அருந்ததி ராய்
ஸ்க்ரோல் இணைய இதழ்
ஆங்கிலத்தில் வெளியான ஆசாதி - சுதந்திரம், பாசிசம், புனைகதை என்ற கட்டுரைத் தொகுப்பின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பிற்காக வாழ்நாள் சாதனைக்கான நாற்பத்தைந்தாவது ஐரோப்பிய கட்டுரை விருதை செப்டம்பர் 12 அன்று அருந்ததி ராய் பெற்றுக் கொண்டார்
2023ஆம் ஆண்டிற்கான
ஐரோப்பிய கட்டுரை விருதை வழங்கிப் பெருமைப்படுத்தியதற்காக சார்லஸ் வெய்லன் அறக்கட்டளைக்கு நன்றியைத்
தெரிவித்துக் கொள்கிறேன். இந்த
விருதைப் பெறுவதில் எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன் என்பது உடனடியாகத்
தெரியப் போவதில்லை. நான் அதீதப் பெருமிதம் கொள்வதற்கான சாத்தியமும் இருக்கிறது. அமைதிக்காக, கலாச்சாரம்
அல்லது கலாச்சார விடுதலைக்காக அல்லாமல் இந்த விருது இலக்கியத்திற்காக, என்னுடைய
எழுத்துகளுக்காக, கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நான் எழுதி வருகின்ற, எழுதிய
கட்டுரைகளுக்காக வழங்கப்பட்டிருப்பது கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
அவர்கள் படிப்படியாக இந்தியாவின்
சறுக்கலை (சிலர்
அதை ஏற்றம் என்று கருதினாலும்) முதலில் பெரும்பான்மைவாதமாக, பின்னர் முழுக்க
முழுக்கப் பாசிசமாக வளர்த்தெடுத்துள்ளனர். ஆம். தேர்தல்களை நாங்கள் தொடர்ந்து நடத்தி
வருகிறோம். நூற்றி நாற்பது கோடி மக்களிடையே ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் ஹிந்து
மேலாதிக்கக் கருத்துகள் நம்பகமான இடத்தைப் பெறுவதற்காகத் தொடர்ந்து பரப்பப்பட்டன.
அதன் விளைவாக தேர்தல் காலங்கள் கொலைகளை நிகழ்த்துவதற்கான, குறிப்பிட்ட பிரிவினரைத்
தூண்டுவதற்கான காலகட்டமாக, சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லீம்கள்,
கிறிஸ்தவர்களுக்கு மிகவும் ஆபத்தான நேரமாக அமைந்து விடுகின்றன.
இனிமேல் தலைவர்களைப் பார்த்து மட்டும் பயப்படாமல், மக்கள் அனைவரையும் பார்த்து நாங்கள் பயப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்போது எங்களுடைய தெருக்கள், வகுப்பறைகள் மற்றும் பல பொது இடங்களில் தீமையைச் சாதாரணமாக்குவது, தீமையை இயல்பாக்குவது போன்ற செயல்கள் வெளிப்படுகின்றன. பிரதான பத்திரிகைகள், நூற்றுக்கணக்கான இருபத்தி நான்கு மணி நேர செய்திச் சேனல்கள் பாசிச பெரும்பான்மைவாதத்திற்காகத் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. திட்டமிட்டு இந்திய அரசியலமைப்பு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் மாற்றி எழுதப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் தற்போதைய ஆட்சி மீண்டும் பெரும்பான்மையைப் பெறுமானால் புதிய அரசியலமைப்பைக் காண்பதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது.
அமெரிக்காவில்
ஜெர்ரிமாண்டரிங் என்றழைக்கப்படும்,
டிலிமிட்டேஷன் எனப்படும் தொகுதிகளை மறுசீரமைக்கும் செயல்முறை அதிக எண்ணிக்கையிலான
நாடாளுமன்றத் தொகுதிகளை வட இந்தியாவில் பாஜகவிற்கு அடிப்படைத் தளமாக இருக்கின்ற
ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு உருவாக்கித் தரப் போகிறது. தென் மாநிலங்களில் அது பெரும்
அதிருப்தியை ஏற்படுத்தப் போகிறது. அது இந்தியாவைப் பிரிக்கும் வாய்ப்பையும்
கொண்டிருக்கிறது. தேர்தல்
தோல்விகளுக்கான சாத்தியமில்லாத நிலையில் ஆழ்ந்து ஊடுருவியிருக்கும் இந்த மேலாதிக்க
நஞ்சு கண்காணிப்பு வேலைகளைச் செய்து வருகின்ற பொதுநிறுவனங்களை நீர்த்துப் போகச்
செய்திருக்கிறது. அடித்தளம் தகர்க்கப்பட்ட மிகவும் பலவீனமான உச்ச நீதிமன்றத்தைத் தவிர, கிட்டத்தட்ட வேறெந்த
நிறுவனமும் தற்போது உயிர்ப்புடன் காணப்படவில்லை.
வாழ்நாள் சாதனை விருது
என்பது ஒருவரை வயதானவராக உணர வைக்கும் என்பதை உங்களுக்குச் சொல்கின்ற அதே
நேரத்தில் மீண்டுமொரு முறை இந்த மதிப்புமிக்க விருதுக்காக, எனது பணிகளுக்குத்
தரபப்ட்டிருக்கும் அங்கீகாரத்திற்காக நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். அவ்வாறெல்லாம் தோன்றவில்லை
என்று பாசாங்கு செய்வதை நான் நிறுத்திக் கொள்ள வேண்டும். கடந்த இருபத்தைந்து
ஆண்டுகளாக நான் எந்தத் திசை நோக்கி
நாம்
சென்று கொண்டிருக்கின்றோம் என்பது குறித்த எச்சரிக்கைகளுடன் எழுதி வந்தவை பெரும்பாலும்
கவனிக்கப்படவில்லை. அதற்கு மாறாக தாராளவாதிகளால், தங்களை முற்போக்கானவர்கள் என்று
கருதிக் கொள்பவர்களால் என்னுடைய எழுத்துகள் கேலி செய்யப்பட்டும்,
விமர்சிக்கப்பட்டும் வந்திருக்கும் காரணத்தால் இந்த விருதைப் பெறுவது ஒருவகையில் கேலிக்கூத்தாகவே
இருக்கிறது.
அதுபோல எச்சரிப்பதற்கான காலமெல்லாம்
கடந்து விட்டது. இப்போது
வரலாற்றின் வேறொரு கட்டத்தில் இருக்கிறோம். ஓர் எழுத்தாளராக என்னுடைய எழுத்துகள் நாட்டின்
இந்த இருண்ட அத்தியாயத்திற்குச் சாட்சியாக இருக்கும் என்று மட்டுமே என்னால் நம்ப
முடியும். நடந்து கொண்டிருப்பவற்றை யாருமே ஏற்றுக் கொள்ளவில்லை என்ற நம்பிக்கையுடனே
என்னைப் போன்ற மற்றவர்களின் பணியும்
தொடர்கிறது.
கட்டுரை எழுத்தாளராக என்னுடைய
வாழ்க்கை திட்டமிடப்பட்டு நடந்ததில்லை. அது தானாகவே நடந்தது.
