தேசிய கல்விக் கொள்கை ஜென்சிக்களின் கனவுகளுக்குத் துணைநிற்கிறதா அல்லது அவர்களின் கனவுகளைச் சிதைக்கிறதா? - நேஹாவுடன் உரையாடல்
தேசிய கல்விக் கொள்கை
ஜென்சிக்களின் கனவுகளுக்குத் துணைநிற்கிறதா
அல்லது அவர்களின் கனவுகளைச் சிதைக்கிறதா?
- நேஹாவுடன் உரையாடல்
ஜி.சம்பத்
தி ஹிந்து இன்ஃபோகஸ் பாட்காஸ்ட்
2026 ஆகஸ்ட் 09
வணக்கம்,
இன்ஃபோகஸ் நிகழ்ச்சிக்கு உங்களை வரவேற்கிறோம். நான் ஜி.சம்பத். ஜந்தர் மந்தர் போராட்ட முகங்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும், கவர்ச்சிகரமான
மாணவர் தலைவரான நேஹா போரா இன்று நம்முடன் இணைந்துள்ளார். நேஹா இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிய
லெனினிச விடுதலைக் கட்சியுடன் இணைந்த அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவர்
ஆவார். சுருங்கிவரும்
ஜனநாயக வெளியின் பின்னணியில் மாணவர்களை, உழைக்கும் வர்க்க இளைஞர்களை அணிதிரட்டுவதில்
எதிர்கொள்ளும் சவால்கள், கல்வி சீர்திருத்தத்திற்கான இயக்கத்திற்கான பொறுப்பை ஏற்றுக்
கொள்வது, அதனை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்வது என்பது குறித்துப் பேசுவதற்காக
நேஹா இன்று நம்முடன் இணையவுள்ளார். நேஹா, இன்ஃபோகஸிற்கு உங்களை வரவேற்கிறோம். நன்றி.
நன்றி
இந்த நேர்காணலை ஊடகம் சார்ந்த கேள்வியுடன் தொடங்க விரும்புகிறேன்.
இப்போது நீங்கள் நிறையப் பேசி வருகிறீர்கள். 23 நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப்
பிறகு வந்திருக்கிறீர்கள். இந்த அளவிற்கு பலதரப்பட்ட மக்களிடம் பல விஷயங்களைப் பற்றி
அதிகமாகப் பேசுவது நிச்சயம் சோர்வை அளிக்கக் கூடியதாகவே இருந்திருக்கும். உங்களின் மனஉறுதிக்கான ஆதாரம் எது?
எல்லாவற்றையும்
காட்டிலும் கோபம்தான் அதற்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன். ஆம். கோபமும், நாங்கள்
நேரில் கண்ட நிகழ்வுகள் ஏற்படுத்திய கடும் விரக்தியும்தான் அதற்கான காரணம். ஒருபுறம்
மகிழ்ச்சியாக இருந்தாலும்,
இருபதாம் தேதி, அதைத் தொடர்ந்த நாட்களில் நடந்த நிகழ்வுகள் விரக்தியையே ஏற்படுத்தின. ஒவ்வொரு நாளும் இந்த அரசாங்கம் நாம்
கோபப்படுவதற்கான புதிய காரணங்களை நமக்குத் தந்து கொண்டே இருக்கிறது. ஒருநாள் காலையில்
எழுந்த போது, பதினைந்து வயது சிறுமி கேமரா முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டு,
மன்னிப்பு கேட்க நிர்ப்பந்திக்கப்படுவதைப் பார்க்க நேர்கிறது. பிறகு பஜ்ரங் தள் உறுப்பினர்கள்
இந்திய மரபுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்து பெண்களின் வீடுகளுக்குச் சென்று,
அவர்களுக்குப் 'பாடம்' புகட்டியதாக கேமராவில் அறிவித்துக் கொண்ட வீடியோக்களைக் காண
முடிகிறது. ஒவ்வொரு நாளும் இதுபோன்று நடந்து கொண்டே இருக்கிறது... நாட்டின் பிரதமரே ஒருகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் வந்து பேசுகிறார்.
ஆக, இவையனைத்திற்கும் தேவைப்படும் எரிபொருளை அரசாங்கமே எங்களுக்கு அளித்து வருவதாகவே
நான் நினைக்கிறேன்.
ஆக,
உங்களிடம் உள்ள உறுதிக்கு யாருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கிறது.
ஆமாம்.
ஆரம்பத்திலிருந்தே நாங்கள்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு நன்றி தெரிவித்து வருகிறோம். இப்போது நாங்கள் நன்றி
சொல்வதற்கு இன்னும் பலர் உள்ளனர்.
உங்கள்
உண்ணாவிரதப் போராட்டத்தைப் பற்றி இப்போது பேசுவோம். நீங்கள் மார்க்சிய-லெனினிய அமைப்பைச்
சார்ந்தவர். பொதுவாக உங்களைப் போன்ற அமைப்புகளின் போராட்ட வடிவம் கூட்டு வலிமையைச்
சார்ந்தே இருக்கும். அதாவது பெருந்திரளான மக்களைத் திரட்டுவதன் மூலமே உங்களுக்கான வலிமையை நீங்கள் உருவாக்குவீர்கள். உங்கள்
வலிமையானது தனிநபர் தியாகத்தை முதன்மையாகக் கொண்டிருப்பதல்ல. ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் காந்திய பாணியிலான அரசியல்
போராட்டமாகவே பார்க்கப்படுகிறது. எனக்குப் புரிந்தவரையில், அது மார்க்சியப் போராட்ட
முறை கிடையாது. அப்படியிருக்கும் போது, இந்த முரண்பாட்டை நீங்கள் எவ்வாறு நியாயப்படுத்துவீர்கள்?
எனக்குச்
சரியாகத் தெரியவில்லை. குறிப்பாக, கம்யூனிஸ்டுகள் என்று தங்களை வெளிப்படையாக அடையாளப்படுத்திக்
கொள்ளும் செயல்பாட்டாளர்களை மக்கள் ஒருவிதமான கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள் என்றே
நான் நினைக்கிறேன். அதாவது அவர்களை கம்யூனிசம், மார்க்சியம் அல்லது இடதுசாரிப் புரட்சிகரச்
செயல்பாடுகள் குறித்து தங்களுக்கு ஏற்கனவே தெரிந்த வரையறைகளுக்குள் அடைத்து வைத்துப் பார்க்கவே மக்கள் முற்படுகிறார்கள். ஆனால், மனிதர்களாகிய
நாம் உண்மையில் அப்படிச் செயல்படுவதில்லை என்றே நினைக்கிறேன். முதலாவதாக, போராட்டம்
என்பது ஒரு கருவியைப் போன்றது. ஒரு பேனாவைப் போல - அதைக் கொண்டு நீங்கள் ஒரு காதல்
கடிதத்தை எழுதலாம் அல்லது ஒருவரைத் திட்டலாம். எழுதுபவர் கையாளுவதற்கேற்பவே அதன் பயன்பாடு
அமையும். அதேபோல, சிறையில் இருந்தபோது பகத்சிங்கும் அவரது தோழர்களும்கூட காந்தியால்
பிரபலப்படுத்தப்பட்ட அல்லது காந்தியப் போராட்ட முறையாகக் கருதப்படும் உண்ணாவிரதப் போராட்டத்தை
மேற்கொண்டிருக்கின்றனர்.
அது
இல்லை... என் கேள்வி என்னவென்றால், இந்தப் போராட்டம் அடிப்படையில் ஆட்சியாளர்கள் அல்லது
ஒடுக்குமுறையாளர்களின் மனசாட்சியைத் தட்டி எழுப்பும் நோக்கத்துடன் இருந்ததா? அப்படியென்றால், தர்மேந்திர பிரதானின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப நீங்கள்
முயன்றீர்களா?
இல்லை, தட்டி எழுப்புவதற்கு அங்கே மனசாட்சி என்று எதுவும் இல்லை. நீங்கள்
சொன்னதைப் போல, மக்களைத் திரட்டுவதில் மட்டுமே இடதுசாரிகள் கவனம் செலுத்துகிறார்கள்.
அதிலிருந்தே எங்களுக்கான
வலிமையை நாங்கள் பெற்றுக் கொள்கிறோம். ஆனால் மக்களை எப்படித் திரட்டுவது? அவர்களிடம்
சென்று வெறுமனே 'வாருங்கள், நாம் ஒன்றிணையலாம்' என்று சொன்னால் மட்டும் போதாது. அதிகாரத்தில்
இருப்பவர்களின் மனசாட்சியை மட்டுமல்லாமல், உங்களைச் சுற்றியுள்ள சாமானிய மக்களின் மனங்களை
ஈர்ப்பதற்கும் பல்வேறு வழிமுறைகள் தேவைப்படுகின்றன. எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தை
தொடங்கிய போது, எங்களிடம் எந்தவொரு தவறான எண்ணமும் இருக்கவில்லை. அதாவது, அரசாங்கத்தின்
மனசாட்சியைத் தட்டி எழுப்ப முடியும் என்றோ, அல்லது அரசாங்கத்திற்கு மனசாட்சி இருக்கும்
என்றோ நாங்கள் ஒருபோதும் நினைக்கவே இல்லை. அதாவது, திடீரென்று விழித்துக் கொண்டு அமைச்சரிடம்
'பாவம் இந்தக் குழந்தைகள் இறந்து கொண்டிருக்கிறார்களே, தயவுசெய்து... நீங்கள் ஏன் பதவி
விலகக் கூடாது?' என்று அரசாங்கம் கேட்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை.
எங்கள் கோரிக்கை எப்போதும் மக்களை நோக்கியே இருந்தது.
'சுய
தியாகம்' என்ற வார்த்தையை மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், உணவு உட்கொள்ளாத போது
உங்கள் உடல் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகிறது. அந்த வகையில் எந்தவொரு போராட்ட வடிவத்திற்கும்...
அதாவது உங்கள் கருத்துகளை வெளிப்படுத்த, மக்களைச்
சென்றடைய நீங்கள் தனிப்பட்ட முறையில் சில தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும். தனிப்பட்ட
விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். போராட்டம் பெரிதாக இருந்தது என்றாலும், அது எப்போதும்
சாமானிய மக்களை நோக்கியே இருந்தது. தொலைக்காட்சித் திரைகளில் தோன்றி, பெண்களுக்கு அதிகாரமளிப்பது
பற்றி பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு அழுவது போல அல்லது மாணவர்கள் மீது அதிக அக்கறை
கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்வது போல நடிப்பவர்களை நோக்கி அல்லாமல், எங்கள் வேண்டுகோள்கள் சாதாரண மக்களை நோக்கியே விடுக்கப்பட்டன.
மத்திய தில்லியின் மையப்பகுதியில் அமர்ந்திருந்த இளைஞர்களை அவர்கள் எப்படியெல்லாம்
அலட்சியப்படுத்துகிறார்கள் என்பதை, இளைஞர்கள் வாடி வதங்குவதை அவர்கள் எப்படியெல்லாம் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்துவது என்பது வேறு விஷயம். குடிமக்களுக்குரிய அடிப்படை மரியாதையைக்கூட
அவர்கள் தருவதில்லை. எங்களை அவர்கள் பயங்கரவாதிகள் என்றே அழைத்தார்கள், எங்களை வைரஸ்கள் என்றார்கள்.
எனவே அது ‘நாங்கள் எங்களையே தியாகம் செய்கிறோம், உங்களால் இவ்வளவுகூட செய்ய முடியாதா?’
என்று கேட்பதைப் போன்றதல்ல - மாறாக அது அரசாங்கம்
உண்மையில் எதைப் பற்றியும் கவலைப்படாது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகின்ற முயற்சியாகவே இருந்தது. 'இன்று நாங்கள் என்றால், நாளை அது உங்கள் குழந்தைகளாக
அல்லது நீங்களாக இருக்கலாம். உண்ணாவிரதம் இருப்பவர்கள் மீது இந்த அரசாங்கம் காட்டுகின்ற
இதே அக்கறைதான் உங்கள் மீதும் காட்டப்படும்' என்பதை உணர்த்துவதே அதன் நோக்கமாக இருந்தது.
அந்த அரசாங்கம் ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் வாக்குக்காக உங்களிடம் வந்து நின்று சாதி,
மதம், மொழி, பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் உறவுகளை உருவாக்கிக் கொள்ள முயலும்
அதே அரசாங்கம்தான். அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை, மரியாதையை அவர்கள் எப்படியெல்லாம்
தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பார்த்திருப்பீர்கள். தர்மேந்திர பிரதான் திறமையற்றவர்
என்பது ஒன்றும் ரகசியம் கிடையாது. அது விவாதிக்கப்பட வேண்டிய விஷயமும் இல்லை. கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றதிலிருந்தே அவரால் இந்தக் கல்வி
அமைப்பைச் சரிவரக் கையாள முடியவில்ல அல்லது இந்தக் கல்வி
அமைப்பின் மீது அவருக்கு
எந்தவித அக்கறையும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகவே இருக்கிறது.
மீண்டும்
போராட்டத்தைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். உங்கள் சிந்தனையும், செயல்பாடுகளும்
உங்கள் இடதுசாரி சித்தாந்தத்தின் வெளிப்பாடு என்று நீங்கள் பலமுறை கூறினீர்கள். ஆராய்ந்து பார்க்கும் எந்தவொரு அரசியல் அல்லது சமூக
நிகழ்விலும் உள்ள முரண்பாடுகளைப் புரிந்து கொள்வதே இடதுசாரிப் பார்வையின் மைய அம்சம்
என்பதால், ஜந்தர் மந்தரில் திரண்ட போராட்டக்காரர்களின் வர்க்கப் பின்னணி குறித்த உங்கள்
புரிதலைப் பற்றி உங்களிடம் கேட்க விரும்புகிறேன்... அரசியல் மாற்றத்திற்கான உங்கள்
செயல்பாடுகளில், நீங்கள் முன்னெடுக்கக்கூடிய அல்லது பயன்படுத்திக் கொள்ளக்கூடிய முதன்மையான
முரண்பாடு எதுவாக இருக்கும்?
