உத்தரப்பிரதேசத்தில் 'ஒடுக்கப்பட்ட சாதிகளின் கட்சி' என்று தன்னைப் பற்றி பாஜக உருவாக்கும் பிம்பம் தகர்க்கப்பட வேண்டும்

 ஹரிஷ் எஸ்.வாங்கடே

உதவிப் பேராசிரியர்

அரசியல் ஆய்வு மையம்

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்


வயர் இணைய இதழ்

 

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

தேசிய, மாநில அளவில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற கடந்த தேர்தல்களில் பட்டியலின-பகுஜன் பிரிவுகளிடமிருந்து கிடைத்த புதிய ஆதரவைக் கொண்டு பாரதிய ஜனதா கட்சி அளப்பரிய வெற்றியைப் பெற்றது. ஆயினும் பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் உள்ளவர்களின் மோசமான நிலை குறித்த எந்தவொரு சிந்தனையும் அந்த மக்கள் உண்மையில் இன்னும் ஏழ்மையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பதையும், ஆட்சியில் இருந்து வருகின்ற பாஜக அரசுகள் அவர்களுடைய சமூக, பொருளாதார நிலைமைகளை அதிக அளவிற்கு மேம்படுத்தித் தரவில்லை என்பதையும் காட்டுவதாகவே இருக்கின்றது.     

குறிப்பாகச் சொல்வதென்றால் அரசு நிறுவனங்களின் முன்னுரிமை, அவற்றின் ஆயத்தமின்மை போன்றவற்றை கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கம் நன்கு அம்பலப்படுத்தியுள்ளது. அந்தக் கொடிய நோயால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு, பலர் இறந்து போயுள்ள நிலையில் உருவாகியுள்ள மாபெரும் நெருக்கடிகள் மீது தீவிரமான அரசால் கவனத்தைச் செலுத்த இயலவில்லை என்பது தெளிவாகியுள்ளது. மேலும் பொதுமக்களின் மோசமான வாழ்க்கைத்தரம், சீரழிந்து வரும் மாநில உள்கட்டமைப்பு, வேலை வாய்ப்புகள் இன்மை, கும்பல் வன்முறைகள், பாலியல் வல்லுறவு, கலவரங்கள் போன்ற சம்பவங்களுடன் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிராக அதிகரித்து வருகின்ற வன்முறைகளும் இன்றுவரையிலும் தொடர்ந்து வருகின்றன. விவசாய சமூகத்திடம் ஏற்பட்டிருக்கும் கவலைகளைக் களைவதில் அரசு சிறிதளவும் ஆர்வம் காட்டவில்லை என்பதையே தொடரும் விவசாயிகள் போராட்டம் வலியுறுத்திக் காட்டுகிறது.     

பொருளாதார வளர்ச்சி, சுகாதாரம், கல்வித் துறைகளில் முன்னேற்றம், விவசாய வளர்ச்சியை மேம்படுத்துதல் போன்றவற்றை அளவிட்டுக் காட்டுகின்ற குறியீடுகளை உத்தரப்பிரதேச பாஜக அரசு மிகவும் மோசமான நிலையில் வைத்திருக்கின்றது என்பதாகவே தற்போதைய அரசியல் விவாதங்கள் இருக்கின்றன. சட்ட ஒழுங்கு குறித்து நிலவுகின்ற மோசமான நிலைமை தற்போதுள்ள அரசாங்கத்தை பல பிரிவுகளில் பிரபலமடையச் செய்துள்ளது. நிலவும் களயதார்த்தங்கள் பாஜகவிற்கு சாதகமாக இல்லை என்பதால், இந்த முறை அந்தக் கட்சியின் வெற்றிப் பயணம் எளிதாக இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம். இருப்பினும் சாதி விளையாட்டுகளையும், சமூகப் பொறியியல் உத்திகளையும் பாஜகவைப் போல வேறு எந்தக் கட்சியாலும் விளையாட முடியாத நிலைமை இருந்து வருவதால், தன்னுடைய நோக்கம் குறித்து பாஜக தைரியத்துடன் இருப்பதாகவே தோன்றுகிறது.    

இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இருபத்தியெட்டு பேரை ஒன்றிய  அமைச்சரவையில் அமைச்சர்களாக நியமித்தது, நீட் தேர்வுகளில் மீண்டும் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அறிமுகப்படுத்தியிருப்பது என்று பாஜக தற்போது மேற்கொண்டுள்ள பிரச்சாரம் இதர பிற்படுத்தப்பட்டவர்களின் நலன்களுக்குச் சேவை புரியும் அமைப்பாக தன்னுடைய பிம்பத்தை உறுதிப்படுத்தி வைத்துக் கொள்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. தனது சமூகப் பொறியியல் உத்திகளைக் கொண்டு தன்னை பட்டியலின-பகுஜன்களை உள்ளடக்கிக் கொண்டுள்ள கட்சியாக முன்னிறுத்திக் கொண்டுள்ள பாஜக தன்னுடைய ஹிந்துத்துவா திட்டத்தை மேம்படுத்திக் கொண்டுள்ளது என்று பத்ரி நாராயண் போன்ற அறிஞர்கள் தொடர்ந்து வாதங்களை முன்னிறுத்தி வருகின்றனர்.      

சமீபத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களிலிருந்து மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட பதினான்கு அமைச்சர்களில் ஒருவராக இணை நிதியமைச்சராகப் பதவியேற்றுள்ள பங்கஜ் சவுத்ரி குர்மி சமூகத்தைச் சேர்ந்தவர்


பாஜகவின் புதிய சாதி அரசியல் சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) அல்லது பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) போன்ற  கட்சிகளின் சமூகநீதி குறித்த பாரம்பரிய அரசியலை குறிப்பாக உத்தரபிரதேசத்தில் அடக்கி வைத்துள்ளது. இப்போது மாநிலத்தில் உள்ள முன்னோடிகளைக் காட்டிலும் பாஜகவின் ஹிந்துத்துவா திட்டத்திற்கே தங்கள் ஆதரவை அளிக்கும் வகையில் பெருமளவிலான பட்டியலின-பகுஜன் குழுக்களை பாஜகவின் சாதி அரசியல் மாற்றி வைத்திருப்பதாகக் கருதப்படுகிறது.    

பாரம்பரியமாக இருந்து வருகின்ற சாதிப் பிளவுகளைப் பயன்படுத்திக் கொள்கின்ற இந்த வலதுசாரி இயக்கம், சமூக முரண் என்ற தீயைக் கொளுத்தி ஜனநாயகச் செயல்முறைகளின் மீது தன்னுடைய ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பிரித்தாளும் உத்திகளைக் கடைப்பிடித்து வருகின்றது. உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றுள்ள கடந்த மூன்று முக்கியமான தேர்தல்களில் பட்டியலினத்தில் உள்ள ஜாதவர்களையும், இதர பிற்படுத்தப்பட்டவர்களிடையே உள்ள யாதவர்களையும் அந்நியப்படுத்தி வைத்த பாஜகவின் உத்தி அதற்கு நல்ல பலனை அளித்துள்ளது. மீண்டும் அத்தகைய பிளவுபடுத்தும் சமூக உத்தியையே உத்தரப்பிரதேசத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் பாஜக தனது கையிலெடுக்கப் போகிறது.     

