பீட்டர் டைசன்
டைபாய்டு மேரி என்றழைக்கப்பட்ட மேரி மல்லனின்
எண்ணங்கள், அவரது எழுத்து தொடர்பான சில விஷயங்கள் கிடைத்துள்ளன. தனிமைப்படுத்தலின்
உச்சத்தில் இருந்த அவருடைய அவலநிலையையும், மனநிலையையும் விளக்குவதாக 1909ஆம் ஆண்டு
ஜூன் மாத இறுதியில் தன்னுடைய கையால் அவர் எழுதிய வசைகள் நிரம்பிய ஆறு பக்கங்கள் கொண்ட
நீண்ட கடிதம் இருக்கிறது. அவருடைய விருப்பத்திற்கு மாறாக, நியூயார்க் நகரத்தின்
ஈஸ்ட் ரிவரில் உள்ள ஒரு தீவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தனிமைப்படுத்தி
வைக்கப்பட்டிருந்தார். கீழே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய கடிதத்தை வாசிப்பதன் மூலம் உங்களால்
- தன்னுடைய சமையல் வேலை மூலமாக ஏராளமான மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்த
அவரைக் கண்டுபிடித்த பிறகு ‘ஆரோக்கியமான உடல்நலத்துடன் உள்ள டைபாய்ட் கடத்தி’
(கேரியர்) என்று குத்தப்பட்ட முத்திரை’, ‘பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதில் அந்த நகரத்திற்கு
இருந்த கடமை’ என்று அந்த நேரத்தில் இரண்டு சிக்கல்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டு
சோகத்தால் பீடிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணின் மனதிற்குள் நுழைந்து பார்த்திட முடியும்.
அவர் எழுதிய இந்தக் கடிதத்தை முழுமையாகப் படிக்கும் போது, அப்போதிருந்த சூழலில் முப்பத்தி
ஒன்பது வயதான அந்த ஐரிஷ் குடியேறி எந்த அளவிற்கு விரக்தியடைந்திருந்தார்,
வருத்தமடைந்திருந்தார், பிறரால் வெறுக்கத்தக்கவராக இருந்தார் என்பதை எவரொருவராலும்
எளிதில் புரிந்து கொள்ள முடியும். அந்தச் சூழலிருந்து ஒருபோதும் அவரால் தப்பி விட முடியவே
இல்லை.
குறிப்பு: கீழே உள்ள மல்லனின் கடிதம் தெளிவு, எழுத்துப்பிழை மற்றும்
நிறுத்தற்குறிகள் ஆகியவற்றிற்காக திருத்தப்பட்டுள்ளது. மேலும் எளிதில்
வாசிப்பதற்காக பத்திகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் உள்ள
சொற்களுக்கான மேலதிக தகவல்களும்
தரப்பட்டுள்ளன. மல்லன் எழுதிய கடிதத்தின் நகலும் தரப்பட்டுள்ளது.
அமெரிக்கன் ஆசிரியருக்கு
ஜார்ஜ்
பிரான்சிஸ் ஓ நீல்1
சுகாதார வாரியத்தைச் சார்ந்த டாக்டர் பார்க்கிற்கு2
அளிக்கின்ற என்னுடைய பதிலில் டைபாய்டு நோயாளிகளுடன் நான் பிரித்து வைக்கப்படவில்லை
என்றே கூறுவேன். டைபாய்டு உள்ளவர்கள் யாரும் இந்த தீவில் கிடையாது.3 என்னை
அந்த தீவில் நிறுத்தி வைத்திருப்பதைத் தவிர, நோய்வாய்ப்பட்டிருக்காத 4 மருத்துவ
சிகிச்சை எதுவும் தேவைப்படாத என்னை அங்கே ஒரு கைதியாக வைத்திருப்பதைத் தவிர வேறு எதையும்
