனவே மாநிலத்தில் சமீப காலங்களில் நிலவி வருகின்ற இதுபோன்ற தவறான பிரச்சாரங்கள், கட்டுக்கதைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் பொறுப்பை ஏற்க நானாகவே முன்வந்திருக்கிறேன். கீழே உள்ள எனது எதிர்வினைகள் தனிப்பட்ட எனது ஆசைகளாலோ அல்லது எந்தவொரு குறுங்குழுவாத கோட்பாடுகள் அல்லது கொள்கைளினாலோ தூண்டப்படவில்லை என்றும், உலகளவில் கல்வி என்ற கருத்து குறித்து  அறியப்பட்டுள்ள தத்துவ, அறிவியல் வரம்புகளுக்குட்பட்டவையாக அவை இருக்கின்றன என்றும் நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.  

கட்டுக்கதை 1: தேசிய கல்விக் கொள்கை - 2020 ஹிந்தியைத் திணிக்க முற்படவில்லை. மாறாக அது தங்கள் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் கூடுதல் மொழியை மாணவர்கள் கற்க உதவும் மும்மொழிக் கொள்கையையே வலியுறுத்துகிறது.  

தேசிய கல்விக் கொள்கை - 2020 ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்தை வெளிப்படையாகத் திணிக்கவில்லை என்றாலும், அது ஹிந்தி/சமஸ்கிருதத்தை ஹிந்தி அல்லாத மாநிலங்களிலும், சமஸ்கிருதத்தை இந்தோ-ஆரிய மொழி மாநிலங்களிலும் கட்டாயமாகத் திணிப்பது என்ற  தன்னுடைய நோக்கத்தை கல்விக் கொள்கையின் துணைப்பிரிவுகளில் (4.13 முதல் 4.19 வரை) சுற்றி வளைத்துச் சொல்லியிருக்கிறது. 1960இல் ஹிந்தியை மையமாகக் கொண்டிருந்த மொழிக் கொள்கை இப்போது உண்மையில் சமஸ்கிருத மையப்படுத்தப்பட்ட மொழி தேசியவாதத்திற்கு மாறியுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மூன்று மொழிகளில் இரண்டு இந்தியாவுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்று (துணைப்பிரிவு 4.13) விதிக்கிறது என்றாலும் இடைநிலைக் கல்வி மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்து மட்டங்களிலும் மும்மொழிக் கொள்கையில்  சமஸ்கிருதத்தை (துணைப்பிரிவுகள் 4.16, 4.17, 22.15 மற்றும் 22.16) மாணவர்களுக்கானதொரு தேர்வாகவே அது வலியுறுத்துகிறது. அதன் சொந்த வார்த்தைகளில் (துணைப்பிரிவு 4.17) ‘பள்ளி மற்றும் உயர்கல்வியின் அனைத்து மட்டங்களிலும் மும்மொழிக் கொள்கையில் ஒரு தேர்வாக இருப்பது உள்ளிட்டு மாணவர்களுக்கான முக்கியமான, வளமான தேர்வாகவும் சமஸ்கிருதம் வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கொள்கையில் இங்கும் அங்குமாக பிற மொழிச் சமூகங்களை நம்ப வைப்பதற்காக ‘பிற செம்மொழிகள்’ என்று மேற்கோள் காட்டப்படும் அதேவேளையில் ‘சமஸ்கிருத அறிவு முறை’, அதன் பெருமை, அதனுடன் தொடர்புடைய கலை, கலாச்சாரம் என்று அந்தக் கொள்கையாவணம் முழுக்க வழங்கப்பட்டிருக்கும் விதத்திலிருந்தே கொள்கை வகுப்பாளர்களின் நோக்கத்தை ஒருவரால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.     

கல்விக் கொள்கை அதில் உள்ளவாறே தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் என்றால், அதில் குறிப்பிடப்படும் மூன்று மொழிகள் தமிழ்-ஆங்கிலம்-சமஸ்கிருதம் என்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? சமஸ்கிருதம் போன்றதொரு மொழியைக் கற்றுக் கொள்வதில் நன்மைகள் ஏதேனும் இருக்கும் என்றால் அல்லது சமஸ்கிருதத்தைக் கற்பதால் தங்கள் தாய்மொழியில் இருப்பதைவிட மேம்பட்ட இலக்கியப் படைப்புகள், அறிவியல், கலை, கணிதம், வணிகம் ஆகியவற்றைப் பெற முடியும் என்று மக்கள் கருதுவார்கள் என்றால் மக்கள் அனைவருக்கும் தெரிவு செய்வதற்கான மொழியாகவே சமஸ்கிருதம் நிச்சயம் இருக்கும். அவ்வாறில்லாத போது வேறொருவரின் கடந்தகாலப் பெருமை அல்லது பழமை வாய்ந்த அறிவு மற்றும் கலாச்சாரத்தைக் கற்றுக் கொள்வதற்காக மட்டுமே தேசம் ஏன் சமஸ்கிருதத்தைக் கட்டாயப்படுத்த வேண்டும்? மாநிலங்கள் தீர்மானித்துக் கொள்ளக்கூடிய ஒரு தேர்வாக மட்டுமே சமஸ்கிருதம் இருக்கும் என்று ஒருவர் வாதிடலாம் என்றாலும் நடைமுறையில் உள்ள செயல் திட்டமோ அல்லது இந்த கொள்கையில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களோ அவ்வாறு கூறவில்லை. பிற மொழி மாநிலங்களில் சமஸ்கிருதமற்ற பிற மொழிகளைக் கற்பிப்பதற்கான ஆசிரியர்களை நியமிப்பதற்கான நிதியுதவி மற்றும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு அந்தந்த மாநிலங்களே பொறுப்பு என்று கூறப்படுகின்ற அதே கொள்கையில் இந்தியா முழுவதும் ​​சமஸ்கிருதத்தைச் செயல்படுத்துவதற்கான பொறுப்புகள் மட்டும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படுகின்றன. ​​நிதி, உள்கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கான மையப்படுத்தப்பட்ட பொறுப்பேற்பு எதுவும் இல்லாததால் சமஸ்கிருதம் அல்லாத பிற மொழிகளைக் கற்றல் என்பது இயல்பாகவே ஊக்கமிழந்து போகும்.  

ஒரே பாரதம் உன்னத பாரதம் (ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத்) என்ற திட்டத்தின்கீழ் உள்ள இந்திய மொழிகள் குறித்த வேடிக்கைத் திட்டம், கலை மற்றும் கலாச்சார முயற்சிகள், இந்திய அறிவு முயற்சி, பன்மொழித்துவம், மொழியியல் உயர்கல்வி நிறுவனங்கள் (பல்கலைக்கழகங்கள்)  உருவாக்கம், சமஸ்கிருதத்திற்கான மையப்படுத்தப்பட்ட ஆய்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கத் திட்டங்கள்,  தொழில்நுட்ப அடிப்படையிலான விளம்பரங்கள் என்று இந்த கொள்கையாவணம் முழுவதும் உள்ள அனைத்து முன்மொழிவுகளும் போதுமான திட்டங்கள், நிதி, அதிகாரம் கொண்டு சமஸ்கிருதத்தை ஊட்டி வளர்ப்பவையாகவே இருக்கின்றன. எனவே அனைத்து மாநிலங்களிலும் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தி தவிர பிற மொழிகளைக் கற்பிப்பதற்கான வாய்ப்பு இருக்கப் போவதில்லை. மற்ற அனைத்து  செம்மொழிகளின் வளர்ச்சிக்கான வாய்ப்பை மறுத்து அவற்றை இல்லாமல் செய்வதாகவே இருக்கும். மாணவர்களுக்குச் சொந்தமான மொழியில் கல்வி கற்பிப்பதில் எந்தக் கேள்வியும் எழப் போவதில்லை எனும் நிலையில் மூன்று மொழிகளைக் கற்றுக் கொள்வது குறித்து கட்டாயமாகக் கேள்விகள் எழுகின்றன. இந்த கொள்கையாவணத்தில் தேசிய ஒற்றுமையை வளர்ப்பது, இந்திய மரபுகள், கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்வது போன்ற சில அற்ப நன்மைகளை கொள்கை வகுப்பாளர்கள் சுட்டிக் காட்டுவதைத் தவிர மூன்று மொழிகளைக் கற்பதன் நன்மை குறித்து ஓரிடத்திலும் நிரூபித்துக் காட்டப்படவில்லை. இயந்திரம் மூலம் கற்றல், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணிப்பு போன்ற தொழில்நுட்பங்களின் விரைவான வருகையால் பல்வேறு சமூகங்களில் உள்ள அனைத்து இலக்கியங்கள், வரலாறு, பாரம்பரியம், கலாச்சாரம் குறித்து அந்தந்த மூல மொழிகளை அறியாமலேயே கற்றுக் கொள்ள முடிகிறது.

