அறிவியல் உறுதிப்பாடின்மை, பலவீனமான நிறுவனங்கள், தேசியவாதம் ஆகியவையே இந்தியாவில் கோவிட்-19 பேரழிவிற்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றன
முராத் பனாஜி
கேரவன் இதழ்
2020ஆம் ஆண்டு முடிவடையும் தருணத்தில் கோவிட்-19 பரவல் உலகெங்கிலும்
உள்ள பல நாடுகளிலும், இந்தியாவில் உள்ள பல நகரங்களிலும் காணப்பட்டது. அந்த
நோய்த்தொற்று பரவல் அதிகரிப்பானது 2021ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ந்து பேரழிவு
ஏற்படக் காரணமானது. ஐக்கியப் பேரரசு, பிரேசில், தென்னாப்பிரிக்கா உட்பட பல
நாடுகளில் தொற்றுநோய்க்குக் காரணமான சார்ஸ்-கோவி-2இன் புதிய, மிகவும் ஆபத்தான
வகைகள் உருவாகின. உலகளவில் அந்த தொற்றுநோய்க்கான முடிவு வெகு தொலைவிலே இருந்த
போதிலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியான சரிவையே
கண்டிருந்தது. இந்தியாவில் ஏற்பட்ட அந்தச் சரிவு ஒரே மாதிரியாக இருக்கவில்லை.
நவம்பரில் தில்லியில் அதிகரித்த தொற்று, 2020ஆம் ஆண்டின் இறுதியில் கேரளாவில்
அதிகமாகவே தொடர்ந்தது என்றாலும் தேசிய அளவிலே நிலைமை மிகவும் நன்றாகவே இருந்து வந்தது.
பிப்ரவரி மாதம் தொற்றுநோயின் புயல் மேகங்கள் மீண்டும் கூடிவந்தன.
நான் அப்போது புதிய அலை உருவாகக்கூடும் என்றும் ஆனாலும் அரசு மேற்கொள்ளும் விரைவான
எதிர்வினை மூலம் தேசிய அளவில் நோய் பரவலைத் தடுத்து நிறுத்த முடியும் என்றும் எழுதியிருந்தேன்.
மகாராஷ்டிரா மற்றும் சர்வதேச நிலைமைகள், வைரஸின் புதிய வகைகள் குறித்து இந்தியாஸ்பெண்ட்
பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் எஸ்.ருக்மிணி விவாதித்திருந்தார்.
தொற்றுநோய்க்கு மத்தியிலும், அதற்குப் பிறகும் இந்தியா மேற்கொண்டிருந்த
நடவடிக்கைகள் மீது இப்போது கிடைத்திருக்கின்ற புதிய சான்றுகள் சந்தேகங்களை
ஏற்படுத்துவதாக அந்தக் கட்டுரையை அவர் முடித்திருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாத
தொடக்கத்தில் தொற்றுநோயின் அபாயங்கள் மிகத் தெளிவாகத் தெரிந்தன. இந்திய சார்ஸ்
கோவி-2 மரபியல் கூட்டமைப்பு எனப்படுகின்ற இன்சாகாக் (INSACOG) அமைப்பு தாங்கள்
சேகரித்திருந்த தரவுகளின் அடிப்படையில்,
நாட்டில் புதிதாக உருவாகியிருக்கும் வைரஸ் திரிபுகளால் ஏற்படப் போகின்ற அபாயங்கள்
குறித்து உயர் அதிகாரிகளை எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. இன்சாகாக் கூறியது சரியானதே
என்பதற்கான ஆதாரங்கள் இப்போது நம்மிடம்
ஏராளமாக இருக்கின்றன.
ஆனால் அரசாங்கம் தரவுகளை தொடர்ந்து கவனித்துப் பார்த்ததற்கோ
அல்லது சர்வதேச நிலைமையைக் கண்காணித்து வந்ததற்கோ எந்தவித ஆதாரமும் நம்மிடம் இல்லை.
அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருந்த அறிவியல் பணிக்குழு பிப்ரவரி, மார்ச் மாதங்களில்
சந்திக்கத் தவறியது. புதிய அலை எழுவது குறித்து அக்கறை கொண்டிருந்த அந்தப்
பணிக்குழுவின் சில உறுப்பினர்கள் எழுப்பிய தனிப்பட்ட குரல்களைக் கேட்பதற்கு அங்கே யாருமில்லை.