செய்வதற்கான முயற்சி வாரிய அதிகாரிகளிடம் இருக்கவில்லை. நான் இங்கே முதன்முதலில் வந்தபோது
அவர்கள் என்னிடமிருந்து இரண்டு ரத்த மாதிரிகளை எடுத்துக் கொண்டனர். மேலும் முறையே திங்கள்,
புதன், வெள்ளி என குறைந்தபட்சம் வாரத்திற்கு மூன்று முறை ஜூன் மாதத்தின் பிற்பகுதி
வரையிலும் சோதனைக்கென்று என்னிடமிருந்து மலம் சேகரித்துக் கொள்ளப்பட்டது. அதற்குப்
பிறகு வாரத்திற்கு ஒரு முறை, அதாவது புதன்கிழமையன்று மட்டுமே அவர்கள் சோதனைக்கென்று
மலத்தை எடுத்துக் கொண்டனர். இப்போது வாரத்திற்கு மூன்று முறை என்று கிட்டத்தட்ட ஓராண்டு
காலத்திற்கு அவர்கள் எனக்கு ஆவணப்பதிவை அளித்துள்ளனர். 5
முதன்முதலாக நான் இங்கே வந்தபோது மிகவும் பதட்டத்துடன்
இருந்தேன். மிகுந்த வருத்தத்துடனும் சிரமத்துடனும் சிரம் பணிந்தேன். எனது கண்கள்
துடிக்க ஆரம்பித்தன, இடது கண்ணிமை செயலிழந்து, அசைக்க முடியாது போனது. அது ஆறு
மாதங்களுக்கு அந்த நிலையிலேயே இருந்தது. வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை கண்
சிகிச்சை நிபுணர் ஒருவர் தீவிற்கு வருகை தந்தார். என்னைக் கவனிக்குமாறு அவரிடம் ஒருபோதும்
சொல்லப்படவே இல்லை. என் கண்ணுக்குப் போட்டுக் கொள்வதற்கான திரை கூட கிடைக்கவில்லை.
எங்காவது செல்லும் போது, என் கண்களின் மீது நான் கையை வைத்துக் கொண்டே இருக்க
வேண்டியிருந்தது, இரவில் கண்களின் மீது கட்டு ஒன்றைப் போட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.
டிசம்பர் மாதம் பொறுப்பேற்றுக் கொண்ட டாக்டர் வில்சன் 6
என்னிடம்
வந்தார். அது குறித்து நான் அப்போது அவரிடம் தெரிவித்தேன். அது குறித்து தான் எதுவும்
கேள்விப்பட்டிருக்கவில்லை என்று கூறிய அவர் தன்னுடைய மின்சார பேட்டரியை எனக்கு அனுப்பி
வைப்பதாக கூறினார். ஆனாலும் அவர் அதை எனக்கு அனுப்பி வைக்கவே இல்லை. மருத்துவ
ஊழியர்களுக்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக சர்வவல்லமையுள்ள கடவுளுக்கே என்னுடைய
கண் நன்றி செலுத்தியது. யூரோட்ரோபின் எடுத்துக் கொள்ளுமாறு டாக்டர் வில்சன் கேட்டுக் கொண்டார். 7
அதை ஓராண்டு காலத்திற்கு நான் அவ்வப்போது பெற்றுக்
கொண்டேன். அது அவர்களிடம் சில நேரங்களில் இருக்கும். சில சமயங்களில் இருப்பதில்லை.
ஆண்டு முழுவதிலும் சுமார் மூன்று மாதங்களுக்கு மட்டுமே நான் யூரோட்ரோபின்
எடுத்துக் கொண்டேன். அதை ஒருவேளை நான் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தால், மிகவும்
மோசமானது என்பதால் நிச்சயமாக அது என்னைக் கொன்றிருக்கும். சிறுநீரகப்
பிரச்சனைக்குப் பயன்படுத்தப்படும் மருந்து பற்றி ஏற்கனவே அறிந்திருக்கும்
அனைவருக்கும் இது தெரியும்.
