பொதுப் பாடத்திட்டம்: உயர்கல்வியை காலி செய்யும் தமிழக அரசு

வெ.நீலகண்டன்

ஆனந்த விகடன்

பல்கலைக்கழக மானியக்குழு புதிய கல்விக் கொள்கையைத் திணிக்க முயல்கிறது. பல்கலைக்கழகங்களில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த கவர்னர் முயல்கிறார்' என்றெல்லாம் குற்றம் சாட்டுகிறார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. பல வழிகளில் மாநில சுயாட்சியையும் பல்கலைக்கழகங்களின் மாண்பையும் மத்திய அரசு கேள்விக்குள்ளாக்குகிறது என்பது உண்மைதான். ஆனால், அதையே மாநில அரசும் செய்தால்?

மத்திய அரசின் தலையீட்டுக்கு எதிராகவும், தமிழக அரசின் முன்னெடுப்புகளுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்த கல்வியாளர்களையே கொதித்தெழச் செய்திருக்கிறது, உயர்கல்வி அமைச்சரின் பொதுப்பாடத்திட்ட அறிவிப்பு.

தன்னாட்சி அதிகாரம்

தமிழக சட்டமன்றத்தில் தனியாக சட்டமியற்றி உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தன்னாட்சி அதிகாரம் கொண்டது. பாடத்திட்டக் குழு, கல்விக்குழு, ஆட்சிமன்றக்குழு, பேரவை எனப் பல்வேறு அமைப்புகள் அங்கே உண்டு. சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு இணையான நிர்வாக அமைப்பைக் கொண்டது. அதனால்தான் வேந்தர், துணைவேந்தர் என்றெல்லாம் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குப் பெயர் வைத்தார்கள். ஒவ்வொரு வட்டாரத்தின் தன்மையும் கல்வியில் வெளிப்பட வேண்டும் என்ற நோக்கில்தான் பரவலாக வெவ்வேறு பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டன. நிதி வழங்குவது, கண்காணிப்பதோடு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு நிறைவடைந்தது. பாடத்திட்ட உருவாக்கம் முதல் பட்டமளிப்பு வரை எல்லாமும் அததற்கென்று உருவாக்கப்பட்ட குழுக்கள் தீர்மானிப்பதுதான். சட்டம் தந்திருக்கிற தன்னாட்சி அதிகாரம் இது.

சமீபகாலங்களில் பல்கலைக்கழகங்கள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. புதிய கல்விக்கொள்கையைத் திணிக்கும் நோக்கில் ஒரு பக்கம் பல்கலைக்கழக மானியக்குழு நெருக்குதல் தருகிறது. இன்னொரு பக்கம் கவர்னர் பல்கலைக்கழகத்தை சதுரங்க மேடையாக்கிக் காய் நகர்த்துகிறார். மற்றொரு பக்கம் தமிழக அரசு பல்வேறு வழிகளில் தன் ஆதிக்கத்தை நிறுவ முயல்கிறது. பல கோடி மாணவர்களின் எதிர்காலத்தைத் தூண்களில் தாங்கி நிற்கும் பல்கலைக்கழகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் சுயத்தையும் மாண்பையும் இழந்து வருகின்றன.

அச்சுறுத்தும் அரசு

இந்தச் சூழலில் இன்னொரு ஆணியை பல்கலைக்கழகங்களின் நெற்றிப்பொட்டில் அடித்திருக்கிறது தமிழக அரசு. பாடத்திட்டக்குழு, கல்விக்குழு, செனட், சிண்டிகேட் என எந்த அதிகார அமைப்பையும் மதிக்காமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் மூலம் தமிழகத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான பாடத்திட்டம் ஒன்றை உருவாக்கி 'இந்த ஆண்டு முதலே பல்கலைக்கழகங்களும் தன்னாட்சிக் கல்லூரிகளும் நடைமுறைப்படுத்த வேண்டும்' என்று அறிவித்திருக்கிறார் உயர்கல்வி அமைச்சர். 

