சுமித் சர்க்கார் (1939-2026): இந்தியாவின் பன்முக வரலாறுகளின் வரலாற்றாசிரியர்
சாரு குப்தா
ஃப்ரண்ட்லைன் இதழ்
2023 ஆகஸ்ட் 15
தேசியம்,
சமூகம், வரலாறு ஆகியவற்றை இந்தத் தலைமுறையினர் புரிந்து கொள்ளும் விதத்தை நவீன இந்தியாவின்
செல்வாக்கு மிக்க அறிஞர்களில் ஒருவரான வரலாற்றாளர் சுமித் சர்க்கார் அடிமட்டத்திலிருந்து
மாற்றியமைத்தார்.
அஞ்சலி - சுமித் சர்க்கார்
நமது
நினைவில் ஒருசில ஆசிரியர்களின் வகுப்புகள் மட்டுமே நிலைத்து நிற்கும்; ஆனால் வேறு சிலர்
நமது சிந்தனை முறையையே மாற்றி வடிவமைத்து விடுவார்கள். சுமித் சர்க்கார் நம்மில் பலருக்கு
அதுபோன்ற ஆசிரியராகவே இருந்தார். அவரிடமிருந்து நான் கற்றுக். கொண்டவற்றை, வரலாற்றைப்
பற்றிய எனது புரிதலிலிருந்து வேறொன்றாகப் பிரித்துப் பார்ப்பது மிகவும் கடினம். முதுகலை
மாணவியாக தில்லி பல்கலைக்கழகத்தில் அவரது வகுப்பறைக்குள் நுழைந்து நாற்பது ஆண்டுகளுக்கும்
மேலாகிவிட்ட நிலையிலும், அவரது வகுப்புகளில் நான் குறிப்பெடுத்துக் கொண்ட குறிப்புகள்
இன்றைக்கும் என்னிடம் இருக்கின்றன. அந்தக் குறிப்புகள் எழுதப்பட்ட தாள்கள் பழுப்பேறிப்
போயிருக்கன்றன என்றாலும் அவற்றில் இடம்பெற்றுள்ள கருத்துகளின் வீரியம் சற்றும் குறையவில்லை.
இப்போதும் நான் அவற்றை மீண்டும் மீண்டும் வாசித்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை அவரது
மறைவு நவீன இந்தியாவின் மிகச்சிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரை இழந்தது என்பதாக மட்டுமே
இருக்கவில்லை. அது தனித்துவமான அறிவுசார் ஆளுமையின் மறைவாகவும் எனக்குத் தோன்றுகிறது; அமைதியான,
துல்லியமான, ஐயுறவுப் பார்வை கொண்ட, ஆழ்ந்த புலமை வாய்ந்த, அதே சமயத்தில் எவ்விதப்
பகட்டும் இல்லாத ஆளுமையாக
அவர் திகழ்ந்தார். பார்ப்பதற்கு மெலிந்த, கிட்டத்தட்ட எளிதில் உடைந்து போகக்கூடிய உடல்வாகுடன்,
தயக்கம் கலந்த நடத்தையுடன் இருந்த அவர் பெரும்பாலும் யாருடைய கவனத்தையும் ஈர்க்காதவாறு
கூட்டத்தின் ஓரத்தில் தனியே நின்று கொண்டிருப்பார். அறிவுசார் தளத்தில் மாபெரும் ஆளுமையாக
இருந்த அவரது எளிமையான இயல்பிற்கும், அவரது பரந்துபட்ட வரலாற்றுப் பார்வைக்கும் இடையில்
வியக்கத்தக்க முரண் இருந்தது.
