ஜுடித் லீவிட்
நோவா
நிச்சயம் பாடம் கற்றுக் கொண்டிருப்பார் என்று நம்பிய வேளையில், 1915ஆம்
ஆண்டில் மீண்டும் சமையல் வேலைக்குத் திரும்பிய மேரி மல்லன் மீது இருந்து வந்த
பொதுமக்களின் ஆதரவு வீழத் துவங்கியது. அது மட்டுமல்லாது மக்களுடைய கருத்து
அவருக்கு எதிராகத் திரும்பியது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ‘சுதந்திரமாக’
வாழ்வதற்கான வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்த நியூயார்க்
ட்ரிப்யூன் தலையங்கத்தில், ‘அந்த வாய்ப்பைத் தூக்கி எறிவதை அவர் நன்கு அறிந்தே தேர்ந்தெடுத்துக்
கொண்டார்’ என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. மல்லன் சமையல் வேலைக்குத் திரும்பியது
குறித்து வரலாற்றாசிரியர்களிடம் அந்த நேரத்தில் எழுந்த கோபம் பின்னர் தணியவே
இல்லை. ‘ஐந்து வருடங்கள் மறைவாக இருந்த மல்லன் பல மாற்றுப்பெயர்களைப் பயன்படுத்தி
மீண்டும் சமையலுக்குத் திரும்பியிருந்தார்!... என்னைப் பொறுத்த வரை அவரது செயல்
திட்டமிடப்படாத கொலைக்கான சாத்தியக்கூறு கொண்டதாகவே இருக்கிறது. தனக்கு டைபாய்டு
தொற்று இருப்பதை அவர் நன்கு அறிந்திருக்கிறார், தான் சமையல் வேலை செய்யக் கூடாது
என்று அவருக்கு நன்கு தெரியும் என்றாலும் அவர் அதைச் செய்திருக்கிறார்’ என்று 1994ஆம்
ஆண்டு ராபர்ட் ஜேடி ஜாய் நேரடியாகவே மேரி மீது குற்றம் சுமத்தியிருந்தார்.
மேரி மல்லன் (கண்ணாடி அணிந்திருப்பவர்)
1931 அல்லது 1932இல் நார்த் பிரதர் தீவில் நிரந்தரமாகத்
தனிமைப்படுத்தப்பட்டு பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாக்டீரியாவியல் நிபுணரான
எம்மா ஷெர்மனுடன் எடுத்துக் கொண்ட படம்
1915ஆம்
ஆண்டு சமையலுக்குத் திரும்பிய குற்றத்தை மேரி மல்லன் நன்கு அறிந்தே செய்திருந்தார்
என்ற போதிலும் அந்த விஷயத்தில் அவர் மட்டுமே முழுக்க முழுக்க குற்றம் புரிந்தவராக
இருக்கவில்லை. அவர் மீது சுமத்தப்பட்ட பழி இன்னும் பரந்த அளவில் பகிரப்பட்டிருக்க
வேண்டும். மல்லன் செய்த காரியங்களில் பெரும்பாலானவை அவரை மிஞ்சிய, அவரது
கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளாலேயே நிகழ்ந்திருந்தன. மல்லனின் வாழ்க்கைச்
சூழலையும், சுகாதார அதிகாரிகள் மற்றும்
ஊடகங்களின் நடவடிக்கைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்வதால் மட்டுமே - மேரி
மல்லன் மற்றவர்களின் உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவித்தார் என்று சமூகம் சுமத்துகின்ற
குற்றத்தை இழைத்த அவரைப் போன்றவர்களின் தனிப்பட்ட நிலைமையை நம்மால் புரிந்து கொள்ள
முடியும். அது பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுவதற்கு
அரசாங்கங்கள் செய்ய வேண்டியவற்றை அனுமதிக்கின்ற அதே வேளையில் மேரி மல்லனைப் போன்றவர்களுடைய
தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றித் தருவதற்கான கொள்கைகளை அரசாங்கம் வகுக்கவும் வழிவகுத்துத்
தரும் என்றும் நாம் நம்பலாம்.
மேரியின்
இக்கட்டான நிலை
1914ஆம் ஆண்டில் சமையலுக்குத் திரும்பிய
வேளையில் மல்லன் தன்னிச்சையாகச் செயல்படுகின்ற சுதந்திரப் பறவையாக இருக்கவில்லை.