மாறாக அரசு தரப்பில் 2021ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மிகவும் மெதுவான
தடுப்பூசி இயக்கம், வழக்கமான முழுமையான கும்பமேளாவிற்கு ஆதரவு, மிகப் பெரிய
அளவிலான பேரணிகளுடன் நீண்டகாலம் நடைபெற்ற தேர்தல்கள் என்றே நடவடிக்கைகள் இருந்து
வந்தன.
இந்தியா கோவிட்-19 தொற்றுநோயின் கடைசிக்கட்டத்தை அடைந்து
விட்டது என்று மார்ச் 7 அன்று சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்ஷ்வர்தன் அறிவித்தார்.
அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு மார்ச் 9 அன்று கோவிட்-19 செல்லும் பாதையை மாடலிங்
மூலமாகக் கண்டறிவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால்
உருவாக்கப்பட்டிருந்த குழுவின் உறுப்பினரும், அரசாங்கத்தின் மிகப்பெரிய ஆதரவைப்
பெற்றிருந்த ‘இந்திய சூப்பர்மாடலை’ உருவாக்கியவருமான மணீந்திர அகர்வால் ‘இரண்டாவது
அலை இருக்காது’ என்று மிகுந்த நம்பிக்கையுடன் ட்வீட் செய்திருந்தார். அரசியல்
காரணங்கள் உள்ளிட்டு இதுபோன்று குறைபாடுகளுடன் உள்ள அறிவியல் ஆலோசனைகள் மற்றும்
தொற்றுநோயின் போது பிரபலமாகியிருந்த கதையாடல்களே கோவிட்-19 குறித்து அரசாங்கத்திடமிருந்த
செயலற்ற தன்மையை அதிகரித்திருக்கக் கூடும். அந்தக் கதையாடல்கள் எவ்வாறு இருந்தன?
கோவிட்-19 குறித்த அறிவு இப்போது கிடைத்துள்ளது.
தொடர்ந்து இன்னும் அது உருவாகிக் கொண்டே இருக்கிறது. நோயின் தோற்றம் மற்றும்
பரவும் வழிகள், நோய் எதிர்ப்பாற்றலின் தன்மை, இறப்பு விகிதங்கள், புதிய வைரஸ் திரிபுகளின்
பண்புகள் குறித்து மாறுபட்ட கோட்பாடுகள் இருந்து வருகின்றன. அந்தக் கோட்பாடுகளில் சில
ஊகத்தின் அடிப்படையில் இருந்தாலும் அதிக அளவில் ஆதரவாளர்களைக் கொண்டிருக்கின்றன.
மாறி வருகின்ற இந்த தளத்தில் பயணிப்பது எளிதல்ல. பொது சுகாதார அமைப்புகளும்
தவறுகளைச் செய்துள்ளன. முகக்கவசங்களுக்கு எதிரான உலக சுகாதார அமைப்பின் ஆரம்பகாலப்
பரிந்துரைகளையும், அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம்
கோவிட்-19 காற்றில் பரவுவதை ஏற்றுக் கொள்வதற்கு எடுத்துக் கொண்ட வலிமிகுந்த மிக
நீண்ட காலத்தையும் சற்றே நினைவுபடுத்திப் பாருங்கள்.
அறிவியல் உறுதிப்பாடின்மை என்பது உலகெங்கிலும் இருந்து
வருகிறது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் கோவிட்-19 குறித்த புரிதலை வடிவமைக்க தனித்த
சுதந்திரம் எதுவுமே இல்லாத ஆலோசனை அமைப்புகள், வரையறுக்கப்பட்ட - சில நேரங்களில்
ஜோடிக்கப்பட்ட தரவுகள் போன்ற பிற காரணிகளே உதவியுள்ளன. இவையனைத்திற்கும் மேலாக அனைத்து
சிக்கல்களையும் தேசியவாதம், விதிவிலக்குவாதம் போன்ற லென்ஸ்களின் மூலமாகப்
பார்க்கின்ற போக்கும் இந்தியாவில் இருந்து வருகிறது. இதுபோன்ற போக்கை ‘கோவிட்
இன்னும் இந்தியாவில் வைரலாகவில்லை என்றாலும் உலகிலும் நமது நாட்டிலும் சிலர் அந்த
உண்மையை ஏற்றுக் கொள்வதில்லை’ என்ற தலைப்பில் தி பிரிண்ட் பத்திரிகையில் 2020
ஏப்ரல் மாதம் அதன் ஆசிரியர் சேகர் குப்தா எழுதிய தலையங்கம் நன்கு விளக்குவதாக இருந்தது.