நான் 1985 முதல் 1987 வரை அவரது மாணவியாக இருந்தேன். அவரது விரிவுரைகள் நான் அதற்கு முன் கேட்டிராத வகையில் இருந்தன. மிக நேர்த்தியாகத் தயாராகி வந்து, அமைதியாக அவர் தனது உரையைத் தொடங்குவார். அப்போது ஒரு வாதம் எங்களிடம் வடிவம் பெறும். அதனை ஏற்றுக் கொண்டதாக உணரும்போது, அவர் அந்தக் கருத்துக்கு எதிரான சான்றுகளை அல்லது பிராந்திய வேறுபாட்டை அல்லது சங்கடமான சமூக உண்மையை எங்களுக்கு அறிமுகப்படுத்துவார். அதற்குப் பிறகு வேறொன்றை அறிமுகப்படுத்துவார். நாங்கள் தொடங்கி வைத்த, பாதுகாப்பானது என்று வெளிப்படையாக எங்களுக்குத் தோன்றிய அந்த முன்மொழிவு, எங்கள் கண்முன்னேயே படிப்படியாகச் சிதைக்கப்பட்டு, சிக்கலாக்கப்பட்டு மீண்டும் கட்டமைக்கப்படும். வரலாறு என்பது ஒருபோதும் அவரது வகுப்பறையில் தகவல்களின் குவிப்பாக இருந்ததே இல்லை. அது வெளிப்படையானவற்றை நம்பாதிருக்கக் கற்றுக் கொள்ளும் கலையாகவே இருந்தது. ஊசி விழுந்தால்கூட கேட்கும் அளவிற்கு அங்கே அமைதி நிலவும். ஒரு வாக்கியத்தைத் தவறவிடக்கூட யாரும் விரும்ப மாட்டார்கள். நாங்கள் அந்த விரிவுரைகளுக்குப் பின்னாலிருந்த அவரது வாசிப்பின் வீச்சைக் கண்டு பிரமித்துப் போனோம். ஆனாலும் அந்த வாசிப்புத்திறன் எங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஒருபோதும் காட்டப்பட்டதில்லை. எங்கள் வகுப்பறைக்குள் அவரின் புலமை மிக இலகுவாக நுழைந்தது. புள்ளிவிவரங்கள், வட்டார மொழி உரை, பிராந்திய இயக்கம் அல்லது சிறிய முரண்பாடுகூட அவரது வாதத்தைத் திடீரென மாற்றி விடும். கடந்த காலத்தை நேர்த்தியாக்குவதற்காக அல்லாமல், அதன் சீரற்ற தன்மையை, அடக்கப்பட்ட சாத்தியக் கூறுகளை மீட்டெடுப்பதற்கே அவர் எங்களுக்குக் கற்பித்துக் கொடுத்தார்.
அவர் பின்பற்றி வந்த முறை நவீன இந்திய ஆய்வை ஏற்கெனவே உருமாற்றியிருந்தது. ‘வங்காளத்தில் சுதேசி இயக்கம்’ என்ற அவரது முதல் ஆய்வு நூல் தேசியவாத அரசியல் ஆவணங்களை, அதன் பொருளை விரிவுபடுத்தியிருந்தது. பெரும்பாலும் அமைப்புகள், புகழ்பெற்ற தலைவர்கள் மூலமாக மட்டுமே விவரிக்கப்பட்டு வந்த அவற்றிற்குள் இலக்கியம், துண்டுப் பிரசுரங்கள், செய்தித்தாள்கள், சங்கங்கள், மக்கள் செயல்பாடுகள் என்று அனைத்தும் நுழைந்தன. தேசியவாதத்தின் சமூக அடித்தளங்கள், பண்பாட்டு மொழிகள், புறக்கணிப்புகள், மக்களின் முன்னெடுப்புடனான அதன் தொடர்பு குறித்த கேள்விகளே அவரது படைப்புகளின் மையமாக இருந்தன. சுமித் சர்க்கார் 'நவீன இந்தியா, 1885-1947' என்ற நூலின் மூலமாகவே பல தலைமுறை மாணவர்களுக்கு முதன்முதலாக அறிமுகமானார். நான் வைத்திருக்கும் அந்தப் புத்தகத்தின் பழைய பிரதியின் விலை ரூ.26.50. அந்தப் பிரதி எங்கள் வகுப்பில் ஏறக்குறைய அனைவரிடமும் இருந்தது. அதிலிருந்த ஒவ்வொரு வரியும் அடிக்கோடிடத் தூண்டும் வகையில் இருந்தன.
