பிரியங்கா புல்லா
லைவ்மின்ட்
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத்
பயோடெக் நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பூசியான கோவாக்சினைத் தயாரிப்பதில்
இருக்கின்ற குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி 2021 மார்ச் 30 அன்று பிரேசில் மருந்து
கட்டுப்பாட்டாளர் அனைவரையும் கவலைக்குள்ளாக்குகின்ற அறிக்கை ஒன்றை தனது
இணையதளத்தில் வெளியிட்டிருந்தார்.
கோவாக்சினில் உள்ள சார்ஸ்-கோவி-2
வைரஸ் முழுமையாகக் கொல்லப்பட்டது, தடுப்பூசி வழியாகச் செலுத்தப்படும் வைரஸ் மனித
உடலில் பெருகும் வகையில் இருக்காது என்பதை உறுதி செய்து கொள்வதற்கான முக்கிய
நடவடிக்கைகளை பாரத் பயோடெக் நிறுவனம் தவிர்த்து விட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் எந்த நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டுமோ அதே நோயையே மக்களுக்குக்
கொடுத்து விடுவதற்கான வாய்ப்பு பாரத் பயோடெக்கில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின்
தடுப்பூசியின் சில பகுதிகளில் இருக்கின்ற ஆபத்தையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருந்தது.
பாரத் பயோடெக்கிடமிருந்து இரண்டு கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை வாங்குவதை அந்த
அறிக்கையின் அடிப்படையில் பிரேசில் நிறுத்தி வைத்தது.
அவ்வாறு நிறுத்தி வைத்த செய்தி
இந்தியாவை அடைந்த போது, இந்தியாவில் அப்போது வரையிலும் தொன்னூறு லட்சம் டோஸ்
தடுப்பூசி போடப்பட்டிருந்ததால் பலரது புருவங்களும் உயர்ந்தன. அந்த அறிக்கையில்
உள்ளவாறு தடுப்பூசியின் உற்பத்தி செயல்முறையில் குறைபாடுகள் இருக்கும் என்றால்
இந்திய மருந்துகளைக் கட்டுப்படுத்தி வருகின்ற இந்திய மருந்து கட்டுப்பாட்டாளார்
ஜெனரல் (டிசிஜிஐ) எவ்வாறு அந்த தடுப்பூசிக்கான அனுமதியை வழங்கினார் என்ற கேள்வி தானாக
எழுந்தது. அந்தக் கேள்விக்கான பாரத் பயோடெக்கின் விளக்கம் என்னவாக இருந்தது?
பிரேசிலிய மருந்து
கட்டுப்பாட்டாளரான அன்விசா எழுப்பிய குறிப்பிட்ட பாதுகாப்பு பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக்
காண்பதற்குப் பதிலாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறுவனரும்,
தலைவருமான கிருஷ்ணா எல்லா தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் அரசியல்
குறித்த அதன் கருத்துகள் மீது குற்றம் சாட்டினார். பிரேசிலின் ‘தேசியவாதம்’, தங்கள்
நாட்டிலிருந்து இந்தியத் தடுப்பூசியை வெளியேற்றுவதற்கான அவர்களுடைய விருப்பம்
ஆகியவற்றின் பின்னணியுடன் பிரேசில் மருந்து கட்டுப்பாட்டாளர் வெளியிட்ட அந்த
அறிக்கை இருக்கிறது என்று அப்போது எல்லா கூறினார்.
கோவாக்சின் தடுப்பூசியைச் சுற்றி
எழுந்திருக்கும் சந்தேகங்களை அகற்ற வேண்டிய பொறுப்பில் பாரத் பயோடெக் நிறுவனம்
இருப்பது அது முதல் முறையாக இருக்கவில்லை. கடந்த மே மாதம் தொடங்கப்பட்ட, இந்தியாவின்
முதன்முதலான முழுமையான சொந்த கோவிட் தடுப்பூசி என அரசாங்கத்தால் கூறப்பட்ட
தடுப்பூசியின் வளர்ச்சியை இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மிகவும் மோசமான
வெளிப்படைத்தன்மை, தவறான நிர்வாகம் போன்றவையே பாதித்துள்ளன. தடுப்பூசியின் செயல்திறனுக்கான தரவுகள் எதுவுமில்லை என்ற
போதிலும் 2020 டிசம்பரில் கோவாக்சினுக்கான ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக பாரத்
பயோடெக் நிறுவனம் அளித்த விண்ணப்பத்தில் தொற்று நோயை அந்த தடுப்பூசி தடுத்தது
என்பதற்கான சான்றுகள் இணைக்கப்பட்டிருந்ததே அந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கான மிகப்
பெரிய எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஒரு மாதம் கழித்து போபாலில் உள்ள
மருத்துவமனையில் இருந்த கோவாக்சின் மருத்துவப் பரிசோதனையின் மிகப்பெரிய தளம்
ஒன்றில் நடந்த ஆய்வில் கலந்து கொண்டிருந்த பங்கேற்பாளர்கள் தங்களிடம் தவறாக நடந்து
கொண்டதாக புகார் கூறினர். ஆனால் பாரத்
பயோடெக் நிறுவனம் அந்தப் புகார்களை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்தது. இப்போதும்
அன்விசா கூறியுள்ள தகவல்கள் தடுப்பூசியின் தரம் குறித்து சந்தேகங்களை
எழுப்பியிருந்த நிலையில் அந்த சந்தேகங்களைத் தீர்த்து வைக்க பாரத் பயோடெக் முன்வரவில்லை.
அதேபோன்று இந்தியாவில் அவர்களுடைய தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை டிசிஜிஐ
அளித்து நான்கு மாதங்களாகி விட்ட பிறகும், இன்னும் தடுப்பூசியின் செயல்திறன் தரவை அந்த
நிறுவனம் வெளியிடவில்லை.
அரசு நிறுவனங்கள் அவர்களுக்கு உதவி
வருவது வருத்தமளிப்பதாகவே இருக்கிறது. மிக உயர்ந்த நெறிமுறை மற்றும்
அறிவியல்பூர்வமான தரங்களை முழுமை செய்வதை கோவாக்சின் மருத்துவப் பரிசோதனைகள் உறுதி
செய்திடவில்லை. அதற்குப் பதிலாக கோவாக்சினை உருவாக்குவதில் பாரத் பயோடெக்
நிறுவனத்தின் அரசாங்கத் தரப்பு கூட்டாளியாக இருந்து வருகின்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி
கவுன்சில் (ஐசிஎம்ஆர்) போபாலில் நடந்தேறிய சோதனை நெறிமுறை மீறல்களைச் சுற்றி
எழுந்த கேள்விகளுக்கான பதிலை அளிக்காமல் அன்கே நடந்து வந்த சோதனைகளை விரைவுபடுத்தவே
முயன்றது. அரசாங்கத்த்தின் சார்பில் இருக்கின்ற அறிவியலாளர்களும் ஆதாரமில்லாத
கூற்றுக்களையே திரும்பத் திரும்ப முன்வைத்தனர். எடுத்துக்காட்டாக தடுப்பூசியின்
பாதுகாப்பை நிறுவுவதற்கான சோதனைகள் முடிவடைவதற்கு முன்பாகவே கோவாக்சின் 110%
பாதுகாப்பானது என்று டிசிஜிஐ அறிவித்தது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்
அனைத்து தடுப்பூசிகளும் முற்றிலும் பாதுகாப்பானவை என்று அதேபோன்ற மிகைப்படுத்தப்பட்ட கூற்றைக் கூறிய நிதி
ஆயோக் உறுப்பினரான வினோத் கே.பால், மிகக் குறுகிய காலத்திலேயே கோவிட் தடுப்பூசி
ஒன்றை உருவாக்கியிருக்கும் மேக்-இன்-இந்தியா (ஆத்மநிர்பார்பாரத்) பிரச்சாரத்தின்
மீது மீண்டும் மீண்டும் பெருமிதம் கொண்டவராகவே இருந்தார்.
ஆனால் இதற்கு மாறாக கோவாக்சினுக்கு
வழங்கப்பட்டிருக்கும் விரைவான ஒப்புதல் மேக்-இன்-இந்தியா பிரச்சாரத்தின் நற்பெயரை
ஊக்குவிப்பதற்குப் பதிலாக களங்கப்படுத்துவதாகவே பலரும் நம்பினர். ‘காரியங்களைச்
செய்து முடிப்பதில் குறுகிய பார்வை கொண்டதாக இருக்கின்ற இந்தச் செயல் ஆத்மநிர்பார்
பாரத் பிரச்சாரத்திற்கான நோக்கத்தின்
அடிப்படையையே தகர்ப்பதாக இருக்கிறது. விலையின் அடிப்படையில் அல்லாமல் தரத்தின்
அடிப்படையிலே உலகளவில் போட்டியிடக் கூடிய பொருளைக் கொண்டிருப்பதே உண்மையான
தற்சார்பு ஆகும்’ என்று லாப நோக்கற்றுச் செயல்படுகின்ற தில்லி அறிவியல்
இயக்கத்தின் இயக்குனரான டி.ரகுநந்தன் கூறினார்.
இந்தியாவில் முதல் ரோட்டா வைரஸ்
தடுப்பூசியை உருவாக்க உதவிய வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி)
நுண்ணுயிரியலாளர் ககன்தீப் காங் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் உலகளாவிய
தரத்தை நிறைவேற்றுவதற்காக மட்டுமே பாடுபட்டிருக்க வேண்டும் என்பதை ஒப்புக்
கொள்கிறார். செயல்திறன் தரவுகள் எதுவுமில்லாமல் கோவாக்சின்
அங்கீகரிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற அவர் ‘முன்னோக்கிச் செல்லும் பாதை குறித்து
அமைதியாக, அறிவியல்பூர்வமாக இருப்பது
மிகவும் முக்கியம். நீங்கள் அவ்வாறு இல்லையென்றால் உலகின் பிற பகுதிகளில்
உங்களுக்கான அங்கீகாரத்தை இழந்து விடுவீர்கள்’ என்கிறார்.
நூறாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வந்திருக்கும்
இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் இதுபோன்ற அவசர அவசரமான தயாரிப்பே இந்தியர்களிடையே
தடுப்பூசி தயக்கத்தைத் தூண்டியிருக்கக் கூடும் என்பதே இதில் உள்ள மிகப் பெரிய
சோகமாகும். கோவாக்சின் தடுப்பூசியின் முன்னேற்றம் மற்றும் உற்பத்தியில் சிக்கல்கள்
இருந்த போதிலும் அந்த தடுப்பூசி திறம்படச் செயல்படுவதற்கான உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளது
என்று கூறிய புதுதில்லி தேசிய நோயெதிர்ப்பு நிறுவனத்தின் பேராசிரியராக இருந்து
ஓய்வு பெற்ற நோயெதிர்ப்பு நிபுணர் சத்யஜித் ராத் ‘கோவிட்டுக்கு எதிரான நியாயமான
பாதுகாப்பை கோவாக்சின் தடுப்பூசி குறுகிய காலத்தில் வழங்கக் கூடும் என்றாலும் இந்த
தடுப்பூசி திட்டம் மிகமோசமாகக் கையாளப்பட்டுள்ளது என்பதில் எந்தவொரு சந்தேகமும்
இல்லை’ என்று குறிப்பிடுகிறார்.
பாரத் பயோடெக், ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரலான பல்ராம் பார்கவா, டிசிஜிஐ
மற்றும் நிதி ஆயோக் உறுப்பினரான பால் ஆகியோர் கேள்விகளுக்குப் பதிலளிக்க
முன்வரவில்லை.