பட்டியலினத்தவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட மாக்கியவெல்லியன் உத்திகள்

சமூக உயரடுக்கினரின் வர்க்க, கலாச்சார நலன்களைப் பாதுகாக்கும் கட்சி என்று தன்னுடைய பிம்பத்தை பாஜக வளர்த்து வைத்துள்ளது. அம்பேத்கரிய பட்டியலின இயக்கங்களால் ஊக்குவிக்கப்படுகின்ற சமூக நீதி சார்ந்த விழுமியங்கள் பெரும்பாலும் பாஜகவின் ஹிந்துத்துவா திட்டத்திற்கு எதிராகவே இருக்கின்றன.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்டிருந்த அதிக இடங்களில் பாஜக வென்றிருந்தது. 2014ஆம் ஆண்டில் பாஜகவிற்கு கிடைத்த நான்கில் ஒரு பங்கு (24%) பட்டியலின வாக்குகளுடன் ஒப்பிடும்போது 2019ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு (34%) பட்டியலின வாக்குகள் கிடைத்தது என்று லோக்நிதி-சிஎஸ்டிஎஸ் அமைப்பால் நடத்தப்பட்ட 2019க்கு பிந்தைய தேர்தல் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டிருந்தது.     


பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாஜகவால் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பொறியியல் உத்திகளைக் கவனிக்கின்ற போது இதுபோன்ற கூற்றுகளின் பொய்மை தெரிய வரும். உண்மையில் பட்டியலினத்தவர்கள் அதிக அளவில் ஆதரவளித்ததால் பாஜகவின் வெற்றி கிடைத்திருக்கவில்லை. மாறாக பகுஜன் சமாஜ் கட்சியின் பட்டியலின வேட்பாளருக்கு எதிராக பட்டியலினம் சாராத வாக்காளர்களை அணிதிரட்டியே பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாஜகவால் வெற்றி பெற முடிந்தது.     

பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் வேட்பாளர்களின் தலைவிதியை பெரும்பாலும் பட்டியலினம் சாராத வாக்காளர்கள்தான் தீர்மானிக்கின்றார்கள். பகுஜன் சமாஜ் கட்சிக்கென்று இருந்து வருகின்ற பாரம்பரிய ஆதரவு தளமான ஜாதவ் வாக்காளர்களின் வாக்குகள் பட்டியலின வேட்பாளர்கள் பலருக்கிடையில் பிரிந்து போய் விடுவதால் இவ்வாறு பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அந்தக் கட்சி மிகவும் மோசமாகவே செயல்படுகிறது. பகுஜன் சமாஜ் தனது வேட்பாளருக்கென்று குறிப்பிடத்தக்க அளவிலே பட்டியலினம் சாராத வாக்காளர்களின் வாக்குகளை ஈர்க்கத் தவறி விடும் நிலைமையில், மறுபுறத்தில் பாஜகவோ சமூக உயரடுக்கில் தனக்கென்று வலுவான ஆதரவுத் தளத்தை நன்கு தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மேலும் பாஜக பட்டியலினத்தவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடையிலான சமூக உறவுகள் தொடர்ந்து சிதைந்து வந்திருப்பதையும் நன்கு புரிந்து வைத்துக் கொண்டுள்ளது.   

பெரும்பாலும் இதர பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதியினர் சாதிக்கொடுமைகளைக் கடைப்பிடித்து வருவதாகவும், பாரபட்சமான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்ற அவர்கள் பட்டியலினத்தவர்கள் தங்களுடைய அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்குகின்ற போது வன்முறையில் இறங்குவதாகவும் பட்டியலினத்தவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். எடுத்துக்காட்டாக பட்டியலினச் சாதியினர் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விவாதம் நடைபெற்ற போது பட்டியலினத்தவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இடையே விரிசல் ஏற்பட்டது. உள்ளூரில் நிலம் வைத்திருப்பவர்களை அலைக்கழிக்கவும், தண்டிக்கவும் பட்டியலினத்தவர்கள் அந்தச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்ற  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதுபோன்று எழுகின்ற சமூக அச்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் பாஜகவால் தன்னை விவசாயிகள், நில உடைமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கின்ற நம்பகமான கட்சி என்று விளம்பரப்படுத்திக் கொள்ள முடிகிறது. ​​இதர பிற்படுத்தப்பட்டவர்களிடையே இதுபோன்று பாரம்பரியமாக இருந்து வருகின்ற பட்டியலின விரோத உணர்வுகளைத் தேர்தலின் போது பயன்படுத்திக் கொண்டு அவர்களைத் தனது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை நோக்கி பாஜகவால் ஈர்த்துக் கொள்ள முடிகிறது.    