1997ஆம் ஆண்டு வெளியான
நாவலான ‘சின்ன விஷயங்களின் கடவுள்’ (தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்) எனது முதல் புத்தகமாகும். அந்த நாவல் வெளியான ஆண்டு பிரிட்டிஷ்
காலனித்துவத்திலிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்த ஐம்பதாவது ஆண்டாகும். பனிப்போர்
முடிந்து எட்டு ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில் ஆப்கன்-சோவியத் போரின்
இடிபாடுகளுக்குள் சோவியத் கம்யூனிசம் புதைந்து போயிருந்தது. அது முதலாளித்துவம்
போட்டியின்றி வெற்றி பெற்ற அமெரிக்க மேலாதிக்க ஒற்றைத் துருவ உலகின் ஆரம்ப காலமாகவும்
இருந்தது. அமெரிக்காவுடன் தன்னுடைய நிலைபாட்டை
மாற்றியமைத்துக் கொண்ட இந்தியா பெருநிறுவன மூலதனத்திற்குத் தனது சந்தைகளைத் திறந்து
வைத்திருந்தது.
தனியார்மயமாக்கல்,
கட்டமைப்பைச் சரிசெய்தல் போன்றவை தடையற்ற சந்தைக்கான கீதமாக இருந்தன. தனக்கான இடத்தை இந்தியா உயர்ந்த இடத்தில் பிடித்துக் கொண்டது. பாஜக தலைமையிலான ஹிந்து
தேசியவாத அரசு 1998ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தது. அந்த ஆட்சி முதல் காரியமாக அணு
ஆயுதச் சோதனைகளை மேற்கொண்டது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட
பெரும்பாலானவர்கள் மிக மோசமான, பேரினவாத தேசியவாத மொழியில் அவர்களுக்கு
வரவேற்பளித்தனர்.
பொதுவெளியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய உரைகளுக்கான பொருள் திடீரெனப் பெரும் மாற்றம்
அடைந்தது.
அந்த நேரத்தில் எனது
நாவலுக்கு புக்கர் விருது கிடைத்தது. ஆக்ரோஷமான அந்தப் புதிய இந்தியாவிற்கான
கலாச்சாரத் தூதர்களில் ஒருவராக தவறுதலாக நான்
நடிக்க வைக்கப்பட்டேன். முக்கிய
பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் இடம் பிடித்துக் கொண்டேன். எந்தவொரு கருத்தையும்
சொல்லவில்லை என்றாலும் - அவற்றை நான் ஒப்புக் கொண்டதாகவே கருதப்படும் என்பதை நான்
அறிந்து கொண்டேன். பேசாமல் அமைதியாக
இருப்பதுவும் பேசுவதைப் போல ஓர் அரசியல் என்பதை அப்போது புரிந்து கொண்டேன். நான் பேசினால், இலக்கிய
உலகின் தேவதை-இளவரசியாக இருந்த எனது வாழ்க்கையின் முடிவாகவே அது இருக்கும் என்பதையும்
என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்கும் மேலாக விளைவுகளைப் பொருட்படுத்தாமல்
நான் நம்பியவற்றைப் பற்றி எதுவும் எழுதவில்லையென்றால், நானே என்னுடைய மோசமான
எதிரியாகி விடுவேன் என்பதையும், ஒருவேளை மீண்டும் எழுதவே மாட்டேன் என்பதையும்
புரிந்து கொண்டேன்.
ஆக என்னுடைய எழுத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே
நான் எழுதினேன். எனது
முதல் கட்டுரையான ‘கற்பனையின் முடிவு’ (தி எண்ட்
ஆஃப் இமேஜினேஷன்) ஒரே
நேரத்தில் அவுட்லுக், ஃப்ரண்ட்லைன் என்று இரண்டு
பெரிய வெகுஜனப் பத்திரிகைகளில் வெளியானது . உடனடியாக தேசத்துரோகி, தேசவிரோதி என்ற முத்திரை என் மீது குத்தப்பட்டது.
அந்த அவமானங்கள் அனைத்தையும் புக்கர் விருதிற்கு எந்த விதத்திலும் குறைவில்லாத
மதிப்புமிக்க விருதுகளாகவே நான் ஏற்றுக் கொண்டேன். அதுவே என்னை அணைகள், ஆறுகள், இடப்பெயர்வு,
சாதி, சுரங்கம், உள்நாட்டுப் போர் என்று என்னுடைய புரிதலை விரிவுபடுத்திய
நீண்டதொரு எழுத்துப் பயணத்தில் பயணிக்குமாறு தூண்டியது. மேலும் எனது புனைகதை
மற்றும் புனைகதையற்ற எழுத்துகளைப் பிரித்துப் பார்க்க முடியாத வழிகளில் அது பிணைத்தும்
வைத்தது.
முதன்முதலாகக் கட்டுரைகள் வெளியிடப்பட்டபோது (முதலில்
வெகுஜனப் பத்திரிகைகளிலும், பின்னர் இணையத்திலும், இறுதியில் புத்தகங்களாகவும்) அவை
குறைந்தபட்சம் சில பகுதிகளில், பெரும்பாலும் அரசியலுடன் உடன்படாதவர்களால் பலத்த
சந்தேகத்துடன் பார்க்கப்பட்டன. வழக்கமாக இலக்கியம் என்று கருதப்படுகின்ற கோணத்தில்
என்னுடைய எழுத்து அமைந்திருந்தது. துண்டுப்பிரசுரம் அல்லது விவாதம், கல்வியியல் அல்லது
பத்திரிகை எழுத்து, பயணக்கட்டுரை அல்லது வெறும் இலக்கிய சாகசம் என்று என்ன வகையான
எழுத்து என்பதைச் சரியாகத் தீர்மானிக்க முடியாத, வகைபிரித்தல்-சார்ந்தவர்களிடம் எழுந்த எதிர்வினையானது, புண்படுத்துகின்ற வகையில் என்னுடைய
எழுத்து இருப்பதாக அவர்களால் புரிந்துகொள்ளக்
கூடிய வகையிலேயே இருந்தது.
‘ஓ, எழுதுவதை நீங்கள் ஏன் நிறுத்தி
விட்டீர்கள்? உங்களுடைய
அடுத்த புத்தகத்திற்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்’ என்ற சிலர் அதனை
எழுத்தாகவே கருதவில்லை. மற்றவர்கள்
நான் வெறுமனே கூலிக்காக பேனா பிடித்திருக்கிறேன் என்று கற்பனை செய்து கொண்டார்கள். அனைத்து விதமான
வேண்டுகோள்களும் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டன: ‘அன்புக்குரியவரே, அணைகள் பற்றி
நீங்கள் எழுதிய அந்தக் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, குழந்தைகளைத் தவறாக நடத்துவது தொடர்பான கட்டுரை ஒன்றை எனக்காக உங்களால்
எழுத முடியுமா?’ (இது உண்மையில் நடந்தது) நான் எவ்வாறு எழுத வேண்டும், நான் எழுத
வேண்டிய தலைப்புகள், என்னுடைய எழுத்துகளில் இருக்க வேண்டிய தொனி ஆகியவை பற்றி
(பெரும்பாலும் உயர்சாதி ஆண்களால்) எனக்குச் சொல்லித் தரப்பட்டன.
என்னுடைய கட்டுரைகள் பிற
இந்திய மொழிகளில் மிக விரைவாக மொழிபெயர்க்கப்பட்டு, துண்டுப்பிரசுரங்களாக
அச்சிடப்பட்டு இலவசமாக காடுகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகள் மற்றும் தாக்குதலுக்கு உள்ளான
கிராமங்கள், பொய்களால் சோர்ந்து போன மாணவர்கள் பயில்கின்ற பல்கலைக்கழக வளாகங்களில்
விநியோகிக்கப்பட்டன. பரவி வருகின்ற நெருப்பால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட, முன்
வரிசையில் நின்று போராடிய அந்த வாசகர்களிடம் இலக்கியம் என்றால் என்ன என்பது பற்றி அல்லது
அது எவ்வாறாக இருக்க வேண்டும் என்பது பற்றி முற்றிலும் மாறுபட்ட கருத்தே இருந்தது.