பல்வேறு
அம்சங்கள் உள்ளன. முதலாவதாக, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களைப் பார்த்தீர்கள்
என்றால், அவர்கள் குறிப்பிட்ட அமைப்பின் ஒரு பகுதியாகவே இருக்கிறார்கள். விடுதியில்
தங்கி, கட்டணம் செலுத்தி அவர்கள் வகுப்புகளுக்குச் சென்று வருகிறார்கள். சமூகத்தின்
ஒரு பிரிவாகப் பார்க்கும் போது, அவர்கள் ஒரு மாறுதல் நிலையில் இருக்கிறார்கள். தொழிலாள வர்க்கப் பின்னணியிலிருந்து வந்திருந்தாலும்கூட, அவர்களின்
குடும்பம் எதிர்கொள்ளக்கூடிய கவலைகள், நெருக்கடிகள் எதுவும் அவர்களை நேரடியாகப் பாதிப்பதில்லை.
ஏனெனில் அந்த நேரத்தில் அவர்கள் மாணவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் - இளைஞர்கள்...
அவர்கள் பல்கலைக்கழகங்களால் பராமரிக்கப்படுகிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை உடனடி உயிர்வாழ்விற்கான போராட்டம் பிரச்சனையாக இருப்பதில்லை. உடனடி உயிர்வாழ்வு அல்லது குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவது அல்லது
அன்றாட வாழ்க்கை, உணவுக்கான போராட்டங்கள் போன்றவற்றிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களின்
கற்றலை ஊக்குவிப்பதாக பல்கலைக்கழகச் சூழல் வடிவமைக்கப்பட வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் அதுபோன்ற சமூகப் பிரிவாக
இருந்தாலும், ஜந்தர் மந்தரில் மற்றும் நாட்டின் பல்வேறு நகரங்களில் நாம் கண்ட போராட்டத்தில்
கலந்து கொண்டவர்கள் பலதரப்பட்ட பின்னணியுடன் இருந்தனர். எடுத்துக்காட்டாக அந்தப் போராட்டத்தில்,
உத்தரப்பிரதேசத்தின் தொலைதூரக் கிராமங்களிலிருந்து வந்த மாணவர்கள் பங்கேற்றனர். அவர்கள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்
குறிப்பிட்ட தேர்விற்காக தயாராகி வந்தவர்கள். உண்மையில்
அது ஒரு கீழ்நிலைத் தேர்வுதான் - அதாவது உத்தரப்பிரதேசக் காவல்துறையில் காவலர் பணிக்கான
தேர்வு. அவர்கள் அந்தத் தேர்விற்காகத்
தயாராகிக் கொண்டிருப்பவர்கள். ஆண்டுதோறும் அவர்கள் அதற்காகத் தயாராகி வந்த நிலையில்,
நிர்வாகக் குளறுபடிகள் அல்லது வினாத்தாள் கசிவு போன்ற காரணங்களால் அந்தத் தேர்வு பாதிக்கப்படுகிறது.
அந்தத் தேர்வு தொடர்பாகவே அவர்கள் வந்திருந்தனர். தேர்வை நடத்துவதில் முறைகேடுகள் நடந்திருந்தன.
அந்த மாணவர்கள் அதற்கான நீதி கேட்டே அங்கே வந்திருந்தனர். அவர்களில் நீட் தேர்வு எழுதுபவர்கள்,
யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி
தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்கள் எனப் பலரும் இருந்தனர். காவல் ஆய்வாளர் பணி அல்லது கீழ்நிலை அரசுப் பணி என்று எதுவாக இருந்தாலும் சரி - தங்கள் குடும்பத்தின் சமூக, பொருளாதார
முன்னேற்றத்திற்கான ஒரே வழியாக அரசு வேலை கிடைப்பது மட்டுமே இருக்கும் என்று கருதுகின்ற மாணவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அதே சமயத்தில் வசதியான குடும்பப் பின்னணியுடன் இருந்தவர்களும்,
ஆலன் போன்ற புகழ்பெற்ற பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களும்கூட போராட்டத்தில்
கலந்து கொண்டனர்.
போராட்டத்தின்
தன்மையைப் பொறுத்தவரை, அதில் பங்கேற்ற அனைவரும் ஒன்றாக அமர்ந்து, மக்கள் கொண்டு வந்து
கொடுத்த உணவையே சாப்பிட்டனர். நீரஜ், ஜூனேத் ஆகிய இருவரும் உணவு ஏற்பாடுகளைக் கவனித்துக்
கொண்டனர். அவர்கள் இருவரும் இணைந்து செயல்பட்டனர். அங்கே வந்து சேரும் உணவு அனைத்தும்
இவர்களிடமே சென்றடைந்தது, யாருக்கெல்லாம் உணவு பரிமாறப்பட்டது, யாரெல்லாம் சாப்பிட்டார்கள் என்பதை அவர்கள் கண்காணித்து வந்தனர்.
அங்கிருந்த அனைவரும் அந்த உணவையே
உண்டனர். அனைவரும் பொதுக் கழிப்பறைகளையே பயன்படுத்தினர்.
உண்ணாவிரதம்
இருந்தவர்களைத் தவிர மற்ற அனைவரும் சாலையில் கிடந்த விரிப்புகள் மீதே படுத்து உறங்கினர்.
உண்ணாவிரதம் இருந்தவர் மட்டும் ஒரு பலகை மீது படுத்திருந்தார். அந்தச் சூழலில் அங்கிருந்த
அனைவரிடமும் ஒரு கூட்டுணர்வு நிலவியது. எங்களுக்குக் கிடைத்தவை எதுவாக இருந்தாலும்
- சில நாட்களில் பிரியாணி கிடைக்கும், வேறு சில நாட்களில் சாதாரண சோலா-பட்டுரா மட்டுமே
கிடைக்கும் - அவையனைத்தையும் நாங்கள் எங்களுக்கிடையே பகிர்ந்து கொண்டோம். பொதுக்கழிப்பறைகளையே
நாங்கள் அனைவரும் பயன்படுத்தினோம். போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான
மக்கள் வந்ததால், பொதுக்கழிப்பறைகள் மிகவும் அசுத்தமாகின. எத்தனை முறைதான் அவற்றைச்
சுத்தம் செய்ய முடியும்? எனவே, கழிப்பறை இருக்கைகளில் அமர்வதற்கு முன்பாகத் தெளித்துக்
கொள்ளும் கிருமிநாசினி ஸ்ப்ரே போன்றவற்றைச் சிலர் கொண்டு வந்து அங்கே வைத்தனர். பெண்கள்
அல்லது கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படாமல் இருக்க,
அந்த ஸ்ப்ரே பாட்டில்கள் அவ்வப்போது நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. சானிடைசர், கை கழுவும் திரவம், டாய்லெட் பேப்பர் போன்றவையும் அங்கே
வைக்கப்பட்டன. கழிப்பறையின் ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவற்றை அவ்வப்போது மக்கள்
நிரப்பிக் கொண்டே இருந்தனர்.
அங்கே
ஒவ்வொரு நாள் இரவும் தன்னார்வலர்கள் மற்றும் தங்கள் வேலையை முடித்த பிறகு நான்கு மணி
நேரம் ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து அங்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள
முயன்றவர்கள் வருவார்கள். அங்கே வந்து பார்வையிடும் அவர்கள், உண்ணாவிரதம் இருப்பவர்கள்
அல்லது மாணவர் அமைப்பினர் தங்கியிருந்த கூடாரங்களுக்குச் சென்று நிலவரத்தைக் கேட்டறிவார்கள்.
என்ன பொருட்களெல்லாம் உள்ளன, எவையெல்லாம் தீர்ந்து
விட்டன, நாளைக்கு என்ன தேவைப்படுகிறது என்பது போன்ற விவரங்களைச் சேகரித்துக் கொள்வார்கள். உண்ணாவிரதமிருந்த எங்கள் மீது
மக்கள் சிறப்புக் கவனம் செலுத்தினர். ஆனால் தண்ணீர், எலுமிச்சை, உப்பு மட்டுமே நாங்கள்
உட்கொள்ளக் கூடியவையாக இருந்தன.
அந்த மூன்று பொருட்கள் மட்டுமே எங்களுக்குத் தேவைப்பட்ட காரணத்தால், அவர்கள் தினமும் அங்கே வந்து 'நாளைக்குத் தேவையான உப்பு இருக்கிறதா?
எலுமிச்சை இருக்கிறதா?' என்று கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். அந்தப் போராட்டம் நடத்தப்பட்ட
விதம் முதலாளித்துவ வர்க்கம் அறிந்த ஒன்றாக இருக்கவில்லை அல்லது நாம் அடிக்கடி குறிப்பிடும்
ஆளும் வர்க்கக் கலாச்சாரம் சார்ந்தும் இருக்கவில்லை. போராட்டம் அவர்களின் கலாச்சாரமாக
இருக்கவில்லை. அவர்கள் வாழும் முறை அல்லது அவர்கள் இந்த உலகில் இயங்குகின்ற விதம் இந்த
மாதிரி இருப்பதில்லை. அந்த வகையில் பார்க்கும்போது, இந்தப் போராட்டம் இடதுசாரிகளாகிய எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை
அளித்தது. அது எங்களின் பிற போராட்டங்கள் அல்லது உள்ளிருப்புப் போராட்டங்களில் பின்பற்றப்பட
வேண்டிய முன்மாதிரியாக அமைந்தது. கிடைத்தவற்றை விநியோகிப்பதில், மக்களுடன் ஒன்றிணைந்து
செயல்படுவதில் வெளிப்பட்ட அரசியல்,
சமூக உணர்வு போன்றவை இடதுசாரிகள் விரும்பும் வகை முன்னுதாரணமாகவே இருந்தன. ஆளும் வர்க்கத்தினர்
அறிந்திராத விஷயமாக அது இருக்கலாம் என்றாலும் அந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களின்
கலவை கூடுதல் பன்முகத் தன்மை கொண்டதாக இருந்தது. பயிற்சி
மையங்களை நடத்தி வரும் சிலரும்கூட போராட்டத்தில்
பங்கேற்றனர்.
அருமையான
ஒரு தம்பதியினர் அங்கே எங்களிடம் வருவார்கள். கணவர் தில்லியைச் சேர்ந்தவர், மனைவி அசாமைச்
சேர்ந்தவர். அந்தப் பெண் தினமும் வருவார். தினமும் வர முடியாவிட்டாலும், ஒரு நாள் விட்டு
ஒரு நாளாவது வந்து விடுவார். அங்கே வந்து எங்கள் அனைவரையும் சந்திப்பார், மிகவும் சாதாரணமாக
'ஹாய்' சொல்வார்... அவர் எந்தவித ஆரவாரமோ அல்லது கூச்சலோ போட மாட்டார். அவர் பெயர்
அரண்யா. அமைதியாக வந்து விட்டுச் சென்று
விடுவார். போராட்டக்களத்தைப் பராமரித்து வந்த எங்கள் தோழர்களிடம் 'உங்களுக்கு என்ன
தேவைப்படுகிறது? எல்லாம் இருக்கிறதா?' என்று கேட்பார். மழை பெய்யும் போது நாங்கள் வைத்திருந்த
பிளாஸ்டிக் ஷீட்கள் கிழிந்து,
தண்ணீர் உள்ளே ஒழுகத் தொடங்கி விடும். அவர் 'உங்களுக்குப்
பிளாஸ்டிக் ஷீட்கள் வேண்டுமா? உண்ணாவிரதம் இருப்பவர்களை மழையில் நனையாமல் கழிவறைக்கு
அழைத்துச் செல்வதற்கு உங்களிடம் குடைகள் இருக்கின்றனவா?' என்று கேட்பார்.
அப்படிப்பட்ட
மனிதர்கள் பலர் அங்கே வந்தனர். அவர்களில் ஒரு பெண்ணைச் சந்தித்தது மிகவும் சுவாரஸ்யமாக
இருந்தது. தனது கணவருடன் மெல்போர்னில் வசிப்பதாகவும், நாங்கள் நடத்தும் போராட்டத்தை
முழு மனதுடன் ஆதரிப்பதாகவும் அவர் எங்களிடம் கூறினார்.