கொல்லப்பட்ட
வைரஸ் தடுப்பூசிகள் - மிக எளிமையானவை அல்ல
சார்ஸ்-கோவி-2இன் வகையை ஐசிஎம்ஆரின்
கீழ் இயங்கி வருகின்ற தேசிய வைராலஜி நிறுவனம் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அளித்திருப்பதாக
அறிவித்த 2020ஆம் ஆண்டு மே 9 அன்றிலிருந்து கோவாக்சின் தடுப்பூசியின் கதை தொடங்குகிறது. தான் தயாரிக்கப் போகின்ற தடுப்பூசிக்காக
அந்த வகை வைரஸைப் பயன்படுத்திக் கொள்வது என்று பாரத் பயோடெக் திட்டமிட்டது.
அதற்குள்ளாக உலகெங்கிலும்
அப்போது பத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி தயாரிப்பாளர்கள் ஏற்கனவே தடுப்பூசி தயாரிப்பு
போட்டியில் இறங்கியிருந்தனர். அஸ்ட்ராஜெனிகா, ஃபைசர் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இரண்டாம் கட்ட சோதனைகளைத் தொடங்கியிருந்தன. எனவே அப்போது பாரத் பயோடெக் நிறுவனம்
ஒப்பீட்டளவில் மிக மெதுவான தொடக்கத்திலேயே இருந்தது.
இருப்பினும்
தடுப்பூசி தயாரிப்பிற்காக கொல்லப்பட்ட தடுப்பூசி என்றும் அழைக்கப்படுகிற செயலிழக்க
வைக்கப்பட்ட முழு வைரஸ் தடுப்பூசி என்ற ஏற்கனவே மிகவும் முயற்சி செய்து
பார்க்கப்பட்டிருக்கும், நன்கு சோதிக்கப்பட்ட அணுகுமுறைகளில் ஒன்றையே அந்த
நிறுவனம் தன்வசம் எடுத்துக் கொண்டது. ‘மிகவும் எளிமையான தடுப்பூசி வடிவமைப்பு
முறையாக இருக்கின்ற இந்த முறையானது பத்தொன்பதாம்
நூற்றாண்டு லூயிஸ் பாஸ்டியர் காலத்திற்குச் செல்கிறது’ என்று ராத்
கூறுகிறார். கடந்த காலங்களில் வெறிநாய்க்கடி, இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் மற்றும் பிற
நோய்களுக்காக இதுபோன்ற பல கொல்லப்பட்ட தடுப்பூசிகளை பாரத் பயோடெக் தயாரித்திருந்தது.
ஆனால் ஃபைசர், மாடர்னா போன்ற அமெரிக்க நிறுவனங்கள் அதுவரையிலும் வணிகரீதியான
தடுப்பூசி தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டிராத, தோல்வியடைவதற்கான ஆபத்து அதிகமிருந்த
அதிநவீன எம்ஆர்என்ஏ தடுப்பூசி தொழில்நுட்பத்தையே பரிசோதித்து வந்தன. பிரிட்டிஷ்
நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளைக் காட்டிலும் கூடுதலாக
மனிதர்களிடம் சோதிக்கப்பட்ட, ஆனாலும் இதற்கு முன்னர் மனிதர்களின் பயன்பாட்டிற்கு
உரிமம் பெற்றிராத அடினோ வைரஸ் வெக்டார் தொழில்நுட்பத்தைப் பரிசோதித்து வந்தது.
கோவாக்சின்
தயாரிப்பில் இருக்கின்ற முக்கியமான கொள்கை மிகவும் எளிதானது. பாரத் பயோடெக்
நிறுவனம் பீட்டா புரோபியோலாக்டோன் என்ற வேதிப்பொருளைக் கொண்டு வைரஸைச் செயலிழக்கச்
செய்யும். அந்த வேதிப்பொருள் வைரஸின் மரபணுப் பொருளான ஆர்என்ஏவை முழுமையாகச் சிதைத்து
விடுவதால் மனிதர்களைப் பாதிக்கின்ற திறன் அந்த வைரஸிடமிருந்து நீங்கி விடும். இருந்த போதிலும் வைரஸ் நோய்க்கிருமியின் வெளிப்புற உறை
அப்படியே விட்டு விடப்படுகிறது.
வைரஸின்
இந்த வெளிப்புற உறைகள் மனித உடலுக்குள் செலுத்தப்படும்போது, அந்த உறையில் உள்ள
ஆன்டிஜென்கள் என அழைக்கப்படுகிற புரதங்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் மனித உடலில் உருவாகின்றது. ரத்தம் மற்றும் நிணநீர் வழியிலான
(ஹூமோரல்) நோய் எதிர்ப்பையும், சிறப்பு செல்களான டி செல்களை உள்ளடக்கிய செல் வழியிலான (செல்லுலார்) நோய் எதிர்ப்பையும் கொண்டு நமது
உடல் ஆன்டிபாடிகள் எனப்படும் புரதங்கள் மூலம் வைரஸைத் தாக்குகின்றது. இந்த
நோயெதிர்ப்பு எதிர்வினை உடலில் சிறிது காலத்திற்கு நீடிப்பதால், எதிர்காலத்தில் சார்ஸ்-கோவி--2
வைரஸ் உடலுக்குள் நுழையும் போதும் நமது உடலால் அந்த வைரஸை எதிர்த்துப் போராட
முடிகிறது.
பழைய
தொழில்நுட்பம் என்ற போதிலும் கொல்லப்பட்ட வைரஸ்களைக் கொண்டு தடுப்பூசிகளைத்
தயாரிப்பது ஒன்றும் எளிதான வேலையல்ல. வைரஸை
உற்பத்தி செய்வதில் இருக்கின்ற மிகப் பெரிய சவாலே உலகெங்கிலும் சில நாடுகளே இன்று இந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதற்கான காரணமாக
இருந்து வருகிறது. கொல்லப்பட்ட வைரஸ் உறைகளை உருவாக்க தடுப்பூசி உற்பத்தியாளர்
பெரும் எண்ணிக்கையில் வைரஸை வளர்த்து அவற்றை முழுமையாகச் செயலிழக்கச் செய்ய
வேண்டும். சார்ஸ்-கோவி-2 வைரஸ் மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதால்,
மூன்றாம் உயிர் பாதுகாப்பு நிலை (பயோ சேஃப்டி லெவல் - பிஎஸ்எல்3) உள்ள உற்பத்தி
நிலையத்திலேயே உயிருடன் இருக்கின்ற வைரஸ் வளர்க்கப்பட வேண்டும். அந்த உற்பத்தி
நிலையத்தில் வைரஸ் வெளியே தப்பிப்பதைத் தடுக்கும் வகையில் பத்துக்கும் மேற்பட்ட
பாதுகாப்பு நடவடிக்கைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
‘பிஎஸ்எல்-3
உற்பத்தி நிலையத்தில் பெருமளவில் வைரஸை வளர்ப்பது, ஒவ்வொரு 0.5 மில்லிலிட்டர் தடுப்பூசி
டோஸிலும் போதுமான அளவிலே (செயலற்ற) வைரஸ் இருப்பதை உறுதி செய்வது மிகப்பெரிய
பணியாகும்’ என்று புனேவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனத்தில் (ஐஐஎஸ்இஆர்) நோயெதிர்ப்பு நிபுணராக உள்ள வினீதா பால் கூறுகிறார்.
இந்தியாவில் மிகச் சில பிஎஸ்எல்-3 உற்பத்தி நிலையங்கள் மட்டுமே உள்ளன (தொழில்துறை
நிபுணர் ஒருவர் இந்தியாவில் இதுபோன்ற உற்பத்தி நிலையம் ஐந்து என்ற எண்ணிக்கையில்
மட்டுமே இருப்பதாக மதிப்பிடுகிறார்) என்பதால் இந்தச் சவால் மிகவும் கடினமானதாக
இருக்கிறது. எனவே கோடிக்கணக்கான டோஸ் அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்வது உண்மையில்
மிகமிகக் கடினமான காரியமாகும். அதற்கு மாறாக, பரவலாக அதிக எண்ணிக்கையில் அமைந்திருக்கின்ற
பிஎஸ்எல்-1, பிஎஸ்எல்-2 உற்பத்தி நிலையங்களில் முறையே எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள், அடினோவைரஸ் வெக்டார் தடுப்பூசிகள் எளிதாகத் தயாரிக்கப்படலாம் என்று ஹைதராபாத்தை தளமாகக்
கொண்ட பயோடெக் நிறுவனமான யப்பன் பயோ என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக
இருக்கின்ற அதின் டோமர் கூறுகிறார்.
வைரஸை உயிருடன்
பெருமளவில் வளர்ப்பதில் உள்ள சிரமத்தைத் தவிர, கடந்த ஓராண்டில் இந்திய தடுப்பூசி
உற்பத்தியாளர்கள் அனைவரும் சந்தித்த தடுப்பூசி மூலப்பொருட்களின் பற்றாக்குறை என்ற
மற்றொரு தடையையும் எதிர்த்து பாரத் பயோடெக் நிறுவனமும் போராட வேண்டியிருந்தது.
2021 மார்ச் 31 அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய பாரத் பயோடெக்கின்
தலைவரான எல்லா பீட்டா-புரோபியோலாக்டோன், பயோரியாக்டர் பைகள், மைக்ரோ கேரியர்
மணிகள் ஆகியவற்றை விநியோகத்தில் பற்றாக்குறை இருக்கின்ற தடுப்பூசி மூலப்பொருட்களாகப்
பட்டியலிட்டிருந்தார். பயோரியாக்டர் பைகளும், மைக்ரோ கேரியர் மணிகளும் செயலிழக்கச்
செய்வதற்கு முன்பாக உயிருடன் உள்ள வைரஸை வளர்ப்பதற்குத் தேவைப்படுகின்றன.
அமெரிக்க,
ஐரோப்பிய உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்படுகின்ற இந்தப் பொருட்களுக்கான தேவை
2020ஆம் ஆண்டில் அதிகரித்து உலகளாவிய பற்றாக்குறையை ஏற்படுத்தியது. இதற்கிடையில்
2021 ஜனவரியில் அமெரிக்கத் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்குத் தேவைப்படுகின்ற மூலப்பொருட்களை
ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்தது. மாற்று மூலப்பொருட்களை வழங்கி
வருபவர்களைக் குறைவாகக் கொண்டிருந்த இந்திய தடுப்பூசி தயாரிப்பாளர்களை இந்த
பற்றாக்குறையும், அமெரிக்க ஏற்றுமதி தடையும் முடக்கி வைத்தன.
மூலப்பொருள்
பற்றாக்குறையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள பாரத் பயோடெக் சில ஆரம்பகட்ட
நடவடிக்கைகளை மேற்கொண்டது. கொல்லப்பட்ட வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்ப்பாற்றலை
அதிகரிக்க துணையூக்கியாக வேதிப்பொருள் ஒன்று கோவாக்சினில் பயன்படுத்தப்படுகின்றது.
ஆல்கெல்-ஐஎம்டிஜி (Algel-IMDG) எனப்படும் அந்த துணையூக்கியை அமெரிக்காவைத் தளமாகக்
கொண்ட வைரோவேக்ஸ் நிறுவனத்திடமிருந்து உரிமம் பெற்று பயன்படுத்தியே பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சினை
உருவாக்கி வந்தது. இறக்குமதியை நம்பியிருப்பதைத் தவிர்ப்பதற்காக 2020ஆம் ஆண்டின்
நடுவே ஹைதராபாத்தைச் சேர்ந்த அரசு ஆய்வகமான இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்திடம்
(ஐஐசிடி) இந்தியாவிலேயே ஆல்கெல்-ஐஎம்டிஜி தயாரிப்பிற்கான செயல்முறையை உருவாக்கித்
தருமாறு பாரத் பயோடெக் கேட்டுக் கொண்டது. ‘உள்நாட்டில் கிடைக்கக்கூடிய பொருட்களைக்
கொண்டே இந்த செயல்பாட்டிற்குத் தேவைப்பட்ட விலையுயர்ந்த வேதிப் பொருட்கள் மற்றும்
வினையூக்கிகளை எங்களால் உருவாக்க முடிந்தது’ என்று ஐஐசிடியின் இயக்குனர்
எஸ்.சந்திரசேகர் கூறினார். ஆனால் மற்ற மூலப்பொருட்களைப் பெறுவது மிகப் பெரிய சவாலாகவே
இருந்து வந்தது.