இலக்கியத்திற்கான இடம்
எழுத்தாளர்களாலும், வாசகர்களாலும் கட்டமைக்கப்படுவதை அது எனக்குக் கற்பித்துக்
கொடுத்ததாலேயே நான் இங்கே அதைக் குறிப்பிடுகிறேன். சில வழிகளில் அது பலவீனமாக இருந்தாலும்,
அழிக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது. பாதுகாப்பு நமக்குத் தேவை என்பதால், உடைந்து
போனாலும் மீண்டும் அதை நாம் உருவாக்கிக் கொள்கிறோம். அனைத்து வகையான
பாதுகாப்பையும் அளிக்கின்ற, பாதுகாப்பான அடைக்கலத்தை உருவாக்கித் தருகின்ற
இலக்கியம் - மிகவும்
அவசியமான இலக்கியம் என்ற சிந்தனை எனக்கு மிகவும் பிடித்தமானது.
இந்தியாவில் இன்றைக்கு பெருநிறுவனங்களின்
விளம்பரங்களால் வாழ்ந்து வருகின்ற எந்தவொரு முக்கிய ஊடக நிறுவனமும் இது போன்ற
கட்டுரைகளை வெளியிடும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. கடந்த இருபது
ஆண்டுகளில் சுதந்திர சந்தை, பாசிசம், தாராள இதழியல் போன்றவையனைத்தும் ஒன்றிணைந்து எந்த
வகையிலும் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்ல முடியாத ஓரிடத்திற்குக் கொண்டு போய்ச்
சேர்த்துள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் இதை
விளக்குகின்ற வகையில் இரண்டு விஷயங்கள் நடந்தன. பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் ‘இந்தியா: மோடி எனும்
பிரச்சனை’ என்ற
இரண்டு பகுதிகள் கொண்ட ஆவணப்படத்தை ஒளிபரப்பியது. சில நாட்களுக்குப் பிறகு குறுகிய விற்பனையில் (ஷார்ட்-செல்லிங்)
நிபுணத்துவம் பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்ற மிகச் சிறிய அமெரிக்க நிறுவனம்
ஹிண்டன்பெர்க் அறிக்கை என்று அறியப்படுகின்ற அறிக்கையை வெளியிட்டது. அதன் மூலம் இந்தியாவின்
மிகப்பெரிய நிறுவனமாகத் திகழும் அதானி குழுமம் செய்திருந்த அதிர்ச்சியூட்டும்
தவறுகளை அந்த நிறுவனம் விரிவாக அம்பலப்படுத்தியிருந்தது.
பிபிசி-ஹிண்டன்பர்க்
வெளியான தருணத்தை பிரதமர் நரேந்திர
மோடி மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், சமீப காலம் வரை உலகின்
மூன்றாவது பணக்காரராகவும் இருந்த கவுதம் அதானி என்ற இந்தியாவின் இரட்டைக்
கோபுரங்கள் மீதான தாக்குதல் என்றே இந்திய ஊடகங்கள் சித்தரித்தன. அவர்கள் இருவர் மீது
சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் விளங்கிக்
கொள்ள முடியாதவையாக இருக்கவில்லை. பிபிசி ஆவணப்படம் மிகப் பெரிய
அளவில் நடத்தப்பட்ட கொலைகளை மோடி தூண்டியதாகக் கூறியது. ஹிண்டன்பர்க் அறிக்கை ‘கார்ப்பரேட்
வரலாற்றில் மிகப்பெரிய மோசடியை’ அதானி செய்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியது. ஹிண்டன்பர்க் அறிக்கையை
மேலும் உறுதிப்படுத்துகின்ற வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல்
அறிக்கையிடல் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட குற்றவியல் ஆவணங்களின் அடிப்படையில்
எழுதப்பட்ட கட்டுரைகளை கார்டியன், பைனான்சியல் டைம்ஸ்
பத்திரிகைகள் ஆகஸ்ட் முப்பதாம் நாள் வெளியிட்டன.
இந்திய புலனாய்வு
அமைப்புகள், பெரும்பாலான இந்திய ஊடகங்கள் இந்த விவரங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொள்வது அல்லது அவற்றை
வெளியிடுவதற்கு இயலாத நிலையிலேயே இருந்தன. போலி அதிதேசியவாதம் நாட்டில் நிலவுகின்ற தற்போதைய
சூழலில் வெளிநாட்டு ஊடகங்கள் அவற்றைச் செய்யும் போது, அதனை இந்திய இறையாண்மை மீதான
தாக்குதலாகச் சித்தரிப்பது மிகவும் எளிதாக இருக்கிறது.
ஐம்பத்தொன்பது ஹிந்து
யாத்ரீகர்கள் உயிருடன் எரிந்து போகின்ற வகையில் ரயில் பெட்டி தீ வைத்துக்
கொளுத்தப்படதற்கு முஸ்லீம்களே காரணம் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, குஜராத்
மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற முஸ்லீம்-விரோதப் படுகொலைகளைப் பற்றி பிபிசி
ஆவணப்படத்தில் முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் படுகொலைகள்
நிகழ்த்தப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் மோடி குஜராத் மாநில முதலமைச்சராக
நியமிக்கப்பட்டிருந்தார் - அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. வெறுமனே அந்தப் படுகொலைகளைப்
பற்றி மட்டும் சொல்லாமல், அந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட சிலர் இந்தியாவின்
சிக்கலான சட்ட அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டு நீதியை, அரசியல் பொறுப்புணர்வை
எதிர்பார்த்து மேற்கொண்ட இருபதாண்டுக் காலப் பயணத்தையும் அந்த ஆவணப்படம் கூறியது.
உடல் உறுப்புகள்
துண்டிக்கப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் எஹ்சான்
ஜாஃப்ரி உட்பட ‘குல்பர்க் சொசைட்டி படுகொலையில்’ அறுபது பேர் ஒரு கும்பலால் படுகொலை
செய்யப்பட்டனர். பிபிசி ஆவணப்படத்தின் முதல் பகுதியில் தன்னுடைய குடும்பத்தில்
பத்து உறுப்பினர்கள் கொல்லப்பட்டதை அப்போது நேரடியாகப் பார்த்த இம்தியாஸ் பதானின்
சாட்சியம் இடம் பெற்றிருந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் மோடியின் அரசியல் எதிரியான இவர்
அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். அந்த நாட்களில் குஜராத்தில் இதேபோன்று நடந்த
கொடூரமான படுகொலைகளில் அந்தப் படுகொலையும் ஒன்றாகும்.
அப்போது நடத்தப்பட்ட மற்ற படுகொலைகளில்
- பத்தொன்பது வயதான பில்கிஸ் பானோ மீது நிகழ்த்தப்பட்ட கூட்டுப் பாலியல் பலாத்காரம்,
மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்பத்தைச் சார்ந்த பதினான்கு பேர் கொல்லப்பட்டது
பிபிசி ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கவில்லை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்
சுதந்திரதின நாளில் பெண்களுக்கான உரிமைகளின் முக்கியத்துவம் குறித்து மோடி நாட்டு
மக்களுக்கு உரையாற்றிய அதே நாளில் பில்கிஸ் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை
மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மோடி
அரசு பொதுமன்னிப்பு வழங்கியது. அவர்கள் அனவைருமே தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சிறைத்
தண்டனையில் பெரும்பகுதிக் காலத்தை பரோலில் சிறைக்கு வெளியே கழித்து வந்தவர்கள்.
