அக்சய முகுல், குணால் புரோஹித் உடன் ஹர்ஷ் மாந்தர் உரையாடல்
ஹிமால் சவுத் ஆசியன்
2025 அக்டோபர் 29
ஹர்ஷ் மாந்தர்: சலாம்,
நமஸ்தே ஜிந்தாபாத். ஹிமால் சவுத் ஆசியன் சார்பாக நான் ஹர்ஷ் மாந்தர் பேசுகிறேன். இப்போது
நாம் ஆர்.எஸ்.எஸ்சின் நூறு ஆண்டுகளைப் புரிந்து கொள்ள முயல வேண்டிய இடத்திற்கு வந்து
சேர்ந்திருக்கிறோம். அந்த அமைப்பு தனது சித்தாந்தம், செயல்பாட்டு முறைகளால் இந்தியாவில்
நம் அனைவரது வாழ்விலும் தனக்கான செல்வாக்கை எவ்வாறெல்லாம் விரிவுபடுத்திக் கொண்டுள்ளது
என்பதைப் புரிந்து கொள்ள வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. இப்போது என்னுடன் மிக அற்புதமான
குழு இருக்கிறது. இவர்கள் இருவரும் மிகவும் மதிக்கப்படும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள்.
மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படும் 'கீதா பிரஸும், ஹிந்து
இந்தியா உருவாக்கமும்’ (தி கீதா பிரஸ் அண்ட் தி மேக்கிங் ஆஃப் ஹிந்து இந்தியா) என்ற
புத்தகம் அக்சய முகுல் எழுதியது. அவர் கீதா பிரஸ் மூலம் ஹிந்துத்துவா சித்தாந்தம் எவ்வாறெல்லாம்
பரப்பப்பட்டது என்பதை அந்தப் புத்தகத்தில் நமக்கு விளக்கியுள்ளார்.
குணால் புரோஹித் சுயாதீன பத்திரிகையாளர். வளர்ச்சி, சமத்துவமின்மை,
பாலினம், வெறுப்பு, இலக்கு வைக்கப்பட்ட வன்முறை போன்ற பிரச்சனைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு
வருகிறார். குணாலின் 'H-POP தி சீக்ரெட்டிவ் வேர்ல்ட் ஆஃப் ஹிந்துத்துவா பாப் ஸ்டார்ஸ்'
என்ற புத்தகம் மிகவும் அசாதாரணமான புத்தகம். அந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா ஒன்றில்
கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஹிந்துத்துவா
சித்தாந்தம் மக்களின் இதயங்களை, மனங்களை எவ்வாறு சென்றடைகிறது என்பதை அந்தப் புத்தகம்
முன்னெடுத்துச் செல்கிறது. இதுவே இன்றைய நமது விவாதங்களுக்கான மையக் கருத்தாக இருக்கப்
போகிறது. இங்கே வந்தமைக்கு உங்கள் இருவருக்கும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முகுல், வரலாற்றுக்குள் நாங்கள் நுழைய நீங்கள் நிச்சயம் உதவுவீர்கள்
என்பதால், உங்களிடமிருந்தே தொடங்குகிறேன்… கீதா பிரஸை இந்த அரசு சர்வதேச காந்தி விருதுக்காகத்
தேர்ந்தெடுத்தது உண்மையில் வேடிக்கையான நிகழ்வுதான். அதனை உச்சகட்ட முரண்பாடாகவே நான்
கருதினேன். ஏனென்றால் காந்தி விருது மகாத்மா காந்தியின் கருத்துகளை, விழுமியங்களை ஊக்குவிப்பதற்காக
வழங்கப்படுவது… கீதா பிரஸோ காந்திஜியை மிகத் தீவிரமாக, மிகத் தெளிவாக, சில சமயங்களில்
வன்மையாக எதிர்த்த சித்தாந்தக் கட்டமைப்பிற்கு ஆதரவாக நின்ற நிறுவனம். எனவே கீதா பிரஸ்
என்ன மாதிரியான செய்திகளைத் தெரிவிக்க முயன்றது என்பது பற்றி இப்போது நாம் பேசலாம்.
அந்த நிறுவனம் எப்படி இயங்கியது, அது இத்தனை ஹிந்துக்களின் வீடுகள், இதயங்கள், மனங்கள்,
வழிபாட்டுத் தலங்களை எப்படிச் சென்றடைந்தது, அதனால் மக்களிடையே எவ்வாறு ஊடுருவ முடிந்தது,
அதற்காக அது என்னவெல்லாம் செய்தது என்பது பற்றி முதலில் பேசலாம்.
அக்சய முகுல்: நன்றி,
ஹர்ஷ்... இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் சில விஷயங்கள் நடந்தன. அது 1923ஆம்
ஆண்டில் தொடங்குகிறது.
ஹர்ஷ் மாந்தர்: அந்தக்
காலகட்டம்... ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தோன்றுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு.
அக்சய முகுல்: ஆமாம்.
அது 1923ஆம் ஆண்டு தொடங்குகிறது. அந்தக் காலகட்டம் அச்சுத் தொழில்நுட்பத்தில் மிகப்
பெரிய புரட்சி நடந்து கொண்டிருந்த காலகட்டம். கல்கத்தா, அலகாபாத் மற்றும் பெருமளவிற்கு
பனாரஸ் போன்ற நகரங்களில் அதற்கான சில மையங்கள் இருந்தன. அந்தக் காலகட்டம் ஆர்.எஸ்.எஸ்
தோன்றிய காலகட்டமும் கூட... அப்போது மிகப் பெரிய கொந்தளிப்பு இருந்தது. அது போட்டி
வகுப்புவாதக் காலகட்டம். மார்வாடிகளால் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் முற்றிலும் மார்வாடி
நிறுவனமாகவே இருந்தது. அது தொடங்கப்பட்டதற்கு ஒரு பின்னணி இருந்தது. அந்தச் சமயத்தில்
மார்வாடி சமூகத்திற்குள் பெரும் குழப்பம் நிலவி வந்தது. அதாவது ‘நமக்குக் கெட்ட பெயர்
கிடைத்திருக்கிறது’, ‘நம்மை இந்திய யூதர்கள் என்கிறார்கள்’, ‘வட்டித் தொழில் மூலம்
பணம் சம்பாதிக்கிறோம்’ என்பது போன்ற குழப்பங்கள்
அந்தச் சமூகத்தில் நிலவின. அப்போது அந்தக் குழப்பத்திலிருந்து இரண்டு அடிப்படையில்
வெவ்வேறுபட்ட கருத்தோட்டங்கள் தோன்றின. ஒன்று - கன்ஷியாம் தாஸ் பிர்லா, ஜம்னாலால் பஜாஜ்
போன்றவர்கள். அவர்கள் முற்போக்கானவர்கள். அதை அவர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள்.
மற்றொன்று - பழமைவாத பாரம்பரியப் பிரிவு. அந்தப்
பிரிவினர் மார்வாடி உலகில் உள்ள நெருக்கடி மற்றும் அதன் நீட்சியாக ஹிந்து உலகம் எதிர்கொண்ட
நெருக்கடிகளுக்கான ஒரே தீர்வு சனாதன தர்மத்திற்குத் திரும்புவதுதான் என்றனர். அங்கிருந்துதான்
பிரச்சனையின் மையப்புள்ளி தொடங்குகிறது. அவர்கள் ‘முஸ்லீம்கள் வருவதற்கு முன்பு நாம்
நன்றாகத்தான் இருந்தோம்’ என்றார்கள். ஆக அவர்களைப் பொறுத்தவரை ஹிந்து ஆட்சிக்குப் பிறகு
முஸ்லீம்கள், பின்னர் கிறிஸ்தவர்களின் ஆட்சி என்பதே பிரச்சனையாக இருந்துள்ளது. எனவே
சனாதன வேர்களுக்குத் திரும்புவதே அவர்களின் நோக்கமாயிற்று. ஹிந்து மதத்தை அவர்கள் பரப்பவில்லை.
மாறாக அதன் சடங்குகள், சம்பிரதாயங்கள் நிறைந்த பழமைவாத வடிவத்தைப் பரப்பினர். அது சாதி
சார்ந்து, சாதிரீதியாக இருந்தது... சாதி மேலாதிக்கம் மீது முழுமையான நம்பிக்கை அதனிடம்
இருந்தது. பாலினத்தைப் பொறுத்தவரை - மார்வாடி வலையமைப்பு பெண்களை எப்போதும் ஆண்களின்
பிரச்சனை என்றே கருதி வந்தது. கீதா பிரஸ் தொடர்பாக
இப்போது வரை மாறாத இரண்டு, மூன்று விஷயங்கள் இருக்கின்றன. பசுக்கள் மீது அவர்களுக்குள்ள
மோகம் மற்றும் பெண்கள்... இந்த இரண்டு விஷயங்களிலும் அவர்கள் ஒருபோதும் மாற்றமடையவே
இல்லை.
ஹர்ஷ் மாந்தர்: அந்த வரிசையில்...
கோயந்த்கா-போதார்
அக்சய முகுல்: ஆம் அந்த
வரிசை மட்டுமல்லாது, இரண்டும் ஒன்று சேர்ந்தும்கூட… கல்யாணின் முதல் இதழில்கூட முஸ்லீம்களைப்
பற்றி, பசுக்களைப் பற்றியே அவர்கள் அதிகம் கவலைப்பட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
அந்த இரண்டும் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும். அந்த மார்வாடி வலையமைப்பு
மிகச் சாதாரணமான ஹிந்துக்களின் வீடுகளையும் சென்றடைவதற்கு எவ்வாறு உதவியது என்பதைப்
பார்த்தால், ஆரம்ப கட்டத்தில் மார்வாடிகளே - அவர்கள் எங்கிருந்த போதிலும் - மொத்தமாக
அவர்களின் பதிப்புகளை வாங்கினார்கள். யாரோ ஒருவர் அல்லது பக்கூராவில் இன்னார் இவ்வளவு
வாங்கியுள்ளார், ஜோர்ஹாட்டிலுள்ள இன்னார் இவ்வளவு வாங்கியுள்ளார் என்று அவர்கள் குறிப்பிடுவார்கள்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் கால் பகுதியிலேயே மார்வாடிகள் அனைத்து இடங்களிலும் பரவியிருந்தனர்.