அந்த தலையங்கத்தில் ‘தகனங்கள், கல்லறைகளுக்கு விறகுகளோ அல்லது இடங்களோ எங்களிடம்
இல்லாமல் இருக்கவில்லை’ என்ற வரியும் உள்ளடக்கப்பட்டிருந்தது. தொற்றுநோய் மீது
முழுக்கவனத்தையும் கொண்டிருப்பதற்கு மாறாக அரசாங்கம் - குறிப்பாக சர்வதேச அளவில் -
தொற்றுநோயைக் கையாளுவது குறித்த உணர்வுடன் இருக்கின்ற ஒரு போக்கையே இப்போது நாம் கண்டு வருகிறோம்.
அரசாங்கமும், அதன் ஆதரவாளர்களும் இதுபோன்ற கதையாடல்களைக்
கையாளுவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டிருக்கும் போது, நோய் குறித்த அறிவு
மற்றும் தரவுகளுக்கு இடையில் இருக்கின்ற இடைவெளிகள் கவலையளிக்கப் போவதில்லை. மாறாக
மிகவும் வசதியான கதையாடல்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை பலவீனமான தரவுகளே வழங்குகின்றன.
நோயின் முதலாவது அலை வீழ்ச்சியடைந்த போது நாம் அறிந்திராத
விஷயங்கள் சில இருந்தன. முதலாவதாக
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நோய் எப்படி பரவலாகப் பரவியது என்பது
அறியப்படாதிருந்தது. அதற்கான காரணத்தைக் கண்டறிவதற்கு பாதிப்பு, இறப்பு குறித்த
தரவுகள் சிறிய அளவில்கூட பயன்படவில்லை என்பதையே அதிகமான அளவிலே மாறுபட்ட பரிசோதனைகளும்,
இறப்பு பதிவுகளும் இருந்தது நமக்குக் காட்டியது. சீரம் வழியிலான கணக்கெடுப்புகளின்
மூலம் பெறப்பட்ட தரவுகள் ஆழ்ந்த அறிவை வழங்கின என்றாலும், தேசிய அளவிலான நிலைமையை முழுமையாக
உருவாக்கித் தர அவற்றாலும் முடியவில்லை.
இரண்டாவதாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எத்தனை பேர்
இந்த நோயால் இறந்தார்கள் என்பது அறியப்படாததாக இருந்தது. உண்மையான இறப்பு
எண்ணிக்கையை மதிப்பிடுவது மிகவும் கடினம் என்ற சூழ்நிலைக்கே மோசமான கண்காணிப்பு,
வேண்டுமென்றே தவறுகளைச் செய்வது போன்ற செயல்பாடுகள் வழிவகுத்தன. முன்னெப்போதையும்
விட இன்றைக்கும் அது உண்மையாகவே இருந்து வருகிறது.
மூன்றாவதாக இன்னும் அறியப்படாததாக முதலாம் அலையின் வீழ்ச்சிக்கு
எது வழிவகுத்துக் கொடுத்தது என்பது இருக்கிறது. அந்த வீழ்ச்சிக்கு தொடர்ச்சியாக பாதிப்புகள்
குறைந்து வருதல், பொதுமக்களின் நோய் எதிர்ப்பாற்றல் ஆகியவற்றின் பங்களிப்புகள்
என்னவாக இருந்தன? பொதுமுடக்கத்தின் விளைவாக கிராமப்புற இந்தியாவின் சில பகுதிகள்
பெருமளவில் பாதிக்கப்படாமல் இருந்தனவா? அந்த வீழ்ச்சிக்குக் காரணமாக சேரி அல்லாத
பகுதிகளில் இருந்த குறைவான நடமாட்டம், நகரத்து சேரிகளில் அதிக அளவிலிருந்த நோய்த்தொற்று
போன்றவை இருந்தனவா?