ஆரம்பத்தில் நாங்கள் அவர் சொன்னதை மிகவும் இயல்பாகவே எடுத்துக் கொண்டோம். ஏனெனில், அந்தப் போராட்டத்தில் அனைவரும் ஓர் அங்கமாகக் கலந்திருக்கும் போது,
மெல்போர்னில் வசிப்பவர்கள் வந்து ஆதரவு தெரிவிப்பதில் என்ன ஆச்சரியம் என்றே எங்களுக்குத்
தோன்றியது. ஆனால், அந்த உண்ணாவிரதப் போராட்ட இடத்திலிருந்து திரும்பிய பிறகுதான் எனக்குத்
தெரிந்தது - அவரும் அவரது கணவரும் மெல்போர்னில் மாணவர்களுக்கு ஆதரவாக ஒரு போராட்டக்
குழுவை ஒருங்கிணைத்திருந்தார்கள் என்பது… குர்கான், மனேசர், நொய்டா போன்ற இடங்களில்
நடந்த போராட்டங்களில் பங்கேற்றவர்களும் அங்கே வந்திருந்தனர். ஜென்சி தலைமுறையைச் சேர்ந்தவர்கள்
வந்திருந்தனர். தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 'கிக் வொர்க்கர்ஸ்'
எனப்படுபவர்களில் பெரும்பகுதியினர் இந்த ஜென்சி தலைமுறையைச் சார்ந்தவர்கள்தான். அவர்கள்
போராட்டக்களத்திற்கு வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
நீங்கள்
சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. போராட்டத்தின் தன்மை வழக்கமானதாக இல்லை
என்றும், பல்வேறு
சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அதில் பங்கேற்றனர் என்றும் நீங்கள் கூறுவதைப் புரிந்து
கொள்ள முடிகிறது. ஆனால் தாங்களாகத் திரண்டவர்கள், போராட்டக்காரர்களால் அணிதிரட்டப்பட்டவர்கள்,
நீட் தேர்வு ஆர்வலர்கள், அதேபோன்று நீங்கள் குறிப்பிட்ட மெல்போர்ன் மக்கள், ஜென்சியில்
ஒரு பிரிவினர் என்று ஏராளமானோர் இருந்தனர். ஆனால், ஜென்சியில் மற்றொரு பிரிவினரும்
இருந்தனர். அவர்கள் இன்று தெருக்களில் இருக்கிறார்கள். 'தல்வாரியா' என்று தங்களை அழைத்துக்
கொள்ளும் அந்த இளைஞர்களின் காணொளிகளை நாம்
பார்த்தோம், தங்களுக்கு அதிகாரம் கிடைத்ததாக அவர்கள் உணர்கிறார்கள். தல்வாரி
ஆவதன் மூலம், இதைச் செய்வதன் மூலம் தங்களுக்கு அதிகாரம் கிடைத்ததாக உணரும் ஒரு பிரிவினர்
இருக்கின்றனர். அகில இந்திய மாணவர் சங்கத்தின் தேசியத் தலைவர் என்ற முறையில், இடதுசாரி
தன்னார்வத் தொண்டு மற்றும் தொழிலாள வர்க்க இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பாரம்பரியத்திலிருந்து
நீங்கள் வருகிறீர்கள். எடுத்துக்காட்டாக, அதிகாரமளிக்கும் ஒரு வழியாக தல்வாரி போன்ற
அமைப்புகளால் ஈர்க்கப்படும் அந்தத் தொழிலாள வர்க்கப் பிரிவினருடன் இணைவதில் இருக்கும்
சவாலை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாசிசம்
வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு நாடுகளில் ஏன் செழித்து வளர்ந்தது என்ற
வரலாற்றை ஆராயும் போது, இந்த உண்மையை நாம் உணர்கிறோம். அது
பற்றிப் பேசுகிறோம். நேரடி உத்தரவுகள் பிறப்பிக்கத் தேவையில்லாத மக்கள்திரளை ஆளும்
வர்க்கங்கள் தயார்படுத்தும் போதுதான், அதாவது, சமூகத்தில் உள்ள மற்றொரு பிரிவினரை
'மற்றவர்கள்' என்று அல்லது ஒரு புகழ்பெற்ற நாகரிகத்தின் வீழ்ச்சிக்கு, அல்லது நாட்டில்
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குக் காரணமானவர்கள் என்று அவர்களைச் சித்தரிப்பதன்
மூலமே அந்த மக்கள்திரளுக்கு அடையாள உணர்வு, சுய உணர்வு, அதிகார உணர்வு போன்றவை கிடைக்கின்றன
என்று படிக்கிறோம். சமூகத்தில் இருக்கும் மற்றொரு பிரிவினரைக் குறிவைப்பதன் மூலமே மக்கள்திரளுக்கு
அதிகார உணர்வு கிடைக்கிறது. இதுதான் வரலாறு நெடுகிலும் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவைப்
பார்க்கும் போது - நமது சமூகத்தில் எப்படி, என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும் போது,
அந்த உணர்தலுக்கே
நாம் மீண்டும் வருகிறோம். ஹிந்து ராஷ்ட்ரத்தின் மீதான ஈர்ப்பு, நீதிக்கான ஈர்ப்பு,
அதாவது ‘பழைய மரபுகளுக்குத் திரும்பினால் - மிகவும் மரியாதையுடன், நல்லிணக்கத்துடன்
வாழ்ந்த, வளமான தேசமாக இருந்ததாகக் கூறப்படும் புகழ்பெற்ற கடந்த காலத்திற்குத் திரும்பினால்,
மீண்டும் நாம் செழிப்படைவோம்’ என்ற ஈர்ப்பே அந்த உணர்தலுக்கு இட்டுச் செல்கிறது. அதனால்
நமது பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி விடும் என்று நினைக்கிறார்கள். இந்த நாட்டில் முஸ்லீம்களாகிய ‘மற்றவர்கள்’ இருந்தால், மக்களுக்கு
இனிமேல் வேலைவாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. அந்த மற்றவர்கள் ஒழிக்கப்பட்டால் மட்டுமே,
வேலையின்மை தொடராது, அது இல்லாமல் போய் விடும். இந்த நாட்டில் உள்ள தலித்துகள், ஆதிவாசிகள்,
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் போன்றவர்கள் வேலைகளைப் பறித்துக் கொள்வதாலேயே மக்கள்
வேலையில்லாமல் இருக்கிறார்கள். முஸ்லீம்கள் நாகரிகத்தைப் பற்றி எந்தவித அக்கறையும்
இல்லாமல் இனப்பெருக்கம் செய்து கொண்டே இருக்கிறார்கள். குற்றங்கள் நடப்பதற்கு உழைக்கும்
வர்க்கத்தைச் சார்ந்த, கல்வியறிவற்ற, விளிம்புநிலைச் சாதியினர் அல்லது முஸ்லீம் மக்களே
காரணம். கல்வியறிவற்றவர்களாக, நாகரிகத்தைப் பற்றிச் சிறிதளவிலும் அக்கறை இல்லாதவர்களாக
அவர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம்
நாகரிகம் கிடையாது. நமது பாரம்பரியங்கள் வீழ்ச்சியடைந்து வருகின்றன. சமூகத்தால் பெண்கள்
நவீனமயமாக்கப்பட்டுள்ளனர். நவீனமயமாக்கலால் எல்லாவற்றிலும் சரிவு ஏற்படுகிறது. சிலர்
தங்களை பெண்கள் மற்றும் ஆண்கள் அல்லாத பாலினங்களைச் சார்ந்தவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள்
- இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
சமூகம்
எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அவர்கள் மீது பழி சுமத்துவது, அவர்களை வில்லன்களாகச்
சித்தரிப்பது அல்லது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது உண்மையில் என்ன மாதிரியான
விளைவை ஏற்படுத்தும்? இந்தப் பிரச்சனைகளின் முழுச் சுமையையும் சுமக்கும் சமூகத்தின்
ஒரு பிரிவினருக்கு அதிகாரமளிக்க வேண்டியதும் அவசியமாகிறது. அதுதான் இப்போது நடந்து
கொண்டிருக்கிறது. முஸ்லீம்கள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட
பிரிவினர் மீது அதிகாரத்தைச் செலுத்துவதன் மூலம் ஒருவித அதிகார உணர்வைத் தங்களுக்காகப்
பெற்றுக் கொள்ளும் ‘கோழைகள்’ குறித்து நீங்கள்
கூறியது மிகச் சரியான அவதானிப்பு... சமூகத்தின் இந்தப் பிரிவினரைச் சென்றடைவது, அவர்களிடம்
‘சமூகத்தின் மற்றொரு பிரிவினருக்கு உரிமைகளை மறுப்பதால் அல்லது உரிமையற்றவர்களாக அவர்கள்
இருப்பதால், உங்களுக்கு இழைக்கப்படும் உரிமை மறுப்பு அல்லது அதிகாரமின்மை ஏற்படுவதில்லை’
என்பதைப் புரிய வைப்பது பாசிச-எதிர்ப்பு முன்னெடுப்பின் மிக முக்கியமான பகுதியாக இருக்கிறது.
அந்த நிலைமை வேலையின்மை பற்றி ஆட்சியில் இருக்கின்ற ஆளும் வர்க்கம் சிறிதும் கவலைப்படாமல்
இருப்பதிலிருந்தே தோன்றுகிறது. அதானி, அம்பானி போன்றோர் தங்கள் நிறுவனங்களை அமைத்துக்
கொள்வதற்காக உங்கள் நிலம் உங்களிடமிருந்து
பறிக்கப்பட்டு, மிகக் குறைவான விலைக்கு விற்கப்படும் என்ற உண்மையிலிருந்து அது வருகிறது.
வேலையின்மை, வன்முறை அல்லது சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த வளங்களுக்கான பற்றாக்குறை
போன்ற நெருக்கடிகளிலிருந்தே அத்தகைய சூழல் உருவாகிறது.
கல்வித்துறை
தொடர்ந்து தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. பொதுக்கல்வி முறை என்பது பல்வேறு பின்னணியுடன்
உள்ள மக்களை ஒன்றிணைக்கும் தளமாகும். எவரொருவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைக்
கடுமையாக விமர்சித்து அதனை வில்லனாகச் சித்தரிக்கலாம். ஆனால் அங்கேதான் முதல் தலைமுறையாகக்
கல்வி பயிலும் மாணவர்களுக்கு வாய்ப்பும், ஆதரவும் கிடைக்கிறது. ஜேஎன்யூவின் கட்டண அமைப்பு,
அங்கிருக்கும் இடதுசாரி அமைப்புகள் போராடிப் பெற்ற கொள்கைகள் போன்றவையே அங்கே மாணவர்களுக்குத்
துணையாக நிற்கின்றன. ஜேஎன்யூ பொதுக்கல்வி முறையின் மிகச் சிறந்த மாதிரியாகத் திகழ்கிறது.
அந்த மாதிரியைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அது தீவிரமாகப் போராடி வருகிறது.
இதுபோன்ற சூழலில் பேராசிரியர்கள், கல்வியாளர்களின் ஆலோசனைகள் அனைத்தையும் மீறி, நாடாளுமன்றத்திலும்,
பல்கலைக்கழகங்களிலும் தேசிய கல்விக் கொள்கையை வலுக்கட்டாயமாகத் திணிக்கும் போது, பொதுக்கல்வி
முறை உண்மையில் சிதைக்கப்படுகிறது. கல்வியை வணிகப் பொருளாக மாற்றுவது, அதனை விற்பனைக்கு
உட்படுத்துவது ஊக்குவிக்கப்படுகிறது.
எனவே,
அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்கின்ற அல்லது ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீது அதிகாரம்
செலுத்துவதில் திருப்தி காண்கின்ற இளைஞர்கள் தங்களுக்குக் கல்வி கிடைப்பதில்லை என்று
வருத்தப்படுவார்கள் என்றால், அதற்கான காரணமாக
இடஒதுக்கீடு அல்லது விளிம்புநிலைச் சாதியினர், பெண்கள் அல்லது முஸ்லீம்கள் கல்வி பெறுவது
போன்றவை இருப்பதில்லை. அதுபோன்ற இளைஞர்களுக்கு அரசு வேலைகள் அல்லது வேலைவாய்ப்புகள்
கிடைக்காததற்கு இடஒதுக்கீடு அல்லது பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு வேலைவாய்ப்பை
வழங்குகின்ற அரசுத் திட்டங்கள் காரணமாக இருப்பதில்லை. மாறாக அரசுத் துறைகள் அனைத்தும்
தனியார்மயமாக்கப்படுவதே அதற்கான காரணமாக இருக்கிறது. அதுவே இடதுசாரி அமைப்புகள், கம்யூனிஸ்ட்
கட்சிகளின் செயல்பாடுகளுக்கான மையப் பொருளாக இருக்கிறது. அதனால்தான் கல்வியைப் பற்றிப்
பேசும் போது, வெறுமனே வினாத்தாள் கசிவு போன்ற பிரச்சனைகளுடன் மட்டுமே நாங்கள் நின்று
விடுவதில்லை. நாங்கள் தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கை, தேசியத் தேர்வுகள் முகமை குறித்தும்
பேசி வருகிறோம். ஏனெனில் தேசியத் தேர்வுகள் முகமை தனியார் பயிற்சி மையங்கள் என்ற மாஃபியா
கும்பலை ஊக்குவிக்கும் அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகச்
சூழல்களில், வகுப்பறைகளில் நீங்கள் கண்டவற்றின் அடிப்படையில், தேசியக் கல்விக் கொள்கையின்
தாக்கம் என்னவாக இருந்துள்ளது? இதனை உங்களிடம் கேட்பதற்குக் காரணம், பலரும் தேசியக்
கல்விக் கொள்கை மிகவும் நல்லது என்றே பொதுவாக நம்புகிறார்கள். அந்தக் கொள்கை பல்துறை
சார்ந்த கல்விக்கு, கல்லூரிகளின் தன்னாட்சிக்கு அழைப்பு விடுக்கிறது என்றும், ஆவணப்
பிரிவு சிறப்பாக உள்ளது என்றாலும், நிதி ஒதுக்கீட்டில், செயலாக்கத்தில் சிக்கல் இருப்பதாகவும்
அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் நீங்கள் தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாகத் திரும்பப்
பெற வேண்டும், அது கைவிடப்பட வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறீர்கள்.
தேசியக் கல்விக் கொள்கையில் உங்களுக்கு உள்ள சிக்கல் என்ன? அது கைவிடப்பட வேண்டும்
என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? அதில் இருக்கும் சிக்கல்கள் என்ன?
தேசியக்
கல்விக் கொள்கை என்பது ஒரு கொள்கையாகப் பல அம்சங்களுடன் இருக்கிறது. கல்வி ஓர் உரிமையாக
இருக்க வேண்டும், நாட்டு மக்களுக்குக் கல்வி வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்க
வேண்டும் என்பது போன்ற கருத்துகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே தேசியக் கல்விக் கொள்கையின்
மையக்கருத்தாக இருக்கிறது. ஒரு நாட்டை உருவாக்குவதற்கு
கல்வி மிகவும் அடிப்படையான தேவையாகக் கருதப்படுகிறது. கல்வி வெறுமனே அறிவுசார் பணியாளர்களை
வழங்குவது என்ற வகையில் மட்டுமே இருப்பதில்லை. கல்வியிலிருந்தே நமது சமூகத்தில்… நாம்
வாழும் கட்டமைப்புகளில் எந்தவொரு சமூகப் பொருளாதார முன்னேற்றமும், எந்தவொரு விடுதலையும்
கிடைக்கிறது. சுதந்திரத்திற்குப் பிறகு உருவான புதிய இந்தியாவின் இதயத்தில் பொதுக்கல்வியே
இருந்தது - அது ஏன்? அதற்கான காரணம் பொதுக் கல்வி…
அதாவது,
ஒரே நிலையில் இருந்து தொடங்குகின்ற ஒரே மாதிரியான வரலாறு, ஒரே மாதிரியான சமூகப் பொருளாதாரக்
கட்டமைப்புகளைக் கொண்ட நாடுகளில், நாடுகளை மதிப்பிடும் ஒரே மாதிரியான பொருளாதார அளவுகோல்களான
இறப்பு விகிதம், எழுத்தறிவு போன்ற அளவுகோல்களில் காலப்போக்கில் சில நாடுகள் பின்தங்கி
விடுவதாகப் பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. சில ஆண்டுகள் கழித்து அந்த நாடுகளை மதிப்பிடும்
போது, திரும்பிப் பார்க்கும் போது, அந்த நாடுகள்
செயல்பட்ட விதத்தில் வேறுபாடு இருப்பதைக் காண முடிகிறது. அந்த வேறுபாட்டிற்கு சமூகப்
பொருளாதார சமத்துவமின்மையே அடிப்படையாக உள்ளது.