ராஜஸ்தானில் இருந்து கிளம்பி அவர்கள் வர்த்தகத்தை மேற்கொண்டு வந்தனர். மிகப் பெரிய
வணிக வர்க்கமாக அவர்கள் தொழில் செய்து வந்தனர். அவர்களால் லாப நஷ்டமற்ற நிறுவனம் என்ற
அடிப்படையிலேயே கீதா பிரஸ் தொடங்கப்பட்டது. கோவிந்த் பவன் அறக்கட்டளை எனும் அறக்கட்டளை
- அதன் தலைமையகம் இன்றும் கல்கத்தாவில் உள்ளது - அங்கே தொடங்கப்பட்ட அந்த நிறுவனம்
கோரக்பூருக்கு எப்படி வந்து சேர்ந்தது? கோரக்பூரில் அவர்கள் முதன்முதலாக கீதையின் சிறந்த
மொழிபெயர்ப்புகளை வெளியிட விரும்பினர். அதற்காகவே அந்தப் பதிப்பகம் 1923ஆம் ஆண்டில்
தொடங்கப்பட்டது. 1926இல்தான் அவர்கள் கல்யாண் இதழைத் தொடங்கினர். அதுவே அவர்களின் முக்கிய
இதழாக மாறியது. அவர்கள் வெளியிட்ட எண்ணற்ற மத நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், மற்ற அனைத்து
நூல்களும் முக்கியத்துவம் பெற்றன. மார்வாடி வலையமைப்பு அதற்கான உதவிகளைச் செய்தது.
மார்வாடிகள் அனைவரும் பணம் போட்டனர். அறக்கட்டளையை அடிப்படையாகக் கொண்டு அந்த நிறுவனம்,
முற்றிலுமாக லாப நஷ்டம் எதுவுமற்றதாகவே இயங்கி வந்தது. அந்த அறக்கட்டளையில் உயர் சாதியினர்
மட்டுமே உறுப்பினர்களாக இருக்க முடியும் என்பதை, அறக்கட்டளையின் அந்தக் காலகட்ட ஆவணம்
மிகத் தெளிவாகக் கூறுகிறது. அது மிகவும் வெளிப்படையாக இருந்தது. அவர்கள் உயர் சாதியினருக்காக
நிற்பதை அந்த ஆவணம் மிகத் தெளிவாகக் கூறியது.
மார்வாடி உலகிற்குள் ஏற்பட்ட குழப்பத்தில் தொடங்கிய அந்த நிறுவனம் பின்னர் பரந்த ஹிந்து
சமூகத்திற்கு என்பதாக விரிவடைந்தது. மார்வாடிகளே அதனை வெற்றி பெறச் செய்தனர். அதற்கான
பெருமை அனைத்தும் அவர்களுக்கே சேர வேண்டும்.
ஆரம்பத்திலேயே அவர்கள், மக்களை மிக எளிதாகத் தொடர்பு கொள்ளும்
வகையில் மாறாத வரை தங்களால் வெற்றி பெற முடியாது என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். தொடர்பு கொள்வது என்று நான் சொல்ல
வருவது என்னவென்றால் - 1920களின் ஆரம்பத்திலேயே கீதை குறித்த தேர்வு ஒன்றை அவர்கள்
துவங்கினார்கள். அந்தத் தேர்விற்கான தேர்வு மையங்கள் மகாராஷ்டிரா, குஜராத், பீகார்,
உத்தரப்பிரதேசம் என்று உங்களால் கற்பனை செய்யவே முடியாத இடங்களிலும் இருந்தன. ஆம்…
தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டன. மக்கள் அங்கே சென்று தேர்வுகளை எழுதி, தேர்ச்சியடைந்தார்கள்.
அதற்குப் பிறகு ராம் நாம் வங்கியைத் தொடங்கினார்கள். இப்போதும் பீகார், உத்தரப் பிரதேசம்,
ராஜஸ்தான் மற்றும் ஹிந்தி பேசும் பிற மாநிலங்களில் மிகச் சாதாரணமாக அது இருக்கிறது.
ஒரு நோட்டுப் புத்தகத்தில் உங்கள் தாத்தா அல்லது வீட்டில் உள்ள யாராவது ஒருவர் லட்சக்கணக்கான
தடவை ராம், ராம், ராம் என்று எழுதுவார். அது ராம் நாம் வங்கிக்கு அனுப்பப்பட்டு சேமிக்கப்படும்.
அந்தக் காரியத்தைச் செய்து முடித்த அவர்கள் அடுத்து ஒரு பத்திரிகை
அல்லது பதிப்பகத்தைத் துவங்கினர். அந்தப் பதிப்பகம் யாரென்று அறிந்திராத வாசகர்களுக்கு
வெறுமனே புத்தகங்களை அனுப்புவது, எழுதுவது என்பதாக மட்டுமே செயல்படவில்லை. அது மக்களுடன்
அதிகம் தொடர்பு கொள்ளக் கூடிய தன்மையுடன் இருந்தது. அதனாலேயே மிகப் பெரிய வெற்றியைப்
பெற்றது. இங்கே எழுப்பப்பட வேண்டிய முக்கியமான கேள்வி என்னவென்றால் - இருபதாம் நூற்றாண்டின்
முதல் பகுதியில் வெளிவந்த கவர்ச்சிகரமான இலக்கியப் பத்திரிகைகள் அனைத்தும் நின்று போயின.
சந்த் போன்ற சிறப்பான பத்திரிகைகள், பிரபா போன்ற பத்திரிகைகள் இருந்தன. உங்களுக்குத்
தெரிந்த மற்றொன்று, பிரேம்சந்தின் பத்திரிகை. அப்போது அது போன்ற பல பத்திரிகைகள் இருந்தன.
ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு அந்த இலக்கியப் பத்திரிகைகள் அனைத்தும் நின்று போயின.
கல்யாண் மட்டுமே தப்பிப் பிழைத்து, இன்று வரையிலும் தொடர்கிறது. 1925 ஆகஸ்ட் 26 அன்று
தொடங்கப்பட்டு நூறு ஆண்டுகளாக நீடித்திருக்கிறது. கல்யாண் என்ற அந்தப் பத்திரிகையின்
வயது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஹர்ஷ் மாந்தர்: எனக்குத்
தெரிந்தவரை, சாதி அம்சம் மிகவும் கவர்ச்சிகரமானது. இந்தத் தொடரில் நமது விவாதங்களில்
ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது பிராமணர்களை… பிராமணர்களிடையே
தங்களை உயர்ந்தவர்களாகக் கருதுபவர்களை, மகாராஷ்டிர பிராமணர்களை மையமாகக் கொண்டது எனக்
குறிப்பிடப்படுகிறது. நீங்கள் இங்கே சாதிப் படிநிலையில் சற்றே கீழ்நிலையில் உள்ள ராஜஸ்தானி
மார்வாடிகளைப் பற்றி பேசுகிறீர்கள். இவர்கள் இருவருக்கும் இடையிலான கூட்டணியை எவ்வாறு
விளங்கிக் கொள்வது?
அக்சய முகுல்: அது மேலும்
ஒரு சுவாரஸ்யமான கேள்வியாகவே இருக்கும். அதிகமாகப் பணம் சம்பாதித்த பிறகும், தகுதியான
மரியாதை நமக்குக் கிடைக்கவில்லை என்ற கவலை மார்வாடிகள் சமூகத்திற்குள் இருபதாம் நூற்றாண்டின்
முதல் காலாண்டில் - ஏன் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும்கூட இருந்து வந்தது.
ஹர்ஷ் மாந்தர்: அப்படியென்றால்
அது மரியாதையைப் பெறுவதற்கான ஒரு வழி.
அக்சய முகுல்: ஆம்… மரியாதையைப்
பெறுவதற்கான வழி. அதனாலேயே மார்வாடிகளிடையே பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்,
இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் யக்ஞோபவீதம் (பூணூல் மாற்றும் முறை) அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்கள் ஜானவர்கள். அதிக
எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்கள்தான் மிகப்பெரிய கொடையாளிகளும்கூட… கோவில்கள்,
அனாதை இல்லங்கள் என்று எதை வேண்டுமானாலும் சொல்லுங்கள்... பழங்காலக் கோவில்களுக்குச்
சென்றால் இன்னார் இதைக் கொடுத்தார் போன்ற தகவல்கள் எதையும் காண முடியாது; கோவிலுக்கு
யார் என்ன கொடுத்தார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால் மார்வாடிகளிடமிருந்துதான்
அதனை எழுதி வைக்கும் வழக்கம் பெரிய அளவில் தொடங்கியது. நன்கொடை வழங்கிய அவர்கள் தங்கள் பெயர்களை
அங்கே பதிவு செய்து கொண்டனர். பிர்லா மந்திர், பின்னர் ராம் மந்திர் என்று எண்ணற்ற
கோவில்கள் அவர்களின் சிந்தனையில் உதித்தவைதான். ராஜஸ்தானில் உள்ள கோவில்கள் அனைத்திற்கும்
அல்லது வேறு எங்கே சென்றாலும், உங்களால் அவர்களின் பெயர்களை அங்கே காண முடியும். அளவற்ற
பணம், அளவற்ற பலம், வணிக ஆற்றலே அவர்களுக்கு யக்ஞோபவீதத்தைப் பெற்றுத் தந்தது. அவர்களின்
வாழ்க்கையில் பிராமணச் சடங்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அவற்றை அவர்களால் பெற முடிந்தது. இந்தக் கூட்டணி
அப்படித்தான் தொடங்கியது.
அவர்களே மிகப்பெரிய அளவிற்கு நிதி வழங்கியவர்களாகவும் இருந்தனர்.
கோரக்ஷணி இயக்கத்திற்குப் பின்னால் இருந்தது அவர்கள்தான். மார்வாடிகள் தெருவில் இறங்கி
சண்டையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இருபதாம் நூற்றாண்டின் முதல்
கால் பகுதியில் நடந்த பசு பாதுகாப்பு இயக்கம் அல்லது கலவரங்கள் அனைத்திலும் சண்டையிடுபவர்களாக
இருந்தது யார்? யாதவர்கள்… கலவரங்களில் அவர்கள்தான் காலாட்படை வீரர்களாக இருந்தர்கள்.
