கௌதம் I .மேனன்
இந்தியா
ஃபோரம்
கோவிட்-19 முதல் அலையின் போது குறைந்த எண்ணிக்கையில்
ஏற்பட்ட இறப்புகளுக்குப் பின்னணியில் இந்தியாவிற்கு என்று சிறப்பு விதிவிலக்கு
எதுவும் காரணமாக இருந்திருக்கவில்லை. மாறாக குறைந்த எண்ணிக்கையிலான இறப்பு
விகிதத்தின் அடிப்படையில் இருந்த நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளத் தவறியதால்
ஒருவித மனநிறைவு தூண்டப்பட்டிருந்தது. அதன் விளைவாக இப்போது மிகுந்த துயரில் நாடு ஆழ்ந்து
போயிருக்கிறது.
கோவிட்-19 தொற்றின்
இரண்டாவது அலை இந்தியாவில் 2021 பிப்ரவரி நடுப்பகுதியில் தொடங்கியது. ஆரம்பத்தில் இரண்டாவது
அலை மகாராஷ்டிராவில் அகோலா, அமராவதி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்ற சிறிய
மாவட்டங்கள், நகரங்களையே மையமாகக் கொண்டிருந்தது. அங்கே குடும்பங்கள் ஒட்டுமொத்தமாகப்
பாதிக்கப்பட்டிருப்பதாகவும், பாதிப்பு உள்ளவர்கள் விகிதம் பரிசோதனையில் ஐம்பது
சதவீதத்திற்கும் அதிகமாக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. அவ்வாறு
வெளியான செய்திகளை முதலில் கடுமையாக மறுத்த அரசு விரைவிலேயே அதை உறுதிப்படுத்தவும்
செய்தது. 'யூகே வேரியன்ட்' என்றழைக்கப்படுகின்ற தொழில்நுட்பரீதியாக பி.1.1.7 என்று
பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸின் திரிபுடன் தொடர்புடைய பாதிப்புகள் அதற்கடுத்து பஞ்சாபில்
தோன்றத் தொடங்கின. பின்னர் தில்லிக்கு வேகமாகப் பரவிய பிறகு பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியது.
2021 ஏப்ரல் தொடக்கத்தில்
தினசரி பாதிப்புகள் முதல் அலையின் உச்சத்தில் இருந்த பாதிப்பை (98,000 நோயாளிகள்) கடந்து
சென்றன. அதற்குப் பிறகு தொடர்ந்து தினசரி உருவாகும் புதிய பாதிப்புகள்
அதிகரித்துக் கொண்டே இருந்தன. 2021 ஏப்ரல் மாத இறுதியில் சென்ற ஆண்டு முதல்
உச்சத்தில் இருந்ததைவிட நான்கு மடங்கு அதிக எண்ணிக்கையில் பாதிப்பு இருந்தது. இப்போது
வரை அந்த அதிகரிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தினசரி பாதிப்புகள் தற்போது
410,000க்கு மிக அருகில் உள்ளன. ஒரே நாளில் (மே 7) இறப்பு எண்ணிக்கை
நான்காயிரத்தைத் தாண்டியுள்ளது. பெரும்பாலும் இந்த எண்ணிக்கை விரைவில் நிலைபெறும்
என்று கணித மாதிரியை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகள் நம்புகின்றன. ஆயினும்
கிடைக்கின்ற தரவுகள் நிச்சயமற்ற தன்மை கொண்டவையாக
இருப்பதால் நோய் எவ்வாறு தொடர்ந்து பரவி வருகிறது என்பதற்கான மாதிரியை
உருவாக்குவதற்கான முயற்சிகள் அனைத்தும்
சிக்கலில் இருக்கின்றன.
2020 செப்டம்பர்
நடுப்பகுதியில் நிகழ்ந்த முதல் அலையின் உச்சத்திற்கும், இரண்டாவது அலையின்
தொடக்கத்திற்கும் இடையில் இருந்த இடைவெளி சுமார் ஐந்து மாதங்கள் ஆகும். அந்தக் காலகட்டத்தின்
நடுப்பகுதியில் ஆரம்பகட்ட தீவிர பொதுமுடக்கத்துடன் பிற கட்டுப்பாடுகள்
ஏற்படுத்தியிருந்த சோர்வு புரிந்து கொள்ளக் கூடியதாகவே இருந்தது. இந்தியாவில்
கோவிட்-19 தொற்றுநோயின் எதிர்காலப் பாதை குறித்த அதிகாரப்பூர்வ சிந்தனையில்
கணிசமான பங்கை ஏற்படுத்தியிருக்கக் கூடிய சிந்தனைகளை உருவாகி இருக்கக் கூடிய
காலமாகவே அந்தக் காலகட்டம் இருந்தது.