இன்றைய நிலைமையில் ஒரு மொழியின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாற்றைக் கற்றுக் கொள்ள அந்த மொழியை அறிந்திருக்க வேண்டிய அவசியம் தேவையில்லை. வெவ்வேறு கலாச்சாரங்களை தங்களுக்குள் கற்றுக் கொள்ளவும், அவற்றில் உள்ள பரஸ்பர அறிவியல் முன்னேற்றங்களைப் புரிந்து கொள்ளவும் இப்போதுள்ள தொழில்நுட்பமும் அறிவியலும் துணை நிற்கின்றன. அதைத் தாண்டி சில காரணங்களால் ஏதாவதொரு மொழியைக் கற்றுக் கொள்வதைக் கட்டாயம் என்று ஒருவர் உணர்வாரேயானால், இன்றைய காலகட்டத்தில் கிடைக்கக்கூடிய பல்வேறு ஆதாரங்கள் மூலம் எந்தவொரு சிரமமும் இல்லாமல் அவரால் அந்த மொழியைக் கற்றுக் கொள்ள முடியும். மெய்நிகர் மெய்மை, இயங்குபடம் (அனிமேஷன்), தலைப்புகள், குரல் உள்ளிட்ட கருத்துகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள பெரிதாக்கப்பட்ட மெய்மை (ஆக்மென்டட் ரியாலிட்டி) என்ற கருத்தாக்கம் மூலமாக எந்தவொரு மூல மொழியில் இருக்கின்ற உள்ளடக்கங்களையும் வேறு எந்தவொரு மொழிக்கும் துல்லியமாக அவரால் மாற்றிக் கொள்ள முடியும். எனவே மற்ற மொழிகளைக் கற்றுக் கொள்வதற்காக அரசு (தேசம்) மிகவும் கவலைப்பட வேண்டியதில்லை; தன்னுடைய ஆற்றலை அதற்காக வீணாக்கிக் கொள்ளவும் வேண்டியதில்லை. மேலும் அது அரசின் வேலையும் அல்ல. எனவே ‘தேசிய கல்விக் கொள்கை - 2020 ஹிந்தி/சமஸ்கிருதத்தைத் திணிக்காது’ என்று முன்வைக்கப்படுகின்ற வாதம் ஒரு சதியாக, கட்டுக்கதையாக மட்டுமே நம்மீது மிகவும் தந்திரத்துடன் ஆழப் பதிய வைக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக தமிழ் அனைத்து மட்டத்திலும் கற்றல் ஊடகமாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதுவரையிலும் தற்போதைய இருமொழி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) அணுகுமுறையே தொடர வேண்டும்.

கட்டுக்கதை 2: மூன்றாம், ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்பில் தேர்வுகள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்காது. அவை மாணவர்களுடைய கற்றல் விளைவுகளை மதிப்பிடுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்கும். மேலும் தேர்வுகள் மற்றும் தேர்ச்சி  முறைகளை மாநிலங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும்.

இந்த தேர்வுகள் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்குமா இல்லையா என்பது இங்கே பிரச்சனை அல்ல. கற்றல் விளைவை மதிப்பிடுவதற்கான திறவுகோல் யாருடையது, அதை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்ற  அது குறித்து எழுகின்ற கேள்விகளே உண்மையான பிரச்சனையாக இருக்கின்றன. ‘என்சிஇஆர்டி வழிகாட்டுதலுடனான தேசிய மதிப்பீட்டு மையம் என பெயரிடப்பட்ட ஒரு உச்ச அதிகார அமைப்பானது மத்திய அங்கீகாரம் பெற்ற அமைப்புகளான மதிப்பீட்டு வாரியங்களுடன் (பிஓஏக்கள்) இணைந்து மூன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்துத் தேர்வுகளையும் ஒழுங்குபடுத்தி செயல்படுத்துகின்ற அதிகாரம் கொண்டதாக இருக்கும்; தேசிய அளவிலான இந்த நடைமுறையில் மாநிலங்கள் செயல்படுபவையாக மட்டுமே இருக்கும்; மத்தியில் நிர்ணயிக்கப்படும்  தரநிலைகள் மற்றும் கட்டமைப்பிற்கு மாநிலங்கள் இணங்கிச் செல்ல வேண்டும்’ என்று  கல்விக் கொள்கையின் 4.39 முதல் 4.41 வரையிலான துணைப்பிரிவுகள் குறிப்பிடுகின்றன. ‘எட்டாம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளிலும் அனைவரும் தேர்ச்சி’ என்ற கொள்கையை அரசு ஏற்றுக் கொள்வதால், மாணவர்கள் அனைவரும் கற்றல் விளைவுகள் மதிப்பீடு செய்யப்படாமலே தேர்ச்சி அடைகிறார்கள் என்று அர்த்தமல்ல என்பதை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். விரும்பத்தக்க, முன்னரே தீர்மானிக்கப்பட்ட கற்றல் விளைவுகள் குறித்து பள்ளிகளால் மாணவர்கள் முறையாக மதிப்பிடப்படுகின்றனர். மேலும் இந்த செயல்முறையானது பல மாநில அதிகாரிகள், துறைகளால் படிப்படியாக கீழ்நோக்கி வழிநடத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டும் வருகிறது. அவ்வாறு இருந்து வரும் நிலையில் கற்கும் மாணவர்களை மதிப்பிடுவதற்கு தேசிய அளவிலான உச்ச அதிகார அமைப்பிற்கான தேவை எங்கே இருந்து வருகிறது?  

கற்றல் மற்றும் கற்றல் மதிப்பீடு நடவடிக்கைகள் வகுப்பறைகளுக்குள்ளேயே மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், அது தொடர்பான நடவடிக்கைகள் முக்கியமான இருவரால் -  மாணவர்கள், ஆசிரியர்களால் செயல்படுத்தப்படுகின்றன எனும் போது தேசிய அளவிலான கட்டுப்பாடுகளும், மதிப்பீட்டைக் கண்காணிப்பதற்கான தேவையும் எங்கிருந்து எழுகின்றன? விளைவு (outcome) அடிப்படையிலான கல்விக்கான  சூழலில் மையப்படுத்தப்பட்ட தேசிய கட்டமைப்பானது செயலை (கற்றல் மதிப்பீடு) சிந்தனையிலிருந்து (கற்றல் மதிப்பீட்டின் முறைகள், உத்திகள்) பிரிக்கும் என்பதால் கற்றல் மதிப்பீட்டை அது பலவீனப்படுத்தவே செய்யும். இதுபோன்றதொரு மையப்படுத்தப்பட்ட மதிப்பீட்டு முறை முற்போக்கான உலகங்களில் எங்குமே கடைப்பிடிக்கப்படவில்லை. அதே கல்விக் கொள்கை விமர்சன சிந்தனை, உயர் வரிசை திறன்களை தன்னுடைய ‘கொள்கை அறிக்கை’ மற்றும் துணைப்பிரிவு 4.40இல் வலியுறுத்துகிறது. கற்றல் விளைவுகளை மதிப்பீடு செய்வது எப்போதுமே அப்போதைய சூழ்நிலை, சூழிசைவு, உள்ளூர் நிலைமை சார்ந்ததாக இருந்து வருவதால், அத்தகைய கற்றல் விளைவுகளைத் துல்லியமாகக் கணிப்பதற்கு  பல்வேறு மாறுபட்ட மதிப்பீட்டு முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும். அவ்வாறான மதிப்பீடு எப்போதும் மாணவர்களை மையமாகக் கொண்டதாகவும், அந்தந்த ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படுவதாகவுமே இருக்க வேண்டும்.      

தேசிய அளவிலான மதிப்பீட்டு கட்டமைப்பிற்கு மாறாக இதற்கென்று மிகவும் திறமையான, உலகளாவிய விழிப்புணர்வு கொண்ட கற்பித்தல் சமூகம் அவசியமாகிறது. ஆசிரியர்களின் திறமை மற்றும் திறன்களில் முதலீடு செய்வதில் அரசாங்கங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் கற்றல் விளைவுகளை திறம்பட மதிப்பிடுவதற்கும், கண்காணிப்பதற்கும் தேவையான நுட்பங்களுக்கான போதுமான திறமை மாநில அரசுகளிடம் இருக்கின்றது. ஆகவே மதிப்பீட்டை மிகவும் பயனுள்ள முறையில் அடைவதற்கு ஏற்கனவே அதற்கான திறமையும் பார்வையும் கொண்ட மாநில அரசுகளை ஆதரிப்பது குறித்து மட்டுமே மத்திய அரசு கவலைப்பட வேண்டும்.    

கட்டுக்கதை 3: தேசிய கல்விக் கொள்கை - 2020ஆல் முன்மொழியப்பட்டுள்ள தொழிற்கல்வி என்பது  ‘குலத்தொழிலுக்கு’ (பரம்பரையை அடிப்படையாகக் கொண்ட கல்வி) சமமானதல்ல. கொரியா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல முற்போக்கான நாடுகளில் 68%க்கும் அதிகமான மாணவர்களுக்கு தொழிற்கல்வி வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் இந்தியாவில் பத்து சதவீத மாணவர்கள் மட்டுமே அந்தக் கல்வியைப் பெற்று வருகின்றனர். எனவே மாநிலங்கள் இதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தொழிற்கல்வி குறித்து தேசிய கல்விக் கொள்கை – 2020 இடம் உள்ள நோக்கத்திற்கு மாறாக அந்த முற்போக்கான நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்ற தொழிற்கல்வி இருப்பது குறித்த சரியான புரிதல் இல்லாததையே இந்த வாதம் காட்டுகிறது. தேசிய கல்விக் கொள்கை - 2020இல் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் தொழிற்கல்வியானது அந்த முற்போக்கான நாடுகளில் (ஸ்காண்டிநேவிய நாடுகள், ஜெர்மனி, இங்கிலாந்து கொரியா, ஜப்பான்) வெற்றிகரமாக மாற்றியமைக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்ற தொழிற்கல்விக்குச் சமமானதல்ல. அந்த நாடுகளில் உள்ள தொழிற்கல்வியானது வகுப்பறை அடிப்படையிலான தொழிற்கல்வி கற்றலின் போது பெறப்படும் பொதுவான, மாற்றத்தக்க திறன்களை, பயிற்சி நிறுவனம் ஒன்றில் நேரடியாகப் பணியில் சேர்ந்து பெறுகின்ற உண்மையான பணி அனுபவத்தால் பெறப்படும்  ‘கட்டமைக்கப்பட்ட கற்றலுடன்’  இணைப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. முறையான, முறைசாராத, அறிவாற்றல் மிக்க, அறிவாற்றல் தேவையற்ற மற்றும் உடலியக்கத் திறன்களை அது ஒருங்கிணைக்கிறது. அதன் விளைவாக அந்த மாணவர்கள் சிந்திக்கக்கூடிய, மிகவும் திறமையான பணியாளர்களாக மாறுகிறார்கள். தான் கற்றுக் கொண்ட அறிவாற்றல் திறன்களைக் கொண்டு எதிர்காலத்தில் எப்போதும் மாறி வருகின்ற தொழில்நுட்பம் மற்றும் பணியிடத் தேவைகளை காலப்போக்கில் தொடர்ந்து கடந்து செல்வதாகவே அது இருக்கும்.      