ஆனால் பணம் மட்டும் மார்வாடிகளிடமிருந்து வந்தது.
ஹர்ஷ் மாந்தர்: மிக்க நன்றி...
குணால், முகுல் பேசிக்கொண்டிருந்த காலத்திலிருந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம்
வேகமாக முன்னோக்கி வந்தால், இப்போது சித்தாந்தத்தின் அடிப்படையிலேயே தகவல் தொடர்பு
நடைபெறுகிறது. அந்தச் சித்தாந்தம் என்னவென்று இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசலாம். எச்-பாப்
புத்தகத்தில் நீங்கள் விவரித்திருக்கும்
தகவல் தொடர்பு முறைகள் முற்றிலும் வேறுபட்டிருக்கின்றன. ஏற்கனவே நான் சொன்னதைப் போல,
அதன் உள்ளடக்கம் பற்றி பின்னர் பேசுவோம். ஆனால் இந்தச் சிறிய புத்தகங்கள், சிற்றேடுகள்,
தேர்வுகள், ஒருவித மதரீதியான சூழல் போன்றவற்றின் மூலம் அவர்களால் மிக உயர்வான இலக்கியப்
பத்திரிகைகளால்கூட முடியாத வழிகளில் மக்களைச் சென்றடைந்து, எப்படி நிலைத்திருக்க முடிந்தது
என்பதை முகுல் விவரித்துக் கூறினார். இப்போது செயல்பாட்டில் இருப்பது எது?
குணால் புரோஹித்:
ஒரே தளத்தில் நம் அனைவரையும் ஒன்றிணைத்தமைக்கு - ஹர்ஷ்… உங்களுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன். நான் அதிகம் மரியாதை வைத்திருக்கும் இரண்டு பேர் - நீங்கள் இருவரும் -
எனக்கு இருபுறமும் அமர்ந்திருப்பதில் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன். அக்சய் கூறியதிலிருந்து
தொடங்கினால் - ஹிந்துத்துவா-பாப், பாப் நட்சத்திரங்கள் என்று இந்தக் கலைஞர்கள் அனைவரையும்
பொறுத்தவரை, மத உணர்வை மீண்டும் உருவாக்க அவர்கள் முயல்வதையே நாம் பார்க்கிறோம். இன்றைய
மக்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில்
அவர்கள் அதனை முயன்று கொண்டிருக்கிறார்கள். இன்றைய மக்கள் சொற்பொழிவுகளை விரும்புவதில்லை,
இதைத்தான் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லப்படுவதையும் அவர்கள் விரும்புவதில்லை.
அவர்கள் இதையெல்லாம் பார்க்கிறார்கள். ஒரு நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய
அவசியம் ஏற்படுகிறது. பாப் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ள வழிமுறைகள், அதனை அவர்கள் மறைமுகமாகச்
செய்து கொள்வதற்கான உதவிகளைச் செய்து தருகின்றன. தான் செய்ய வேண்டியவற்றை வெளிப்படையாகச்
செய்ததால், கீதா பிரஸிற்குக் குறைந்தபட்சம் சில நேரங்களில் தன்னுடைய செயல்பாடுகளுக்கான
விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் எச்-பாப்-க்கு கிடைத்திருக்கும்
சாதகம் என்னவென்றால் - அது நேரடியாக யாரிடமிருந்தும் நிதியுதவி பெறுவதில்லை. ஆனால்
அது ஆளும் நிர்வாகத்தால் அதிக அளவிற்கு ஆதரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. முடிந்தவரை
அது மறைமுகமாக இருக்கவே முயல்கிறது - ஏனென்றால் தன்னை பாஜக அல்லது ஆர்எஸ்எஸ்சின் நீட்சி
என்று பிறர் காண்பதை அது விரும்புவதில்லை...
ஹர்ஷ் மாந்தர்: அது மார்வாடிகளைச்
சார்ந்து இருக்கவில்லை.
குணால் புரோஹித்:
ஆம். அது மார்வாடிகளைச் சார்ந்ததாக இல்லை. உண்மையாகச் சொல்வதென்றால் அது நன்றாக ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கிறது.
அதாவது இன்றைக்கு இந்தியாவில் எந்தவொரு கிராமத்தில் உள்ள எவரொருவராலும் எச்-பாப் நட்சத்திரமாக
எளிதில் மாறி விட முடியும். அவரது சாதி, பாலினம் முக்கியமில்லை. அவர்களின் பின்னணி
முக்கியமில்லை. அந்த வேலையைச் செய்வதற்கான விருப்பம் மட்டுமே அவரிடம் இருக்க வேண்டும்.
நான் இதனை எனது களப்பணியில் பார்த்திருக்கிறேன். இன்றைய இந்தியாவில் பிரச்சாரத்தை உருவாக்குவதில்
ஏற்பட்டிருக்கும் ஜனநாயகமயமாக்கலை நான் கண்டிருக்கிறேன்.
இங்கே நடப்பது என்னவென்றால் (அ) பிரச்சாரத்தை உருவாக்குவதில், தயாரிப்பதில் யார் வேண்டுமானாலும்
பங்கேற்கலாம் என்று அது முழுமையான ஜனநாயகக் களமாக இருக்கிறது (ஆ) புழக்கத்தில் இப்போது
இருக்கும் பிரச்சார வடிவங்களின் எண்ணிக்கை வியக்கத்தக்க அளவிற்கு அதிகரித்திருக்கிறது.
அவர்கள் இன்றைய உலகில் எந்த வகையிலான நபர்களை இலக்கு வைக்க
வேண்டும் என்பதை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றனர். அவர்களிடம் அந்தந்த
நபருக்கென்று ஒரு குறிப்பிட்ட வடிவம் இருக்கின்றது. அதனை ஒருவரின் வர்க்கம், அவரின்
சாதி, வயதுக்கு ஏற்றவாறு அவர்கள் வடிவமைத்துக் கொள்கின்றனர். இருபதாம் நூற்றாண்டுப்
பிரச்சாரங்களில் இதுபோன்றெல்லாம் நிச்சயம் இருந்திருக்காது. ஆனால் இப்போது அது நடக்கிறது.
ஹர்ஷ் மாந்தர்: அடிப்படையில்
இசை, கவிதை அல்லது மற்ற...
குணால் புரோஹித்:
இங்குதான் எச்-பாப் மற்றொரு சுவாரஸ்யமான அம்சத்தைக் கொண்டு வருகிறது என்று கருதுகிறேன்.
எச்-பாப்பைப் பற்றி உங்களிடம் கூறியதைப் போல, இன்றைய பிரச்சாரம் தொடர்ந்து வடிவம் மாறும்
உயிரினம் போல இருக்கிறது. எங்கே ஊடுருவ வேண்டுமோ, அதற்கு ஏற்ப அது தொடர்ந்து வெவ்வேறு
வடிவங்களை எடுத்துக் கொள்கிறது. புத்தகங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டீர்கள் - அதாவது
புத்தகங்கள், இசை, கவிதை... இன்றைய காலகட்டத்தில் வலைப்பதிவுகள் இருக்கின்றன. கடந்த
சில ஆண்டுகளாக சினிமாக்களும் உள்ளன. நாம் இப்போது இன்ஸ்டாகிராம் தலைமுறையை பார்த்து
வருகிறோம், இல்லையா? அண்டை நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளால், இந்த நாட்களில் ஜென்சி
தலைமுறையினரைப் பற்றி நாம் அதிகம் பேசி வருகிறோம். இந்தியாவில் இன்றைய ஜென்சி தலைமுறையினர்
இன்ஸ்டாகிராம், யூடியூபிற்குள்ளேயே மூழ்கிக் கிடக்கின்றனர். அங்கே எச்-பாப் ஊடுருவியிருக்கிறது.
ஹர்ஷ் மாந்தர்: ரீல்ஸ்
என்று கூறப்படுவது...
குணால் புரோஹித்:
ரீல்ஸ்.. ஷார்ட்ஸ் என்று கூறப்படும் குறுகிய வடிவ வீடியோக்கள் மேலும் ஒரு தளமாக இருக்கின்றன.
அங்கெல்லாம் எச்-பாப் நன்கு செழித்து வளர்ந்திருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து,
நமது மூளையைக் கசக்கி, அதை எவ்வாறெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைப் புரிந்து
கொள்வதற்கு முன்பாக, விரைவிலேயே எச்-பாப் தன்னை மாற்றியமைத்துக் கொள்ளும் வழியை - அதன்
முக்கிய நோக்கங்களுடன் செய்திகளை ஒன்றிணைத்து, மிகவும் ஈர்க்கக்கூடிய உள்ளடக்கத்தை
குறிப்பிட்ட வகை மக்களுக்காக உருவாக்கும் வழியைக் கண்டறிந்து விடுகிறது.
ஹர்ஷ் மாந்தர்: அப்படியானால்
அது உண்மையிலேயே அனைவரும் எடுத்தாளக் கூடிய வகையில் பரவலாக்கப்பட்டிருக்கிறதா அல்லது
உள்ளடக்கம், செய்திகள், அதன் பிரபலம் ஆகியவற்றின் மீது தாக்கத்தைச் செலுத்தும், கட்டுப்படுத்தும்,
ஆற்றல் மிக்க, கண்ணுக்குத் தெரியாத சக்திகள் ஏதேனும் இருக்கின்றனவா? அதற்குப் பின்னால்
சமூக ஊடக ஜாம்பவான்கள் யாரேனும் இருக்கிறார்களா? இதை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?
அது உண்மையிலேயே இயல்பாக வளர்ந்துள்ளதா?
குணால் புரோஹித்:
ஹர்ஷ்… இதில் இரண்டு பகுதிகள் இருப்பதாக நினைக்கிறேன். ஒன்று - குறிப்பிட்ட சித்தாந்தத்தின் மீது பற்று
கொண்ட ஒருவர் வந்து 'நான் இந்தச் சித்தாந்தத்திற்காக ஏதாவது செய்ய விரும்புகிறேன்.
