தீன் தயாள் உபாத்யாயா: வெறுப்பின் வியாபாரி

ஏ.ஜி. நூரானி

ஃப்ரண்ட்லைன் இதழ்

2016 நவம்பர் 11


இந்தியாவில் மகாத்மா காந்தி அனுபவித்து வருவதைப் போன்றதொரு அந்தஸ்தை தீனதயாள் உபாத்யாயாவுக்கும் வழங்குவது என்ற பாஜகவின் தெளிவான முயற்சிகள் - தங்கள் சொந்த மத அடையாளங்களைக் கைவிட்டால் மட்டுமே சிறுபான்மையினர்களுக்கு இடம் கிடைக்கும் என்ற ஹிந்து ராஜ்ஜியத்திற்கான கோட்பாட்டை ஆதரித்து வந்த ஜனசங்க சித்தாந்தவாதியின் நிலைப்பாட்டிற்கு ஏற்பவே இருக்கின்றன. 


பிரசிக்ஷன் மகா அபியான் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் ‘மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி காங்கிரஸுக்கு எப்படி இருந்தாரோ, அதுபோலத்தான் தீனதயாள் உபாத்யாயா பாஜகவுக்கு இருக்கிறார்’ என்று ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) பத்திரிகையான 'ஆர்கனைசரின்' முன்னாள் ஆசிரியரும், இப்போது பாஜக-வின் மத்தியக் குழு உறுப்பினருமாக இருப்பவருமான ஆர்.பாலசங்கர், கூறியிருந்தார் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 2016 செப்டம்பர் 24). மிகவும் வெளிப்படையான அந்தக் கருத்து, சரியான நேரத்தில் அவர் எழுதிய கட்டுரையில் இடம் பெற்றது. ‘இந்தியாவின் அரசியல் அடிவானத்தில் செப்டம்பர் 25 அன்று புதிய படிமம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நரேந்திர மோடி அரசு பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஓராண்டு காலத்திற்கு நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்களை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளது... செப்டம்பர் 24 அன்று கோழிக்கோட்டில் நடைபெறும் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் நரேந்திர மோடி அந்த நிகழ்வை முறைப்படி தொடங்கி வைப்பார். அந்த நினைவேந்தலுக்காக இரண்டு குழுக்களை அமைக்கப் போவதாக மோடி அரசு செப்டம்பர் 23 அன்று அறிவித்துள்ளது. 149 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழுவிற்கு மோடி தலைமை தாங்கும் வேளையில், 23 உறுப்பினர்களைக் கொண்ட செயற்குழுவிற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை தாங்குவார்’ என்று அவர் விளக்கினார் (தி ஹிந்து, செப்டம்பர் 24).

  

தற்போதைய ஆளும் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி ஒருவரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக இவ்வளவு அப்பட்டமாக அரசு  இயந்திரங்களை, நிதியைத் தவறாகப் பயன்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணானது. அரசுகளின் சாதனங்களை முதலமைச்சர்கள் விளம்பரப்படுத்தும் போது, ​​தங்கள்  சொந்தப் பிம்பத்தை முன்னிறுத்தும் நடைமுறையை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது. அக்கறை கொண்ட மதச்சார்பற்றவர்கள், அறிவுஜீவிகள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் (என்ஜிஓக்கள்) தாக்கல் செய்யும் நீதிப்பேராணை மனுவின் மூலம் உச்ச நீதிமன்றத்தால் அதுபோன்ற செயலை ரத்து செய்ய முடியும்.

காந்தியைப் புறக்கணித்து, வெளிப்படையாக உபாத்யாயாவை பாஜக முன்னிறுத்துவது; உபாத்யாயாவின் தீவிர வகுப்புவாதச் சித்தாந்தத்தை மோடியின் அரசு அங்கீகரிப்பது; அந்தச் சித்தாந்தத்தை பஞ்சாப், உத்தரப்பிரதேசத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் வாக்காளர்களைப் பாதிக்கும் வகையில், அடுத்த ஓராண்டிற்கு அரசே முன்னிறுத்துவது; இவையனைத்திற்கும் மேலாக - தேசத்தின் நெறிமுறைகளை உபாத்யாயா சிந்தனைகள் அடிப்படையில் மாற்றி அமைப்பது, அரசியலமைப்புச் சட்டம் அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற,   இத்தனை ஆண்டுகளாக நாடு அறிந்திருந்த மதச்சார்பற்ற காந்தி-நேரு நெறிமுறைகளைத் திட்டவட்டமாக நிராகரிப்பது போன்றவை அதைக் காட்டிலும் அதிர்ச்சியூட்டுபவையாக இருக்கின்றன.

அடுத்த நாள் செப்டம்பர் 25 அன்று கோழிக்கோட்டில் தனது திட்டங்களை வெளியிட நரேந்திர மோடி சற்றும் தாமதிக்கவில்லை. பாஜகவின் தேசியக் கவுன்சிலில் உரையாற்றிய போது ‘ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு பண்டிட் உபாத்யாயா  ‘முஸ்லீம்களுக்கு வெகுமதி அளிக்காதீர்கள்/சமாதானப்படுத்தாதீர்கள்; அவர்களைப் புறக்கணிக்காதீர்கள்,  அவர்களைத் தூய்மைப்படுத்துங்கள் என்றார்’ மோடி நினைவுபடுத்தினார் (தி டெலிகிராப், செப்டம்பர் 26). ‘தூய்மைப்படுத்துதல்’ என்று குறிப்பிடுவதன் மூலம் ‘இஸ்லாமுக்கு முந்தைய இந்தியக் கலாச்சாரம் மற்றும் அறிவுசார் பாரம்பரியத்தை முஸ்லீம்கள் விமர்சனரீதியாக ஆராய்ந்து, அவற்றை  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மோடி குறிப்பிட்டார் என்று ஆர்எஸ்எஸ்சின் மூத்த சித்தாந்தவாதியான ராகேஷ் சின்ஹா கூறியது நிலைமையை மேலும் மோசமாக்கியது (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், செப்டம்பர் 27). ஹிந்துத்துவப் பூனை அப்போது பாஜகவின் அழுக்குப் பையிலிருந்து வெளியே வந்தது. உபாத்யாயாவிற்கான அஞ்சலியை, மோடி தனது 56 அங்குல மார்புக்குள் மிகப் பத்திரமாக பூட்டி வைத்திருந்தார். அவரது இந்தத் தாமதமான அஞ்சலிக்குப் பின்னால் ஒரு நோக்கம் இருந்தது. உபாத்யாயாவின் சித்தாந்தத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பைப் புதிதாக மாற்றியமைத்துக் கொள்ளவே அவர் காத்திருந்தார்.     

தீவிர வகுப்புவாதத் திட்டம்

தீவிர வகுப்புவாதியான உபாத்யாயா முஸ்லீம்களை அறவே வெறுத்தார். முஸ்லீம்களை அவர் நம்பவில்லை. பாகிஸ்தானுடனான எல்லையில் பத்து மைல் அகலமுள்ள பகுதியை உருவாக்கி, அந்தப் பகுதியிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர் முன்னிறுத்தினார். தேசப் பிரிவினையை ரத்து செய்ய வேண்டுமென விரும்பினார். சாதி அமைப்பை முழுமையாக நம்பினார். பஞ்சாபி சுபா இயக்கத்திற்கான திட்டத்தை எதிர்த்தார். ஜவஹர்லால் நேருவை, காங்கிரஸை வெறித்தனமாக வசைபாடினார்.

