கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எழுச்சியைப் புரிந்து கொள்வது

 ரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எழுச்சியைப் புரிந்து கொள்வது

சௌம்யஜித் பார்

 பி.எம்.எல்.முஞ்சால் பல்கலைக்கழகம்

தி ஹிந்து, 2026 ஜூலை 21

நன்கு நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள் பல ஆண்டு காலம் உழைத்து உருவாக்கக்கூடிய அளவிலான ஆதரவுத் தளத்தை, 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஓர் அமைப்பு வெறும் நான்கு நாட்களிலேயே இந்தியாவில் திரட்டிக் காட்டியுள்ளது. மீம் பக்கங்கள், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், கிண்டலும் தீவிரமும் கலந்த அரசியல் முன்னெடுப்புகள் போன்றவை  வியக்கத்தக்க வேகத்தில் ஒன்றிணையத் தொடங்கிய அந்த நிகழ்வு வங்கதேசம், நேபாளத்தில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிடப்படுகிறது. அந்த நாடுகளில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட மக்களின் கோபம், அங்கே நன்கு வேரூன்றியிருந்த அரசியல் கட்டமைப்புகளை அசைத்துப் பார்க்கும் ஆற்றலுடன் இருந்தது.  

இனிமேல் இதுதான் அரசியலின் எதிர்காலமோ என்ற சிந்தனை பலரிடமும் உள்ளது. அதாவது வெறுமனே எதிர்வினை ஆற்றக் கூடியதாக, உணர்ச்சிவசப்படக் கூடியதாக, நீண்டகால அரசியல் கட்டமைப்புகளுக்கு அப்பால் குறியீட்டு எதிரிகளை, கூட்டுச்சீற்றத்தை மட்டுமே மையமாகக் கொண்டு அரசியல் என்பது இனிமேல் ஒழுங்கமைக்கப்படப் போகிறது என்றே அவர்கள் கருதுகின்றனர்.     

நிறுவன அரசியல், பிரதிநிதித்துவக் கட்டமைப்பு போன்றவற்றிடமிருந்து தாங்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாக அதிகமாக உணர்கின்ற இளைய தலைமுறையினரிடம் உள்ள இந்த ஆர்வம் புரிந்து கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. அதுபோன்ற அமைப்புகள் அவர்களைப் பொறுத்தவரை தங்களின் வேலை, ஆசை, பாதுகாப்பின்மை, சோர்வு குறித்த  வாழ்வியல் கவலைகளிலிருந்து வெகு தொலைவில் விலகியிருப்பதாகவே தோன்றுகின்றன. அரசியல்ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டவர்களாகத் தங்களை உணரும் தனிநபர்கள்,  கூட்டுணர்வுத் தீவிரம் கொண்ட தருணங்களில் பங்கேற்பதை சமூக ஊடகங்கள் உடனடியாக அனுமதிக்கின்றன. ஒரேயொரு மீம் அல்லது முழக்கம் போன்றவற்றால் ஒருவரின் அரசியல் பங்கேற்புணர்வை சில மணி நேரங்களுக்குள்ளாக உருவாக்கிட முடிகிறது. ஆயினும் அதுபோன்று ஒருங்கிணைக்கப்படும் கோபத்தின் மூலம் ஒழுங்கமைக்கப்படுகின்ற அரசியலால் உணர்வுத் தீவிரத்தின் தருணங்களுக்கு அப்பால் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற ஆழமான கேள்வியும் உடன் எழுகிறது.   

கூட்டுச் சமூக வாழ்வின் சிதைவு

உண்மையான நெருக்கடி என்பது வெறுமனே நிறுவனச் சரிவு அல்லது கருத்தியல் சோர்வு போன்றவையாக இருக்கவில்லை. கூட்டுச் சமூக வாழ்வின் சிதைவே மிகவும் ஆழமான நெருக்கடியாக உள்ளது. பொதுவாழ்க்கை அதிகம் பலவீனமடைந்துள்ளது. ஒருகாலத்தில் கூட்டுணர்வை அனுபவித்து வந்த  மக்கள்  பகிர்ந்து கொண்ட இடங்கள், இன்று படிப்படியாகச் சீரழிந்து போயுள்ளன. 

கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள், வளாகங்கள், குடியிருப்புச் சங்கங்கள், சாதாரணமான சமூக வாழ்வில் பொதிந்திருந்த அன்றாடப் பங்கேற்புக் கலாச்சாரங்கள் மூலமே அரசியல் அமைப்புகள் தோன்றின. அந்தக் கட்டமைப்புகளே உடனடி எதிர்வினைகளுக்கு அப்பாற்பட்டு அரசியல் வாழ்வு நிலைத்திருக்க வழிவகுத்துத் தரும் தொடர்ச்சியை, உணர்வுப்பூர்வமான ஈடுபாட்டை உருவாக்கித் தந்தன. இருப்பினும் பெரும்பாலான சமூகங்கள், கூட்டுச் சேர்மானத்திற்காக உணர்வுப்பூர்வமான பசியுடன் இருந்த வேளையில், அதனைத் தக்க வைத்துக் கொள்வதற்குத் தேவையான சமூக நிலைமைகள் இல்லாத தனிநபர்களையே உருவாக்கின. அது நவீனத்துவத்தின் ஆழமான முரண்பாடுகளில் ஒன்றைப் பிரதிபலிப்பதாக இருக்கலாம்.   

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு உருவான சுதந்திரத்தின் மொழி வரலாற்றுரீதியாக விடுதலை மற்றும் கூட்டு சுய-ஆட்சியுடன் பிணைக்கப்பட்டிருந்தது. ஆயினும் காலப்போக்கில், குறிப்பாக புதைபடிவ எரிபொருளால் உந்தப்பட்ட வளர்ச்சி வடிவமைத்த நுகர்வோர் சமூகங்களில் சுதந்திரம் என்பது தனிநபர் தேர்வுச் சுதந்திரம், அதாவது நுகர்வதற்கான, போட்டியிடுவதற்கான, தனிப்பட்ட முறையில் லட்சியங்களைத் தொடர்வதற்கான சுதந்திரம் என்பதாகவே பொருள்படத் தொடங்கியது. தனிப்பட்ட வாழ்க்கை விரிவடைந்த போது,​​ பொதுவாழ்க்கை படிப்படியாக வலுவிழந்தது.

அதுபோன்ற சூழ்நிலைகளில், டிஜிட்டல் முறையில் ஒருங்கிணைக்கப்படும் கூட்டங்கள் தனிமையிலிருந்து  தற்காலிகமான நிவாரணத்தைப் பெறுவதால், உளவியல்ரீதியான ஆற்றலைப் பெறுகின்றன. சிதறிக் கிடக்கும் தனிநபர்கள் கூட்டாக ஒன்றுபட்டு உணர்வதற்கு, அவர்களுக்குப் பொதுவான ‘எதிரி’ தேவைப்படுகிறது. இந்த இடத்தில்தான் ஒத்திசைவுக்கும், ஒற்றுமைக்கும் இடையிலான வேறுபாடு முக்கியத்துவம் பெறுகிறது. சமகாலத் தளங்கள் ஒத்திசைவை உருவாக்குவதில் மிகத் திறமையாகச் செயல்படுகின்றன. பகிர்ந்து கொள்ளப்பட்ட கோபம் அல்லது ஒரு குறியீட்டு இலக்கின் வழியாக தாங்கள் அனைவரும் உணர்வுரீதியாக ஒன்றிணைந்திருப்பதாக லட்சக்கணக்கானோரால் சில மணி நேரங்களுக்குள்ளாக உணர முடிகிறது. இருப்பினும், உணர்வுரீதியாக மேற்கொள்ளப்படும் அந்த ஒத்திசைவு, நீடித்த கூட்டு வாழ்க்கையைப் போன்றிருப்பதில்லை. ஒத்திசைவு தீவிரத்தை உருவாக்குகிறது. ஒற்றுமைக்குத் தொடர்ச்சி, நினைவாற்றல், உணர்வுரீதியான ஈடுபாடு, நீண்ட கால அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது. சமகால அரசியலானது, பகிர்ந்து கொள்ளப்படும் எதிர்காலங்களைக் காட்டிலும், பகைமையைச் சுற்றியே உருவாகிறது. ஏனெனில் கோபம் ஒருங்கிணைப்பைக் காட்டிலும் மிக வேகமாகப் பரவுகிறது. அர்ப்பணிப்பைக் காட்டிலும் டிஜிட்டல் முறையில் கோபத்தைத் தக்க வைத்துக் கொள்வது மிக எளிதாக இருக்கிறது. 

