கனவு காண்பதை நிறுத்திக் கொண்ட குழந்தை - ரஷிய டென்னிஸ் வீரர் டேனியல் மெட்வெடேவ்

 ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ்

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ரசிகர்களால் இழிவுபடுத்தப்பட்டேன் என்று கூறிய டேனியல் மெட்வெடேவ்,  எதிர்காலத்தில் தனக்காகவும், தனது நண்பர்கள், குடும்பத்தினர், நாட்டிற்காக மட்டுமே விளையாடுவேன் என்று அறிவித்தார். ‘எனக்கு ஆதரவாக இருக்கின்ற கூட்டத்தின் முன்பாக ரஷ்யாவில் விளையாடுவதற்காக பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் விளையாடுவதைக்கூட நான் கைவிடுவேன்’ என்றும் அப்போது அவர் கூறினார்.  

மெட்வெடேவ்-ரஃபேல் நடால் இடையிலே நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் மெட்வெடேவ் 2-0 என்று இரண்டு செட்கள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார். ஆனால் நடாலுக்கு ஆதரவாக இருந்த ராட் லாவர் அரினா கூட்டத்தின் முன்பு இறுதியில் அவர் தோல்வியையே சந்தித்தார். 2022 ஆஸ்திரேலிய ஓபன் போட்டி முழுவதுமே பல சந்தர்ப்பங்களில் மெட்வெடேவ் கூட்டத்துடன் மோதியிருந்தார். விளையாட்டரங்கில் கூடியிருந்தவர்கள்  ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த இறுதிப் போட்டி முழுவதும் மெட்வெடேவின் தவறுகளை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர், பல கட்டங்களில் தன்னை அவர்கள் உற்சாகமிழக்க வைத்தனர் என்று அவர் குறை கூறினார். 

உலக அளவில் இரண்டாவது தரவரிசையில் உள்ள மெட்வெடேவ் வெற்றிக் கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையின் போது ​​கூட்டத்தை மறைமுகமாகத் தாக்கினார். அதற்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பை டென்னிஸ் நட்சத்திரம் என்ற தன்னுடைய பயணத்தைப் பற்றிய நீண்ட கதையுடன் மெட்வெடேவ் தொடங்கினார். தனக்கு எதிராக இருந்த ஆஸ்திரேலிய ஓபன் கூட்டத்திடமிருந்து கிடைத்த அனுபவத்திற்குப் பிறகு சிறுவயதிலிருந்தே தன்னிடமிருந்து வருகின்ற டென்னிஸ் கனவின் ஒரு பகுதி மரணித்து விட்டதாக இருபத்தைந்து வயதாகும் மெட்வெடேவ் கூறினார்.  

 

செய்தியாளர் சந்திப்பில் நடந்த உரையாடல்


நெறியாளர்: இன்றிரவு நேரம் குறைவாகவே இருக்கிறது… மிகவும் தாமதமாகி விட்டது. துரதிர்ஷ்டம் டேனியல். இந்த தோல்வியைப் பகுப்பாய்வு செய்து பார்ப்பது கடினம் என்றே நினைக்கிறேன். போட்டியின் போது எல்லாவற்றையுமே நீங்கள் வித்தியாசமாகச் செய்து பார்த்தீர்களா? அதுகுறித்து உங்கள் பயிற்சியாளருடன் விவாதித்தீர்களா?   

டேனியல் மெட்வெடேவ்: உண்மையில் வித்தியாசமாக கொஞ்சம் செய்து பார்த்தேன். புது வகை செய்தியாளர் சந்திப்பாக இது இருக்கும் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் முக்கியமானவற்றை மட்டுமே கொண்டு இதை நான் தொடங்கப் போகிறேன். அது சுருக்கமாக இருக்குமா அல்லது மிகவும் நீண்டிருக்குமா என்று எனக்குத் தெரியாது. சுருக்கமாகச் சொல்ல முயற்சி செய்கிறேன். டென்னிஸில் பெரிய விஷயங்களைப் பற்றி கனவு கண்ட சிறு குழந்தையின் கதையை...   

