பட்டியலின-பகுஜன் மக்களை அணிதிரட்ட பிரதிநிதித்துவம் என்ற சமூக உள்ளடக்கமே பாஜகவிற்கு உதவுகிறது

அஜய் குடவர்த்தி

இணைப் பேராசிரியர்

அரசியல் ஆய்வு மையம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்


வயர் இணைய இதழ்


‘உத்தரப்பிரதேசத்தில் 'ஒடுக்கப்பட்ட சாதிகளின் கட்சி' என்று தன்னைப் பற்றி பாஜக உருவாக்கும் பிம்பம் தகர்க்கப்பட வேண்டும்என்று ஹரிஷ் வாங்கடே எழுதியுள்ள கட்டுரை பலகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த பாரதிய ஜனதா கட்சியின்  எழுச்சிக்கான பல காரணிகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்ற முக்கியமான பகுப்பாய்வாக உள்ளது. வாங்கடேயால் அங்கீரிகரிக்கப்பட்டுள்ள பட்டியலின மக்களின் வாக்களிப்பு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பட்டியலின-பகுஜன் அறிஞர்கள் பலராலும் நீண்ட காலமாக விவாதிக்க மறுக்கப்பட்டே வந்துள்ளது. தனது கட்டுரையில் பட்டியலினத்தவர்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடையே நிலவுகின்ற பிளவு, அவர்கள் எவ்வாறு பாஜகவால் திட்டமிட்டுப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை வாங்கடே விளக்கியுள்ளார். பாஜகவின் ‘பிரித்தாளுகின்ற’ சூழ்ச்சிகளைச் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர் இன்றைய களத்தில் அத்தகைய உத்திகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கூறாமல் தனது பகுப்பாய்வை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.

பாஜகவின் மாக்கியவெல்லியன் உத்திகள் என்று இவற்றை கூறுகின்ற வாங்கடே அத்தகைய உத்திகளைச் சாத்தியமாக்குகின்ற சமூகத்தின் வேர்கள் பற்றி எதுவும் கூறாமல் விடுத்திருக்கிறார். மேலும் அவர் பாஜகவின் இத்தகைய உத்திகளை எதிர்கொள்வதற்கு எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதையும் தன்னுடைய கட்டுரையில் சுட்டிக்காட்டிடவில்லை. அதுபோன்ற உத்திகள் உண்மையில் பாஜகவிற்குப் பலனளிக்கின்றன என்றால், பாஜகவினர் அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்திக் கொள்வதற்கு எந்தவொரு காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. அது குறித்து வெறுமனே புலம்புவது மட்டுமே அந்த உத்திகளைச் சாத்தியமற்றவை ஆக்குவதற்கு எதையும் செய்யப் போவதும் இல்லை.     

பாஜகவிற்கு 'வெளிப்புறமாக' பிரச்சனை இருப்பதாக நம்ப வைக்கத் தூண்டும் வகையிலேயே அந்தக் கருத்து அமைந்திருக்கின்றது. ஆனால் உண்மையில் மிகவும் முக்கியமான பகுப்பாய்விற்கு பட்டியலின-பகுஜன் கட்சிகளும், அறிஞர்களும் பயன்படுத்தும் சாதி இயக்கவியல், சமூகநீதி அரசியல் ஆகியவை குறித்துள்ள சமூகவியலைப் புரிந்து கொள்வதே தேவைப்படும்.   

பட்டியலின-பகுஜன் உரையாடல்

பிரதிநிதித்துவப்படுத்துவதில் உள்ள சமூக உள்ளடக்கத்தைத் திட்டமிட்டே புறக்கணித்து அதை ஓர் அரசியல் தத்துவமாகத் திசைதிருப்பியதே நடைமுறையில் இருக்கின்ற 'சமூகநீதி' குறித்த உரையாடலில் இருந்து வரும் பிரச்சனையாகும். பிரதிநிதித்துவம் அளிப்பது ஹிந்துத்துவா அரசியலின் எழுச்சிக்கு கூடுதலாகப் பங்களிக்கின்ற உத்தியாகவே மாறியுள்ளது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் பட்டியலினத்தவர்களை அர்ச்சகர்களாக்க வேண்டுமென்பது போன்ற கோரிக்கைகள் இதுபோன்ற கட்டமைப்பிற்குள் இருந்தே வருகின்றன. இதுபோன்ற கோரிக்கைகளை பாஜகவின் சாதிச் சார்புகளை அம்பலப்படுத்துவதற்கான நடவடிக்கை என்று காண முடிந்தாலும், முஸ்லீம்களின் உணர்வுகளைப் பொறுத்தவரை அது உணர்ச்சிகளற்ற வெற்றுத்தன்மையுடனே உள்ளது. இவ்வாறான நிலையில் பட்டியலினத்தவர்-முஸ்லீம்களின் ஒற்றுமையை பாஜக அனுமதிப்பதில்லை என்று புலம்புவதால் மட்டும் என்ன பயன் கிடைத்து விடப் போகிறது?  