ஜனவரி மாதம் [1908] அவர்கள் என்னை அங்கிருந்து வெளியேற்றவிருந்த
நிலையில், அங்கே தங்கியிருந்த மருத்துவர் என்னிடம் வந்து, இங்கிருந்து வெளியேறிய
பிறகு நான் எங்கே போகப் போகிறேன் என்று கேட்டார். நான் அவரிடம் மிகவும் இயல்பாக நியூயார்க்
என்று கூறிய போது நான் வெளியேறுவதற்குத் தடை ஏற்படுத்தப்பட்டது. நம்பிக்கையற்ற
நோயாளி என்று என்னைப் பற்றிக் குறிப்பிட்ட மேற்பார்வை செவிலியர் ஒருவர் டாக்டர்
டார்லிங்டனுக்கு8 கடிதம் எழுதி, கனெக்டிகட்டில் இருக்கின்ற என்னுடைய
சகோதரிகளிடம் நான் செல்லப் போகிறேன் என்று கூறினால் ஒருவேளை அது நடக்கலாம் என்று
என்னிடம் சொன்னார். அந்த மாகாணத்தில் எந்தவொரு சகோதரியும் எனக்கு இல்லை அல்லது
அமெரிக்காவில் வேறு எந்த சகோதரியும் எனக்கு இல்லை. 9
பின்னர் ஏப்ரல் மாதம் எனது நண்பர் ஒருவர்10 மருத்துவர்
டார்லிங்டனிடம் சென்று அங்கிருந்து நான் எப்போது வெளியேறலாம் என்று கேட்டார். அந்த
மருத்துவர் ‘அந்தப் பெண் இப்போது நன்றாக இருக்கிறார். அவரை நன்றாக கவனித்துக்
கொள்ள வேண்டியதிருக்கிறது. என்னால் மட்டுமே அவரை இங்கிருந்து விடுவிக்க முடியாது.
வாரியம் உட்கார்ந்து முடிவு செய்ய வேண்டும். சனிக்கிழமைவாக்கில் வாருங்கள்’ என்று பதிலளித்தார்.
அவ்வாறு மீண்டும் அவரைச் சந்தித்த போது ‘இந்தப் பெண் குறித்து நான் செய்வதற்கு எதுவுமில்லை.
டாக்டர் ஸ்டடிஃபோர்டிடம்11 செல்லுங்கள்’ என்று டாக்டர் டார்லிங்டன் தெரிவித்தார்.
அவர் அந்த மருத்துவரிடம் சென்றார். ‘அந்தப் பெண்ணை
என்னால் வெளியே விட முடியாது, அவர் பலருக்கும் டைபாய்டைப் பரப்பியிருக்கிறார்.
அவர் இருந்த குடும்பங்களில் பல மரணங்கள்12 நிகழ்ந்துள்ளன’ என்று கூறிய டாக்டர்
ஸ்டடிஃபோர்ட் ‘போய் மேரி மல்லனிடம் கேளுங்கள். பித்தப்பை13 அகற்றப்படுவதற்கான
அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு அவரைச் சமாதானம் செய்யுங்கள். அறுவைச் சிகிச்சை
செய்வதற்கு நகரத்திலேயே சிறந்த அறுவை சிகிச்சை நிபுணரை நான் ஏற்பாடு செய்து தருகிறேன்’
என்று தெரிவித்தார்.
‘மாட்டேன். என் மீது கத்தி எதுவும் படக் கூடாது. என்
பித்தப்பையில் பிரச்சனை எதுவும் இல்லை’ என்று நான் கூறினேன். அதே கேள்வியை டாக்டர்
வில்சனும் என்னிடம் கேட்டார். அவரிடமும் மாட்டேன் என்றே சொன்னேன். அவர் ‘நீங்கள் இவ்வாறு
செய்வதால் எந்தவொரு நன்மையும் உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை’ என்றார். அங்கிருந்த
மேற்பார்வை செவிலியர் ஆபரேஷன் செய்து கொள்ளுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்.
அவரிடமும் நான் முடியாது என்றே சொன்னேன். ‘இங்கே இருப்பதைக் காட்டிலும் அதைச்
செய்து கொள்வது உங்களுக்கு நல்லதுதானே’ என்று அவர் கேட்டார். முடியாது என்றே நான் அவருக்குப்
பதிலளித்தேன்.
அக்டோபரில் வருகை மருத்துவர் ஒருவர் வந்தார். என்
மீது அவர் அதிக அக்கறை காட்டினார். உண்மையில் அவர் என்னுடைய சுதந்திரத்தைப்
பொருட்படுத்தாது, அங்கே தங்கியிருக்கவே நான் விரும்புவதாகக் கருதினார். சில
மருந்துகளைக் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தால், அவற்றை நான் எடுத்துக் கொள்வேனா
என்று அவர் கேட்டார். எடுத்துக் கொள்வதாக அவரிடம் சொன்னேன். எனவே ஆன்டி
ஆட்டோடாக்ஸ் உள்ளிட்ட சில மாத்திரைகளை அவர் எனக்குக் கொடுத்தார். ஏற்கனவே எனக்கு
ப்ரூவர்ஸ் யீஸ்டு தருமாறு டாக்டர் வில்சன் கூறியிருந்தார்.