ஆறு வயதில் டென்னிஸ் ராக்கெட்டைக் கையில் எடுத்தேன். ​​ நேரம் வேகமாகச் சென்றது. பன்னிரண்டு வயதாக இருந்தபோது ​​பயிற்சிகளை மேற்கொண்டேன். சில ரஷ்ய போட்டிகளில் விளையாடினேன். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளை, பெரிய நட்சத்திரங்கள் விளையாடியதை, ரசிகர்கள் அந்த நட்சத்திரங்களுக்கு ஆதரவளித்ததை டிவியில் பார்த்த நான் அங்கே நானும் இருக்க வேண்டும் என்று கனவு காணத் துவங்கினேன்.   

பின்னர் சில ஐரோப்பிய டென்னிஸ் போட்டிகளில் விளையாடத் தொடங்கினேன். யூத் ஒலிம்பிக் விளையாட்டுகளை விளையாடியது என்னுடைய நினைவில் உள்ளது. அது யூத் ஒலிம்பிக் விழா அல்லது வேறு ஏதோ பெயரில் இருந்தது என்று நினைக்கிறேன். அங்கே இறுதிப் போட்டிக்கு வந்தேன். அது அருமையாக இருந்தது. எங்களுக்கு நடு கோர்ட் ஒதுக்கப்பட்டிருந்தது. அது துருக்கியில் நடந்தது. அங்கே ஓராயிரம் பேர் இருந்திருக்கலாம். இரண்டாயிரம் பேர் என்றும் கூறலாம். அங்கே இருப்பது மிகவும் அருமையாக இருந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. அது தான் அடைய வேண்டும் என்று ஒருவர் கனவு காணும் தருணம்... ஆம், மிகப் பெரிய உயரத்தை அடைவது…  

 

ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடுவதுதான் ஒவ்வொரு ஜூனியருக்கும் பெருமை. அங்கேதான் தங்களிடம் சாதகமாக உள்ளவற்றைப் பார்க்க முடியும். யுஎஸ் ஓபனில் கலந்து கொள்பவர்களுடன் உணவகத்தில் சாப்பிடலாம். அது போன்ற சிறிய விஷயங்கள் கிடைக்கும். யார் என்று உங்களைத் தெரிந்திருக்காவிட்டாலும் கூட, உங்களுக்கு ஆதரவளிப்பதற்கு ஆட்கள் வருவார்கள். ஜூனியர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் இருப்பார்கள். உண்மையில் அது அருமையான தருணம்… எவரும் விரும்பும் தருணம் அது… உலகின் மிகச் சிறந்த நபர்களுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பைத் தருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இருக்க வேண்டுமென்று நான் விரும்பினேன்.    

யுஎஸ் ஓபனுக்குச் சென்றிருந்த போது, ​​ஜான் இஸ்னர் என்னைக் கடந்து செல்வதைப் பார்த்தது எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது. ஓ… அவர் மிகவும் ஆஜானுபாகான ஆளாக இருந்தார்… டிவியில் பார்ப்பதைக் காட்டிலும் பெரிய ஆளாக இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். அது உண்மையிலேயே இனிமையான தருணம்.    

மிகப் பெரிய போட்டிகளில் விளையாடத் தொடங்கும் போது எதிர்காலத்தில் விளையாடப் போகிறவர்கள், உங்களுக்குச் சவாலாக இருப்பவர்கள் என்று  ஏராளமானோர் உங்கள் வழியில் வர முயற்சி செய்வார்கள். எனது வாழ்க்கையில் அதுபோன்ற பெரிய விஷயங்களைப் பற்றி தொடர்ந்து கனவு காண வேண்டுமா, வேண்டாமா என்று இந்தக் குழந்தை சந்தேகப்பட்ட சில தருணங்களும் உள்ளன.  