பொதுப் பாடத்திட்டத்தில் இருக்கும் பல்வேறு பிரச்னைகளைச் சுட்டிக்காட்டும் பேராசிரியர்கள், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையிலேயே இது உருவாக்கப்பட்டு இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். பல்கலைக்கழகத்தின் மாண்பையும் செயல்பாடுகளையும் ஒட்டுமொத்தமாக முடக்குவதாக வருந்துகிறார்கள்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் தலையீடு, உயர்கல்வி நிறுவனங்களைப் பெரிய அளவில் பாதிக்கிறது. புதிய கல்விக்கொள்கை வழியாக ஒற்றைக் கல்விமுறையைத் திணிக்கிறது என்று தேசிய அளவில் கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்துகின்றனர். தமிழக அரசும் மத்திய அரசின் இந்தச் செயல்பாடுகளை எதிர்ப்பதாகப் பொதுவெளியில் பேசுகிறது. ஆனால், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியை அழித்து ஒரே பாடத்திட்டத்தைக் கொண்டு வந்து அச்சுறுத்துகிறது..." என்று வருந்துகிறார் மக்கள் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ப.சிவகுமார்.

"ராஜீவ் காந்தி  காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் உயர்கல்வி மன்றம் உருவாக்கப்பட்டது. ஆசிரியர் சங்கங்களின் பொறுப்பில் இருந்த நாங்கள் அப்போதே அதை எதிர்த்தோம். 'இந்த மன்றம் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சியைக் கட்டுப்படுத்தும் அமைப்பாக மாறிவிடும்' என்றோம். இன்று அதுதான் நடந்திருக்கிறது.

பாடத்திட்டத்தை உருவாக்கப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. உயர்கல்வி மன்றம் கல்வி நிறுவனங்களில் நிலவும் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டுகளாக மதிப்பெண் சான்றிதழே வழங்கப்படவில்லை. அதில் தலையிட்டு சரி செய்யட்டும். மாணவர்களைக் கூப்பிட்டுப் பேசட்டும். அவர்களின் பிரச்னைகளைக் கேட்கட்டும். அதைச் செய்யாமல் பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்தில் ஏன் தலையிடுகிறது" என்ற கேள்வியை எழுப்புகிறார் சிவகுமார்.

உயர்கல்வி மன்றத்துக்கு அதிகாரமில்லை

ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் உள்ள பாடத்திட்டக் குழுக்களில், துறைத்தலைவர் தலைமையில் அத்துறையின் அனுபவமுள்ள பேராசிரியர்கள் இருப்பார்கள். பல்கலைக்கழகத்துக்கு வெளியே அத்துறையில் நிபுணத்துவம் பொருந்தியவர்களும்கூட இக்குழுவில் இருக்கலாம். அந்தக் குழுவுக்குத்தான் பாடத்திட்டத்தை உருவாக்கும் பொறுப்பும் அதிகாரமும். அவர்கள் உருவாக்கும் பாடத்திட்டத்தைப் பல்கலைக்கழகக் கல்விக்குழு ஆய்வு செய்யும். அந்தக்குழுவில் கல்லூரிகளின் பிரதிநிதிகள், மூத்த பேராசிரியர்கள் இருப்பார்கள். அந்தக்குழு பாடத்திட்டத்தில் குறை இருப்பதாகக் கருதினால் மீண்டும் பாடத்திட்டக்குழு கூடி இறுதி முடிவெடுக்கும். அதை அந்தப் பல்கலைக்கழகத்தின் இணைப்புப் பெற்ற கல்லூரிகள் பின்பற்ற வேண்டும். துணைவேந்தர், ஆட்சிக்குழு, பேரவை உட்பட எந்த அமைப்பும் இதில் தலையிட முடியாது. பரிந்துரைகளை மட்டுமே தரமுடியும்.

"தமிழ்நாடு உயர்கல்வி மன்றம், பல்கலைக்கழகங்களில் விடைத்தாள் திருத்தம் போன்ற பொதுவான பணிகளை மட்டுமே ஒருங்கிணைக்கும். பாடத்திட்டத்தை உருவாக்கும் அதிகாரம், பல்கலைக்கழக மானியக்குழுவுக்கும் இல்லை. அதுமாதிரி தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துக்கும் இல்லை.." என்கிறார் விவேகானந்தா கல்லூரி முன்னாள் வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் கருணானந்தன்.