முதலில் அதை நான் எடுத்துக் கொள்ளவில்லை.
ஏனென்றால் எனக்கு அவர்கள் மீது கொஞ்சம் பயம் இருந்தது. அதற்கான சரியான காரணமும்
என்னிடம் இருந்தது. நான் அந்த துறைக்கு வந்தபோது, அது எனது குடல் பாதையில்
இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். பின்னர் இன்னொருவர் அது என் குடல் தசைகளில்
இருப்பதாகக் கூறினார். அதற்குப் பிறகே அவர்கள் பித்தப்பை பற்றி நினைக்க ஆரம்பித்தார்கள்.
உண்மையில் அவர்கள் அனைவருக்கும் நான் ஒரு காட்சிப்
பொருளாகவே இருந்தேன். என்னைப் பார்க்கவும், ஏற்கனவே பரந்த உலகிற்குத்
தெரிந்திருந்த உண்மைகளைப் பற்றிக் கேட்டறியவும் பயிற்சி மருத்துவர்கள்கூட அங்கே வந்தார்கள்.
காசநோயுடன் அங்கே இருந்த ஆண்கள் ‘அதோ அவள்தான் கடத்தி வரப்பட்ட பெண்’ என்று கூறுவார்கள்.
டாக்டர் பார்க் சிகாகோவில் என்னைப் பற்றி விளக்கினார்.14 இதேபோன்று அவரை
அல்லது அவரது மனைவியை டைபாய்டு வில்லியம் பார்க் என்று அழைத்து அந்த செய்தி அவர்களை
அவமதிக்கும் வகையில் பத்திரிகையில் வெளிவருவதை டாக்டர் வில்லியம் எச்.பார்க்
விரும்புகிறாரா என்பதை அறிந்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறேன்.
1 தன்னை டைபாய்ட் மேரி என்று முதன்முதலாகக் குறிப்பிட்டு
எழுதியிருந்த நியூயார்க் அமெரிக்கன் என்ற பத்திரிக்கை ஆசிரியருக்கே 1909 ஜுன் 20
அன்று மல்லன் இந்தக் கடிதத்தை முதலில் எழுதினார். ஆனால் இந்தக் கடிதத்தை பின்னர் தனிமைப்படுத்தலில்
இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தன் சார்பில் வழக்குத் தொடர்ந்திருந்த
ஜார்ஜ் பிரான்சிஸ் ஓ நீல் என்ற வழக்கறிஞருக்கு அவர் அனுப்பி வைத்தார்.
2 வில்லியம்
எச். பார்க் - டைபாய்டை ஏற்படுத்துகின்ற பேசிலஸான சால்மோனெல்லா
டைபிக்கான பரிசோதனைக்காக மல்லனிடமிருந்து மலம், சிறுநீர் மாதிரிகளைச் சேகரிக்கும்
பொறுப்பில் நியூயார்க் சுகாதாரத் துறையின் பாக்டீரியாவியல் துறை ஆய்வகத்தின்
தலைவராக இருந்தவர்.
3 1907
மார்ச் மாதம், சுகாதார அதிகாரிகள் அவரைக் கைது செய்த போது, மல்லன் ஈஸ்ட் ரிவரில் உள்ள ரைக்கர்ஸ் தீவிற்கு அருகே அமைந்துள்ள நார்த்
பிரதர் தீவில் உள்ள குடியிருப்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். அந்த தீவில்
தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த பிற நோயாளிகளில் பெரும்பாலானவர்கள்
காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்; அந்த நேரத்தில் அங்கே மல்லனைத் தவிர வேறு
யாருக்கும் டைபாய்டு பாதிப்பு இருக்கவில்லை.