சுயமாகத் தன்னையே மறுத்துக் கொள்கிற இத்தகைய கோரிக்கைகளைப் புறக்கணிப்பது மாயாவதியை நோக்கியே நம்மை இட்டுச் செல்கிறது. தான் நன்கு அறிந்திருந்த காரணங்களுக்காக அவர் அயோத்திப் பிரச்சனையில் மௌனத்தையே கடைப்பிடித்தார். சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சி மாபெரும் நோக்கத்துடனும், அர்ப்பணிப்புடனும் ராமர் கோவிலைக் கட்டியெழுப்பும் என்று உறுதியளிப்பதிலும் அவர் முன்னணியில் இருந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் இந்த உத்தி மாற்றம் அந்தக் கட்சிக்கு மட்டுமானதாக இருக்கவில்லை; காங்கிரஸ் கட்சி தலைமையில் உள்ள இளைஞர்களும் ராமர் கோவிலுக்காக நிதியைச் சேகரிப்பதில் எந்த அளவிற்குத் தீவிரமாக இருந்தார்கள் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற செயல்பாடுகள் அதிக பிரதிநிதித்துவத்திற்காக மட்டுமே பாடுபடுவதில் திருப்தி அடைந்து கொள்கின்ற, நடைமுறையில் இருக்கின்ற சமூகநீதி அரசியலிடம் - அதன் உள்ளடக்கம் எவ்வாறு இருந்த போதிலும் - பெரும்பான்மை உணர்வுகளை ஒருங்கிணைப்பதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து சொல்லிக் கொள்ளுமாறு எந்தவொரு திட்டமும் இல்லை என்பதையே நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன.    


இதுபோன்ற வெற்றிடம்தான் பட்டியலின-பகுஜன் மக்களிடம் பரவியுள்ள ஹிந்து மதப் பெரும்பான்மை ஹிந்துத்துவா பார்வையை மேலும் மேலும் ஒருங்கிணைக்க உதவுகின்றது. அது தமிழ்நாடு அல்லது கேரளா போன்ற மாநிலத்தில் செயல்படும் விதத்திற்கு முற்றிலும் மாறுபட்டு, பட்டியலினத்தவரை ஹிந்துக்களாக அங்கீகரித்து, பிரதிநிதித்துவத்திற்காக பட்டியலினத்தவர்களாக அவர்களை வடஇந்தியாவில் அணிதிரட்ட பாஜகவை அனுமதித்திருக்கிறது.    

யாதவர்கள் அல்லாதவர்கள், கீழ்நிலையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிப்பதாக வாக்குறுதிகளைத் தருவது, அவர்களிடம் முன்னேற்றம் குறித்து இருக்கின்ற கற்பனையை நிறைவேற்றித் தருவது என்று தன்னை பாஜக முன்னிறுத்திக் கொள்கிறது. பாஜக அளிக்கின்ற இதுபோன்ற உறுதிமொழிகளால் சமூகநீதி குறித்த தங்கள் வெளிப்படையான அரசியலை உதறி விட்டு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களின் நிலைமையும் பட்டியலினத்தவர்களின் நிலைமையிலிருந்து மாறுபட்டு இருக்கவில்லை. இந்த இடத்தில் சமூகநீதிக் கட்சிகள் கீழ்நிலையில் உள்ள இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பிரதிநிதித்துவத்தை நீட்டிப்பதை எது தடுத்தது என்ற கேள்வியை எழுப்ப வேண்டியதுள்ளது. பட்டியலின மக்களின் பல்வேறு துணை சாதியினருக்கிடையே, இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கு இடையே நிலவி வருகின்ற சமூக முற்சார்பு எண்ணங்களைத் தடுத்து நிறுத்த அவர்கள் ஏன் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை, புதிய தாராளவாத வளர்ச்சியின் பொருள், அதன் உள்ளடக்கம் குறித்து கேள்வி கேட்க அவர்கள் ஏன் தவறி விட்டார்கள் என்ற கேள்விகளும் எழுகின்றன. 

தனியார் துறையில் இட ஒதுக்கீடு கோருவது, பெரும்பாலும் பட்டியலின மக்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களில் மிகவும் பின்தங்கியவர்களை அவர்களுடைய இடங்களிலிருந்து அகற்றி இடம் பெயர வைக்கக் கூடிய பெருநிறுவனமயமாக்கலை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஆனந்த் டெல்டும்ப்டே போன்ற பட்டியலின-பகுஜன் அறிஞர்கள் மீது வெறுப்பைத் தூண்டி விடுவது போன்ற செயல்களில் மட்டுமே புதிய தாராளவாத சீர்திருத்தங்களை எதிர்ப்பதில் பலவீனமாக உள்ள பட்டியலின-பகுஜன் அரசியல் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது.   