எனது குறைந்தபட்சத் திறன்களைக் கொண்டு, நான் அதற்காக என்னவெல்லாம் செய்யலாம்? பாடல்
அல்லது ஒரு கவிதையாக அது இருக்கலாமா?' என்று கேட்பது… அந்தப் பிரபஞ்சத்தின் பகுதியாக
இருப்பது என்ற சித்தாந்த அர்ப்பணிப்பு ஒரு பகுதியாகும். ஆனால் இன்றைய இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் சமூக
ஊடகங்களில், எந்த வகையான உள்ளடக்கம் வெற்றிகரமாக இருக்கிறது என்பதைக் கவனித்துப் பார்த்து
வருகின்ற மற்றொரு வகையினரும் இருக்கின்றனர். அவர்களுக்கு ஹிந்துத்துவம், மோடி தொடர்பானவை,
முஸ்லீம்களுக்கு எதிரானவை போன்ற எதுவும் அதிக அளவில் பார்வைகளை, விருப்பங்களை, பகிர்வுகளை,
பணத்தைப் பெற்றுத் தருகின்றன.
ஹர்ஷ் மாந்தர்: பணம்…
குணால் புரோஹித்:
ஆமாம்.
ஹர்ஷ் மாந்தர்: அப்படித்தான்
அவர்கள் எடுத்துக் கொள்கிறார்களா...
குணால் புரோஹித்:
அதனாலேயே அவர்கள் அந்தப் பாதையில் செல்ல நினைக்கிறார்கள். பின்னர் அதில் இன்னும் அதிகமானோர்
இணைகின்றனர். இப்போதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் அல்லது பா.ஜ.க அல்லது பஜ்ரங்
தள், வி.எச்.பி போன்ற எந்தவோர் அமைப்பும் கிராமம் கிராமமாகச் சென்று 'இந்திய லட்சியம்'
அல்லது 'ஹிந்துத்துவ லட்சியம்' என்று பேசிக் கொண்டிருப்பதில்லை. திறமைக்கான எந்தவொரு
தேடலும் அங்கே தேவைப்படுவதில்லை. உண்மையில் நடப்பது என்னவெஎன்றால் - இந்த ஓட்டத்தில்
இணைந்து கொள்வதன் மூலம் பலன்களைப் பெற்றவர்கள், அந்த உலகத்தின் ஒரு பகுதியாக தாங்கள்
இருப்பதைத் தேர்வு செய்து கொள்கிறார்கள். இறுதியாக அவ்வாறு அந்த உலகின் பகுதியாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துக்
கொண்டவர்களில் குறிப்பிட்ட பகுதியினரை, ஆர்.எஸ்.எஸ் அல்லது பஜ்ரங் தள் அல்லது தங்கள்
பகுதிகளில் செல்வாக்குடன் இருக்கும் யாரோ ஒருவர் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.
ஹர்ஷ் மாந்தர்: தாக்கத்தை
உருவாக்குபவர்களாக…
குணால் புரோஹித்:
ஆம் தாக்கத்தை உருவாக்குபவர்களாக… அவர்களுக்கு அதற்குப் பிறகு எல்லா வகையான ஆதரவும்
கிடைக்கிறது. பணம் கிடைக்கிறது, அரசியல் நெருக்கம் கிடைக்கிறது. மரியாதை கிடைக்கிறது.
அந்தச் சங்கிலி இவ்வாறு செயல்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அது முற்றிலும் இயல்பானதா
அல்லது திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா என்று உங்களுக்குச் சொல்வது மிகவும் கடினம். உண்மையில்
இந்த எச்-பாப் குழுவினரின் தாக்கம் எங்கிருந்து
வருகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு, நடுநிலையான பாதை தேவைப்படும் - அது மிகவும்
சுவாரஸ்யமான பாதை என்றே கருதுகிறேன்.
ஹர்ஷ் மாந்தர்: அப்படியென்றால்
இப்போது நான் புரிந்து கொண்ட வரையில், அங்கே வெறுமனே ஆதரவளிப்பது என்று மட்டுமல்லாமல்,
அவர்களின் மதிப்பை உயர்த்திக் காட்டக்கூடிய மிகப் பெரிய சூழலும் இருக்கிறது. அவர்கள்
அதில் தங்களுக்கான இடங்களைக் கண்டறிந்து முன்னேறுகிறார்கள்.
இது அதன் உள்ளடக்கத்திற்கு என்னைக் கொண்டு வருகிறது. நீங்கள் இருவரும் அவர்கள் மக்களுடன்
எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பது பற்றிப் பேசியிருக்கிறீர்கள். உங்கள் இருவரின்
கவனமான ஆய்வுகளிலிருந்து, அவர்கள் எதைச் சொல்ல முயல்கிறார்கள் என்பது பற்றி இப்போது
பேசலாம் என நினைக்கிறேன். அதாவது, நீங்கள் சொன்னதைப் போல, கீதா பிரஸ் கீதையை விளக்குவதன்
மூலம் தனது பணியைத் தொடங்கியது. அதைத்தான் காந்திஜியும் விரும்பியிருப்பார் - அவரும்
அதைச் செய்திட முயன்றார். கீதையை அகிம்சைக்கான தீர்வு என்று அவர் விளக்கியது பற்றி
நம்மால் முடிவின்றி விவாதிக்க முடியும். கீதையைப் புரிந்து கொள்வதில் அவரும் ஆர்வத்துடனே
இருந்தார். கீதா பிரஸும் அதைத்தான் வெளிப்படையாகச் செய்து கொண்டிருந்தது. ஆனால் மதத்தின்
போர்வையில் இருந்த அது உண்மையில் என்ன சொல்ல முயன்றது? நமது பாட்டி தலைமுறையைச் சேர்ந்தவர்கள்
- அவர்கள் பார்த்த படங்கள் அனைத்தும் புராணப் படங்களாக மட்டுமே இருந்தன. அதனால்தான்
திரையரங்கிற்குள் நுழைவதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைத்தது. அந்தப் படங்கள் எதுவும்
வெறுப்பைத் தூண்டியதிவில்லை. கீதா பிரஸ் என்ன செய்தது? எச்-பாப்புடன் ஒப்பிடும்போது,
அது மிகவும் வெளிப்படையாகவே
இருக்கிறது. கீதா பிரஸ் எந்த அளவிற்கு நேரடியாக ஹிந்து மத நம்பிக்கையை வெளிப்படுத்தியது,
எந்த அளவிற்கு ஹிந்துத்துவத்தை வெளிப்படுத்தியது?
அக்சய முகுல்: இரண்டையும்
என்றுதான் நான் சொல்வேன். ஹிந்து மத நம்பிக்கையை மட்டும் என்று நிச்சயம் கூற மாட்டேன்.
வேண்டுமானால் ஹிந்து மத நம்பிக்கையின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தை - ஹிந்து மத நம்பிக்கையின்
மிகப் பிற்போக்குத்தனமான வடிவத்தை அது வெளிப்படுத்தியது
என்று வேண்டுமானால் கூறுவேன். இப்போதும்கூட கல்யாண் இதழ் - இந்த விரதத்தை, அந்த விரதத்தை
எந்த நாளில் மேற்கொள்ள வேண்டும், ஆண் குழந்தை பிறக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றியே பேசி
வருகிறது. அது அவர்களின் ஒரு பக்கம். மாபெரும் கதைகள், புராணக் கதைகளே… மக்களை அவர்களை
நோக்கிக் கவர்ந்திழுத்தன. அவர்களைச் சாதாரண ஹிந்துக்கள் மத்தியில் பிரபலப்படுத்தின.
அவர்களின் முக்கிய ஊடகமான கல்யாணின் முதல் இதழில் வெளியான தலையங்கத்தில் கீதா பிரஸ்
என்ன செய்யப் போகிறது என்பதை அவர் விளக்கியிருக்கிறார். அவர்கள் அந்தத் தலையங்கத்திலிருந்து
உண்மையில் ஓர் அங்குலம் கூட நகரவில்லை. ஹனுமான் பிரசாத் போதார் அமைத்துக் கொடுத்த முன்மாதிரிதான்
இன்னும் அவர்களுக்கு முதன்மையானதாக இருக்கிறது.
ஹர்ஷ் மாந்தர்: அதுவே அவர்களின்
இயல்பு…
அக்சய முகுல்: ஆம்… அதுதான்
அவர்களின் இயல்பு. ஹிந்து மதத்திற்கான பெரும் நெருக்கடி பற்றி பேசுகின்ற அவர், சங்க
பலம் இல்லாததே பிரச்சனை என்கிறார். அதாவது ஒற்றுமையின் பலம் நம்மிடம் இல்லை என்கிறார்.
இஸ்லாமை எடுத்துக்காட்டாகக் காட்டி ‘பாருங்கள், இஸ்லாம் ஒரே குரலில் பேசுகிறது. கிறிஸ்தவமும்
ஒரே குரலில்தான் பேசுகிறது. பல குரல்களில் பேசுவதுதான் ஹிந்து மதத்தில் உள்ள பிரச்சனையாகும். நம்மிடையே
பல நம்பிக்கைகள், பல பிரிவுகள், பல குருக்கள் உள்ளனர். இந்தப் பிரச்சனையை நாம் தீர்த்துக்
கொள்ள வேண்டும்’ என்கிறார்.
ஹர்ஷ் மாந்தர்: மற்றொரு
தரப்பினரோ அதைத்தான் ஹிந்து மதத்தின் பலம் என்கிறார்கள்.
அக்சய முகுல்: இல்லை…
அவர் அதனை நெருக்கடி என்று கருதுவதாலேயே கீதா
பிரஸ் அந்த முயற்சியை மேற்கொள்கிறது. அதைத் தொடர்கிறது. அது ஒருபோதும் மற்ற பிரிவினருடன்
சண்டையிடுவதே இல்லை. ஹிந்துக்களின் ஒரே செய்தித் தொடர்பாளராகத் தன்னை மாற்றிக் கொள்ள
முயன்ற காரியம் இன்றளவிலும் தொடர்கிறது. வெளியீட்டிற்கு வந்து அல்லது வெளிப்படையாகத்
தெரிய வந்து ஐந்து ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், 1932ஆம் ஆண்டில் அவர்கள் முதல் நெருக்கடியை
எதிர்கொண்டனர். அது சாதி தொடர்பான பிரச்சனை. அப்போதுதான் பூனா ஒப்பந்தம் நடக்கிறது.