அவர் எதிர்கொண்டிருந்த சூழ்நிலைகளை நன்கு கவனியுங்கள். தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு
திருப்திகளைக் கண்டடைந்த, மிகவும் திருப்தியான வாழ்க்கையைப் பெற்றிருந்த அவர் திடீரென்று
அந்த வாழ்க்கையைப் பலாத்காரமாகப் பறிகொடுக்க வேண்டியதாயிற்று. தான் நன்கு அறிந்திருந்தவற்றிடம்
இருந்து உடல்ரீதியாகப் பிரிக்கப்பட்ட அவர் தீவு ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டார். ராட்சசி,
விசித்திரமானவர் என்ற முத்திரை அவர் மீது குத்தப்பட்டது [டைபாய்டு மேரி
என்றழைக்கப்பட்ட மேரி மல்லனின் தனிமைப்படுத்தல் குறித்து மேலும் அறிந்து கொள்ள
‘அவரது சொந்த வார்த்தைகளில்’ என்ற கட்டுரையை வாசிக்கலாம்].
உயிர் வாழ்வதற்காக தான் மேற்கொண்டிருந்த
வேலையில் தொடர்ந்து இருப்பதற்கான அனுமதி மேரிக்கு கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாது அந்த
வேலையுடன் ஒப்பிடக்கூடிய வகையிலான மற்ற வேலைகள் குறித்த எந்தவொரு பயிற்சியும் அவருக்கு
அளிக்கப்படவில்லை. 1910ஆம் ஆண்டில் அவரை அங்கிருந்து விடுவித்த நியூயார்க் நகர
சுகாதார ஆணையர் எர்ன்ஸ்ட் ஜே.லெடர்லே சலவைத் தொழிலில் வேலை தேடுவதற்கான உதவிகளுக்கு
ஏற்பாடு செய்தார். ஆயினும் அந்த வேலை முன்பு வழக்கமாக கிடைத்து வந்த ஊதியத்தையோ
அல்லது திருப்தியையோ மேரிக்கு அளித்திடவில்லை. அது மட்டுமல்லாது. நியூயார்க்கின்
மேல்தட்டு வர்க்கத்தினரின் வீடுகளில் வீட்டுவேலைகள் செய்து வந்தவர்களுக்கென்று
வரையறுக்கப்பட்டிருந்த சமூக வசதிகளையும் அந்த வேலை அவருக்குப் பெற்றுத் தந்திடவில்லை.
1910ஆம் ஆண்டில் லெடர்லே அளித்திருந்த உறுதிமொழியின்படி மேரிக்கு உதவ வேண்டிய
சுகாதாரத் துறையும் நீண்ட கால ஆதாயம் அளிக்கின்ற வேலைகளை அவருக்கு வழங்கிட முன்வரவில்லை.
‘உங்களால் சமைக்கப்படும் உணவு மக்களின்
ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் ஆபத்து உண்மையானது, அந்த ஆபத்து உங்களுடைய வாழ்நாள்
முழுமைக்குமானது’ என்று கூறி மேரி மல்லனைச் சமாதானப்படுத்துவதில் வெற்றியைக் கண்டு,
அவரை வேகமாக தனிமைச்சிறைக்குள் அடைத்து வைத்த சுகாதார அதிகாரிகளும் அவருக்கு உதவிட
முன்வரவில்லை. அந்தச் சமயத்தில் மேல்தட்டு வர்க்கத்தினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தி
அவர்களைச் சமாதானப்படுத்திய மருத்துவரீதியிலான வாதங்கள் மேரியைப் பொறுத்தவரை
ஏற்புடையவையாக இருக்கவில்லை. எந்தவொரு நல அமைப்பும் அவருக்கு உதவி செய்திடவில்லை.
வேலை எதுவுமில்லாத, நடுத்தர வயதான, அயர்லாந்து குடியேறியான அந்த ஒற்றைப்
பெண்ணுக்குத் தேவைப்பட்ட பாதுகாப்பு வளையம் ஒருபோதும் கிடைத்திடவே இல்லை.