அரசின் அந்த அறிவிப்பிற்குப் பின்னர் அவர்கள் அனைவரும் வெளியில் சுதந்திரமாகத்
திரியப் போகின்ற மனிதர்களாகினர். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியே வந்த
அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்போது சமூகத்தில்
மரியாதைக்குரிய உறுப்பினர்களாக அவர்கள் இருக்கின்றனர். பொது நிகழ்ச்சிகளில் கலந்து
கொள்ளும் அவர்கள் பாஜகவைச் சார்ந்த அரசியல்வாதிகளுடன் மேடையைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
அந்த பிபிசி ஆவணப்படம் இதுவரை
பொதுமக்களால் பார்க்கப்படாத, பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்தால் 2002ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் தயாரிக்கப்பட்ட
துறைசார்ந்த உள் அறிக்கையையும் ஆவணப்படுத்தியிருந்தது. குறைந்தபட்சம் இரண்டாயிரம்
பேர் கொல்லப்பட்டதாக உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை மதிப்பிட்டிருந்தது. அந்தப் படுகொலைகளை இனச் சுத்திகரிப்புக்கான அனைத்து
அடையாளங்களையும் கொண்டிருந்த முன் திட்டமிடப்பட்ட படுகொலை என்றும் அந்த அறிக்கை
கூறியது. தலையிடாது ஒதுங்கியிருக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டதாக
நம்பகமானவர்கள் தங்களிடம் தெரிவித்ததாகக் கூறிய அந்த அறிக்கை திட்டவட்டமாக மோடியின்
மீதே குற்றம் சுமத்தியது. குஜராத்
படுகொலைகளுக்குப் பிறகு முதலமைச்சர் மோடிக்கு விசா அளிக்க அமெரிக்கா மறுத்தது. தொடர்ந்து மூன்று
தேர்தல்களில் வெற்றி பெற்ற மோடி 2014ஆம் ஆண்டு வரை குஜராத் மாநிலத்தின்
முதலமைச்சராக இருந்தார். பிரதமரான பிறகே அமெரிக்கா விதித்திருந்த அந்தத் தடை விலக்கிக்
கொள்ளப்பட்டது.
பிபிசி ஆவணப்படத்துக்கு மோடி
அரசு தடை விதித்தது. அரசால்
விதிக்கப்பட்ட தடைக்கு இணங்கி அனைத்து சமூக ஊடக தளங்களும் அந்த ஆவணப்படத்திற்கான
இணைப்புகள், குறிப்புகளை அகற்றிக் கொண்டன. ஆவணப்படம் வெளியான சில வாரங்களுக்குள்ளாக
பிபிசி அலுவலகங்கள் காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, வருமானவரித்துறை
அதிகாரிகளால் பலத்த சோதனைக்குள்ளாகின.
பங்கு விலையை சட்ட விரோதமாகக் கையாண்டது,
வெளிநாட்டு ஷெல்
நிறுவனங்களைப் பயன்படுத்தி பட்டியலிடப்பட்ட முக்கியமான தன்னுடைய நிறுவனங்களின்
மதிப்பை செயற்கையாக மிகைப்படுத்தி நிகர சொத்து மதிப்பை உயர்த்தும் வகையில் மோசடியான
செயல்பாடுகளில் அதானி குழுமம் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை குற்றம் சாட்டியது.
மேலும் அது அதானியின் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களின் மதிப்பு எண்பத்தைந்து
சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்த்திக் காட்டப்பட்டதாகவும் கூறியது. மோடி, அதானி
இருவரும் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள். அவர்களுக்கு இடையில்
இருந்த நட்பு 2002ஆம் ஆண்டு குஜராத் படுகொலைகளுக்குப் பின்னர் வலுப் பெற்றது.
அந்த நேரத்தில் பழிவாங்குகின்ற நோக்கத்தில் இயங்கி வந்த ஹிந்துக் கும்பல்களால் குஜராத்தின் நகரங்கள் மற்றும் கிராமங்களின் தெருக்களில் முஸ்லீம்கள் மீது வெளிப்படையாக நடத்தப்பட்ட படுகொலைகள், பெருமளவிலான பாலியல் பலாத்காரங்களால் கார்ப்பரேட் இந்தியா உட்பட இந்தியாவின் பெரும்பகுதி பீதியில் உறைந்து போனது. கௌதம் அதானி மோடிக்குத் துணையாக நின்றார். குஜராத்தி தொழிலதிபர்கள் அடங்கிய சிறிய குழுவைக் கொண்டு அவர் வணிகர்களுக்கான புதிய தளத்தை உருவாக்கினார். மோடியை விமர்சிப்பவர்களை அவர்கள் கண்டனம் செய்தனர். ஹிந்து இதயங்களில் வீற்றிருக்கும் பேரரசராகத் தன்னுடைய புதிய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய மோடிக்கு அவர்கள் ஆதரவளித்தனர். கார்ப்பரேட் பணத்தால் தூண்டி விடப்பட்ட ஹிந்து தேசியவாத வன்முறையுடன் வளர்ச்சிக்கான குஜராத் மாடல் அப்போது பிறந்தது.
மூன்று முறை குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த மோடி 2014ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தில்லியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்கு அவர் அதானியின் பெயர் பொறிக்கப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் பறந்து சென்றார். மோடி ஆட்சியின் ஒன்பது ஆண்டு காலத்தில் அதானி உலகின் மிகப்பெரிய பணக்காரராக மாறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 800 கோடி டாலரிலிருந்து 13700 கோடி டாலர் என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. உலகில் தனக்கு அடுத்திருக்கும் ஒன்பது கோடீஸ்வரர்களின் மொத்த வருவாயைக் காட்டிலும் அதிகமாக 2022ஆம் ஆண்டில் மட்டும் அவர் 7200 கோடி டாலர் சம்பாதித்தார். இந்தியாவின் முப்பது சதவிகித சரக்குப் போக்குவரத்தைக் கையாண்டு வருகின்ற பத்துக்கும் மேற்பட்ட துறைமுகங்கள், இந்தியாவின் இருபத்தி மூன்று சதவிகித விமானப் பயணிகளைக் கையாளும் ஏழு விமான நிலையங்கள், இந்திய மொத்த தானிய அளவில் முப்பது சதவிகிதம் அளவிற்கு வைத்திருக்கும் கிடங்குகளை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்து அதானி குழுமம் இப்போது நடத்தி வருகிறது. மேலும் தனியார் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்ற மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களைத் தனக்கெனக் கொண்டு அந்தக் குழுமம் இயக்கி வருகிறது.
ஆம் - கௌதம் அதானி உலகின்
மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார், தேர்தல்களின் போது அவர்களால் வழங்கப்படும்
நிதியால் இந்தியாவில் மட்டுமல்லாது, உலகிலேயே மிகப் பெரிய பணக்கார அரசியல்
கட்சியாக இருப்பதற்கான வாய்ப்பு பாஜகவிற்குக் கிடைத்துள்ளது. பாஜக அரசு 2016ஆம்
ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தங்களுடைய அடையாளங்களை
வெளிப்படுத்திக் கொள்ளாமல் அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் நிதியளிப்பதற்கான அனுமதியை
அந்தத் திட்டம் உருவாக்கிக் கொடுத்தது. தற்போது கார்ப்பரேட் நிதியில் மிகப் பெரிய பங்கைப்
பெறுகின்ற கட்சியாக பாஜக மாறியிருக்கிறது. அந்த இரட்டை கோபுரங்களுக்குப் பொதுவானதொரு
அடித்தளம் இருப்பதாகவே தோன்றுகிறது.