'இந்தியாவில் ஹிந்து தேசியவாத இயக்கம்' (1996) என்ற திட்டவட்டமான நூலை எழுதிய பிரெஞ்சு அறிஞர் கிறிஸ்டோஃப் ஜாஃப்ரலாட் 'ஹிந்துத்துவாவின் தூய்மைப்படுத்தும் இயக்கம்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் (தி இந்தியன் எக்ஸ்பிரஸ், அக்டோபர் 13) அவர்களின் பாசாங்குகளைக் கிழித்தெறிந்தார். அவர் இவ்வாறு எழுதினார்: ‘தூய்மைப்படுத்துதல்  என்ற கருத்து, ஹிந்து மதத்தின் சாதி அமைப்புடன் தெளிவாகத் தொடர்புடையது. 1875இல் ஆரிய சமாஜத்தை நிறுவி, ஹிந்து மறுமலர்ச்சியின் சிற்பியாக இருந்த சுவாமி தயானந்தர், முஸ்லீம்களாக, கிறிஸ்தவர்களாக மதம் மாறிய தலித்துகளை மீண்டும் மதம் மாற்றுவதற்காக பஞ்சாபில் மேற்கொண்ட சுத்தி சடங்குகளிலிருந்து அது தெளிவாகிறது. ஆரிய சமாஜம் 'தீண்டத்தகாதவர்கள்' என்று அழைக்கப்பட்ட சிலரிடையே பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நிலவிய சமஸ்கிருதமயமாக்கல் மீதான மோகத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டது. அவர்களுக்குப் பூணூலை அணிவிப்பதன் மூலம், மையவிலக்கு சமூக சக்திகளை ஆரிய சமாஜத்தினர் தணிக்க முயன்றனர். சவர்ணர்களின் விழுமியங்களுக்கு விசுவாசமக இருக்குமாறு அவர்களை அழைத்தனர். வர்ண அமைப்பானது - தயானந்தரைப் பொறுத்தவரை, சுத்தி சடங்கிற்குப் பிறகு தீண்டத்தகாதவர்கள் உட்பட அனைத்துச் சாதிகளையும் ஒன்றிணைக்கும் சமூக நல்லிணக்க மாதிரியாகவே இருந்தது.   

உபாத்யாயாவிடமும் அதுபோன்ற நம்பிக்கைகளே தென்பட்டன. சங் பரிவாரத் தலைவர்களால் தங்கள் சித்தாந்தத்தின் அடிப்படை என்று குறிப்பிடப்படும் உபாத்யாயாவின்  ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ என்ற தத்துவத்தின் முக்கியக் கருத்துகளில் ஒன்றாகவே வர்ண அமைப்பின் ஒருமைப்பாடு இருந்தது. உபாத்யாயா 1965இல் இவ்வாறு எழுதினார்: ‘நமது கருத்தில் - நான்கு வர்ணங்கள் விராத புருஷனின் வெவ்வேறு அவயவங்களை ஒத்தவையாகவே இருக்கின்றன. அந்த ஆதி மனிதனின் தியாகமே வர்ண அமைப்பு வடிவத்தில் சமூகத்தைப் பிறப்பித்தது என்று ரிக் வேதம் கூறுகிறது.’ வர்ண அமைப்பு அவரைப் பொறுத்தவரை தேசத்தைக் கட்டமைக்கும் செயல்முறையைத் தக்க வைக்கக்கூடிய இயல்பான ஒருமைப்பாட்டுடன் இருந்தது. 

‘ஹிந்து தேசியவாத சித்தாந்தவாதிகள் தலித்துகளுக்கு மட்டுமல்லாமல், ஏன் மற்ற மதங்களுக்கு மாறியவர்களுக்கும் ‘தூய்மைப்படுத்தும்’ நுட்பங்களைப் பயன்படுத்த முயன்றனர் என்பதை இதுபோன்ற பிரிவுகளின் நெகிழ்வு விளக்குகிறது.’ வி.டி.சாவர்க்கரின் ஹிந்துத்துவமும் இதே கருத்துடன்தான் இருந்தது. தீன் தயாள் உபாத்யாயாவும் அப்படித்தான் கருதினார். தூய்மைப்படுத்தும் கோட்பாடே சுத்தி இயக்கத்தின் வேராக இருந்தது, இன்றும் அதுவே கர் வாப்சி இயக்கத்தின் வேராக இருக்கிறது.   

 செங்கிமோட்டூரில் ஹிந்து முன்னணி அமைப்பு ஏற்பாடு செய்த 'கர் வாப்சி' விழா

ஜாஃப்ரலாட் வெகு சிலரால் மட்டுமே கவனிக்கப்பட்டிருந்த முக்கியமான கருத்தை முன்வைத்தார்: ‘இஸ்லாத்தை இந்தியாவில் நிறுவிய சூஃபி ஞானிகளில் எவரொவரும் மக்காவுக்கோ, மதீனாவுக்கோ சென்றதே இல்லை. மாறாக, அவர்கள் யோகிகளுடனே தீவிரமான ஆன்மீக உரையாடல்களில் ஈடுபட்டனர். பெரும்பாலும் தங்கள் இருப்பிடங்களை அவர்கள் ஹிந்து புனிதத் தலங்களுக்கு அருகிலேயே அமைத்துக் கொண்டனர். அவர்களின் கல்லறைகள் புனித யாத்திரை மையங்களாக மாறின. சுல்தான்களும், மாபெரும் முகலாயர்களும் - ஔரங்கசீப் உட்பட - மக்காவுக்கு, மதீனாவுக்குச் செல்லவில்லை... மாறாக, அஜ்மீரில் உள்ள மொய்னுதீன் சிஷ்டி தர்காவிற்கு, தில்லியில் உள்ள நிஜாமுதீன் அவுலியா தர்காவிற்கு அல்லது வேறு இடங்களுக்குத்தான் சென்றார்கள்... சித்தாந்தவாதிகள் சவூதி அரேபியாவை நோக்கி ஈர்க்கப்பட்டாலும், தர்காக்களில் கூடும் கூட்டங்கள் பிரபலமான இஸ்லாம் உள்ளூர் புனிதத் தலங்களை நோக்கியே தொடர்கின்றன. தங்கள் புனிதர்களின் நிலத்தை தங்கள் புண்ணிய பூமியாக  எப்போதும் கருதுகின்ற இந்திய முஸ்லீம்களைப் பொறுத்தவரை, ‘தேசியமயமாக்கல்’ மூலம் ‘தூய்மைப்படுத்துதல்’ என்பது உண்மையில் தேவையற்றது.’

ஹிந்துமயமாக்கல்

1969 டிசம்பரில் பாட்னாவில் நடைபெற்ற பாரதிய ஜனசங்கத்தின் பதினாறாவது அகில இந்திய மாநாடு, கட்சியின் தலைவர் பால்ராஜ் மதோக்கால் பிரபலப்படுத்தப்பட்ட ‘இந்தியமயமாக்கல்’ என்ற முழக்கத்தை அங்கீகரிக்கும்  தீர்மானத்தை நிறைவேற்றியது. ‘இந்தியமயமாக்கல்’ முஸ்லீம்களை ஹிந்துமயமாக்குவதற்கான நயமான சொல்லாடலாக இருந்தது. முஸ்லீம்களைத் தூய்மைப்படுத்துதல் பற்றி  மோடியின் கருத்தும் இதே வகையைச் சேர்ந்ததுதான். முஸ்லீம்களை இந்தியமயமாக்குதல் அல்லது ஹிந்துமயமாக்குதல் என்ற செயல்முறை பற்றி மதோக் குறிப்பிட்டார். 1969இல் வெளியிடப்பட்ட மதோக்கின் 'இந்திய தேசியவாதம்' என்ற புத்தகம் அந்தக் கருப்பொருளையே அடிப்படையாகக் கொண்டிருந்தது: ‘ஹிந்து என்ற வார்த்தையை புனிதப் பொருளாகக் கருதுவதில் எந்த அர்த்தமும் இல்லை. இன்று அதனை விரும்பாதவர்கள் மீது திணிப்பதற்குப் பதிலாக, 'பாரதிய' என்ற சொல்லுக்கு ஒத்த சொல்லாக எழுத்திலும் பேச்சிலும் அதனைப் பிரபலப்படுத்தப்பட வேண்டும். இந்த உலகின் ஆர்வலர்கள் அந்த வார்த்தையின் தேசிய உள்ளடக்கத்தைப் புரிந்து கொண்டால், இஸ்லாம் அல்லது கிறிஸ்தவத்தின் நிலைக்கு ஹிந்து மதம், ஹிந்து சமூகத்தைத் தாழ்த்திக் கொண்டு பேசுவதை நிறுத்திக் கொண்டால்தான் அது சாத்தியமாகும்.

இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களும்கூட ஹிந்துக்கள்தான். அவர்கள் இந்தியாவிற்கும் இந்தியப் பண்பாட்டிற்கும் தங்கள் முதன்மையான விசுவாசத்தைக் காட்டும் போது, அவர்கள் அனைவரும் ஹிந்து ராஷ்டிரம் அல்லது இந்திய தேசத்தின் ஒரு பகுதியாக ஆகிறார்கள். இன்று இந்தியாவில் பெரும்பாலான முஸ்லீம்களிடமும், சில கிறிஸ்தவர்களிடமும் அந்த உணர்வு இல்லை. எனவே, இன்றைக்கு இந்திய தேசியவாதத்தின் மிக அவசரமான பிரச்சனை, அத்தகைய மக்களை இந்தியமயமாக்குவது அல்லது ஹிந்துமயமாக்குவது, வெவ்வேறு மதச் சமூகங்களின் உறுப்பினர்கள் என்ற குழு உணர்வைத் தாண்டிச் செல்லும்  தேசிய உணர்வை அவர்களிடம் வளர்ப்பதுதான்.’ 

மேலும் அவர் ‘இந்தோனேசிய அல்லது சீன முஸ்லீம்கள் இந்தோனேசிய அல்லது சீனப் பெயர்களுடன் இருப்பதைப் போல, இந்திய முஸ்லீம்கள் இந்தியப் பெயர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், தங்கள் மதத்தின் மீது இந்திய மனப்பான்மையை - தேசிய மனப்பான்மையை - அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம் இந்திய தேசியவாதத்தின் மீதான தங்கள் விசுவாசங்களுக்கு வண்ணம் தீட்டுவதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ அல்லது சீக்கிய அல்லது சமணப் பண்பாடு பற்றிய தனித்தனியான பேச்சுகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்.’ என்றார். எல்.கே.அத்வானி அந்தப் பல்லவியை 1990களில் தன்வசம் எடுத்துக் கொண்டு, சாவர்க்கரின் ஹிந்துத்துவாவை வெளிப்படையாக ஆதரித்தார்.

ஆர்.எஸ்.எஸ்சின் இறுக்கமான பிடி

உபாத்யாயா வழிபாடுடன் தொடர்புடைய, அதிகம் அறியப்படாத மற்றோர் அம்சமும் இருக்கிறது. ஜனசங்கம் 1951இல் ஆர்.எஸ்.எஸ்சின் அரசியல் முனையாக அமைக்கப்பட்டபோது, ​​ ஆர்.எஸ்.எஸ்சின் கட்டுப்பாட்டில் அதனை உறுதியாக வைத்துக் கொள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.எஸ்.கோல்வாக்கர்  தேர்ந்தெடுத்துக் கொண்ட கருவியாக உபாத்யாயா இருந்தார். கோல்வாக்கரின் நன்மதிப்பைப் பெறுவதற்காக அவர் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.   

ஆர்.எஸ்.எஸ்சின் பிடியிலிருந்து விடுபட்டு, பாரதிய ஜனதா கட்சி மதச்சார்பற்ற பழமைவாதக் கட்சியாக உருவெடுக்கும் என்று இந்தியாவிலும், அமெரிக்காவிலும் மிகுந்த ஆசையுடன் கற்பனை செய்தவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டனர். எல்.கே.அத்வானி ஆர்.எஸ்.எஸ்சால் வெளியேற்றப்பட்ட மூன்றாவது கட்சித் தலைவராக ஆனார். காலப்போக்கில் ஆர்.எஸ்.எஸ்சின் கட்டுப்பாடு பலவீனமடையவில்லை. சொல்லப்போனால் அது இன்னும் இறுக்கமானது. அதன் பிரச்சாரகர் ஒருவர் இப்போது பிரதமராக இருக்கிறார்.  

அந்த அமைப்புக்கான அடித்தளங்களை அமைப்பதில் உபாத்யாயா பெருமளவில் உதவினார். 1916இல் பிறந்த அவர், 1937இல் ஆர்.எஸ்.எஸ்சில் சேர்ந்தார். 1947இல் அதன் பத்திரிகையான 'பஞ்சஜன்யா'வின் ஆசிரியரானார். காந்தியின் படுகொலைக்குப் பிறகு தலைமறைவானார். 1951 அக்டோபர் 21 அன்று ஜனசங்கம் உருவாக்கப்பட்டது. 1952 டிசம்பரில் கான்பூரில் நடைபெற்ற அதன் முதல் ஆண்டு மாநாட்டில் அவர் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரானார். ஜாஃப்ரலாட் இவ்வாறு எழுதுகிறார்: ‘ஆர்.எஸ்.எஸ் அதே நேரத்தில் (1960-களின் நடுப்பகுதியில்) ஜனசங்கத்தின் மீதான தனது பிடியை இறுக்கியது. 1967இல் ஜனசங்கத் தலைவர் பதவியை மதோக்கிடமிருந்து உபாத்யாயா ஏற்றுக் கொண்டார்’ (இந்தியாவில் ஹிந்து தேசியவாத இயக்கம், பக்கம் 235).  

தூய்மைப்படுத்தும் கோட்பாடு

​​தூய்மைப்படுத்தும் கோட்பாடு என்ற மோடிக்கான உபாத்யாயாவின் பரிசு பற்றி இப்போது பார்க்கலாம். அகண்ட பாரதம் (பிளவுபடாத இந்தியா) என்ற தலைப்பிலான  கட்டுரையில் உபாத்யாயா பின்வருமாறு எழுதினார்: ‘ஆறு கோடி முஸ்லீம்களை ஒழித்துவிட வேண்டும் அல்லது இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று எந்தவொரு புத்திசாலியும் கூற மாட்டார். முஸ்லீம்கள் தங்களை முழுமையாக இந்திய வாழ்வுடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டும். புவியியல்ரீதியாகப் பிரிக்கப்பட்ட இந்தியாவில் ஒருமைப்பாடு உணர்வு சாத்தியமானால், மீதமுள்ள பிராந்தியத்தின் (அதாவது பாகிஸ்தானின்) ஒன்றிணைப்பு எந்த நேரத்திலும் சாத்தியமாகி விடும். ஒற்றுமை உணர்வு இல்லாததால் நாடு பிரிக்கப்பட்டிருக்கும் என்றால், அத்தகைய உணர்வை மீட்டெடுப்பதே அதனை மீண்டும் ஒன்றிணைத்து வைக்கும். அதற்காக நாம் பாடுபட வேண்டும். முஸ்லீம்களை உண்மையான இந்தியர்களாக மாற்றுவதற்காக, நாம் கடந்த அரை நூற்றாண்டு கால நமது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை என்ற தவறான அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டது. தொன்றுதொட்டு இடைவிடாமல் நீடித்து வந்த தேசம், கலாச்சாரத்தின் உண்மையான ஒற்றுமை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வதை வலியுறுத்துவதற்குப் பதிலாக, பிரிவினையைத் தூண்டும் தற்கொலைக் கொள்கையைக் காங்கிரஸ் பின்பற்றியது. அரசியல் பேரம் பேசி பலதரப்பட்ட மக்களைச் செயற்கையாக ஒன்றிணைக்க அது முயன்றது. அதுபோன்ற முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. தேசியவாதமும், தேச விரோதமும் ஒருபோதும் இணைந்து இணக்கமாக வாழ முடியாது.’    