அழுத்தத்திற்கான முதல் அறிகுறிகள்
பாரத்
பயோடெக், ஐசிஎம்ஆர் என்று இiந்த இரண்டு அமைப்புகள் மீதும் தடுப்பூசி
தயாரிப்பதற்கான அரசாங்கத்தின் அழுத்தம் இருந்து வந்தது என்பதற்கான முதல்
அறிகுறியாக ஐசிஎம்ஆரின் இயக்குநர் ஜெனரல் பல்ராம் பார்கவா எழுதிய 2020 ஜூலை 2 கடிதம் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் பாரத் பயோடெக் ஏற்கனவே விலங்குகளில்
தன்னுடைய தடுப்பூசியைப் பரிசோதித்து முடித்திருந்தது. அதற்குப் பிறகு முதல் கட்ட
சோதனை என்று அழைக்கப்படும் மனிதர்களுக்கான பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கு முன்னேற அது
தயாராக இருந்தது.
முதல்
கட்ட ஆய்வை நடத்திக் கொண்டிருந்தவர்களுக்கு தான் எழுதிய அந்தக் கடிதத்தில்
ஆச்சரியப்படும் வகையிலான தகவல்களை பார்கவா குறிப்பிட்டிருந்தார். முதலாவதாக
அரசாங்கத்தின் மிக உயர்மட்டத்திலிருந்து கோவாக்சின் திட்டம் கண்காணிக்கப்பட்டு
வருவதாக அவர்களிடம் தெரிவித்த பார்கவா ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு 2020 ஆகஸ்ட் 15
இந்தியாவின் சுதந்திர தினத்தன்று தடுப்பூசி போடுவது தொடங்கப்படும் என்று
எழுதியிருந்தார். ஒரு வாரத்திற்குள் தடுப்பூசி குறித்த சோதனையில் பங்கேற்பவர்களைச்
சேர்க்க ஆய்வாளர்கள் தொடங்க வேண்டும் என்ற
கோரிக்கையை வைத்திருந்த அவர் ஆய்வாளர்கள் பக்கமிருந்து இதனைக் கடைப்பிடிக்காத
பட்சத்தில் அது மிகவும் தீவிரமான குற்றமாகப் பார்க்கப்படும் என்று கடிதத்தை
முடித்திருந்தார்.
அந்தக்
கடிதத்தின் உள்ளடக்கமும், தொனியும் இந்திய அறிவியல் சமூகத்தில் உள்ள பலரையும்
அதிர்ச்சிக்குள்ளாக்கின. அந்தக் கடிதம் இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகளை பாரத் பயோடெக் தவிர்த்து
விடத் திட்டமிட்டிருப்பதைக் குறிப்பதாக இருந்தது மட்டுமல்லாமல், வேகம் என்ற
பெயரில் போதுமான நேர்த்தியுடன் ஆய்வுகளை முழுமையாகச் செய்யாமல் ஆய்வை முடிக்குமாறு
ஆய்வாளர்களுக்கு சமிக்ஞை செய்யும் ஆபத்துடனும் இருந்தது. ‘அந்தக் கடிதத்தின் நேரடி
விளைவு குறுக்கு வழிகளைப் பின்பற்றுமாறு எழுதப்படாத அனுமதியை அளிப்பதாக இருப்பதாகவே
மக்கள் நினைப்பார்கள் என்பதால் அந்தக் கடிதத்தைப் பார்த்த நாங்கள் மிகுந்த கோபத்துடன்
எதிர்ப்புகளைப் பதிவு செய்தோம். இவ்வாறாக அழுத்தம் கொடுக்கப்படும் போது
ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றி எதுவும் புரிந்து கொள்ளாமலே மக்கள் தேர்வு செய்ய
வேண்டியிருக்கும்’ என்று தான் அப்போது கூறியதாக அந்தக் கடிதத்தை 2020 ஜூலை மாதம்
பகிரங்கமாக விமர்சித்த வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் சமூக மருத்துவப்
பேராசிரியரான ஜேக்கப் ஜான் நினைவு கூர்ந்தார்.
பிரதமர்
நரேந்திர மோடி ஆண்டுதோறும் நடைபெறுகின்ற சுதந்திர தின விழா உரையின் போது
மேக்-இன்-இந்தியா (ஆத்மநிர்பார்) பிரச்சாரத்தைப் பற்றி பேச உதவுவதற்காகவே கோவாக்சின்
மருத்துவப் பரிசோதனைகளை விரைவுபடுத்துவது, ஆகஸ்ட் 15 என்ற காலக்கெடு ஆகியவற்றின்
குறிக்கோள் இருந்ததாகவே தோன்றியது. இந்த கடிதத்தின் தாக்கம் குறித்து ஐசிஎம்ஆர் விளக்கிட
வேண்டும் என்று இந்திய அறிவியலாளர்களின் கூட்டமைப்பான அகில இந்திய மக்கள் அறிவியல்
கூட்டமைப்பு (AIPSN) கேட்டுக் கொண்டது. ‘அரசியல் எஜமானர்களைக் கௌரவப்படுத்துவது,
மகிழ்விப்பது என்று இப்போது ஐசிஎம்ஆரிடம் இருக்கின்ற விருப்பம் இதுவரையிலும் அதனிடம்
இருந்து வந்திருக்கின்ற அறிவியலை, நெறிமுறைகளை முந்திச் சென்றிருக்கிறது.
கோவிட்-19 தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை மருந்துகளுக்கான சோதனைகளுக்கான
நிறுவப்பட்ட நெறிமுறைகளைத் தவிர்த்து குறுக்கு வழியில் செல்ல நினைக்கின்ற வகையில் இந்தியாவில்
இப்போது அதிகரித்து வருகின்ற போக்கு குறித்து அகில இந்திய மக்கள் அறிவியல்
கூட்டமைப்பு வருந்துகிறது’ என்று அந்தக் கூட்டமைப்பு எழுதியிருந்தது.
அரசியலில்
சாதகமான நிலையைப் பெறுவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும் அல்லது அவ்வாறு
இல்லாவிட்டாலும் இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்ட சோதனைகளை பாரத் பயோடெக் பல
காரணங்களுக்காகத் தவிர்க்கப் போகிறது என்ற கருத்து கவலை அளிப்பதாக இருந்தது.
தங்களால் இயன்றவரையிலும் தடுப்பூசி ஒப்புதல்களுக்கான வேலைகளை இதுபோன்றே உலகெங்கிலும்
உள்ள ஒழுங்குமுறை நிறுவனங்கள் விரைவுபடுத்திக் கொண்டிருந்தன.
தொற்றுநோய்
இல்லாத நிலைமையில் தடுப்பூசிக்கான
ஒப்புதலை வழங்குவதற்கு முன்பாக மருந்து கட்டுப்பாட்டாளர்களுக்கு தடுப்பூசியின்
பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்த விரிவான தரவுகள் தேவைப்படும். தடுப்பூசியின்
பாதுகாப்பை மாறுபட்ட அளவுகளில் மனிதர்களிடம் ஆய்வு செய்கின்ற முதல் கட்ட சோதனைக்குப்
பிறகு, தடுப்பூசி தயாரிப்பாளர் நோயெதிர்ப்பு சக்தியை அந்த தடுப்பூசி தூண்டுகிறதா
என்பதை ஆய்வு செய்கின்ற இரண்டாம் கட்ட சோதனையைச் செய்ய வேண்டியிருக்கும்.
அந்த சோதனை
முடிந்ததும் அடுத்த கட்டமாக இந்த நோயெதிர்ப்பு எதிர்வினை உண்மையில் மக்களை
நோயிலிருந்து பாதுகாக்கிறது என்பதை அவர்கள் நிரூபிக்க வேண்டும். அதற்காக ஆய்வாளர்கள்
மூன்றாம் கட்ட சோதனையை நடத்துகிறார்கள். அதில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்களில்
சிலர் நோய்வாய்ப்படும் வரை அந்த சோதனையை நடத்துகிறார்கள். பின்னர் தடுப்பூசி
பெற்றவர்களிடையே நோய்வாய்ப்பட்டவர்களின் எண்ணிக்கையை, தடுப்பூசி
போடப்படாதவர்களுடன் ஒப்பிட்டு அவர்கள் தடுப்பூசியின் செயல்திறன் மதிப்பீட்டிற்கு
வருகிறார்கள். அதற்கும் மேலாக இரண்டாவது டோஸுக்குப் பிறகு எந்தவொரு பாதகமான
நிகழ்வுகளும் நிக்ழ்கின்றனவா என்பதைக் கண்டறிய குறைந்தது ஆறு மாதங்களுக்காவது தடுப்பூசி
பெற்றவர்களைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் மருந்து
கட்டுப்பாட்டாளர்கள் மனிதப் பயன்பாட்டிற்கானது என்று தடுப்பூசிகளை அங்கீகரிக்கிறார்கள்.
ஆனால்
கோவிட் தொற்றுநோய் பரவத் தொடங்கிய நிலையில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடி மிக்க காலத்தில்
விரைவான ஒப்புதல்களை அனுமதிக்கின்ற சட்டவிதிகளைப் பயன்படுத்திக் கொள்ள பெரும்பாலான
கட்டுப்பாட்டாளர்கள் திட்டமிட்டனர். எடுத்துக்காட்டாக விதிகளை மிகக் கறாராக
கடைப்பிடிக்கின்ற மருந்து கட்டுப்பாட்டாளர்களில் ஒன்றான அமெரிக்க உணவு மற்றும்
மருந்து நிர்வாகம் (எஃப்டிஏ) 'அவசரகாலப் பயன்பாட்டு அங்கீகாரம்' (ஈயூஏ)
என்றழைக்கப்படும் திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டது. தடுப்பூசி செயல்திறன்
மதிப்பீடு மற்றும் சோதனை பங்கேற்பாளர்களில் பாதிப் பேருக்கு இறுதி டோஸ் வழங்கிய
பிறகு இரண்டு மாதங்களுக்கான பாதகமான விளைவு குறித்த தரவுகளை தடுப்பூசி
தயாரிப்பாளர் பகிர்ந்து கொண்டாலே அவசரகாலப் பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை எஃப்டிஏ வழங்கி
விடும். அவசரகாலப் பயன்பாட்டுக்கான
அங்கீகாரத்தைப் பெற்ற பிறகு தடுப்பூசி
தயாரிப்பாளர் தாராளமாக எவ்விதத் தடையுமின்றி தன்னுடைய தயாரிப்பைத் தொடங்கிக் கொள்ளலாம்.
ஆனாலும் முழு ஒப்புதலுக்குத் தேவையான தரவுகளைத் தொடர்ந்து அவர்கள் சேகரிக்க
வேண்டியது அவசியம்.
பெரும்பாலான
நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அவசரகாலப் பயன்பாட்டுக்கான அங்கீகாரம்
குறித்து தங்களுக்கென்று சொந்த விதிகளைக் கொண்டுள்ளனர். ஆயினும் மூன்றாம் கட்ட
சோதனைகள் எதுவுமே இல்லாமல் தடுப்பூசிகளை வெளியிடுவது ஆபத்தானது என்றே
அறிவியலாளர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இருந்து வருகிறது.