4 மல்லன்
தன்னுடைய உடலில் டைபாய்டு நுண்ணுயிரிகளைக் கொண்டிருந்தார், அவரால் மற்றவர்களுக்கு அவற்றைப்
பரப்ப முடியும். அதனால் அவர்கள் நோயால் பாதிக்கப்படுவர் என்றாலும் அவர் தனக்கு
ஒருபோதும் டைபாய்டு காய்ச்சல் இருந்ததே இல்லை என்றே கூறினார். ஆயினும் நோய்
கடத்தியாக இருப்பதற்கு குறைந்தபட்சம் லேசான காய்ச்சல் போன்ற அளவிலாவது அவரிடம் நோய்
இருந்திருக்க வேண்டும். நல்ல உடல்நலத்துடன் உள்ள ஒருவர் நோய் கடத்தியாக இருக்க
முடியும் என்பது இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிகவும் புதிய சிந்தனையாகவே
இருந்தது, தனது வாழ்நாள் முழுவதும் அந்த சிந்தனையை மல்லன் ஒருபோதும் ஏற்றுக்
கொள்ளவே இல்லை.
5 பார்க்கின்
ஆய்வகம் 1907 மார்ச் மற்றும் 1909 ஜூனுக்கு இடைப்பட்ட காலத்தில், மல்லனிடமிருந்து
சராசரியாக வாரத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்டு 163 மல மாதிரிகளைச் சேகரித்தது. அந்த
மாதிரிகளில் நான்கிஒல் ஒரு பங்கிற்கும் மேலானவையும், எடுக்கப்பட்ட அனைத்து
சிறுநீர் மாதிரிகளும் டைபாய்டுக்கு எதிர்மறையாகவே இருந்தன. அவ்வாறாக கிடைத்த
முடிவே அங்கே மேற்கொள்ளப்பட்ட செயல்முறையின் மீதான மல்லனின் சந்தேகத்தைத் தூண்டி
விட்டது. ஆனால் இன்றைய நிலைமையில் மல்லன்
டைபாய்டு பாக்டீரியாவைச் சுமந்து பரப்பக்கூடியவராக இருந்தார் என்பது குறித்து நிச்சயம்
எந்தவொரு நிபுணருக்கும் சந்தேகம் வரப்போவதில்லை.
6 சுகாதாரத்
துறையின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் கண்காணிப்பாளரான ராபர்ட் ஜே. வில்சன் 1907
டிசம்பரில் மல்லனின் வழக்கை மேற்பார்வையிடத் தொடங்கினார்.
7 மல்லனின்
உடலிலிருந்து சால்மோனெல்லா டைபியை நீக்குவதற்காக
வில்சன் உள்ளிட்ட பிற சுகாதாரத் துறை வல்லுநர்கள் மேற்கொண்ட பயனற்ற முயற்சிகளில்
பரிந்துரைக்கப்பட்ட பல சிகிச்சைகளில் ஒன்றான இந்த யூரோட்ரோபின் என்பது சிறுநீர்க்
குழாய் தொற்றிற்கான ஆன்டிசெப்டிக் மருந்தாகும். 1938இல் மல்லன் இறந்த பத்தாண்டுகளுக்குப்
பிறகும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள்
உருவாக்கப்படவில்லை.
8 தாமஸ் டார்லிங்டன் அப்போது நகர
சுகாதார ஆணையராக இருந்தார்.
9 1869இல்
அயர்லாந்தில் பிறந்த மல்லன் தன்னுடைய பதினான்காவது வயதில் தனியாக அமெரிக்காவுக்கு
குடிபெயர்ந்து வந்தார். ஆரம்பத்தில் தன்னுடைய அத்தை, மாமாவுடன் அவர் வசித்து
வந்தார், அவர்கள் இறந்த பிறகு, தனக்கென்று
எந்தவொரு குடும்பமும் இல்லாமலே அவர் அமெரிக்காவில் வசித்து வந்தார். 1907ஆம் ஆண்டில்
கைது செய்யப்பட்ட நேரத்தில், சில ஆண்டுகளாக மேல்தட்டு நியூயார்க் வீடுகளில்
சமையல்காரராகப் பணிபுரிந்து வந்த அவர், தன்னையறியாமலேயே தனது சமையல் மூலம் மக்களுக்குப்
பாதிப்பை ஏற்படுத்தி வந்தார்.
10 அந்த நண்பர்
ஆல்பர்ட் ப்ரிஹோஃப் ஆவார். மல்லன் தனிமைப்படுத்தலுக்கு முன்பாக அவருடனே வசித்து
வந்தார்.
11 வில்லியம் எச்.
ஸ்டடிஃபோர்ட் பெல்வியு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக இருந்தவர், நார்த்
பிரதர் தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் நோயாளிகளை அவர் கவனித்து வந்தார்.