அந்த நாடுகளில் தொழிற்கல்வியில் கட்டாய அங்கமாக தொழிற்பயிற்சிக் காலம் என்பது இருக்கிறது. பயிற்சி நிறுவனங்கள் அல்லது பிற முதலாளிகளால் வேலைக்கு அமர்த்திக் கொள்ளக்கூடிய தொழில் சார்ந்த திறன்களைப் பெறுவதற்கு மாணவர்களுக்கு அந்த தொழில் பயிற்சிக் காலம் உதவுகிறது. தேசிய கல்விக் கொள்கை -  2020 பரிந்துரைக்கின்ற உயர்கல்வி மற்றும் ஏட்டறிவு மாடலைக் காட்டிலும் அந்த நாடுகளில் வழங்கப்பட்டு வருகின்ற பயிற்சி அதிக வேலைவாய்ப்பு சார்ந்ததாக இருக்கின்றது. ஒருவேளை இந்த கல்விக் கொள்கையின் பரிந்துரை செயல்படுத்தப்படுமேயானால், மத்திய நிதியுதவியின் ஒரு பகுதியாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான ராஷ்டிரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலமாக உயர்நிலை மற்றும் மேனிலைக் கல்வியில்  தொழில்மயமாக்கல் எவ்வாறு செயல்படுத்தப்பட்டதோ அதைப் போலவே இதுவும் முடிவடையும். தற்போதைய தேசிய கல்விக் கொள்கை -  2020ஐப் போலவே வேலையை நோக்கிய அணுகுமுறைகளையும், திறன்களையும் வளர்ப்பதற்கு மாறாக அந்த திட்டம் பணிகளை முக்கியத்துவத்துடன் கற்பிப்பதிலேயே கவனம் செலுத்தியது. வெற்றிகரமான தொழிற்கல்வி என்பது பணியிடத்தில் தீவிரமான பயிற்சிகள் உடையதாக இருக்கும். வெறுமனே மற்றவர் செய்வதைக் கவனித்துப் பார்த்து கற்றுக் கொள்ளும் பயிற்சியை நோக்கியதாக அது இருப்பதில்லை. அறிவாற்றல் மிக்க மற்றும் அறிவாற்றல் தேவையற்ற நோக்குநிலைகள் மற்றும் நடத்தை, மனப்பான்மை கூறுகளை உள்ளடக்கியதாக இருக்கும். அதையும் தாண்டி அது மாறிக் கொண்டே இருக்கின்ற பணியிடங்களில் தொடர்ந்து தேவைப்படுகின்ற திறன்களைப் பெறுவதற்கும், அவற்றை மேம்படுத்திக் கொள்வதற்கும் மனதைப் பயிற்றுவிப்பதாகவும் இருக்கும். மாணவர்களுக்கு அத்தகைய கல்வியை அளிப்பதற்கு அதிக அளவிலான முதலீடுகளும், தனிப்பட்ட பயிற்சிக்குப் போதுமான அளவிலே பணியிடங்களும், தொழிற்துறை தயார்நிலையில் இருப்பது, மாணவர்களுக்கு இடமளிப்பது, பிற வளங்கள் மற்றும் தளவாடங்கள் போன்றவற்றிற்கு நிதித் திறனும் தேவைப்படுகிறது என்றாலும் இந்த கல்விக் கொள்கை அவை குறித்து மிகவும் அமைதியாகவே இருக்கின்றது.    

கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஏஐசிடிஇ (அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்) போன்ற ஒழுங்குமுறை முகமைகள் இறுதி ஆண்டு பொறியியல் பட்டம் மற்றும் டிப்ளோமா மாணவர்களுக்கு உள்ளிருப்பு பயிற்சிகள் (தொழில் பயிற்சி) வழங்கப்பட வேண்டும் என்று பலமுறை அழைப்பு விடுத்திருந்த போதிலும், அதை இந்திய தொழில்முறைக் கல்வியால் அடைய முடியவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இரண்டு காரணங்களால் அது நடைபெற இயலாமல் போனது: 1) பொறியியல் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் தற்போதுள்ள தொழில்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தேவைப்படுகின்ற கற்றல் பணியிடங்கள் கிடைக்காமல் போயின 2) அத்தகைய வேலைவாய்ப்பு அனுபவத்தை பணியிடங்களில் வழங்குவதற்குத் தேவையான செலவை தொழில்துறையோ அல்லது அரசாங்கமோ அல்லது கல்வி நிறுவனமோ ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை. அந்த (பொறியியல்) மாணவர்களுக்கே இதுபோன்ற நிலைமை இருக்கையில், மேனிலைப் பள்ளி மாணவர்களுக்கு (ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை) எந்த அளவிலான முயற்சிகள், வாய்ப்புகள், வல்லுநர்கள் மற்றும் நிதி உருவாக்கப்பட வேண்டியிருக்கும் என்பதைக் கற்பனை செய்வதே மிகவும் கடினமாக இருக்கிறது.

குறைந்தது ஒரு தொழிலிலாவது கட்டாயப் பயிற்சி அளித்தல்’, உள்ளூர் பகுதிக்குப் பொருத்தமான செய்தொழில்களை வழங்குதல் என்று தொழிற்பயன்பாட்டை அடைவதற்கான இரண்டு முக்கிய நிபந்தனைகளை இந்த கல்விக் கொள்கை பரிந்துரைத்துள்ளது. அதுவும்கூட முற்போக்கான நாடுகளில் இருப்பதைப் போலல்லாமல் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் (என்சிஎஃப்எஸ்இ) வழிகாட்டுதலின் கீழ் என்சிஇஆர்டி வகுத்துக் கொடுக்கும் பாடத்திட்டத்தின் மூலம் பிரதான கல்விக்குள் உள்ளடக்கிய கட்டாயத் திட்டமாகவே இருக்கிறது. உள்ளூர் பகுதிக்குப் பொருத்தமான செய்தொழில்களை வழங்குதல் என்பதற்கான உண்மையான பொருள் நாடு/பிராந்தியம்/தொழில்துறை எதிர்கொண்டு வருகின்ற திறன் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டியவை,  மாணவர்களின் ஆசை போன்றவற்றிற்கு மாறாக உள்ளூர்ப் பகுதியில் கிடைக்கக்கூடிய பரம்பரையை அடிப்படையாகக் கொண்ட தொழில்களை மட்டுமே தேர்வு செய்ய மாணவர்களையும், கல்வி நிறுவனங்களையும் கட்டாயப்படுத்துவது என்பதாகவே இருக்கும். குறிப்பாக படிநிலை ரீதியாக துண்டு துண்டாக இருந்து வருகின்ற சமூகக் கட்டமைப்பில் இதுபோன்ற தொழில்சார் தேர்வுகள் சமூகப் படிநிலையில் மேல் மட்டங்களில் இருப்பவர்களின் தயவிலேயே இருந்து வருவதால் தங்களுக்கான தொழில் தேர்வுகளைத் தேர்ந்தெடுப்பதற்கு கல்வி நிறுவனங்கள் அல்லது மாணவர்களுக்கு மிகக் குறைவான வாய்ப்புகளே கிடைக்கும். இறுதியில் அது பரம்பரையை அடிப்படையாகக் கொண்ட (குலத்தொழில்) கல்வியிலேயே சென்று முடிவடையும். அது பெரும்பான்மையான மாணவர்களின் திறனைக் குறைப்பதாக இருப்பதுடன் பிரதானக் கல்வியை அவர்கள் தொடர்வதற்கான முன்னேற்ற வழிகளை அடைப்பதன் மூலம் அந்த மாணவர்களுடைய உயர்கல்வியையும் தடுக்கும்.  

நான்காம் தொழிற்புரட்சி,  இயந்திர வழிக் கற்றல் மூலமாக வலுப்படுத்தப்பட்ட சைபர் இயற்பியல் அமைப்பு, நவீன குவாண்டம் இயக்கவியல் உலகில் உள்ள செயற்கை நுண்ணறிவு போன்றவை ‘வாழ்க்கை’ மற்றும் ‘வேலை’களுக்கான புதிய வழியை நோக்கி உலகை நகர்த்தி வருகின்றன. அதன் மூலம் பணியிடங்கள் வேறுபட்ட பல்வேறு திறன்கள், அறிவு ஆகியவற்றைக் கொண்ட மனித வளங்களால் முற்றிலும் புத்துணர்வூட்டப்படுகின்ற புதிய பரிமாணத்தை நோக்கி மறுவடிவமைக்கப்படுகின்றன. மேலும் நவீன இயற்பியலில் ஏற்படுகின்ற விரைவான முன்னேற்றங்கள், மாற்றங்களால் தூண்டப்பட்ட தொழில்கள், செய்தொழில்கள் பெரும்பாலும் நிலையற்றதாக, குறுகிய காலத்திற்கே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரேயொரு வகையிலானதாக குறுகிய நோக்கம் கொண்ட திறன்கள், பணிகளில் இன்றைக்கு மேற்கொள்ளப்படும் பயிற்சி மற்றும் தொழில்மயமாக்கல் நாளையே வழக்கற்றுப் போய் விடலாம் என்பதே அதன் பொருளாகும். இந்த கல்விக் கொள்கை விரும்பியவாறு குறைந்தபட்சம் ஒரு தொழிற்துறையிலாவது மேற்கொள்ளப்படுகின்ற பணி அடிப்படையிலான பயிற்சி என்பது  பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் தங்களுடைய பயிற்சியை முடிக்கின்ற நேரத்தில் நேற்றைய விஷயமாக நிச்சயம் மாறியிருக்கும். எனவே அதை அவர்கள் தங்கள் வாழ்க்கையாகத் தொடர விரும்புவார்கள் என்றால் இன்றைக்கு அல்லது நாளைக்கும்கூட கவர்ச்சிகரமானதாக அது இருக்காது.    