இந்தியாவில் இரண்டு கோவிட்-19 அலைகளுக்கு இடையில் சற்றே மூச்சு
விடுவதற்காக இருந்த காலகட்டத்தில் இதுபோன்ற சில கேள்விகளுக்குப் பதில் காண்பதற்கான
முயற்சிகளை அரசு மேற்கொண்டிருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக சுய வாழ்த்துக்களும்,
மோசமான பகுப்பாய்வுகளுமே அந்தக் கட்டத்தில் இங்கே அதிகமாக இருந்து வந்தன.
2021 ஜனவரியில் வெளியான இந்த ஆண்டின் பொருளாதார
ஆய்வறிக்கையின் முதல் அத்தியாயத்தில் கோவிட்-19 நெருக்கடியை அரசாங்கம் கையாண்டது
பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிகவும் தவறான பகுப்பாய்வை பயன்படுத்திய அந்த
அறிக்கையில் ‘கோவிட்-19இன் பரவல், அதனால் ஏற்பட்ட இறப்பு என்று இரண்டையும் இந்தியாவால்
திறம்பட நிர்வகிக்க முடிந்தது’ என்று கூறப்பட்டுள்ளது. தோற்றுப் போய் தனித்து
நிற்கின்ற மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், இறப்புகளின் அடிப்படையிலே
மற்ற மாநிலங்கள் முட்டாள்தனமாக அந்த அறிக்கையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆக மிகவும்
வரையறுக்கப்பட்ட தரவுகளே அதுபோன்ற கதையாடல்களை நிர்வகிக்க மிகவும் வசதியானவையாக
இருக்கின்றன.
அதிகாரப்பூர்வக் கூற்றுகளும் முக்கியமான வழிகளில் மாறிக்கொண்டே
இருந்தன. 2020 ஜூன் இறுதியில் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவது பற்றி
குறைவாகவும், இறப்புகளைக் கட்டுப்படுத்துவது பற்றி கூடுதலாகவும் பேசப்பட்டது.
ஆரம்பகாலத்து செய்தியறிக்கைகளில் அடிக்கடி ‘சமூகப் பரவல் இல்லை’ என்று கூறப்பட்டு
வந்தது. அவ்வாறு திரும்பத் திரும்பக் கூறப்பட்டது நோய்த்தொற்றைக் குறைவாக வைத்திருப்பதாகக் காட்டுவதையே
நோக்கமாகக் கொண்டிருந்ததாகக் கருதப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ‘மிகவும்
குறைவான விளைவுகளுடனே நோய் பரவியுள்ளது. ஒப்பீட்டளவில் மிகவும் குறைவான
இறப்புகளையே நாடு கண்டுள்ளது’ என்றே அதிகாரப்பூர்வச் செய்திகள் வெளியாகின. இனிமேல்
நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியமான தேவையாக இருக்காது என்றே அதிகாரிகள் சுட்டிக்காட்டி
வந்தனர்.
இறப்பு குறித்த தரவுகள் முழுமையாக இல்லாத போது இவ்வாறாக
குறைத்துக் காட்டப்படும் இறப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது சிக்கலையே உருவாக்கும்.
இறப்புகளை வெற்றி அல்லது தோல்விக்கான முக்கிய காரணியாக எடுத்துக் கொள்ளும் போது,
கோவிட்-19 இறப்புகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்கின்ற மாநில அரசுகள்,
உள்ளூர் அதிகாரிகள் மீதான அழுத்தம் அதிகரிக்கும் என்பதே அதில் இருக்கின்ற முக்கியமான
ஆபத்தாகும்.
அரசாங்கம் மட்டுமே இப்போது இறப்புகளை வலியுறுத்துவதாக இருக்கவில்லை.
‘நோயைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக இறப்புகளைத் தடுப்பதிலேயே முழுமையான கவனம்
செலுத்தப்பட வேண்டும்’ என்ற வாதத்தை முன்னிறுத்தி இந்திய பொது சுகாதார சங்கத்தின்
(ஐபிஹெச்ஏ) உறுப்பினர்கள் உள்ளிட்ட பொது சுகாதார வல்லுநர்கள் 2020 ஆகஸ்ட் மாதம் அறிக்கை
ஒன்றை வெளியிட்டனர். பொதுமுடக்கத்தின் கடுமையான பக்க விளைவுகள் குறித்து சில
முக்கியமான விஷயங்களை அந்த அறிக்கை குறிப்பிட்டது என்றாலும், நோய்களைக்
கட்டுப்படுத்தாமல் எவ்வாறு இறப்புகளை மட்டுப்படுத்துவது என்பதை அது விளக்கத்
தவறிவிட்டது.