பட்டியலினத்தவருக்கென்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்களுக்கு இடையில் வெளிப்படையாக இருந்து வருகின்ற நம்பிக்கையின்மையை சற்றும் நேர்மையற்ற முறையில் துஷ்பிரயோகம் செய்து பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. பட்டியலினத்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடையில் எந்தவிதத்திலும் சமூக நட்பு உருவாகி விடாத வகையில் உள்ளூர் மோதல்களை, அந்தப் பகுதிகளில் உள்ள சாதி அதிகாரப்படிநிலையை பாஜக பராமரித்துப் பேணுகிறது. பட்டியலினத்தின் மீதான எதிர்ப்பு என்ற துருவமுனைப்பை உருவாக்குவதன் மூலம் பட்டியலினத்தவருக்கென்று ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பாஜகவால் எளிதாக வெற்றியடைந்து விட முடிகின்றது.    

ஹிந்துக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துவது, பட்டியலினத்தவர்கள் மீதான சாதிக் கொடுமைகள் மற்றும் பொருளாதாரச் சுரண்டல்கள் போன்ற பிரச்சனைகளில் தலையிடுவது போன்ற செயல்பாடுகளின் மூலம் கணிசமான அளவிற்கு சமூக நல்லிணக்கத்தைக் கொண்டு வருவதற்கு இந்த வலதுசாரிகள் சிறிதும் ஆர்வம் காட்டுவதே இல்லை. மாறாக பட்டியலினத்தவர்கள், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கிடையே சமூக ஒற்றுமை உருவாகக்கூடிய எந்தவொரு சாத்தியத்தையும் குலைக்கின்ற வகையிலேயே தொடர்ந்து அவர்கள் சதி செய்து வருகின்றனர். தங்களுடைய தேர்தல் வெற்றிகளுக்காக சமூகத்தைப் பிளவுபடுத்தி, தேர்தல்களின் போது ஒருவருக்கு எதிராக மற்றவரை நிறுத்தி இந்த வலதுசாரிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.    ​​  

யாதவர்களை ‘மற்றவர்களாக்கி’

1970களின் நடுப்பகுதியில் உருவான அரசியல் மாற்றத்தின்போது ​​ஜனதா தளம் என்ற பரிசோதனையின் கீழ் விவசாய சாதிகளை தன்வசம் ஈர்க்கக்கூடிய வலுவான தலைமை தோன்றியது. விரைவிலேயே முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ், போன்ற தலைவர்களின் பெயர்கள் அனைத்துக் குடும்பங்களிலும் உச்சரிக்கப்படும் பெயர்களாக மாறின. மக்கள் அந்த தலைவர்களை சமூக நீதி இயக்கத்தின் முன்னணித் தலைவர்களாகக் கண்டனர். உத்தரப்பிரதேசம், பீகாரில் சமூக உயரடுக்கினர் கொண்டிருந்த வழக்கமான அரசியல் கட்டுப்பாடுகள் யாதவ் தலைமையின் கீழ் கலைக்கப்பட்டன. அதன் விளைவாக பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் அரசியலில் முன்னணி பாத்திரங்களை வகிக்க ஆரம்பித்தன. புரட்சிகர ஆற்றலைத் தன்னிடம் கொண்டிருந்த இத்தகைய சலசலப்பு ஜனநாயகச் செயல்முறைகளை அழுத்தமாகத் தீவிரப்படுத்தியிருக்க முடியும் என்றாலும் வகுப்புவாத ஹிந்துத்துவ அரசியலின் எழுச்சி காரணமாக அந்த சமூக நீதி அரசியல் படிப்படியாகச் சரிந்து போனது.  