காந்தி அவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர் அவர்களை ஆசீர்வதித்ததைக் காண
முடிகிறது. இரண்டாம் ஆண்டிலேயே எழுத்துப்பூர்வமான செய்தியொன்றை கீதா பிரஸுக்குக் காந்தி
அனுப்பியிருந்தார். அவர் எப்போதும் போதாரிடம் ‘கடவுளின் வேலையை நீங்கள் செய்கிறீர்கள்’
என்றே கூறி வந்தார். ஆனால் தன்னுடன் சிறப்பு உறவை ஏற்படுத்திக் கொடுத்து, போதாரை தன்னுடைய
மகனைப் போல நடத்தி வந்த காந்தியை 1932ஆம் ஆண்டில் அவர்கள் தாக்கி எழுதத் தொடங்கினர்.
எதற்காக? சமபந்தி விருந்து, ஆலய நுழைவிற்காக…
ஹர்ஷ் மாந்தர்: தலித்துகளின்
ஆலய நுழைவிற்காக…
அக்சய முகுல்: ஆம். தலித்துகளுக்காக...
சித்தாந்த ரீதியாக அந்த விஷயத்தில் அவர்களுக்கிடையே மிக ஆழமான பிளவு இருந்தது. அந்தப்
பிளவு நாற்பதுகளில் மேலும் தீவிரமானதைக் காணலாம். காந்தியை என்ன செய்வது என்று அப்போது அவர்களுக்குத்
தெரியவில்லை. இந்த மனிதரை இப்போது என்ன செய்வது என்று போதார் கேட்கிறார். காந்தி எல்லா
இடங்களுக்கும் செல்கிறார்... முஸ்லீம்கள் நெருக்கடியில் இருப்பதாக நினைக்கும் இடங்களுக்கு
மட்டும் காந்தி செல்கிறார். நிலைமை மிக மோசமாகி 1948இல் காந்தி படுகொலை செய்யப்பட்டு
ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போது, அது முடிவுக்கு வந்தது. கீதா பிரஸின் நிறுவனர்,
ஆசிரியர் ஹனுமான் பிரசாத் போதார் என்று அந்த இரண்டு பெரிய மனிதர்களையும் கைது செய்ததாகச்
சொல்ல மாட்டேன் - ஏதோவொரு வகையான விசாரணைக்காக அவர்கள் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆர்பிஜி குடும்பத்தைச் சேர்ந்த பத்ரிதாஸ் கோயங்கா - சர் பத்ரிதாஸ் கோயங்கா - ‘ஏதாவது
செய்யுங்கள். நேரு உள்ளிட்ட மற்றவர்களிடமும் உங்களுக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது’
என்று ஜி.டி.பிர்லாவுக்கு எழுதினார். அதற்குப் பிர்லா ‘இல்லை, அவர்கள் சனாதன தர்மத்தைப்
பின்பற்றாமல் சாத்தானின் தர்மத்தையே பின்பற்றினார்கள். அதனால் அவர்களுக்கு நான் உதவப்
போவதில்லை" என்றார். அந்தக் கோணம் ஒருபோதும் விசாரிக்கப்படவே இல்லை என்பது ஆவணங்களைப்
பார்க்கும் போது தெரிய வரும். காந்தியின் படுகொலைக்கு முன்பு போதார் தில்லியில் இருந்தார்.
ராமர் சிலை அயோத்தியில் தோன்றியதிலும் அவருக்குத் தொடர்பு
இருப்பதைக் காணலாம். 1949-க்குப் பிறகு அந்தச் சிலைகள் தோன்றிய பின்னர், கீதா பிரஸே
ராமர் கோவிலுக்கான முதல் நிதியை வழங்கியது. அந்த நாட்களிலேயே 1000 ரூபாய் என்ற பெருந்தொகையுடன்
அந்த உதவி தொடங்கி வைக்கப்பட்டது. அவர்கள் அதை மிகச் சிறப்பாகத் தொடர்ந்து செய்தனர்.
பீர்பாலக், பீர்பாலிகை, ஆதர்ஷ்நாரி போன்ற சிறு வெளியீடுகள் அவர்களிடம் இருந்தன. ஆரம்பத்தில்
உங்களிடம் சொன்னதைப் போல, பெண்களுக்கு எதிரான அவர்களின் விடாப்பிடியான எண்ணங்கள் -
அடக் கடவுளே, 1926இல் அவர்கள் ஒரு சிற்றேட்டை வெளியிடுகிறார்கள். அது குறித்து விரிவாகக்
கூற விரும்பவில்லை. 'ஸ்திரி தரம் பிரஷ்னோத்திரி' என்ற அந்த இரண்டு பக்கச் சிற்றேடு
புத்திசாலி சாவித்திரிக்கும், அப்பாவியான சரளாவிற்கும் இடையில் நடைபெறும் உரையாடல்
என்ற வகையில் எழுதப்பட்டிருந்தது. ஹிந்தியில் இருந்த அந்தப் புத்தகம் முழுக்க, ஒரு
பெண்ணின் கடமைகள் என்ன என்று அவர்கள் இருவரும் பேசிக் கொள்கிற உரையாடல் மட்டுமே இடம்
பெற்றது. அந்த உரையாடலின் போது, முதலில் தந்தை, பிறகு சகோதரன், கணவன், மகன் என்று பெண்
என்பவள் முழுக்க ஆணைச் சார்ந்தவள் என்கிறாள். இதனை அவர்கள் மிகச் சிறப்பாகச் செய்து
வருகிறார்கள்.
ஹர்ஷ் மாந்தர்: அவர்களின்
திட்டம், அதாவது அவர்களின் எதிர்ப்பு முக்கியமாக இரண்டு அல்லது மூன்று விஷயங்களை அடிப்படையாகக்
கொண்டது என்கிறீர்கள். நீங்கள் சொல்வதைப் புரிந்து கொண்ட வரையில், ஒன்று - சாதியில்
சமத்துவம்; இரண்டாவது, சககுடிமக்களான முஸ்லீம்கள் மீது அவர்களுக்கிருந்த வெறுப்பு; மூன்றாவது பெண்களுக்கான சமத்துவம். இவைதான்
அந்த எதிப்பிற்குக் காரணமாக இருந்தது என்று சொல்வீர்களா?
அக்சய முகுல்: ஆமாம்,
முஸ்லீம்களைப் பொறுத்தவரை அந்த வெறுப்பு பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது. அவர் ஒரு
சாதாரண ஃபக்கீராக இருக்கலாம் அல்லது அரக்கு வேலை அதாவது பெண்கள் அணியும் வளையல்களைச்
செய்பவராக இருக்கலாம். டாங்கா ஓட்டுநராக இருக்கலாம், அரசியல்வாதியாக இருக்கலாம். பரந்த
முஸ்லீம் சமூகத்தின் அனைவர் மீதும் அவர்களின் வெறுப்பு வெளிப்பட்டது, பசுக்கள் விஷயத்திலும்
அப்படித்தான். மாதா உள்ளிட்ட அனைத்திற்குமான குறியீடாக மாறிய பசு, முஸ்லீம்களை எதிர்ப்பதற்கான
குறியீடாகவும் அவர்களால் பயன்படுத்தப்பட்டது.
அவர்கள் வெளியிட்டு வந்த 'காயங்க்' இதழைப் பார்த்தால் - ஆண்டுதோறும் ஓர் இதழை அவர்கள்
வெளியிட்டார்கள், இப்போதும் அதனை வெளியிடுகிறார்கள் - அது கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள்
கொண்ட புத்தகம். ஒவ்வோர் ஆண்டும் ஆண்டின் தொடக்கத்தில் அதனை வெளியிட்டு வருகிறார்கள். பசுக்கள், பெண்கள்
பற்றி அவர்கள் 'காயங்க்' இதழின் இரண்டு பதிப்புகளை வெளியிட்டுள்ளனர். செவ்வியல் படைப்பு
போல அவை இப்போதும் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே உங்களிடம் சொன்ன 'ஸ்த்ரீ
தரம் பிரஷ்னோத்திரி' 1926 முதல் - கடவுளுக்கே வெளிச்சம், 17 அல்லது 18 லட்சம் பிரதிகள்
விற்றிருக்கிறது. அதன் விலை இப்போதும் 4 ரூபாய் அல்லது 7 ரூபாய்தான். இப்போதும் அந்தப்
புத்தகம் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது என்றால், யாரோ அதை எங்கோ வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்
என்றே பொருள்படுகிறது. ஒரு பெண் என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பது குறித்து
அவர்கள் வெளியிடும் கருத்துகளால் யாரோ ஒருவர் எங்கோ பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.
குணால் புரோஹித்:
ஆனால் உண்மையில்… மன்னிக்கவும், இதைக் கேட்கலாமா - 'லவ் ஜிஹாத்' பற்றிய உரையாடலை எப்போதாவது,
மறைமுகமாகவாவது அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்களா?
அக்சய முகுல்: ஆம். குறிப்பிட்டிருக்கிறார்கள்.
'லவ் ஜிஹாத்' அல்லது அவர்கள் அதை எப்படி அழைத்தாலும் சரி, அதற்கு எதிரான அனைத்து வாதங்களும்
ஹிந்து சட்ட மசோதாவிலிருந்தே தொடர்கின்றன. ஹிந்து சட்ட மசோதா மீது அவர்களுக்கிருந்த மிகப்பெரிய அச்சங்களில் ஒன்று
- முதலாவதாக அவர்கள் சொல்கிறார்கள், ‘நான் என் மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும்
போது, அவளுக்கு எல்லாவற்றையும் கொடுத்து விட்டேன். இனிமேல் அவளுக்கு எந்த உரிமைகளும் கிடையாது’
இது ஒரு வகையான வாதம். மற்றொரு வாதம் என்னவென்றால், முஸ்லீம்கள் இயல்பிலேயே காம உணர்வு
கொண்டவர்கள். எங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொண்டு, அவர்கள் எங்கள் வீட்டுச் சமையலறையில்
மாட்டிறைச்சியைச் சமைப்பார்கள். எங்கள் மகள்களை விவாகரத்து செய்துவிட்டு எங்கள் சொத்துக்களுடன்
ஓடி விடுவார்கள். இதுதான் அவர்களின் இன்னொரு வாதம். லவ் ஜிஹாத்தை எடுத்துப் பார்த்தால்,
அதுவும் ஏறக்குறைய அப்படித்தான். ஆமாம், மிகச் சரியாகச் சொன்னீர்கள். தங்களை எவ்வாறு
புதுப்பித்துக் கொள்வது என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். மீண்டும்
மீண்டும் அதே விஷயத்துடன் அவர்கள் வருகிறார்கள். அதன் மையக்கருத்து முஸ்லீம் எதிர்ப்பு
மட்டுமே. அதனைப் பல வழிகளில் வெளிப்படுத்தினாலும்,
மையக்கருத்து மட்டும் அப்படியேதான் இருக்கும்.