இதுபோன்று நோயின் தீவிரத்தைக் குறைத்துக் காட்டுவது
குறித்து மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கமும் சில பொது சுகாதார
அமைப்புகளும் கருதியதாகத் தோன்றுகிறது. இதுபோன்ற சிந்தனைகள் இந்தியாவில் மட்டுமே இருக்கவில்லை.
இந்திய பொது சுகாதார சங்கம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு கிரேட் பாரிங்டன்
பிரகடனம் என்று வெளியான திறந்த கடிதத்தில் அறிவியலாளர்கள் பலர் கையெழுத்திட்டிருந்தனர்.
அவர்கள் ‘நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்கின்ற அதே நேரத்தில் நோயால் பாதிக்கப்படாதவர்களிடையே நோய் பரவிடவும்
அனுமதிக்க வேண்டும்’ என்ற வாதத்தை முன்வைத்திருந்தனர். நோய் பரவலின் ஆபத்துகள்
மிகைப்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்த, பரவலாக பலராலும் விமர்சிக்கப்பட்ட
அந்தப் பிரகடனத்திற்கு அமெரிக்க வலதுசாரி சிந்தனைக் குழு ஒன்று நிதியுதவியை வழங்கியிருந்தது.
குறைத்துக் காட்டுவதற்கு எதிராக அதிகரித்து வந்த
பின்னடைவையே அந்த கிரேட் பாரிங்டன் பிரகடனம் பிரதிபலித்தது. அந்த காலகட்டத்தில்
தடுப்பூசிகள் எதுவும் கிடைத்திராததால், இந்த தொற்றுநோயை எது முடிவிற்கு கொண்டு வரும்
என்ற கேள்வி இருந்து வந்தது. இயற்கையான தொற்று மூலம் உருவாகின்ற கூட்டு நோய்
எதிர்ப்பாற்றல் (Herd Immunity) மூலம் நோயை முடிவிற்கு கொண்டு வருவது என்று அவர்கள் தெளிவாகப்
பதிலளித்தனர். குறிப்பாக இரண்டாவது அலைக்கு முந்தைய மாதங்களில் கோவிட்-19க்கு
எதிரான இந்திய எதிர்வினை ஓரளவிற்கு இந்த கூட்டு நோய் எதிர்ப்பாற்றல் மீதிருந்த
தவறான நம்பிக்கைகளாலேயே வழிநடத்தப்பட்டது என்றே தெரிகிறது.
நோய்த் தொற்று அல்லது தடுப்பூசி மூலமாக குறிப்பிட்ட அந்த
நோய்க்கு எதிராக போதுமான எண்ணிக்கையில் நோய் எதிர்ப்பாற்றல் கொண்டவர்களாக சிலர் மாறுகின்ற
போது, அந்த நிலைமை இயற்கையாகவே நோய் பரவலில் சரிவை ஏற்படுத்தும் என்பதே இந்த கூட்டு
நோய் எதிர்ப்பாற்றலுக்குப் பின்னிருக்கின்ற அடிப்படைக் கருத்தாகும். நோய்
பரவலுக்குத் தேவையான அளவிலே நோய்த் தொற்று இல்லாமல் போவதற்கு மக்கள் தொகையில் எத்தனை
பேர் நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அளவே கூட்டு நோய்
எதிர்ப்பாற்றலின் தொடக்கநிலை அல்லது சுருக்கமாக ஹிட் (Herd Immunity Threshold - HIT) என்று அழைக்கப்படுகிறது. பல ஆய்வுகளின் மூலம் கோவிட்-19க்கான
ஹிட் அளவு அறுபது சதவீதம் என்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஆயினும் அந்த மதிப்பு வைரஸ்
மற்றும் அதன் சூழலைப் பொறுத்ததாக இருப்பதால் இதுவரையிலும் அது உறுதி
செய்யப்படவில்லை. அந்த மதிப்பை நெரிசலாக அமைந்திருக்கும் வீடுகள், அதிவிரைவாகப் பரவும் வைரஸ் திரிபுகள் அதிகரிக்கவே
செய்கின்றன.