அதற்குப்
பல காரணங்கள் இருக்கின்றன. இரண்டாம் கட்ட சோதனைகளில் அளவிடப்படும் நோயிலிருந்து
பாதுகாப்பதாக எதிர்பார்க்கப்படுகின்ற நோயெதிர்ப்பு எதிர்வினைகள் பல ஆன்டிபாடிகள், செல்களைக்
கொண்டவையாக இருக்கின்றன. கோவிட்டிலிருந்து பாதுகாப்பை அளிப்பதற்கு எந்த வகையான
ஆன்டிபாடிகள் அல்லது செல்கள் எந்த அளவிலே முக்கியத் தேவையாக இருக்கின்றன என்பதை
அறிவியலாளர்கள் அறிந்திருப்பதில்லை. எடுத்துக்காட்டாக அறிவியலாளர்கள்
நடுநிலைப்படுத்தும் ஆன்டிபாடி என அழைக்கப்படுகிற ஒரு வகை ஆன்டிபாடிக்கு கோவிட்
தொற்றுநோயைத் தடுப்பதில் பங்கு இருப்பதாகக் கருதுகிறார்கள். நோயிலிருந்து ஒருவர் பாதுகாப்பாக
இருப்பதற்கு அவருடைய ரத்தத்தில் அந்த ஆன்டிபாடி எந்த அளவிலே இருக்க வேண்டும் என்ற
நிலை ‘பாதுகாப்பு நோயெதிர்ப்பு தொடர்பு’ என்றழைக்கப்படுகிறது. பொதுவாக அதை அளவிடுவதற்கு
மட்டும் பல ஆண்டுகளை அறிவியலாளர்கள் செலவழிக்க வேண்டியுள்ளது என்று காங்
கூறுகிறார். கடந்த ஓராண்டாக மட்டுமே தொற்றுநோய்க்குள் இருந்து வரும் நிலையில்
கோவிட்டுக்கு எதிரான இந்த நோயெதிர்ப்பு-தொடர்பு குறித்து யாருக்கும் தெரியாது.
அதுகுறித்த அறிவு இல்லாத போது எந்தவிதத்திலும் தவிர்க்க முடியாதவையாகவே மூன்றாம்
கட்ட சோதனைகள் அவசியத் தேவையாகவே இருக்கின்றன.
இந்தப்
பின்னணியில்தான் பார்கவா எழுதிய அந்தக் கடிதம் வெளியானது. இந்தியப் பொதுமக்கள் முதல்
கட்ட சோதனைக்குப் பிறகு உடனடியாக கோவாக்சினைப் பெறுவார்கள் என்று கூறுகின்ற
வகையில் அந்தக் கடிதம் இருந்தது. அதற்குப் பின்னர் உருவான சிக்கலை ஐசிஎம்ஆர்
தலைவர் தெளிவிற்குக் கொண்டு வர முயன்றார். கடிதத்தில் இருந்த தன்னுடைய வார்த்தைகள்
சிவப்பு நாடாத்தனத்தைக் குறைக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகவே இருந்தன என்றும்
சரியான முயற்சிகளைத் தவிர்த்து விடலாம் என்பதாக அவை இருக்கவில்லை என்றும் அவர் விளக்கம்
அளித்தார். இருப்பினும் அந்தக் கடிதத்தில் அரசாங்கத்தின் மிக உயர்மட்டம் என்று அவரால்
குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தைப் பிரயோகம் தடுப்பூசி பரிசோதனையின் முக்கியமான
கட்டங்களைத் தவிர்க்குமாறு பாரத் பயோடெக்கிற்கு அழுத்தம் தரப்பட்டது என்ற ஊகத்தையே
கிளப்பி விட்டிருந்தது. அவசரம் அவசரமாகத் தொடங்கப்படும் தடுப்பூசி இயக்கம் தடுப்பூசியின்
செயல்திறன் மற்றும் பாதுகாப்பு மீது சந்தேகங்களை ஏற்படுத்துவதாக இருப்பதுடன்,
தடுப்பூசி குறித்த நம்பிக்கையை மக்களிடம் இல்லாமல் செய்து விடுவதாகவும் இருக்கும்
என்பதால் அது மிகப் பெரும் பேரழிவாகவே இருக்கும் என்றும் அப்போது விமர்சிக்கப்பட்டது.
உலகின் மிகப் பாதுகாப்பான தடுப்பூசி ?
தடுப்பூசி
பாதுகாப்பைப் பொறுத்த வரையில் ‘இந்த செயலிழக்கச் செய்யப்பட்ட வைரஸ் தடுப்பூசி தொழில்நுட்பமானது இதற்கு
முன்னர் பல தடுப்பூசிகளில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் என்பதால் கோவாக்சினின்
பாதுகாப்பு மிகவும் உறுதி செய்யப்பட்டது’ என்று பாரத் பயோடெக் தொடர்ந்து வலியுறுத்தி
வந்தது. உண்மையில் அந்த நிறுவனம் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகளிடமிருந்து
வந்த தகவல்கள் பெரும்பாலும் அதீதப் புகழ்ச்சி கொண்டவை என்று வகைப்படுத்தப்படுகின்ற
வகையிலேயே இருந்தன. அதுபோன்ற தகவல்கள் கோவாக்சின் வெளியீட்டிற்கு முந்தைய மூன்றாம்
கட்ட சோதனையை நிறுத்தி வைப்பதற்கே பின்னர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.
எடுத்துக்காட்டாக 2021 ஜனவரியில் எல்லா ஒரு நேர்காணலின் போது கோவாக்சினை உலகின்
பாதுகாப்பான தடுப்பூசி என்று குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில் நிருபர்கள்
குழுவிடம் பேசிக் கொண்டிருந்த டிசிஜிஐயின் வி.ஜி.சோமனி தடுப்பூசி 110% பாதுகாப்பானது
என்று கூறிக் கொண்டிருந்தார்.
ஆனால் இதுபோன்ற
அதிகாரப்பூர்வமான அறிக்கைகளுக்கு அறிவியல்பூர்வமான அடிப்படை ஒன்றுமிருக்கவில்லை.
முதலாவதாக இன்றைக்கு செயலிழக்கச் செய்யப்பட்ட தடுப்பூசிகள் பரவலாகப்
பயன்படுத்தப்பட்டு வந்தாலும், கோவாக்சினில் உள்ள ஆல்கெல்-ஐஎம்டிஜி எனப்படும்
துணையூக்கி வணிகரீதியாகத் தயாரிக்கப்பட்ட மனிதர்களுக்கான தடுப்பூசியில் இதற்கு
முன்னர் பயன்படுத்தப்பட்டதே இல்லை. அதாவது மனிதர்களின் ஆரோக்கியத்தின் மீது அந்தப்
பொருளின் தாக்கம் இதுவரையிலும் சரிவரச் சோதித்து அறிந்திருக்கப்படவில்லை. இதுபோன்ற
புதிய துணையூக்கிகளுடன் இருக்கின்ற தடுப்பூசிகளின் பாதுகாப்பைப் பொறுத்த மட்டில்
ஆறு மாதங்களுக்கும் மேலான பின்தொடர் கண்காணிப்பு தேவைப்படுகிறது என்று கோவிட்
தடுப்பூசிகளுக்கான மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின்
வழிகாட்டுதல்கள் கூறுகின்றன. அந்த வழிகாட்டுதல்களே இந்த நிச்சயமற்ற தன்மையைப்
பிரதிபலிப்பதாக இருக்கின்றன.
செயலிழக்க
வைக்கப்பட்ட முழு வைரஸ் தடுப்பூசிகள் நோயைத் தடுப்பதற்குப் பதிலாக கடுமையான
கோவிட்டைத் தூண்டி ஈஆர்டி எனப்படும் அதிகரிக்கப்பட்ட-சுவாச நோயை (ERD) ஏற்படுத்துவது அந்த வகை தடுப்பூசிகள் ஏற்படுத்துகின்ற இரண்டாவது கவலையாக இருக்கிறது. கடந்த காலங்களில் குழந்தைகளுக்கு நிமோனியா
காய்ச்சலை ஏற்படுத்துகிற சுவாச ஒத்திசைவு வைரஸிற்கு (Respiratory Syncytial Virus) எதிராகப்
பயன்படுத்தப்பட்ட செயலிழக்க வைக்கப்பட்ட முழு வைரஸ் தடுப்பூசி உள்ளிட்ட பல சுவாச
வைரஸ் தடுப்பூசிகளுடன் இணைத்து இந்த அதிகரிக்கப்பட்ட-சுவாச நோய் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
சார்ஸ்-கோவி-2இன் நெருங்கிய உறவினர்களான கடுமையான சுவாச நோய்க்குறி (சார்ஸ் -
SARS) வைரஸ், மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (மெர்ஸ் - MERS) வைரஸ் போன்ற வைரஸ்களுக்கான
தடுப்பூசிகளும் அதிகரிக்கப்பட்ட-சுவாச நோயைத் தூண்டும் திறனுடன் இருப்பதாக விலங்குகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட-சுவாச
நோய்க்கான சாத்தியக்கூறு அனைத்து கோவிட் தடுப்பூசிகளிலும் இருக்கின்றது என்றாலும்,
கொல்லப்பட்ட தடுப்பூசிகளின் உயிரியல் தன்மை அவ்வாறு நிகழ்கின்ற வாய்ப்பை அதிகரிப்பதாக
ராத் கூறுகிறார். எம்ஆர்என்ஏ மற்றும் அடினோவைரஸ் வெக்டார் தடுப்பூசிகள் உட்பட
இன்றைக்கு இருக்கின்ற பெரும்பாலான தடுப்பூசிகள் ஸ்பைக் ஆன்டிஜெனை மட்டுமே உடலில்
அறிமுகப்படுத்துபவையாக இருக்கின்றன. ஸ்பைக் ஆன்டிஜென் மனித செல்களுடன் வைரஸ்
இறுக்கமாகப் பிணைக்கப்படுவதைத் தடுக்கின்ற நடுநிலையான ஆன்டிபாடி என்றழைக்கப்படுகிற
ஒரு வகை ஆன்டிபாடியை வெளிப்படுத்துகிறது.
ஆனால் முழு
வைரஸ் தடுப்பூசி இதற்கு மாறாக வைரஸின் மேற்பரப்பைக் தாக்குகின்ற பல ஆன்டிஜென்களை அறிமுகப்படுத்துகிறது.
இந்த ஆன்டிஜென்கள் ஆன்டிபாடிகளை வெளிப்படுத்துகின்றன. அந்த ஆன்டிபாடிகளால்
(நடுநிலைப்படுத்தாத ஆன்டிபாடிகள்) மனித செல்களுடன் வைரஸ் இணைவதைத் தடுக்க
முடியாது. அது மட்டுமல்லாமல் இந்த நடுநிலைப்படுத்தாத ஆன்டிபாடிகள் மனித செல்களை வைரஸ்
எளிதாகப் பாதிப்பதற்கு உதவக் கூடும். அதன் விளைவாக அதிகரிக்கப்பட்ட-சுவாச நோய்
ஏற்படலாம். ‘அதனால்தான் முழு வைரஸை தடுப்பூசியாகக் கொண்டிருக்கும் போது
உயிரியலாளர்கள் கவலைப்படத் தொடங்குவார்கள். ஆனால் அவர்கள் ஸ்பைக் புரதம் மட்டுமே
பயன்படுத்தப்படும் போது மிகவும் குறைவாகவே கவலைப்படுவார்கள்’ என்று ராத்
கூறுகிறார்.