மேரி மல்லனிடமிருந்து பெறப்பட்ட மல மாதிரிகள் மீதான பரிசோதனை முடிவுகளை
விவரிக்கும் இந்த பழைய கோப்பு அட்டை தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருடைய வரலாறு குறித்து
தெரிவிக்கிறது
மிகவும்
கடினமான தேர்வுகள்
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நோயைக் கடத்திக் கொண்டிருப்பவர்கள்
பலரும் செய்ததையே மேரியும் செய்தார். அதாவது தனக்குத் தேவைப்பட்ட நிதியாதாரத்தை உருவாக்கிக்
கொள்வதற்காக அவர் வேலைக்குத் திரும்பினார். தங்களுடன் ஒத்துழைக்காத டைபாய்டு நோய்
கடத்தியை எதிர்கொள்ளும்போது செய்ய வேண்டியதைச் செய்த சுகாதாரத் துறை அவரைத்
தனிமைப்படுத்தி வைத்ததன் மூலம் அப்போது எதிர்வினையாற்றியது. தாங்கள் அடையாளம்
கண்டுகொண்ட நோய் கடத்திகள் அனைவரையும் நியூயார்க் சுகாதார அதிகாரிகள் அவ்வாறு தனிமைப்படுத்திடவில்லை;
சுகாதாரத் துறையின் வழிகாட்டுதல்களை மீறிய பலருக்கும் தெருக்களில் திரியும்
வய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் மல்லன் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு ஈஸ்ட் ரிவர்
தீவான நார்த் பிரதர் தீவில் தங்க வைக்கப்பட்டார். அதுபோன்று செயல்படுவதற்குத்
தேவையான காரணம் அதிகாரிகளிடம் இருந்தது. அவர்களைப் போன்றே மேரி மல்லனிடமும்
வேலைக்குத் திரும்பிச் செல்வதற்கான காரணம் இருந்தது.
இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால் சுகாதார
அதிகாரிகள், மேரி மல்லன் இருவருக்கும் அவர்களுக்கென்று வேறுவிதமான தேர்வுகள்
இருந்தன. அந்தக் காரணத்தால் இதுகுறித்த தீர்ப்பை வழங்கும்போது அப்போதிருந்த ஒட்டுமொத்த
சூழலையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 1907ஆம் ஆண்டில் நார்த் பிரதர்
தீவில் மல்லன் தனிமைப்படுத்தப்பட்ட போது கோபம் உச்சகட்டத்திற்கு அதிகரித்திருக்கவில்லை
என்றால், நடந்தேறிய
நிகழ்வுகள் வேறு வடிவம் எடுத்திருக்கக் கூடும். மல்லனின் டைபாய்டு பரவும் ஆற்றலைக்
குறைக்கும் வகையில் கல்வி, பயிற்சி, வேலைவாய்ப்புகளுக்கான பல்வேறு சமரசங்களும், வாய்ப்புகளும்
அவருக்குக் கிடைத்திருக்கலாம்.
அதிகாரத்தின் கட்டுப்பாட்டை தங்களிடம் மிகவும்
இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்த சுகாதார அதிகாரிகள் அடையாளம் காணப்பட்ட
ஆரோக்கியமான நோய் கடத்தியை நெகிழ்வுடன் கையாள்வதற்கு முதலில் விரும்பவில்லை.
அவர்கள் மேரியின் விஷயத்திலிருந்து பாடம் பெற்றுக் கொள்வதையே தேர்ந்தெடுத்துக்
கொண்டனர். அதுவே அவர்களுடைய தேர்வாக இருந்தது. மேரி
மல்லனுக்கு நேர்ந்தவை எந்த அளவிற்கு அவருக்கு சிரமத்தைக் கொடுத்திருக்கும் என்பதை
அறிந்து கொண்டு அதிகாரிகள் அவர் மீது தனிப்பட்ட மரியாதையை காட்டியிருப்பார்கள்
என்றால் மேரி மிகவும் பணிவுடன் அவர்கள் கூறியதை ஏற்றுக்
கொண்டு அவர்களுடைய நிலைப்பாட்டை மதித்திருப்பார் என்றே கருதலாம். ஆனால் இரு
தரப்பினருமே மற்ற தரப்பைக் கருத்தில் கொள்ளத் தயாராக இல்லாத காரணத்தால்
அவர்களுக்கிடையே தகவல் தொடர்பு முற்றிலுமாக அற்றுப் போனது.
1909 ஜூன் 20 அன்று மேரி மல்லனை முதன்முதலாக ‘டைபாய்டு
மேரி’ என்று அடையாளம் காட்டிய நியூயார்க் அமெரிக்கனில் வெளியான கட்டுரையின் ஒரு
பகுதி
முறையான சிகிச்சை
அதே பிரச்சனை இப்போது நம்
முன்பாக மீண்டும் எழுந்தால் அதை நாம் எவ்வாறு எதிர்கொள்வது? தங்களைச்
சுற்றியுள்ளவர்களின் ஆரோக்கியத்தை அச்சுறுத்துகின்ற வகையில் இருக்கின்ற
நோய்வாய்ப்பட்ட அல்லது நோய்வாய்ப்படும் அபாயத்தில் உள்ளவர்களைத் தனிமைச்சிறையில்
அடைத்து வைக்க வேண்டும் என்பதை நாம் வலியுறுத்த வேண்டுமா? பெரும்பாலும் நாம்
இருந்து வருகின்ற நிலைமைகளே இவ்வாறான கேள்விகள் குறித்த நமது எண்ணங்களை, இதுபோன்ற
பல்வேறு பொதுசுகாதார இக்கட்டுகள் குறித்த நமது எதிர்வினைகளைத் தீர்மானிக்கின்றன.