2021ஆம் ஆண்டு
தொடக்கத்தில் இந்தியாவின் கோவிட்-19 அனுபவம் விதிவிலக்குடன் இருப்பதான கருத்து வெளிப்படையாக
விவாதிக்கப்பட்டது. 2021 ஜனவரி நடுப்பகுதியில் இந்தியாவில் தினசரி பாதிப்புகள்
தொடர்ந்து குறைந்து வந்தன. தினசரி பாதிப்புகள் சுமார் 98,000 என்று உச்சத்தில்
இருந்த நிலை மாறி ஒவ்வொரு நாளும்
பாதிப்புகள் குறைந்து சுமார் 16,000 என்ற அளவிற்கு வந்து சேர்ந்தது.
இந்தியாவில் ஏற்பட்ட
கோவிட்-19 இறப்புகளின் மொத்த எண்ணிக்கையை இந்திய மக்கள்தொகையின் அளவைக் கொண்டு
வகுத்து அதை பிரேசில், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிட்ட போது இந்தியாவில்
மிகக் குறைவான மக்களே தொற்றுநோயால் இறந்து கொண்டிருப்பதாகத் தெரிய வந்தது. நாடுகளுக்கிடையிலான வித்தியாசம் மிகத் தெளிவாக இருந்தது.
ஜனவரி 15ஆம் தேதிக்குள் பத்து லட்சம் மக்கள்தொகைக்கு ஏற்பட்ட கோவிட்-19 இறப்பு விகிதம் இந்தியாவில் 110, பிரேசிலில் 987, அமெரிக்காவில் 1,200
என்றிருந்தன. கோவிட்-19 இறப்பு விகிதம் இந்தியாவில் மட்டுமல்லாது, அதன் அக்கம்
பக்க நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தானிலும் கூட இந்தியாவில் இருந்ததைப் போல மிகவும்
குறைவாகவே இருந்தன.
இந்தியர்களை - பொதுவாக
தெற்காசியர்களைப் பாதுகாக்கும் ஏதோவொரு காரணம்
தனித்து இருக்கிறதா? அப்படியொரு காரணம் உண்மையில் இருந்திருக்கும் என்றால்,
முந்தைய அலைகளை விட புதிய அலைகள் அதிகப்
பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்ற உலகின் பெரும்பகுதிகளில் நடந்துள்ளதைப் போல இந்தியாவை
ஒருபோதும் பல அலைகள் தாக்கப் போவதில்லை எனக் கருதுவது நியாயமானதாகவே இருந்திருக்கும்;
இந்தியாவில் ஒருவேளை பல அலைகள் தோன்றினாலும் அவற்றால் ஏற்படப் போகும் இறப்புகள்
மீது செலுத்த வேண்டிய கவனம் மிகக் குறைவாகவே இருந்திருக்கும்; தவிர்க்க முடியாததாக
இருந்து வருகின்ற உலகளாவிய தொற்றுநோயின் பரவல் இந்தியாவில் நிச்சயம் தடுத்து
நிறுத்தப்பட்டிருக்கும். கோவிட்-19இன்
இரண்டாவது அலைக்கு எதிரான இந்தியாவின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்கு இதுபோன்ற
நம்பிக்கைகளே பெரும்பாலும் அடித்தளமாக இருந்தது என்பதால் இந்த கேள்விக்கான
தீர்வைக் காண்பது மிக முக்கியமானதாக இருக்கிறது.
கோவிட்-19 நோய்த்தொற்றால்
ஒருவர் இறந்து விடுவாரா இல்லையா என்பதை எது தீர்மானிக்கிறது? தனிநபரைப் பொறுத்தவரை
வயது மட்டுமே மிக முக்கியமான காரணியாக இருக்கிறது. ஏற்கனவே இருந்து வருகின்ற
உடல்நலப் பிரச்சனைகளால் அது ஓரளவு சிக்கலாகும் என்றாலும் உடல் நலப் பிரச்சனைகள் மீளமுடியாதவையாக இருக்கப் போவதில்லை. இறப்புகளின்
எண்ணிக்கையை நோய்த்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கையால் வகுக்கும் போது நோய்த்தொற்று இறப்பு விகிதம் எனப்படுகின்ற
ஐ.எஃப்.ஆர் (இன்ஃபெக்சன் ஃபேட்டாலிட்டி ரேசியோ) கிடைக்கின்றது. வயது அதிகரிக்க
அதிகரிக்க ஐ.எஃப்.ஆர் அதிவேகமாக அதிகரிக்கின்றது. நடைமுறையில் பத்து வயதிற்கு
குறைவான குழந்தைகளுக்கு இல்லை என்று சொல்லக் கூடிய அளவிலே மிகமிகக் குறைவாக
இருக்கின்ற இந்த இறப்பு விகிதம், அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்களைப் பொறுத்தவரை
இன்ஃப்ளூயன்ஸாவை
விட கூடுதலாக இறப்பை ஏற்படுவதாக இருக்கிறது.