நாடுகளுக்கிடையேயான ஒப்பீடுகளைப் பொறுத்தவரை எச்சரிக்கை தேவை

இதனால்தான் வங்கதேசம், நேபாளத்துடனான ஒப்பீடுகளுக்கு எச்சரிக்கை தேவைப்படுகிறது. உள்ளார்ந்த நிலைமைகள் அடிப்படையில் வேறுபட்டிருப்பதாகத் தோன்றவில்லை. ஆரம்பகால எதிர்வினைகள்  இறுதியில் மேலும் ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் அமைப்புகளை நோக்கியே அந்த இரண்டு நாடுகளிலும் நகர்ந்து சென்றன. பரவலாக்கப்பட்ட திரள் பரவலாக்கப்பட்டதாக நீடிக்காமல் திசை திருப்பப்பட்டது, நிறுவனமயமாக்கப்பட்டது அல்லது வலுவிழந்து போனது. அந்தப் பிரச்சனை இரண்டு  நாடுகளுகளிலும் இருந்த மாணவர் அரசியல் அல்லது இளைஞர் அணிதிரட்டல் தொடர்பானதாக  இருக்கவில்லை என்பதையே  அது காட்டியது. தனிநபர்மயமாக்கல், சீர்குலைந்த பொதுவாழ்க்கை, பலவீனமடையும் கூட்டு நிறுவனங்கள் போன்ற பரந்த கட்டமைப்புப் போக்குகளே சமகாலத்து உலகின் பெரும்பகுதிகளில் அதிக அளவில் பொதுவாகக் காணப்படுகின்றன.

இந்த இடத்தில்தான் சமீபத்திய ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா பதட்டங்களிலிருந்து வெளிப்படும் கண்ணோட்டங்கள்  மிகவும் பொருத்தமானவையாக இருக்கின்றன. உடனடி மோதல் தருணங்களைக் கடந்து நிலைத்திருக்கக்கூடிய ஆழமான, உணர்வுப்பூர்வமான, பொருள்சார் கட்டமைப்புகளால் தாங்கப்படும்போது மட்டுமே, பரவலாக்கப்பட்ட தாக்குப் பிடிக்கும் திறன் சாத்தியமாகும். கோபத்தின் மூலமாக   மட்டுமே பரவலாக்கப்பட்ட செயல்பாட்டால் காலவரையின்றி இயங்க முடியாது. மையப்படுத்தப்பட்ட கட்டளை எதுவும் இல்லாமல் பரவலாக்கப்பட்ட அமைப்புகள் ஒத்திசைவுடன் இருப்பதற்கு, கூட்டு நெறிமுறை அர்ப்பணிப்பு, உணர்வுத் தொடர்ச்சி, வரலாற்று நினைவு அல்லது நீடித்த குறியீட்டுப் பிணைப்பு என்று பெரிய அளவிலான பகிரப்பட்ட எல்லை இருக்க வேண்டும். பரவலாக்கம் வெறுமனே அமைப்பு ரீதியானதாக அல்லது தொழில்நுட்பம் ரீதியானதாக மட்டுமே இருக்கவில்லை. உணர்வு, கலாச்சாரம், பொருள் சார்ந்ததாகவும் அது இருந்தது.

மாபெரும் உணர்வாற்றலும், பலவீனமடைந்து வரும் கூட்டு சகிப்புத்தன்மையின் கட்டமைப்புகளும் ஒருங்கே நிலவும் நிலைமை சமகால டிஜிட்டல் அரசியலில் அதிகரித்து வருகிறது. 1968 மே மாத பிரெஞ்சு மாணவர் எழுச்சிகளின் போது ஜாக் லக்கான் தெரிவித்த புகழ்மிக்க கூற்று இங்கே மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அந்தப் போராட்டங்களை அறிவுஜீவிகள் பலரும் தீவிரமான விடுதலைப் போராட்டங்கள் என்று கற்பனை செய்த தருணத்தில், ‘புரட்சியாளர்களாக நீங்கள் விரும்புவது எஜமானரைப் பெறுவதைத்தான்... நிச்சயம் ஒருவரைப் பெறுவீர்கள்’ என்ற கருத்துடன் லக்கான் பதிலளித்தார். அவரது கருத்து ஏளனப்பார்வையுடன் மட்டுமே இருக்கவில்லை. குறியீட்டு ஒழுங்கிற்கு எதிரான கிளர்ச்சி, எஜமானத்துவத்தைத் தானாக ஒழித்து விடுவதில்லை. ஆசை பெரும்பாலும் புது வகையான உறுதித்தன்மை, அதிகாரத்தைச் சுற்றியே தன்னை மறுசீரமைத்துக் கொள்கிறது.  