அண்மையில் தங்களின் கிராமங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களில் பெரும்பாலானோர் பட்டியலினத்தவர்கள் என்பது தெளிவாகத் தெரிந்த போதிலும் அவர்கள் அடைந்த படுதோல்வி இதர பிற்படுத்தப்பட்டவர்களின் அடையாளப் பிரச்சனையாக, சமூகநீதியின் ஒரு பகுதியாகக் கருதப்படவில்லை, பொருளாதாரம் முறைப்படுத்தப்படாதது சமூகநீதிப் பிரச்சனையாக மாறவில்லை என்பதைக் காண்பது திகைப்பாகவே இருக்கிறது. மற்றவர்களையும் உள்ளடக்கிய அனைவருக்குமான கோரிக்கைகளை எழுப்புவதன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகளின் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டுபவர்கள் பெரும்பாலும் பகுஜன் காரணத்தை நீர்த்துப் போகச் செய்பவர்களாக, பிராமணிய அடிமைத்தனத்தின் ஒரு பகுதியாக இருப்பவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.


பிரச்சனையின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியாத பட்டியலின-பகுஜன் அரசியல் தடுமாறி நிற்கிறது. வலதுசாரிகளை இடதுசாரிகளுடன் சமன்படுத்துவது, பட்டியலின-பகுஜன் மக்களைப் பொறுத்தவரை அவர்களுக்கிடையே எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்று வாதிடுவது  இன்றைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய உரையாடலாகியுள்ளது. இடதுசாரிகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற-முற்போக்கு அரசியல் மற்றும் கட்சிகளுக்குள் உள்ள நுட்பமான முற்சார்புகளைச் சுட்டிக்காட்டுவது முக்கியம் என்றாலும், அந்தக் கட்சிகள் எழுப்பியுள்ள மிகவும் அவசியமான பிரச்சனைகளைப் புறக்கணிப்பதற்கான தேவையில்லை. 


போதிய பிரதிநிதித்துவமின்மை என்பதன் அடிப்படையில் இடதுசாரி கட்சிகள் மீது விமர்சனத்தை முன்வைப்பது முக்கியம் என்றாலும் அதற்கு இடதுசாரிகளின் நிலைப்பாடுகள் அனைத்தையும் எதிர்க்க வேண்டும் என்றோ குறிப்பாக தனியார்மயத்தை எதிர்ப்பது, நிலச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது என்று இடதுசாரிகள் செய்திருக்கும் பங்களிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றோ பொருளல்ல. உண்மையில் இத்தகைய பங்களிப்புகளை வெறுமனே சுட்டிக்காட்டுவது பட்டியலின-பகுஜன் தொகுதியை அபகரித்துக் கொள்வதற்கான ஆதரவை வழங்கும் வஞ்சக முயற்சியாகவே கருதப்படுகிறது. அது அரச சோசலிசம், ஹிந்து சட்ட மசோதா, மதச்சார்பின்மை மற்றும் இதுபோன்று அம்பேத்கரின் எழுத்துக்களில் இருந்த பல விஷயங்களில் அவரது ஈடுபாட்டைப் புறக்கணிப்பதாகவே இருக்கிறது. இங்கே விவாதம் மீண்டும் அம்பேத்கரின் பிம்பத்தைக் கையகப்படுத்திக் கொள்வது என்பதாகவே சுருக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. பெரும்பாலும் அது அம்பேத்கர் எதற்கு ஆதரவாக நின்றார் என்பதை மறந்துவிட்டு அவரை பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி கைப்பற்றிக் கொள்ள முயல்வதற்கே உதவியிருக்கிறது.     


பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கைகள் வலுவான சமூக உள்ளடக்கம், பொருளாதாரத் திட்டங்களால் நிறைவேற்றப்படாத வரையில் பாஜகவின் மாக்கியவெல்லியன் உத்திகள் தொடர்ந்து செயல்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் ஒடுக்கப்பட்ட சாதியினரிடையே உள்ள சமூக பாரபட்சங்கள், வகுப்புவாத அணிதிரட்டல் மூலம் எவ்வாறு வழிதவறினோம் என்பதை சமீபத்தில் தன்னை விமர்சித்தவர்களிடமே விவசாயிகளின் இயக்கம் காட்டியுள்ள விதம் குறித்தும் பணிகளை நாம் மேற்கொள்ளத் தொடங்க வேண்டும்.   

இவையனைத்தும் நடைபெறுவதற்கு பரஸ்பரம் உடன்படாத நிலையிலும் காந்தி, நேரு போன்றவர்களைக் கடுமையாக விமர்சித்த அம்பேத்கர் அதே நேரத்தில் அரசியலமைப்பை உருவாக்கும் செயல்பாட்டில் தீவிரமாக இருந்ததைப் போன்று, நாமும் ஒன்றிணைந்து வேலை செய்யும் கலையை கூட்டாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.

https://thewire.in/caste/debate-robbing-representation-of-social-content-helps-bjp-mobilise-dalit-bahujans

Comments