ஏற்கனவே 2022ஆம் ஆண்டில் எதிர்கொண்டதை இப்போது 2024ஆம் ஆண்டு தவிர்க்க முடிந்துள்ளது என்றே நம்புகிறேன் - மெட்வெடேவ்
ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளில்
இரண்டு-சுழி என்ற முன்னிலையில் இரண்டு முறை இருந்த டேனியல் மெட்வெடேவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை
(2024 ஜனவரி 28) மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் ஜானிக் சின்னரிடம் தோல்வியைக் கண்டுள்ளார்.
ஐந்து செட்டுகளாக 2022ஆம் ஆண்டிலும் நடந்த இறுதி ஆட்டத்தில் ரஃபேல் நடாலிடம் தோல்வியடைந்த
இந்த மூன்றாம் நிலை வீரர் டென்னிஸ் டென்னிஸ் ஓபன் சகாப்தத்தில் இரண்டு முக்கிய இறுதிப்
போட்டிகளில் இரண்டு செட் முன்னிலையில் இருந்து தோல்வியைக் கண்ட ஒரே வீரராக ஆகியிருக்கிறார்.
2022ஆம் ஆண்டு தோல்வியை எதிர்கொண்ட போது மனம் உடைந்து போன மெட்வெடேவ்
போட்டிக்குப் பிறகு அளித்த நேர்காணலில் 'கனவு
காண்பதை நிறுத்திய குழந்தை' என்று தன்னைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். இப்போது இரண்டு
ஆண்டுகளுக்குப் பிறகு இருபத்தியேழு வயதாகி இருக்கும் அவர் சின்னரிடம் பெற்ற தோல்வியைத்
தொடர்ந்து மிகவும் நேர்மறையானவராக மாறியிருக்கிறார். தனது விளையாட்டை எந்த விதத்திலும்
இந்த ஆண்டு கிடைத்துள்ள தோல்வி பாதித்து விடக்கூடாது என்பதில் அவர் உறுதியுடன் உள்ளார்.
போட்டிக்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில்
2022ஆம் ஆண்டு ரஃபேல் நடாலுடன் இறுதிப் போட்டியில் தோல்வியைச் சந்தித்த பிறகு ‘கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை’ என்று அப்போது மெட்வடேவ் கூறியிருந்ததைப் பற்றி முதல் கேள்வி எழுப்பப்பட்டது.
‘வெவ்வேறு உணர்வுகள், சூழ்நிலைகள் என்றே இதனைச் சொல்வேன். முன்னெப்போதைக் காட்டிலும்
இப்போது - அநேகமாக அது இன்றைக்கென்று இல்லாமல் - பொதுவாக என் வாழ்க்கையிலேயே அதிகமாக நான் கனவு காண்கிறேன்’ என்று பதிலளித்த மெட்வெடேவ்
‘நான் இன்னும் கனவு காணும் குழந்தையாகவே இருக்கப்
போவதில்லை. நான் இப்போது இருபத்தியேழு வயது இளைஞனாக இருக்கிறேன். என்னுடைய எதிர்காலத்திற்காக,
நிகழ்காலத்திற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறேன். அதையே விரும்புகிறேன்.
அதனால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறி, வெற்றி பெற விரும்பினேன். வெற்றிக்கு நெருக்கமாக
இருந்தேன். உண்மையில் மிக நெருக்கமாக இருந்தேன். அது ஒன்றும் கடினமாகவும் இல்லை. வெற்றி
வெகு தொலைவிலும் இல்லை. புள்ளிகள் ஒரே மாதிரியாக இருந்தன என்றாலும் இந்தப் போட்டி சற்று
வித்தியாசமாக இருந்தது என்றே நினைக்கிறேன். எனது திறனை அதிகரித்துக் கொண்டு, வித்தியாசமான
மனநிலையுடன், வித்தியாசமான நபராக மாறியிருக்கிறேன். இன்றைய தோல்வி - தோல்வி விளையாட்டின்
ஒரு பகுதி என்பதால் - எனது எதிர்காலப் போட்டிகள், எதிர்கால சீசன்களைப் பாதிக்காமல்
இருக்க என்னுடைய மனவுறுதி கொண்டு அனைத்தையும் சாத்தியமாக்கிக் கொள்ள முயலப் போகிறேன்’
என்றார்.