  

1965இல் புனேயில் உபாத்யாயா ஆற்றிய உரை இங்கே முழுமையாக மேற்கோள் காட்டத்தக்கது. ‘சுதந்திரமும் வெளிநாட்டு ஆட்சியும் எப்படி இணைந்து இருக்க முடியும்?’ என்று கேள்வியெழுப்பிய உபாத்யாயா, அந்த இரண்டு விஷயங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை என்றார்.  ‘சிவாஜி மகராஜ் இறையாண்மை கொண்ட சுயராஜ்யத்தை நிறுவினார். அந்த சுயராஜ்யத்தின் பலத்தின் மூலம், அதே கொள்கைகள், முறைகளைப் பின்பற்றி ஒட்டுமொத்த பாரதத்தை விடுவிப்பதே அவரது லட்சியமாக இருந்தது. ஹைதராபாத்தை, கோவாவை விடுவித்ததைப் போல, நமது நிலத்தில் நிற்கும் பாகிஸ்தானையும் நாம் விடுவிக்க வேண்டும்; அது நமது கடமை, நமது உரிமை… எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் நமது நிலத்தில் நிற்பதை நாம் பொறுத்துக் கொள்ளக்கூடாது. பாகிஸ்தானை விடுவித்து பாரதத்துடன் இணைத்துக் கொள்வது ஆக்கிரமிப்பு ஆகி விடாது. ஏனெனில் நமக்குச் சொந்தமானதை, எப்போதும் நமக்குச் சொந்தமானதாக இருந்ததை மீண்டும் நம்மிடமே  எடுத்துக் கொள்ள நமக்கு எல்லா உரிமையும் உண்டு.’    

‘அத்தகைய முயற்சியை சிலர் ஆக்கிரமிப்பு என்பார்கள். உண்மை என்னவென்றால், பாகிஸ்தானின் இருப்பே சுதந்திர பாரதத்தின் மீதான ஆக்கிரமிப்புதான்… முஸ்லீம்கள் நமது சகோதரர்கள் என்றும், வெளிநாட்டினர் என்று அவர்களை அழைக்கக்கூடாது என்றும் சிலர் வாதிடுகிறார்கள். அதே வழியில் வாதிட்டால், இங்கு வாழ்ந்து, இங்குள்ள செல்வத்தைப் பயன்படுத்திக் கொண்ட அவுரங்கசீப் ஏன் வெளிநாட்டு ஆட்சியாளராகக் கருதப்படுகிறார்? முகலாய மன்னர்களை வெளிநாட்டினராகக் கருதக் கூடாதா? அப்படிக் கருதக் கூடாது என்றால், முகலாய சக்திக்கு எதிராகப் போராடிய சிவாஜியை இந்த நாட்டிற்குத் துரோகி என்றே கருத வேண்டும். அக்பர் நம்முடையவர் என்றால், அவருடன் போரிட்ட ராணா பிரதாப் தேசபக்தராக இருக்க மாட்டார். ராணா பிரதாப், சத்ரபதி சிவாஜி, சத்ரசல், துர்காவதி ஆகியோர் தேசபக்தர்கள் என்றால், யாருக்கு எதிராக அவர்கள் போரிட்டவர்களோ, அவர்கள் அந்நியர்களாகவே கருதப்பட வேண்டும். ஒருவேளை அக்பர் மிகச் சிறந்தவராக இருந்திருக்கலாம். ஆனால் அவர் நம்முடையவர் இல்லை. ஆயிரம் ஆண்டுகால அடிமைத்தனத்திற்குப் பிறகு சுதந்திரம் அடைந்திருப்பதாக நாம் பேசிக் கொள்கிறோம். அதன் எளிய பொருள், அக்பரின் ஆட்சியின் போது நாம் அடிமைத்தனத்தில் இருந்தோம் என்பதுதான்.’ (2014-ல் மக்களவையில் மோடி தனது முதல் உரையில் கூறியது இதுதான்.)  


‘பாகிஸ்தான் 1947இல் உருவாக்கப்பட்டது. முகலாயர் காலம் முதல் அந்நியர் ஆதிக்கத்தில் இருந்த நமது தாய்நாட்டின் ஒரு பகுதி சுதந்திரம் அடைந்த போதிலும், மற்றொரு பகுதி மீண்டும் அடிமைப்படுத்தப்பட்டது என்றே அது குறித்து கூறலாம். அடிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கான அரசு சுதந்திர இந்தியாவின் உணர்வுடன் நடத்தப்படவில்லை. முஸ்லீம்கள் தங்களுக்கான தனித்துவமான அடையாளம், தேசத்திற்கான உரிமை கோரி, தனி நாட்டைக் கோரினர். இங்கே முஸ்லீம்கள் வாளுடனே வந்தனர். எனவே முஸ்லீம்களுடனான போர் என்பது மதரீதியான ஒன்றல்ல, அது அரசியல்ரீதியானது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. நமது சண்டை முகமது அல்லது முல்லாக்கள், மௌல்விகளுடன் கிடையாது. அரசியல் லட்சியத்தை மதவெறியுடன் இணைத்து முஸ்லீம்கள் நடந்துகொள்ளும் விதத்துடன்தான் நமது சண்டை… அதனால்தான் இந்தப் போர் மதரீதியானதல்ல, அரசியல் ரீதியானது. சத்ரபதி சிவாஜி இதை முழுமையாக அறிந்திருந்தார்.  அதனால்தான் மசூதிகளை இடிக்காமல் அவுரங்கசீப்புடன் அவர் போரிட்டார். இன்றைய நமது போரும் அரசியல் சுதந்திரத்திற்காகத்தான், முஸ்லீம்கள் இந்திய தேசிய நீரோட்டத்தில் இணையாததால்தான்.’

உபாத்யாயா மேலும் விளக்கினார்: ‘முஸ்லீம் மதவெறியைத் தோற்கடிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது - அது அரசியல்ரீதியாக அவர்களைத் தோற்கடிப்பதுதான். முஸ்லீம் பிரச்சனைக்கு அதுவே உண்மையான தீர்வாக இருக்கும். அரசியல்ரீதியாக அவர்கள் தோற்கடிக்கப்படும் வரை, இந்தச் சீரழிவு தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அத்தகைய தோல்வி மட்டுமே அவர்களை மறுபரிசீலனை செய்ய வைத்து, ஹிந்து-முஸ்லிம் ஒத்துழைப்புக்கான செயல்முறையைத் தொடங்க வைக்கும். ‘தோல்வி மனிதர்களைத் தங்களைப் பற்றிச் சிந்திக்க வைக்கும்’ என்பது பொது விதி. ஹிந்துக்களைப் பொறுத்தவரை, எந்தவொரு பிரிவினரையும் அரவணைத்துச் செல்வது அவர்களின் பாரம்பரியம். நமது கொள்கை தேசிய மட்டத்தில் ஆக்ரோஷமாகவும், மத மட்டத்தில் சகிப்புத்தன்மையுடனும், சமூக மட்டத்தில் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.’ பாகிஸ்தானுடனான எல்லையோரத்தில் பத்து மைல் அகலமுள்ள பகுதியை உருவாக்கி, சந்தேகத்திற்குரிய விசுவாசத்துடன் இருப்பவர்கள் என்ற அடிப்படையில், முஸ்லீம்களை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்றும் 1965இல் உபாத்யாயா கோரினார்.  