தொற்றுநோய் பாதிப்பு இறப்பு
விகிதம் எனப்படுகின்ற சி.எஃப்.ஆர் (கேஸ் ஃபேட்டாலிட்டி ரேசியோ) ஐ.எஃப்.ஆரிலிருந்து முற்றிலும்
வேறானது. இறப்புகளின் எண்ணிக்கையை கோவிட்-19 இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட
நோயாளிகளின் எண்ணிக்கையால் வகுத்து கிடைப்பதாக அது இருக்கிறது.
‘உறுதிப்படுத்தப்பட்டது’ என்பது ஆர்டி-பி.சி.ஆர் சோதனை முடிவை அடிப்படையாகக்
கொண்டிருக்கிறது. பொதுவாக பாதிக்கப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் நோயின் அறிகுறி
எதுவுமில்லாமலேயே இருப்பதால் கோவிட்-19ஐப் பொறுத்தவரை ஐ.எஃப்.ஆர், சி.எஃப்.ஆர்
என்ற இரண்டும் மிகவும் வேறுபட்டே இருக்கின்றன. அவர்கள் மிகவும் லேசான அறிகுறிகள்
அல்லது அறிகுறிகளோ இல்லாததால் வைரஸால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.
எனவே சி.எஃப்.ஆரை விடக் குறைவாகவே உள்ள ஐ.எஃப்.ஆர் மதிப்பு, நேரடியாக அளவிடப்பட
முடியாததால் பெரும்பாலும் ஊகத்தின் அடிப்படையிலானதாகவே இருக்கிறது. ஆனாலும் சி.எஃப்.ஆர்
மதிப்பை இறப்பு மற்றும் நோயாளிகளின் பதிவுகளிலிருந்து நேரடியாகப் பெற முடியும்.
மேலே குறிப்பிடப்பட்ட சி.எஃப்.ஆர், கோவிட்-19 மூலம் ஏற்படுகின்ற இறப்பு விகிதம்
ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகும்.
ஒப்பீட்டளவில் இந்தியா
மிகவும் இளமையான நாடு. அதன் இடைநிலை வயது 28.4 ஆண்டுகள்
என்றிருக்கிறது. இந்தியாவிற்கு அருகிலுள்ள மற்ற நாடுகளும் அதிகம் மாறுபட்டிருக்கவில்லை.
இடைநிலை வயது பாகிஸ்தானில் 22.8 எனவும், வங்கதேசத்தில் 27.6 என்றும் இருக்கின்றன.
அமெரிக்காவில் இடைநிலை வயது 38.4, இங்கிலாந்தில் 40.5, பிரேசிலில் 33.5 என்று இந்தியாவிடமிருந்து
அதிக வேறுபாடுகளுடன் இருக்கிறது. அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்தியாவில்
ஆறு சதவீதம் மட்டுமே இருக்க அமெரிக்காவில் அது 16.5%, பிரேசிலில் 9.6% என்றிருக்கிறது.
மிகவும் இளமையான நாடாக இருப்பதால் இந்தியாவில் கோவிட்-19ஆல் இறக்கும் வாய்ப்பு குறைவாகவே
இருக்கிறது. இதுபோன்ற நிலைமை கோவிட்-19 இறப்பைப் பொறுத்தவரை அமெரிக்காவிற்கும்
இந்தியாவிற்கும் இடையிலான முரண்பாட்டை தானாகவே விளக்குவதாக இருக்கிறது. இதைத் தவிர
இன்னும் வேறு ஏதாவது காரணிகள் இருக்கின்றனவா?