ஹர்ஷ் மாந்தர்: அப்படியானால்,
குணால் நான் புரிந்து கொள்வது என்னவென்றால், கீதா பிரஸின் மையத்தில் ஆர்.எஸ்.எஸ்சின்
அடிப்படைக் கொள்கை இருந்தது. அதனை மதப்பற்று, மூடநம்பிக்கை, ஆணாதிக்கம், பிற்போக்குத்தனம்,
சாதியப் பாகுபாடுடனான ஹிந்து மதத்தின் வடிவத்தில் அது மறைத்து வைத்துக் கொண்டது. இல்லத்தரசிகள்
படிக்கப் போகிறார்கள், வீட்டிற்குள் வருவதாக இருந்ததால் அதில் கண்ணியம், நாகரிகம் என்ற
போலித் தோற்றம் இருந்தது. எச்-பாப்பால் இப்போது அதுபோன்ற நிலைமை முற்றிலுமாக மாறிவிட்டது.
எச்-பாப்பின் மையக்கருத்து என்ன, அதன் உள்ளடக்கம் என்ன? அதைக் கொஞ்சம் விளக்கிக் கூறுவீர்களா?
அது குறித்து மிகத் தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.
குணால் புரோஹித்:
ஹர்ஷ், அது மிகவும் சுவாரஸ்யமானது. அதாவது ஆர்.எஸ்.எஸ் பற்றி நினைக்கும் போது - அதன் உள்ளடக்கத்தில்
உள்ள சிலவற்றை விவாதித்து ஆராய்வதற்கு முன்பு, உங்களை இந்த விஷயத்திற்கு மீண்டும் அழைத்துச்
செல்ல விரும்புகிறேன்., இந்த விஷயத்தில் குறிப்பாக கலாச்சாரத்தைப் பற்றி சங்கத்தின் நிலைப்பாடு
என்ன என்பதை கோல்வால்கர் மிகத் திட்டவட்டமாக எழுதியிருக்கிறார். அதாவது அரசியல் தலைவர்கள்
வரலாம், போகலாம், அரசியல் கட்சிகள் வரலாம், போகலாம், ஆனால் அவர்கள் அனைவரைக் காட்டிலும்
நீடித்து நிலைத்து நிற்கும் கலாச்சாரத்தை உருவாக்கவே நாம் முயல வேண்டும். இன்று நமது
சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்ட பிரதமர் இருக்கலாம், நமது சித்தாந்தத்தை நம்புகின்ற
ஒரு கட்சி இன்றைக்கு இருக்கலாம். இவர்கள் இருவரும் ஒருநாள் அதிகாரத்திலிருந்து அகற்றப்படலாம்.
அதனால்தான் யார் ஆட்சிக்கு வந்தாலும் நிலைத்திருக்கக் கூடிய கலாச்சார உணர்வை உருவாக்க
நாம் விரும்புகிறோம்.
ஹர்ஷ் மாந்தர்: அப்படியானால்,
அதனை எளிமையான வார்த்தைகளில் சொல்வதென்றால்,
பாஜகவை வாக்களித்து அகற்றி விடலாம்; ஆர்.எஸ்.எஸ்சை அவ்வாறு அகற்ற முடியாது.
குணால் புரோஹித்:
எச்-பாப் ஏன் இப்படிச் செய்கிறது என்பதைப் புரிந்து கொள்ள நான் பயன்படுத்திக் கொள்ள
விரும்பும் கட்டமைப்பு இதுதான் என்று நினைக்கிறேன். நம்மில் பலரிடமும் ஆர்.எஸ்.எஸ்
என்பது அரசியல் அதிகாரத்துடன் தொடர்புடையது என்ற தவறான எண்ணம் இருக்கிறது. அதனால்தான்
தேர்தல் முடிவுகள், ஏற்ற இறக்கங்களுடன் அந்த அமைப்பை நாம் தொடர்புபடுத்திப் பேசுகிறோம். ஆனால் அதன் கலாச்சாரப்
பகுதியே மிக, மிக முக்கியமானது என்றே நான் கருதுகிறேன். எச்-பாப்பின் உள்ளடக்கத்தைப்
பொறுத்தவரை அதில் சில கருப்பொருள்கள் உள்ளன. அந்தக் கருப்பொருள்கள் அக்சய் இப்போது
பேசியவற்றையே அதிகம் ஒத்திருக்கின்றன. முஸ்லீம்களைப் பற்றி அவர் கூறிய அனைத்தும் உண்மையில்
எச்-பாப்பின் மையமாக அமைந்துள்ளன. அது முஸ்லீம்களின் மக்கள் தொகையாக இருக்கலாம், அல்லது
முஸ்லீம்கள் உருவாக்குகின்ற மக்கள்தொகை குறித்த அச்சுறுத்தலாக இருக்கலாம்.
ஹர்ஷ் மாந்தர்: அதைத்தான்
பிரதமர் பேசத் தொடங்கினார்…
குணால் புரோஹித்:
அதைத்தான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். ஊடுருவல்காரர்களைப் பற்றி அவர் பேசுகிறார்,
சில மாநிலங்களில் பழங்குடியினர் எப்படியெல்லாம் ஆசை காட்டப்பட்டு மதம் மாற்றப்படுகிறார்கள்
என்பது பற்றியெல்லாம் பேசுகிறார். ஹிந்துப் பெண்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்று
லவ் ஜிஹாத் பற்றிய உரையாடல் அவர்களிடம் இருக்கிறது. அதாவது 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா
ஓர் இஸ்லாமிய நாடாக மாறப் போகிறது என்ற பேச்சு இருக்கிறது. இந்த மூன்றும்தான் அதன்
மையத் தூண்கள். எச்-பாப் மேலும் என்ன செய்ய முயல்கிறது என்றால், சுற்றியிருக்கும் அனைத்தையும்
பயன்படுத்திக் கொள்கிறது. அவற்றை இந்த மூன்று தூண்களில் ஏதேனும் ஒன்றில் பொருந்தச்
செய்து விட முயல்கிறது.
ஹர்ஷ் மாந்தர்: அவற்றை
முன்னெடுத்துச் செல்ல…
குணால் புரோஹித்:
அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கு, இதை நாங்கள் முன்பே கூறியுள்ளோம் என்பதைத் தொடர்ந்து
வலியுறுத்துவதற்குமே அது செய்யப்படுகிறது. எனவே சுற்றியுள்ள அனைத்தும் அதில் பொருத்திக்
கொள்வதற்காகத் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சட்டகத்திற்குள் இங்கிலாந்து,
அமெரிக்காவில் நடப்பவற்றிலிருந்து, உங்கள் தெருவில் நடப்பவை வரை அனைத்தையும் பொருத்திப்
பார்க்க நீங்கள் முயன்று பார்க்கலாம். உண்மையான எடுத்துக்காட்டுகளைச் சொல்வதானால்
- வேறொரு கணக்கின் மூலம் இன்ஸ்டாகிராமில் அவர்களைப் பின்தொடர்வதால், 'ஓ, தி யூகே...'
என்பன போன்ற பல பதிவுகள் வருவதைப் பார்த்திருக்கிறேன்.
ஹர்ஷ் மாந்தர்: இப்போது
அது பெரிய விஷயமாகிவிட்டது.
குணால் புரோஹித்:
பெரிய விஷயமாகிவிட்டது. சர்வதேச அளவில் பாருங்கள். உங்களிடம் நாங்கள் கூறிய அதே அச்சுறுத்தல்களைப்
பற்றி அவர்கள் பேசுகிறார்கள். நிலைமை எந்த அளவிற்குச் சென்று விட்டது என்றால் - இந்த
விஷயத்தில் அந்த அமைப்புகள் இப்போது அதிகம் திறமையுள்ளவையாகி விட்டன. ஒவ்வொரு நகரத்திலும்,
எடுத்துக்காட்டாக நான் வசிக்கின்ற மும்பையில் ஒவ்வொரு புறநகர்ப் பகுதியிலும், அதாவது
பாந்த்ரா இருக்கிறது, குர்லா இருக்கிறது, இப்போது சமூக ஊடகங்களில் ஒவ்வொரு புறநகர்ப்
பகுதிக்கும் என்று தனியாக விஎச்பி, பஜ்ரங்தள் பக்கம் இருக்கிறது. அவர்கள் உங்களைப்
போன்று விஷயங்களைப் பகிர்வதாக இருந்தால் அது
சரிதான்… பரவாயில்லை… ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா, தெருவில் என்ன நடந்தாலும்,
அது அவர்களின் பக்கத்தில் பதிவிடப்படுகிறது. 'பாருங்கள், இந்த முஸ்லீம் தன்னுடைய பைக்கைக்
குறுக்கே நிறுத்தி ஒரு ஹிந்துக் குடும்பம் வெளியே செல்வதைத் தடுக்க முயல்கிறார்' என்று
அவர்கள்... இதுபோன்ற மிகச் சாதாரணமான விஷயங்களையே பதிவிடுகின்றனர். அந்தத் தெருவில்
நடக்கும் விஷயத்தின் எதிரொலி நாடு முழுக்க, இறுதியில் உலகம் முழுக்கப் பரவுகிறது. அவர்கள்
ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அதில் தகவல்களை உள்ளீடு செய்தால் மட்டும்
போதும், அந்தக் கட்டமைப்பு அதிலிருந்து மக்களைப் பிளவுபடுத்தும் வகையிலான உள்ளடக்கத்தை
உருவாக்கித் தரும். மக்களைத் தூண்டிவிடும் விஷயங்களை உருவாக்கும். அவை மேலும் வலுப்படுத்தப்படும்.