'நவீன இந்தியா' என்ற அவரது புத்தகம் மேலோட்டமாக பாடப் புத்தகம் போன்று தோன்றினாலும், அது ஒன்றும் சாதாரணமானது கிடையாது. அந்தப் புத்தகத்தில் காங்கிரஸ் தீர்மானங்கள், அரசியலமைப்புப் பேச்சுவார்த்தைகள் முக்கியமானவையாக இடம் பெற்றிருந்தன. அவற்றுடன் விவசாயிகள், தொழிலாளர்கள், ஆதிவாசிகள், கீழ்-நடுத்தர வர்க்க ஆர்வலர்கள், சாதி இயக்கங்கள், பிராந்தியப் போராட்டங்கள், அடையாளம் தெரியாத கூட்டங்களும் இடம் பெற்றுக் கொண்டன. தேசியவாதம் என்பது தேசியத் தலைவர்கள் சொல்வது அல்லது அவர்கள் கருதியது என்று மட்டுமே இருந்த நிலையிலிருந்து விடுபட்டது. அவர்களின் மொழி ஒரு கிராமம், தொழிற்சாலை, பழங்குடிப் பகுதி அல்லது குடிக்கூலி தொடர்பான உள்ளூர்ப் போராட்டங்கள், காடுகள், ஊதியம் அல்லது கண்ணியம் தொடர்பாகப் பயணித்த போது என்ன நடந்தது என்ற கேள்வியை எழுப்ப வேண்டியதாயிற்று. அதுதான் அவரிடமிருந்த 'கீழிருந்து வரலாறு' என்பதன் ஆற்றல். அது ஒருபோதும் மக்களின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக இருந்ததே இல்லை. பழமைவாதமாக, விடுதலை அளிப்பதாக, குறுகியதாக, பலதரப்பட்டதாக, சார்புடையதாக, தன்னாட்சி கொண்டதாக மக்களின் அரசியலால் இருக்க முடிந்தது. தலைவர்களுக்குப் பதிலாக அவர் மக்களை நியமித்துக் கொள்ளவில்லை என்றாலும் அதற்கு மாறாக, அவர்களுக்கு இடையில் இருந்த நிலையற்ற உறவை அவர் ஆராய்ந்தார். மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக காந்தி இருந்தார். ஆனாலும் காந்தி ஒருபோதும் அனுமதித்திருக்காத செயல்களைச் செய்து கொண்டே, காந்தியைப் போற்றி வந்தவர்களும் அவரைப் போன்று முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்தனர். மக்கள் சக்திகளைத் திரட்ட, அவற்றைக் கட்டுப்படுத்த, திசை திருப்ப, சில சமயங்களில் அவற்றிடம் தோற்றுப் போக தலைமையால் முடிந்தது. அந்த உறவில்தான் வரலாறு அடங்கியிருந்தது.
அவரைப்
பொறுத்தவரை மார்க்சியமே மிகவும் அடிப்படையானதாக இருந்தது, ஆனால் அது ஒருபோதும் கோட்பாட்டுரீதியானதாக
அவரிடம் இருக்கவில்லை. வரலாற்றுச் சான்றுகளுக்கு எதிராக அவர் தொடர்ந்து அதன் வகைகளை விரிவுபடுத்திக் காட்டினார். வர்க்கம்
முக்கியமானதுதான், ஆனால் அது தனித்து தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. சாதி, மத அடையாளங்கள்,
பாலினம், பண்பாட்டுப் பழக்கவழக்கங்கள், நனவு வடிவங்கள் ஆகியவற்றை வெறுமனே மேற்கட்டுமானம்
என்ற இரண்டாம் நிலைத் தளத்திற்குள் ஒதுக்கிவிட முடியாது. தன்னுடைய கல்விப் புலத்தில்
மட்டுமல்லாது, ஆழ்ந்த அறிவுசார் மற்றும் அரசியல் ஈடுபாடுகளிலும் அவர் தீவிரமான பெண்ணியவாதியாக
இருந்தார். அதுபோன்ற பிரச்சனைகளை ஆராய்வதற்கான வெளிகளை அவர் ஏற்கனவே உருவாக்கத் தொடங்கியிருந்தார். ‘சமூக வரலாற்றை எழுதுவது’ என்ற நூலில்
புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் அவருக்கிருந்த தீராத ஆர்வம் மேலும் தெளிவாக வெளிப்பட்டது.