தெற்காசிய மக்களிடம் உள்ள
பிரத்தியேகமான உயிரியல் காரணிகள் எவை? கோவிட்-19ஐப் பொறுத்தவரை இந்தியர்கள் மரபணு
ரீதியாகச் சிறந்தவர்களாக இருக்கக்கூடும். இருந்தபோதிலும் அமெரிக்காவிலும்
இங்கிலாந்திலும் குடியேறிய தெற்காசியர்கள் ஏதோவொரு காரணத்தால் காகசீயர்களை (வெள்ளை
இனத்தவரை) விட சற்று கூடுதல் ஆபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. நுண்ணுயிரியத்தின்
குறிப்பிடப்படாத சில அம்சங்களுடன் கூடுதலாக தனிப்பட்ட நபர்களின் குடல்
பாக்டீரியாக்கள், உணவு, இருப்பிடம் உள்ளிட்டு மற்ற ஏதாவது காரணிகள் அதற்கான
காரணமாக இருக்க முடியுமா? உணவு நடைமுறைகள், சமூக-பொருளாதார வர்க்கம் போன்றவற்றின்
அடிப்படையில் இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே இந்த மாறிகள்
அனைத்தும் கணிசமாக மாறுபட்டே இருக்கும் என்பதை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே போடப்பட்டுள்ள தடுப்பூசிகள் குறிப்பாக பி.சி.ஜி தடுப்பூசி அவ்வாறான இன்னொரு
காரணமாக இருக்க முடியுமா? ஆனால்
பிரேசிலிலும் கட்டாய பி.சி.ஜி தடுப்பூசி உட்பட அனைவருக்குமான தடுப்பூசி திட்டம்
கடந்த பல ஆண்டுகளாகவே வெற்றிகரமாக நடைமுறையில் இருந்து வருகிறது என்பது நினைவில்
கொள்ளத்தக்கது.
'தூய்மை கருதுகோள்' என்பதை
ஏற்றுக் கொள்வதன் மூலம், வெளிப்புற அச்சுறுத்தலுக்கு எதிரான நோயெதிர்ப்பு
மண்டலத்தின் எதிர்வினையை இந்தியர்களைச் சூழ்ந்துள்ள, பெரும்பாலும் அவர்கள் பழக்கப்பட்டிருக்கின்ற
ஒப்பீட்டளவில் சுகாதாரம் குறித்ததாக மிகக் குறைவான அளவில் உள்ள தூய்மை நிலைமைகளால்
மழுங்கடிக்க முடியும் என்பதை அந்தக் கருதுகோள் உறுதி செய்வதைக் காண முடியும். கோவிட்-19
வைரஸுக்கு எதிரான உடலின் நோயெதிர்ப்பு தொடர்பான கூடுதலான எதிர்வினை மோசமான
மருத்துவ விளைவுகளை ஏற்படுத்துவதாக இருப்பதால் அது ஒரு தர்க்கரீதியான சாத்தியமாகவே
இருக்கிறது. உலகின் பல நாடுகளில் உள்ள தூய்மை மற்றும் சமூகப் பொருளாதார
நிலைமைகளுடன் கோவிட்-19 இறப்பை இணைத்துப் பார்ப்பதன் மூலம் இந்தக் கருதுகோள்
மிகவும் கவனத்துடன் ஆராயப்பட்டுள்ளது. இதைத்தான் சுற்றுச்சூழல் சார்புறவு என்றழைக்கின்றோம். அது
மக்களை பெரிய குழுக்களாக ஒன்றாக இணைத்து - இங்கே நாடுகளைக் குறிக்கிறது -
தனிநபர்களுக்கானதாக இருக்க வேண்டியவை குறித்து குழு அளவிலான அறிக்கைகளை வெளியிடுகின்றது.
இருப்பினும் தொற்றுநோயியல்
கருதுகோள்களுக்கான ஆதாரங்களின் வரிசையில் இந்த சுற்றுச்சூழல் சார்புறவுகள் மிகப்
பலவீனமாக இருப்பதாகவே கருதப்படுகின்றன. மற்ற அமைப்புகளில் அவை தவறானவை என்றும்
நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே உண்மையான தூய்மைக்
கருதுகோள் என்பது வேறு எதையோ விளக்குவதாகவே இருக்கிறது. குறைவான வளர்ச்சியடைந்த
நாடுகளைக் காட்டிலும் வளர்ந்த நாடுகளில் ‘தன்னுடல் தாக்கும்’ நிலைமைகள்
ஒப்பீட்டளவில் அதிகரித்தே காணப்படுகின்றன. எப்படியிருந்தாலும் அத்தகைய கருதுகோளை மருத்துவம்
மற்றும் நோயெதிர்ப்பு குறித்து தனிப்பட்ட நபர்கள் அளவிலே இருக்கின்ற தரவுகளைக்
கொண்டு மேம்படுத்திட வேண்டும்.