"உயர்கல்வி மன்றம் உருவாக்கியுள்ள பாடத்திட்டம் சரியாக உள்ளதா, இல்லையா என்ற விவாதத்துக்குள்ளேயே நான் போக விரும்பவில்லை. இந்த வேலையை உயர்கல்வி மன்றம் செய்யக்கூடாது என்பதுதான் என் கருத்து. இதுமாதிரி திணிப்புகளை மத்திய அரசு செய்தாலும் தவறு, தமிழக அரசு செய்தாலும் தவறு. பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி என்பதே பாடத்திட்டம் உருவாக்குவதுதான். அதை எடுத்துவிட்டால் நிர்வாக அமைப்பே குலைந்து விடும். பாடத்திட்டம் ஒன்றுதான் என்றால் ஏன் இத்தனை பல்கலைக்கழகங்கள்? ஆங்கிலேயர்கள் முதல் பல்கலைக்கழகத்தை உருவாக்கிய போதே பாடத்திட்டம் உருவாக்கும் உரிமையைப் பல்கலைக்கழகத்துக்கே தந்தார்கள். இவ்வளவு வளர்ச்சிகளுக்குப் பிறகு அதை விரிவாக்கம் செய்யாமல், இருக்கும் உரிமையையும் பறிப்பது நியாயமல்ல" என்கிறார் கருணானந்தன்.

காலாவதியான பாடத்திட்டம்

இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கு 300-க்கும் மேற்பட்ட பாடத்திட்டங்களைத் தயாரித்துள்ளது மாநில உயர்கல்வி மன்றம். அந்தந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற 922 பேராசிரியர்கள் விவாதித்து இந்தப் பொதுப் பாடத்திட்டத்தை உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறார்கள். உயர்கல்வித்துறை தந்த அழுத்தம் காரணமாகப் பல பல்கலைக்கழகங்களில் விவாதமே இல்லாமல் நேரடியாக இணையத்தில் பதிவேற்றி விட்டார்கள். தன்னாட்சிக் கல்லூரிகள் செய்வதறியாமல் திகைக்கிறார்கள். பொதுப் பாடத்திட்டத்தில் 25% மட்டும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அதற்கும் உயர்கல்வி மன்றத்தின்  அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலப் பாடங்களில் அதுவும் செய்யக்கூடாது.

"நான் பெரியார் பல்கலைக்கழகத் தாவரவியல் பாடத்திட்டக்குழு தலைவர். என் தலைமையில் 12 பேராசிரியர்கள் கொண்ட குழுதான் இதுநாள் வரை எங்களுக்கான பாடத்தைத் தயாரித்தது. நாங்கள் ஆய்வு செய்தவரை பொதுப் பாடத்திட்டம் காலாவதியானதாகவே இருக்கிறது. சமீபத்திய முன்னேற்றங்கள் எதுவும் அதில் இல்லை. குறிப்பாக செய்முறைப் பாடங்களுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் கல்லூரிகள் தொடங்கிவிட்டன. ஆனால் பல இடங்களில் புதிய பாடங்கள் நடத்தப்படவே இல்லை. பழைய பாடங்களையே நடத்துகிறார்கள். எங்களுக்கும் புதிய பாடங்களை எப்படி நடத்துவது என்று புரியவில்லை.

இந்தப் பாடத்திட்ட வடிவமைப்பு அப்படியே புதிய கல்விக்கொள்கையை ஒத்திருக்கிறது. மாணவர்களை அறிவுசார்ந்தவர்களாக உருவாக்காமல் திறன் சார்ந்தவர்களாக மாற்றி நிறுவனங்களுக்கான தொழிலாளர்களாக ஆக்குவதுதான் பொதுப்பாடத் திட்டத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது. இதைத்தான் கவர்னரும் எல்லாக் கூட்டங்களிலும் பேசுகிறார். இந்த ஆடுபுலி ஆட்டத்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதே எங்கள் அச்சம்..." என்கிறார் அகில இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் துணைத்தலைவர் வே.ரவி.

இரண்டு காரணங்களும் தவறு

இரண்டு காரணங்களுக்காக பொதுப்பாடத்திட்டத்தை உருவாக்குவதாகச் சொல்கிறது மாநில உயர்கல்வி மன்றம். ஒன்று ஈக்குவலன்ஸ் (சமநிலை) பிரச்னை. இன்னொன்று வெர்ட்டிகல் மொபிலிட்டி.