மோடிக்குத் தேவைப்பட்ட போது
அவருக்கு ஆதரவாக அதானி நின்றதைப் போல, அதானிக்கு ஆதரவாக மோடி அரசு நின்றது. பாராளுமன்றத்தில்
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்க மறுத்து, அவர்களின்
உரைகளை பாராளுமன்றப் பதிவிலிருந்து நீக்கும் அளவிற்கு மோடி அரசு சென்றது.
பாஜகவும், அதானியும் அளவிற்கு
மீறி தங்களுடைய சொத்துக்களைக் குவித்து வைத்திருக்கும் நிலையில், இந்திய மக்கள்
தொகையில் பணக்காரர்களில் முதல் பத்து சதவிகிதம் பேரிடம் மொத்த தேசிய வளத்தில் 77
சதவிகிதம் இருப்பதாக ஆக்ஸ்பாம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. 2017ஆம் ஆண்டில்
உருவாக்கப்பட்ட தேசிய அளவிலான செல்வத்தில் எழுபத்து மூன்று சதவிகிதம் ஒரு
சதவிகிதப் பணக்காரர்களிடமே இருக்கிறது. அதே சமயம் ஏழைகளாக இருக்கின்ற மக்கள்தொகையில்
பாதிப் பேராக இருக்கின்ற அறுபத்தியேழு கோடி இந்தியர்களிடம் உள்ள செல்வம் ஒரு
சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இந்தியா மிகப் பெரிய சந்தை கொண்ட பொருளாதார
சக்தியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், அதன் பெரும்பான்மையான மக்கள்
தாங்க முடியாத வறுமையிலேயே உழன்று வருகின்றனர்.
மோடியின் முகம்
அச்சிடப்பட்டிருக்கும் பாக்கெட்டுகளில் வழங்கப்படுகின்ற உணவுப் பொருட்களைக் கொண்டே
லட்சக்கணக்கானோர் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியா அதிக ஏழை மக்களைக் கொண்ட பணக்கார
நாடாக, உலகின் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது. அவர்கள் வெளியிட்ட
அறிக்கைக்காக ஆக்ஸ்பாம் இந்தியா நிறுவனத்திலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அம்னஸ்டி இன்டர்நேஷனல்
மற்றும் அரசுக்குத் தொல்லை தருவதாகக் கருதப்பட்ட பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில்
மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகின.
இந்த நிகழ்வுகளில் எதுவும்
மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் தலைவர்களிடம் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்திடவில்லை. ஹிண்டன்பர்க்-பிபிசி
தருணம் நிகழ்ந்த சில நாட்களுக்குள் நடைபெற்ற மிகவும் இதமான, பயனுள்ள
சந்திப்புகளுக்குப் பிறகு இந்தியா 470 போயிங், ஏர்பஸ் விமானங்களை வாங்கப் போவதாக பிரதமர்
மோடி, அதிபர் ஜோ பைடன், அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோர் அறிவித்தனர். பைடன் அந்த ஒப்பந்தம் லட்சக்கணக்கான
அமெரிக்கர்களுக்கு வேலைகளை உருவாக்கித் தரும் என்று கூறினார். ஏர்பஸ் விமானங்கள் ரோல்ஸ்
ராய்ஸ் இன்ஜின்களால் இயக்கப்படுபவை. பிரதமர் ரிஷி சுனக் இங்கிலாந்தின் வளர்ந்து வரும்
வான்வெளித் துறையைப் பொறுத்தவரை வானமே எல்லை என்று கூறியிருந்தார்.
அரசு முறைப் பயணமாக ஜூலை
மாதம் அமெரிக்காவிற்கும், பாஸ்டில் தினத்தன்று சிறப்பு விருந்தினராக
பிரான்ஸுக்கும் மோடி சென்றிருந்தார். உங்களால் அதை நம்ப முடிகிறதா? மூன்றாவது முறையாக மோடி
போட்டியிடுகின்ற 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்குச் சாதகமாக
இருக்கும் என்பதை நன்கு அறிந்த மக்ரோனும், பைடனும் மிகவும் சங்கடமான முறையில் மோடியைப் புகழ்ந்தனர். அவர்கள் தாங்கள் தழுவிக் கொண்ட மனிதரைப் பற்றி
எதுவும் அறியாதவர்களாக நிச்சயம் இருந்திருக்க மாட்டார்கள்.
குஜராத் படுகொலையில்
மோடியின் பங்கு பற்றி அவர்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கும். முஸ்லீம்கள் தொடர்ந்து பகிரங்கமாக அடித்துக்
கொலை
செய்யப்பட்டு வருவதையும், அதில் ஈடுபட்ட சில கொலைகாரர்களுக்கு மோடியின்
அமைச்சரவையில் அங்கம்
வகிப்பவர்கள் மாலை அணிவித்துக் கொண்டாடுவதையும், முஸ்லீம்கள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டு
தனிக் குடியிருப்புப் பகுதிகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதையும் அவர்கள் அறிந்தே
இருப்பார்கள். நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் ஹிந்து மதக் காவலர்களால் எரிக்கப்பட்டதையும் அவர்கள் நிச்சயம்
அறிந்தே இருப்பார்கள்.
எதிர்க்கட்சி
அரசியல்வாதிகள், மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள்,
பத்திரிகையாளர்கள் போன்றவர்களை வேட்டையாடுவது, நீண்ட காலம் அவர்களைச் சிறைக்குள் அடைத்து வைத்திருப்பதை,
காவல்துறையினர் மற்றும் சந்தேகத்திற்கு இடமான ஹிந்து தேசியவாதிகள் பல்கலைக்கழகங்கள் மீது நடத்துகின்ற
தாக்குதல்களை, வரலாற்றுப் பாடப்புத்தகங்கள் திருத்தி எழுதப்படுவதை,
திரைப்படங்களுக்குத் தடை விதிக்கப்படுவதை, அம்னஸ்டி இன்டர்நேஷனல் இந்தியா அலுவலகம் மூடப்பட்டதை, பிபிசி இந்தியா
அலுவலகங்கள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட சோதனைகளை, விமானங்களில் வேறு
நாடுகளுக்குப் பறந்து செல்வதைத் தடை செய்கின்ற பட்டியலில் அரசின் விமர்சகர்கள் மர்மமான
முறையில் இடம் பெறிருப்பதை, இந்திய மற்றும் வெளிநாட்டுக் கலியாளர்கள் மீது தரப்படுகின்ற
அழுத்தத்தை நிச்சயம் அறிந்தவர்களாகவே அவர்கள் இருப்பார்கள்.