இப்போதுதான்
இந்தப் புத்தகத்தை படித்து முடித்ததால், நான் இதனைக் குறிப்பிடுகிறேன். இதில் எழுத்தாளர்
சுவாதி நாராயண் சமத்துவமின்மை குறித்து இலங்கை, நேபாளம், இந்தியா போன்ற நாடுகளை ஒப்பிட்டிருக்கிறார்.
இந்தியா உண்மையில் அதன் அண்டை நாடுகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க வேண்டும்,
ஆனாலும் அவ்வாறு அது செயல்பட்டிருக்கவில்லை என்று அவர் கூறுகிறார். இந்தியா அதன் அண்டை
நாடுகளைக் காட்டிலும் மோசமாகச் செயல்பட்டுள்ளதற்குக் காரணம் என்ன? அதற்குக் காரணம்
சாதி… நிலப்பிரபுத்துவக் கட்டமைப்புகளுடன்
பிணைக்கப்பட்ட பாலின சமத்துவமின்மை இங்கே மிக ஆழமாக வேரூன்றியுள்ளது. இவற்றை எப்படித்
தவிர்ப்பது? கல்வி அதற்கான பல வழிகளில் ஒன்றாக இருக்கிறது. எனவே, கல்வியைப் பற்றிப்
பேசும்போது, கல்வியில் முதலீடு செய்யும்போது, கல்வியில்
அரசாங்கம் முதலீடு செய்து, சமூகத்தின் எந்தப் பிரிவினர் திட்டமிட்டு கல்வியிலிருந்து
ஒதுக்கப்பட்டிருந்தார்களோ அந்தப் பிரிவினருக்குக் கல்வி சென்றடைவதை அரசாங்கம் தனது
பொறுப்பாக மாற்றிக் கொள்ளும் போதுதான், இந்த அளவுகோல்கள் அனைத்தும் மாறும். அப்போதுதான்
எழுத்தறிவு மாறும், பெண் இறப்பு விகிதம் மாறும், குழந்தை இறப்பு விகிதம் மாறும், இந்த
அளவுகோல்கள் அனைத்தும் மாற்றமடையும்.
தேசியக்
கல்விக் கொள்கை அதற்கு நேர்மாறானதைச் செய்கிறது என்று சொல்கிறீர்களா? அதாவது தற்போது
பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கல்வியாளர்களிடம் நான் கேள்விப்படும் ஒரு சிந்தனைப்
போக்கு இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, பிரிட்டிஷார் இங்கு வருவதற்கு முன்பிருந்த
நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிதான் தேசிய கல்விக் கொள்கை என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அந்தக் காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட
சாதியினர் மட்டுமே உயர்கல்வி பெற முடிந்தது. காலனித்துவத்திற்குப் பிறகு, அதாவது பிரிட்டிஷார்
வந்த பின்னரே ஆங்கில வழிப் பள்ளிகள் போன்றவை வந்தன. கல்வி ஜனநாயகரீதியாகப் பரவலாகியது.
இப்போது கல்வி, உயர்கல்வி அல்லது சமூக முன்னேற்றத்தை
அளிக்கக்கூடிய கல்வி மீண்டும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு மட்டுமே என்று பிரத்தியேகமாக
மாறக்கூடிய சூழ்நிலைக்குத் திரும்புகிறோம். அதன் காரணமாக விளிம்புநிலை சாதியினர், சமூகங்கள்,
ஏழ்மையான பிரிவினர் கல்வி பெறுவதிலிருந்து களையெடுக்கப்படுவார்கள். இத்துடன் நான்காண்டு
இளநிலைப் படிப்புகளுக்கான திட்டமும் உள்ளது. கல்விக்கான செலவுகள் அதிகரித்துக் கொண்டே
இருக்கின்றன. தனியார்மயமாக்கலும் அதிகரித்து வருகிறது. இது அடிப்படையில் உயர்கல்வி
பெறுவதைக் கட்டுப்படுத்துகிறது. முன்பிருந்ததைப் போன்ற பிராமண ஆணாதிக்கம் மீண்டும்
வருவதற்கான வழியாகவே தேசிய கல்விக் கொள்கை இருக்கிறது. இன்றைய இந்தியப் பொருளாதாரம்
வேலைவாய்ப்புகளை உருவாக்க ஒன்பது சதவிகித வளர்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதற்காக, அந்த வேலைகளைப் பெறுவதற்குத் திறமையான பணியாளர்களுடன் இணைவதற்கு படித்தவர்கள்
அதிகம் தேவைப்படுகிறார்கள். கல்வித் துறையில் இது ஒரு மைய முரண்பாடாகவே எனக்குத் தோன்றுகிறது.
அதாவது திறமையான, படித்த பலர் தேவைப்படுகிறார்கள், நிறைய வேலைகள் தேவைப்படுகின்றன,
ஆனாலும் கல்வி முறை அதற்கு முற்றிலும் நேர் எதிரான திசையில் செயல்படுகிறது.
ஆமாம்.
அதாவது, கல்வி எதுவாக இருந்தாலும், அதனை இந்த நாட்டின் பரந்த மக்களுக்கு வழங்குவதில்
அரசாங்கத்தின் பொறுப்பு இருக்க வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை ஒருவிதமான அமைப்பைத்
திணிக்கிறது. அந்த அமைப்பில் பல்கலைக்கழகங்களுக்கு இனிமேல் அரசாங்கத்தால் மானியங்கள்
எதுவும் வழங்கப்படப் போவதில்லை. பல்கலைக்கழகங்களை அரசாங்கம் ஊக்குவிக்கப் போவதில்லை.
பல்கலைக்கழகம் நூலகம் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று விரும்பினால், அது நடைபெறுவதை உறுதி
செய்து தருவது அரசாங்கத்தின் பொறுப்பாக இனிமேல் இருக்காது. புதிய கல்விப் பிரிவைத்
தொடங்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் விரும்பினால், அதற்கான மானியங்களை வழங்குவது அரசாங்கத்தின்
கடமையாக இருக்காது. அரசாங்கம் இப்போது என்ன
செய்யும் என்றால்… உயர்கல்வி நிதி நல்கை முகமை (ஹெஃபா) மூலம் கடன்களை வழங்கும். மேலும்
சொல்வதென்றால், ஏற்கனவே அந்த நடைமுறை தொடங்கி விட்டது.
எங்கள்
பல்கலைக்கழகமான ஜேஎன்யூவிற்கு ஏற்கனவே பல நூறு கோடி ரூபாய் கடன் உள்ளது. அந்தப் பணத்தை
ஹெஃபாவிற்கு பல்கலைக்கழகம் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. பல்கலைக்கழகம் கடனை எப்படித்
திருப்பிச் செலுத்தும்? அதிகப்படியான அபராதங்களை விதிப்பது, விடுதிக் கட்டணங்களை உயர்த்துவது,
கல்விக் கட்டணங்களை உயர்த்துவது, கல்வி உதவித்தொகைக்கான செலவினங்களைக் குறைப்பது, உள்கட்டமைப்பு
கட்டுமானத்திற்கான செலவினங்களைக் குறைப்பதன் மூலமே அது கடன்களைத் திருப்பிச் செலுத்த
வேண்டும். எனவே, ஹெஃபாவிடமிருந்து வாங்கிய
கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக, முதலீடு செய்ய வேண்டிய எல்லாவற்றிற்குமான நிதியுதவியை
பல்கலைக்கழகம் குறைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி
வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பல்ல என்பதால் என்ன நடக்கும்? என்ன நடக்கப் போகிறது என்றால், எடுத்துக்காட்டாக ஜிண்டால், அசோகா,
கல்கோட்டியா போன்ற நிருவனங்களிடமிருக்கும் கட்டண அமைப்பு அல்லது முதலீட்டு முறையே பொதுப்
பல்கலைக்கழகங்களிலும் பொதுவான நடைமுறையாக மாறப் போகிறது. உள்கட்டமைப்பு கட்டமைக்கப்பட
வேண்டுமென்றால், மாணவர்களின் கட்டணத்திலிருந்துதான் அதற்கான பணம் எடுக்கப்படும். இதுதான்
நடக்கப் போகிறது…
தேசியக்
கல்விக் கொள்கையில் சமத்துவம் போன்ற விஷயங்களைப் பற்றி மிகவும் அலங்காரமான வார்த்தைகள்
பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அதில் இடஒதுக்கீடு குறித்து உறுதியான எந்தவொரு விளக்கமோ
அல்லது வழிமுறையோ குறிப்பிடப்படவே இல்லை. இடஒதுக்கீடானது வரலாற்றுரீதியாக இழைக்கப்பட்ட
அநீதிகளைச் சரிசெய்வதில், விளிம்புநிலைச் சாதியினர் மற்றும் சமூகத்தினர் எதிர்கொண்ட
சமூகம் மற்றும் கல்விசார் புறக்கணிப்பை நீக்குவதில் மிக முக்கியமான பங்கையாற்றுகிறது.
கல்வி அதற்கான ஒரு வழிமுறையாக இருக்கிறது. இடஒதுக்கீடு அதைச் செயல்படுத்துவதற்கான முக்கியமான
கருவி. ஆனால் இந்த இடஒதுக்கீட்டு முறையை எவ்வாறு வலுவானதாக மாற்றப் போகிறோம் என்பது
பற்றி தேசிய கல்விக் கொள்கையில் எந்தவொரு குறிப்பும் இல்லை.
தற்போதைய
உயர்கல்விச் சூழலைப் பார்க்கும் போது, இடஒதுக்கீட்டு அடிப்படையில் விளம்பரப்படுத்தப்படும்
இடங்கள் முழுமையாக நிரப்பப்படாததைக் காண முடியும். பல்கலைக்கழகங்களுக்கு வரும் மாணவர்களில்
எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். அத்தகைய பிரிவினருக்கென்று
அறிவிக்கப்பட்ட இடங்கள்கூட நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. மாணவர் சேர்க்கையில்
மட்டுமல்லாது, ஆசிரியர் நியமனங்களிலும் அது தொடர்கிறது. தரவுகளைப் பார்த்தால், மத்தியப்
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள்
மிகச் சிலரே உள்ளனர். இதே நிலைமைதான் பேராசிரியர்கள் நியமனத்திலும் இருந்து வருகிறது.
இவர்களுக்கான இடங்கள் அறிவிக்கப்பட்டாலும் அவை நிரப்பப்படாமல் காலியாகத்தான் இருக்கின்றன.
அதாவது, இடஒதுக்கீடு எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.
இதுபோன்றதொரு நிலையில், இடஒதுக்கீட்டை நீக்குவது பற்றிய பேச்சுகள் எழுகின்றனவே தவிர,
அதனை முறையாகச் செயல்படுத்துவது பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை.
இடஒதுக்கீட்டை
நீக்குவது குறித்த பேச்சு…
இன்ஸ்டாகிராமில்
அப்படி ஓர் இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது - இடஒதுக்கீடு எதிர்ப்பு இயக்கம். மிகப்பரந்த
அளவிலான மாணவர்கள் கல்விக்கான போராட்டத்தில் ஒன்றிணைந்திருந்ததை நீங்கள் பார்த்தீர்கள்.
இவ்வாறு நடக்கும் ஒவ்வொரு முறையும், மக்கள் தங்களை ஒன்றுபடுத்திக் கொள்வதற்கு ஒரு வழியைக்
கண்டுபிடிக்கும் ஒவ்வொரு முறையும் - உங்கள் முன்னால் நிற்கும் நபரின் சாதி என்னவென்று
உங்களுக்குத் தெரியாதா, உங்கள் சாதி என்னவென்று உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டு,
நம் சமூகத்தில் பொது அறிவு என்று கருதுவதன் மையத்தில் இருப்பது சாதிதான் என்பதை அவர்களுக்குத்
தொடர்ந்து நினைவூட்ட முடிவு செய்கிறார்கள். இணையத்தில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது...
அதைத்தான் தேசிய கல்விக் கொள்கை செய்கிறது... அதாவது அவர்கள் இதை ஒரு திட்டமாகவே
வைத்திருக்கிறார்கள்…
கல்வி
உதவித்தொகைகள் முழுமையாக நீக்கப்பட்டு விட்டன. மௌலானா ஆசாத் தேசிய உதவித்தொகை ஆகட்டும்,
அல்லது நீட் சார்ந்த உதவித்தொகைகள், ஐசிஎஸ்டி
உதவித்தொகைகள் அல்லது பள்ளி அளவில் தரப்படும் உதவித்தொகைகள் என எதுவாக இருந்தாலும்...
அவையனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. கல்விக்காக நிதியைச் செலவிட அரசிற்கு விருப்பமில்லை.
தேசிய
கல்விக் கொள்கையின் கீழ் கொண்டுவரப்படும் பாடத்திட்டங்களின் தரம், குறிப்பாக இந்திய
அறிவு அமைப்புகள் குறித்து உங்களிடம் கேட்க விரும்புகிறேன். பாடத்திட்டங்கள் ஏதோ ஓர்
அமைப்பு அல்லது அறக்கட்டளையாலேயே வடிவமைக்கப்படுகின்றன. அவர்களைப் பற்றி யாருக்கும்
தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி குறிப்பிட்டதொரு பாடத்தில், எடுத்துக்காட்டாக
பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற முன்பு தேவைப்பட்ட கிரெடிட்கள் எண்ணிக்கை இப்போது
குறைக்கப்பட்டுள்ளது குறித்தும் பேச வேண்டும். பொருளாதாரப் பாடங்களில் எடுத்துக்காட்டாக
பத்து கிரெடிட்கள் முன்பு தேவைப்பட்ட நிலையில், இப்போது ஆறு கிரெடிட்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.
மீதமுள்ள கிரெடிட்கள் வேறு ஏதோ தொடர்பே இல்லாத பாடங்களிலிருந்து பெறப்படுகின்றன. நீங்கள்
பார்த்தவரை, நிஜ வாழ்க்கையில் இதன் தாக்கம் எப்படி இருக்கிறது?