தனிநபர் சார்ந்த லட்சியங்கள், உணர்வுப்பூர்வமான சிதறல்களால் வடிவமைக்கப்பட்ட சமூகங்களில் இந்தக் கண்ணோட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், எதிர்ப்பின் அடிப்படையிலே கட்டமைக்கப்படும் அரசியல், தனது ஒருங்கிணைப்புத் தன்மையின் பெரும்பகுதியை அந்த 'எதிரி'யிடமிருந்தே பெறுகிறது. அந்த ‘எதிரி’யே ஒருவரின் அடையாளத்தை நிலைப்படுத்துவதோடு, கூட்டத்தை உணர்வுப்பூர்வமாக ஒரே அலைவரிசையில் வைத்திருக்கவும் உதவுகிறது. ஆனால், போராட்ட இயக்கங்கள் நிர்வாகத்தை நோக்கி நகரும் போது முரண்பாடுகள் தோன்றுகின்றன, சமரசங்கள் அவசியமாகின்றன. குறியீட்டுத் தெளிவு பலவீனமடைகிறது. பொதுவான பகைமையின் அடிப்படையில் ஒன்றுதிரண்ட அந்தக் கூட்டம் அப்போது, கோபத்தை ஒருங்கிணைப்பதைக் காட்டிலும் கூட்டு உலகை நிலைநிறுத்துவது மிகவும் கடினம் என்பதை உணர்கிறது.

இதில் இன்னும் ஆழமான பொருள்சார் முரண்பாடும் உள்ளது. புதைபடிவ எரிபொருட்களை அடிப்படையாகக் கொண்டு நவீனமயமாக்கலால் வடிவமைக்கப்பட்ட வளர்ச்சி அமைப்புகள் தனிநபர்வாதத்தை தீவிரப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல், அவை மீண்டும் கட்டமைப்புரீதியாக அதிகாரக் குவிப்பை அல்லது மையப்படுத்தலை உருவாக்குகின்றன. எரிசக்தி அமைப்புகள், சரக்கு மற்றும் தகவல் போக்குவரத்து வலைப்பின்னல்கள், நிதிசார் கட்டமைப்புகள், டிஜிட்டல் தளங்கள், பெருநகரங்கள் என்று அனைத்துமே மிகப்பெரிய அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் அதிகாரக் குவிப்பின் மூலமே செயல்படுகின்றன. பரவலாக்கப்பட்ட அரசியல் ஆற்றல்கள் பரவும் தளங்களும்கூட, வரலாற்றிலேயே அதிகம் மையப்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளாகவே இருக்கின்றன.  

மையக் கருத்து

இது சமகாலத்து 'அதிகார-எதிர்ப்பு' அரசியலின் மையத்தில் ஒரு முரண்பாட்டை உருவாக்குகிறது. உணர்வுப்பூர்வமாக அதிகாரப் பரவலாக்கத்தை விரும்பும் அதேவேளையில் மக்கள் அதிகார மையப்படுத்தலைச் சார்ந்துள்ள  கட்டமைப்புகளுக்குள்தான் வாழ நேர்கிறது. அந்தக் கூட்டத்தால் அதிகாரத்தைக் கேள்வி கேட்க முடியும். ஆனால் அதிகாரத்தை மறுசீரமைக்க வேண்டுமானால் அதற்கு அதிகாரக் குவிப்பு, பிரம்மாண்ட அளவு மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றை நோக்கி இடைவிடாமல் உந்தித் தள்ளும் பொருள்சார் அமைப்புகளுடன் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. சமூகங்கள் கூட்டு வாழ்க்கை நம்பிக்கை, பகிரப்பட்ட பொறுப்பு, நிறுவன நினைவாற்றல், நீடித்த பொது அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்குத் தேவையான உணர்வுப்பூர்வமான, நிறுவனரீதியான, பொருள்சார் அடித்தளங்களை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்காத வரையில், தொடர்ந்து நீடித்த மாற்றமின்றி எதிர்வினை சார்ந்த கோபத்தின் ஒத்திசைவுச் சுழற்சிகளையே அவை மீண்டும் மீண்டும் உருவாக்கும்.  

பரவலாக்கப்பட்ட அரசியல் சக்தி உருவாக முடியுமா என்ற கேள்வி இங்கே முக்கியமானதாக இல்லை. ஏனென்றால் அது நிச்சயம் முடியும். சமகாலச் சமூகங்கள் ஒத்திசைவை ஒற்றுமையாகவும், எதிர்வினை அணிதிரட்டல் தருணங்களை நீடித்த கூட்டு வடிவங்களாகவும் மாற்றக் கூடிய திறனுடன் இன்னும் இருக்கின்றனவா, அல்லது ஒவ்வொரு பிளவும் இறுதியில் புதிய அதிகாரக் குவிப்புகளை, லக்கான் எச்சரித்தது போல - புதிய எஜமானர்களை மீண்டும் உருவாக்குமா என்பதே இப்போது உண்மையான கேள்வியாக இருக்கிறது.   

  

https://www.thehindu.com/opinion/lead/interpreting-the-rise-of-the-cockroach-janta-party/article71011817.ece

Comments