அதிக அளவில் காற்று
மாசுபாட்டிற்கு உள்ளாதல், புகைபிடித்தல், அசைவ உணவு
போன்றவை குறித்த சிந்தனைகளும் இருந்து வருகின்றன. ஆனால் இவை எதுவுமே குறிப்பாக
இந்தியாவிற்கு மட்டும் என்று தனித்துவமானவையாக இருக்கவில்லை என்பதே பிரச்சனையாக உள்ளது.
இறப்பு புள்ளிவிவரங்களை
மீண்டும் பார்க்கலாம். இறப்பு எண்ணிக்கையைத் தவறாக எண்ணுவதே கோவிட்-19ஆல் ஏற்படுகின்ற
இறப்பைக் குறைப்பதற்கான எளிய வழியாகும். தொற்றுநோயின் முதலாவது ஆண்டில் சுமார்
100,000 பேர் இறந்தனர். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 275 பேர் என்ற அளவில் இறப்பு இருந்தது.
மிகச் சாதாரணமான ஆண்டில் தினமும் 27,000 முதல் 28,000 இந்தியர்கள் இறந்து
போகின்றனர். சுமார் 700 மாவட்டங்கள் இருக்கின்ற இந்தியாவில் மாவட்ட அளவில் பார்த்தால் இறப்பு எண்ணிக்கை ஒரு
மாவட்டத்திற்கு ஒரு நாளைக்கு சுமார் நாற்பது என்ற அளவில் இருக்கும். பெரும்பாலும் இந்தியர்கள்
இன்னும் வீட்டிலேயே இறந்து போகின்ற நிலையில் இந்த அடிப்படை எண்ணிக்கையைக்
காட்டிலும் சிறிது கூடுதலாக ஏற்படும் இறப்புகள் அதிக கவனத்தை ஈர்க்கும் என்று
எதிர்பார்க்க முடியாது. அடிப்படை எண்ணிக்கையில் 1% இறப்பு அதிகரிப்பு ஒட்டுமொத்தமாக
இந்தியாவில் ஒரு நாளைக்கு ஏற்படுகின்ற சுமார் 280 இறப்புகளை அதிகரிக்கவே செய்யும் என்றாலும்
நடைமுறையில் அது கவனிக்கத்தக்கதாக இருக்காது. 2020 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரையிலான காலகட்டத்தில்
கோவிட்-19ஆல் இறந்ததாக ஒரு நாளைக்கு 275 என்று பதிவு செய்யப்பட்டுள்ள இறப்பு
எண்ணிக்கையுடன் அது ஒப்பிடத்தக்கதாக இருக்கும். இந்தியாவின் கோவிட்-19 இறப்பு
புள்ளிவிவரங்களை இந்தியரல்லாதவர்களுடன் இணைத்துப் பார்க்க கணிசமான வாய்ப்பு
உள்ளது. முதல் அலையின் போது குறைவாக இருந்த இறப்புகளின் எண்ணிக்கை குறித்த
நம்பகமான மதிப்பீடுகள் உண்மையில் இறப்பு இரண்டு முதல் மூன்று மடங்கு வரையில் அதிகமாக இருந்திருக்கலாம் என்கின்றன.
முதல் அலையின் போது
ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஏராளமான பத்திரிகை
செய்திகள் வெளிவந்துள்ளன. இத்தகைய செய்தியறிக்கைகள் இறந்தவர்கள் குறித்த
அதிகாரப்பூர்வமான பதிவுகளுக்கும், தகனம் செய்யப்பட்ட, புதைக்கப்பட்டவர்கள் குறித்த பதிவுகளுக்கும் இடையில்
இருக்கின்ற முரண்பாடுகளை முக்கியமாக எடுத்துக் கொண்டு ஆராய்ந்தன. எடுக்கப்பட்ட
மாதிரிகள் தலைநகர் தில்லியில்கூட சுமார் 15% இறப்புகளே அதிகாரப்பூர்வமாகப் பதிவு
செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றன என்றாலும் அதிக வருமானம் பெறுகின்ற
நாடுகளுக்கென்று தரப்படுத்தப்பட்டுள்ள ஐ.எஃப்.ஆர் இந்த மதிப்பீட்டிற்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதால்
அது கேள்விக்குள்ளானதாகவே இருக்கிறது. கோவிட்-19 இறப்புகளாகப் பதிவு செய்யப்பட
வேண்டிய இறப்புகளை இணைநோய்களால் ஏற்பட்ட இறப்புகளாகப் பதிவு செய்வதால் இறப்புகளின்
எண்ணிக்கை மேலும் மறைக்கப்படுகிறது. வீட்டில் இறப்பு நிகழும் போது கோவிட்-19
நோயாளியுடன் நாமும் தொடர்புபடுத்தப்படுவோம் என்ற அச்சம் காரணமாக, பரிசோதனைகள்
செய்யப்படாமலே உடல்களைத் தகனம் செய்வது அல்லது அடக்கம் செய்வது என்று சில
சந்தர்ப்பங்களில் குடும்பங்கள் ஏற்பாடு செய்திருக்கக் கூடும்.