இத்தகைய மனித வளத்தைப் பயன்படுத்திக் கொள்வதை நோக்கி முற்போக்கான உலகங்கள் முன்னேறி வருகையில், இந்த கல்விக் கொள்கையோ மனித மூலதனத்தை, முக்கியமாக பின்தங்கியிருப்பவர்களை தங்களுடைய மிகப் பழைய வாழ்வாதாரங்களிலிருந்து திறன்களைப் பெற்றுக் கொள்ளுமாறு பின்னோக்கி இழுக்க முயல்கிறது. ஒட்டுமொத்தத்தில் தொழிற்கல்வி சார்ந்த பிரச்சனையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த கல்விக் கொள்கை குலத்தொழில் சார்ந்த படிநிலையால் தரப்படுத்தப்பட்டிருக்கும் சமூகத்தைப் பலப்படுத்துவதாகவே இருக்கிறது. சமூகரீதியாக அடையாளம் காணக்கூடியதாக, பரம்பரையை அடிப்படையாகக் கொண்ட வேலை அமைப்புடன் இன்றைக்கும் இருந்து வருகின்ற தரப்படுத்தப்பட்ட படிநிலைச் சமூகத்தில் இந்த கல்விக் கொள்கை உண்மையான தொழிற்கல்வியை ஊக்குவிக்க விரும்புகிறது என்றால், அது சமூகத்தின் பல்வேறு சமூகப் பிரிவுகளிடையில்  ‘தலைமுறைகளுக்கு இடையிலான தொழில்சார் நகர்வை’ ஊக்குவித்திருக்க வேண்டும். அதன்மூலம் தங்களுடைய சமூக இருப்புகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பினரும் இருபத்தியோராம் நூற்றாண்டின் தொழில் திறன் மற்றும் வாய்ப்புகளை நோக்கி தங்களைப் பொருத்திக் கொள்ள முடிந்திருக்கும்.

கட்டுக்கதை 4: கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது என்பதால் மத்திய அரசுக்கு  கொள்கைகளை வடிவமைப்பதற்கான  உரிமை  உள்ளது. உள்ளூர்த் தேவைகள் மற்றும் ஆர்வங்களுக்கு ஏற்றவாறு மாநிலங்கள் அதில் சில விதிகளைப் பின்பற்றிக் கொள்ளலாம்.

கல்வி தொடர்பான கொள்கைகள், சட்டங்களை உருவாக்குவதில் மாநிலங்கள் மத்திய அரசுக்கு அடிபணிய வேண்டிய தேவை எதுவும் இல்லாதிருக்கின்ற நிலையில் இதுபோன்ற கருத்து மிகவும் தவறானதாகும். தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான கொள்கைகளை, சட்டரீதியான சட்டங்களை வகுப்பதற்கான அதிகாரங்கள் மாநிலங்களுக்கு உள்ளன. கல்வியைப் பொறுத்தவரை ஒத்திசைவு நிலை என்பது அரசியலமைப்பின் பரந்த கருப்பொருள்கள், குறிக்கோள்களுக்கு இணங்க அர்த்தமுள்ள, ஆக்கப்பூர்வமான கூட்டாண்மை வடிவத்தில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் கல்வி தொடர்பான கொள்கைகள் சட்டமாக இயற்றப்படுவதாகவே இருக்கின்றது.  மாநிலங்கள் மற்றும் மாநில மக்களை ஈடுபடுத்தாமல், தனது கல்விக் கொள்கைகளையும், சட்டங்களையும் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாகத் திணிக்க முடியாது என்பதே அதன் பொருளாகும். 1976ஆம் ஆண்டில் 42ஆவது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தியதன் மூலம் செய்யப்பட்ட தவறே தற்போதைய முட்டுக்கட்டைக்கு முதன்மையான காரணமாக இருக்கிறது. சர்வாதிகார அரசாங்கம் என்ற ஒன்று வரும் வேளையில் அது அந்த ஏற்பாட்டின் கீழ் உள்ள விதியைப் பயன்படுத்திக் கொண்டு மக்களுக்கு எதிராக அதைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்பதே இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.   

ஆம்… பாடத்திட்டம் துவங்கி பாடநூல்கள், கற்பித்தல் மற்றும் கற்றல், மாணவர் சேர்க்கைகள் (நுழைவுத் தேர்வு மூலம்), அங்கீகாரம், ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு, தேர்வுக்கான ஆசிரியர்கள் நியமனம் (கற்றல் மதிப்பீடு) என்று பலவழிகளில் கல்வியில் உள்ள அனைத்தையும் தற்போதைய மத்திய அரசு மையப்படுத்த முயல்கின்றது. அது மிகச் சிறிய அளவில் மீதமுள்ள தேர்வுகளை மட்டுமே மாநிலத்திடம் விடுகிறது. உண்மையில் 1976ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தவறைச் சரி செய்வதன் மூலமாக நமது அரசியலமைப்பால் முதன்மையாக மாநிலப் பொருளாகக் கருதப்படுகின்ற கல்வியை ஒத்திசைவுப் பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தேசிய கல்விக் கொள்கை இந்தியா முழுவதும் பல கிராமங்கள், பிராந்தியங்கள், மாவட்டங்களில் இருந்து பல்வேறு தரப்பினரிடம் தொடர் ஆலோசனைகளைப் பெற்று வடிவமைக்கப்பட்டிருப்பதால் அது இந்திய மக்கள் அனைவரையும் பிரதிபலிக்கிறது என்றும் எனவே அது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் தேசிய கல்விக் கொள்கை - 2020இன் ஆதரவாளர்கள் கோரி வருகின்றனர். மத்திய அரசின் விசுவாசிகளுக்கிடையில் மட்டுமே அந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாலும், கொள்கைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட பெரும்பாலான ஆக்கபூர்வமான கருத்துகள், உள்ளீடுகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதாலும் அவர்களுடைய இந்த வாதம் உண்மையில் பொய்யானதாகும்.   

தங்களுக்குச் சொந்தமான கல்விக் கொள்கைகளையும், சட்டங்களையும் செயல்படுத்த அரசியலமைப்பு அதிகாரம் அளிக்கிறதா இல்லையா என்பது ஒருபுறமிருக்க, உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள சிறந்த நடைமுறைகளின்படி பார்க்கும் போது தார்மீகரீதியாக, நெறிமுறைகளின்படி, அறிவியல்ரீதியாக கல்வி என்பது மாநிலத்தின் கீழ் வருவதாகவே உள்ளது. மாறுபட்ட பிரதிநிதித்துவங்களைக் கொண்டு பல்வேறு வகையாக இருக்கின்ற சமூகங்கள் வெவ்வேறு தனித்துவமான கருத்துகளைக் கொண்டிருக்கின்றன. அதாவது அரசியலமைப்பு ரீதியாக ஒரே தேசமாக அவை ஒன்றிணைக்கப்படலாம் என்ற போதிலும் இயல்பாகவே அவை வெவ்வேறு நாடுகளாகவே இருக்கின்றன. அரசியலமைப்பு-தேசம் (தேசிய-அரசு) மற்றும் கருத்துரீதியான-தேசம் (சமூகம்) ஆகியவை முற்றிலும் வேறுபட்டவையாகவே இருக்கின்றன. அரசியலமைப்பு-தேசம் என்பது அரசியலமைப்பு மற்றும் அதன் சட்டங்களால் உருவாகிறது. ஆனால் கருத்துரீதியான-தேசம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அதன் சமூகத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு பரவலாக அதன் சமூக அலகுகளாலேயே அமைக்கப்படுகிறது.     

கல்வியின் அதிகார வரம்பு அரசியலமைப்பு-தேசத்திற்கானது அல்ல; அது கருத்துரீதியான-தேசத்திற்கு (சமூகம்) மட்டுமானதாகும். எனவே வெவ்வேறு கருத்துரீதியான நாடுகளுக்கு பொதுவான கல்விக் கொள்கையால் சேவையாற்ற முடியாது. இந்திய தேச அரசு என்பது மொழியியல், கலாச்சாரம், இன ரீதியாக தமிழ்நாடு, கன்னட தேசம், மலையாளம், தெலுங்கு, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி நாடுகள் மற்றும் பல கருத்துரீதியான நாடுகளை உள்ளடக்கியதாகும். அந்த வகையில் ஒவ்வொரு இந்திய மாநிலமும் (தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம் போன்றவை) கருத்தியல்ரீதியான-தேசமாகவே இருக்கின்றன. அதே நேரத்தில் அவை இந்திய அரசியலமைப்பு-தேசத்தின் கீழ் மாகாணமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் தங்களுக்கென்று தனித்துவமான கலாச்சாரம், ஆன்மா, சுதேசிய அறிவு (அனுபவம்), தேவைகள், கோரிக்கைகள், கேள்விகள், மரபுகள், அறிவியல் தேடல்கள், சமூக நடத்தை ஆகியவற்றை உள்ளடக்கிய தனித்துவமான கருத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. இவையனைத்திற்குமான பொதுவானதொரு கல்விக் கொள்கையை இந்தியாவில் பொருத்துவது என்பது பயனற்றது. இதைச் சரியாகப் புரிந்து கொண்டதால்தான் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளைப் போன்று உலகில் உள்ள எந்தவொரு முற்போக்கான நாடும் இதுவரை நாடு தழுவியதொரு கல்விக் கொள்கையை உருவாக்கிடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கவில்லை.  

உண்மையில் ஒப்பிடக்கூடிய ஜனநாயக அமெரிக்கா மற்றும் கம்யூனிஸ்ட் சீனா போன்ற நாடுகளிலும், சிறிய ஆனால் முற்போக்கான ஸ்காண்டிநேவிய நாடுகளிலும் கல்வி என்பது மாநில அளவிலான அல்லது மாகாண அளவிலான விவகாரமாகவே இருக்கிறது. கல்விக் கொள்கையின் அதிகார வரம்பு கருத்துரீதியான-தேசத்திற்கானது (சமூகத்திற்கானது), இந்தியச் சூழலில் அது மாநிலத்துடன்  மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதே இந்த பிரச்சனையின் முடிவான வாதமாக உள்ளது. மாநிலங்களே அந்த சமூகத்தைத் தனித்துவமாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் கல்வி என்பது தனித்து மாநிலத்தின் விவகாரமாகவே இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. எனவே கல்விக் கொள்கையும் அவ்வாறாகவே இருக்க வேண்டும். இதுவரையிலும் இந்த நாட்டில் வகுக்கப்பட்ட அனைத்து கல்வி கொள்கைகளாலும் அது ஒருபோதும் புரிந்து கொள்ளப்படவே இல்லை. அதன் காரணமாக அநேகமாக அனைத்து தேசிய கல்விக் கொள்கைகளாலும் சமுதாய அளவிலே கல்வியைச் செயல்படுத்திட முடியவில்லை. மேலும் இன்றும் கூட கல்வி உள்ளீடுகளில் சில மேம்பாடுகளைத் தவிர்த்து, தரமான கல்வி என்பது நெடுங்கனவாகவே இருந்து வருகிறது.  

