ஜென் சி என்பது போராட்ட இயக்கம் அல்ல

 ஜென் சி என்பது போராட்ட இயக்கம் அல்ல

அக்சா அன்னா சாண்டி

 தி வயர் இணைய இதழ்

2023 ஆகஸ்ட் 17

ஏமாற்றமடைந்திருந்த குடிமக்கள் கூட்டத்தை 2025ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் முழுக்க மடகாஸ்கர் காண நேர்ந்தது. மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை மீது உருவான மக்களின் கோபம் பின்னர் ஊழல், மோசமான நிர்வாகம், வறுமை, சீர்கெட்ட பொதுச் சேவைகள் குறித்த குற்றச்சாட்டுகளாக விரிவடைந்தது. பல வாரப் போராட்டங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டுத் தப்பி ஓடினார். அக்டோபர் 17 அன்று கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா நாட்டின் தலைவராகப் பதவியேற்றார். அந்தப் போராட்டத்தின் ஒட்டுமொத்த வீரியமும் 'ஜென் சி தலைமுறையின் எழுச்சி' என்பதாகச்  சுருக்கப்பட்டது. 'ஜென் சி’ என்ற அந்த முத்திரை அச்சிட, ஒளிபரப்ப, தலைப்புச் செய்தியாக மாற்றப் போதுமானதாக, மிகவும் வசதியாக இருந்தது. 

அதே கதையாடல்  இந்தியாவிலும் வேரூன்றத் தொடங்கியுள்ளது. சமீபத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கல்வி அமைப்பிற்குள் நிலவி வந்த பரவலான தோல்விகள் புதுதில்லி ஜந்தர் மந்தருக்கு மக்களைக் கொண்டு வந்து சேர்த்தன. உடனடிக் கோரிக்கைகளாக, தேர்வு முறைகேடுகளுக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வது, ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகுவது போன்றவை இருந்தன. அந்தக் காலவரையற்ற போராட்டம் 35 நாட்கள் நீடித்த பிறகு கல்வியமைச்சர் பிரதான் பதவி விலகினார்.  'ஜென் சி' எனும் புதிய அடையாளம் அந்தப் போராட்டத்திற்குக் கிடைத்தது.      

மக்கள்தொகை சார்ந்த அடையாளத்திலிருந்து அரசியல் அடையாளம் வரை

அதிக மௌனத்துடன் இருந்த அரசாங்கத்திடமிருந்து வெற்றிகரமாகப் பதிலைப் பெற்றதற்காக மக்கள், அந்தத் தலைமுறையினர் மீது பாராட்டுகள், விமர்சனங்கள் அனைத்தையும் பொழியத் தொடங்கினர். பன்னிரண்டு ஆண்டுகளாகக் கடும் மௌனம் காத்து வந்த அமைச்சர்கள், கல்வியாளர்கள், பாடகர்கள், நடிகர்கள், விளையாட்டுத்துறை சார்ந்த பிரமுகர்கள் என்று சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் சமூக ஊடகத்தில் பதிவிட்டனர்.  அந்த ஒட்டுமொத்தத் தலைமுறையையும், நீண்டகாலமாகத் தாங்கள் எதிர்பார்த்து வந்த வெகுஜனங்களின் மீட்பர், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கான அச்சுறுத்தல் என்றே அவர்கள் கருத்தில் கொண்டனர். இதுபோன்று புனையப்பட்ட முத்திரை மீது அந்தப் போராட்டத்தின் வெற்றிகளும், தோல்விகளும் திணிக்கப்பட்டன.  அந்தத் தலைமுறை பற்றி வலதுசாரிகள், இடதுசாரிகள் என்று அனைவரும் ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கினர். கட்டுரைகள், காணொளிகள் குவிந்தன. தங்கள் கருத்தைத் தெரிவிக்குமாறு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். ஒருகட்டத்தில் மக்களை வீதிகளுக்குக் கொண்டு வந்த அந்த நோக்கம் ஓரங்கட்டப்பட்டு,  ஆர்ப்பாட்டம் மைய இடத்தைப் பிடித்தது. அது உண்மையில் மிகவும் விசித்திரமான மாற்றம். பொறுப்பேற்றுக் கொள்வதற்கான கோரிக்கை என்பது குறிப்பிட்ட மக்கள்குழுவின் கூக்குரல் எனும் அளவிற்குச் சுருங்கியது. அரசியல்வாதிகள் கவனத்தைக் கல்விமுறையின் மீது திருப்புவதற்குப் போராட்டக்காரர்கள் முயன்றனர்.  அரசியல்வாதிகளோ தங்கள் கவனத்தை ஜென் சி தலைமுறையினரின் சிந்தனைகளைப் புரிந்து கொள்வதன் மீது திருப்பினர்.  