எனக்கு ஒன்று நன்றாக நினைவிலிருக்கிறது. ரோலண்ட் கரோஸில் இரண்டு முறை மிகவும் கடினமான போட்டிகளில் தோற்றுப் போனேன். நான் பிரெஞ்சு பேசுவேன். அந்த தோல்வி என்னுடைய வயதில் மோசமானதல்ல என்று முதல் ஐவரில் நான் இருக்கின்ற இந்த தருணத்தில் உணர்கிறேன். நம்மிடம் மிகப் பெரிய தலைமுறை உள்ளது. ஏராளமான திறமையுடன் உள்ள டாப்-10 வீரர்களை உங்களால் இப்போது காண முடியும்.  

இப்போது முதல் நூறு பேரில் ஒருவராக இருக்கின்ற பெஞ்சமின் போன்சியிடம் நான் தோற்றது எனக்கு நினைவிலிருக்கிறது. என்னைத் தவறாக நினைக்கவில்லை என்றால், அந்த அறையில் ரஷ்ய பத்திரிகையாளர் ஒருவர் இருந்தார். உண்மையில் நான் அதுபோன்று எப்படி இருந்தேன்? அது ஒரு கிராண்ட்ஸ்லாம். அப்போது நான் முதல் ஐம்பது இடங்களுக்கு அருகில் இருந்தேன் என்று நினைக்கிறேன். உண்மையில் அது ஆச்சரியமாக இருக்கிறது. ரஷ்யப் பத்திரிகையாளருடன் - நாங்கள் ஐந்து நிமிடங்கள் பேசினோம். பத்திரிகையாளர்களிடம் பேசுவது எனக்குப் பிடிக்கும்.   

பியர்-ஹியூஸ் ஹெர்பர்ட்டிடம் ஏற்பட்ட கடினமான தோல்வி நன்றாக நினைவிலிருக்கிறது. நான் 2-0 என முன்னிலை பெற்றிருந்தேன். அது உண்மையிலேயே அற்புதமான போட்டி. அவர் அற்புதமாக விளையாடினார். அதுபோன்ற போட்டிகள் எனக்குப் பிடிக்கும். அதனாலேயே டென்னிஸ் எனக்குப் பிடிக்கும்.

முதல் பத்து இடங்களுக்குள் வருகின்ற இடத்தில் நான் இருந்தேன். என்னுடைய அந்த வயதில் நான் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது அநேகமாக ஸ்வெரெவ்வாக இருக்கலாம். ஒருவேளை முதல் இருவராக இருக்கலாம் - நிச்சயமாக டொமினிக். ஆனால் அவர் கொஞ்சம் வயதானவர்.   

அப்போது பத்திரிகையாளர் சந்திப்பிற்கு வந்தேன். நான் கொஞ்சம் - ஆமாம், ரசிகர்கள் மற்றும் அனைத்து விஷயங்கள் குறித்தும் விரக்தியடைந்திருந்தேன். அந்தச் சந்திப்பைச் சுருக்கமாக வைத்துக் கொள்ள விரும்பியதால் அது வேடிக்கையாக இருந்தது. இரண்டு வார்த்தைகளில் அல்லது அதுபோன்று ஏதாவது பதில் சொல்லவே விரும்பினேன். பத்திரிகையாளர் ஒருவர் அங்கே இருந்தார். அவர் இத்தாலியன் என்று நினைக்கிறேன். அவர் என்னிடம் ஏதோ கேட்டார். இரண்டு வார்த்தைகளில் நான் அவருக்குப் பதிலளித்தேன். அதற்குப் பிறகு கேள்விகள் எதுவும் எழவில்லை. சில ரஷ்யர்கள் அங்கே இருந்தார்கள். அவர்கள் என்னிடம் சில விஷயங்களை கேட்டார்கள். பெரும் கனவுகளைத் தொடர வேண்டுமா என்று சந்தேகம் கொண்டதாகவே அப்போது அந்தக் குழந்தை இருந்தது.     