ஹர்ஷ், அவர்கள் இதைச் செய்வதற்கான காரணம் - அடிப்படையில் எச்-பாப்பின் நோக்கம் - இத்தகைய
மோசமான உரையாடலைத் தொடர்ச்சியாக 24/7 மணி நேரம்,
365 நாட்களுக்குத் தொடர்ந்து ஒலிக்க வைப்பதுதான். விளைவாக கலவரங்கள் எதுவும் அவர்களுக்குத் தேவைப்படுவதே இல்லை,
கும்பல் படுகொலைகள் தேவைப்படுவதில்லை, ஏன் பிரதமரே நேரில் வந்து, வழக்கமாக அவர் பேசும்
பேச்சுகளைப் பேச வேண்டிய அவசியமும் இல்லை.
அவர் அவ்வாறு செய்ய வேண்டிய தேவையே இல்லை. இந்தக் கடைசிப் பகுதியை குறிப்பாகச் சொல்வதற்கான
காரணம் என்னவென்றால், மக்களவைத் தேர்தலின்போது வெறுப்புப் பேச்சுகளை அவர் பேசி வந்த
வேளையில், நான் அங்கே களத்தில்தான் இருந்தேன். அங்கிருந்த சிலரிடம்
நான் அப்போது பேசினேன். பிரதமர் இவ்வாறு பேசுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்
என்று அவர்களிடம் கேட்டேன். ‘இது என்ன எங்களுக்குத் தெரியாததா? இதில் என்ன புதிதாக
இருக்கிறது?’ என்று அவர்கள் திரும்பக் கேட்டனர். அதுபோன்ற வெறுப்புப் பிரச்சாரம் ஏற்கனவே
அவர்களிடம் சென்றடைந்து விட்டது. அந்தப் பிரச்சாரத்தின் பெரும்பகுதி ஏற்கெனவே அவர்களிடம்
சென்று சேர்ந்து விட்டது. எனவே அந்தப் பிரச்சாரத்தின் நோக்கம் - எதிரே நிற்கும் முஸ்லீம்
ஒருவரைப் பார்க்கும் போது, அவர் முற்றிலும் வேறுபட்டவர் என்ற எண்ணத்தை வலுப்படுத்தும்
வகையிலான உள்ளடக்கத்துடன் இருக்கும் உலகை உங்களிடம் உருவாக்குவதுதான்.
ஹர்ஷ் மாந்தர்: நீங்கள்
கவலைப்படுகிறீர்கள்...
குணால் புரோஹித்:
பேருந்தில் அருகில் அமர்ந்திருக்கும் ஒருவராக அந்த முஸ்லீமைக் கருதுவதில்லை. எச்-பாப் கலாச்சாரம் அன்றாடம் உங்களுக்காகத்
தொடர்ந்து அந்த மனிதரைப் பற்றி கட்டமைத்துக் கொடுக்கும் ‘உங்கள் வீட்டைக் கைப்பற்றிக்
கொள்ளப் போகின்றவர், இஸ்லாமிய நாட்டை உருவாக்கப் போகின்றவர், உங்கள் குடும்பத்திற்கு
அச்சுறுத்தலாக இருக்கப் போகின்றவர்’ என்ற சித்திரத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அதனால்தான், வெறுப்புப் பேச்சைக் காட்டிலும் எச்-பாப் கலாச்சாரத்தைக் கண்காணிப்பதே
மிக முக்கியமான வேலை என்கிறேன். ஏனென்றால், வெறுப்புப் பேச்சு வெளிப்படையாகவே இன்னும்
நடக்கிறது. எனவே அதனைக் கண்காணிப்பது எளிது. அது பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் இருக்கிறது.
ஹர்ஷ் மாந்தர்: மறைமுகமாக
இருக்கிறது.
குணால் புரோஹித்:
அரசியல் உள்ளடக்கத்தை உணராமால், அதனை நுகரும் அளவிற்கு ஆழ்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக
அது இருக்கிறது.
ஹர்ஷ் மாந்தர்: நமது சமூகத்தின்
சீரான, தீவிர மாற்றத்தில் கீதா பிரஸ், எச்-பாப் ஆகியவற்றின் பங்களிப்பு முக்கியமானதாக
இருந்திருப்பதையே நாம் இப்போது கண்டு வருகிறோம். ஹிந்துக்களின் இதயங்களை, மனங்களைத்
தீவிரமயப்படுத்திய அந்தச் செயல்முறை ஆற்றல் மிக்க, பயனுள்ள, ஆக்கப்பூர்வமான ஊடகங்கள்
மூலம் நிறைவேற்றப்படுவதை இப்போது நம்மால் காண முடிகிறது. முற்போக்கான தொடர்பாடல்களுக்கு
என்ன ஆனது, மதம் உண்மையில் என்ன போதிக்கிறது என்பது குறித்து மதநம்பிக்கை கொண்டவரிடத்தும்
இருந்த உரையாடலுக்கு என்ன ஆனது? இதுபோன்றதொரு சூழலில் அது எங்கே தொலைந்து போனது? என்னென்ன
மாற்றங்களையெல்லாம் நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்விகளுக்கே அது என்னைக் கொண்டு
செல்கிறது. அதாவது, அந்த விஷயத்தில் எனக்குச் சில கருத்துகள் தேவைப்பட்டன...
அக்சய முகுல்: விவாதங்களில்
முற்போக்கு விழுமியங்கள் ஆதிக்கம் செலுத்திய ஒரு காலம் இருந்ததைத் தவிர, வேறு எதுவும்
நடக்கவில்லை என்ற கருத்துடன் ஒருவிதமான முரண்பாடு இருப்பது உங்களுக்குத் தெரியும்….
நாடு இப்படித்தான் இருக்கும் என்று நம்மையே நாம் நம்ப வைத்துக் கொண்டோமா என்று எனக்குத்
தெரியவில்லை. முதல் இருபது ஆண்டுகளைப் பார்க்கும் போது - காந்தி 1948இல் படுகொலை செய்யப்படவில்லை என்றால்
இவர்கள் இன்னும் முன்னதாகவே ஆட்சிக்கு வந்திருப்பார்கள் என்ற கோட்பாடு என்னிடம் இருக்கிறது.
அதன் மீது எனது நண்பர்களுக்கும் நம்பிக்கை
இருக்கிறது. அவர்கள் 60களின் நடுப்பகுதிக்குள் மீண்டும் புழக்கத்திற்கு வந்து விட்டதைக்
காண முடிகிறது.
இதையெல்லாம்கூட மறந்து விடுங்கள்… ஹிந்து மகாசபையின்
1951ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தைப் பார்த்தால், உங்களிடம் நிச்சயம் அதிர்ச்சி ஏற்படும்.
அப்போது சாவர்க்கர் அதிகம் விரும்பப்பட்ட பேச்சாளராக இருந்தார். பேசுவதற்காக அவரை எங்கு
அழைத்தாலும், அவரது தங்குமிடச் செலவுகளுக்குப் பணம் தர வேண்டும் என்று கூறப்பட்டது.
அதன் காரணமாக - அவரைப் பேச அழைப்பதற்குத் தேவைப்பட்ட பணத்திற்காக, ஒவ்வொரு துண்டுப்
பிரசுரமும் ஐந்து பைசா அல்லது இரண்டு பைசாவுக்கு விற்கப்பட்டது. அப்போதே அப்படியொரு
நிலைமை இருந்திருக்கிறது என்றால், அங்கே ஏதேனும் வருத்தம் இருந்தது என்று உங்களுக்குத்
தோன்றுகிறதா? எனக்கு அது தெரியாது - ஒருவேளை நாம் வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டதில்,
தவறிழைத்து விட்டோமோ என்னவோ!
ஹர்ஷ் மாந்தர்: ஆமாம்,
தகவல் தொடர்பு முறையின் ஒரு பகுதியாக அது இன்னும் இருந்து வருகிறதா என்று நீங்கள் கேட்க
வருவதாகவே நினைக்கிறேன். நான் அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள முயல்கிறேன். மீண்டுமொரு
முறை உங்களிடம் கேட்கிறேன். முற்போக்காளர்கள், ஒழுக்கசீலர்கள் - மத ஈடுபாடுடையவர்களையும்
அதில் சேர்த்துக் கொள்ளலாம்…. ஆர்.எஸ்.எஸ் வெற்றி பெற்ற விதத்தைப் பார்க்கும் போது,
இவர்கள் எல்லோரும் மக்களுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதில் தோல்வியடைந்தார்களா
அல்லது தொடக்கத்திலிருந்தே நமது சமூகத்தில் அவர்களுக்கான அடித்தளமே இருக்கவில்லையா?
அப்படித்தான் நான் நினைக்கிறேன்...
அக்சய முகுல்: நாம் சோம்பேறிகளாகி
விட்டோம். அப்படி நினைத்து ஏமாந்து போனோம்... என் தந்தை இதை அடிக்கடி சொல்வார் - மதவெறி,
முஸ்லீம்கள் அல்லது பெண்கள் அல்லது இது போன்ற எது பற்றியும் பேசியதை அந்தத் தலைமுறையில்
எவரும் ஒருபோதும் கேட்டதே இல்லை. ஆனால் அவ்வாறு நடந்து கொண்டுதான் இருந்தது. அவர்கள் மக்களுடன் தொடர்பில்
இருந்தார்களா என்பதுதான் இங்கே எழுப்பப்பட வேண்டிய கேள்வி. நாடு சரியான பாதையில் செல்லவில்லை
என்று நாம் உறுதியாக நம்பினோம். முஸ்லீம்கள் வெளியேறி விட்டார்கள் அல்லது வேறு என்னவெல்லாமோ
நடந்து விட்டது. அந்த வேலையில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டவாறே இருந்தார்கள்.