சமூக வலைத்தளங்களில் வைரலாகக்கூடிய பதினைந்து நொடி இன்ஸ்டாகிராம் காணொளிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கெனவே நீண்ட காலமாக நடித்து வந்திருந்த நிலையில் - ஜூலை 20க்குப் பிறகு, பிரதமரும் ஒரே இரவில் தாக்கத்தை ஏற்படுத்துபவராகத் தன்னை மாற்றிக் கொண்டார்.  

சில சொற்கள்  'ஜென் சி பேச்சுவழக்கு' என  அங்கீகரிக்கப்பட்டன. அமைச்சர்கள்  அவற்றை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பயன்படுத்தத் தொடங்கினர். 'மோடிஜி க்ளாக்ட் இட்' என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பன்சூரி ஸ்வராஜ்,  'வஸ்தேகுணஹுய்யான்', 'குச்சு-புச்சு' என்று காங்கிரஸ் எம்.பி. தீபேந்தர் சிங் ஹூடா,  'எம்.ஐ.ஏ', ஃபோமோ’, டெலுலு’ என்று சிவசேனா எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே போன்றோர் கூறிய வார்த்தைகள், இளைஞர்களைச் சென்றடைவதற்காக அவர்கள் மேற்கொண்ட அவநம்பிக்கையான முயற்சிகளாகவே இருந்தன.  

அர்த்தமற்றவையாக  இருந்த சொற்கள், பலரின் உயிரைப் பறித்த வினாத்தாள் கசிவு குறித்த விவாதங்களின் போது பயன்படுத்தப்பட்டு அரசாங்கத் தரவுத்தளங்களில் பதிவாகின.  கல்வி குறித்ததாக துவங்கிய அந்தப் போராட்டம் - இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், கொச்சை மொழி, ஒழுக்கநெறி, ஆடைகள் மற்றும் ஜென் சி தலைமுறையினரின் புதிரான பழக்கவழக்கங்கள் தொடர்பான உரையாடல் என்று  மாற்றமடைந்தது.

நகைச்சுவை என்ன புதியதா?

போராட்டத்தில் நகைச்சுவையின் பங்கு 'ஜென் சி' தலைமுறைக்கே உரித்தானது எனப்பட்டது. ஆனால் எதிர்ப்பைக் காட்டுவதில் நகைச்சுவையின் பங்கு மிகவும் தொன்மையானது என்பதை மறந்து போனதாலேயே,  இதுபோன்ற முத்திரை குத்துவதற்கான எண்ணம் உருவானது. குறிப்பிட்ட தலைமுறைக்கு மட்டுமே சொந்தமானதாக நகைச்சுவை ஒருபோதும் இருந்ததில்லை. தன்னைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதிகார அமைப்பு கோரிய போதெல்லாம், மக்கள் அதனைக் கேலியே செய்திருக்கிறார்கள். அங்கதம் பல நூற்றாண்டுகளாக எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கான வடிவமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  காங்கோவில் மன்னர் லியோபோல்ட் நடத்திய மிகக்கொடூரமான காலனித்துவ ஆட்சியின் போது, ​​மார்க் ட்வைனின் 'கிங் லியோபோல்ட்ஸ் சாலிவோக்கி' என்ற குறுநூல், அந்த மன்னரின் அகந்தையை முரண்நகை மற்றும் அங்கதத்தின் மூலம் தகர்த்தெறிந்தது. இனப்படுகொலையின் போது, மனிதத்தன்மை இழந்தவர்களாகக்  காட்டுவதற்காக,  பெண்களின் தலைமுடி வலுக்கட்டாயமாக வெட்டப்பட்டது. ​​ அந்தப் பெண்கள் தங்களின் புதிய 'இலவச சிகை அலங்காரம்' குறித்து  அப்போது நகைச்சுவையாகப் பேசிக் கொண்டனர். நகைச்சுவை என்பது நம் நாட்டின் விளிம்புநிலைச் சாதியினர் கடைப்பிடித்த கிளர்ச்சி வடிவமாகும். ஒடுக்குமுறைச் சாதியினரின் சுரண்டல்களை எடுத்துரைப்பதற்காக மகாத்மா ஜோதிராவ் பூலேவின்  'த்ருத்ய ரத்னா' நாடகம், அங்கதம் மற்றும்  நகைச்சுவையைப்  பயன்படுத்தியது. ஆக போராட்டத்தைப் பொறுத்தவரை நகைச்சுவை ஒன்றும் புதிதான ஒன்றல்ல, கேமரா மட்டுமே புதிது.         