கூட்டு நோய் எதிர்ப்பாற்றல் என்ற கணிதரீதியிலான கருத்து மிகுந்த
எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டியதாக இருக்கின்றது. அந்தக் கோட்பாடு தன்னுடைய
எளிமையான வடிவத்தில் எளிய வழிகளில் தங்களுக்குள் தொடர்பு கொண்டிருக்கும் மக்களையே
நம்பியுள்ளது. அவ்வாறிருக்கும் போது சேரிகள், உயர்ந்த கட்டிடங்கள் மற்றும்
கிராமப்புற வளர்ச்சியின் பல்வேறு வடிவங்களுடன் இருக்கின்ற இந்தியாவை அந்தக்
கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான ஒற்றை நிறுவனமாகக் கருதுவது ஆபத்தானதாகும்.
திரும்பவும் மீண்டும் நோயால் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் புறக்கணிப்பதாகவே
அந்த எளிய கோட்பாடு இருக்கிறது. அதுவே மிகவும் பரவலாக இருக்கின்ற பார்வையாகவும்
உள்ளது. எடுத்துக்காட்டாக கடந்த ஆண்டு அக்டோபரில் ‘கொரோனா வைரஸ் மறுபாதிப்புகள் நிகழ்வது
உண்மைதான் என்றாலும் அவை மிகவும் அரிதானவை’ என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை நியூயார்க்
டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டது. ஆனால் மறுபாதிப்புகள் குறித்த பல ஆய்வுகள் நோயின் மறுபாதிப்புகள்
அரிதானவையாக இருக்கவில்லை என்றே காட்டுகின்றன. உண்மையில் அந்தக் கட்டுரைத் தலைப்பு
அனைவரையும் தவறாக வழிநடத்துவதாகவே இருந்தது.
அடிப்படையான கூட்டு நோய் எதிர்ப்பாற்றல் கோட்பாட்டில்
உள்ள சில தடைகளைக் களைவதற்கு பல குழுக்கள் முயற்சித்து வந்தன. அதிக அளவில்
பரவுகின்ற திரிபுகள், மறுபாதிப்புகள் காரணமாக கூட்டு நோய் எதிர்ப்பாற்றலை அடைவது முதலில்
நினைத்திருந்ததை விட மிகவும் கடினம் என்ற முடிவிற்கு அந்த கோட்பாடு குறித்த சில
விரிவாக்கங்கள் வந்திருந்தன. மக்கள் தொகையில்
ஒப்பீட்டளவில் பத்து முதல் இருபது சதவீதம் என்ற மிகக் குறைந்த அளவில்
தொற்றுநோய் பாதிப்பு இருந்தாலும் கூட்டு நோய் எதிர்ப்பாற்றலை அடைய முடியும் என்ற
நம்பிக்கையான முடிவுகளைப் பரிந்துரைத்த சில கட்டுரைகளால் அந்த கோட்பாடு குறித்து
சில மாற்றங்கள் உருவாகின.
அந்தப் பகுப்பாய்வுகள் எவ்வாறு நிஜ உலகத்திற்குப் பொருந்தும்
என்பதில் தெளிவில்லை. இந்திய சேரிகளில் நடத்தப்பட்ட சீரம் குறித்த சில ஆய்வுகள்
மிகக் குறைந்த ஹிட் உடன் அதிக அளவு தொற்றுநோய் பாதிப்பு இருப்பதாகத்
தெரிவித்துள்ளன. இந்தியாவில் முதலில் எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் ஹிட் அளவு இப்போது
மிகவும் குறைவாகவே இருக்கும் என்ற கருத்து பரவலாகியிருக்கிறது. 2020 செப்டம்பரில்
தி ஹிந்து பத்திரிகையில் பொது சுகாதார வல்லுநர்கள் இருவர் எழுதிய கட்டுரையில்
‘தொற்றுநோய் வளைவின் உச்சத்தை அடைய சுமார் முப்பது சதவீதம் கூட்டு நோய்
எதிர்ப்பாற்றலே போதுமானதாக இருப்பதால் இப்போது கோவிட்-19இன் உச்சத்தை இந்தியா எட்டியிருப்பதாக
நாம் நம்பிக்கை கொள்ளலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த மாதம்
டைனிக் பாஸ்கர் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் ‘மக்கள்தொகையில் நாற்பது சதவீதம்
பேரிடம் நோய்க்கு எதிரான ஆன்டிபாடிகள் இருந்தாலே நோயால் ஏற்படும் ஆபத்துகள் மிகவும்
குறைவாகவே இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேசிய சீரம் வழி இரண்டாவது ஆய்வு குறித்து இந்திய
மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் எழுதியிருந்த கட்டுரையில் குறைந்த
ஹிட்டிற்கான வாதத்தை ஏற்கனவே உருவாக்கியிருந்த இரண்டு கட்டுரைகள் மேற்கோள்
காட்டப்பட்டிருந்தன. அந்த இரண்டு கட்டுரைகளும் கிரேட் பாரிங்டன் பிரகடனத்தில்
கையொப்பமிட்டிருந்தவர்களை உள்ளடக்கி இருந்தன. ‘எதிர்பார்த்ததை விட இந்தியாவில் ஹிட் குறைவாகவே
உள்ளது’ என்பதை அதிகாரப்பூர்வமானதாக அந்த மேற்கோள்கள் குறிப்பிட்டுக் காட்டவில்லை.