இன்றைக்கு அரசு நிறுவனங்கள் மற்றும் பிற சொத்துக்களை ஏகபோகமாக அனுபவித்த ஊழல் அரசியல் வர்க்கமாக யாதவர்கள் மீது அன்றாடம் நடந்து வருகின்ற சாதாரண அரசியல் விவாதங்களில் கண்டனம் சுமத்தப்படுகிறது. குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற, முஸ்லீகளின் ஆதரவை நம்பியிருக்கின்ற கட்சிகளாக சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தள் போன்ற கட்சிகள் இழிவுபடுத்தப்படுகின்றன. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைப் புறக்கணித்தனர், இடஒதுக்கீட்டுக் கொள்கைகளில் யாதவர்கள் முக்கிய பங்குகளைப் பெற அனுமதித்தனர் என்று அந்தக் கட்சிகளை வலதுசாரி விமர்சகர்கள் கண்டித்து வருகின்றனர்.


யாதவர்களுக்கு எதிராக விரோதத்தைத் தூண்டுவதன் மூலம் குர்மிக்கள், மௌரியாக்கள், லோதிக்கள், குஷ்வாஹாக்கள் போன்ற யாதவர்கள் அல்லாத விவசாய சாதியினரை பாஜக துருவப்படுத்தி அவர்களை சுயாதீனமான சமூக, அரசியல் அலகுகளாக வளர்த்தெடுத்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர் யாதவர்கள் மீது தாங்கள் கொண்டுள்ள வெறுப்பு, தவறான எண்ணங்கள் காரணமாக தங்களுடைய அரசியல் வாய்ப்புகளுக்கு மிகவும் வசதியான கட்சியாக சமூக உயரடுக்கினர் அதிகமுள்ள பாஜகவைக் காண்கின்றனர்.  

ஹிந்துக்கள் பல்வேறு சாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளதையும், சிறிதளவில்கூட சமூகப் பிணைப்பு, கலாச்சாரக் கூட்டணிகள், பொதுவான அரசியல் நோக்கங்கள் பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே இல்லாமல் இருப்பதையும் பாஜகவின் தேர்தல் பண்டிதர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். ஜனநாயகத்தில் தங்கள் சொந்த சாதியினர் அல்லது தங்களுடைய சமூக, கலாச்சார நலன்களுக்குச் சேவை செய்யும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்களையே மக்கள் பெரும்பாலும் விரும்புகிறார்கள். இத்தகைய அரசியல் நடத்தையை எந்தவிதமான நெறிமுறைகளுமின்றி பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. முஸ்லீம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வெறுப்புணர்வுப் பிரச்சாரத்தைப் போலவே, யாதவர்கள், சமாஜ்வாதி கட்சியினருக்கு எதிராகவும் ஆழ்ந்த பாரபட்சமான பிரச்சாரம் பாஜகவால் மேற்கொள்ளப்படுகிறது. மற்ற விளிம்புநிலை சமூகங்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமாஜ்வாதி கட்சியின் திறன் குறித்து தொடர்ந்து சந்தேகங்களை எழுப்பி வருகின்ற வலதுசாரிகள் தங்களையே சிறந்த மாற்றாக அந்த சமூகங்களின் முன்பாக முன்னிறுத்திக் கொள்கின்றனர்.