போராட்டத்திற்கான காரணத்துடன், முக்கிய காரணியாக ஒருங்கே நிகழ்ந்த தொழில்நுட்ப முன்னேற்றம் போதுமான அளவிற்கு விவாதிக்கப்படவில்லை. அது 2019-20ல் நடந்த குடியுரிமை (திருத்தம்) சட்டம் - தேசிய குடிமக்கள் பதிவேடு எதிர்ப்புப் போராட்டங்களிலேயே வெளிப்பட்டிருந்தது (தலைமுறை வாரியாக போராட்டங்களை வகைப்படுத்தினால், அந்தப் போராட்டங்களையும் 'ஜென் சி' போராட்டம் என்றே அழைக்கலாம்). அப்போது நடைபெற்ற போராட்டங்களிலும் நகைச்சுவைகள், மீம்கள், மரியாதை தராத சுவரொட்டிகள், அதிகாரத்தில் இருப்பவர்களைக் கேலி செய்யும் உள்ளுணர்வு நிறைந்து காணப்பட்டது. ஆனாலும், அந்தத் தலைமுறையின் நகைச்சுவைப் போக்குகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு எந்தவொரு முயற்சியும் அப்போது மேற்கொள்ளப்படவில்லை. எந்த அரசியல் கட்சியும் 'சஸ், ஹைகீ, யோலோ, பே' போன்ற வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதற்கு சமூக ஊடகங்களை அப்போது நாடவில்லை. பிரதமரும் அவகேடோ டோஸ்ட் படங்களைக் காட்டிப் பெருமையடிக்கத் தொடங்கவில்லை.

ஆக வித்தியாசம் என்னவென்றால், இன்ஸ்டாகிராம் அப்போது 'ரீல்ஸ்' அம்சத்தைக் கொண்டு வந்திருக்கவில்லை. ரீல்ஸ் இல்லையென்றால் இந்த முறையும் 'ஓமித் ஷா', 'மோடி, இது என்ன மாதிரியான நடத்தை?', 'ஓகே சங்கி' என்பது போன்ற முழக்கங்கள் மீண்டும் தலைதூக்கியிருக்கும். அப்போதும் நகைச்சுவை இருந்தது, கோபம் இருந்தது. ஆனால் அதற்கான காப்பகம் மட்டும் இருக்கவில்லை. நகைச்சுவை எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை ஆழமான பகுப்பாய்வு நிச்சயம் வெளிக்கொணரும்.  ஒன்றிலிருந்து ஒன்று என்று நீண்ட காலமாகவே கொள்கைகள், கருத்துகள், முழக்கங்கள், நகைச்சுவையைப் போராட்டங்கள் பொதுவாக கடன் வாங்கியே வந்திருக்கின்றன. ஆனால் இந்தப் போராட்டம் நகைச்சுவைகள், காணொளிகள், படங்கள், தலைப்புகள், உணர்வுகளை மற்ற 'ஜென் சி' போராட்டங்களிடமிருந்து கடனாகப் பெற்றது. புகைப்படங்களும் காணொளிகளும் அல்காரிதமிற்கு ஏற்ப கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டன. உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான முறைக்கு ஏற்ப மாற முயன்றதால், உள்ளூர் மக்களின் சுயமான கருத்துகளும், தனித்துவமும் தகர்க்கப்பட்டன. ஊடகங்கள், பொதுமக்களாலேயே  இளமை என்றால் என்ன, எப்படி இருக்க வேண்டும் என்பது முடிவு செய்யப்பட்டது. மேலும், வயது  அழகியலாக மாறியது. அதுவே போராட்டக்காரரின் தோற்றம், உடை, அசைவுகள், முகபாவனைகளைத் தீர்மானித்தது. இந்த ஜென் சி தலைமுறையின் எதிர்ப்பு முதிர்ச்சியற்றதாகத் தோன்றினாலும், கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்ததால் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்று கருதியே அரசியல்வாதிகள் அதனை வரவேற்றனர். 