மேரி மல்லன் போன்று நோய்களைச் சுமந்து திரிபவர்களை - தெரிந்தே நோயையும்,
மரணத்தையும் மற்றவர்களுக்கு கொண்டு செல்பவர்களாக, 1909ஆம் ஆண்டு செய்தித்தாளில்
வெளியான செய்தியில் [மேலே உள்ள படத்தைப் பார்க்கவும்] உள்ளவாறு வாணலியில் மனித
மண்டை ஓடுகளை உடைத்துப் போட்டு சமைப்பவர்கள் என்றொ அல்லது கவனக்குறைவாக தொற்றுநோய்களைச்
சுமந்து திரிகின்ற அவர்களை தங்கள் உடலால் கட்டுப்படுத்த முடியாத ஒன்றால் பாதிக்கப்பட்ட
அப்பாவிகள் என்றோ இப்போது நம்மால் காண முடியலாம். அல்லது அவ்வாறு நோயைச் சுமந்து
திரிபவர்களை மற்றவர்களிடம் தீமையை உருவாக்குகின்ற கருவிகளாகவோ, சமுதாயத்தின் அல்லது
அறிவியலின் வக்கிரத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவோ நம்மால் காண முடியலாம்.
தனிநபர்களாக, சமூகமாக நம்மை
நிலைநிறுத்திக் கொள்ளும் போது ஆரோக்கியமானவர்களாகவே இருந்த போதிலும் உண்மையில்
நோய்களைச் சுமந்து கொண்டிருக்கின்றவர்கள் சில நிலைமைகளில் தங்களைச் சுற்றிலும்
இருப்பவர்கள்டைய ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடும் என்ற
அடிப்படையில் குற்றவாளிகளாகவோ அல்லது நிரபராதிகளாகவோ அவர்களைக் கருதுகின்ற
நிலைமைக்கே நாம் வந்து சேர்கின்றோம். ஆக குற்றம் சுமத்தலாம், பயப்படலாம்,
நிராகரிக்கலாம், அனுதாபப்படலாம், புரிந்து கொள்ளலாம் - ஆனாலும் என்ன செய்வது
என்பதை நாம்தான் முடிவு செய்திட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் மீதான மனிதாபிமானம்
கொண்டுள்ள எதிர்வினைகளைத் தேடுகின்ற அதே நேரத்தில் ஆரோக்கியமாக இருந்து வருபவர்களையும்
நாம் பாதுகாத்திட வேண்டும்.
சிவில் சுதந்திரம் மற்றும்
பொது சுகாதாரம் ஆகியவற்றின் முன்னுரிமைகளுக்கு இடையிலான மோதல்கள் ஒருபோதும் மறைந்து
விடப் போவதில்லை. ஆனால் பொது சுகாதார வழிகாட்டுதல்களை பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட
நிலை, கண்ணோட்டத்தை அங்கீகரித்து மதிக்கும் வகையிலே உருவாக்கிடுவதற்கு நம்மால்
பணியாற்ற முடியும். மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கக்
கூடியவர்களாக இருப்பவர்கள் - தங்களுக்கான பொருளாதாரப் பாதுகாப்பு
பராமரிக்கப்பட்டு, சுகாதாரக் கொள்கைகள் தங்களை நியாயமாக நடத்தும் என்பதை உறுதியாக
நம்புவார்கள் என்றால் நோய் பரவலைத் தடுக்க முயல்கின்ற அதிகாரிகளுடன் அவர்கள்
ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். வரலாற்று அறிவு கொண்ட சமத்துவக்
கொள்கைகள் நிச்சயம் மிகக் குறைவான கைதிகளையே பொது சுகாதாரத்திற்கு உருவாக்கிக் கொடுக்கும்.
2004 அக்டோபர் 12 அன்று வெளியானது
https://www.pbs.org/wgbh/nova/article/typhoid-mary-villain-or-victim/
Comments