‘இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான எந்தவொரு பிரச்சனை குறித்தும் மோதல் ஏற்படும் சூழ்நிலைகளில், இந்திய முஸ்லீம்கள் நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே இருப்பார்கள் என்ற குற்றச்சாட்டு உபாத்யாயாவின் பரிந்துரையில் மறைமுகமாக இருக்கிறது. இந்திய முஸ்லீம்களின் தேசபக்தி மீது அவதூறு கூற, உண்மையில் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. சுமார் ஐந்து கோடி இந்தியர்கள் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுகிறார்கள். நெருக்கடியான காலகட்டத்தில் அவர்களின் தேசபக்தியை நம்ப முடியாது என்றால், இந்தியா-பாகிஸ்தான் எல்லையின் இந்தியப் பகுதியில் பத்து மைல் அகலமுள்ள 'முஸ்லீம்கள் இல்லாத மண்டலத்தை' உருவாக்குவது... பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று தோன்றவில்லை.’ என்று 1963 மே 20 அன்று வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் தலையங்கம் கடுமையாக விமர்சித்திருந்தது.   

உபாத்யாயாவைப் பொறுத்தவரை - உண்மையில் ஜனசங்கத்தைப் பொறுத்தவரை, ஒரே அரசியல் பிரச்சனையாக இந்தியா மற்றும் பாகிஸ்தானின் முஸ்லீம்களே இருந்தனர். அதனை 1965இல் புனேயில் பின்வரும் வார்த்தைகளால் அவர் விளக்கினார். ‘இந்த அரசியல் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமா இல்லையா என்பதில் எந்தவொரு சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை. அது நிச்சயம் தீர்க்கப்பட வேண்டும். அதைத் தீர்த்து வைப்பதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது. முஸ்லீம்கள் அரசியல்ரீதியாகத் தோற்கடிக்கப்படும் வரை அதை நம்மால் தீர்க்க முடியாது. முஸ்லீம்களின் தோல்விக்குப் பின்னரே அவர்களை ஒருங்கிணைப்பது சாத்தியமாகும். ஹிந்து-முஸ்லீம் பிரச்சனை குறித்த இந்த அடிப்படை அறியாமையே சமாதானப்படுத்தும் வழிமுறைகளுக்கு அல்லது வெற்று வேண்டுகோள்களுக்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளது. எனவே அவை தோல்வியடைவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. பிரிவினைவாதிகளின் தோல்வியுடன், ஹிந்துக்களிடையே அந்தத் தவறான கொள்கைகளால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையும் மறைந்து போகும். தேசிய சாதனை உணர்வு சுதந்திரமான வெளிப்பாட்டைக் காணும். தோல்வி ஒருவரைப் பெரும்பாலும் சுயபரிசோதனைக்கு ஆளாக்கும். முஸ்லீம்கள் நேர்மையான சுயபரிசோதனையை மேற்கொள்ளும்போது, ​​இந்திய மரபுகளே தங்களின் மரபுகள், பொதுவான மூதாதையர்கள் தங்களுக்கு உண்டு, பாரதமாதா தங்கள் தாய்நாடு என்ற உண்மையை அவர்கள் உணர்வார்கள்.’  

ஜனசங்கத்தின் சித்தாந்தவாதி

சியாமா பிரசாத் முகர்ஜி உயிருடன் இருந்த போதே, உபாத்யாயா ஜனசங்கத்திற்கு மிகவும் முக்கியமானவராகி விட்டார். ஜனசங்கம் பின்பற்ற வேண்டிய கொள்கைகளை 1952 மே மாதம் அவர் விளக்கினார். ‘பிளவுபடாத பாரதம் என்பது கற்பனாவாதக் கருத்து அல்ல, மாறாக மிகவும் கவனத்துடன் சிந்திக்கப்பட்ட லட்சியமாகும். ஒரு சிலர் இந்தியப் பிரிவினையை முடிந்து போன விஷயமாகக் கருதுகின்றனர். அந்தக் கருத்து முற்றிலும் தவறானது; தாய்நாட்டின் மீது தீவிரமான அன்பு இல்லாததையே அந்தக் கருத்து வெளிப்படுத்துகிறது. வரலாற்றை அந்த மக்கள் மறந்து விட்டனர், அதன் தாக்கங்களை ஒருபோதும் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. முஸ்லீம் ஆட்சியில் நாடு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது, ஆனால் நமது ஹிந்துத் தலைவர்கள் அதை ஒருபோதும் முடிந்து போன விஷயமாக ஏற்றுக் கொள்ளவே இல்லை, அவர்கள் அதற்கு எதிராகப் போராடுவதையே தொடர்ந்தனர்.

‘இந்த நாட்டில் ஒரேயொரு தேசம் மட்டுமே உள்ளது என்பதுதான் ஜனசங்கத்தின் இரண்டாவது கொள்கை. இந்த தேசத்தில் சிறுபான்மையினர் என்று யாரும் கிடையாது. மனித உடலில் ஒரு மூக்கும், இரண்டு கண்களும் இருக்கின்றன. அதற்காக நாம் கண்களைப் பெரும்பான்மை என்றும், மூக்கைச் சிறுபான்மை என்றும் பேசுவதில்லை. காரணம் மிகவும் எளிமையானது; கண்களும் மூக்கும் ஒரே உடலின் இயல்பான கூறுகள்.’

‘இங்கு ஒரேயொரு கலாச்சாரம் மட்டுமே உள்ளது என்பதுதான் மூன்றாவது கொள்கை. இங்கே முஸ்லீம்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு என்று தனித்தனிக் கலாச்சாரங்கள் கிடையாது. கலாச்சாரம் என்பது வழிபாட்டு முறை அல்லது குறிப்பிட்ட பிரிவுடன் தொடர்புடையதல்ல; அது நாட்டுடன் தொடர்புடையது. கபீர், ஜெயசி, ரஸ்கான் போன்றோர் முஸ்லீம்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அவர்களின் விசுவாச மையம் இன்றைக்கு பாரதத்திற்கு வெளியே உள்ளது. முஸ்லீம்கள் தங்கள் உணர்வை, பார்வையை முழுமையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.’

ஜனசங்கத்தின் கோட்பாட்டாளராக, சித்தாந்தவாதியாக உபாத்யாயா உருவெடுத்தார். புகழ்பெற்ற டேனிஷ் அறிஞர் தாமஸ் ப்ளோம் ஹேன்சன் பின்வருமாறு பதிவு செய்கிறார்: ‘தீன் தயாள் உபாத்யாயா, ஆர்.எஸ்.எஸ்சின் முழுநேர அமைப்பாளராக இருந்தார். 1951இல் பாரதிய ஜனசங்கம் தொடங்கப்பட்டதிலிருந்தே, அவர் அந்த ஹிந்து தேசியவாதக் கட்சியில் அமைப்பாளராகப் பணியாற்ற நியமிக்கப்பட்டார். ஒருசில கருத்துகளை அவர் உருவாக்கினார். ‘ஒருங்கிணைந்த மனிதநேயம்’ என்ற பெயரில் அவை 1965-ல் ஜனசங்கத்தால், அதன் அதிகாரப்பூர்வக் கோட்பாடாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒருங்கிணைந்த மனிதநேயம் கோல்வால்கரின் இயல்புவாதச் சிந்தனையிலிருந்து பெரிதாக விலகிச் செல்லவில்லை. மாறாக காந்தியக் கருத்துக்களின் குறிப்பிடத்தக்க கூறுகளை உள்வாங்கி, அது தன்னுடன் சேர்த்துக் கொண்டது. சமூக சமத்துவம், ‘இந்தியமயமாக்கல்’, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்துகின்ற மென்மையான, ஆன்மீக, வற்புறுத்தல் இல்லாத பிம்பத்திற்காக, ஜனசங்கத்தின் வகுப்புவாதப் பிம்பத்தை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஹிந்து தேசியவாதத்தின் வடிவத்தில் அந்தக் கருத்துக்களை அவர் வெளிப்படுத்தினார். 1960கள், 1970களின் இந்திய அரசியல் களத்திலிருந்த முறையான சிக்கல்கள், ஆதிக்கம் செலுத்திய விவாதங்களுக்குப் பொருத்தமாக உருவாக்கப்பட்ட அந்தப் புதிய உரையாடல், 1967 பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு வட இந்தியாவில் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினரிடையே கணிசமான ஆதரவைப் பெற்றிருந்த அரசியல் நீரோட்டத்தின் வலது விளிம்பில் கட்சியை, மிகப்பெரிய ஹிந்து தேசியவாத இயக்கத்தைப் புதிய உயர்நிலைக்கு உயர்த்தும் முயற்சியுடன் இருந்தது. கோல்வால்கரின் எழுத்துகளுடன் தொடர்புடைய மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று, ‘பாரதிய’ என்ற சொல்லைப் பயன்படுத்தியதுதான். அதனை மிகப் பொருத்தமாக ‘ஹிந்தியன்’ என்று ரிச்சர்ட் ஃபாக்ஸ் மொழிபெயர்த்தார். ‘ஹிந்து’, ‘இந்தியன்’ ஆகியவற்றின் கலவையாக அது இருந்தது’ (தி சேஃப்ரான் வேவ்: டெமாக்ரசி அண்ட் ஹிந்து நேஷனலிசம் இன் மாடர்ன் இந்தியா, ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ், பக்கங்கள் 84-85).  