ஆல்கெல்-ஐஎம்டிஜி
துணையூக்கி பயன்பாட்டைப் பயன்படுத்தி அதிகரிக்கப்பட்ட-சுவாச நோய்க்கான சாத்தியத்தை
முன்கூட்டியே இல்லாமலாக்குவதற்கு பாரத் பயோடெக் முயற்சிகளை மேற்கொண்டது. இந்த துணையூக்கி ஒரு வகையான நோயெதிர்ப்பு
எதிர்வினையைத் தூண்டி மக்களிடம் அதிகரிக்கப்பட்ட-சுவாச நோய் தோன்றும் ஆபத்தைக்
குறைக்கிறது, ஆனாலும் அந்த ஆபத்து முழுமையாக அகன்று விடுவதில்லை. எனவே அதிகரிக்கப்பட்ட-சுவாச
நோயின் சாத்தியத்தை மதிப்பிடுவதற்கும், தடுப்பூசியின் செயல்திறனை நிறுவுவதற்கும்
மூன்றாம் கட்ட சோதனைகள் மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. எனவே அந்த சோதனைகளின்
முக்கியத்துவத்தை நிறுவனத்தின் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பார்கள் என்று
கருதத் தேவையில்லை.
2020
அக்டோபர் 31 அன்று இணையவழி மருத்துவ ஆலோசனை சேவை வழங்குநரான பிராக்டோ ஏற்பாடு
செய்திருந்த ஒரு வெபினாரின் போது, அந்த நிகழ்ச்சியின் குழுவில் இருந்த பாரத் பயோடெக்
நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ணா எல்லாவின் மகனும், அந்த நிறுவனத்தின் சார்ஸ்-கோவி-2
தடுப்பூசிகள் திட்டத்தின் தலைவருமான ரேசஸ் எல்லாவிடம் பார்வையாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.
பாரத் பயோடெக் முன்கூட்டியே ஒப்புதலுக்கு விண்ணப்பிக்குமா என்று அவர் கேட்டார். அப்போது
நோயெதிர்ப்பு எதிர்வினையைக் கொண்டு தடுப்பூசியின் செயல்திறனைக் கணிக்க முடியாது
என்று பதிலளித்த ரேசஸ் அந்த காரணத்திற்காக இரண்டாம் கட்ட முடிவுகளின் அடிப்படையில்
தடுப்பூசிக்கான ஒப்புதலைக் கோருவது சரியான
அணுகுமுறை அல்ல என்று விளக்கினார். ‘நான் அதை நம்பவில்லை, பாரத் பயோடெக்கும் அதை
நம்பவில்லை’ என்று அப்போது கூறியிருந்தார்.
துரிதப்படுத்தப்பட்ட ஒப்புதல்
ரேசஸ்
எல்லாவின் தனிப்பட்ட நம்பிக்கைகள் அதுபோன்று இருந்த போதிலும், இந்திய மருத்துவ
ஆய்வாளர்கள் பலரிடம் இருந்த மோசமான அச்சங்கள் அடுத்து வந்த டிசம்பர் மாதத்தில் நனவாகிப்
போயின. பெயர் குறிப்பிடாத ஆதாரங்களை மேற்கோள் காட்டிய பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா பாரத்
பயோடெக் நிறுவனம் டிசிஜிஐயின் துரிதப்படுத்தப்பட்ட ஒப்புதலைக் கோரியிருப்பதாக 2020
டிசம்பர் 8 அன்று அறிவித்தது. துரிதப்படுத்தப்பட்ட ஒப்புதல் என்பது அமெரிக்க எஃப்டிஏவின்
அவசரப் பயன்பாட்டு அங்கீகாரத்திற்குச் சமமான இந்திய வார்த்தையாகும்.
பாரத்
பயோடெக்கின் மூன்றாம் கட்ட சோதனை அந்த நேரத்தில் முடிவடைந்திருக்கவில்லை;
உண்மையாகச் சொல்வதென்றால் அந்த சோதனை ஆரம்பமே ஆகியிருக்கவில்லை. நவம்பர் 11 அன்று சோதனைக்கான முதல் பங்கேற்பாளர் மட்டுமே பதிவு
செய்யப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு மாறாக டிசிஜிஐயிடமிருந்து தங்களது
தடுப்பூசிகளுக்கான துரிதப்படுத்தப்பட்ட ஒப்புதலைக் கோரியிருந்த ஃபைசர் இன்க்
மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற
இரண்டு நிறுவனங்களும் தடுப்பூசிக்கான சோதனையில் மிகவும் முன்னால் இருந்தன.
தன்னுடைய
எம்ஆர்என்ஏ தடுப்பூசிக்காக அமெரிக்காவில் நடத்தப்பட்ட மூன்றாம் கட்ட
சோதனையிலிருந்து கிடைத்த தரவுகளை ஃபைசர் வைத்திருந்தது. அந்த தரவுகளின்
அடிப்படையில் தன்னுடைய தடுப்பூசி 95% செயல்திறன் கொண்டது என்ற மதிப்பீட்டிற்கு
அந்த நிறுவனம் வந்திருந்தது. முப்பத்தெட்டாயிரம் பங்கேற்பாளர்களிடமிருந்து
பெறப்பட்டிருந்த பாதகமான நிகழ்வு குறித்த தரவும் அந்த நிறுவனத்திடம் இருந்தது. பங்கேற்பாளர்களில்
பாதிப் பேர் தங்கள் இரண்டாவது டோஸுக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு பின்தொடர்ந்து
கண்காணிக்கப்பட்டிருந்தனர். அஸ்ட்ராஜெனிகாவின் ஆய்வாளர்கள் டோஸ்களைக் கலந்து
கொடுத்ததன் மூலம் தவறுகளைச் செய்திருந்ததால் அதன் மதிப்பீடு குறித்த நம்பகத்தன்மை
மீது கேள்விகள் எழுந்திருந்தன என்றாலும்
மூன்றாம் கட்ட சோதனையிலிருந்து அவர்களுடைய தடுப்பூசி 62% செயல்திறன் கொண்டது
என்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. இவ்வாறான செயல்திறன் மதிப்பீட்டுடன் அந்த
நிறுவனத்திடம் 23,848 பங்கேற்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட பாதகமான நிகழ்வு குறித்த
தரவும் இருந்தது. பங்கேற்பாளர்களில் பாதிப் பேர் இரண்டாவது டோஸுக்குப் பிறகு
இரண்டு மாதங்களுக்கு பின்தொடர்ந்து கண்காணிக்கப்பட்டிருந்தனர். இந்தியாவில்
கோவிஷீல்ட் எனப்படும் அஸ்ட்ராஜெனிகாவின்
தடுப்பூசி உரிமத்திற்காக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் விண்ணப்பித்தது.
ஆனால் பாரத்
பயோடெக்கிடமோ எந்தவொரு செயல்திறன் மதிப்பீடோ அல்லது பாதகமான நிகழ்வு குறித்த தரவோ
இருக்கவில்லை. அதன் மூன்றாம் கட்ட ஆய்வில் ஒரு பங்கேற்பாளர் கூட அதுவரையிலும்
இரண்டாவது கோவாக்சின் டோஸைப் பெற்றிருக்கவில்லை. அவ்வாறிருக்கும் போது அந்த
நிறுவனம் மற்றும் அதன் கூட்டாளரான ஐசிஎம்ஆருக்கு தடுப்பூசி குறித்து
விண்ணப்பிக்கும் நம்பிக்கையை யார் கொடுத்தது?
கோவாக்சின்
இந்தியாவின் முதல் சொந்த தடுப்பூசி என்பதால் டிசிஜிஐயிடமிருந்து தனக்கு சிறப்புக்
கவனம் கிடைக்கும் என்பதை பாரத் பயோடெக் அறிந்திருந்ததாக அறிவியலாளர்கள் பலரும்
ஊகித்திருந்தனர். கோவிஷீல்ட் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால்
உருவாக்கப்பட்டிருந்த தடுப்பூசியை அடிப்படையாகக் கொண்டது. ஃபைசர் தடுப்பூசி
அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது. எனவே கோவிஷீல்ட் அல்லது ஃபைசரின் தடுப்பூசியுடன்
கோவாக்சினுக்கும் ஒரே நேரத்தில் ஒப்புதல் அளிப்பது என்பது மேக் இன் இந்தியா
திட்டத்தின் வெற்றிக் கதையாக முன்னிறுத்தப்படுவதற்காக மட்டுமே என்ற ஊகமும்
அவர்களிடம் இருந்தது. அந்த ஊகத்திற்கு வலு சேர்ப்பதாகவே ஜூலை 2 அன்று பார்கவா
எழுதிய கடிதம் இருந்தது.
இந்தியாவின்
தடுப்பூசி மேம்பாட்டுத் திட்டங்களில் பிரதமர் மோடி தீவிர அக்கறை காட்டி வந்தார்.
2020 நவம்பர் மாத இறுதியில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக்,
குஜராத்தை தளமாகக் கொண்டு இயங்கி வரும் ஜைடஸ் காடிலா நிறுவனங்களின் உற்பத்தி
வசதிகளை மோடி பார்வையிட்டார். ஜைடஸ் காடிலா நிறுவனம் கோவிட் தடுப்பூசி ஒன்றை
உருவாக்கி வந்த போதிலும், அது இன்னும் மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடங்கவில்லை. இந்தியாவின்
பழமையான, சிக்கலான மருந்து மற்றும் தடுப்பூசி ஒழுங்குமுறை செயல்முறைகளை
விரைவுபடுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்பூசி மேம்பாடு குறித்த நிபுணர்களின்
தேசிய பணிக்குழுவிற்கு மே மாதத்தில் மோடி ஆலோசனை வழங்கியிருந்தார். அந்த
பணிக்குழுவின் உறுப்பினர்களாக டிசிஜிஐ, வி.கே.பால், பார்கவா போன்றவர்கள்
இருந்தனர்.
அரசியல்
நோக்கம் கொண்டதாக இருக்கிறதோ இல்லையோ தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளுக்காக வழங்கப்படுகின்ற
முன்கூட்டிய ஒப்புதல்கள் இந்த தொற்றுநோயின் போது வழக்கமானவையாகயே இருக்கின்றன.
கோவாக்சின் தவிர உள்நாட்டில் பரிசோதிக்கப்பட்ட அல்லது தயாரித்து முடிக்கப்பட்ட
மருந்துகளுக்கான மோசமான ஒப்புதல்களை 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் காண நேர்ந்துள்ளது.
அவ்வாறு வழங்கப்பட்டிருக்கும் ஒப்புதலில் முப்பத்திரண்டு நோயாளிகளிடம் மட்டுமே
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் பெங்களூரைச் சேர்ந்த பயோகான் நிறுவனம் உருவாக்கிய ஐட்டோலிஜுமாப் என்ற மருந்திற்கு 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் டிசிஜிஐ
வழங்கிய உரிமம் இடம் பெற்றிருந்தது. அதுபோன்ற மிகச் சிறிய சோதனையின் அடிப்படையில்
ஒரு மருந்தை அங்கீகரிப்பது என்பது இதுவரையிலும் கேள்விப்பட்டிராத ஒன்றாகும். அந்த
ஒப்புதல் மருத்துவ ஆய்வு நிபுணர்களால் மிகப்பரவலாக விமர்சிக்கப்பட்டது.