அவ்வப்போது பல்கலைக்கழக மானியக்குழு நிதியுதவியோடு Nanotechnology, Green chemistry போல புதிய படிப்புகள் கொண்டு வருவார்கள். இந்தப் படிப்புகள், வழக்கமான பிற படிப்புகளில் எதற்கு இணையானவை என்று தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் உயர்கல்வி, வேலை வாய்ப்புகளில் இவர்களுக்கு வாய்ப்பளிக்க முடியும். டி.ஆர்.பி. போன்ற பணியாளர் தேர்வு அமைப்புகள் உயர்கல்வி மன்றத்திடம் இதுபற்றிக் கருத்து கேட்கும்போது குழப்பம் வருகிறது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கவே பொதுப்பாடத்திட்டம் என்கிறது உயர்கல்வி மன்றம்.

இந்தக் காரணமே தவறு" என்கிறார் 'மூட்டா' அமைப்பின் பொதுச் செயலாளர் நாகராஜன்.

"இந்தச் சமநிலைப் பிரச்னையை பல்கலைக்கழகங்களே தங்களுக்குள் முடிவு செய்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இது தெரியாமல் உயர்கல்வி மன்றம் குழப்புகிறது. ஒரு மாணவன் ஒரு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறான். சில நேரங்களில் இரண்டாமாண்டில் அவன் வேறொரு கல்லூரியில் சேர நேரிடும். இதைத்தான் 'வெர்ட்டிகல் மொபிலிட்டி' என்பார்கள். 'வேறு வேறு பாடத்திட்டங்கள் இருந்தால் இதுமாதிரியான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். பொதுப் பாடத்திட்டம் இருந்தால் சிக்கல் வராது' என்கிறார்கள். அதுவும் தவறு. பொதுப் பாடத்திட்டங்களை கல்லூரிகள் தங்கள் விருப்பத்துக்கேற்றவாறு வைத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். ஒரு கல்லூரியில் ஒரு பாடம் முதலாமாண்டில் இருந்தால் இன்னொரு கல்லூரியில் மூன்றாமாண்டில் இருக்கும். வெர்ட்டிகல் மொபிலிட்டி பிரச்னைக்கு பாடத்திட்டம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அடிப்படைக் கட்டுமானங்களை ஒரேமாதிரி வைத்தால் போதும்..." என்கிறார் நாகராஜன்.

அரங்குதான் ஏற்பாடு செய்தோம்!

உயர்கல்வி அமைச்சர், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர், செயலாளர் மூவருமே பல்கலைக்கழக நடைமுறைகளை நன்கு அறிந்தவர்கள். துணைத்தலைவர், துணைவேந்தராகவே இருந்திருக்கிறார். அவர் இப்படிச் செய்யலாமா? ஆளுநர் பல்கலைக்கழகத்தின் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் குரலெழுப்புகிறார் உயர்கல்வி அமைச்சர். தமிழக அரசு மட்டும் பல்கலைக்கழகத்தின் மாண்பைச் சிதைக்கலாமா?

உயர்கல்வி மன்றத்தின் தரப்பில் பேசினேன். அவர்கள் "பல்கலைக்கழகத்தின் அதிகாரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பொதுப் பாடத்திட்டமும்கூட பல்கலைக்கழகங்களில் உள்ள பாடத்திட்டக்குழுக்கள், கல்விக்குழுக்கள் அங்கீகரித்தால் மட்டுமே பயன்பாட்டுக்கு வரும். நாங்கள் ஒரு வழிகாட்டுதலைத்தான் உருவாக்கியிருக்கிறோம். இது மாடல் பாடத்திட்டம்தான். இதைத்தான் நடத்தவேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. உயர்கல்வி மன்றம் பாடத்திட்டங்களை உருவாக்க முடியாது. நாங்கள், பேராசிரியர்களுக்கு அரங்கு ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்திருக்கிறோம். அவ்வளவுதான் எங்கள் பங்கு. மத்திய அரசின் செயல்பாடுகளோடு இதை ஒப்பிடக் கூடாது. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் பிரச்னை வருகிறது. அதை மாற்றும் அம்சங்கள் பொதுப்பாடத்திட்டத்தில் இருக்கின்றன என்கிறார்கள்.

பள்ளிகளில் ஒரேமாதிரி பாடத்திட்டம் இருக்கலாம். உயர்கல்விக்கு அது பொருந்தாது. ஒவ்வொரு துறையிலும் வட்டாரத் தன்மையோடு பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் பரந்துபட்டு மாணவர்கள் சிந்திக்க முடியும். ஒரே கல்வி, ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம் என்பதெல்லாம் பாசிசம் என்று குரல் எழுப்பிவிட்டு தமிழக அரசே அதைச் செய்வதுதான் நெருடலாக இருக்கிறது!

 

  

Comments