தில்லியைச் சார்ந்த கல்வியாளர் பிரளய் கனூங்கோ ‘தீன் தயாள் உபாத்யாயா, தனது ஒருங்கிணைந்த மனிதநேயக் கோட்பாட்டின் (ஏகாத்மா மானவவாதம்) மூலம் கோல்வால்கரின் கலாச்சார தேசியவாதத்தை நிறைவு செய்கிறார். அந்தப் புதிய கோட்பாடு ஆர்.எஸ்.எஸ்சின் ஹிந்து ராஷ்டிரக் கருத்துக்குச் சில நுட்பங்களைச் சேர்த்து, அதன் சித்தாந்த அடித்தளங்களை வளப்படுத்தியது’ (அரசியலுடனான ஆர்.எஸ்.எஸ்சின் சந்திப்பு; மனோகர், பக்கம் 118). ஜனசங்கம் 1965இல் 'ஒருங்கிணைந்த மனிதநேயத்தை' தனது 'வழிகாட்டும் சித்தாந்தமாக' ஏற்றுக் கொண்டது. அது பின்னர் 1980இல் பாரதிய ஜனதா கட்சியாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆழமான வாசிப்பு,  சிந்தனை இல்லாததையே தெளிவற்ற அந்தக் கருத்து பறைசாற்றியது. ஆர்.எஸ்.எஸ் மேடையில் ‘சோசலிசம் மற்றும் தாராளமயப் பொருளாதாரம் ஆகிய இரண்டுமே சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கின்றன’ என்று கூறிய  உபாத்யாயா ‘உலகின் பிரச்சனைகளுக்கான தீர்வு ஹிந்து மதத்தில் இருக்கிறதே தவிர, சோசலிசத்தில் அல்ல’ என்று குறிப்பிட்டதை  அதற்கான எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.    

சோசலிசம் மட்டுமல்லாது மதச்சார்பின்மை என்ற மற்றொரு கருத்தையும் அவர் வெறுத்தார்; ஜனசங்கமும் அதை வெறுத்தது; பாஜகவும் அவ்வாறே செய்கிறது. அலிகாரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் உபாத்யாயா இவ்வாறு கூறினார்: ‘பாரதத்தை மதச்சார்பற்ற நாடாக அறிவிப்பதன் மூலம், பாரதத்தின் ஆன்மா தாக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற நாடு துயரங்கள் நிறைந்தது. தர்மமற்ற ராவணனின் இலங்கையில் தங்கம் ஏராளமாக இருந்ததென்றாலும் ராம ராஜ்யம் அங்கே இருக்கவில்லை.’

இவையனைத்தும் அவரது கண்ணோட்டத்திலிருந்து தவிர்க்க முடியாமல் உருவானவையே. அதனை ‘ஒற்றுமையை விரும்பினால், ஹிந்து தேசியவாதமாகிய பாரதிய தேசியவாதத்தையும், ஹிந்துப் பண்பாடாகிய பாரதியப் பண்பாட்டையும் நாம் உண்மையாகப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று தனது கட்டுரையொன்றில் அவர் வெளிப்படுத்தியிருந்தார்: அவரது பாரதத்தில், ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு - அவர்கள் தூய்மைப்படுத்தப்பட்டு ஹிந்துக்களாக மாறினால் தவிர  - இடம் எதுவும் கிடையாது. இதுதான் ‘பண்பாட்டுத் தேசியவாதம்’ என்பதன் பொருள்.

அரசியலமைப்புச் சட்டம் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். உபாத்யாயாவின் பார்வையில், ‘அது பாரதத்தின் ஒற்றுமைக்கும், பிரிக்க முடியாத தன்மைக்கும் முரணானது. நமது மக்கள் இதயங்களில் பொறிக்கப்பட்டுள்ள நமது புனிதத் தாய்நாடான பாரதமாதா என்ற கருத்துக்கு அதில் எந்தவோர் அங்கீகாரமும் இருக்கவில்லை. அரசியலமைப்பின் முதல் பத்தியின்படி, இந்தியா - அதாவது பாரதம், மாநிலங்களின் கூட்டமைப்பாகவே இருக்கும். அதாவது பீகார் மாதா, வங்க மாதா, பஞ்சாப் மாதா, கன்னட மாதா, தமிழ் மாதா… இவையனைத்தும் ஒன்றுசேர்ந்து பாரதமாதாவை உருவாக்குகின்றன. உண்மையில் இது மிகவும் அபத்தமானது. மாகாணங்களை பாரதமாதாவின் அவயவங்களாகவே நாம் கருதி வந்துள்ளோம், தனித்தனி தாய்மார்களாக அல்ல. எனவே கூட்டாட்சி முறைக்குப் பதிலாக நமது அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறையாக இருக்க வேண்டும். பாரதவர்ஷத்தைப் போலவே பாரதியப் பண்பாடும் ஒன்றாக, பிரிக்க முடியாததாக இருக்கிறது என்று ஜனசங்கம் நம்புகிறது. எனவே, கலப்புப் பண்பாடு பற்றிய எந்தப் பேச்சும் உண்மையற்றது என்று மட்டுமல்லாமல், ஆபத்தானதாகவும் இருக்கிறது. தேசிய ஒற்றுமையைக் குறைத்து, பிரிவினைவாதப் போக்குகளை அது ஊக்குவிக்கிறது’ (ஜனசங்கத்தின் கொள்கைகளும், கோட்பாடுகளும், 1965  ஜனவரி 25, பக்கம் 16). ஜனசங்கம் பஞ்சாபி சுபாவுக்கு முன்பைப் போலவே கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது (கிரெய்க் பேக்ஸ்டர், தி ஜனசங்கம், ஒரு திட்டவட்டமான படைப்பு; பக்கம் 253).  

அகண்ட பாரதம்

உபாத்யாயா அகண்ட பாரதத்தின் முக்கிய ஆதரவாளராக இருந்தார். ஆர்கனைசர் இதழில் (1953ஆகஸ்ட் 24) எழுதிய கட்டுரையொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: ‘அகண்ட பாரதம் என்பது நாட்டின் புவியியல் ஒற்றுமையின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கவில்லை, பன்முகத்தன்மையில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பாரதிய வாழ்க்கை மீதான பார்வையையும் அது குறிக்கிறது. எனவே அகண்ட பாரதம் என்பது நம்மிடம் உள்ள அரசியல் முழக்கமோ அல்லது அதன் செல்வாக்கின் காரணமாக சிறப்புச் சூழ்நிலைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏதோவொன்றோ அல்ல, மாறாக அது நமது சித்தாந்தத்தின் அடிப்படையாகவே இருக்கிறது.’   