அந்த நூலில் இடம் பெற்றிருந்த கட்டுரைகள், இன்றைக்கும் செழுமையான சமூக வரலாற்றால் எவற்ரைச்
சாதிக்க முடியும் என்பதற்கான முன்மாதிரிகளாக விளங்குகின்றன. ‘கடிகார நேரமும் காலனித்துவ
நவீனத்துவத்தின் ஒழுங்குமுறைகளும்’, ‘அலுவலகப் பணியாளர்களின் இறுக்கமான உலகம்’, ’ராமகிருஷ்ண
பரமஹம்சர்’ மற்றும் குறிப்பிட்ட மத வடிவங்களைப் புரிந்து கொள்ள வைத்த சமூகச் சூழல்கள்,
ஈஸ்வர சந்திர வித்யாசாகர், சீர்திருத்தத்தின் வரம்புகளும் சாத்தியக்கூறுகளும் போன்று
வெளிப்பார்வைக்கு வெவ்வேறானதாகத் தோன்றிய அவரது கட்டுரைகள், அன்றாட வாழ்க்கையில் பெரும்
மாற்றங்கள் எவ்வாறு அனுபவிக்கப்படுகின்றன என்பதைக் கண்டறியும் வழிகளாக மாறின.
தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொள்ளும் அவரது திறன் அதே அளவிற்கு முக்கியத்துவத்துடன் இருந்தது. சுமித் சர்க்கார் தொடக்ககாலத்தில் 'விளிம்புநிலை மக்கள் ஆய்வு' திட்டத்துடன் நெருங்கிய தொடர்புடன் இருந்தார். ஆயினும் ஒரு காலகட்டத்தில், பிரதிநிதித்துவத்தின் மீதான அதீத முக்கியத்துவத்தால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பொருள்சார் வரலாறுகளில் நிலைபெற்றிருந்த விளிம்புநிலை உரையாடல்கள் சமூக உறவுகளிலிருந்து விலகிச் செல்வதாக அவர் உணர்ந்தபோது, அந்தத் திட்டத்தின் கடுமையான உள்விமர்சகர்களில் ஒருவராக மாறினார். வரலாற்றாசிரியர்களுக்கு பண்பாட்டு மற்றும் பின்-காலனித்துவத் திருப்பங்கள் கற்றுக் கொடுத்தவற்றை அவர் முழுமையாக அங்கீகரித்தார், ஆனாலும் சமூகத்திலிருந்து விடுபட்டு பண்பாடு தனித்திருக்க முடியாது என்பதை அவர் வலியுறுத்தினார். அரசியல் மரபுகளை நம்பாத அவர், அறிவுசார் போக்குகளையும் அதுபோன்று நம்பவில்லை. 'நவீன காலம்: இந்தியா 1880-1950' என்ற நூலைப் போல, அவரிடம் இருந்த அந்த வெளிப்படையான மனப்பான்மையை அத்தனை நெகிழ்ச்சியுடன் வேறு எந்தப் படைப்பும் வெளிப்படுத்தியிருக்கவில்லை. ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்குப் பிறகு அந்த நூலை வெறுமனே திருத்தி எழுதாமல், மீண்டும் புதிதாக அவர் எழுதினார். வரலாற்றெழுத்தியல் மட்டுமல்லாது, தன்னிடமிருந்த வரலாற்றுப் பார்வையும் மாறி விட்டது என்று அவர் ஒப்புக் கொண்டார். அவரது தகுதிக்குரிய அறிஞர்கள் எத்தனை பேரிடம் இதுபோன்ற திறன் இருக்கும்? புதிய அறிவு, புதிய பிரச்சனைகள், புதிய வரலாற்று சாத்தியக்கூறுகளின் முன்னிலையில் தனது முந்தைய படைப்பு முழுமையடையாமல் இருப்பதாக அவர் அறிவித்துக் கொண்டது, வெளிப்படையாக அவரிடம் தென்பட்ட அறிவுசார் மனப்பான்மையின் அளவுகோலாகவே இருந்தது.