ஆனாலும் அந்தக் கட்டுரைகள் நிச்சயமாக முக்கியமானவையாக இருந்தன.
முதலாவது அலை வீழ்ச்சியடைந்த நேரத்தில் இந்தியா கூட்டு
நோய் எதிர்ப்பாற்றலுக்கு அருகே மிகவும் நெருக்கமாக இருப்பதாக பல குழுக்கள் கூறிக் கொண்டிருந்தன.
ஏற்கனவே கருதப்பட்டதை விட ஹிட் குறைவாக இருந்ததாலோ அல்லது நோய் பரவல் மிகவும்
பரந்த அளவில் இருந்ததாலோ என்னவோ, நிதி ஆயோக் உறுப்பினரும், தடுப்பூசி உத்தி
குறித்த தேசியக் குழுவின் தலைவருமான வி.கே.பால் ‘அதிக மக்கள் தொகை கொண்ட
மாவட்டங்கள், நகரங்கள் இப்போது தொற்றுநோயில் சிக்கியுள்ளன... அதனால் கூட்டு நோய்
எதிர்ப்பாற்றல் என்ற இடத்தை அவை ஓரளவிற்கு
அடைந்திருக்கின்றன’ என்று ஜனவரி மாதம் கருத்து தெரிவித்திருந்தார். அவருக்கும்
அப்பால் சென்ற அரசாங்கத்தின் ஆதரவுடன் நடைபெற்று வருகின்ற மாடலிங் திட்ட ஆய்வாளரான
அகர்வால் தேசிய அளவில் கூட்டு நோய் எதிர்ப்பாற்றல் இந்தியாவில் எட்டப்பட்டு விட்டதாக
பிப்ரவரி மாதம் தெரிவித்தார். நாடு முழுவதும் அந்தக் கட்டத்தில் அறுபது சதவீதம்
பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற கணக்கீட்டின் அடிப்படையிலே அவரது கூற்று இருந்தது.
ஆனால் அதுவரை இருபது சதவீத பெரியவர்கள் மட்டுமே இந்தியாவில் தொற்றால்
பாதிக்கப்பட்டிருந்ததாக மூன்றாவது தேசிய சீரம் வழி ஆய்வு அப்போது மதிப்பீடு செய்திருந்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்ட
குழு உறுப்பினர்கள் சிலரிடமிருந்தே கூட்டு நோய் எதிர்ப்பாற்றல் குறித்த இதுபோன்ற
பொறுப்பற்ற கூற்றுக்கள் வந்திருந்ததால், அதிகாரப்பூர்வமான மனநிறைவிற்கு அதுபோன்ற
கருத்துகளே தங்களுடைய பங்கை அளித்திருக்கலாம். 2020 அக்டோபரில் கௌதம் மேனன் என்ற
உயிரியற்பியலாளர் ‘மக்களின் வாழ்க்கை ஆபத்தில் இருந்து வருகின்ற இந்த நிலையில், நமது
பொது சுகாதாரக் கொள்கைகள் இதுபோன்ற குறைபாடுகள் உள்ள மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டிருப்பது
மிகவும் ஆபத்தானது. தவறான நம்பிக்கைகள் அதிக ஆபத்துகள் கொண்டவையாக இருக்கும். அறிவியல்
ஒருபோதும் அரசியல் நோக்கங்களுக்குச் சேவை செய்வதாக இருக்கக் கூடாது’ என்று மிகத்
தெளிவாகக் கூறியிருந்தார்.