அது ஏன் என்பதை நான் விளக்கப் போவதில்லை. ஆனால் இன்று போட்டியின் போது நான் டென்னிஸ் விளையாடப் போகிறேன் என்பதைப் புரிந்து கொண்டேன். அது வேடிக்கையாக இருந்தது. பத்திரிகையாளர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். உங்களுடன் பேசுவதை நான் மிகவும் விரும்புகிறேன். நீங்கள் அதைப் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இப்போது அது முக்கியமானதல்ல. இப்போது அந்தக் குழந்தை கனவு காண்பதை நிறுத்திய சில தருணங்களைப் பற்றியே நான் பேசுகிறேன். இன்றும் அதுபோன்றதொரு தருணமாகி இருக்கிறது. அது ஏன் என்று நான் இங்கே சொல்லப் போவதில்லை.   

இனிமேல் எனக்காகவும், என் குடும்பத்திற்காகவும், என் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்காகவும் - நிச்சயமாக அனைத்து ரஷ்யர்களுக்காகவும் நான் விளையாடப் போகிறேன். என்னை அவர்கள் நிறைய ஆதரிப்பதாக நான் உணர்கின்றேன்.     

அதை இப்படிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ரோலண்ட் கரோஸ் அல்லது விம்பிள்டனுக்கு முன்பாக -  விம்பிள்டன் அல்லது ரோலண்ட் கரோஸ் அல்லது வேறு எங்கு செல்வதைத் தவறவிட்டாலும் மாஸ்கோவில் ஹார்ட் கோர்ட்டுகளில் போட்டிகள் நடந்தால் நிச்சயம் நான் அங்கே சென்று விளையாடுவேன். கனவு காண்பதை அந்தக் குழந்தை இப்போது நிறுத்திக் கொண்டது. இனிமேல் அது தனக்காக விளையாடப் போகிறது. அவ்வளவுதான். இதுதான் என்னுடைய கதை. கேட்டதற்கு மிகவும் நன்றி நண்பர்களே.   

இப்போது நாம் டென்னிஸ் அல்லது வேறு எதையும் குறித்த கேள்விகளுக்குச் செல்லலாம்.

அறையில் கேள்விகள் ஏதேனும் எழுந்தனவா?

அது பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை (சிரிக்கிறார்).

டேனியல், உங்களுடைய சாதனைக்கு வாழ்த்துகள்.

மிக்க நன்றி கிரேக்.

இப்போது உங்கள் உணர்வுகள் எவ்வாறு இருக்கின்றன? வெளிப்படையாக நீங்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளீர்கள். ஓரிரு நாட்களுக்குப் பிறகும் இப்போது நடந்திருப்பதையே நீங்கள் தொடரப்  போகிறீர்களா?   

டென்னிஸ் பற்றி பேசினால் அந்த அளவிற்கு நான் ஏமாற்றமடையவில்லை. இது மிகப் பெரிய போட்டி. வெற்றி பெற வேண்டுமென்றால் நிச்சயமாக சில சிறிய பாயிண்டுகளில், சிறிய விவரங்களில் நான் இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டும். ஆனால் அதுதான் டென்னிஸ். அதுதான் வாழ்க்கை.   

இது மிகப் பெரிய போட்டியாக இருந்தது. ரஃபா நம்ப முடியாத வகையிலே விளையாடினார். அவர் தனது நிலையை உயர்த்திக் கொண்டார். இரண்டு செட்களில் 2-0 என்று முன்னணியில் இருந்த போது ‘கமான் அவருடன் போராடு, இன்னும் அதிகமாகப் போராடு’ என்ற உணர்வுடனே நான் இருந்தேன்.   