வெளிப்படையானவற்றைக்
கேள்விக்குட்படுத்துவது
சுமித்
சர்க்காரைப் பொறுத்தவரை, வரலாறு என்பது முழுமையடையாத உரையாடலாகவே இருந்தது. சுற்றுச்சூழல்,
பொருளாதாரம், நகரம் மற்றும் கிராமம், சாதி, மொழிகள், இலக்கியங்கள், புதிய நடுத்தர வர்க்கங்கள்,
சமூகப் பழக்கவழக்கங்கள், நாடகம், சினிமா, இசை, நடனம், விளையாட்டு, பொதுக் கலாச்சாரம்
என அவரது 'நவீன காலம்' நூல் தன்னுடைய பரப்பை விரிவுபடுத்திக் கொண்டது. அந்த நூலில்
இடம்பெற்ற அசாதாரணமான நூற்பட்டியல் பிராந்தியங்கள், துறைகள், மொழிகளைக் கடந்து வாசிப்பதற்கான
அவரது வற்றாத ஆர்வத்தை, விருப்பத்தை வெளிப்படுத்தியது. அவர் ஒருபோதும் உள்ளூர் மொழி
சார்ந்த ஆவணக் களஞ்சியத்தை இரண்டாம் பட்சமாகக் கருதியதில்லை; அவரைப் பொறுத்தவரை அது
எண்ணற்ற வாய்ப்புகளுடன் உயிர்ப்புடன் இருந்தது.
அந்த
வெளிப்படைத்தன்மை தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் முக்கியமானது. இலக்கியத்திற்கும்,
வரலாற்றுக்கும் இடையிலான உறவு மற்றும் பிரேம்சந்த் குறித்து எனது எம்ஃபில் பட்டத்திற்காக
பணியாற்ற விரும்பிய போது, அந்தத் துறை போதுமான அளவு வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்ததில்லை என்று பலரும் என்னிடம் கூறினர். ஆனால் சுமித் அப்படி
நினைக்கவில்லை. வட்டார மொழி மற்றும் இலக்கியத் துறைக்குள் நான் நுழைவதை அவர் ஊக்குவித்தார்.
பின்னர் அவரிடம் என்னுடைய முனைவர் பட்டப் படிப்பைத் தொடங்கி, அதன்பிறகு லண்டனில் உள்ள
SOAS-க்குச் செல்வதற்கான காமன்வெல்த் கல்வி உதவித்தொகையை நான் பெற்ற போது, உரிமை கொண்டாடுவதைக்
காட்டிலும் அவர் மகிழ்ச்சியே அடைந்தார்.
அவரது
கருத்துகள் சுருக்கமாகவே இருக்கும் என்றாலும், அவரது ஒருசில வார்த்தைகள் வாதத்தின்
போக்கையே மாற்றி விடும், கவனத்திர்கு வராமல் விடுபட்ட அடுக்கை அவை வெளிக் கொண்டு வரும்,
அல்லது நன்கு அறிமுகமான மூலத்தை வித்தியாசமாகப் பார்க்க வைக்கும். பெரும்பாலும் அறிவிக்கப்படாமலேயே
அவரின் பெருந்தன்மை மாணவர்களிடம் வெளிப்பட்டது.
முறையாக
அவரது மாணவியாக ஆவதற்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவம் எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.
இளங்கலைப் பட்டப்படிப்பை மிராண்டா ஹவுஸில் மிகச்சிறப்பாக நான் முடித்திருந்தேன். ஆனாலும்,
விடுதிக் கட்டண உயர்வுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்ததால், முதுகலைப் பட்டப்படிப்பில்
சேர்வதில் நான் சிரமத்தை எதிர்கொள்ள நேர்ந்தது. அப்போது துறைத்தலைவராக இருந்த சுமித்
சர்க்கார், அந்தப் பிரச்சனை தீர்க்கப்படும் வரை மூன்று நாட்களுக்கு மாணவர் சேர்க்கையை
ஒத்தி வைத்தார். அவர் எனது விண்ணப்பத்திற்கு ஆதரவாக இருந்தார். அதை அவர் பெரிய விஷயமாக
ஆக்கவில்லை. அவரது கொள்கைகள் உறுதியானவை; அவற்றின் செயல்பாடு அமைதியானது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அதே துறையில் பணிக்குச் சேர்ந்தபோது, ஒரு காலத்தில் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்ட சமூகவரலாற்றுப் பாடத்தைக் கற்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது அதற்குத் தகுதியற்றவளாகவே நான் என்னை உணர்ந்தேன். முழுமையாக சுமித் சர்க்காருடன் தொடர்புடைய அந்தப் பாடத்தை என்னால் எப்படிக் கற்பிக்க முடியும்? அவரை அப்படியே பின்பற்றுவது சாத்தியமற்றது என்பதை மிகவிரைவிலேயே உணர்ந்தேன். தீவிரமாகத் தயாராவது, பரவலாக வாசிப்பது, மாணவர்களைக் குறைத்து மதிப்பிடாமல் இருப்பது, ஒருவரின் சொந்த உறுதிகளைக் கேள்விக்குட்படுத்துவது, வசதியான வாதத்திற்காக நுணுக்கத்தை ஒருபோதும் தியாகம் செய்யாமல் இருப்பது என்று அவரிடம் இருந்த அறிவுசார் நெறிமுறைகளில் சிறிதளவாவது தக்க வைத்துக் கொள்வதே அதிகபட்சம் நான் எதிர்பார்க்கக் கூடியதாக இருந்தது.