கட்டுக்கதை 5: பின்தங்கியுள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான அணுகல், சமபங்கு, உள்ளடக்கல் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் தேசிய கல்விக் கொள்கை -  2020 கல்வியில் சமூக நீதியை உறுதி செய்கிறது.

அணுகல், சமபங்கு, உள்ளடக்கல் என்பதன் பொருள் என்ன, அவை கல்வியில் சமூக நீதியை அடைவதற்கு எவ்வாறு தேவைப்படுகின்றன என்பதை தேசிய கல்விக் கொள்கை – 2020ஐ ஆதரிக்கின்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. பின்தங்கியிருப்பவர்களின் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதில் அணுகல், சமபங்கு, உள்ளடக்கல் என்று அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவையாக, பங்களிப்பவையாக இருக்கின்றன. ஆனால் பின்தங்கியவர்களை கல்விரீதியாக மேம்படுத்துவதற்கு, பின்தங்கிய மக்கள்  கல்வி சேவைகளைப் பெறுவதில் ‘நியாயத்தன்மையை’ (fairness) உறுதி செய்வதே மிகவும் முக்கியமான தேவையாக இருக்கும். இந்த கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு மாறாக உள்ளடக்கல் என்பது கல்விக்கான அணுகலை விரிவாக்குவதாக மட்டுமல்லாது,  கல்வியை  அணுக முடியாதவர்களை அடையச் செய்வதைக் குறிப்பதாகவும், அணுக முடியாதவர்களுக்கு எவ்வாறு அதை பொருத்தமுள்ளதாக்குவது, மனித அனுபவங்களில் அதை எவ்வாறு ஒரு பகுதியாக மாற்றுவது என்பதையும் குறிப்பதாகவே இருக்கிறது. பாடத்திட்டத்தில் கற்பிக்க  வேண்டிய பொருள்களாக அவர்களுடைய அறிவு, கேள்விகள், அறிவுக்கான தேடல் ஆகியவற்றைச் சேர்ப்பதை உறுதி செய்வதே உண்மையிலேயே உள்ளடக்கல் என்பதன் பொருளாக இருக்கும். நியாயமானவை எனக் கருதப்படுகின்ற பல்வேறு வகையான கல்வி மாடல்கள், திட்டங்கள், உத்திகளை உள்ளடக்கியுள்ள சமவாய்ப்பு போன்றவற்றிற்கு அறுபத்தி ஆறு பக்கங்கள் கொண்ட இந்த கல்விக் கொள்கையில் ஓரிடமும் கிடைக்கவில்லை. எடுத்துக்காட்டாக எந்தவொரு தீர்வையும் வழங்கிடாத இந்த கல்விக் கொள்கை மூலம் சமூக ஏற்றத்தாழ்வு (சாதி முற்சாய்வு), பொருளாதார ஏற்றத்தாழ்வு, கலாச்சார ஏற்றத்தாழ்வு, குடும்ப ஏற்றத்தாழ்வு, திட்டம் சார்ந்த ஏற்றத்தாழ்வு, ஊழியர்களின் ஏற்றத்தாழ்வு, கற்பித்தல் ஏற்றத்தாழ்வு, மதிப்பீட்டு ஏற்றத்தாழ்வு, மொழி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு என்று பல வழிகளில் கல்வியில் சமவாய்ப்பின்மை நுழைந்து விடக்கூடும். நிச்சயமாக பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி உள்ளீடுகள் சமமான அணுகலுக்கான ஒரு தளத்தை உருவாக்கக்கூடும் (மோசமாக செயல்படும் கல்வி நிறுவனங்களில் இருக்கலாம்) என்றாலும் இந்த உள்ளீடுகளின் நேர்மையற்ற விதிமுறைகள் சமத்துவத்தை அடையும் வேகத்தைத் தணிப்பதாகவே இருப்பதால் அவற்றால் சமத்துவத்தை உருவாக்கிட முடியாது.   

குறைவான திறமையுடன் உள்ள ஆசிரியர்கள் ஒப்பீட்டளவில் ஆர்வமின்றி, பயனற்ற முறையில் கற்பிக்கலாம் என்பதால் அவர்களைக் கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் போது கற்பித்தல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். கல்வி முறைமையில் உள்ள மேற்குறிப்பிடப்பட்ட நியாயமற்ற தன்மை பின்தங்கிய மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வுகளுடனான முடிவுகளுக்கு காரணமாக இருக்கின்றன. அதைப் போன்று பின்தங்கிய மாணவர்களிடம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்துகின்ற நுழைவுத் தேர்வுகளும் நியாயமற்றவை என்றே கருதப்படுகின்றன. அதுபோன்ற போட்டித் தேர்வுகளில் அவர்களுடைய செயல்திறனுக்கு அவர்கள் காரணமல்ல என்றிருப்பது உண்மையில் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா? கல்விக் கொள்கையில் இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் என்று எதுவுமில்லை. சிறப்புக் கல்வி மண்டலங்கள், பின்தங்கிய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை போன்ற திட்டங்கள் எல்லாம் வெறுமனே செய்து தரப்படுகின்ற வசதிகளாக, அடிப்படை ஏற்பாடுகளாகவே இருக்கின்றன. இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் பின்தங்கியிருப்பவர்களை நற்பலன்களை அடைந்திருக்கும் அவர்களுடைய சகாக்களுடன் இணையாக வைப்பதற்கு போதுமானவையாக அந்த திட்டங்கள் இருக்கவில்லை. சுதந்திரம் பெற்று எழுபத்தி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் சமூகத்தின் உயர் மற்றும் கீழ் அடுக்குகளுக்கு இடையில் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதில் மிகப் பெரிய கடல் அளவிலான இடைவெளி இருந்து வருகின்ற நிலையில் ​​சிறப்புக் கல்வி மண்டலங்கள் போன்ற திட்டங்களை சமூக நீதித் திட்டங்கள் என்பதாகக் கருதுவது ஒரு நகைச்சுவையாகவே இருக்கும். சிறப்புக் கல்வி மண்டலங்கள் போன்ற திட்டங்கள் கல்வியைப் பெறுவதற்கான அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் என்றாலும் அனைவருக்கும் சமமான கல்வி என்ற சிறப்பை அவை உறுதி செய்து தராது. சமூக நீதியை அடைவதற்கான தன்னுடைய திறனைப் பற்றி பெருமை கொள்கின்ற இந்த இருபத்தியோராம் நூற்றாண்டின் கொள்கை (தேசிய கல்விக் கொள்கை - 2020) இந்த இடைவெளியை அடைவதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருக்க வேண்டும்.     

கட்டுக்கதை 6: தேசிய கல்விக் கொள்கை - 2020 மாநிலத்தின் இடஒதுக்கீடு கொள்கையைப் பாதிக்காது என்று ஒன்றிய அரசால் உறுதியளிக்கப்பட்டுள்ளது

இது உண்மையில்லை. இந்த கல்விக் கொள்கை நிச்சயமாக, மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் பணிநியமனம் போன்றவற்றில் இடஒதுக்கீடு தொடர்பாக எந்தவொரு வார்த்தையையும் குறிப்பிடவே இல்லை. மாறாக அது இடஒதுக்கீடு வழங்கப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் மிகவும் தந்திரமாக முன்மொழிந்திருக்கிறது. முதலாவதாக நாட்டின் இடஒதுக்கீடு கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரிவுகளுக்கு தகுதியான மாணவர்களை தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதற்கான விகிதாசார அணுகலுக்கான (சேர்க்கை) உத்தரவாதத்தை அது அளிக்கவில்லை. பின்தங்கிய குழந்தைகளுக்கு 25% சேர்க்கையை தனியார் பள்ளிகள் வழங்க வேண்டுமென்று கல்வி உரிமைச் சட்டம் - 2009இல் கட்டாயமாக்கப்பட்ட பிறகும் பின்தங்கிய குழந்தைகளைத் தவிர்த்து, அனைவரையும் உள்ளடக்குவதாக இல்லாத அணுகுமுறையால் இந்திய தனியார் பள்ளிப் படிப்பு நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. சமூகநீதியை அடையப் போவதாகக் கூறுகின்ற இந்த கல்விக் கொள்கை அது குறித்து ஒரு வார்த்தையும் கூறாமலிருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.  