ஐந்தாவது செட்டில் அவரைக் கடுமையாக முயற்சி செய்ய வைத்ததாகவே நினைக்கிறேன். ஆனாலும் அவர் நம்ப முடியாத வகையில் விளையாடினார். மிகவும் வலுவுடன் இருந்தார். நான்கு மணி நேரம் அவர் விளையாடிய விதம் குறித்து அப்போது உண்மையில் நான் ஆச்சரியப்பட்டேன். ஆனாலும் ரஃபா எப்படி விளையாடுவார் என்பது நமக்குத் தெரியும். ஆறு மாதங்களாக அவர் விளையாடவே இல்லை. போட்டிக்குப் பிறகு அவர் என்னிடம், தான் அதிகம் பயிற்சி செய்யவில்லை என்று சொன்னார். அது நம்ப முடியாதவாறே இருந்தது.    

டென்னிஸ் பற்றி பேசுகின்ற போது, என்னிடம் அதிகம் வருத்தமில்லை. என்னால் முடிந்ததை சிறப்பாகத் தொடர முயற்சி செய்வேன். ஆமாம், இன்னும் கடினமாக நான் உழைக்கப் போகிறேன். ஒரு நாள் இந்த சிறந்த போட்டிகள் சிலவற்றில் சாம்பியனாக இருக்க முயற்சிப்பேன்.

உண்மையில் இன்று இந்த தோல்வி, என்னுடைய டென்னிஸ் அல்லது அது போன்ற எது குறித்தும் நான் ஏமாற்றமடைந்தவனாக இல்லை.     

இதுதான் அந்தக் கூட்டத்திடமிருந்து உங்களுக்கு கிடைத்ததா?

அது பற்றிய கேள்விகளுக்கு நான் பதிலளிக்கப் போவதில்லை, மன்னிக்கவும் (சிரிக்கிறார்).

நீங்கள் கோர்ட்டிற்கு வருகிறீர்கள் - மக்கள் கூச்சலிடுவதைக் கேட்கிறீர்கள்.  

நான் மிகச் சிறிய எடுத்துக்காட்டைச் சொல்கிறேன். ஐந்தாவது செட்டில் கூட ரஃபா சர்வீஸ் செய்வதற்கு முன்பாக யாரோ ஒருவர் கமான் டேனியல் என்று கத்தியதைக் கேட்ட நான் ஆச்சரியப்பட்டேன். ஆயிரம் பேர் ட்ஸ்ஸ்ஸ், ட்ஸ்ஸ்ஸ், ட்ஸ்ஸ்ஸ் என்று ஒலியெழுப்பினார்கள். எனது செர்விற்கு முன்பாக அதுபோன்ற சப்தத்தை அவர்கள் எழுப்பினார்கள். நான் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. உண்மையில் அது ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது. அது அவமரியாதை செய்வதாக, ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு டென்னிஸ் விளையாட விரும்புவேனா என்று எனக்குத் தெரியவில்லை.  

(மைக்ரோஃபோன் வேலை செய்யவில்லை)

ஆம்… அது என்னைச் சுற்றியுள்ளவர்கள், அவர்கள் என்னிடம் என்ன சொல்லப் போகிறார்கள், இந்த பயணத்தில் எப்படி ஒன்றாகச் செல்லப் போகிறோம் என்பதைப் பொறுத்தது.

கனவு கண்ட அந்தக் குழந்தை இன்றைக்குப் பிறகு எனக்குள் இல்லை என்பதை மீண்டும் சொல்கிறேன். இவ்வாறாக இருக்கின்ற போது டென்னிஸைத் தொடர்வது மிகவும் கடினமாகவே இருக்கும்.

மூன்றாவது செட்டில் டிரிபிள் பிரேக் பாயிண்ட்டைப் பெற்றிருந்த போதும், ஒப்பீட்டளவில் இந்தப் போட்டியில் மிகவும் எளிதாக வெற்றியை நீங்கள் நெருங்கி விட்டதாகத் தோன்றிய போது உங்கள் ஆட்டத்தில் அல்லது உங்கள் எண்ணத்தில் என்ன மாற்றம் ஏற்பட்டது?