அவரது கல்விப் புலமையும், குடிமைப் பண்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தன. பாபர்
மசூதி இடிக்கப்பட்ட பிறகு, 'காக்கி டவுசர்கள் மற்றும் காவிக்கொடிகள்' என்ற நூலைத் தயாரிப்பதில்
அவரின் ஈடுபாடு, வகுப்புவாதத்திற்கு எதிரான அவரது சமரசமற்ற எதிர்ப்பிற்குத் தலைசிறந்த
எடுத்துக்காட்டாக விளங்கியது. தனது நிலைப்பாட்டின் அடிப்படையில் சிங்கூர், நந்திகிராம்
விவகாரங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட இடதுசாரிகளை அவரால் கடுமையாக விமர்சிக்கவும் முடிந்தது.
ஆர்ப்பாட்டங்களின் போது, கூட்டத்தில் எங்கோ ஓரிடத்தில், யாரும் தன்னைக் கண்டுவிடக்
கூடாது என்ற கவலையுடன் அமைதியாக அவர் நின்று கொண்டிருப்பதை அடிக்கடி காண முடியும்.
ஆனாலும், மிக மோசமான தருணங்களில் - சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைக்குப் பின்னர்,
வகுப்புவாத அணிதிரட்டலுக்கு எதிராக நடைபெற்ற சில போராட்டங்களில் அவர் நேரடியாகப் பங்கேற்றிருந்தார்.
தார்மீகத் துணிச்சலுக்கு ஆரவாரமோ அல்லது தன்னை வெளிக்காட்டிக் கொள்வதோ அவரைப் பொறுத்தவரை
தேவைப்படவில்லை. அறிவுசார் அடக்கத்திற்கும், தனிப்பட்ட அடக்கத்திற்கும் இடையில் இருந்த
அந்த அசாதாரணமான ஒற்றுமையை நான் அதிகம் நினைவில் கொள்வேன்.
அகங்காரத்திலிருந்து
விடுபடாத கல்வி உலகில், அது அவரிடம் வியக்கத்தக்க வகையில் மிகக் குறைவாகவே இருந்தது.
மின்னும் கண்கள், மென்மையான நையாண்டி, கூச்சமான புன்னகை ஆகியவை அவரது கூர்மையான தீர்ப்பு
வழங்கும் திறனுடன் ஒருங்கே காணப்பட்டன. ஏறக்குறைய உலகின் எந்தப் பகுதியிலும் மதிப்புமிக்கதொரு
பதவியை அவரால் வகித்திருக்க முடியும். ஆனால், அதற்குப் பதிலாக முப்பது ஆண்டுகள் தில்லி
பல்கலைக்கழகத்தில் கற்பிப்பதை, அடுத்தடுத்த தலைமுறை மாணவர்களைச் செதுக்குவதையே அவர்
தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
அந்தத்
துறையில் நான் இணைந்த பிறகு, இளம் மாணவர்கள் சுமித் சர்க்கார்
உருவாக்க உதவிய நவீன இந்திய வரலாற்று உலகில் இயங்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன். பல
கேள்விகள் அதற்குள்ளாக மாற்றம் கண்டிருந்தன. பாலினம், சாதி, தலித் வரலாறு, சுற்றுச்சூழல்
வரலாறு, காட்சி மற்றும் பண்பாட்டு வரலாறு போன்றவை எங்கள் ஆய்வுத் துறையை உருமாற்றியிருந்தன.