அதனைத்
தொடர்ந்து சோதனையின் அடிப்படையிலான முடிவுகள் வெற்றிக்கான முதன்மை அளவுகோலையே
பூர்த்தி செய்திராத நிலையிலிருந்த மும்பை க்ளென்மார்க் நிறுவனத்தின் ஆன்டிவைரல்
மருந்தான ஃபாவிபிரவிர் டிசிஜிஐயின் ஒப்புதலைப் பெற்றது. மேலும் ஜைடஸ் காடிலாவின்
பெகிலேட் செய்யப்பட்ட இன்டர்ஃபெரான், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு
அமைப்பான டிஆர்டிஓவின் 2-டியோக்ஸி-டி-குளுக்கோஸ் ஆகிய இரண்டு மருந்துகளும் மிகச் சிறிய, மோசமாக
வடிவமைக்கப்பட்ட, இன்னும் வெளியிடப்படாத சோதனை முடிவுகளின் அடிப்படையில்
வழங்கப்பட்டிருக்கும் ஒப்புதலுக்காக விமர்சனத்திற்குள்ளாகி உள்ளன. இதுபோன்ற மோசமான
ஒப்புதல்கள் இந்திய கட்டுப்பாட்டாளர்களாக இருக்கின்ற ஐசிஎம்ஆர் போன்ற நிறுவனங்கள்
மற்றும் இந்திய மருந்து நிறுவனங்களின் நற்பெயருக்குக் களங்கத்தையே ஏற்படுத்தியுள்ளன
என்று நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.
கோவிட்
தொற்றுநோய் போன்ற சுகாதார நெருக்கடிகள் புதிய மருந்துகளின் விரைவான ஒப்புதலுக்கான
பொதுமக்கள் மற்றும் அரசியல் அழுத்தத்தை உருவாக்குகின்றன. மேற்கு ஆப்பிரிக்காவில்
எபோலா தொற்றுநோய்களின் போது நிகழ்ந்ததைப் போன்று வரலாற்றுரீதியாக இதுபோன்ற பல
நிகழ்வுகள் நடந்துள்ளன. சில நாடுகளின் குடிமக்கள் சோதிக்கப்படாத மருந்துகள், தடுப்பூசிகளைக் கோர அது
வழிவகுத்தது. ஆனால் இதுபோன்ற அழுத்தங்களை எதிர்த்து நிற்பது, நன்மைகள் ஆபத்துகளை
விட அதிகமாக இல்லாவிட்டால் ஒப்புதலுக்கான தலையீடுகளை அங்கீகரிக்காமல் தவிர்ப்பது
போன்றவையே மருந்து கட்டுப்பாட்டாளர்களின் வேலையாகும். அத்தகைய அழுத்தங்களுக்கு
அடிபணிவது மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளின் மீதான நம்பிக்கையை இழக்கவே
வழிவகுக்கும் என்பதால் தங்களுக்கான அந்த வேலையை கட்டுப்பாட்டாளர்கள் செய்வதே
மருந்து நிறுவனங்களின் நலனுக்கானதாகவும் இருக்கும்.
இதுபோன்ற
தொலைநோக்கை வெளிப்படுத்தியிருக்கும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கான சமீபத்திய
எடுத்துக்காட்டை தில்லி அறிவியல் இயக்கத்தின் ரகுநந்தன் சுட்டிக் காட்டுகின்றார்.
2020ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெறவிருந்த அதிபர் தேர்தலுக்கு முன்னதாக கோவிட்
தடுப்பூசி தயாராக இருக்கும் என்று யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத, தடுப்பூசிகள்
மீதான பொதுமக்களின் நம்பிக்கையைச் சீரழிக்கும் வகையிலான அச்சுறுத்தும் கூற்றை அமெரிக்க
அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த போது உலகளாவிய ஒன்பது தடுப்பூசி
உற்பத்தியாளர்கள் பின்வாங்கிக் கொண்டனர். 2020 செப்டம்பரில் ஃபைசர் மற்றும்
அஸ்ட்ராஜெனிகா உள்ளிட்ட அந்த நிறுவனங்கள் தாங்கள் அறிவியல்ரீதியான செயல்முறையின்
ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதாகவும், மூன்றாம் கட்ட சோதனைகளின் முடிவுகள் கிடைத்த
பின்னரே அவசரகாலப் பயன்பாட்டுக்கான அங்கீகாரத்திற்காக தாங்கள் விண்ணப்பிக்கப்
போவதாகவும் உறுதியளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
விரைவாகத்
தொடங்குவதற்கான அரசியல் அழுத்தம் இருந்து வந்தபோதிலும், அதுபோன்றதொரு நிலைப்பாடையே
இந்திய தொழில்நிறுவனங்களும், ஆய்வு நிறுவனங்களும் எடுத்திருக்க வேண்டும் என்று
ரகுநந்தன் கூறுகிறார். ‘உண்மையில் அதுதான் எடுக்கப்பட வேண்டிய நெறிமுறையுடனான
நிலைப்பாடாகும். அவ்வாறு செய்யவில்லை என்றால் அது அந்த தயாரிப்புகளை உருவாக்கிய
அமைப்புகளைப் பற்றி மோசமாகப் பேசுவதிலேயே முடியும். ஏனெனில் சுயமரியாதையுள்ள நல்ல
ஆய்வாளர்கள் அல்லது தொழில்நுட்ப வல்லுநர்கள் எவரும் திருப்திகரமான தரவுகள்
கிடைக்கும் வரை ‘இல்லை, நாங்கள் அதற்கு விண்ணப்பிக்க மாட்டோம்’ என்றே
சொல்லியிருப்பார்கள் என்கிறார் ரகுநந்தன்.
வீரியமான வக்கலாத்து
மூன்றாம்
கட்ட தரவு முற்றிலும் இல்லாத போதிலும் கோவாக்சினுக்கான
துரித்தப்படுத்தப்பட்ட ஒப்புதலை டிசிஜிஐ 2021 ஜனவரி 3 அன்று வழங்கியது. டிசிஜிஐயின்
அந்த நடவடிக்கை பல ஆய்வாளர்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியது. அவ்வாறு வழங்கப்பட்ட ஒப்புதலை
‘சைன்ஸ்’ இதழுடன் பேசிய புனே ஐஐஎஸ்இஆரின் வினீதா பால் ‘மனச்சாட்சிக்கு
எதிரானது’ என்றே கூறினார்.
இதுபோன்ற
அனைத்து விமர்சனங்களையும் அரசு உயர் அதிகாரிகள் புறந்தள்ளினர். அவர்கள் இரண்டாம்
கட்டத் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்ற துரிதப்படுத்தப்பட்ட ஒப்புதல்கள்
ஒன்றும் கேள்விப்படாதவை அல்ல என்று கூறியதோடு இதைப் போன்று செய்த நாடுகளாக
ரஷ்யாவையும் சீனாவையும் எடுத்துக்காட்டுகளாகக் கூறினர். கொல்லப்பட்ட முழு வைரஸ்
தடுப்பூசி இந்தியாவில் தோன்றியுள்ள பி1.1.7
போன்ற சார்ஸ்-கோவி-2 வைரஸின் புதிய, வேகமாகப் பரவும் வைரஸ் திரிபுகளுக்கு எதிரான
பாதுகாப்பை வழங்கும் வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளது என்ற உறுதிப்பாட்டையே கோவாக்சினுக்கு
ஒப்புதல் அளிப்பதற்காக டிசிஜிஐ நம்பியது. அதையே நிதி ஆயோக்கின் பால் மீண்டும்
மீண்டும் கூறிக் கொண்டிருந்தார்.
பால்,
ஐசிஎம்ஆரின் பார்கவா இருவருமே கோவாக்சினுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒப்புதலுக்கு பாதுகாப்பு
கண்காணிப்பு எதுவும் இல்லாமலே மக்கள் தடுப்பூசியைப் பெறுவார்கள் என்று அர்த்தமல்ல
என்று வாதிட்டனர். ‘மருத்துவ சோதனை முறை’ என்றழைக்கப்படும் சிறப்பு ஏற்பாட்டின் கீழ் அதாவது
தடுப்பூசியின் பாதுகாப்பும், செயல்திறனும் தடுப்பூசி வெளி வந்த பிறகும் கூட
கண்காணிக்கப்படும் என்ற அடிப்படையிலேயே டிசிஜிஐ இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக
அவர்கள் இருவரும் சுட்டிக் காட்டினர்.
இவையனைத்திற்கும் மேலாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி என்பதில் மிகுந்த பெருமிதம் கொண்டவராக இருந்த பால், இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர், இந்திய அறிவியலாளர்கள் மீது போதுமான நம்பிக்கை இல்லாமல் இருப்பதற்காக மக்களைக் கண்டித்தார். ‘உலகெங்கிலும் புகழ்பெற்றிருக்கும் நமது கட்டுப்பாட்டாளர், அறிவியல் ஆய்வு நிறுவனங்கள் ஏதாவது சொல்லும் போது நாம் அதன் மீது சந்தேகங்களை உருவாக்கிக் கொள்ளக் கூடாது... தயவுசெய்து நமது நிறுவனங்களின் மீது நம்பிக்கை வைத்திருங்கள்’ என்று பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்த உடனேயே நடந்த டிசம்பர் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியிருந்தார்.
இவர்களின்
வாதங்கள் அனைத்தும் தவறாக வழிநடத்துபவையாகவே இருந்தன. ரஷ்யா தனது
ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை மூன்றாம் கட்ட
சோதனை இல்லாமல் வெளியிட்டது என்பது உண்மைதான் என்றாலும், சீனாவும் அரசுக்கு
சொந்தமான சினோவாக் மற்றும் சினோபார்ம் நிறுவனங்கள் உருவாக்கிய தடுப்பூசிகளை
அதேபோன்று அறிமுகப்படுத்தி இருந்தது, இந்த ஒப்புதல்கள் அனைத்தும் சர்ச்சையில் சிக்காமல் இருக்கவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் ஸ்புட்னிக்-5க்கான ஒப்புதல் ரஷ்யர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்தி இருப்பதாக
உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்களிடமிருந்து கடும் கண்டனம் எழுந்தது. மனிதர்களிடம்
உள்ள கோவிட்-19க்கு எதிரான நோயெதிர்ப்பாற்றலின் தன்மை குறித்து பணியாற்றி வரும்
அமெரிக்க வைராலஜிஸ்ட் ஃப்ளோரியன் கிராமர் ‘ரஷ்யாவைப் பொறுத்தவரை என்னவென்று
எனக்குத் தெரியாது, ஆனாலும் மூன்றாம் கட்டத்தில் சோதனை செய்யப்படாத தடுப்பூசியை
நான் நிச்சயமாக எடுத்துக் கொள்ள மாட்டேன். அது பாதுகாப்பானதா அல்லது செயல்படுகிறதா
என்பது யாருக்கும் தெரியாது. இதுபோன்ற செயலால் அவர்கள் சுகாதாரப் பணியாளர்களையும்,
பொதுமக்களையும் ஆபத்தில் சிக்க வைக்கிறார்கள்’ என்று ட்வீட்
செய்திருந்தார்.
இங்கிலாந்தில்
முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட சார்ஸ்-கோவி-2 வைரஸின் புதிய B.1.1.7 போன்ற புதிய
திரிபுகளுக்கு எதிராக இந்த முழு வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கும் என்று கூறப்படுவதும்
உண்மையல்ல. எம்ஆர்என்ஏ மற்றும் அடினோவைரஸ் வெக்டார் திசையன் தடுப்பூசிகள் போன்ற
பெரும்பாலான தடுப்பூசிகள் மனித உடலில் ஸ்பைக் ஆன்டிஜெனை மட்டுமே அறிமுகப்படுத்துகின்றன.