2021ஆம் ஆண்டில் யுஎஸ் ஓபன் சாம்பியன் பட்டம் பெற்ற
மெட்வெடேவ் முக்கியமான போட்டியில் தனது இரண்டாவது வெற்றியை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு
ராட் லேவர் அரங்கில் வேகமாக விளையாடத் தொடங்கினார். இறுதிப் போட்டியில் முதல் இரண்டு
செட்களில் வென்று வெற்றிக்கு நெருக்கமாக அவர் முன்னிலையில் இருந்தார். ஆனாலும் மூன்றாவது செட்டிலிருந்து கர்ஜித்து
எழுந்த சின்னர் முக்கியமான போட்டியில் வென்றிருக்கும் மூன்றாவது இத்தாலிய வீரராக ஆனார்.
நெருக்கமான
தோல்விக்கு அப்பாற்பட்டு தான் போராடியது குறித்து மெட்வெடேவ்
மகிழ்ச்சியுடனே இருக்கிறார். ‘உடல்ரீதியாகச்
சோர்வடைந்திருந்தேன் என்றாலும், அது மற்ற எல்லாப் போட்டிகளையும் போலத்தான்
இருந்தது. இதற்கு முன்பு நடந்த போட்டிகளில் எனக்கு எதிராக விளையாடியவர்களால் அதனைப்
பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை அல்லது அவர்களும் சோர்வடைந்து போயிருந்தனர். ஆனால்
ஜானிக் சோர்வடையவில்லை. என்னைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ள முயன்றேன். பெருமைப்பட்டுக்
கொள்கிறேன். போராடினேன், ஓடினேன். என் கால்கள் நாளைக்கு எப்படியிருந்தாலும் பரவாயில்லை
- அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இன்றைக்கு கடைசிப் புள்ளி வரை என்னால் முடிந்த
அனைத்தையும் முயல வேண்டும் என்றே கருதினேன். அதைச் செய்தும் காட்டினேன்’ என்று மெட்வெடேவ்
கூறினார்.
தன்னுடைய ஆறாவது பெரிய இறுதிப் போட்டியில் பங்கேற்ற
மெட்வெடேவ், இந்த ஆண்டு மெல்போர்னில் நான்கு ஐந்து-செட் போட்டிகள் உள்ளிட்டு மொத்தம்
முப்பத்தியொரு செட்கள் விளையாடியுள்ளார். டென்னிஸ் ஓபன் சகாப்தத்தில் எந்தவொரு வீரரைக் காட்டிலும் அதிகமான செட்களை அவர்
இப்போது விளையாடியுள்ளார். உலகத் தரவரிசையில் மூன்றாவது நிலையில் இருக்கும் அவர் கடந்த
பதினைந்து நாட்களில் மொத்தமாக இருபத்தி நான்கு மணி நேரம் பதினேழு நிமிடங்கள் மைதானத்தில்
நின்று விளையாடியுள்ளார். எமில் ருசுவூரிக்கு எதிராக அவர் ஆடிய இரண்டாவது சுற்று ஆட்டம்
உள்ளூர் நேரப்படி அதிகாலை 3:40 மணிக்கு முடிவடைந்தது.
‘ஐந்து-செட்டர்கள் உடலுக்கு அதிகச் சோர்வை ஏற்படுத்துபவை.
விளையாடக் கடினமானவை’ என்று கூறும் மெட்வெடேவ். ‘(ஹூபர்ட்) ஹர்காக்ஸ் போட்டிக்குப் பிறகு, (அலெக்சாண்டர்) ஸ்வெரேவ் போட்டிக்குப்
பிறகு மோசமாக உணர்ந்தேன்’ என்று தெரிவித்தார். ‘நேற்று பயிற்சியில் இருந்தபோது இறுதிப்
போட்டியில் எப்படி விளையாடப் போகிறேன், எப்படி நகரப் போகிறேன் என்றே எனக்குத் தோன்றியது.