இறுதியாக 100,000 மக்கள்
அலகுகளில் இறப்பு விகிதத்தை வகுத்துக் கணக்கிடப் பயன்படுத்தப்படுகின்ற பகுவெண்ணாக
ஒட்டுமொத்த இந்திய மக்கள் தொகை இருக்கிறது. இந்தியா ஒரேவிதமான சிறிய நாடாக இருந்திருந்தால்
மக்கள் அனைவரும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்ற கணக்கில் ஒட்டுமொத்த
மக்கள்தொகையையும் இதுபோன்று பகுவெண்ணாகப் பயன்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருந்திருக்கும்.
ஆனால் சுமார் 22.1 கோடி மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் மட்டும்
பிரேசில் நாட்டை விட அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். உத்தரப்பிரதேசம்
மாநிலமாக இல்லாமல் ஒரு நாடாக இருந்திருக்குமென்றால் மக்கள்தொகை அடிப்படையில் அந்த
மாநிலம் உலகிலேயே ஐந்தாவது மிகப்பெரிய நாடாக இருந்திருக்கும். எனவே கோவிட்-19
இறப்பு விகிதத்தைக் கணக்கிடும்போது வகுப்பதற்காக இந்தியாவின் ஒட்டுமொத்த
மக்கள்தொகையை பகுவெண்ணாகச் சேர்ப்பது உண்மையில் சரியானதுதானா என்ற கேள்வி எழுகின்றது.
பெரிய அளவில் நடத்தப்பட்ட சீரம் வழி கணக்கெடுப்புகளிலிருந்து சில உள்ளுணர்வுகள் தோன்றுகின்றன. அந்தக் கணக்கெடுப்பு சீரோபாசிட்டிவிட்டி என்றழைக்கப்படுகின்ற கொரோனா வைரஸை
எதிர்கொள்கின்ற ஆன்டிபாடிகள் உள்ளவர்களின் எண்ணிக்கையின் சதவீத மதிப்பீட்டைத்
தருகின்றது. சென்ற ஆண்டு தொற்றின் போது 2020 மே-ஜூன் மாதங்களில் இந்திய மருத்துவ
ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) நடத்திய முதலாவது சீரம் வழி ஆய்வில்
இந்தியாவில் சுமார் 0.7% பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. ஐ.சி.எம்.ஆரின் மூன்றாவது சீரம் வழி ஆய்வின்படி அந்த எண்ணிக்கை 2021 ஜனவரியில்
இருபது சதவீதமாக அதிகரித்திருந்தது.
ஆனால் அந்த அதிக அளவிலான எண்ணிக்கையும் முக்கியமான ஒன்றை மறைப்பதாகவே இருக்கிறது. கிராமப்புற இந்தியாவில் இருபது சதவீதத்திற்கும் குறைவான சீரோபாசிட்டிவிட்டி இருந்த அதே நேரத்தில் நகர்ப்புறச் சேரிகளில் இந்த எண்ணிக்கை முப்பது சதவீதத்திற்கும் கூடுதலாக இருந்தது. உண்மையில் சீரம் வழிப் பரிசோதனைகளில் தேடப்படுகின்ற ஆன்டிபாடிகளின் சிதைவுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த முப்பது சதவீதம் என்ற அளவுமே குறைத்து மதிப்பிடப்பட்டதாகவே இருக்கலாம். மும்பை, தில்லி, பெங்களூரு, புனே, சென்னை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சீரம் வழி ஆய்வுகளில் நாற்பது சதவீதத்திற்கும் அதிகமானோரும், சில சந்தர்ப்பங்களில் ஐம்பது சதவீதம் பேரும் ஜனவரி மாதத்திற்கு முன்பே பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டிருந்தது.