இந்தப்
பகுதியை முடித்து விடுகிறேன். அதன் கட்டமைப்பு ரீதியான அம்சத்தைப் பற்றிப் பேசுகையில்
நான் முன்பு சொன்ன விஷயத்திற்குத் திரும்ப வருகிறேன்: அதாவது, எனக்குக் கல்வி கிடைக்கவில்லை
அல்லது என் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்கவில்லை என்று கருதும் போது, சமூகத்தின் விளிம்புநிலை
மக்கள் மீது ஒருவிதக் கோபத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கையில்
பள்ளிகளை மூடுவது குறித்த தெளிவான பிரிவுகள் இடம் பெற்றுள்ளன. இப்போது அதுதான் நாட்டில்
நடந்து கொண்டிருக்கிறது. கல்வி வசதி கிடைக்காத சமூகப் பிரிவினருக்குச் சேவை செய்து
வந்த பெருமளவிலான பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.
நாடு
முழுவதும் அதற்கான காரணம் அல்லது தர்க்கம் குறித்து என்ன சொல்லப்படுகிறது?
அதற்கான
காரணம் என்னவென்றால், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் பள்ளியில் இல்லையென்றால்,
அந்தப் பள்ளி மூடப்படும். அதற்குப் பதிலாக அதுபோன்ற பல பள்ளிகள் ஒன்றிணைக்கப்படும்.
ஆனால் இந்தத் தர்க்கம் நாட்டின் யதார்த்தமான சூழலுடன் பொருந்திப் போகவிவில்லை. கிராமங்கள்
அல்லது சிறிய நகரங்களில் உள்ள இளைஞர்கள், ஒன்று
அல்லது இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அந்தப் பள்ளிகள் அமைந்திருப்பதுதான்
மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடிவதற்குக் காரணமாய் இருக்கிறது. எனவே நூறு மாணவர்கள்
மட்டுமே ஒரு பள்ளியில் படிக்கிறார்கள் என்றால்... பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள
மற்றொரு பள்ளியுடன் அதனை இணைத்து, இரண்டையும் ஒன்று சேர்த்து ஒரே பள்ளியாக அல்லது ஒரு
கல்வி வளாகமாக மாற்ற வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது. அதன் விளைவாக வெவ்வேறு
பள்ளிகளில் படித்து வந்த மாணவர்கள் தொடர்ந்து கல்வி பெற விரும்பினால், 15 அல்லது
20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பள்ளிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும். அடிப்படையில்
அது ‘நீங்கள் கல்வி கற்பதைப் பற்றியெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை’ என்று அவர்களிடம் சொல்வதைப் போலத்தான் இருக்கிறது.
மேலும் பல்வேறு மாநிலங்களில் மதிய உணவுத் திட்டத்திற்கான நிதி குறைக்கப்பட்டு வருகிறது.
சிறு குழந்தைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவிக்கவும், அவர்களுக்குச் சத்தான உணவை உறுதி
செய்வதற்கும்தான் அந்தத் திட்டம் உண்மையில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இப்போது அதற்கான
நிதி குறைக்கப்படுகிறது. மதிய உணவு வழங்கும் பொறுப்பு வங்காளம் போன்ற மாநிலங்களில்
'இஸ்கான்' போன்ற அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மாற்றங்கள் எல்லாம்
நடந்து கொண்டுதானிருக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை
ஊக்குவிக்காத காரனத்தால், அந்தக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாததொரு சூழலையே தேசிய
கல்விக் கொள்கை உருவாக்குகிறது.
அதேவேளையில்
பல்கலைக்கழகங்கள் குறித்தும் ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. அதாவது, மூவாயிரத்திற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட
பல்கலைக்கழகங்கள் அல்லது அது போன்ற குறிப்பிட்ட எண்ணிக்கையில்லாத மாணவர்களுடன் உள்ள
பல்கலைக்கழகங்கள், பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அந்தப்
பல்கலைக்கழகங்கள் நிச்சயம் மூடப்படும். அதன் பொருள் என்ன? மாணவர்கள் பொதுப் பல்கலைக்கழகங்களில்
பயில்கிறார்கள் என்றால் அதற்கான காரணம், வேறு பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல முடியாத
சூழலில், அவர்களால் அந்தப் பல்கலைக்கழகங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடிகிறது
என்பதுதான். அதுதான் கல்வி நிலையங்களுக்கு அவர்களைக் கொண்டு வருவதற்கான வழியாக இருக்குமேயன்றி,
அந்தப் பல்கலைக்கழகங்களை மூடிவிட்டு கல்வி வளாகத் தொகுப்புகளை பல கிலோமீட்டர் தொலைவில்
அமைப்பது அல்ல.
இது
மட்டுமே அவர்கள் அதைச் செய்யும் ஒரே வழியாக இருக்கவில்லை. மாணவர்களை இணையவழிப் பாடங்களை
நோக்கித் தள்ளவும் அவர்கள் விரும்புகிறார்கள்.
இணையவழிப்
பாடங்களைத் திணிக்க விரும்புகிறார்கள் - அதுதான் நான் சொல்ல வருவது... இப்போது நீங்கள்
கேட்ட விஷயத்திற்குத் திரும்பலாம். எடுத்துக்காட்டாக ஆங்கில இலக்கியம் அல்லது வரலாறு
அல்லது வேறு ஏதேனும் ஒரு பாடப்பிரிவை நான் படிக்க விரும்புவதாக வைத்துக் கொள்வோம்.
இப்போது அந்தப் பாடத்தை மட்டுமே படிப்பது போதாது. பாடத்திட்ட அமைப்பு முன்பெல்லாம்
எப்படி இருந்தது என்றால், ஒரு குறிப்பிட்ட பாடத்தை முதன்மைப் பாடமாக தேர்ந்தெடுத்துக்
கொண்டால், பல்கலைக்கழகத்தில் நீங்கள் செலவிடும் நேரத்தின் பெரும்பகுதி அல்லது பாடத்திற்கான
கிரெடிட்களின் பெரும்பகுதி அந்தப் பாடத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும். அதே
சமயம் வரலாறு, சமூக அறிவியல் அல்லது ஆங்கிலம் போன்ற பிற பாடங்களையும் உங்களால் படிக்க
முடியும், அவற்ர்றை நீங்கள் துணைப் பாடமாக எடுத்துக் கொள்ளலாம். துணைப்பாடங்களுக்குக்
குறைவான கிரெடிட்கள் மட்டுமே இருக்கும். ஆனால் உங்களால் அவற்றைப் படிக்க முடிந்தது.
ஆனால் இப்போது என்ன நடக்கிறது என்றால், மாணவர்கள் ஃபிட் இந்தியா போன்ற பாடங்களைக்கூட
கட்டாயமாகப் படிக்க வேண்டியுள்ளது.
ஃபிட்
இந்தியா…
ஃபிட்
இந்தியா, ஸ்வச் பாரத் போன்றவை மட்டுமல்ல; கைரேகை பார்ப்பது எப்படி என்று கற்றுத் தரும்
பாடங்கள்கூட உள்ளன…
கைரேகை…
ஆமாம்,
கைரேகை பார்ப்பதுதான்… இதை நான் ஒன்றும் சும்மா சொல்லவில்லை, தில்லி பல்கலைக்கழகத்தைப்
பார்த்தால் உங்களுக்கு அது தெரிய வரும். கைரேகை சாஸ்திரம் அங்கே கற்றுத் தரப்படுகிறது.
மீன் வளர்ப்பு அல்லது மீன் பராமரிப்பு எப்படி செய்வது என்று கற்றுத் தரும் பாடங்கள்
உள்ளன. யோகா, முத்ரா பற்றிய பாடங்களும் உள்ளன - அதாவது, 'இந்த ஆசனம் இவ்வாறு அழைக்கப்படுகிறது'
என்பது போன்ற பாடங்கள்… இந்தியாவின் வரலாறு குறித்த பாடங்களும் உள்ளன. பாரம்பரியத்
தொழில்களைக் கற்றுத் தருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் சாதியக் கட்டமைப்பில்
உறைந்துள்ள பாகுபாட்டை இயல்பான ஒன்றாக மாற்றுகிறார்கள். இந்தியாவின் வரலாறு என்று கூறி,
இந்த நாட்டில் அந்தப் பாகுபாடு எப்படிச் செயல்பட்டு வந்துள்ளது என்பதைச் சொல்லாமலேயே,
அதனை வரலாறாகக் கற்பிக்கிறார்கள். இவையெல்லாம் பாரம்பரியத் தொழில்கள் என்று கூறி, அவற்றை
அதே முறையில் கற்பிக்கப் போவதாகக் கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் பாரம்பரியத் தொழில்கள்
என்று அவர்கள் போதிப்பது, சமூகத்தில் நிலவுகின்ற சாதிப் பாகுபாட்டை நியாயப்படுத்தும் முயற்சியாக மட்டுமே இருக்கிறது. நான் வரலாறு படிப்பதற்கே
பல்கலைக்கழகத்திற்கு வந்தேன். இது போன்ற பாடங்களைப் படிக்க எனக்கு விருப்பமில்லை. ஃபிட்
இந்தியா போன்றவற்றைப் பற்றிக் கற்க எனக்கு விருப்பமில்லை. சமூக அறிவியல் படிக்கவே நான்
விரும்புகிறேன். ஆனாலும் நான் இப்போது, இவையனைத்தையும் கட்டாயமாகப் படிக்க வேண்டிய
சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன். இந்திய தர்க்கவியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
ஆனால், அவை ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட விரிவுரைகளின் தொகுப்பாக இணையத்தில் மட்டுமே
கிடைக்கின்றன. அவற்றைப் பார்த்து விட்டு நாம் தேர்வு எழுத வேண்டும். சில சமயங்களில்
தேர்வுகள் பல்கலைக்கழக வளாகத்திற்குள்கூட நடப்பதில்லை. தேர்விற்காக ஏதேனும் ஒரு விளையாட்டு
மைதானத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். வகுப்புகளே நடப்பதில்லை, நாம் செய்ய வேண்டியது
அந்த வீடியோக்களைப் பார்ப்பது மட்டும்தான்.
வீடியோக்களைக்கூட
யாரும் பார்ப்பதில்லை, வெறுமனே திரையை நகர்த்துவது அல்லது கர்சரை இடமிருந்து வலமாக
நகர்த்துவது போன்றவற்றை மட்டுமே செய்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்.
ஆமாம்.
அதை மட்டுமே செய்கிறார்கள். அதாவது, அந்தப் பாடத்தைப் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால்,
அதைப் பார்க்கிறார்கள். அதன் பிறகு தேர்வுகள் எப்படி நடக்கின்றன? நேராக சாட் ஜிபிடிக்குச்
செல்லலாம். இணையவழித் தேர்வுகள் அல்லது வேறு வகையான தேர்வுகளை எழுதும் போது, அல்லது பாடம்
தொடர்பான கட்டுரைகளைச் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும் போது, சாட் ஜிபிடியை
நாடலாம். ‘இந்த ஆசனம் என்ன? அந்த ஆசனம் என்ன?’ என்று ஒரு மணி நேரம் சாட் ஜிபிடியிடம்
கேட்டுத் தெரிந்து கொண்டு, அடுத்த நாள் தேர்வில் அதை எழுதலாம். யோகாவில் உடற்பயிற்சி
சார்ந்த ஒரு பகுதி கற்பிக்கப்படும். அந்தப் பயிற்சியைச் செய்தவர்களை எனக்குத் தெரியும்.
ஒருநாள் மட்டும் அவர்கள் மைதானத்திற்குச் செல்வார்கள். ஆசிரியர் பத்து புஷ்-அப்கள்
போடச் சொல்வார். அதை அவர்கள் செய்வார்கள். மைதானத்தில் ஒரு முறை ஓடச் சொல்வார்கள்.
அதுதான் தேர்வு.
அதற்காக
கிரெடிட்கள் கிடைக்கின்றன… அதாவது, நீங்கள் சொல்வதைச் சரியாகப் புரிந்து கொண்டால்,
மாணவர்கள் ஒரு காணொளியை ஓடவிட்டு அதைப் பார்க்காமலே இணையவழிப் பாடத்திட்டத்தை முடித்து
கிரெடிட் பெறுகிறார்கள்... பதில்களைப் பெறுவதற்காக சாட் ஜிபிடியையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஆம்,
எல்லாத் திட்டப்பணிகளும் அப்படித்தான் செய்யப்படுகின்றன. இது வலதுசாரி தரப்பின் கருத்தியல்
சார்ந்த திட்டம்... நீங்கள் படிக்கும் பாடங்களின் முக்கியத்துவம் குறைக்கப்படுவது,
இதன் மூலம் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுச் சுருக்கப்பட்டு விடுகிறது. எவ்விதமான
விமர்சன ரீதியான கற்றலுக்கும் இடமில்லாமல் போகிறது. சிந்திக்கக்கூடிய, கருத்துக்களைத்
தெளிவாக வெளிப்படுத்தக்கூடிய குடிமக்களில் ஒருவராக இருப்பதற்கான வாய்ப்பு உங்களுக்குக்
கிடைக்காமலே போகிறது. தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் அளிக்கப்படும் பயிற்சி மூலம்,
குறைந்த ஊதியம் தரும் வேலையைச் செய்கின்ற, புதிய சிந்தனைகள், விமர்சனப் பார்வை, ஆக்கப்பூர்வமான
வெளிப்பாடு அல்லது கற்பனைத்திறன் ஏதுமற்ற ஒருவராக உங்களை மாற்றுவது மட்டுமே நடந்தேறுகிறது.
உங்களை இந்தக் கொள்கை அதற்காகவே தயார்ப்படுத்துகிறது. உங்களைவேலை சார்ந்த பொருளாதார
சூழலுக்குத் தயார்படுத்துகிறார்கள், பெரும்பாலான இளைஞர்கள் உயர்கல்வியை முடித்துவிட்டு
குறைந்த ஊதியம் தரும் வேலைகளுக்கே செல்ல முடிகிறது. வேலைவாய்ப்புகள் இல்லாமலிருப்பது
ஒருபுறம் இருக்க, அந்த மாணவர்களுக்கு அதுபோன்ற வேலைகளில் பெரிய ஈடுபாடோ அல்லது விருப்பமோ
இருப்பதில்லை. இந்தப் பொருளாதாரச் சூழலில், விமர்சனரீதியான சிந்தனையை, கற்பனைத் திறனை
அல்லது ஆக்கபூர்வமான சிந்தனையை ஊக்குவிக்காத வகையிலேயே உயர்கல்வி இருக்கிறது.