12 தனிமைப்படுத்தலுக்கு முன்பாக, மல்லன்
குறைந்தது இருபத்திரண்டு பேருக்கு டைபாய்டு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தியதாக
நம்பப்படுகிறது, அவர்களில் ஒருவர் இறந்து போனார். துரதிர்ஷ்டவசமாக, அந்த எண்ணிக்கை
பின்னர் இரு மடங்கிற்கும் அதிகமாகியது.
13 டைபாய்டு நுண்ணுயிரிகள்
பித்தப்பையில் தங்கியிருக்கும். ஆனாலும் அந்த நேரத்தில்கூட அந்த உறுப்பை அகற்றுவது
ஒருவரிடமிருந்து டைபாய்டு நோயை அகற்றுவதற்கான உத்தரவாதமாக இருக்காது என்றே
அறியப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் ஆபத்தான நோய்த்தொற்றுகளுக்கு பெரும்பாலும்
வயிற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக இருந்தது. எனவே அந்த செயல்முறையை மல்லன் மறுப்பதற்குத்
தேவையான நல்ல காரணம் இருந்தது.
14 1908 ஜூன் மாதம் நடைபெற்ற
அமெரிக்க மருத்துவ சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில், வில்லியம் பார்க் டைபாய்டு
நோய்கடத்திகள் குறித்த கட்டுரையை வழங்கியிருந்தார், மல்லனின் நோய் குறித்து விவரித்திருந்த
போதிலும், அவர் மல்லனின் பெயரை அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கவில்லை.
முடிவுரை
1909 ஜூலை நடுப்பகுதியில், சமுதாயத்திற்கு ஆபத்தை
விளைவிக்கக் கூடியவராக மல்லன் இருக்கிறார் என்று நம்பிய நியூயார்க்
உச்சநீதிமன்றத்தின் நீதிபதி மிட்செல் எர்லாங்கர், மல்லனின் விடுதலைக்கான மனுவைத்
தள்ளுபடி செய்தார். மல்லன் நார்த் பிரதர் தீவுக்குத் திரும்ப வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
ஆனால் ஏழு மாதங்களுக்குப் பிறகு, மல்லன் மீது பரிதாபப்பட்ட நகரத்தின் புதிய சுகாதார
ஆணையரான எர்ன்ஸ்ட் ஜே.லெடர்லே, மீண்டும் ஒருபோதும் சமையல்காரராகப் பணியாற்ற
மாட்டேன் என்ற மல்லனின் வாக்குறுதியின் பேரில் அவரை அங்கிருந்து விடுவித்தார். ஆயினும்
மல்லனுக்கு ஏற்கனவே வழக்கமாகியிருந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் வகையில் மல்லன் மேற்கொண்டிருந்த
தொழிலுக்கு மாற்றான வேறொரு தொழிலுக்கு லெடெர்லே உதவியிருக்கவில்லை. இவ்வாறு தவற
விட்டதும், மேற்கொள்ளப்பட்ட மேற்பார்வைகளும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தின.
ஆரம்பத்தில் மல்லன் மீது கண்காணிப்பை வைத்திருந்த சுகாதாரத்
துறை இறுதியில் அவருடனான தொடர்பை முற்றிலுமாக இழந்தது. பின்னர் 1915ஆம் ஆண்டில் மன்ஹாட்டனில்
உள்ள ஸ்லோன் மகப்பேறு மருத்துவமனையில் பரவிய டைபாய்டு காய்ச்சலுக்கு அங்கே இருந்த
சமையற்காரரான திருமதி பிரவுனுக்கு தொடர்பு இருந்தது என்று சுகாதார அதிகாரிகள் கண்டறிந்தனர்.
திருமதி பிரவுன் என்ற அந்தப் பெண்மணி மேரி மல்லன் என்பது உறுதியானது. உடனடியாக அவர்
நார்த் பிரதர் தீவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அதற்குப் பிறகு தன்னுடைய வாழ்நாள்
முழுவதும் அவர் அங்கேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தீவில் மொத்தம் இருபத்தியாறு
ஆண்டுகள் வாழ்ந்த அவர் 1938ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று இறந்து போனார். மேரி மல்லன்
நாற்பத்தியேழு பேருக்கு டைபாய்டு நோயைப் பரப்பினார் என்று கருதப்படுகிறது,
அவர்களில் மூவர் இறந்து போயினர்.
Comments