246ஆவது மாநிலங்களவை அமர்வில் (2018) வழங்கப்பட்ட தரவு தனியார் பள்ளிகளின் வளர்ச்சி அதிகரித்து வரும் போக்கைக் காட்டுகிறது - பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்களில் தோராயமாக நாற்பது சதவீதம் பேர் தனியார் பள்ளிகளிலேயே உள்ளனர். உயர்கல்வியைப் பொறுத்தவரை ஏறக்குறைய அறுபது சதவீதம் அரசு பொது நிதியளிக்கும் பல்கலைக்கழகங்கள் என்றிருக்கும் நிலையில் நாற்பது சதவீதம் தனியாரிடம் இருக்கின்றன. கல்லூரிகளைப் பொறுத்தவரை 78% கல்லூரிகள் தனியாரால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த தனியார் கல்லூரிகளில் 67.3% கல்லூரி மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய போக்கு பள்ளி மற்றும் உயர் கல்வி என்று இவையிரண்டுமே மிக விரைவில் முற்றிலுமாக தனியார் விவகாரமாக மாறி விடும் என்பதையே காட்டுகிறது. தனியார்மயமாக்கலின் இந்த முடுக்கத்திற்கு இணக்கமாக இருக்கும் வகையில் பொது நிறுவனங்களையும் பெருநிறுவனமயமாக்குவதற்கான ஏற்பாடுகளை தேசிய கல்விக் கொள்கை - 2020 பரிந்துரைத்துள்ளது. அதாவது. WTO-GATSஇன் புதிய தாராளமய ஆணைக்கேற்ப பொதுநிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான சொந்த நிதிக்கு தாங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். தனியார் பள்ளிக்கூடத்தில் பின்தங்கியவர்களுக்கு 25% இடஒதுக்கீட்டை அரசின் சட்டம் (2009) அமல்படுத்திய போதிலும், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக சட்டத்தின் இருப்பு மூலமாக ஒரு வருட காலப்பகுதியில் அரசாங்கத்தால் அதன் இலக்கில் 1% கூட அடைய முடியவில்லை எனும் போது, பின்தங்கியவர்களுக்கு அரசியலமைப்பு சார்ந்து இருந்து வருகின்ற பாதுகாப்புகளை அமல்படுத்தாமல் இப்போது தனியார் மேலாதிக்கத்தில் உள்ள கல்வித் துறையில் இட ஒதுக்கீட்டை இந்த புதிய கல்விக் கொள்கை எவ்வாறு உறுதி செய்யப் போகிறது? 

அதேபோல் இந்த கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான (பள்ளி கல்வி மற்றும் உயர் கல்வி) தகுதித் தேவைகள், பணி நியமனம், பதவி உயர்விற்கான அளவுருக்கள் பெரும்பாலும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த ஆசிரியர்களின் நுழைவு, பின்னர் அவர்களுக்கான பதவி உயர்வு ஆகியவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் இருக்கவில்லை. பொதுக் கல்வி நிறுவனங்கள் முழுக்க தனியார்மயமாக்கல் அல்லது நிறுவனமயமாக்கலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இடஒதுக்கீடு கொள்கைகள் இருந்த போதிலும் அவை அந்த நிறுவனங்களுக்குப் பொருந்தாதவையாகவே இருக்கப் போகின்றன. அரசியலமைப்பு ஆவணங்களில் இடஒதுக்கீட்டுக் கொள்கை இருந்தபோதிலும் படிப்படியாக அது நடைமுறையில் இல்லாமல் போய் விடும் என்பதே இறுதி முடிவாகி விடப் போகிறது.   

கட்டுக்கதை 7: தேசிய கல்விக் கொள்கை - 2020 கல்வி நிறுவனங்கள் வணிகமயமாக்கப்படுவதை  ஊக்குவிக்காது. அந்த நிறுவனங்கள் கல்விசார் சிறப்பை அடைவதற்கு உதவும்.

‘இலகுவான ஆனால் இறுக்கமான’ ஒழுங்குமுறையின் அணுகுமுறையானது நிதி, நடைமுறைகள், பாடநெறி மற்றும் திட்டம் வழங்கல்கள், கல்வி விளைவுகள், பொதுக்கல்வியில் கணிசமான முதலீடு, அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் நல்லாட்சிக்கான வழிமுறைகள் ஆகியவற்றை முழுமையாகப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதைக் கட்டாயப்படுத்தும். அதேபோன்று ஏழைகள் அல்லது தகுதியான பிரிவினர் பாதிக்கப்படாமல் செலவு மீட்புக்கான வாய்ப்புகள் ஆராயப்படும்’ என்று வணிகமயமாக்கல் குறித்து இந்த கல்விக் கொள்கை கூறுகிறது.  இவை அதிக அளவிலோ அல்லது குறைவாகவோ நிறுவனங்கள் மீதான ஒழுங்குமுறை அமைப்புகளால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன என்ற போதிலும் கல்வி என்பது இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வருகின்ற லாபகரமான வணிகமாகவே மாறியுள்ளது. இது அனைவருக்கும் தெரிந்ததொரு வெளிப்படையான ரகசியமே ஆகும். ஒழுங்குமுறைகள், ஆய்வுகளுக்குப் பதிலாக பொது ஆய்வு என்று முன்வைக்கப்படுகின்ற யோசனை சட்டத்தை மீறுபவர்கள், மோசடி செய்பவர்களுக்கு சுத்தமானவர்கள் என்ற சான்றிதழைத் தருவதைத் தவிர வேறொன்றாக இருப்பதற்கு  வாய்ப்பில்லை. குறிப்பாகச் சொல்வதென்றால் தனியார் நிறுவனங்கள் குடும்ப வணிகத்தைப் போலவே நடத்தப்பட்டு வருகின்றன. கல்வியாளர்கள், மனிதவளம், நிதி, போக்குவரத்து போன்ற பல்வேறு இலாக்காகளை குடும்ப உறுப்பினர்களே  தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் கல்வியை மேம்படுத்துவதற்கு ஆசிரியர்களை அனுமதிப்பதே இல்லை.      

இதன் விளைவாக தனியார் பள்ளி / கல்லூரி / பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் அனைத்து வக்கிரமான கல்வி நடைமுறைகளுக்கும், நெறிமுறைகளற்ற அனைத்து மேலாண்மை நடைமுறைகளுக்குமான இடமாக மாறியுள்ளன. தங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்காக வருவாயின் பெரும் பகுதியை அவர்கள் பறித்து வைத்துக் கொள்கிறார்கள். ஆயினும் இதுபோன்ற  அச்சுறுத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கென்று ஆக்கபூர்வமான எதுவும் இந்த கொள்கையாவணத்திற்குள் இருந்திடவில்லை. அதற்குப் பதிலாக இந்த கல்விக் கொள்கை அவர்களுக்கு இன்னும் கூடுதலான தன்னாட்சியை வழங்குகிறது. கல்வி நடைமுறைகளை மேம்படுத்துவதில் கல்வி தன்னாட்சி என்பது மிகவும் முக்கியமானது, ஆனாலும் இப்போது நடைமுறையில் இருப்பதையும் தாண்டி நிதி தன்னாட்சி அவர்களுக்கு வழங்கப்படுமேயானால், இப்போதிருப்பதைக் காட்டிலும் இந்த துறையை அது மேலும் வணிகமயமாக்கவே செய்யும். இந்த கொள்கையில் அனைவருக்கும் கல்வியை மலிவுபடுத்தித் தருவதற்கான எந்தவொரு தீர்வும் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக கல்வி நிறுவனங்களில் கட்டண நிர்ணயம், கட்டணக் கட்டுப்பாடு குறித்து அது மௌனமே காத்து  நிற்கிறது. ஏற்கெனவே சாதாரண மனிதர் ஒருவர் கல்விக் கட்டணம் செலுத்த இயலாத வகையில் ஐஐஎம் போன்ற உயரடுக்கு பொது நிறுவனங்கள் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த வழியில் பல பொது நிறுவனங்களை நிறுவனமயமாக்க வேண்டும் என்று கல்விக் கொள்கை கட்டளையிடுவதன் மூலம் அரசாங்கத்திடம் உள்ள கல்விப் பொறுப்பை எதிர்காலத்தில் முற்றிலுமாகக் கைவிடும் நிலையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக அது தன்னை விடுவித்துக் கொள்கிறது.     

பல ஆயிரம் பில்லியனர்களைப் பெற்றெடுத்துள்ள இந்திய தனியார் உயர்கல்வியை (பொதுக் கல்வி முறையைக் காட்டிலும் முக்கியமான) கல்வி முதலாளித்துவத்தின் அடையாளமாகவே வகைப்படுத்திக் கொள்ளலாம். ஒரு சிலரைத் தவிர்த்து, தங்களுடைய கல்வி முயற்சிகளின் தொடக்கத்தில் பெயரளவிலான சிறிய முதலீட்டாளர்களாக இருந்தவர்கள் ஒரு காலகட்டத்தில் தங்கள் கல்வித் தொழில்களின் வருமானத்திலிருந்து பில்லியனர்களாக வளர்ந்துள்ளனர். தற்போதைய கல்வி சாம்ராஜ்யங்களில் பெரும்பாலானவை மிகக் குறைந்த முதலீட்டிலேயே தங்கள் கல்வி முயற்சிகளைத் தொடங்கின என்பதே உண்மையாகும். ஆனால் நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்தவுடன் அவர்கள் அனைவரும் கல்வியில் இருந்து பெற்ற லாபத்தை பிற வணிகங்களாக பல்வகைப்படுத்துவதன் மூலமாக வணிக அதிபர்களாக மாறியுள்ளனர். 

நாட்டின் சட்டத்தின்படி கல்வி என்பது முற்றிலும் அறச்சிந்தனை கொண்டதாக இருக்கின்ற  போதிலும் இதுபோன்றே பெரும்பாலும் நிகழ்ந்துள்ளது. இந்த கல்விக் கொள்கையில் இதுபோன்ற வணிகமயமாக்கலைத் தவிர்ப்பதற்கான எதுவும் இல்லை. கொள்கையில் இருக்கின்ற இந்த குறைபாட்டைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, இந்த கல்விக் கொள்கை கல்வியில் வணிகமயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வந்து விடும் என்று எவ்வாறு நம்ப முடியும்? இந்தியா WTO-GATSஇல் கையொப்பமிட்ட நாடு என்பதால் தனியார் நிறுவனங்களில் கல்வி கட்டணத்தை அரசாங்கம் கட்டுப்படுத்தவோ அல்லது தலையிடவோ கூடாது என்ற அந்த சர்வதேச நிறுவனத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கிப் போகவே இந்த கல்விக் கொள்கை விரும்புகிறது.