ஆயினும், அந்தப் புதிய வரலாற்று ஆய்வுகளின் சிறந்த படைப்புகள் அனைத்தும், அவர் விதைத்திருந்த
அறிவுசார் அணுகுமுறையின் கூறுகளையே தமக்குள் கொண்டிருந்தன. அந்த வரலாற்று விவரிப்பிலிருந்து
விடுபட்டுப் போனவர்கள் யார்? அளவுகோலை மாற்றினால் என்ன நிகழும்? தலைவர்கள் மற்றும்
நிறுவனங்களின் வெளிப்படையான அறிவிப்புகளுக்குப் பின்னால் ஒளிந்திருப்பது என்ன? மிக
அவசரமாக நாம் எந்த முரண்பாட்டைக் கடந்து சென்றிருக்கிறோம்? வரலாற்றாசிரியர் விட்டுச்
செல்லக்கூடிய ஆழ்ந்த மரபானது, காலத்தால் நிலைத்து நிற்கும் விளக்கங்கள் மட்டுமாக இருக்கவில்லை.
மாறாக அது, மேலும் பல கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பக்கூடிய கேள்விகளை மட்டுமே விட்டுச்
செல்வதாகவே இருக்கிறது.
சுமித் சர்க்கார் இல்லாமல் நவீன இந்திய வரலாற்றைக் கற்பிப்பதை இன்றைக்குக் கற்பனை செய்து பார்ப்பதே கடினம். நமது வாசிப்புப் பட்டியல்களுக்குள் அவரது புத்தகங்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்; அந்தப் புத்தகங்கள் எழுதப்பட்ட வேளையில் பிறந்திராத மாணவர்களால், அவற்றின் ஓரங்கள் நிரப்பப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால், அவரது வகுப்பறையில் அமர்ந்திருந்த எங்களுக்கு மற்றொரு மரபுரிமையும் உண்டு. தன்னுடைய குறிப்பேடுகளுடன் வகுப்பறைக்குள் அமைதியாக நுழைந்த அந்த உருவத்தை, மெதுவாக விரிந்த விவாதத்தை, உறுதியாகத் தோன்றியவை சிக்கலாக மாறிய தருணத்தை, வரலாறு திடீரென மற்றொரு கதவைத் திறந்து விட்டது போன்ற அந்த உணர்வை நாங்கள் நினைவுகூர்கிறோம். என்னுடைய வரலாற்றை அவரிடமிருந்துதான் நான் கற்றுக் கொண்டேன். அதைவிட முக்கியமாக, ‘வரலாறு நமக்குக் கற்பித்து முடித்து விட்டது என்று ஒருபோதும் நம்பக்கூடாது’ என்பதை அவர் எங்கள் தலைமுறைகளுக்குக் கற்பித்துக் கொடுத்துள்ளார்.
அவரது
குரல் இனிமேல் வகுப்பறையில் ஒலிக்கப் போவதில்லை. ஆனால் தெளிவான முடிவை எட்டுவதற்கு
முந்தையதாக இருக்கும் ஒவ்வொரு தயக்கத்திலும், ஆவணக் காப்பகத்தை மீண்டும் மீண்டும் நாடும்
ஒவ்வொரு தருணத்திலும், வரலாற்றின் மௌனங்களை நோக்கி எழுப்பப்படும் ஒவ்வொரு கேள்வியிலும்
சுமித் சர்க்கார் நிச்சயம் நிலைத்திருப்பார். அவரிடமிருந்து வரலாற்றைக் கற்றுக் கொண்ட
எங்களைப் பொறுத்தவரை, அந்த உரையாடல் ஒருபோதும் முடிவுக்கு வராது.
சாரு
குப்தா, தில்லி பல்கலைக்கழகத்தில் நவீன இந்திய வரலாற்றுத்துறை மூத்த பேராசிரியராகப்
பணியாற்றுகிறார். காலனித்துவ கால வட இந்தியாவில் பாலினம், சாதி, பாலியல், மருத்துவம்,
மத அடையாளங்கள் மற்றும் வட்டாரக் கலாச்சாரங்கள் ஆகியவை அவரது ஆய்வின் மையப் பொருள்களாகும்.
'ஹிந்தி ஹிந்து வரலாறுகள்' என்ற அவரது சமீபத்திய நூல் தெற்காசிய ஆய்வுகள் துறையில்
சிறந்த புலமைக்கான 2026ஆம் ஆண்டிற்கான ஏ.கே.குமாரசாமி விருதைப் பெற்றது.
https://frontline.thehindu.com/other/obituary/sumit-sarkar-historian-modern-india-history/article71349040.ece
.jpg)




.jpg)


Comments