எனவே B.1.1.7 போன்ற திரிபுகளில் உள்ள பிறழ்வுகள் ஸ்பைக் ஆன்டிஜெனின் வடிவத்தை
கணிசமாக மாற்றும் போது, ஸ்பைக் ஆன்டிஜெனின் அடிப்படையில் செயல்படுகின்ற
தடுப்பூசியால் தூண்டப்படும் ஆன்டிபாடிகளால் வைரஸை அடையாளம் காண இயலாது. எனவே உடலுக்குள்
பல ஆன்டிஜென்களை அறிமுகப்படுத்தக் கூடிய வகையில் செலுத்தப்படுகின்ற முழு வைரஸ்
தடுப்பூசியே நன்றாக வேலை செய்யும் என்பதே பால், டிசிஜிஐ ஆகியோரின் கூற்றுக்கு
பின்னால் இருந்த தர்க்கமாக இருந்தது.
ஆனால் அந்த
தர்க்கம் வெறுமனே கோட்பாடு சார்ந்ததாகவே இருந்தது. தற்போது பரவி வரும் திரிபுகளால்
ஏற்படும் நோயிலிருந்து கோவாக்சின் பாதுகாக்கும் என்பதை பாரத் பயோடெக் இன்னும்
நிரூபிக்கவில்லை என்பதை காங் சுட்டிக் காட்டுகிறார். சீனாவில் அடுத்தடுத்து
ஏற்பட்ட முன்னேற்றங்கள் கொல்லப்பட்ட முழு வைரஸ் தடுப்பூசிகளின் செயல்திறன்
குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன. 2021 ஏப்ரலில் சீனாவில் உள்ள நோய் தடுப்பு
மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவரான ஜார்ஜ் காவ் ‘நாட்டின் இரண்டு
கொல்லப்பட்ட தடுப்பூசிகள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை’ என்று பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
இந்தப்
பின்னணியில் துரிதப்படுத்தப்பட்ட ஒப்புதலுக்குப் பிறகு கோவாக்சின் குறித்த மூன்றாம்
கட்ட முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று இந்திய அறிவியலாளர்கள் பலரும் நம்பிக்கை
கொண்டிருந்தனர். 2021 மார்ச்க்குள் அது நடக்கும் என்று கிருஷ்ணா எல்லா ஜனவரி மாதம் வாக்குறுதி அளித்திருந்தார். மருத்துவ சோதனை முறையில் கோவாக்சின்
தடுப்பூசியை அதிக அளவில் தயாரித்து வெளியேற்றுவது பாரத் பயோடெக் மற்றும்
ஐசிஎம்ஆருக்கு கோவாக்சின் செயல்திறன் குறித்த தரவுகளைச் சேகரிப்பதற்கான பொன்னான
வாய்ப்பைக் கூடுதலாக அளித்திருப்பதாக வெளியிலிருந்த நிபுணர்களும் நம்பினர்.
தடுப்பூசியின்
பயன்படுதிறன் என்பது அதன் செயல்திறனில் இருந்து வேறுபட்டது; பயன்படுதிறன் என்பது
தடுப்பூசி நிஜவாழ்க்கையில் எவ்வாறு நோயைத் தடுக்கிறது என்பதற்கான அளவீடாகும்.
செயல்திறனானது மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையின் கட்டுப்படுத்தப்பட்ட
நிலைமைகளில் தடுப்பூசியின் திறன் குறித்ததாக இருக்கிறது. ஆய்வகங்களில்
மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவப் பரிசோதனைகளால் நிஜ-உலகில் மேற்கொள்ளப்படுகின்ற
சிக்கலான நோய்த்தடுப்பு திட்டங்களை அப்படியே உருவகப்படுத்த முடியாது என்பதால்,
பயன்படுதிறன் என்பது செயல்திறனில் இருந்து கணிசமாக வேறுபடுவதாகவே இருக்கும்.
மருத்துவப்
பரிசோதனைகள் பெரும்பாலும் சில குறிப்பிட்ட நபர்களை உள்ளடக்கிக் கொள்வதில்லை என்ற
போதிலும், தடுப்பூசி போடுவது தொடங்கியவுடன் அவ்வாறு விலக்கி வைத்தவர்களும் அதைப்
பெற்றுக் கொள்ளவே செய்கிறார்கள். பாரத் பயோடெக் எச்.ஐ.வி அல்லது ஹெபடைடிஸ்
நோய்த்தொற்றுகள், கோவிட் பாதிப்புடன் இருந்தவர்களை தனது மூன்றாம் கட்ட சோதனையில்
பங்கேற்பாளர்களாக சேர்த்துக் கொள்ளவில்லை. மேலும் சரியான நேரத்தில் சரியான அளவு
தடுப்பூசியை தடுப்பூசி பெறுபவர்கள் பெறாமல் இருக்கலாம் அல்லது சரியாகக் குளிரூட்டப்படாது
சேமிக்கப்பட்டிருந்த தடுப்பூசிகளை அவர்கள் பெறலாம் என்பதுவும் நிஜ வாழ்க்கையில்
நடக்கலாம். இதுபோன்ற வேறுபாடுகள் தடுப்பூசி பரவலாகப் போடப்படும் போது
தடுப்பூசியின் செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கின்றன?
ஜனவரி
மாதத்திற்குள் அவசரகாலப் பயன்பாட்டு அங்கீகாரம் என்ற அடிப்படையில் தாங்கள் ஒப்புதல்
அளித்த எம்ஆர்என்ஏ மற்றும் அடினோவைரஸ் வெக்டார் தடுப்பூசிகளைப் பற்றிய இதுபோன்ற
கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக அமெரிக்காவும், இங்கிலாந்தும் பயன்படுதிறன் குறித்த
ஆய்வுகளைத் தொடங்கின. இந்த ஆய்வுகளிலிருந்து கிடைத்த தரவு விரைவிலேயே வெளிவந்தது.
பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வில் கோவிட் காரணமாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைத் தடுப்பதில் அஸ்ட்ராஜெனிகா மற்றும் ஃபைசர்
தடுப்பூசிகளின் ஒரு டோஸ் குறைந்தது 80% பயனுள்ளதாக இருக்கும் என்ற மதிப்பீடு
செய்யப்பட்டிருந்தது.
இத்தகைய
ஆய்வுகள் வைரஸின் புதிய வகைகளுக்கு எதிராகத் தடுப்பூசியின் பயன்படுதிறனை அளவிடும்
திறனைக் கொண்டவையாக இருக்கின்றன. கடந்த வாரம் வெளியிடப்பட்ட மற்றொரு இங்கிலாந்து
ஆய்வில் இந்தியாவில் முதன்முதலாகத் தோன்றிய B.1.617.2 வைரஸ் திரிபால் ஏற்படும்
அறிகுறியுடனான நோய்களுக்கு எதிராக அஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள்
60%க்கும் அதிகமான பயன்படு திறனுடனும், ஒரு டோஸ் 33% பயன்படு திறனுடனும்
இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஒப்புதலுக்குப் பிறகான மந்தம்
இதுபோன்ற
தரவுகளைப் பெறுவதற்கான அதிர்ஷ்டம் இந்தியாவிற்கு இருக்கவில்லை. இந்தக் கட்டுரை
வெளியாகும் நேரத்தில் - மே மாத இறுதியில், இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி
போடுவது தொடங்கப்பட்டு நான்கு மாதங்கள் கடந்து விட்டன. இரண்டு கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆயினும் பாரத்
பயோடெக் அதன் மூன்றாம் கட்ட செயல்திறன் தரவை இன்னும் வெளியிடவில்லை. எந்தவொரு
பயன்படுதிறன் தரவையும் அந்த நிறுவனம் பகிர்ந்து
கொள்ளவில்லை.
2021
ஏப்ரல் 21 அன்று மூன்றாம் கட்ட ஆய்விலிருந்து 78% செயல்திறன் மதிப்பீட்டை செய்திக்குறிப்பு மூலம் அந்த நிறுவனம்
வெளியிட்டது. ஆனாலும் அந்த செய்திக்குறிப்பில் அப்போது பெரிதாக எழுந்திருந்த
கேள்விகளுக்கான பதில் எதுவும்
அளிக்கப்படவில்லை. எடுத்துக்காட்டாக ஆய்விற்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த 25,800
பேருக்கு தடுப்பூசியும், மருந்தில்லா மருந்தும் 1:1 என்ற விகிதத்தில்
ஒதுக்கப்பட்டது என்றும், அந்த விகிதத்தின் அடிப்படையிலேயே இறுதி செயல்திறன்
மதிப்பீடு இருந்தது என்றும் அந்த பத்திரிகைக் குறிப்பிலும், அதற்கு முந்தைய குறிப்பிலும் கூறப்பட்டிருந்தது.
எந்தவொரு
மூன்றாம் கட்ட சோதனையிலும் பங்கேற்பாளர்களில் சிலர் முன்கூட்டியே வெளியேறி
விடுகிறார்கள் அல்லது அவர்களைப் பின்தொடர்ந்து கண்காணிப்பது இயலாததாகி விடுகிறது.
அவ்வாறு நிகழும் போது அவ்வாறானவர்கள் அந்த
செயல்திறன் மதிப்பீட்டின் கணக்கீட்டிலிருந்து விலக்கப்பட்டு விடுகின்றனர். ஆனால்
பாரத் பயோடெக் நிறுவனமோ அவ்வாறு செய்ததாகத் தெரியவில்லை. இது ஆச்சரியமளிப்பதாக இருப்பதாக
இங்கிலாந்தின் பொது சுகாதார மருத்துவர் ஜம்மி நாகராஜ் ராவ் கூறுகிறார்.
ஜனவரி
மாதத்தில் கோவாக்சின் குறித்த மூன்றாம் கட்ட சோதனை நடைபெற்ற தளத்தில் கலந்து கொண்ட
பங்கேற்பாளர்கள் நெறிமுறை மீறல்கள் குறித்து புகார் அளித்தனர். அதைக் கருத்தில்
கொண்டால் இந்தப் பிரச்சனையை இன்னும்
பொருத்தமாகக் காண இயலும். கோவாக்சினுக்காக இருந்த இருபத்தாறு சோதனைத்தளங்களில்
ஒன்றான போபாலைத் தளமாகக் கொண்ட மருத்துவமனையில் நடந்த ஆய்வில் இணைக்கப்பட்டிருந்த பங்கேற்பாளர்கள்
தடுப்பூசி செலுத்தப் போகிறோம் என்பதைத் தவிர்த்து தடுப்பூசி குறித்த சோதனையிலே
தாங்கள் கலந்து கொள்ளப் போகிறோம் என்பதை அந்த
சோதனையை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தங்களிடம் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தனர். அந்த ஆய்வில் பங்கேற்பதற்கான ஒப்புதலை தாங்கள் அளித்ததற்கான
ஆவணங்களின் நகல்கள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
மருத்துவமனை அதிகாரிகளும் அதை உண்மை என்றே ஒப்புக் கொண்டனர். இந்தியாவின்
மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டத்தின் கீழ் ‘ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும்
கையொப்பமிடப்பட்ட ‘தகவலளிக்கப்பட்ட ஒப்புதல்’
படிவத்தின் நகல் தரப்பட்டிருக்க வேண்டும்’ என்றிருக்கும் விதியை இது
முழுமையாக மீறிய செயலாகும். இந்த பங்கேற்பாளர்களில் பலரும் தங்களுக்கான இரண்டாவது
தடுப்பூசி டோஸைப் பெறுவதற்காகத் திரும்பிச் சென்றிருக்கவில்லை.