2020 மே-ஜூன் மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 0.7% பாதிக்கப்பட்டுள்ளதாகக்
கண்டறிந்த முதலாவது ஐ.சி.எம்.ஆர் சீரம் வழி ஆய்வின் முடிவுகள் உண்மையில் தாமதமாகவே
வெளியிடப்பட்டதன. அதுவும் அந்த முடிவுகள் சீரம் வழி ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நகர்ப்புற ஹாட்ஸ்பாட்களில் (வைரஸ் அதிவேகமாகப் பரவிய இடங்கள்)
இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைத் தவிர்த்து விட்டு பகுதியளவிலேயே வெளியிடப்பட்டிருந்தன.
நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்று கட்டமைக்கப்பட்டிருந்த கதையை இந்த ஹாட்ஸ்பாட்டுகளிலிருந்து
அதிக எண்ணிக்கையில் பெறப்பட்ட சீரோபோசிட்டிவிட்டி தகர்த்து விடும் என்ற அச்சத்தாலேயே
அவ்வாறான முடிவுகள் வெளியிடப்பட்டிருக்கலாம்.
இவ்வாறு கிடைத்திருக்கும் சித்திரம் மிகவும் சிக்கலுடன் இருக்கிறது.
நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு நகர்ப்புற மற்றும் கிராமப்புற இந்தியாவிற்கு இடையில்
சற்று வித்தியாசத்துடன் இருப்பதால், மறைமுகமாக இந்தியா முழுவதுமே சமமாக பாதிக்கப்படக்கூடியதாக
இருப்பதாகக் கருதிய அந்தப் பகுவெண்ணில் மாற்றம் தேவைப்படுகிறது. இறுதியாக வெளிப்படுவதே
மிகத் துல்லியமான சித்திரமாக இருக்கும். இதற்கான விளக்கம் இந்தக் காரணிகள் அனைத்தும்
கலந்த ஒரு கலவைக்குள்ளேயே கண்டறியப்பட வேண்டும். ஆனாலும் இந்த எண்களை விளக்குவதற்கு
எந்தவொரு இந்திய விதிவிலக்கும் தேவையில்லை என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கும்.
இந்தியாவின் மக்கள்தொகை இளமையாக உள்ளதால் இறப்பு விகிதங்கள் குறைவாகவே
இருக்கின்றன; போதுமான அளவிற்கு தொற்று அனைத்து இடங்களிலும் பரவலாகப் பரவியிருந்தால்
இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பது கவனத்தை ஈர்த்திருக்காது; நோயால் ஏற்படும் இறப்பைச்
சுற்றியுள்ள பழிச்சொல் மற்ற இணை நோய்களுன் மீது தள்ளப்பட்டிருக்கிறது அல்லது இறப்பு
மறைக்கப்பட்டிருக்கிறது; உண்மையான நிலைமை குறித்து மிகச் சிறந்த சித்திரத்தை உருவாக்கும்
வகையில் இறப்புகளைக் குறைவாகப் பதிவு செய்யுமாறு உள்ளூர் சுகாதார அதிகாரிகள் ஊக்குவிக்கப்பட்டது
என்பது போன்று இந்தியாவில் இறப்பு விகிதம் குறைவாக இருந்ததற்குப் பல காரணங்கள் இருந்திருக்கலாம்.
முதலாவது கோவிட்-19 காலத்தில் ஏற்பட்ட தொற்றுநோய் பாதிப்புகளில் நகர்ப்புறம் மற்றும்
கிராமப்புற இந்தியாவிற்கு இடையில் இருந்த வேறுபாடு இந்தியா முழுவதும் சமமான ஆபத்தில்
இருக்கவில்லை என்று காட்டியிருப்பதுவும் காரணமாக இருந்திருக்கலாம். வேறு சில நுட்பமான
உயிரியல் காரணிகளும் அதற்கு காரணமாக இருந்தனவா என்பது விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது
என்றாலும் இவ்வாறு வெளிப்படையாக காணப்பட்ட முரண்பாட்டை விளக்குவதற்கு அது தேவைப்படாது.