வரலாறு,
சமூகவியல் அல்லது சமூக அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை. சமூக அறிவியல் மட்டுமல்ல,
இயற்பியல், உயிரியல் அல்லது தாவரவியல் போன்ற அறிமுறை அறிவியல் பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கும்
இதே நிலைமைதான். அவர்களும் கட்டாயம் இவையனைத்தையும் படிக்க வேண்டியுள்ளது. தர்க்கரீதியான
சிந்தனையைக் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் வெறுமனே நான்கு திட்டப்பணிகளை மேற்கொள்கிறார்கள்.
அதுதவிர, வேறெதையும் அவர்கள் செய்வதில்லை. வகுப்புகள் எதுவும் நடைபெறுவதே இல்லை. முன்பே
பதிவு செய்யப்பட்ட காணொளிகளைப் பார்ப்பது மட்டுமே பாடத்திட்டமாக, அதற்கான கிரெடிட்களைப்
பெறுவதற்கான வழியாக இருக்கிறது. இதுதான் தில்லி பல்கலைக்கழகம், ஜேஎன்யூ போன்ற பல்கலைக்கழகங்களில்
வழங்கப்படும் அல்லது திணிக்கப்படும் கல்வி. இதுதான் தற்போதைய நிலை. இது ஒரு கருத்தியல்
சார்ந்த திட்டம். விமர்சனரீதியான சிந்தனை குறைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட வகையிலான
இந்தியக் கல்விமுறை புகுத்தப்படுகிறது.
நீங்கள்
இந்தியராக இருப்பதால், இந்தியக் கல்வி முறை இருப்பது நல்லதுதானே...
அது
மிகவும் முக்கியமானதுதான்,,, நான் இப்படிக் கருதுகிறேன். எடுத்துக்காட்டாக மனுஸ்மிருதியைக்
கற்பிக்க வேண்டும் என்றால் தாராளமாகக் கற்பிக்கலாம். ஆனால் அதனை ஆர்எஸ்எஸ் விரும்பும்
விதத்தில் கற்பிக்கக் கூடாது. மனுஸ்மிருதியைக் கற்பிக்க விரும்பினால், அதுகுறித்த உண்மையான
அறிவுடன் உள்ளவர்களைத்தான் கொண்டு வர வேண்டும். ‘மனுஸ்மிருதிதான் முதல் அரசியலமைப்புச்
சட்டம், மனு அந்தக் காலகட்டத்தின் அம்பேத்கர்’ என்று பேசுகின்ற ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளைக்
கொண்டு வரக்கூடாது. அப்படிச் செய்யக் கூடாது. மனுஸ்மிருதியைப் பற்றிப் பேச விரும்பினால்,
அது விமர்சன ரீதியான, ஆழ்ந்த புரிதலோடு இருக்க வேண்டும். வலதுசாரி ஆதரவாளர்கள் வருத்தப்படும்
விஷயம் என்னவென்றால் - மனுஸ்மிருதி, ராமாயணம் ஆகியவற்றை வலதுசாரி ஆதரவாளர்கள் முழுமையாக
அறிந்தவர்களாக இல்லை என்பதுதான். ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடிகளில்
ஒருவரான அர்ஷியா சத்தார் போன்றோர் அதனை முழுமையாக அறிந்தவர்கள். அவர்கள் ராமாயணத்தின்
பல்வேறு அம்சங்களைப் பற்றி மணிக்கணக்கில் விவாதிக்கக் கூடியவர்கள். வலதுசாரிகளைப் பொறுத்தவரை,
முஸ்லீம் பெண் ஒருவர் இந்த விஷயங்களையெல்லாம் அறிந்து வைத்திருப்பது வருத்தமளிக்கக்
கூடியதாக இருக்கிறது. இடதுசாரி அல்லது தாராளவாதச் சிந்தனைப் போக்குடன் தொடர்புடையவர்களே
இதுபோன்ற நூல்களை முழுமையாக, ஆழமாக அறிந்து வைத்திருப்பது அவர்களுக்கு மிகுந்த மனவருத்தத்தை
ஏற்படுத்துகிறது. ஆனால் இவர்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் விரும்புவதில்லை.
ஒரு நூலை முழுமையாகப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும். அதனை வலதுசாரிகளின் குறிப்பிட்ட
சித்தாந்தத் திட்டமாக மட்டும் அணுகிப் படிக்கக்கூடாது. அப்படிச் செய்வது சரியாக இருக்காது.
இந்திய அறிவு மரபை கற்பிக்க விரும்பினால் தாராளமாகக் கற்பிக்கலாம். ஆனால் ராமாயணம், மனுஸ்மிருதி அல்லது கற்பிக்க விரும்புகின்ற
பிற நூல்களை, முழுமையான கண்ணோட்டத்துடன் அவற்றை அணுகுபவர்களே கற்பிக்க வேண்டும். அந்த
நூல்களை வலதுசாரிகளின் திட்டமாகக் கையாளாதவர்களே அவற்றைக் கற்பிக்க வேண்டும். இதுவே
அவர்களுக்கிருக்கும் சிக்கல்.
அதே
சமயத்தில் இந்திய அறிவு மரபைப் பற்றிப் பேசும் அவர்கள், எங்களை அதற்கு எதிரானவர்கள்
என்று கூறுவதும் சிக்கலாக உள்ளது. உண்மையில் நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல. இந்திய
அறிவு மரபை ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருதலைப்பட்சமான திட்டமாகக் கற்பிப்பதைத்தான் நாங்கள்
எதிர்க்கிறோம். அப்படிச் செய்யக் கூடாது. இந்த நாட்டின் ஆங்கிலேயர் காலத்திற்கு முந்தைய
வரலாற்றை அறிந்து கொள்வதில் எங்களுக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. இந்த நிலப்பரப்பில்
நிலவிய நாகரிகம் குறித்தும் ஆர்வம் இருக்கிறது. அதற்காக ஆர்எஸ்எஸ் திட்டம் அல்லது பிரச்சாரம்
என்ற அளவில் அதைக் கற்பிக்க முடியாது. கல்விசார், அறிவுசார் முயற்சி என்ற நிலையிலேயே
அது கற்பிக்கப்பட வேண்டும். ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளைக் கொண்டு வந்து வகுப்புகளை
நடத்த முடியாது. ஆனால் நமது கல்வி நிறுவனங்களில் அப்படித்தான் நடக்கிறது என்று உறுதியாகக்
கூறுவேன்.
எடுத்துக்காட்டாக,
ஜேஎன்யூவில் பல அரங்குகள், கருத்தரங்கு கூடங்கள், கூட்ட அறைகள் உள்ளன. முன்பெல்லாம்
இவையனைத்தும் மாணவர் பிரதிநிதிகள், பொதுவான மாணவர்கள், இலக்கியக் குழுக்கள், கல்விசார்
குழுக்களின் பயன்பாட்டில் இருந்தன. அவற்றை மாணவர்களால் பயன்படுத்திக் கொள்ள முடிந்தது.
'பொறுப்பேற்றுக் கொள்கிறேன்' என்று கையெழுத்திட்டுக் கொடுத்து, அந்த இடங்களைப் பயன்படுத்திக்
கொள்ளும் வசதி இருந்தது. கல்வியாளர்களை, பேராசிரியர்களை மாணவர்களின் முன்னெடுப்பில்
அழைத்து வந்து, இப்போது அவர்கள் இந்திய அறிவு மரபு என்று எதைக் கற்பிக்க விரும்புகிறார்களோ,
அதுகுறித்தெல்லாம் நாங்கள் விவாதங்களை முன்பே நடத்தியிருக்கிறோம். ஆனால் வரி செலுத்துவோரின்
பணம், மாணவர்களின் கட்டணங்களைக் கொண்டு பராமரிக்கப்படும் அந்த இடங்களைப் பயன்படுத்திக்
கொள்கின்ற உரிமை இப்போது எங்களுக்குக் கிடையாது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு அதனைப் பயன்படுத்திக்
கொள்வதற்கான உரிமை உள்ளது. லக்னோ பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம், ஜேஎன்யூ அல்லது
பிற கல்வி நிறுவனங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட முடிகிறது.
அங்கே அவர்கள் சில கருத்துகளைக் கற்பிக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, தாங்கள் பின்பற்றும்
மரபுகளை, ஒழுக்கநெறிகளைத் தங்கள் கருவில் சுமக்கும் குழந்தைகளுக்குக் கடத்துவதால் பெண்கள்
அதுகுறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அங்கே கற்பிக்கிறார்கள்.
இந்த
விஷயத்தை, அதில் உள்ள ஆர்எஸ்எஸ் தொடர்பான அம்சத்தை நீங்கள் குறிப்பிட்டது மிகவும் சுவாரஸ்யமானது.
நான் தவறாகச் சொல்லவில்லை என்றால், இதில் நான் கவனித்த விஷயம் என்னவென்றால், மாணவிகள்
பெருமளவில் அவற்றில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்கிறனர். மேலும் ஜூலை 20 அன்று நடத்தப்பட்ட
வன்முறை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன், ஒரு வகையில் பாலினத்தை மையமாகக் கொண்டிருந்தது
என்று நீங்கள் கூறினீர்கள். அப்படியென்றால், ஆளும் தரப்பிலிருந்து இந்தத் தலைமுறை மாணவிகளுக்கு,
பெண்களுக்கு ஏதேனும் ஒரு செய்தி குறிப்பாக அனுப்பப்படுவதாகக் கருதுகிறீர்களா?
ஆம்,
நிச்சயமாக. நீங்கள் மாணவிகள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதாகச் சொன்னீர்களா அல்லது போராட்டங்களில்
என்றா…
போராட்டங்களில்...
அதிக மாணவிகள்
ஆர்எஸ்எஸ்
நிகழ்ச்சிகள் பற்றி நீங்கள் பேசுவதாக நினைத்தேன். ஆனால் அதுவும்கூட உண்மையாகவே இருந்திருக்கும்.
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் அதற்கான வருகைப் பதிவு வழங்கப்படுகிறது.
ஐந்து நாட்களுக்கான வருகைப் பதிவு, அதற்கான புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அதுபோன்ற நிகழ்ச்சிகளில்
கலந்து கொள்வது கட்டாயமாக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களுக்கான வருகைப் பதிவு வேண்டுமென்றால்,
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். மாணவர்களுக்கு
அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான வழிகாட்டப்படுகிறது, அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்,
அல்லது ஒரு வகையில் திசை திருப்பப்படுகிறார்கள். அதனால்தான் நீங்கள் அதைப் பற்றிப்
பேசுகிறீர்கள் என்று நினைத்தேன். எது எப்படியோ, இந்தப் போராட்டத்தில் பெண்கள், விளிம்புநிலை
பாலின அடையாளங்களைக் கொண்டவர்கள் பெருமளவில் பங்கேற்றனர். போராட்டத்தில் தாங்கள் மிகவும்
பாதுகாப்பாக உணர்ந்ததாக அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கூறியது குறித்து பல ஊடகச்
செய்திகள் வெளியாகின. பொதுவெளிகள் பாலினப் பாகுபாடுகளுடனே உள்ளன. பொதுவெளிகளில் யார்
தலைமைப் பொறுப்புகளை ஏற்கிறார்கள் அல்லது யார் தன்னார்வப் பணிகளைச் செய்கிறார்கள் என்பதில்
வெளிப்படும் அது பாலினரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. பொது இடங்களில் தாங்கள் பாதுகாப்பாக
உணர்வதில்லை என்றே பொதுவாகப் பெண்கள் கூறுவார்கள். ஆனால், ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில்,
அங்கு கூடியிருந்தவர்கள் பேசிய விவாதங்கள், அங்கு நிலவிய சமூக உணர்வு ஆகியவை இரவில்கூட
அங்கேயே தங்க முடியும் அல்லது அங்கேயே பகல் முழுவதும் இருந்து திரும்ப முடியும் என்ற
நம்பிக்கையைப் பெண்களுக்கு அளித்தன.
தில்லியில்…
தில்லியில்
இரவில் காவல்துறையினர் முழுமையாகச் சூழ்ந்திருந்த சூழலில், ஆர்எஸ்எஸ் ஆதரவு சமூக ஊடகப்
பிரபலங்கள் வந்து இடையூறு செய்ய முயன்ற நிலையிலும் தாங்கள் பாதுகாப்பாக உணர்ந்ததாகவே
பெண்கள் மற்றும் இருமைப் பாலினத்திற்குள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாத மாணவர்கள்,
மாற்றுப் பாலின மாணவர்கள் போன்றோர் கூறினர். அந்தப் போராட்டத்தின் தலைவர்களாக விளிம்புநிலை
பாலின அடையாளங்களைக் கொண்டவர்கள் முக்கியப் பங்கையாற்றியதே அதற்கான முக்கியமான காரணமாக
அமைந்தது என்று நான் கருதுகிறேன். அதற்கான பெருமை நிச்சயம் இடதுசாரி அமைப்புகளுக்கு,
இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு உண்டு. போராட்டத்தில் பிற்பாடு தன்னார்வலர்களாகச் செயல்பட்டவர்களில்
பெரும்பகுதியினர் பெண்கள், மாற்றுப் பாலினத்தவராகவே இருந்தனர். குப்பைகள், தண்ணீர் பாட்டில்களைச் சேகரித்து, பைகளில்
போட்டு, முறையாக அகற்றும் பணிகளை அவர்களே மேற்கொண்டனர். தன்னார்வ அடிப்படையில் உணவு
விநியோகம் மற்றும் பிற உதவிகளைச் செய்தவர்களிலும் பெண்கள், மாற்றுப் பாலினத்தவரே பெரும்பான்மையாக
இருந்தனர். போராட்டத்திற்குப் பிறகு நாம் பார்த்த
ஒடுக்குமுறை நடவடிக்கைகள் அடிப்படையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலேயே இருந்தன.