வயது அடிப்படையிலான மிகவும் வசதியான வகைப்பாட்டில் இருக்கும் ஒரு சிக்கல் நிச்சயம் முக்கிய காரணியாக அமைகிறது. ஒரே காலகட்டத்தில் வளர்ந்தவர்கள் தங்களுக்கிடையே சில பொதுவான அனுபவங்கள், தொழில்நுட்பங்கள்,  கலாச்சாரக் கூறுகளைப் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். காலப்போக்கில் ஜென் சி என்பது குறிப்பிட்ட வயதுப் பிரிவைக் குறிக்கும் சொல்லாக இல்லாமல், குறிப்பிட்ட ஆளுமைப் பண்பைக் குறித்துக் காட்டும் சொல்லாக மாறத் தொடங்கியது. ‘நிதானமான மனப்பான்மை கொண்டவர்கள், அதிக ஆரவாரம் செய்யாதவர்கள் என்பதன் அடிப்படையில் ‘ஜென் சி என்பதன் முழு வடிவம் ஜெனரேசன் ஜென் (Generation Zen) என்பதாகும். அந்தத் தலைமுறை உருவானபோது, முதலில் அப்படித்தான் இருந்தது... இப்போது அதன் ஒரு பகுதி வழிதவறி விட்டது’  என்று 2026 ஆகஸ்ட் 12 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கங்கனா ரனாவத் கூறினார். போராட்டக்காரர்கள் குறித்து ‘அழுக்குச் சாக்கடைத் தலைமுறை’ (generation gutter) என்று தான் முன்பு குறிப்பிட்டிருந்த கருத்துக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு பேசியிருந்தார். அதாவது, 'கரப்பான் பூச்சிகள்' என்று ஒரு சில இளைஞர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதால், அவர்களை மட்டுமே  தான் 'சாக்கடை' என்று குறிப்பிட்டதாகக் கூறிய அவர், அந்த ஒரு சிலரின் செயல்களைக் கொண்டு ஒட்டுமொத்த தலைமுறையையும் அப்படிச் சித்தரிப்பது தவறானது என்று வலியுறுத்தினார்.     

ஆனாலும் அவர் ஜென் தலைமுறை என்று அவர்களை வர்ணித்து, அதன் மூலம் அவர்களைப் பொதுமைப்படுத்தியே தனது மறுப்பைத் தொடங்கியிருந்தார். மேலும், அப்போது தொடர்ச்சியான கருப்பொருளாக இருந்த முக்கியமான வார்த்தைக்குப் பொருத்தமானவர்களாக இல்லை என்பதால், ஜென் சி தலைமுறையை மையமாகக் கொண்டு நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற மற்ற தலைமுறையினரை அவர் புறக்கணிக்கவும் செய்தார். லட்சக்கணக்கான மக்களை ஒரே பெட்டிக்குள் அடைத்து, அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான கவலைகள், ஒரே மாதிரியான அரசியல், ஒரே மாதிரியான சமூக ஊடக உறவு, ஒரே மாதிரியான கவன ஈர்ப்புத் திறன், ஒரே மாதிரியான உடைகள், ஒரே மாதிரியான சொல்லகராதி வழங்கப்பட்டன. ஜென் சி என்பது நிச்சயம் ஓர் அரசியல் சித்தாந்தம் அல்ல. 

ஜென் சி தலைமுறையை உள்ளடக்கிய அந்தக் கூட்டத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தினரும்  (ஏபிவிபி) அடங்குவர். நீட் தேர்வுகளில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக 2026 மே 13 அன்று அவர்களும் ஒரு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் பெரிய அளவில் நடைபெற்ற போராட்டங்கள் எதிலும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. 2026 ஜூலை 20 அன்று நடந்த அரசு வன்முறைக்குப் பிறகு அவர்கள் காத்த மௌனம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அப்போது அவர்கள் வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் ‘...குறுகிய அரசியல் நலன்களுக்காக, தேசவிரோத செயல் திட்டங்களுக்காக மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பயன்படுத்தக் கூடாது... இதுபோன்ற தீய முயற்சிகள் 'நிழல் அரசு' போன்ற இந்தியாவிற்கு எதிரான வலையமைப்புகளுக்கு வலுவூட்டி வருகின்றன’ என்று குறிப்பிட்டிருந்தனர்.