நூற்றியெண்பது நாடுகள்
கொண்ட பட்டியலில் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான உலகளாவிய குறியீட்டில் இந்தியா இப்போது 161ஆவது
இடத்தில் இருப்பதையும், தலைசிறந்த இந்தியப் பத்திரிக்கையாளர்கள் பலரும்
வேட்டையாடப்பட்டு பிரதான ஊடகங்களில் இருந்து விரட்டப்பட்டுள்ளதையும்,
அரசாங்கத்தைப் பற்றிய ஊடக அறிக்கைகள், செய்திகள் போலியானவையா அல்லது தவறாக
வழிநடத்துபவையாக இருக்கின்றனவா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் அரசாங்கத்தால்
நியமிக்கப்பட்ட அமைப்புக்கு வழங்கப்படவிருக்கும் நிலையில் பத்திரிகையாளர்கள் மிக
விரைவிலேயே தணிக்கை ஒழுங்குமுறை கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படப் போகிறார்கள்
என்பதையும், சமூக ஊடகங்களில் கருத்து வேறுபாடுகளைக் களைவதற்காக
வடிவமைக்கப்படுவதாகச் சொல்லப்படுகின்ற புதிய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைப்
பற்றியும் அவர்கள் அறிந்தே இருப்பார்கள்.
முஸ்லீம்களை அழித்தொழிக்க
வேண்டும், முஸ்லீம் பெண்களைப் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து
பகிரங்கமாக, வெளிப்படையாகக் குரல் கொடுத்து வருகின்ற, வாள் ஏந்தி வன்முறையில் ஈடுபடுகின்ற
ஹிந்து விழிப்புணர்வுக் கும்பல்களைப் பற்றியும் அவர்கள் நன்கு அறிந்தே
இருப்பார்கள்.
ஒரு மாத காலத்திற்கு அமல்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு முடக்கம் - எந்தவொரு ஜனநாயகத்திலும் காணப்படாத மிக நீண்ட கால இணைய வசதிகள் முடக்கம் - மற்றும் துன்புறுத்தல்கள், கைதுகள், பத்திரிகையாளர்கள் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டது என்று 2019ஆம் ஆண்டு தொடங்கி காஷ்மீரில் நிலவுகின்ற நிலைமை பற்றியும் அவர்கள் அறிந்தே இருப்பார்கள். இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் காஷ்மீர் மக்களைப் போல யாரும் இவ்வாறு தொடர்ந்து குரல்வளை நசுக்கப்பட்டவர்களாக வாழவில்லை.
2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லீம்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டியதை, அது தொடர்பாக நடந்த மாபெரும் போராட்டங்களை, அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு தில்லியில் ஹிந்து கும்பல்களால் முஸ்லீம்கள் பலர் கொல்லப்பட்ட பிறகுதான் (அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்செயலாக அப்போது அரசு முறைப் பயணமாக தில்லியில் இருந்தார். அது பற்றி அவர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை) அந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன என்பதையும் அவர்கள் அறிந்தே இருப்பார்கள். தாக்கப்பட்டு தெருவில் கிடந்த முஸ்லீம் இளைஞர்களை இந்திய தேசிய கீதத்தைப் பாடச் சொல்லித் தூண்டியதுடன் அவர்களை அடித்து உதைத்து, கடுமையாகக் காயப்படுத்தி தில்லி காவல்துறையினர் கட்டாயப்படுத்தியதையும் அவர்கள் நிச்சயம் அறிந்தே வைத்திருப்பார்கள். அந்த இளைஞர்களில் ஒருவர் பின்னர் இறந்து போனார்.
அவர்கள் மோடியை உபசரித்துக்
கொண்டிருந்த அதே நேரத்தில் பாஜகவைச் சார்ந்த ஹிந்து தீவிரவாதிகள் வட இந்தியாவில்
உள்ள உத்தரகாண்டின் சிறு நகரத்திலிருந்த முஸ்லீம்களுடைய வீட்டுக் கதவுகளில் X
என்று குறியிட்டு வெளியேறக் கட்டாயப்படுத்திய காரணத்தால் முஸ்லீம்கள் தங்களுடைய
வீடுகளை விட்டு வெளியேறிய வேண்டியிருந்ததை, வெளிப்படையாக ‘முஸ்லீம்களே இல்லாத’
உத்தரகாண்ட் பற்றி அங்கே பேசப்பட்டதை அவர்கள் நிச்சயம் அறிந்திருப்பார்கள்.
இந்தியாவின் வடகிழக்கில்
உள்ள மணிப்பூர் மாநிலம் மோடியின் கண்காணிப்பில் மிக மோசமான காட்டுமிராண்டித்தனமான
உள்நாட்டுப் போரில் இறங்கியிருப்பதையும் அவர்கள் அறிந்திருப்பார்கள். அங்கே ஒருவகையில் இன
அழிப்பே நடந்தேறியிருக்கிறது. ஒன்றிய அரசு அதற்கு உடந்தையாக இருந்துள்ளது. மாநில அரசு
ஒருபக்கச்சார்புடன் செயல்பட்டு வந்துள்ளது. காவல்துறைக்கும் மற்றவர்களுக்கும்
இடையே பாதுகாப்புப் படையினர் எந்தவொரு உத்தரவுமின்றி பிளவுபட்டு நின்றிருக்கின்றனர். இணையம்
துண்டிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் கசிவதற்கு பல
வாரங்கள் ஆகியிருக்கிறது.
சமூகக் கட்டமைப்பைச் சீரழித்திடவும், இந்தியாவை அழிந்து போகச்
செய்திடவும் மோடிக்குத்
தேவைப்படுகின்ற அனைத்து வகையான ஆதரவையும் தருவதையே உலக வல்லரசுகள் தேர்வு செய்து
கொண்டிருக்கின்றன. அதை
ஒருவகையான இனவெறி என்றே என்னால் காண முடிகிறது. தங்களை ஜனநாயகவாதிகள் என்று அவர்கள்
கூறிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இனவாதிகளாகவே இருக்கிறார்கள். தங்களால்
போதிக்கப்படுகின்ற விழுமியங்கள் வெள்ளையர் அல்லாத நாடுகளுக்கும் பொருந்த வேண்டும்
என்று அவர்கள் கருதுவதில்லை. நிச்சயமாக அது பழங்கதையாகவே இருக்கிறது.
அது பற்றியெல்லாம்
எங்களுக்குக் கவலையில்லை.
எங்களுக்கான போரில் நாங்களே போராடிக் கொள்கிறோம் - இறுதியில் எங்கள் நாட்டை நாங்கள்
மீண்டும் வென்றெடுப்போம்.
இந்தியாவில் ஜனநாயகம் தகர்க்கப்படுவது ஒட்டுமொத்த உலகத்தையும் பாதிக்காது என்று அவர்கள்
கற்பனை செய்து கொள்வார்கள் என்றால், மாயைக்குள் சிக்கிக் கொண்டவர்களாக மட்டுமே அவர்கள்
இருப்பார்கள்.
இவையனைத்தும் கடந்த சில
மாதங்களில் நடந்துள்ள சில நிகழ்வுகள் என்பதை இந்தியாவை இன்னும் ஜனநாயக நாடு என்று
நம்புகின்ற அனைவருக்கும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். வேறொரு கட்டத்திற்கு
நகர்ந்திருக்கிறோம் என்று நான் இதைத்தான் சொன்னேன். எச்சரிக்கைகளுக்கான நேரம்
இப்போது முடிந்து விட்டது, நமது தலைவர்களைக் கண்டு பயப்பட்டதைப் போல மக்களில் சில
பிரிவினரைக் கண்டும் இப்போது பயப்பட வேண்டியிருக்கிறது.
உள்நாட்டுப் போர் மூண்ட
மணிப்பூரில் முழுக்க முழுக்க பாகுபாடுடன் செயல்பட்ட காவல்துறை இரண்டு பெண்களை ஒரு
கும்பலிடம் ஒப்படைத்தது. ஒரு கிராமத்தின் வழியாக அந்த இரண்டு பெண்களையும் நிர்வாணமாக
அழைத்துச் சென்ற அந்தக் கும்பல் அவர்களைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது.