இருபதாம்
தேதியன்று அரசு மேற்கொண்ட ஒடுக்குமுறையைப் பார்த்திருப்பீர்கள்… சீருடை அணிந்த காவலர்கள்
எந்தவொரு தயக்கமுமில்லாமல் நடந்து கொண்டதை அனைவரும் வீடியோக்களில் பார்த்தோம். சீருடை
அணிந்த காவலருக்குத் தன் முதுகைக் காட்டி நின்று கொண்டிருந்த பெண்ணின் பின்புறத்தில்,
அந்தக் காவலர் ஒரு தடியால் குத்த முயலும் வீடியோ என்னிடம் உள்ளது, நாம் அனைவருமே அதனைப்
பார்த்தோம். கேமராவில் அது பதிவாகியுள்ளது. போராட்டத்தில் தாங்கள் ஒருபோதும் பாதுகாப்பற்றவர்களாக
உணரவில்லை என்று தொடர்ந்து கூறிவந்த பெண்கள், இருபதாம் தேதியன்று தாங்கள் பாதுகாப்பற்று
இருந்ததாகக் குறிப்பிட்டனர். ‘இதுவரையிலும் நான் பாதுகாப்பற்றவளாக என்னை உணரவில்லை,
ஆனால் இருபதாம் தேதி நடந்த போராட்டங்கள், வன்முறையின் போது நான் என்னைப் பாதுகாப்பற்றவளாகவே
உணர்ந்தேன்’ என்று பெண் பத்திரிகையாளர்கள் கேமராவின் முன் கூறினர். நிகழ்த்தப்பட்ட
அந்த வன்முறை பாலினத்தை மையமாகக் கொண்டிருந்தது. சீருடையில் இருந்தவர்கள், சீருடை இல்லாமல்
காவல்துறை அல்லது பாதுகாப்புப் பணியாளர்கள் போலச் செயல்பட்டவர்கள் பெண்களைத் தவறான
முறையில் தொட்டனர். இருமைப் பாலினத்திற்குள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர்கள்
அல்லது பாலினச் சிறுபான்மையினத்தைச் சார்ந்த போராட்டக்காரர்களை ஹிஜ்ரா (மூன்றாம் பாலினத்தவர்)
என்று கூறி அவர்கள் கேலிக்குள்ளாக்கினர். இதுபோன்ற கருத்துகளையே சீருடையில் இருந்தவர்கள்
அல்லது காவல்துறையினருக்கு இணையான அதிகாரங்கள் தங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகக் கருதிய
சீருடையில் இல்லாதவர்கள் தெரிவித்தனர்.
சீருடையில்
இருந்தவர்களின் பூட்ஸ் கால்களால் மார்பில் மிதிக்கப்பட்டவர்களில் பெண்கள், இருமைப்
பாலினத்திற்குள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாத நண்பர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள்
என்று எனக்குத் தெரிந்தவர்களும் இருந்தனர். அவர்களில் ஒருவருக்கு மார்பகத்தில் வீக்கம்
ஏற்பட்டது. அது எப்படி நடந்தது? இருபதாம் தேதி நடந்த ஒடுக்குமுறை பாலினத்தை ஏன் மையமாகக்
கொண்டிருந்தது? அதன்பிறகு நடந்த அரசு ஒடுக்குமுறையும் பாலினத்தையே மையமாகக் கொண்டே
இருந்தது. இன்ஸ்டாகிராம் காணொளி ஒன்றில் ‘உங்கள் மீது கோபமடைந்த ஆண்களின் காணொளிகள்
எதையும் நீங்கள் பார்க்கவில்லையா? அவர்களின் ஆபாசமான வார்த்தைகள் உங்களை எச்சரித்து
கலாச்சார அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும் - இல்லையா’ என்று பிரதமர் கேள்வியெழுப்பியிருந்தார்.
ஒரு சமூகத்திற்கான மரியாதை பெண்களிடம் மட்டுமே இருக்கிறது என்று கருதப்படுவதால், மக்களிடம்
அப்படிச் சொல்வது எளிதாக இருக்கிறது,,, இல்லையா? பெண்களே மரபுகளைக் காக்கிறார்கள், பெண்களே சமூகத்தின் ஒழுக்கநெறிகளைத் தீர்மானிப்பவர்களாகப்
பார்க்கப்படுகிறார்கள். அதனால்தான்... திருமணம், கலப்புத் திருமணங்களில் தண்டிப்பது...
பெண்களைத் தண்டிப்பதன் மூலம்...
ஆண்கள்
பேசுவதைப் போலத் தகாத வார்த்தைகளைப் பேசுவது உண்மையில் பெண்கள் அதிகாரம் பெறுவதாக இல்லை
என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள்.
தனிப்பட்ட
முறையில் நான் இதைப் பெண்கள் அதிகாரம் பெறுவதுடன் ஒப்பிடமாட்டேன்; ஆனால் அதே சமயத்தில்,
தகாத வார்த்தைகளைப் பேசும் பெண்களிடம் நடத்தைக்கான சான்றிதழ் அல்லது சாதிச் சான்றிதழை
ஏன் கேட்கவில்லை என்று வாதிடும் விளையாட்டில் ஈடுபடவும் எனக்கு விருப்பமில்லை. மக்கள்
அந்த விளையாட்டை ஏன் விளையாடுகிறார்கள் என்றால், அமித் ஷாவின் நடத்தையைப் பற்றி, பெல்லட்
துப்பாக்கிகளை ஏவிய அரசின் நடத்தையைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருப்பதால்தான்...
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான ஆவணங்கள், ஊடகச் செய்திகள் உள்ளன.
அரசின்
நடத்தையைப் பற்றி மக்கள் பேசுகிறார்கள், அதனால்தான் அவர்கள் பெண்களின் நடத்தையைப் பற்றிப்
பேச விரும்புகிறார்கள். ஏனெனில் அது அவர்களுக்கு இகவும் எளிதாக இருக்கிறது. பெண்களைச்
சுட்டிக்காட்டி, சமூகத்தில் அச்சத்தை அல்லது அதிர்ச்சியை ஏற்படுத்துவது எளிது. அதனால்தான்
பெண்களை தேவி என்று அல்லது விலைமகள் என்று எப்போதும் வகைப்படுத்திப் பேசிக் கொண்டே
இருக்கிறார்கள். அது அவர்களுக்கு மிகவும் எளிது. பெண்களுக்கு அதுபோன்று இருப்பதற்கு
மட்டுமே சமூகத்தில் வழி இருக்கிறது. ஒன்று, நாம் வணங்கும் புனிதமான தேவதைகளாக அவர்கள்
இருக்க வேண்டும்; அப்போதுதான் அவர்களுக்கு மரியாதை கிடைக்கும். ஒரு குடும்பம் அல்லது
சமூகத்தின் ஒட்டுமொத்த ஒழுக்கமும் கண்ணியமும் பெண்களின் உடலில் - இன்னும் குறிப்பாகச்
சொல்வதென்றால் அவர்களின் பிறப்புறுப்பில் - அடங்கியிருப்பதாகவே கருதப்படுகிறது. கண்ணியத்தை,
ஒழுக்கத்தைக் காக்கும் பொறுப்பு நாம் வாழும் சமூகத்தில் பெண்கள் மீது மட்டுமே சுமத்தப்பட்டிருக்கிறது.
எனவே, பெண்கள் தகாத வார்த்தைகளைப் பேசும்போது அவர்கள் அதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறார்கள்.
அவர்களைப் பொறுத்தவரை அது சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதற்கான எளிதான வழியாக இருக்கிறது.
நீங்கள்
நடத்தை என்று பேச்சைத் தொடங்கியதே நல்ல விஷயம்... ஆனால் இயல்பாகவே உங்கள் மனதில் பெண்
என்ற வார்த்தைதான் அதனுடன் தொடர்கிறது - இல்லையா? அரசின் நடத்தை, இந்த அரசியல்வாதியின்
நடத்தை, அந்த அரசியல்வாதியின் நடத்தை என்றெல்லாம் சொல்லும்போது... அதாவது பெரும்பாலான
மக்கள் அதைக் கேட்பதற்குப் பழகியிருக்கவில்லை என்றே நினைக்கிறேன். பலரையும் மிகவும்
பாதித்த வீடியோக்களில் ஒன்று முகமது இர்பானின் வீடியோ - அவர் தில்லி சேரிப் பகுதியைச் சார்ந்த, தொழிலாள வர்க்கத்தைச்
சார்ந்தவர். நமது கல்வி முறையால் கைவிடப்பட்ட இந்திய இளைஞர்களுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக
அவர் இருக்கிறார். அவர் உயர்கல்வி வாய்ப்பை இழந்தவர். சமூக நீதி, சமத்துவம், ஜனநாயகத்தை
நோக்கிய இந்த இயக்கத்தில் அவரைப் போன்றோரை இணைத்துக் கொள்வதற்கு, அணிதிரட்டுவதற்கு
அகில இந்திய மாணவர் சங்கம் போன்ற அமைப்புகள் மற்றும் பிற மாணவர் அமைப்புகளால் என்ன
செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
குறிப்பிட்ட
வகையான சூழலை பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உறுதி செய்வதே ஒரு மாணவர் அமைப்பாக
எங்களின் அரசியல் செயல்பாட்டின் முக்கிய அம்சமாகும். அதாவது, இர்பான் போன்ற மாணவர்கள்
தங்களுக்குரிய இடத்தை, ஊக்கத்தை, சுய-வெளிப்பாட்டிற்கான வாய்ப்புகளைக் கண்டறியக்கூடிய
பல்கலைக்கழக அல்லது உயர்கல்வி அமைப்பை உருவாக்குவதே எங்கள் அரசியல் பணியின் ஒரு பகுதியாகும்.
மனிதர்களாகிய நாம் அனைவரும் அடிப்படையில், இந்த உலகில் நமக்கான இடத்தைக் கண்டறிவதற்கு,
அதை வெளிப்படுத்துவதற்கு, நம் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு நமது வாழ்நாள் முழுக்க
முயன்று வருகிறோம். அதுவே மனித நாகரிகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பணியாக இருக்கிறது
- இல்லையா? கல்வியும் இதைத்தான் செய்ய வேண்டும். இந்த உலகில், தங்கள் வீட்டிலிருப்பதைப்
போல மிகவும் பாதுகாப்பானவர்களாகத் தங்களை உணர்ந்து கொள்ள உதவுகின்ற மொழி, உரையாடல்,
கல்வி ஆகியவற்றைப் பற்றிப் பேசுகின்ற உரிமை இர்பான் போன்ற மாணவருக்கு ஏன் இருக்கக்
கூடாது? எனவே பொதுக் கல்வியைப் பாதுகாப்பது, அதன் வரம்பை விரிவுபடுத்துவதே இடதுசாரி
மாணவர் அமைப்புகளாகிய எங்களின் முதன்மையான பணிகளில் ஒன்றாகும். நடைமுறையில் அது, கல்விக்
கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டங்கள், இடஒதுக்கீட்டு முறையை விரிவுபடுத்திப் பாதுகாப்பது,
விளிம்புநிலை சமூகப் பிரிவினருக்கான கல்வி உதவித்தொகைகள் நிறுத்தப்படாமல் இருப்பதை
உறுதி செய்வது, அதிகப்படியான உதவித்தொகைகளை அத்தகைய மாணவர்களுக்கு வழங்குவது போன்ற
செயல்பாடுகளாக அமைகிறது. அது பரந்த, அமைப்புரீதியான செயல்பாடாகும். அதில் தலையிட்டே
நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
அதேவேளையில்,
இரண்டாவது செயல்பாடு தனிநபர் சார்ந்ததாக உள்ளது. அதாவது, இடதுசாரி சிந்தனை கொண்ட நாங்கள்
ஏன் வாசிப்பை விரும்புகிறோம்? மொழியை ஏன் இவ்வளவு பெரிதாக நேசிக்கிறோம்? பல்கலைக்கழகச்
சூழலில் கலாச்சாரத்தை உள்வாங்கி, அதனை நமது உடல், மொழி, ஆளுமை ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்துவதற்கு
நாங்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறோம்? அதற்குக் காரணம்... சமூகம் இயங்கி வந்த வரலாறுதான்.
அந்த வரலாறு மக்கள் தங்கள் இருப்புக்கான உரிமை, கல்விக்கான உரிமை, கண்ணியமான வாழ்க்கைக்கான
வாய்ப்பு ஆகியவற்றை நிலைநாட்டப் போராடிய வரலாறு... அதுதான் மனிதர்கள் நம்பக்கூடிய மிக
அழகான விஷயம். நாம் வாழும் இந்த உலகத்தை இன்னும் சிறப்பாக மாற்ற முடியும், அதில் நமக்கும்
ஒரு பங்கு இருக்கிறது என்பதை நம்புவது, குறிப்பாகச் சமூகத்தின் விளிம்புநிலை மக்கள்
அதிகாரம் பெறும் உணர்வை, அவர்கள் மத்தியில் உறுதி செய்வது மிகவும் முக்கியம். ஏனெனில்
அதிகாரம் பெறுவதென்பது., இந்தப் போராட்டத்தில் நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்ற
உணர்விலிருந்துதான் பிறக்கிறது. இது தனிப்பட்ட விடுதலைக்கான போராட்டமாக மட்டும் இருக்கவில்லை.
அது நாம் வளர்ந்த உலகம், குடும்பம், சமூகம், நம்மைச் சுற்றியுள்ள உலகம் ஆகியவற்றின்
விடுதலைக்கான போராட்டத்தில் நமக்குப் பங்கு
இருக்கிறது என்ற உணர்வாகவும் இருக்கிறது… இந்தப் போராட்டத்தில் நமக்கும் ஒரு பங்கு
இருக்கிறது என்று உணர்வதே அதிகாரம் பெறுவதற்கான அடிப்படை. அந்த உணர்வே நாம் ஒவ்வொருவரும்
மேற்கொள்ளும் தனிப்பட்ட முன்னெடுப்பாக இருக்கிறது. இதுபோன்ற கனவை அதிகமான மக்கள் சுமந்து
செல்லும்போது, இந்தப் போராட்டத்தில் தங்களுக்கும் பங்குண்டு
என்று அவர்கள் உணரும்போது அந்த முன்னெடுப்பு வலுப்பெறுகிறது. ஏனெனில், அது வெறுமனே
அகில இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டம் அல்லது பிற மாணவர் அமைப்புகளின் போராட்டமாக
மட்டும் இருக்கவில்லை. அது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டமாக இருக்கிறது. பல்வேறு
வடிவங்களை எடுத்து, உலகம் தன்னைத்தானே நோக்கும் விதத்தை, வெவ்வேறு காலகட்டங்களில் சமூகம்
தன்னைத்தானே கட்டமைத்துக் கொண்ட விதத்தை மாற்றியமைக்கின்ற
போராட்டமாக இருக்கிறது.