ஏபிவிபியும் ஜென் சி தலைமுறை சார்ந்த குழுதான்… மாறுவேடம் அணிந்து வந்து  போராட்டக்காரர்களைத் தாக்கியவர்களும் ஜென் சி தலைமுறையினரே… தங்களுக்குச் சாதகமாக நடந்து கொண்ட அமைப்பைப் பற்றிக் குறை கூறுவதற்கு அதிகமான காரணத்துடன் இல்லாத அரசியல்வாதிகளின், செல்வந்தர்களின் பிள்ளைகளும் ஜென் சி தலைமுறையினர்தான். அரசு நிறுவனங்களுக்குள் பணிபுரிந்து, அழிவுகரமான கொள்கைகளுக்குப் பச்சைக்கொடி காட்டி வரும் இளைஞர்களும் ஜென் சி தலைமுறையினரே. வெளியே வந்து  போராட்டங்களுக்கு ஆதரவாக நின்ற மாணவர்கள் ஜென் சி தலைமுறையினர்... போராட்டங்களை எதிர்த்த மாணவர்களும் ஜென் சி தலைமுறையினர்தான். ஆக, இன்ஸ்டாகிராம் ரீல்கள், தொலைக்காட்சி விவாதங்களுக்கு இடையில் எங்கோ ஓரிடத்தில் 'ஜென் சி' தலைமுறை என்பதற்கு எல்லா அர்த்தமும் இருப்பதாகவும், அதே வேளையில் அது கிட்டத்தட்ட ஒன்றுமில்லை என்பதாகவும் நாம் சமாளித்திருக்கிறோம்.   

தலைமுறை அடையாளங்கள், அரசியல் கொள்கைகளை  ஒத்த சொற்களாக பிரதான ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது, ​​அதற்கு யதார்த்தத் தன்மை கிடைத்து விடுகின்றது. திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுவதால் உண்மையாகி விடும் அபாயத்தையும் அது எதிர்கொள்ள நேர்கிறது. ஜென் சி என்ற அந்த முத்திரை, ஜந்தர் மந்தரில் யாரெல்லாம் உள்ளே நுழையலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கு எந்தவொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை என்பதை மறைத்தது. அங்கே பள்ளிக்குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள், பெருநிறுவன ஊழியர்கள் என்று அனைவரும் இருந்தனர். அவர்கள் தில்லி வெயிலில், மழையில் தங்கள் நாட்களை, வாரங்களைச் செலவிடுவதற்கான காரணமாக கல்விமுறை மாறும் என்பதைக் கற்பனைகூட செய்திராத மக்கள்... அந்தச் சமூகம் அவர்களின் பிறந்த ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட சமூகம் கிடையாது. மாறாக, கொண்டிருந்த நோக்கத்திற்காக அவர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒற்றுமையே அதற்கான அடிப்படையாக இருந்தது.  