சுருக்கமாகச் சொல்வதானால் முதலாவது அலை வீழ்ச்சியடைந்ததால்
அப்போது பரவலாக கூட்டு நோய் எதிர்ப்பாற்றலுக்கு மிக நெருக்கமாக இந்தியா இருந்தது
என்ற நம்பிக்கை இருந்தது. ‘வரையறுக்கப்பட்ட விளைவுகளுடன் நோயைப் பரவ அனுமதித்து
நோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்’ என்ற பல்வேறு சர்வதேச வலதுசாரி குழுக்களால்
முன்மொழியப்பட்ட மிகவும் ஆபத்தான பார்வைக்குச் சான்றாக அந்த நேரத்தில் மிகக் குறைந்த
அளவிலே ஏற்பட்டிருந்த இறப்புகள் பயன்படுத்தப்பட்டன.
குறைவான இறப்பு கணக்கீடே இறப்புகள் குறைவாகப் பதிவு
செய்யப்பட்டிருப்பதற்கான காரணமாக இருந்திருக்கலாம் என்ற வாய்ப்பு
புறக்கணிக்கப்பட்டது. மிகவும் பரவலாக நோய் பரவுவது வைரஸின் மிகவும் ஆபத்தான
திரிபுகள் உருவாகின்ற ஆபத்தை அதிகரிக்கிறது என்ற கவலை இருந்தது. தேசிய அளவிலான
பொதுமுடக்கத்தை அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் எந்தவொரு விமர்சனமுமின்றி பாராட்டி
வந்த போதிலும், பாதிப்புகளைக் குறைத்து மதிப்பிட்டதற்கு இருந்த பங்கு நிராகரிப்பிற்குள்ளானது.
அரசுடன் இணைந்து பணி புரிந்து வருகின்ற அறிவியலாளர்கள் முதலாவது
அலைக்குப் பிறகு ஏற்பட்ட சுணக்கத்தின் போதே கோவிட்-19 பரவல் மற்றும் இறப்புகள்
குறித்த நாடு தழுவிய கணக்கெடுப்பிற்கான அழைப்பை விடுத்திருக்கலாம். அந்த
கட்டத்தில் உண்மையிலேயே இறப்பு குறைவாக இருந்ததா, முதலாவது அலை ஏன் சரிந்தது,
ஏற்பட்ட முக்கிய பாதிப்புகள் என்ன என்பதைக் கண்டறிந்திருக்கலாம். வருங்காலத்தில்
உருவாகப் போகின்ற அலைகளின் தாக்கத்தைக் குறைக்கின்ற வகையில் விரைவான தடுப்பூசி
இயக்கம், சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற பணிகளுக்கும் அவர்கள் அழைப்பு
விடுத்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற அழைப்புகள் எதுவும் அவர்களிடமிருந்து வரவே இல்லை.
இவற்றையெல்லாம் செய்திருந்தால் மிகவும் நன்றாக
இருந்திருக்கும். மிகவும் பலவீனமான அறிவியல், அரசுடன் சமரசம் செய்து கொண்ட
அறிவியல் நிறுவனங்கள் போன்றவையே குறைந்தபட்ச அளவிலாவது அரசிடம் உருவாகியிருந்த மனநிறைவு
மற்றும் செய்யப்பட்ட தவறுகளுக்கான காரணமாக இருந்திருக்கின்றன. அவையே இப்போது இரண்டாவது
அலை மிகவும் மோசமான துயரை ஏற்படுத்தவும் அனுமதித்துள்ளன. நெருக்கடியைத் தவிர்க்கும்
வகையில் ஆரம்பத்திலேயே நடவடிக்கை
எடுக்குமாறு தனிப்பட்ட முறையில் இயங்கி வருகின்ற மற்றும் நிபுணத்துவம் மிக்க
அறிவியல் ஆலோசகர்கள் அரசிற்கு அதிக அழுத்தம் கொடுத்திருக்கலாம். அத்தகைய நடவடிக்கையானது
சிறிது காலத்தை எடுத்துக் கொள்வதாக இருந்தாலும் ஏற்பட்டிருக்கும் பேரிழப்பை நிச்சயம்
குறைத்திருக்கக்கூடும்.
Comments