தன்னுடைய இளைய சகோதரர் தன் கண்ணுக்கு முன்னால் கொலை செய்யப்படுவதை அந்தப்
பெண்களில் ஒருவர் பார்க்க நேர்ந்தது. அவ்வாறான பாலியல் பலாத்காரத்தில்
ஈடுபட்டவர்களுக்கு பலாத்காரம் செய்தவர்களின் சமூகத்தைச் சார்ந்த பெண்களும் ஆதரவாக
நின்றனர் அதுமட்டுமல்லாது, அந்தப் பெண்கள் பலாத்காரம் செய்யுமாறு அந்த ஆண்களைத்
தூண்டவும் செய்தனர்.
மகாராஷ்டிராவில் ரயிலின்
நடைபாதையில் நடந்து சென்று முஸ்லீம் பயணிகளைச் சுட்டுக் கொன்ற ஆயுதமேந்திய ரயில்வே
பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் மோடிக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு அழைப்பு
விடுத்தார்.
மக்கள்தொகை அடர்த்தியாக
இருந்த முஸ்லீம்-பெரும்பான்மை குடியிருப்பின் வழியாகச் செல்லும் மத அணிவகுப்பில்
பங்கேற்குமாறு மிகப் பிரபலமான ஹிந்து விழிப்புணர்வாளர், உயர்மட்ட அரசியல்வாதிகள்,
காவல்துறை அதிகாரிகளுடன் அடிக்கடி புகைப்படம் எடுத்துக் கொள்பவர் ஹிந்துக்களுக்கு
அழைப்பு விடுத்தார்.
பிப்ரவரி மாதம் இரண்டு முஸ்லீம் இளைஞர்களை வாகனத்தில் கட்டி வைத்து எரித்துக்
கொன்ற வழக்கில் அவர்தான் பிரதானக் குற்றவாளி.
நூஹ் நகரம் குர்கானுக்கு
அருகே அமைந்துள்ளது. முக்கிய
சர்வதேச நிறுவனங்களுக்கான அலுவலகங்கள் அங்கே இருக்கின்றன. அங்கே நடைபெற்ற ஊர்வலத்தில்
இயந்திர துப்பாக்கிகள், வாள்களை ஹிந்துக்கள் ஏந்திச் சென்றனர். முஸ்லீம்கள் தங்களைத்
தற்காத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அந்த ஊர்வலம் எதிர்பார்த்தவாறு வன்முறையிலேயே முடிந்தது.
ஆறு பேர் கொல்லப்பட்டனர். தன்னுடைய
படுக்கையில் கிடந்த பத்தொன்பது வயது இமாம் வெட்டப்பட்டார். அவரது மசூதி இடித்துத்
தள்ளப்பட்டு எரிக்கப்பட்டது. ஏழை முஸ்லீம்களின்
குடியிருப்புகள் அனைத்தையும் புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளி நூற்றுக்கணக்கான
முஸ்லீம் குடும்பங்கள் தங்கள் உயிருக்குப் பயந்து இடம்பெயர்வதற்குக் காரணமாகின்ற வகையிலேயே
அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் இருந்தன.
அதுகுறித்து பிரதமர் வாயே
திறக்கவில்லை. இது
தேர்தலுக்கான காலம். பொதுத்தேர்தல்
வருகின்ற மே மாதம் நடைபெறவுள்ளது. இதுபோன்று நடப்பவை அனைத்தும் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே
நடத்தப்படுகின்றன. ரத்தம்
சிந்துவது, பெரும் எண்ணிக்கையில் நடத்தப்படும் கொலைகள், பிறர் தங்கள் மீது தாக்குதல்களை நடத்தினர் என்று போலியாகக்
கட்டமைப்பது, பாசாங்கான சண்டைகளைப்
பயன்படுத்தி ஏற்கனவே துருவமயப்படுத்தப்பட்டிருக்கும் மக்களை இன்னும்
கூடுதலாகத் துருவமுனைப்படுத்துகின்ற வகையில் நடத்தப்படப் போகின்ற நிகழ்வுகள் என்று
நாங்கள் எதற்கும் தயாராகவே இருக்கிறோம்.
சிறு பள்ளிக்கூடம் ஒன்றின்
வகுப்பறையில் படமாக்கப்பட்ட, பார்ப்பவரை அதிர்ச்சியடைய வைக்கும்
வீடியோவைப்
பார்த்தேன். தன்
மேசைக்கு அருகில் நிற்க வைக்கப்பட்டிருக்கும் முஸ்லீம் சிறுவனை ஹிந்து மாணவர்கள்
ஒவ்வொருவராக எழுந்து வந்து அறையுமாறு ஆசிரியை கேட்டுக் கொள்கிறார். போதுமான அளவிற்கு அந்த
முஸ்லீம் சிறுவனை அடிக்காத சிறுவர்களிடம் அந்த ஆசிரியை இன்னும் ஓங்கி அடிக்குமாறு ஆணையிடுகிறார்.
குற்றச்சாட்டைப் பதிவு செய்ய வலியுறுத்த
வேண்டாம் என்று கிராமத்தில் உள்ள ஹிந்துக்களும், காவல்துறையினரும் அந்த முஸ்லீம்
குடும்பத்தினருக்கு கொடுத்துள்ள அழுத்தமே இதுவரையிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
அந்த முஸ்லீம் சிறுவனின் பள்ளிக் கட்டணம் அவனுக்குத் திருப்பி அளிக்கப்பட்டு அந்தப்
பள்ளியிலிருந்து அவன் வெளியேற்றப்பட்டிருக்கிறான்.
இந்தியாவில் நடந்து
கொண்டிருப்பது இணைய பாசிசத்தின் தளர்ந்த வடிவமல்ல. அது உண்மையிலேயே நிகழ்ந்து
கொண்டிருக்கிறது. நாங்கள் நாஜிக்களாகி இருக்கிறோம். தலைவர்கள், தொலைக்காட்சி சேனல்கள்,
செய்தித்தாள்கள் மட்டுமல்லாது மக்களில் பெரும்பாலானோரும் நாஜிக்களாகவே
இருக்கின்றனர். இந்தப் பாசிஸ்டுகளுக்கு அமெரிக்கா, ஐரோப்பா, தென்னாப்பிரிக்காவில்
வாழ்கின்ற இந்திய ஹிந்துக்களில் பெரும் எண்ணிக்கையிலானோர் அரசியல், பொருள்ரீதியாக
ஆதரவளித்து வருகின்றனர். நம்முடைய ஆன்மாக்கள், குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகளுக்காக
நாம் எழுந்து நின்று போராட வேண்டும். அதில் தோல்வியடைந்தாலும், வெற்றி பெற்றாலும்
பரவாயில்லை. இந்தியாவில்
மட்டும் நமக்கு அந்தப் பொறுப்பு இருக்கவில்லை. 2024ஆம் ஆண்டு தேர்தலில் மோடி வெற்றி பெற்றால்
மாற்றுக் கருத்தை வெளிப்படுத்துவதற்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டு விடும். இந்த அறையில் இருக்கும்
யாரும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாதவர்கள் போல நடிக்க வேண்டாம்.