இந்தியா தனித்தன்மை கொண்டதாக இருந்தது, இனிமேலும் அவ்வாறு தனித்தன்மையுடனே இருக்கும் என்பதாக இருந்த பொதுவான நம்பிக்கை அரசாங்கத்தின் கொள்கைகளைப் பாதித்ததா? அரசாங்கத்தால் 'சூப்பர் மாடலை' உருவாக்குவதற்காக நிறுவப்பட்ட குழு இந்தியா ஏற்கனவே 2020 செப்டம்பர் மாதத்திற்குள்ளாக கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அடைந்து விட்டது என்று கூறியதோடு இந்த தொற்றுநோய் பிப்ரவரி மாதத்திற்குள் முழுவதுமாக மறைந்து விடும் என்றும் எதிர்பார்த்திருந்தது. கோவிட்-19 தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த பணிக்குழு ஜனவரி 11 முதல் ஏப்ரல் 15 வரையிலான காலத்தில் ஒரு கூட்டத்தைக் கூட நடத்திடவில்லை என்று செய்தியறிக்கைகள் தெரிவிக்கின்றன. கோவிட்-19ஐ வென்றதற்காக பிரதமரின் தலைமையைப் பாராட்டி ஆளும் கட்சி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. கும்பமேளா போன்ற மிகப் பெரிய அளவிலான மதக் கூட்டங்களுக்கும், தேர்தல் நடந்த மாநிலங்களில் லட்சக்கணக்கான மக்களை அணிதிரட்டி நடத்தப்பட்ட பேரணிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
இதுபோன்ற செயல்பாடுகள் அனைத்துமே நோயின் இரண்டாவது அலை வரப் போவதில்லை
என்ற ஏதோவொரு உணர்வின் அடிப்படையிலே அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் இதுபோன்று
எடுக்கப்பட்ட முடிவுகளுக்கான காரணங்களைப் பகுத்தறிவது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.
இந்த எண்களையும், எண்ணுவதில் உள்ள நுணுக்கங்களையும் புரிந்து கொள்ளத் தவறியது, அசாதாரணமான
தீவிர நிலையை எதிர்கொள்வதற்கான தயாரிப்பு வேலைகளில் இருந்த பற்றாக்குறை போன்றவை இரண்டாவது
அலையின் போது செங்குத்தாக பாதிப்புகள் அதிகரிக்கத்
தேவையான காரணங்களை உருவாக்கிக் கொடுத்திருக்கலாம்.
முதல் அலையின் நமது அனுபவம் எதிர்காலத்தில் நிகழவிருக்கும் விஷயங்களுக்காக
நம்மைப் போதுமான அளவு தயார்படுத்தியிருந்தது என்ற மாயையை இப்போது ஏற்பட்டிருக்கும்
கோவிட்-19இன் இரண்டாவது அலை அப்புறப்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களுக்கும்,
களத்தில் கிடைக்கின்ற உண்மையான எண்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே
வந்திருக்கிறது. அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் இறப்பு குறித்த எண்ணிக்கையை
தகனம் செய்யப்பட்ட, புதைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடுவதன் மூலம் பெறப்பட்டிருக்கும்
குறைவான பதிவு இறப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள்
முக்கியமானவை என்பதால் இறப்பு குறித்து நேர்மையாகப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான கருத்து கைவிடப்படுவதையே சுட்டிக்
காட்டுகின்றன. நோயின் அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டு முடிவுகள் வெளி
வருகின்ற நிலையில் அவர்கள் முற்றிலுமாக குணமடையக்கூடிய நிலையை எட்டக் கூடிய அளவிற்கே
தற்போது தில்லி உள்ளிட்ட பல நகரங்களில் பரிசோதனையில் ஏற்படுகின்ற தாமதங்கள் உள்ளன.
இந்திய அனுபவம் விதிவிலக்கானது என்ற கருத்து இந்த நேரத்தில் வினோதமாகவே தெரிகிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து வருகின்ற எண்களுக்குச் சமமாக இருக்கும் வகையில் இந்தியாவில் சி.எஃப்.ஆர் குறித்த மிக சமீபத்திய மதிப்பீடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதையே காட்டுகின்றன. இறந்திருக்கக் கூடாத பலர் ஆக்சிஜன் அல்லது ஐ.சி.யூ அறைகள் கிடைக்காததால் இறந்திருக்கலாம். இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோயின் உண்மையான எண்ணிக்கையைப் பின்னோக்கிப் பார்க்கும்போது மட்டுமே நம்மால் இந்த காரணங்கள் மற்றும் பிற காரணங்களை புரிந்து கொள்ள முடியும். அப்போதும்கூட அவை முழுமையாக இருக்காது.
இந்தியா ஒன்றும் விதிவிலக்கான நாடாக இல்லை என்பதே எதிர்காலத்தை
மனதில் கொண்டு நாம் கற்றுக் கொள்ள வேண்டிய நல்லதொரு பாடமாகாவே இருக்கும்.
https://www.theindiaforum.in/article/covid-19-and-indian-exceptionalism
Comments