கட்டுக்கதை 8: தனியார் முதலீடுகள் மற்றும் கல்வியில் தனியார்மயமாக்கம் இல்லாமல் மொத்த மாணவர் சேர்க்கை இலக்குகள், கல்வி சிறப்பு மற்றும் இலக்குகளை அடைய முடியாது

ஓஇசிடி (OECD - பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு) நாடுகளில் சராசரியாக பள்ளி ஆண்டுக்கான மொத்த பள்ளி நிதியில் 85% அரசாங்க மூலங்களிலிருந்தும், 10% பெற்றோரிடமிருந்தும் (மாணவர் கட்டணம் அல்லது பெற்றோர் செலுத்தும் பள்ளிக் கட்டணங்களாக) 2% பயனாளிகளிடமிருந்து மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து 2% என்றும் பெறப்படுகின்றன. அவற்றில் ஸ்வீடன், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, எஸ்டோனியா மேலும் அஜர்பைஜான் மற்றும் லித்துவேனியா போன்ற கூட்டாளர் நாடுகளில் 98%க்கும் அதிகமான நிதி அரசாங்க மூலங்களிலிருந்தே கிடைக்கின்றன. பெரும்பாலான ஓஇசிடி நாடுகளில் பொது உயர்கல்வியே மொத்த உயர்கல்வி வழங்குநர்களில் 85% என்ற அளவில் இருக்கிறது. அண்டை நாடான சீனாவில் இது குறைந்தபட்சம் 80% ஆக உள்ளது. தொட்டிலிலிருந்து கல்லறை வரையிலும், பள்ளி முன்பருவம் முதல் முனைவர் பட்டங்கள் வரை கியூபா பொதுக் கல்வியை வழங்கி வருகிறது. கியூபாவின் கல்வி முறையும், செயல்திறனும் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.

வளர்ந்த நாடுகள் மற்றும் மேற்குலகில் உயர்கல்வியில் தனியார் சேர்க்கை என்பது இந்தியாவுடன் (60%க்கும் அதிகமாக) ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் அது 27.5%, கனடாவில் 11.7%, பிரான்ஸில் 19.7%, ஜெர்மனியில் 12.5%, ரஷ்யாவில் 14.7% என்றிருக்கிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும் போது வளர்ந்த நாடுகள் கல்வி தனியார்மயமாக்கப்படுவதைக் கட்டுப்படுத்தியுள்ளன என்றே இந்தப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. வளரும் நாடுகளில் தனியார் பிரபுக்களின் தயவில் வாங்க வேண்டிய பொருளாகவே கல்வி மாறியுள்ளது. தாராளச்சந்தையுள்ள நாடுகள் தங்கள் கல்வியை தனியார் முதலீட்டிலிருந்து எச்சரிக்கையுடன் பாதுகாத்துக் கொண்டு, மிகவும் விலையுயர்ந்த விவகாரமாக இருக்கும் கல்விக்கு பகிரங்கமாக நிதியளித்து வர முடிகிறது என்றால் நமது கல்வி இலக்குகளை அடைவதற்கு தனியார் முதலீடே முதுகெலும்பாக இருக்கும் என்று இந்தியாவில் மட்டும் ஏன் ஒரே கூச்சலாக உள்ளது? சுரண்டலைத் தவிர அது வேறு எதுவுமில்லை.        

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதம் மற்றும் கூடுதல் செஸ் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு  ஒட்டுமொத்த பள்ளிக் கல்வியை இலவசமாகவும், உயர்கல்வியை ஏழைகள் உட்பட அனைவருக்கும் மலிவாகவும் கொடுக்க முடியும். இந்த வழியில் நடைமுறைப்படுத்தினால் கல்வித் துறையில் தனியார் இறங்குவதற்கான தேவையே இருக்கப் போவதில்லை. ஆனாலும் இந்த துறையின் வளர்ச்சிக்கு, கல்வி சேவை, பொருட்கள் வழங்கல், ஆய்வுகளுக்கு தங்களுடைய பெருந்தன்மையான ஆதரவைத் தாராளமாக வழங்குமாறு தனியாரை வலியுறுத்திட வேண்டும். வளரும் நாடுகளில் தேவைகளை-உறிஞ்சும் நிறுவனங்களாக உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் சந்தை மற்றும் தொழில்துறையின் தேவைக்கு மட்டுமே எதிர்வினையாற்றக் கூடியவையாக இருப்பதால் தேவை குறையும் போது அவை மூடப்படும் அளவிற்கு அதிகம் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஓஇசிடி நாடுகளிலும், சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற உலகின் பிற பகுதிகளிலும், பொதுக் கல்வியே சமூகத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளது. இந்திய உயர்கல்வித் துறையில், மற்றவர்களை விட யார் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்பது தெளிவாகி இருக்கிறது; கற்றல் முடிவுகள், ஆய்வு முடிவுகள் மற்றும் பிற சேவை விளைவுகளை அடைவது உள்ளிட்ட அனைத்து பொருந்தக்கூடிய அளவுருக்களாலும் தனியார் நிறுவனங்களை விட பொது உயர்கல்வி நிறுவனங்களே மிகச் சிறந்தவையாக இருந்து வருகின்றன.    

மேரிலாந்து பல்கலைக்கழகம், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் ஆய்வாளர்கள் இணைந்து நிகழ்த்திய இந்திய மனித மேம்பாட்டு ஆய்வில் அரசு பள்ளி மாணவர்களைக் காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்களின் செயல்திறன் தொடர்ந்து அதிகமாக இருக்கவில்லை என்றும், சில மாநிலங்களில் தனியார் பள்ளி மாணவர்களை விட அரசு பள்ளி மாணவர்களே சிறப்பாகச் செயல்படுகிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற போக்கால் குறிப்பாக பெரிய அளவில் தனியார் பள்ளி சேர்க்கை உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தனியார் பள்ளிகளில் உள்ள மாணவர்கள் தங்களுடைய அரசு பள்ளி சகாக்களுடன் ஒப்பிடும் போது திறன்களை இழப்பதை அந்த ஆய்வு காட்டுகிறது. எனவே பொதுக் கல்வியை விட தனியார் கல்வியே சிறந்தது என்ற கட்டுக்கதை போலியான, தவறான பிரச்சாரமாக மட்டுமே உள்ளது. மேலும் பொதுக் கல்வியே நல்லது, மலிவானது, சமத்துவமானது, அனைவரையும் உள்ளடக்கியது என்பதை இந்தியாவும் மற்ற முற்போக்கான உலகங்களும் நிரூபித்துக் காட்டியுள்ளன. எனவே தனியாரை நம்புவதற்குப் பதிலாக பொதுக் கல்வியை அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இங்கு இருக்கின்ற அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களையும் பொதுவில் தேசியமயமாக்கிட வேண்டும்.

கட்டுக்கதை 9: தேசிய கல்விக் கொள்கை - 2020இல் முன்மொழியப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமானதுதான்.

கல்விக் கொள்கையின் சரி, தவறுகளைத் தனியே ஒதுக்கி வைத்து விட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல விதிமுறைகள், நிபந்தனைகள், அமைப்புகள், சேவைகள், செயல்முறைகள், கண்காணிப்பு, அங்கீகாரம் மற்றும், தரவரிசை போன்ற நூற்றுக்கணக்கான முன்னெடுப்புகளை, திட்டங்களை, முன்மொழிவுகளை, அடிப்படை கட்டமைப்பு மாற்றங்களை நடைமுறைப்படுத்துவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி ஒருவரால் கூற முடியும்.

மையப்படுத்தப்பட்ட படிநிலை செயல்பாட்டு வரிசைகளால் பள்ளிக்கல்வி, உயர்கல்வி இரண்டிலும் ஏற்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான கடுமையான இடையீடுகள், ஏராளமான கட்டுப்பாடுகள்,  விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் கொண்டு வரப்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள், அவை உருவாக்கவிருக்கும் புதிய வகைப்பாட்டிலான கல்வி நிலைகளுக்கு இணையாக இந்த கல்விக் கொள்கையைத் தவிர உலகில் வேறெதையும் ஒருவரால் காண முடியாது. இந்த கல்விக் கொள்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய மாற்றங்களுக்கு இடையிலும், அதற்குள்ளும் உருவாகும் சிக்கலான வழிமுறைகளுக்கு இணையானவற்றை ஹிட்லரின் நாஜிக் கல்வி, முசோலினியின் பாசிசக் கல்வி முறையிலும் கூட ஒருவரால் காண முடியாது.  

ஒழுங்குமுறை மற்றும் தரநிலைகளை ஏற்படுத்தித் தருகின்ற பத்துக்கும் மேற்பட்ட மையப்படுத்தப்பட்ட உச்ச அமைப்புகள் மற்றும் மாநில அளவில் அதுபோன்ற படிநிலைப்படுத்தப்பட்ட முகமைகள் துவங்கி கல்வி வழங்கப்படும் இடம்  (கல்வி நிறுவனங்கள்) வரையிலும் பல வகைகளில் உருவாக்கப்படும் அமைப்புகள் குழப்பம் மட்டுமே உருவாக வழிவகுக்கும். மேலும் இதுபோன்ற முழுமையான மேலிருந்து கீழான ஒழுங்குமுறை, கட்டுப்பாடுகள் மற்றும் அமலாக்கங்களுக்கு கணிசமான அளவில் நிதி தேவைப்படும். அதுகுறித்து இந்த கல்விக் கொள்கை சிந்தித்ததாகவே தெரியவில்லை. இந்த அமலாக்க அமைப்புகள் அனைத்தும் கல்வியை மத்திய அரசின் முழுக்காவலுக்குள் மையப்படுத்தித் தருவதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. இத்தகைய அமைப்புமுறை மத்தியில் உள்ளவர்களின் திட்டங்களுக்கு ஏற்ற வகையில் அவர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நடனமாடுமாறு கல்வியைக் கட்டாயப்படுத்ட்தவே செய்யும். அது சமூகத்திற்குச் சேவை செய்யும் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கிடாது. இவையனைத்திற்கும் மேலாக இந்த கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், அது மிகப் பெரிய சோகமாக, வரலாற்று ரீதியாக மிகப் பெரிய தவறாக - பழுதுபார்த்து மீட்க முடியாத அளவிற்கு மிகவும் கடினமான பிரச்சனையாக - நம் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும்.  