‘கற்பனையின் முடிவு’ என்ற எனது
முதல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை உங்கள் அனுமதியுடன் இங்கே வாசிக்கிறேன். இது தோல்வியைப் பற்றி
நண்பருடன் நடத்திய உரையாடலாக, தனிப்பட்ட எழுத்தாளரின் அறிக்கையாக இருக்கிறது.
‘தற்செயலாக
பெற்ற 'வெற்றியால்' மகிழ்ச்சிக்கான
பாதை - மனநிறைவு என்றும்
சொல்லலாம் - உச்சத்தைத் தொட்டது (இப்போது கீழிறங்கியாக வேண்டும்) என்ற அனுமானம்
எப்படியிருந்தாலும் அது அவளுடைய வெளிப்புறப் பார்வை என்றே நான் சொல்வேன். செல்வமும்
புகழும் ஒவ்வொருவரின் கனவுகளிலும் கட்டாயமாக உள்ளன என்ற கற்பனைக்கு அப்பாற்பட்ட நம்பிக்கையின்
அடிப்படையில் அது முன்வைக்கப்பட்டது.
நீண்ட
காலமாக நீ நியூயார்க்கில் வாழ்ந்திருக்கிறாய் என்று கூறிய நான் அவளிடம் மற்ற
உலகங்களும், வேறு
வகையான கனவுகளும் இருக்கின்றன, கனவுகளில் தோல்விக்கான சாத்தியங்களும் இருக்கின்றன
என்றேன். தோல்வி மதிக்கத்தக்கது.
சில நேரங்களில் அதற்காகப் பாடுபடுவதும் மதிக்கத் தக்கதே. அங்கீகாரம் என்பது புத்திசாலித்தனம்
அல்லது மனித விழுமியத்தை அளவிடுவதற்கான ஒரே மானியாக இருப்பதில்லை. நான் அறிந்த,
நேசிக்கின்ற களவீரர்கள்
ஏராளமானோர் உள்ளனர். தாங்கள் தோல்வியடைவோம் என்பதை முன்கூட்டியே அறிந்தும் ஒவ்வொரு
நாளும் போராடச் செல்கின்ற என்னைக் காட்டிலும் அதிகமாக செல்வாக்கு உள்ளவர்களை எனக்குத்
தெரியும். உண்மை. 'வெற்றிகரமானவர்கள் இல்லை' என்றாலும் அவர்கள் எந்த வகையிலும் தங்கள்
இலக்கை அறியாதவர்களாக இருக்கவில்லை.
நீங்கள்
உயிருடன் இருக்கும் போது வாழ்வதாக, இறந்து போன பின்னரே இறப்பதாக கனவு காண்பதுதான்
மிகச் சிறந்தது என்று நான் அவளிடம் சொன்னேன் (ஒருவேளை முன்னரே அறிந்து கொண்டதாக இருக்கலாம்).
'அது சரியாக
எதைக் குறிக்கிறது?' (வளைந்த
புருவங்கள், கொஞ்சம் எரிச்சல்.)
அவளிடம்
விளக்க முயன்றேன். ஆனாலும் அது சரியாக வேலை செய்யவில்லை. சிந்திப்பதற்காக சில நேரங்களில் நான் எழுத
வேண்டியிருக்கும். அவளுக்காக
காகித நாப்கினில் நான் எழுதி வைத்தேன். இதுதான் நான் எழுதியது: நேசிப்பது. நேசிக்கப்படுவது. உங்களுக்கான முக்கியத்துவத்தை ஒருபோதும்
மறந்திட வேண்டாம் . சொல்ல
முடியாத வன்முறை, உங்களைச் சுற்றிலும் இருக்கின்ற வாழ்க்கையின் மோசமான
ஏற்றத்தாழ்வுகளுக்கு ஒருபோதும் பழகி விடக் கூடாது. சோகமான
இடங்களில் மகிழ்ச்சியைத் தேட வேண்டும். இருண்ட குகைகளில் இருந்து அழகைப் பெற முயல வேண்டும். ஒருபோதும்
சிக்கலானதை எளிமைப்படுத்த அல்லது எளிமையானதை சிக்கலாக்கக் கூடாது. வலிமையை
மதிக்க வேண்டும், ஆனால் அதிகாரத்தை ஒருபோதும் மதிக்கக் கூடாது. அனைத்திற்கும்
மேலாக, நன்கு கவனிக்க வேண்டும். முயற்சி செய்து புரிந்து கொள்ள
வேண்டும். ஒருபோதும்
விலகிப் பார்க்கக் கூடாது. ஒருபோதும், ஒருபோதும் மறந்து
விடக் கூடாது’
இந்த விருதைத் தந்து
பெருமைப்படுத்தியதற்காக மீண்டுமொரு முறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருதிற்கான மேற்கோளில் ‘அருந்ததி
ராய் கட்டுரையை ஒரு போர் வடிவமாகப் பயன்படுத்துகிறார்’ என்றுள்ள பகுதி எனக்கு
மிகவும் பிடித்திருந்தது.
தன் எழுத்தால் உலகையே
மாற்றிவிட முடியும் என்று எழுத்தாளன் நம்புவது சற்று ஆணவமாக, திமிர்பிடித்ததாக,
கொஞ்சம் முட்டாள்தனமாக இருக்கலாம் என்றாலும் முயற்சியே மேற்கொள்ளவில்லை என்றால்
அது மிகவும் பரிதாபமாகவே இருக்கும்.
இங்கிருந்து செல்வதற்கு
முன்… இதைச் சொல்வதற்கு விரும்புகிறேன்: இந்த விருது ஏராளமான பணத்துடன் வருகிறது. நான் அதை என்னிடமே வைத்துக்
கொள்ளப் போவதில்லை. எந்தவிதமான ஆதரவுமில்லாமல் தொடர்ந்து இந்த ஆட்சியை எதிர்த்து
நிற்கின்ற துணிச்சல் மிக்க ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், திரைப்படத்
தயாரிப்பாளர்கள் எனப் பலருடன் இந்தப் பணம் பகிர்ந்து கொள்ளப்படும். நிலைமை எவ்வளவு
மோசமாக இருந்தாலும், மீண்டுமொரு மிகப்
பெரிய போராட்டம் நம் முன்பு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
Comments
வாழ்நாள் சாதனைக்கான விருதைப் பெற்று அருந்ததி ராய் ஆற்றியுள்ள உரை ஆழமானதாகவும் உத்வேகம் ஊட்டுவதாகவும் உள்ளது. அதானியின் பிரமிக்கத் தக்க வளர்ச்சி, இந்திய சிறுபான்மை மக்கள் படும் அவதி. கருத்துரிமை நசுக்கப்படுவது. மணிப்பூர் கலவரத்தை காவல்துறை முன்னின்று நடத்துவது. காஷ்மீரில் நான்காண்டுகளாக அனைத்து ஊடகங்களும் கட்டிப்போடப்பட்டுள்ளது. பாஜகவும், அதானி குழுமமும் இந்தியாவில் பெருமளவில் நிதி திரட்டியிருப்பது என்று இன்றைய இந்திய நிலைமைகளை அருந்ததி ராய் நன்கு விளக்கியுள்ளார். விருதாகப் பெறப்படும் பணத்தை இந்திய பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்போவதையும் சொல்லியுள்ளது போற்றுதலுக்குரியது. அருந்ததி ராய் இருள் சூழ்ந்த இந்தியாவில் நம்பிக்கை ஒளியாகத் தென்படுகிறார்.
மொழி பெயர்பால் மட்டுமே வாசிக்க வாய்ப்பு அமைந்தது.
மொழிபெயர்பாளருக்கு நன்றி 🙏