நாங்கள் குறிப்பாக எனது பிசியோவுடன் சேர்ந்து கடினமாக உழைத்தோம். மகத்தான வேலையை அவர்
செய்த காரணத்தாலேயே ஒவ்வொரு முறை மைதானத்தில் காலடி எடுத்து வைக்கும் போதும் என்னால்
விளையாடத் தயாராக இருக்க முடிந்தது’ என்றார்.
‘இந்தப் போட்டியின் போது அடுத்தடுத்து ஒவ்வொரு
முறையும் ஒரேமாதிரியாகவே இருந்தது. சரியான தூக்கம் இல்லாததால் இரண்டு செட்டுகளுக்குப்
பிறகு எனது ஆற்றல் குறைந்தது. குறைந்து கொண்டே வந்தது. எளிதாக வெற்றி பெற முடிந்த நிலையில்
சில நேரங்களில் அது கடினமாகி விட்டதை என்னுடைய தவறு என்றே சொல்ல வேண்டும். உடலுக்குச்
சிரமம் ஏற்பட்டது என்றாலும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்றே குறைந்த பட்சம் உணர்கிறேன்... இன்னும் வலுவான தொடக்கத்துடன்- இந்த
சீசனின் அடுத்த கட்டத்திற்குத் தயாராகவே இருக்கிறேன்’ என்று மெட்வடேவ் தன்னுடைய உடல்நிலை
குறித்து கருத்து தெரிவித்தார்.
போட்டிகளின் போது எதிராளிகள் அடிக்கின்ற பந்துகளைச் சிறப்பான முறையில் மைதானத்தின் பின்பகுதியிலிருந்து
எதிர்கொண்டு விளையாடுவதே மெட்வெடேவின் வழக்கம். ஞாயிற்றுக்கிழமை
இறுதிப் போட்டியில் மிகவும் ஆக்ரோஷமான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் குறிப்பாக
முதல் இரண்டு செட்களில் இருபத்திமூன்று வின்னர்களை அடித்திருந்தார். சின்னருடனான மோதலில்
தன்னுடைய
உத்தியை மாற்றியதன் பின்னணியில் தனது உடல் நிலையும் காரணமாக
இருந்தது என்று மெட்வடேவ் கூறினார்.
‘என்னுடைய உடல் நிலைதான் என்னை அவ்வாறு முடிவு செய்ய
வைத்தது. அதிக முறை பந்துகளைத் திருப்பி அனுப்பி என்னால் விளையாட முடியாது என்பது எனக்குத்
தெரியும். ஆனால் ஜானிக்கால் அது முடிந்ததால் தொடர்ந்து அவரால் போட்டியில் இருக்க முடிந்தது.
பயிற்சியாளரின் உதவியுடன் உடல்ரீதியாக நூறு சதவிகிதம் புத்துணர்ச்சியுடன் இருந்திருப்பேன்
என்றால், என்னால் அதிகமுறை பந்துகளைத் திருப்பி அனுப்ப முடியும் என்பதை போட்டிக்கு
முன்பே முடிவு செய்து, உடல் ரீதியாக யார் வலிமையானவர் என்பதைப் போட்டியின் போது பார்த்துக்
கொண்டிருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு நான் அவ்வாறு இல்லை என்பது எனக்குத் தெரியும்.
எனவே முடிந்தவரை பந்துகளைத் திரும்பப் பெறுவதை சுருக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. விளையாட்டு இன்னும் நீளப் போகிறது
என்று எனக்குத் தெரியும். ஆனால் முடிந்தவரை புள்ளிகளைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அவரது நேரத்தை எடுத்துக் கொள்வது நன்றாகவே வேலை செய்தது. உண்மையைச் சொல்வதென்றால் கடைசி
வரை அது நன்றாக வேலை செய்தது என்றே நினைக்கிறேன்’ என்று மெட்வெடேவ் கூறினார்.
Comments