ஆம், டிரிபிள் பிரேக் பாயிண்ட் பெற்றது அருமையான தருணமாகவே இருந்தது. உண்மையில் அவையனைத்தும் எனக்கு விவரமாக நினைவில் இல்லை. நான் செய்த அந்த மூன்று ரிட்டர்ன்களும் எனக்கு நினைவிலிருக்கின்றன. அவை கொஞ்சம் நெருக்கமாகவே இருந்தன. ஆனால் மீண்டும் சொல்வேன் - அதுதான் டென்னிஸ்… நான் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். அதில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்படியென்றால் ஒருவேளை போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கலாம்.  

உத்தியாக எதையும் நான் மாற்றிக் கொள்ளவில்லை. நான் சரியாக விளையாடுவதாகவே உணர்ந்தேன். ஆனால் ரஃபா முன்னேறினார். உடல்ரீதியாக கொஞ்சம் மேலும், கீழுமாக இருந்தேன் என்றாலும் இன்று அவர் உடல்ரீதியாக என்னை விட வலிமையுடன் இருந்தார். மூன்றாவது செட் ஆரம்பத்திலிருந்தே அவரது சில ஷாட்கள் மற்றும் பாயிண்டுகள் நான் கொஞ்சம் பின்வாங்கிக் கொள்ளும் வகையிலேயே இருந்தன அதை. அப்படித்தான் சொல்ல வேண்டும். ரஃபா அந்த தருணங்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.    

ஆனாலும்… ஆம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.

உங்களின் இந்த போட்டிக்கு வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி.

இன்றிரவு நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்? நீங்கள் சொன்ன கதை இன்றிரவுக்கு முன்பாகவே நீங்கள் உணர்ந்திருந்ததா அல்லது இன்றிரவைப் பற்றியதாக மட்டுமே அது உள்ளதா?  

நான் சொன்னதைப் போல, என் கேரியரில் சில தருணங்களுக்கேற்றவாறு என்னை மாற்றியமைக்க முடிந்திருக்கிறது. என்னுடைய கதையில் அந்தக் குழந்தையைப் பற்றி சொல்ல மறந்து விட்டேன்.

டாப் 20, டாப் 30 என்று கொஞ்சம் கொஞ்சமாக நான் உயர ஆரம்பித்த போதுரோஜர், நோவக், ரஃபா ஆகியோருக்கு எதிராக விளையாட ஆரம்பித்தேன். எங்களுக்கிடையே சில கடினமான போட்டிகள் நடந்தன. நான் இன்னும் அவர்களை வெல்லவில்லை. அப்போதும் ஏராளமான பேச்சுகள் இருந்தன. இப்போது இருப்பதைப் போல அவ்வளவாக அப்போது இருந்ததாக நான் நினைக்கவில்லை என்றாலும் நிறைய பேச்சுகள் இருக்கவே செய்தன. ஆனால் இளைய தலைமுறை சிறப்பாகச் செய்ய வேண்டும், இளைஞர்கள் வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும், சிறப்பாக இருக்க வேண்டும், வலிமையுடன் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புவதைப் போன்றதாகவே அந்தப் பேச்சுகள் இருந்தது நினைவில் உள்ளது.  அது எனக்கு உந்துதலை அளித்த மாதிரி உணர்ந்தேன். ஆமாம், அவர்களுக்கு கடினமான நேரத்தைக் கொடுக்க முயற்சி செய்யலாம் என்ற எண்ணம் என்னிடமிருந்தது. 

ஆனால் மக்கள் பொய் சொல்கிறார்கள் என்றே நினைக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் பெரிய போட்டிகளில் ஒவ்வொரு முறை நான் கோர்ட்டில் அடியெடுத்து வைக்கும் போது, ​​நான் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகின்றவர்களை அதிகமாக என்னால் பார்க்க முடியவில்லை.  