மேலேயுள்ள எனது விளக்கங்கள் மேற்கூறிய கட்டுக்கதைகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்ட கட்டுக்கதைகளாக இருப்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்பதையும், தங்களைப் பற்றிய விவாதங்களுக்கு கூட அவை தகுதியற்றவை என்பதையும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன. இந்த கட்டுக்கதைகளில் உள்ள ஆர்வங்கள், மாயைகளைத் தவிர வரலாற்று ரீதியாக இந்தியாவில்  நடைமுறையில் உள்ள சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளில் கல்வி பதிலளிக்க வேண்டிய அடிப்படை கேள்விகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பதிலளிக்க இந்த கல்விக் கொள்கை தவறிவிட்டது. ஒரு கொள்கையாகப் புகழப்படுவதற்குத் தேவையான பொருட்கள் எதுவும் இல்லாமலிருப்பது, இந்த தேசமும் சமூகமும் தீவிரமாக எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சனைகளில் மௌனமாக இருப்பது போன்றவை இந்த கொள்கை சந்தேகத்திற்கு இடமின்றி முழுமையான நிராகரிப்புக்குத் தகுதியானது என்பதையே காட்டுகின்றன.

கல்விக்கான இலக்குகளை அடைவதற்கான செல்வாக்கைச் செலுத்தும்/தடுக்கும் சமூகம், தேசத்தின் அனைத்து அம்சங்களுடனும் கல்வியைத் தொடர்புபடுத்துவதைத் தவிர இந்தியாவில் கல்விக்கான சிக்கல்கள் வேறாக இருக்கவில்லை. இந்த அம்சங்கள் நடைமுறையில் உள்ள தரப்படுத்தப்பட்ட சமூக அமைப்பு, நடைமுறையில் உள்ள சமூக ஒத்திசைவு நிலை, சமூகத் தீமைகள், தனித்துவமான சமூகக் குழுக்களுக்கிடையில் உள்ள தகவல் தொடர்பு மற்றும் பரிமாற்றம், கலாச்சாரம், சமூக விழுமிய அமைப்பு, மதம் சார்ந்த விழுமியங்கள், அரசியலமைப்பு சார்ந்த விழுமியங்கள், மொழி மற்றும் மொழியியல் சார்ந்த விழுமியங்கள், வாழ்வாதாரங்கள், வறுமை, வேலையின்மை, உற்பத்தி, உற்பத்தி வழிமுறைகள், உற்பத்தி கட்டுப்பாடு, எதிர்காலப் பணியிடம், மனித வளர்ச்சி, மனித உணர்வு மற்றும் கூட்டு பகுத்தறிவின் நிலை, சுய பகுத்தறிவு, இளைஞர் வளர்ச்சி, இளைஞர் குற்றமயமாக்கல், தொழில், வணிகம், வர்த்தகம், உலகமயமாக்கல், உலகளாவிய அறிவு அமைப்பு, எதிர்காலத் தொழில்நுட்பங்கள், நவீன குவாண்டம் மெக்கானிக்ஸ் உள்ளிட்ட வளர்ந்து வரும் இயற்பியல், சுதேசிய அறிவு அமைப்பு, அறிவியல் பாரம்பரியம், உள்ளூர் கலைகள், பிராந்திய பன்முகத்தன்மை, சமூகப் பன்முகத்தன்மை, இந்திய அரசியல், அரசியல் பங்கேற்பு, குடிமை பங்கேற்பு, சுகாதாரம் என்று மேலும் பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கின்றன. இந்த அனைத்து அம்சங்களையும் தன்னுடைய கவனத்தில் கொண்டிருக்கும் எந்தவொரு கல்விக் கொள்கையும் உலகளாவிய தன்மை, சமூகம், பன்மை, பன்முகத்தன்மை, அரசியலமைப்புக்குட்பட்டது, அனைவருக்கும் செழிப்பை ஏற்படுத்துவது என்பவற்றை ஆழமாகக் கருத்தில் கொண்டிருந்திருக்கும். அதன் விளைவாக உருவாகும் கல்விக் கொள்கை நிச்சயமாக அனைவருக்குமானதாகவே இருக்கும். வலதுசாரி தேசிய அரசால் முன்வைக்கப்படுகின்ற  தேசியவாத வலதுசாரி திட்டம் என்பதைத் தவிர, பழங்கால அடக்குமுறை இந்தியப் பாரம்பரியம், இந்தியப் பெருமை மற்றும் இந்திய அறிவு ஆகியவற்றை மனதில் ஆழமாகப் பதிய வைக்கும் வகையில் ஹிந்துத்துவ தேசியவாதத்தை ஊக்குவிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நாட்டிற்கான மேற்கூறப்பட்ட அம்சங்களிலிருந்து தனித்து இருக்கின்ற செயல்பாட்டு உத்தரவுகளின் தொகுப்பாகவே இந்த கொள்கை அமைக்கப்பட்டிருக்கிறது.

சமூகமும் கல்வியும் பிரிக்கவே முடியாதவை, கல்வி என்பது சமூகத்திற்கானது, சமூகத்தால் ஆனது. இந்தியாவில் நாம் கொண்டிருக்கும் சமூகத்துடன் கல்வியை இணைப்பதில் இந்த கல்விக் கொள்கையானது முற்றிலும் தோல்வியே கண்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த கல்விக் கொள்கை தனது உறுதியான ஆற்றலைக் கொண்டு கல்விக்கென்றிருக்கும் உள்ளார்ந்த கொள்கைகள், தர்க்கங்களிலிருந்து அதிகாரம் மிக்க தேசிய-அரசு முன்வைக்கும் வலதுசாரி தேசியவாதம், புதிய தாராளவாத சந்தை சக்திகள், சமூக ரீதியான அதிகாரம் பெற்றுள்ள சமூகப் பிரிவு என்ற மூன்று முக்கிய அதிகாரங்களின் தேவைகளுக்கு இணங்கும் வகையில் கல்வியைத் திசை திருப்புவதற்கான முயற்சிகளையே மேற்கொண்டிருக்கிறது. அதன்படி இந்த கல்விக் கொள்கை இந்திய சமுதாயத்திற்கும் அதன் நிலைமைகளுக்கும் எந்தவிதமான பொருத்தமும் இல்லாத வகையில் கல்வியின் அனைத்து அம்சங்களிலும் மிகப் பெரிய அளவிலான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், தொழில், அறிவு உற்பத்தித்திறன் உள்ளிட்ட மனித வளர்ச்சியின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒப்பீட்டளவில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழ்நாடு இருந்து வருகிறது. இந்திய மாநிலங்களில் வேறு எந்த மாநிலத்திற்கும் பின்தங்கிய மாநிலமாக தமிழ்நாடு இருக்கவில்லை. மோசமாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், இதற்கு முன்னெப்போதுமில்லாத பின்னடைவுகளையும், வளர்ச்சியின் பாதையில் பின்தங்கிய நிலைமையையுமே அது உருவாக்கிடும். கல்வி செயல்திறனிற்கான அனைத்து அளவுருக்களிலும் தமிழ்நாடு கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களையும் விட மிகவும் சிறப்பாகவே செயல்பட்டுள்ளது. இந்த நிலைமையை அடைந்ததற்கு  நாம் மாநிலத்தை வழிநடத்திய தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த தலைவர்களுக்கே நன்றி சொல்ல வேண்டும். நிச்சயமாக மாநிலத்தின் கல்வித் தரங்களை மேம்படுத்துவதற்கு இன்னும் கூடுதலான தேவைகள் இருக்கின்றன. தேசிய அரசின் எந்தவொரு வழிநடத்தலும் இல்லாமலேயே மாநிலத்தில் கிடைக்கக்கூடிய ஞானம், உள்கட்டமைப்பு, வளங்களைக் கொண்டே அதை எளிதாக நம்மால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் முன்வைத்த தொலைநோக்குத் திட்டத்தில் மிகச்சரியாக வாக்குறுதியளித்தவாறு தன்னுடைய தேவைகள், கட்டுப்பாடுகள் மற்றும் மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டு தனக்கென்று தனித்து வடிவமைக்கப்பட்ட கல்விக் கொள்கைக்கு உங்கள் திறமையான தலைமையின் கீழ் உள்ள இந்த மாநிலம் முழுக்க முழுக்கத் தகுதியானதாகவே இருக்கிறது.    

அரசியலமைப்பு ரீதியாக கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கலாம், மத்திய அரசிற்கும் அதில் ஒரு பங்கு இருக்கலாம் என்றாலும் தத்துவ ரீதியாக கல்வி என்பது சமூகத்தின் பொருளாகும். சமூகத்தின் தற்போதைய, எதிர்கால விவகாரங்கள், அதன் விரும்பத்தக்க இலக்கு போன்றவற்றால் ஏற்படுகின்ற புதிய அறிவு மற்றும் திறன்களுக்கான தேவையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது தனித்துவமாக அங்கீகரிக்கப்பட்ட சமுதாயத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்நாட்டிற்கென்று தனித்த கல்விக் கொள்கை அவசியம் தேவைப்படுகிறது. அந்த தனித்த கல்விக் கொள்கை சமூக ஒழுங்கு, சமூக மாற்றம், பொருளாதார ஒழுங்கு, தொழில்நுட்ப சீர்குலைவுகள், சுற்றுச்சூழல் மாற்றங்கள் மற்றும் இருபத்தியோராம் நூற்றாண்டு, அதற்கு அப்பாற்பட்டும் வடிவமைக்கப் போவதாக எதிர்பார்க்கப்படுகின்ற புதிய பொருளாதார நடவடிக்கைகள் ஆகியவற்றின் நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆக மாநில அரசு இந்த தேசிய கல்விக் கொள்கை - 2020ஐ முற்றிலுமாக நிராகரித்து, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், தமிழ்நாடு மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை வகுப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொண்டு, மாநிலம் மற்றும் அதன் மக்களின் நலனுக்காக அதைச் செயல்படுத்திட வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.

நன்றி

தங்கள் உண்மையுள்ள

பேராசிரியர் லெ.ஜவகர் நேசன்

மேனாள் துணைவேந்தர்

ஜேஎஸ்எஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், மைசூர்

 

Comments