ஒரு
காலத்தில் அடிமைகளை வைத்திருக்கும் சமூக அமைப்பிற்கு அப்பால், வேறு வகையிலும் சமூகத்தால்
இயங்க முடியும் என்பதைக் கற்பனை செய்வதுகூட சாத்தியமற்றே இருந்தது. அடிமைகளுக்கு உரிமைகள் எதுவும் கிடையாது.
அவர்கள் மனிதர்களாகக்கூட கருதப்பட்டதில்லை. உடைமை என்று மட்டுமே அவர்கள் பார்க்கப்பட்டனர்.
அதாவது, அவர்கள் மற்றவர்களால் உரிமை கொள்ளக்கூடிய பொருட்களாக மட்டுமே இருந்தனர். அவர்களுக்கு
எந்த உரிமையும் இல்லை. அவர்களுக்கு எதிராக இழைக்கப்படும் எந்தவொரு வன்முறையும் உரிமைகளை
மீறுவதாக அல்லது நீதியை மறுப்பதாகக் கருதப்பட்டதில்லை. மிகவும் சாதாரணமாகச் செய்யக்கூடிய
செயல் என்ற அளவிலேயே அது பார்க்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, நான் விரும்பினால் பென்சிலால்
எழுதலாம்; அல்லது பென்சிலால் என் தலையைச் சொறிந்து கொள்ளலாம். ஏனென்றால் அது எனக்குச்
சொந்தமான பொருள். அந்தக் காலத்தில் மக்கள்
அதுபோன்றுதான் நடத்தப்பட்டனர். அதைத் தாண்டிய வேறொரு சமூக அமைப்பு இருக்கக்கூடும் என்பதைக்
கற்பனை செய்து பார்ப்பதுகூட சாத்தியமற்றே இருந்தது. மன்னருக்குத் தெய்வீக உரிமை இருந்தது.
அதாவது, அவர் சமூகத்தில் கடவுளின் பிரதிநிதியாகவே கருதப்பட்டார். அவருக்குப் பிறகு
அவரது மகன் மன்னராவார். அவருக்கும் ஆட்சி செய்யும் உரிமை இருந்தது. மற்றவர்கள் அதைப்
பின்பற்ற வேண்டியிருந்தது… உலகம் அப்படித்தான் இயங்கியது. அதைத் தாண்டிய உலகத்தைக்
கற்பனை செய்வது இயலாத காரியமாகவே இருந்தது. கடந்த காலத்தில் உலகம் மாறியிருக்கிறது
என்பதை, நம்மைப் போன்றவர்கள்தான் அதை மாற்றினோம் என்பதை உணர்ந்து, அந்த மாற்றத்திற்கான
கனவைச் சுமப்பதற்கு, அந்தப் போராட்டத்தில் தங்களுக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று
உணர்வதற்கு மக்களைத் தயார்படுத்துவதுதான் நம் முன்னிருக்கும் தனிப்பட்ட பணியாகும்.
மாணவர்
அமைப்புகளாக எங்களால் முடிந்த உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம். இவையனைத்திற்கும்
மேலாக அந்தக் கனவை இர்பான் போன்றோர் - மிகத் தெளிவாகப் பேசக்கூடியவர், ஏற்கனவே அந்தக்
கனவைச் சுமந்து கொண்டிருப்பவர் - தொடர்ந்து முன்னெடுப்பதை உறுதி செய்வது மிகவும் அவசியம்.
அதே சமயத்தில் கல்வி மற்றும் பொதுப் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் இடமில்லை என்று தொடர்ந்து
உலகம் உணர்த்தி வரும் சூழலில், சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டதாக உணரும் இன்னும் பலரும்
அந்தக் கனவைச் சுமப்பதை, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியின் ஒரு பகுதியாகத்
தங்களை உணர்ந்து, அதிகாரம் அடைவதை நாம் உறுதி செய்திட வேண்டும். அதுவே பொதுப் பல்கலைக்கழகங்கள்
மற்றும் பொது நிறுவனங்கள் குறித்த சிந்தனையை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான நமது மிக
முக்கியமான பணியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
கணிசமான
அரசியல் செல்வாக்கை, அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறீர்கள். மிக இளம் வயதினராக, இன்னும்
இருபதுகளில்தான் இருக்கிறீர்கள். புத்தகங்கள், செயல்பாடுகள், சமூகப் போராட்டங்கள் மூலம்
பல விஷயங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பெற்றுள்ள அரசியல் செல்வாக்கு,
உங்கள் மீது மக்கள் வைத்துள்ள பெரும் எதிர்பார்ப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, மிகப்பெரிய
பொறுப்புணர்வு உங்களுக்கு இருப்பதாக உணர்கிறீர்களா? மாணவர் அரசியலில் ஈடுபடும் அனைவருமே
அரசியல்வாதிகளாக வேண்டும் என்ற நோக்கத்துடன் வருவதில்லை. இதுகுறித்து விரிவாகச் சிந்தித்திருக்கிறீர்களா
என்று எனக்குத் தெரியவில்லை. இது குறித்த உங்கள் புரிதல் என்ன? இத்தகைய கேள்வியுடன்
உள்ள ஒருவருக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
எனக்குத்
தெரியாது. ஆனாலும் எங்கள் போராட்டத்தைப் பார்த்த பலரும் நம்பிக்கை கொண்டார்கள் என்பது
எனக்கு நன்றாகத் தெரியும். நம்பிக்கை ஏற்படும் போது, அதனை ஏதோவொரு
உறுதியான விஷயத்தின் அடிப்படையில் பெற வேண்டுமென்றே மக்கள் விரும்புவார்கள். அந்த வகையில்
அவர்கள் அந்த நம்பிக்கையைத் தாங்கி நிற்கும் உறுதியான நபராக அவர்கள் என்னைக் காண்கிறார்கள்.
அந்தப் போராட்டத்தின் உணர்வைச் செயல்வடிவமாக்குபவர்களில் நானும் ஒருவள். மக்கள் நம்பிக்கையுடன்
இருப்பதை, அந்த நம்பிக்கையைத் தக்க வைப்பதற்கு என்னால் உதவ முடியும் என்று அவர்கள்
நினைப்பதை நான் நிச்சயம் உணர்கிறேன். அதற்காக மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.
பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று நிச்சயமாக உணர்கிறேன். ஏனெனில் நம்பிக்கை
என்பது மிகச் சிறந்த உணர்வு, நம்பிக்கைதான் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத்
தேவையான வலிமையை நமக்குத் தருகிறது. அதே சமயத்தில் நம்பிக்கை என்பது இன்றைய சூழலில்
மிகவும் மென்மையாக, எளிதில் உடைந்து போகக்கூடியதாகவும் இருக்கிறது. எனவே எனது பொறுப்புணர்வை
உணரும் அதே வேளையில், அந்தப் பொறுப்பைத் தனிப்பட்ட முறையில் நான் மட்டுமே சுமப்பதாகவும்
உணரவில்லை. ஏனெனில், கட்டமைக்கப்பட்ட அரசியல் இயக்கத்தின் ஒரு பகுதியாகச் செயல்படப்
போவது என்று எனது வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே நான் முடிவெடுத்து விட்டேன். எனவே
என் மீது மட்டும் அந்தப் பொறுப்பு சுமத்தப்படவில்லை. அந்தப் பொறுப்பை என்னுடன் பகிர்ந்து
கொள்ள மிகப் பெரிய அமைப்பு இருக்கிறது. அவர்கள் என்னைத் தனிநபராக மட்டுமே பார்க்கவில்லை.
கட்டமைக்கப்பட்ட
அரசியலை மக்களிடையே பிரபலப்படுத்த, வழக்கமாக அரசியலில் ஈடுபடாத பலரை - பல்கலைக்கழகங்கள்
மற்றும் கல்லூரிகளில் உள்ளவர்களை - ஒன்றிணைத்துத் திரட்ட இது ஒரு சரியான தருணம் என்று
அவர்கள் கருதுகிறார்கள். அதற்கான திட்டமும் எங்களிடம் இருக்கிறது. எனவே, நான் எனது
பொறுப்புணர்வை நன்கு உணர்கிறேன். மக்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்திருக்கும் ஆதரவை
உறுதியான செயல்பாடாக மாற்ற வேண்டும் என்று எனது ஒட்டுமொத்த அமைப்பு விரும்புகிறது.
அரசு மற்றும் நிர்வாக அமைப்பின் மீது மக்கள் கொண்டுள்ள விரக்தியை, ஏமாற்றத்தை ஆக்கபூர்வமான
செயல்பாடுகளாக மாற்றுவது எங்கள் பொறுப்பு என்றே நாங்கள் கருதுகிறோம். இந்தப் போராட்டத்திற்கு
முன்பே அதனை நாங்கள் உணர்ந்திருந்தாலும், போராட்டத்தின் போது கிடைத்த ஆதரவால் அதை இப்போது
இன்னும் தீவிரமாக உணர்கிறோம். அது ஒருபுறமிருக்க, இரண்டாவது விஷயம் என்னவென்றால், நான்
அரசியலை மிகவும் ரசிக்கிறேன். உலகைப் புரிந்து கொள்வதற்கான வழியாகவே அரசியலை நான் பார்க்கிறேன்.
அதனால் அரசியல் ஈடுபாடுடன் இருக்கவே விரும்புகிறேன். நான் சோர்வடைந்து போய் விடவில்லை.
அதாவது, உடல்ரீதியாகச் சோர்வு இருக்கலாம் என்றாலும், மனதளவில் அதிக நம்பிக்கையுடன்
இருக்கிறேன். அந்த நம்பிக்கையைப் பரப்ப முடியும் என்றும் உணர்கிறேன். என்னிடமுள்ள நம்பிக்கை
நாட்டின் பிற பகுதிகளில் புதியவர்களை, குறிப்பாக இளைஞர்களைச் சந்திக்கும்போது மேலும்
அதிகரிக்கிறது. அவர்களின் போராட்டங்கள் எனக்கு உத்வேகத்தைத் தருகின்றன. எனவே அரசியலில்
ஈடுபடுவதால் எனக்குச் சோர்வு எதுவும் ஏற்படுவதில்லை. தொடர்ந்து அரசியலில் செயல்படவே
விரும்புகிறேன். அரசியலை நான் ரசிக்கிறேன். அதனால்தான் ஒரு மாணவர் செயற்பாட்டாளராக
இருக்கிறேன். ஆம், என் வாழ்நாள் முழுக்க அரசியலில் ஈடுபடவே விரும்புகிறேன். இதை முன்பே
முடிவு செய்து விட்டேன். உலகை ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கி, அது
உங்களுக்குச் சரியானதாகப்படும் போது, அதிலிருந்து
பின்வாங்கிச் செல்வது கடினமாக இருக்கும் என்றே நினைக்கிறேன். இடதுசாரிப் பின்னணியில்
இருப்பவர்களாக நாங்கள் இந்த விஷயங்களை அப்படித்தான் பார்க்கிறோம். எடுத்துக்காட்டாகச்
சொல்வதென்றால், ஒரு தலைமுறையில் நக்சலைட் இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் பிற்காலத்தில்
பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக மாறியுள்ளார்கள்.
ஆம்…
ஆமாம்.
தலைமை நிர்வாக அதிகாரிகளாக பின்னர் மாறினார்கள் என்றாலும், அந்த இயக்கத்திற்காக அவர்கள்
தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்திருந்தார்கள். ஒருபுறம் அதுபோன்று மாறிய நிலையில், மறுபுறத்தில்
அவர்களிடம் அந்த அர்ப்பணிப்பு இருந்தது. அரசியல்தான் வாழ்க்கைக்கு அர்த்தம் தருகிறது
என்று நான் முடிவெடுப்பதற்குக் காரணமான மனிதர்கள் அனைவரும், தங்கள் வாழ்க்கையையே அதற்காகத்
தியாகம் செய்தார்கள். சிறையில் சித்திரவதைக்கு உள்ளானார்கள். அரசு ஒடுக்குமுறைக்கு
ஆளாகாதவர்களும்கூட, இயக்கத்திற்காகத் தொடர்ந்து தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.
எண்பது அல்லது தொன்னூறு வயதைக் கடந்த பழைய தலைமுறைத் தோழர்களை நான் சந்திக்கிறேன்.
அவர்கள் என் மீது மிகுந்த அன்பை, பாசத்தை வெளிப்படுத்துகிறார்கள். என் மனம் நெகிழ்ச்சியால்
நிரம்பி வழிகிறது. அவர்களின் போராட்டக் கதைகளைக் கேட்டிருக்கிறேன். அவர்களின் அந்தப்
போராட்டங்களே இந்தப் போராட்டத்தைத் தொடர்வதற்கு எனக்கு உத்வேகம் அளிக்கின்றன. பெயர்கள்
வெளியே தெரியாத, ஆனாலும் தங்கள் போராட்டங்கள் மூலம் என்னைப் போன்ற இளைஞர்களுக்குத்
தொடர்ந்து உத்வேகம் அளித்து வரும் அந்தப் பழைய தோழர்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக
இருக்கிறது. எனவே இங்கேயேதான் நான் இருக்கப் போகிறேன். இங்கு இருக்கவே விரும்புகிறேன்
- ஏனென்றால் அரசியலை நான் ரசிக்கிறேன். அரசியல்தான் எனக்கு இந்த உலகைப் புரிந்து கொள்ளக்கூடிய
வழியாக இருக்கிறது. ஆம்.
மிக்க
நன்றி நேஹா... இன்ஃபோகஸ் நிகழ்ச்சியின் இந்தப் பகுதியில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள
என்னிடம் இவ்வளவுதான் இருந்தது. உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி.
நன்றி
ஐயா.
Comments