இவ்வாறு
தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஐசிஎம்ஆர் மற்றும் பாரத் பயோடெக் தள்ளுபடி
செய்தன. அவர்கள் இந்திய சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளின் தேவைகளுக்கேற்பவே அந்த
ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினர். ஆனால் புகார். அளித்தவர்கள் யாருமே இரண்டாவது
டோஸுக்காகத் திரும்பிச் செல்லவில்லை, ஆய்விலிருந்து அவர்கள் முழுமையாக
விலகியிருப்பார்கள் என்றால், தடுப்பூசி பாதுகாப்பு அல்லது செயல்திறன் பற்றிய
தரவுகள் எதுவும் அந்த ஆய்வாளர்களிடம் இருந்து கிடைத்திருக்காது. அவ்வாறான
சூழ்நிலையில் தடுப்பூசி செயல்திறன் பகுப்பாய்விலிருந்து அவர்களை முழுவதுமாக
விலக்கியிருக்க வேண்டும்.
இந்த
கேள்விகள் மற்றும் பிற கேள்விகள் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்ததால் மூன்றாம் கட்ட
சோதனையின் முடிவுகள் அறிவியல் கட்டுரையாக வெளியிடப்பட வேண்டும் என்று ராவ் கேட்டுக்
கொண்டார். ‘சோதனை முடிவுகள் அவ்வாறு கட்டுரையாக வெளியிடப்படாமல் - குறிப்பாக செயல்திறன்
மிக்கவை என்று அவற்றைப் பற்றி கூறப்படும் போது - வெறுமனே பத்திரிகைச் செய்திக்குறிப்பாக மட்டுமே முடிவுகள்
வெளியிடப்படுவது விரும்பத்தக்கதல்ல என்றே நான் கருதுகிறேன். ஒட்டுமொத்த
முடிவுகளையும் எழுதுவதற்கான ஆதாரங்கள் பாரத் பயோடெக்கிடம் இருக்கும்’ என்றும் ராவ்
கூறினார்.
மும்பையைச்
சேர்ந்த தொற்று நோய் நிபுணரான ஸ்வப்னெயில்
பாரிக் மூன்றாம் கட்ட சோதனையின் ஒட்டுமொத்த முடிவுகள் நோய்த்தடுப்பு உத்தியை
இந்தியா நன்றாகக் கையாள உதவும் என்று சுட்டிக் காட்டுகிறார். முதல் டோஸ் அதிக
செயல்திறனைக் கொண்டிருப்பதாக தரவுகள் காட்டினால் கோவாக்சினின் இரண்டு டோஸ்களுக்கு
இடையிலான இடைவெளியை இந்தியா அதிகரித்துக் கொள்ள முடியும். அதனால் அதிக அளவில் தடுப்பூசி
தயாரிக்கப்படும் போது கூடுதலான மக்களுக்கு அதனைக் கொடுக்க முடியும் என்கிறார்.
முடிவுகளை
வெளியிட ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பது குறித்த பல
கேள்விகளுக்கு பாரத் பயோடெக் மற்றும் ஐசிஎம்ஆர் பதிலளிக்க முன்வரவில்லை.
தவற விடப்பட்ட வாய்ப்புகள்
கோவாக்சின்
தரவுகளுக்காக அறிவியலாளர்கள் காத்துக் கொண்டிருக்கையில், மார்ச் மாதத்தில்
மற்றுமொரு பிரச்சனை தலைதூக்கியது. இரண்டு
கோடி டோஸ் கோவாக்சின் வழங்க பாரத பயோடெக் பிரேசில் அரசாங்கத்துடன்
கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் திடீரென்று நிறுத்தப்பட்டது. காரணம்? பிரேசிலிய
கட்டுப்பாட்டாளரான அன்விசா பாரத் பயொடெக் நிறுவனத்தில் உள்ள உற்பத்தி வசதிகளை
ஆய்வு செய்தது. பாரத் பயோடெக்கின் தடுப்பூசியில் உள்ள சார்ஸ்-கோவி-2 வைரஸ்
முழுமையாகச் செயலிழக்கச் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வதற்குப் போதுமான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்த நிறுவனம் எடுத்திருக்கவில்லை என்பதை அன்விசா அந்த
ஆய்வின் போது கண்டறிந்தது.
இந்தியச்
சட்டங்களும் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதாகவே
இருப்பதால், அதுபோன்ற நடவடிக்கைகள் இல்லாமலேயே தடுப்பூசியை ஏன் டிசிஜிஐ அனுமதித்தது
என்பது குறித்து எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. துரிதப்படுத்தப்பட்ட ஒப்புதலின்
ஒரு பகுதியாக இருக்க வேண்டிய இதுபோன்ற தேவைகள் பாரத் பயோடெக்கிற்காகத் தள்ளுபடி
செய்யப்பட்டனவா என்ற கேள்விகளுக்கு பாரத் பயோடெக் அல்லது டிசிஜிஐ என்று யாருமே
பதிலளிக்க முன்வரவில்லை.
தொற்றுநோயின்
இரண்டாவது அலை மூர்க்கத்தனத்துடன் தாக்கிய போது நோய்த்தடுப்பிற்கான தடுப்பூசிகளைப்
பெற வேண்டிய நிலையிலிருந்த இந்தியர்கள் பலரும் தடுப்பூசியின் தரம் குறித்து மிகப்
பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை. நாட்டின் சொந்த தடுப்பூசியின் வெற்றியைப்
பறைசாற்ற முன்வந்த அரசாங்கமோ போதிய அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுவதை உறுதி
செய்து கொண்டிருக்கவில்லை.
கடந்த
ஆண்டின் நடுவில் இருந்தே தன்னால் கோவாக்சினை எந்த அளவிற்கு உற்பத்தி செய்து தர
முடியும் என்பது குறித்து பாரத் பயோடெக் தெளிவாகவே இருந்து வந்துள்ளது. 2020
ஜூலையில் நிறுவனத்தின் திறன் ஆண்டுக்கு இருபது கோடி டோஸ் என்றிருந்தது. 2021 ஜூலைக்குள் முப்பது கோடி மக்களுக்கும், இறுதியில்
நூறு கோடிக்கும் அதிகமானோருக்கும் தடுப்பூசி போட இந்தியா திட்டமிட்டிருந்த
நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இந்த உற்பத்தி அளவு மிகமிகக் குறைவாகவே
இருந்தது.
இருபது
கோடி என்ற எல்லையைத் தாண்டிச் செல்ல பாரத்
பயோடெக் பிஎஸ்எல்-3 வசதிகளைக் கொண்ட பிற நிறுவனங்களுடன் கூட்டுத் தொழிலை மேற்கொள்ள
வேண்டியிருக்கும். பிஎஸ்எல்-3 வசதிகள் இந்தியாவில் மிகமிகக் குறைவான எண்ணிக்கையிலேயே
இருக்கின்றன. கோவாக்சினை மட்டுமே மத்திய அரசு நம்பியிருந்திருக்கும் என்றால் கடந்த
ஆண்டே தடுப்பூசிக்கான உத்தரவுகளை அது வழங்கியிருக்க வேண்டும். மருந்து தொழில்
விநியோகச் சங்கிலி நிபுணர் நீதா சாங்கி அவ்வாறான உத்தரவு உற்பத்தியை
விரிவுபடுத்துவதற்கான உறுதியான ஊக்கத்தை அளித்திருக்கும் என்று கூறுகிறார்.
இருந்தபோதிலும் இந்த ஆண்டு ஜனவரி வரை அரசாங்கம் எந்த உத்தரவும் தரவில்லை. இவ்வாறான
நிலையில் இந்த ஆண்டுதான் கோவாக்சின் தயாரிப்பதற்கான கூட்டுத் தொழிலிற்கு பாரத்
பயோடெக் முன்வரத் தொடங்கியது. ஜூலை மாதத்திற்குள் தன்னுடைய உற்பத்தித் திறனை
எழுபது கோடி டோஸ்களாக விரிவுபடுத்தப் போவதாக உறுதியளித்திருந்தாலும், அந்த
நிறுவனம் தன்னுடைய உற்பத்தித் திறன் விரிவாக்கத்தில் இவ்வளவு தாமதமாக இறங்கியதைக்
கருத்தில் கொண்டு சாங்கி போன்ற வல்லுநர்கள் பலரும் சந்தேகத்துடனே இருக்கின்றனர்.
கோவாக்சினின்
இந்தக் கதை எதிர்கால தொற்றுநோய்களுக்கும் அரசு-தனியார் கூட்டுத் தொழிலுக்கும் பல
படிப்பினைகளைக் கொண்டதாக இருக்கிறது. இந்தியாவின் முதன்மையான உள்நாட்டுத்
தடுப்பூசி என்றாலும், ஓராண்டு கழித்து இப்போது பார்க்கும் போது கோவாக்சினின் இந்தக்
கதை தவறவிடப்பட்ட வாய்ப்புகளின் கதையாகவே இருக்கிறது. ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்ட
முன்கூட்டிய ஒப்புதல் கணிசமான அளவிலே தடுப்பூசி தயக்கத்திற்கு வழியேற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
குறைந்தபட்சமாக ஒரேயொரு மாநில அரசாங்கம் - சத்தீஸ்கர் மட்டும் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த
மறுத்து விட்டது. இந்தியாவில் போடப்படுகின்ற தடுப்பூசிகளில் பத்து சதவீதத்திற்கும்
குறைவான அளவிலேயே கோவாக்சின் இருக்கிறது என்ற இன்றைய நிலைமையில் தடுப்பூசியைப் பெற
விரும்புவோர் கூட அதைப் பெறுவதற்குச் சிரமப்படும் நிலையிலேயே அதன் உற்பத்திச்
சிக்கல்கள் இருந்து வருகின்றன.
அவசரமாகத்
தொடங்கப்பட்டதைப் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்ட போது பால், மற்றும் பிற அரசாங்க
செய்தித் தொடர்பாளர்கள் அதற்கான தரவுகளைப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக,
கட்டுப்பாட்டாளர் மீது அதிக நம்பிக்கையை மக்கள் கொண்டிருக்க வேண்டும் என்ற
கோரிக்கையை மட்டுமே முன்வைத்தனர். அந்த சந்தேகம் முதலில் நம்பிக்கையின்மையால் எழாததாக
இருந்ததால் அவர்களது விளக்கம் சந்தேகத்திற்கான தீர்வைக் காண்பதற்கான எதையும்
செய்து தரவில்லை. செயலிழக்கச் செய்யப்பட்ட வைரஸ் தடுப்பூசியான கோவாக்சின்
செயல்திறன் மிக்க தடுப்பூசியாக இருப்பதற்கான நல்ல வாய்ப்பு இருப்பதாக
அறிவியலாளர்கள் தொடர்ந்து நம்பி வந்தனர். அவர்கள் தடுப்பூசியின் செயல்திறனுக்கான
சான்றுகள் சேகரிக்கப்பட வேண்டும் என்றும், சரியான செயல்முறை பின்பற்றப்பட வேண்டும்
என்றும் மட்டுமே விரும்பினர். கோவாக்சினை ஏற்றுக் கொள்வதற்கான மிகப்பெரிய
அச்சுறுத்தல் இதுபோன்ற நம்பிக்கையின்மையால் மட்டுமே வருவதாக இருக்கவில்லை. அரசாங்கத்தின்
கள்ளத்தனம் மற்றும் வெற்றிப் பெருமிதத்தின் விளைவாகவே அந்த தயக்கம் ஏற்பட்டிருக்கிறது.
பிரியங்கா புல்லா பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர். கோவிட்
-19 குறித்த அவரது ஆய்வுகளுக்கு தாகூர் குடும்ப அறக்கட்டளை மானியம் அளித்து ஆதரித்து
வருகிறது. அவரது ஆய்வுப் பணிகளில் இந்த அறக்கட்டளை எந்தவொரு செல்வாக்கையும்
செலுத்தவில்லை.
Comments