ஜனசங்கம் 1965 ஆகஸ்ட் 17 அன்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது: ‘பிரிவினை இருக்கும் வரை, பாரதத்திற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதி இருக்காது. நாம் பாகிஸ்தானின் குண்டர்ராஜ்யத்திற்கு அடிபணிந்ததாலும், நமது சமரசக் கொள்கையாலும்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான பிளவு விரிவடைந்துள்ளது. பாரதத்தின் முஸ்லீம்கள் பலருக்கு பாகிஸ்தான் மீது உணர்வுபூர்வமான பற்று இருக்கிறது. இந்த நிலையை மாற்ற இருமுனை முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

முதலாவதாக, பாகிஸ்தானுடனான நமது உறவுகளில் ‘பதிலுக்குப் பதில்’ என்ற கொள்கை பின்பற்றப்பட வேண்டும். ஒட்டுமொத்த பாரதத்தையும் கைப்பற்றும் தன்னுடைய கனவை நிறைவேற்ற முடியாது என்பதை பாகிஸ்தான் உணரும் நாளன்று, அது தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகும். பாரதத்தைப் பிரித்த தவறை அது அப்போது உணர்ந்து கொள்ளும். அதற்கு ‘பதிலுக்குப் பதில்’ என்ற கொள்கை பின்பற்றப்பட வேண்டும். இரண்டாவதாக, பாரதத்தின் முஸ்லீம்களைத் திருப்திப்படுத்தும் நோக்கில் அவர்களுடன் நாம் ஒருபோதும் எந்தவிதமான பேரமும் பேசக் கூடாது. பாரதத்தின் மதச்சார்பற்ற அரசில் அவர்களின் உரிமைகள் அனைத்தும்  பாதுகாக்கப்படுகின்றன. முஸ்லீம்களின் பாகிஸ்தான் சார்புப் போக்குகளை வெறுமனே பொறுத்துக் கொள்ளாமல், அவர்களின் கண்ணோட்டத்தை மாற்றி, அவற்றை பாரதத்திற்கு உகந்ததாக மாற்றுவதற்கான முயற்சிகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட வேண்டும்’ (பாரதிய ஜனசங்கம்-கோஷ்ணா வா பிரஸ்தாவ், பக்கங்கள் 75-76). பாகிஸ்தானையும், இந்திய முஸ்லீம்களையும் அவர்கள் ஒன்றாகவே கையாள வேண்டியிருந்தது.

1964 மார்ச் மாதத்தில் ஜனசங்கத்தின் மத்திய செயற்குழு தில்லியில் ‘பிரிவினை ரத்து செய்யப்பட வேண்டும், பாகிஸ்தான் விடுவிக்கப்பட வேண்டும். அதுவே தேசத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும்’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.  அதற்கான காரணங்கள் கட்ச் ஒப்பந்தத்திற்கு எதிரான மாபெரும் பேரணியைத் தொடர்ந்து, தில்லியில் நடைபெற்ற ஜனசங்கப் பிரதிநிதிகள் கூட்டத்தின் தீர்மானத்தில் தெளிவுபடுத்தப்பட்டன. ‘பாகிஸ்தான் இருக்கும் வரை, பாரத-பாகிஸ்தான் அமைதிக்கான முயற்சிகள் பயனற்றவையாகவே இருக்கும். பாகிஸ்தானின் அழுத்தங்களுக்குப் பணிவது, அதிகரித்து வரும் அதன் ஆணவத்திற்கு மேலும் தூபம் போடுகிறது. பாரதத்திற்கு எதிரான பாகிஸ்தானின் அபிலாஷைகள் அதிகரித்து வருகின்றன. ஹிந்துஸ்தானில் உள்ள மிகப்பெரிய முஸ்லீம் குழு பாகிஸ்தானுடன் உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்துள்ளது. அவையிரண்டும் ஒன்றுக்கொன்று வலுவூட்டிக் கொள்கின்றன. இரண்டு தீர்வுகள் இங்கே பரிந்துரைக்கப்படுகின்றன: முகலாயப் பேரரசு பற்றிய பாகிஸ்தானின் கனவுகள் தகர்க்கப்பட வேண்டும். பாரதத்தில் உள்ள முஸ்லீம்களுடன் எந்தவிதமான அரசியல் பேரமும் பேசக் கூடாது.’ என்று அந்தத் தீர்மானம் குறிப்பிட்டது. அந்தக் கொள்கையின் விளைவுகளைத் தீர்மானம் விளக்கியது. ‘சுயபரிசோதனை செய்து கொள்ளுமாறு அப்போது பாகிஸ்தான் மக்களும், ஆட்சியாளர்களும் நிர்பந்திக்கப்படுவார்கள், பிரிவினையின் முட்டாள்தனத்தை அவர்கள் உணர்வார்கள்.’

பாகிஸ்தானை வழிக்குக் கொண்டுவர, இந்திய முஸ்லீம்கள் பணயக்கைதிகளாக நடத்தப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் இருந்த ஒருவர், ஜனசங்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஆர்.எஸ்.எஸ்சின் கருவியாகச் செயல்பட முற்றிலும் தகுதி பெற்றவராகவே இருந்தார்.

சியாமா பிரசாத் முகர்ஜி 1950  ஏப்ரலில் நேருவின் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கோல்வால்கர் மற்றும் அவரது ஆட்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். உபாத்யாயா அப்போது ஆர்.எஸ்.எஸ்சின் உத்தரப்பிரதேசப் பிரிவின் தலைவராக இருந்தார் (பாக்ஸ்டர், பக்கம் 68). அந்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஆர்கனைசர் பத்திரிகையில் கட்டுரையொன்றில் (1956 ஜூன் 25) கோல்வால்கர் எழுதினார். ‘புதிய கட்சியை நிறுவும் பொறுப்பிற்காக சுயநலமின்றி, அசைக்க முடியாத உறுதியுடன் செயல்படக்கூடிய எனது சகாக்களில் சிலரை, மிக உறுதியான, சோதிக்கப்பட்ட ஊழியர்களை நான் தேர்ந்தெடுத்தேன்...’. உபாத்யாயா அவர்களில் முதன்மையானவராக இருந்தார்.  ஹிந்து தேசம் என்ற கருத்து தனக்கு ஏற்புடையது என்று சியாமா பிரசாத் முகர்ஜி கூறினார் என்று கோல்வல்கர் தெரிவித்தார். இந்திய தேசியத்தை நமது அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வரையறுக்கத் தவறி விட்டது என்று கூறிய டாக்டர் முகர்ஜி ‘ஹிந்து தேசத்திற்கான உன்னதப் பெருமையை மீட்டெடுக்கும் இலக்கானது, நவீன ஜனநாயகக் கருத்துக்கு முரணானது அல்ல. ஹிந்து அல்லாத பிரிவுகளைச் சார்ந்த மக்கள் அதிகாரத்தைப் பெற்று தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடாத வரை, பெருமைக்கான பாதையில் தேசத்தின் முன்னேற்றத்தைத் தடுக்க அவர்கள் சதி மேற்கொள்ளாத வரை, அரசியல், மதம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் அவர்களுக்கான அனைத்து குடிமை உரிமைகளையும், சம அந்தஸ்தையும் வழங்குவதற்கான உத்தரவாதம் ஹிந்து தேசம் என்ற கருத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும்’ என்றார். புதிய கட்சியின் கொள்கை வரைவில் இதுபோன்ற உத்தரவாதத்தை வெளிப்படையாகக் குறிப்பிடுவதற்குத் தான் தயாராக இருப்பதாக முகர்ஜி கூறினார்.  