பாஜகவின் வெறுப்பு அரசியல்

‘வெளியாட்கள்’, ‘மாட்டிறைச்சி உண்ணும் இழிந்தவர்கள்’, ‘தேச விரோதிகள்’, ‘பயங்கரவாதிகள்’ என்று முத்திரைகளைக் குத்தி முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக பரந்த அளவில் வகுப்புவாத விரோதத்தை பாஜக-ஆர்எஸ்எஸ் கூட்டணி திணித்து வருகின்றது. அதுபோன்ற ஆக்ரோஷமான, போர்க்குணமிக்க வகுப்புவாத உரையாடல்கள், அந்த உரையாடல்களுக்குள் நிறைந்துள்ள வலுவான உணர்ச்சிகரமான, உணர்வுப்பூர்வமான குறிப்பான்கள் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினரை மயக்கி அவர்களை ஹிந்துத்துவாத் திட்டங்களுக்கு நெருக்கமானவர்களாக ஆக்கி விடுகின்றன. வாழ்வாதாரம், சமூகப் பாதுகாப்பு, பொருளாதார முன்னேற்றம் போன்ற முக்கியமான அரசியல் பிரச்சனைகள் குறித்த எந்தவொரு முக்கியமான விவாதத்தையும் இத்தகைய உரையாடல்கள் அனுமதிக்கப் போவதில்லை. மாறாக தங்களுக்கு ஆண்மை, வீர உணர்வு, சமூகத்தின் கூட்டு உணர்வு போன்றவற்றை அந்த உரையாடல் வழங்குவதாகக் கருதுகின்ற விளிம்புநிலைச் சமூகங்களில் உள்ள குறிப்பிடத்தக்க பிரிவினர் ஆக்ரோஷ வகுப்புவாதக் கும்பலின் ஆதரவாளர்களாக மாறுகின்றனர்.


முஸ்லீம் எதிர்ப்பு அரசியல் குறித்த சொல்லாடல்கள் கடந்த காலத்தில் தங்களுக்குப் போதுமான பலனை அளிக்கவில்லை என்பதையும், பரந்த சமூக ஆதரவைப் பெறுவதற்கு தன்னுடைய அரசியல் உத்திகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் பாஜக நன்கு உணர்ந்தே இருந்தது. அத்தகைய தேவையிலிருந்தே பாஜகவின் வஞ்சகமான சமூகப் பொறியியல் தந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன.

வகுப்புவாத ஹிந்துத்துவா, மாக்கியவெல்லியன் சாதிய உத்திகள் போன்றவை தன்னுடைய ‘மதச்சார்பற்ற’ எதிர்ப்பாளர்களைத் தோற்கடிப்பதற்காக பாஜக உருவாக்கிய கொடிய ஆயுதங்களாகும். அரசியலில் அல்லாடிக் கொண்டிருக்கும் சாதியினர் (யாதவ் மற்றும் ஜாதவ்) மீது ஒடுக்கப்பட்ட சாதியினர் கொண்டிருந்த சமூகப் பொறாமைகள், பதற்றத்தை பாஜக வெளிப்படையாகப் பயன்படுத்திக் கொண்டது. பட்டியலின-பகுஜன்களுக்கு இடையே ஆதிக்க சமூக உயரடுக்கினருக்கு எதிராக உருவாகும் வலுவான அரசியல் ஒற்றுமைக்கான சாத்தியக்கூறுகளிலிருந்து அவர்களைப் பிரித்து தன்வசம் அது கவர்ந்திழுத்துக் கொண்டது. எதிர்க்கட்சிகளும்ள் ஒடுக்கப்பட்ட சமூகங்கள், பிற விளிம்புநிலை குழுக்களின் நலனுக்கான அர்ப்பணிப்பு கொண்ட கட்சிகளாக தங்களைக் கண்டு கொள்வதில் தோல்வியையே கண்டிருந்தன.   


பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஏழை பட்டியலின-பகுஜன் மக்களிடம் தங்கள் மீதான நம்பிக்கையை உருவாக்கத் தவறியதன் மூலம் அவை மிகவும் சுதந்திரத்துடன் பாஜக செயல்பட அனுமதித்துள்ளன. பாஜகவின் ஹிந்துத்துவா அரசியலின் மேலாதிக்கம், மாக்கியவெல்லியன் சாதி உத்திகளில் இருந்து ஒடுக்கப்பட்ட சாதியினரை விடுவிப்பதில் வெற்றி பெற்றால் மட்டுமே உத்தரப்பிரதேசத்தில் எதிர்வரும் அரசியல் போரில் எதிர்க்கட்சிகளால் வெற்றி பெற முடியும்.  

https://thewire.in/government/is-bjp-really-a-party-of-the-subaltern

Comments