இது இன்றிரவால் மட்டும் நடந்ததல்ல; படிப்படியாக உருவானது என்று சொல்லலாமா?

ஆம். இது படிப்படியாக வந்ததுதான். ஆனால் இன்றிரவு (தெளிவாக இல்லை), அல்லது அதை எப்படிச் சொல்வது… மலையின் உச்சியை அடைந்ததைப் போன்றுள்ளது.

இது உங்களுடைய தேசம் குறித்ததா அல்லது நீங்கள் இளையவர், அவ்வளவாக நன்கு அறியப்படாதவர் என்பதாலா?

நான் எந்த தேசம் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது என்றே நினைக்கிறேன். ரஷ்ய டென்னிஸ் சிறிது காலம் வீழ்ந்திருந்தது. நான் ஏராளமாக முயற்சி செய்து வருவதாகவே நினைக்கிறேன். ரஷ்யாவில் இப்போது டென்னிஸ் பற்றி நிறைய பேச்சுகள் இருப்பதை உணர்கிறேன். என்னுடன் ஆண்ட்ரி, கரேன், அஸ்லான் போன்றவர்களும் நன்றாக விளையாடி வருகிறார்கள். அருமை. எங்களுக்காக இன்னும் பலரை விளையாட வைக்க முயற்சி செய்ய முடியும் என்று நம்புகிறோம்.  

மற்ற நாட்டில் யாருடனாவது விளையாடும் போது, ​​அவர்கள் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள். ரஷ்யன் அல்லது அதுபோன்ற ஏதாவது ஒன்றிற்காக அல்ல என்றே என்னால் நிச்சயமாகப் பார்க்க முடிகிறது.  

அன்று நோவக் என்ன செய்வார் என்று நீங்களே கேட்டுக் கொண்டீர்கள். இன்று இரண்டு செட் பின்னால் இருந்த ரஃபா திரும்பி வந்ததைப் பார்க்கும் போது, ​​அந்த நிமிடத்திலிருந்து அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் கற்றுக் கொள்ள விரும்புவீர்களா?  

ரஃபா இடதுகை ஆட்டக்காரர். அடுத்த முறை நான் 2-0 என்று இரண்டு செட் பின் தங்கியிருக்கும் போது ‘உனக்கு எதிராக ரஃபா விளையாடியதைப் போல் விளையாடு’ என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன்.

இன்று அவர் விளையாடிய விதம், அதை நான் அவர் போராடினார் என்று சொல்ல விரும்பவில்லை. ரஃபா எப்போதும் போராடுவார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். திடீரென்று ரஃபா இன்று ஒரு ஸ்லாமின் இறுதிப் போட்டியில் போராடினார் என்று அதைச் சொன்னால் யாரும் ஆச்சரியப்படப் போவதில்லை.  

அனைத்து செட்களிலும், கடினமான தருணங்களில் கூட அவர் விளையாடிய விதம் அவரைப் பொறுத்தவரை வரலாற்றை உருவாக்குவதற்கான முயற்சியாகவே இருந்தது. அதைப் பற்றி சிந்திக்காமலே இருக்க அவர் முயற்சி செய்திருக்கிறார் என்றாலும் அது அவரது தலையில் எங்கோ இருந்து கொண்டே இருந்திருக்க வேண்டும்.

நான் அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டவனாக இருக்கின்றேன். ஆமாம், முடிந்தவரை முயற்சி செய்து விளையாடிய போது என்னை அவர் வென்றதில்  அவர் மீது மிகப்பெரிய மரியாதை கொண்டிருக்கிறேன். நான் உண்மையில் மிகவும் நன்றாகவே முயற்சி செய்தேன்.  

நன்றி நண்பர்களே.

 https://www.foxsports.com.au/tennis/australian-open-2022-daniil-medvedev-press-conference-loss-to-rafael-nadal-full-transcript-angry-at-crowd-rod-laver-arena/news-story/da08b88411473616f6f118b0258742d4

Comments