போராட்டங்களில் பகத்சிங்கூட ஒரு குறியீடாகத் தோன்றினார். ரோகித் வெமுலாவின் சுவரொட்டிகளும் போராட்டக் களங்களில் மேலுயர்ந்து நின்றன. அநீதியை எதிர்கொண்டபோது இளைஞர்களாக இருந்தது அவர்களுக்கான முக்கியத்துவமாக இருக்கவில்லை. மாறாக, இயல்பாகி விட்டது என்பதாலேயே அநீதியை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, தங்கள் வயதிற்கொவ்வாத மிகப்பெரிய அரசியல் உறுதியுடன் அவர்கள் இருந்ததாலேயே அவர்களுக்கான முக்கியத்துவம் சாத்தியமாயிற்று. ஆகவே, மூலகாரணத்தை ஆராய்வது இன்றியமையாததாகிறது. போராட்டங்கள் ஜூலை 25 அன்று மாயமாக மறைந்து போய் விடவில்லை. இடங்களை மட்டுமே அவை மாற்றிக் கொண்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் இன்னும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டுதானிருக்கின்றனர். அந்தப் போராட்டங்கள் அனைத்தும் வினாத்தாள் கசிவு அல்லது அமைச்சரைப் பற்றியதாக மட்டுமே இருக்கவில்லை. கல்வி அமைப்பு சீர்குலைந்து போயிருப்பதற்கு அரசாங்கத்தை நடத்தும் கட்சி முக்கியத்துவம் தரவில்லை. பாஜக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது வேறு எந்தக் கட்சியும் அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளலாம் என்றாலும் வகுப்பறைக்குள் நடக்கும் பாடம் அதே பாதையில்தான் போய்க் கொண்டிருக்கிறது. விமர்சன சிந்தனைத் திறன்களைச் சோதிப்பதை நிறுத்திக் கொண்ட தேர்வுகள், மனப்பாடம் செய்வதை மட்டுமே ஊக்குவித்து வருகின்றன. பாடத்திட்டங்கள் மேலும் மேலும் கனமாகிக் கொண்டே இருக்கின்ற அதே சமயத்தில், உண்மையான கற்றல் எதனாலோ இலகுவாகிக் கொண்டே இருக்கிறது. நல்ல ஆசிரியர்கள் மிகவும் அரிதாகவே இருக்கிறார்கள். பள்ளி, பல்கலைக்கழக ஆட்சேர்ப்புகளை ஊழல் மற்றும் அரசியல் செல்வாக்கு குறித்த குற்றச்சாட்டுகள் சூழ்ந்துள்ளன.  வேலைவாய்ப்புகள் அரிதாகி விட்டன.

உயர்கல்வி அதிக விலை கொடுத்துப் பெறுவதாகி விட்ட நிலையில், அதன் தரம் வேதனையளிக்கும் வகையில் சீர்குலைந்து கிடக்கிறது. மடகாஸ்கர் எச்சரிக்கையை விடுத்தது. தலைவரை நீக்குவதென்பது அரசைச் சீரமைப்பதற்குச் சமமானதல்ல. அதுபோலவே கல்வி அமைச்சரை நீக்குவதும் கல்வி முறையைச் சீரமைப்பதற்குச் சமமானதாக இருக்காது. எனவே ஜூலை 25-ஆம் தேதி வெற்றியை வெறுமனே அமைச்சரின் பதவி விலகலைக் கொண்டு மட்டுமே அளவிட்டு விடக் கூடாது. அமைச்சரை மாற்றுங்கள், அரசாங்கத்தை மாற்றுங்கள், தேர்வு முகமையை மாற்றுங்கள், அதற்குப் பதிலாக வேறொரு குழுவை அறிவியுங்கள், ஒவ்வொரு தலைமுறைக்கும் தனி முத்திரையைக் குத்துங்கள்…. அதற்குப் பிறகும் அடுத்த வினாத்தாள் கசிவு, ஆட்சேர்ப்பு ஊழல் அல்லது மாணவர் சேர்க்கை நெருக்கடிக்காகக் காத்திருப்பது, அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு ஒருபோதும் சரிசெய்யப்படவில்லை என்பதையே அனைவருக்கும் நினைவூட்டும்.  

போராட்டக்காரர்கள் அந்த இடத்தில் புதிய தலைமுறையின் வருகையை அறிவிப்பதற்காக ஒன்றுகூடவில்லை; மாறாக, இந்த அமைப்பு தனக்கான பதிலைத் தானே அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியே அவர்கள் ஒருங்கிணைந்தனர். ஜென் சி என்று அவர்கள் மீது முத்திரை குத்துவது உலகளாவிய அடையாளத்தை உருவாக்கும் என்றாலும், உண்மையில் அது தலைமுறைகளுக்கு இடையிலான பிளவாகவே  அமைப்புரீதியான தோல்விகளை மூடிமறைக்கிறது.  

 

வரலாற்றில் முதுகலைப் பட்டம் பெற்றவரான அக்சா அன்னா சாண்டி, சாதி மற்றும் சமகால இந்தியாவின் வரலாற்றில் உள்ள பல்வேறு நுணுக்கங்களை சமூகவியல் கண்ணோட்டத்தின் மூலம் முன்னிறுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

 

https://m.thewire.in/article/rights/gen-z-is-not-a-movement

Comments