‘இந்த வழியில் நாங்கள் ஓர் உடன்பாட்டிற்கு வந்த பிறகு, அர்ப்பணிப்புள்ள, நம்பகமான சில தொண்டர்களை நான் தேர்ந்தெடுத்தேன். சுயநலமற்ற, உறுதியான அர்ப்பணிப்புடன் புதிய கட்சியை அமைக்கும் பொறுப்பை நிறைவேற்றக்கூடிய,  பிரபலமான அகில இந்திய அரசியல் கட்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்து, அதற்கான நடைமுறை வடிவத்தைக் கொடுக்கக்கூடிய தொண்டர்களை நான் டாக்டர் முகர்ஜியிடம் ஒப்படைத்தேன்.

இந்த மோசடி பேரத்தின் விளைவுகளை மிகச் சுருக்கமாக ஜாஃப்ரலாட் மிகச் சரியாகக் கூறுகிறார்: ‘சுருக்கமாகச் சொன்னால், அரசியல் நிகழ்வுகளுக்கு, ‘செயல்பாட்டாளர்களான’ சுயம்சேவக்குகளின் அழுத்தத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, சில உத்தரவாதங்களுடனே ஆர்.எஸ்.எஸ் அரசியல் களத்தில் நுழைந்தது; உண்மையில் ஜனசங்கத்தின் கொள்கை வழியைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளைத் தனக்காகவே அந்த இயக்கம் உருவாக்கிக் கொண்டது. அதன் நிறுவனர்களாக இருந்த ‘அரசியல்வாதிகள்’ அந்த வழியை எந்த வகையிலாவது மாற்ற அல்லது அதன் கட்டுப்பாட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள​​முயன்ற போதெல்லாம், ​​ ஆர்.எஸ்.எஸ் கட்சிக்குள் தனது அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளத் தயங்கவில்லை.’  

1980இல் ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிய பிறகு, ஜனசங்கத்தின் தலைவர்களுக்கு முன்பாக இருந்த நேர்மையான ஒரே வழி, தங்கள் கட்சியை மீண்டும் உயிர்ப்பிப்பதுதான். ஆனால் அது அவப்பெயரைச் சம்பாதித்திருந்த காரணத்தால்,  தாங்கள் விட்டு விலகிய கட்சியின் பெயரையே திருடி, அதற்கு முன்னால் ‘பாரதிய’ என்ற அடைமொழியைச் சேர்த்து, மீண்டும் அவர்கள் ஜனசங்கத்தின் அதே சித்தாந்தத்தைத் தழுவிக் கொண்டனர். புதிய கட்சியின் முதல் தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் ‘ஜனசங்கத்தை விட்டு நாங்கள் எப்போது வெளியேறினோம்?’ என்றே கேள்வியெழுப்பினார்.  

2016இல், நரேந்திர மோடியும் அவரது சகாக்களும் தீன் தயாள் உபாத்யாயாவைப் புகழ்ந்து தங்கள் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாக வெளிப்படுத்தினர். எதுவுமே மாறவில்லை. முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் குறித்து அவர் காக்கும் மௌனம் அவரது கண்ணோட்டத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. டொனால்ட் டிரம்ப் போன்ற ஒருவருக்குக் கிடைக்கும் ‘ஹிந்து தேசியவாத’ ஆதரவைப் பற்றி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர் ஜெர்மி எம்.பீட்டர்ஸ் விளக்கினார்: ‘மோடி ஆட்சிக்கு வந்தபோது தூண்டிவிட்ட தேசியவாத உணர்வுகளை, சிலர் கூறுவதைப் போல முஸ்லீம் விரோத உணர்வுகளை டிரம்பின் வார்த்தைகள் பிரதிபலிப்பது தற்செயலானதாக இருக்கலாம். ஆனால், டிரம்பின் மிகப்பெரிய ஹிந்து ஆதரவாளர்களில் பலர் மோடியின் தீவிர ஆதரவாளர்களாகவும் இருப்பது நிச்சயமாக தற்செயலானதல்ல.’

ஹண்டர் கல்லூரியில் தெற்காசிய வரலாறு கற்பிக்கும் மனு பகவான், ‘இந்தியாவில் உள்ள ஹிந்து தேசியவாத இயக்கம், அமெரிக்காவில் உள்ள அதன் ஆதரவாளர்களிடம் இந்திய வாழ்வில் ஒரு காலத்தில் தூய்மை, நற்பண்புடன் இருந்தவை களங்கப்படுத்தப்பட்டு விட்டன என்ற நம்பிக்கையே இருக்கிறது’ என்கிறார். ‘இந்தியாவிற்குள் முஸ்லீம்கள் நுழைவதற்கு முன்பு, வெளிநாட்டினர் அனைவரும் வந்து எல்லாவற்றையும் குழப்புவதற்கு முன்பு...' என்று அவர்கள் மகத்தான ஹிந்து கடந்த காலத்திற்குள்ளேயே இந்தியாவைக் காண்கிறார்கள்' (தி ஹிந்து, அக்டோபர் 16). வரலாற்றுடன் பெரும் போராட்டத்தில் உள்ள சங் பரிவாரம், பழங்காலத்து, கற்பனையான தவறுகளுடனான வரலாற்றிற்கு ஆதரவாகப் போராட முயல்கிறது. அந்தக் கற்பனை இந்திய தேசம் கொண்டிருக்கும், இத்தனை ஆண்டுகளாக அதனிடமிருந்து வந்துள்ள உலகக் கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பாலசங்கர் அதனால்தான், காந்தியை நிராகரித்து உபாத்யாயாவை விரும்புகிறார். அவர் அதற்காக வெட்கப்படுபவர் அல்ல.  ‘காந்திஜி மீது முழு மரியாதை வைத்திருந்தாலும், ‘தேசத் தந்தை’ என்று அவரை அழைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தேசியவாதத்தின் பழைய அடிப்படையைப் புரிந்து கொண்டால் அது, ஹிந்து மதம் தவிர வேறில்லை என்பது நமக்குத் தெளிவாகும்’ என்று தீன் தயாள் உபாத்யாயா 1961ஆம் ஆண்டு கூறினார். அவரது வாரிசான எல்.கே.அத்வானியும் அதை ஒப்புக்கொண்டார். 1989 அக்டோபர் 17 அன்று வெளியான தனது தலையங்கத்தில் ‘பாரத மாதா’ பற்றிப் பேசும்போது, ​​மகாத்மா காந்தி தேசத் தந்தை என்பதை மறுக்கும் அளவிற்கு அத்வானி செல்கிறார்’ என்று  'டைம்ஸ் ஆஃப் இந்தியா' குறிப்பிட்டது.    

ஆரம்பத்தில் தன்னுடன் வைத்துக் கொண்ட காந்திய சோசலிசம் என்ற கொள்கையை மிக விரைவிலேயே கைவிட்ட பாஜக, செயற்குழுவின் 47 பக்க அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்த உபாத்யாயாவின் ஒருங்கிணைந்த மனிதநேயத்தை  ஏற்றுக் கொண்டது. அந்த மாற்றம் ஜனசங்கத்திற்குத் திரும்புவதைக் குறிக்கிறதா என்ற கேள்வி எழுப்பட்டபோது, ​​ ‘நாங்கள் எப்போது ஜனசங்கத்திலிருந்து விலகிச் சென்றோம்?’ என்றே வாஜ்பாய் பதிலளித்தார்.

முஸ்லீம்களைத் 'தூய்மைப்படுத்தப்' போவதாக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் கோழிக்கோட்டில் செப்டம்பர் 25 அன்று நரேந்திர மோடி ஆற்றிய உரை, அவரின், பாஜகவின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. தூய்மைப்படுத்தும் அந்தச் செயல்முறை எந்த வழிகளில் செயல்படுத்தப்படும் என்பதை அவர் குறிப்பிடவே இல்லை. கடந்த காலத்தில் நடந்தவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, முஸ்லீம்கள் கவலைப்பட நியாயமான காரணம் நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது.

https://frontline.thehindu.com/the-nation/merchant-of-hate/article23595103.ece

 

Comments