ஹர்ஷ் மாந்தர்: குணால்,
நீங்கள் எங்களைக் காட்டிலும் வயதில் மிகவும் இளையவர். சற்று பிந்தைய காலகட்டத்தில்
நீங்கள் இந்தியாவைப் பார்த்திருக்கிறீர்கள். நான் சொல்ல, கேட்க விரும்பியது - அதாவது,
நம்மிடம் ஏன் கவர்ந்திழுக்கக்கூடிய பாடல்கள் இல்லை? புதிய சமூகத்தைப் பற்றி அழகான பாடல்கள்
ஏதோவொரு வடிவத்தில் இருந்தது இன்னும் எனது நினைவில் இருக்கிறது. அதுபோன்ற பாடல்களை
நீண்ட தூரப் பயணங்களில் நாம் ஏன் கேட்பதில்லை? சமூகம் படிப்படியாகத் தீவிரமயமாக்கப்பட்டதால்
இதுபோன்ற கலாச்சார வெளிப்பாடுகள் நிகழவில்லையா, அல்லது இதுபோன்ற கலாச்சார வெளிப்பாடுகள்,
முற்போக்கு கலாச்சார, ஒழுக்கமான கலாச்சார வெளிப்பாடுகள் இல்லாததே தீவிரமயமாக்கலை எளிதாக்கிக்
கொடுத்திருக்கிறதா - இதில் எது முதலில் என்பது உண்மையில் மிகவும் கடினமான கேள்விதான்.
கடினமான கேள்விதான் ஆனால்...
குணால் புரோஹித்:
ஹர்ஷ், இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், கடந்த காலம் குறித்து… பாதிக்கப்பட்டவர்கள்
என்ற உணர்வை நம்மிடையே உணர்வுப்பூர்வமாக உருவாக்குகின்ற அதே வேளையில், நம்மைப் பற்றி
நாமே மிக நன்றாக உணருமாறும் மாற்றப்பட்டிருக்கிறோம். கடந்த காலம் மிகப் பயங்கரமானது,
நாம் நிறைய துயரப்பட்டிருக்கிறோம் என்று தொடர்ந்து நம்மிடம் சொல்லப்படுகிறது.
ஹர்ஷ் மாந்தர்: முஸ்லீம்
காலகட்டம், காங்கிரஸ் காலகட்டம் எனும் இரண்டு கடந்த காலங்களுமே பயங்கரமானவை… சரிதானா?
குணால் புரோஹித்:
ஆமாம். அதே நேரத்தில் நாம் சாதித்திருக்கிறோம் என்றும் சொல்லப்படுகிறது. ஆக ஒரு சமூகமாக
இன்று நாமிருக்கும் நிலை குறித்து நம்மிடம்
பெரிய அளவில் தற்பெருமை உணர்வு இருக்கிறது. அதேநேரத்தில் கடந்த காலம், கடந்த காலத்துடன்
நாம் தொடர்புபடுத்தும் எவரொருவரின் மீதும் நமக்குப் பெரும் கசப்பும், கோபமும் இருக்கிறது.
ஏனென்றால் அவையெல்லாம் தவறானவை என்று நமக்குச் சொல்லித் தரப்பட்டிருக்கிறது. சரியான
நபர்கள் இருந்திருந்தால், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நாம் இந்த நிலையில் இருந்திருப்போம்
என்றும் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, அடிப்படையில்... நம்பிக்கையை கோபத்தைக்
கொண்டு மடைமாற்றியுள்ளனர்.
ஹர்ஷ் மாந்தர்: வெறுப்புணர்ச்சியைக்
கொண்டு… கோபத்தைக் காட்டிலும், வெறுப்புணர்ச்சியைக் கொண்டே அதிகம் மடைமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக
நான் கருதுகிறேன்.
குணால் புரோஹித்:
கசப்பு, வெறுப்பு போன்ற உணர்வுகளைக் கொண்டு நமது விழைவு மாற்றப்பட்டுள்ளது. அதனால்தான்
ஹர்ஷ்… வெறுப்பு மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கிறது. கோபம் மிகக் கவர்ச்சியாக இருக்கிறது.
ஆனால் நம்பிக்கை அதுபோன்று கவர்ச்சியுடன் இருப்பதில்லை. பொறுப்பேற்கும் உணர்வையே இறுதியாக
அது உங்களிடம் ஏற்படுத்துகிறது. உங்களை மாற்றிக் கொண்டால், எதிர்காலம் உங்களுக்குச்
சிறப்பாக இருக்கும் என்று மக்களை நம்ப வைப்பதே நோக்கம்.
ஹர்ஷ் மாந்தர்: ஆம்…
குணால் புரோஹித்:
இதுவரை இருந்ததிலேயே நாம் இப்போதுதான் மிகச் சிறப்பான நிலையில் இருக்கிறோம் என்று உங்களிடம்
சொல்வதற்கு ஒருவர் ஏற்கனவே உச்சத்தில் இருக்கிறார்.
அக்சய முகுல்: தெருவில்
செல்லும் ஒருவர் உங்களிடம் ‘கிராமங்களில் அவர் மீதான நற்பெயர் பெரிதும் அதிகரித்துள்ளது’,
‘நமது கடவுச்சீட்டிற்கு மிகுந்த மரியாதை இருக்கிறது’ என்பார். அவர் வேறெந்த நகரத்திற்கும்
சென்றிருக்கவே மாட்டார். ஆனாலும் நம்முடைய கடவுச்சீட்டின் ஆற்றல் அவருக்கு நன்றாகவே
தெரிந்திருக்கும்!
குணால் புரோஹித்:
வெகுஜனக் கலாச்சாரத்தின் நுகர்வு ஒரு சமூகமாக நாம் எப்படி ஆகிவிட்டோம் என்பதைப் பிரதிபலிக்கிறது
என்றே நான் நினைக்கிறேன். அதனால்தான் இதுபோன்ற நம்பிக்கைகளை பாப் கலாச்சாரம் வலுப்படுத்துகிறது.
கடந்த காலம் எப்படி இருந்தது என்று பாருங்கள். காந்தியும் இதைத்தான் செய்தார் என்பது
உங்களுக்குத் தெரியுமா? நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும், நேரு இதைத்தான் செய்து
கொண்டிருந்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? அல்லது அவுரங்கசீப் இப்படித்தான் இருந்தார்
என்பது தெரியுமா?
ஹர்ஷ் மாந்தர்: சாவர்க்கரும்
இதைத்தான் செய்து கொண்டிருந்தார்.
குணால் புரோஹித்:
கடந்த காலம் குறித்த அனைத்தையும் நுகர்வதில் நமக்குத் தீராத பசி இருப்பது போலவும்,
அதே வேளையில் எதிர்காலத்தின் மீது நமக்கு எந்த ஆர்வமும் இல்லாதது போலவும் தோன்றுகிறது.
அதன் விளைவாக நாம் நம்பிக்கை வைத்துள்ள முற்போக்கான செய்திகளை உருவாக்குவது
மிகவும் கடினமாகி விட்டது. ஏனென்றால் நீங்கள் இப்போது ஒரு மாயையில் இருக்கிறீர்கள்.
அந்த நிலையை அடைந்து விட்டதாக நம்பக்கூடிய மாயை உங்களிடம் இருக்கிறது. அப்படியிருக்கும்
போது, பிரச்சனை இருக்கிறது என்று மக்களை நீங்கள் எப்படி நம்ப வைக்கப் போகிறீர்கள்?
ஹர்ஷ் மாந்தர்: இறுதியாக
வெற்றி பெற்று விட்டதாக...
குணால் புரோஹித்:
இறுதியாக பிரச்சனையைத் தாண்டி வந்து விட்டோம் என்று… இப்போது இந்த நாட்டில் இருபது
கோடி மக்கள் தங்களுக்காகப் பேச யாரும் இல்லை என்று உணரும் நிலையில், தாங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாக
அவர்கள் உணரும்போது, பிரச்சனை என்று நம்மைப் போன்றவர்கள் எதைக் கருதுகிறோமோ,
அதைத்தான் நான் சொல்கிறேன்… உண்மையில் மக்களில் ஒரு பெரும்பகுதியினரிடம் - இப்போது
நடப்பது நீண்ட காலத்திற்கு முன்பே நடந்திருக்க வேண்டிய ஒன்று என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஹர்ஷ் மாந்தர்: ராமர் கோயில்
பிரதிஷ்டைக்குப் பிறகு அவர்கள் நிறைவேற்றிய அமைச்சரவைத் தீர்மானம் என்னவென்றால், இந்தியாவின்
உடல் மட்டுமே 1947-ல் சுதந்திரம் அடைந்தது, அதன் ஆன்மா இப்போதுதான் சுதந்திரம் அடைந்துள்ளது.
அது உண்மையென்று கருதினால், உங்கள் ஆன்மாவை யார் அடிமைப்படுத்தியது - அது இந்திய முஸ்லீம்கள்தான்.
அதனால்...
குணால் புரோஹித்:
அதனால்தான் நமது பொது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் அன்றைய காலத்து அரசியல் ஊடுருவ
நாம் அனுமதித்து விட்டோம் என்று சொல்கிறேன். எந்த அளவுக்கு என்றால், நாம் அனைவரும்
அதனை முழுமையாக நம்பி விட்டோம். 'இங்கே பாருங்கள், அது அப்படியல்ல' என்று காட்டுவதற்கு,
போதுமான அளவு எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை. அதற்காக அவர்கள் போதுமான அளவிற்கு உறுதியாக
நிற்பதில்லை என்பதே முற்போக்கு விழுமியங்களை ஆதரிப்பவர்கள் மீது நான் குறை கூறக்கூடிய
ஒரே ஒரு விஷயமாகும்.
ஹர்ஷ் மாந்தர்: ஆம், முற்றிலும்
சரி.
குணால் புரோஹித்:
ஏனென்றால் அதன் மறுபக்கத்தை நான் பார்த்திருக்கிறேன். தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ள
விழுமியங்களுக்காக, எந்த அளவிற்கு அவர்கள் உறுதியாக நிற்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன்.
மகாராஷ்டிராவில் சாம்பாஜி பிடே நடத்தி வரும் 'ஷிவ் பிரதிஷ்டான்' என்ற அமைப்பைப் பற்றி
சமீபத்தில் ஆய்வு செய்து வருகிறேன். அவரைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்
என்று நம்புகிறேன். அவரை 'பரம ஆதர்ணிய குருஜி' என்று நமது பிரதமர் அழைக்கிறார். அவரை
அப்படித்தான் பிரதமர் குறிப்பிடுகிறார்.
ஹர்ஷ் மாந்தர்: பீமா கோரேகான்
கலவரத்தில்கூட…
குணால் புரோஹித்:
ஆமாம். பீமா கோரேகான் கலவரங்கள் தொடர்பான குற்றவாளிகளில் ஒருவராக பிடே இருந்தார். ஹர்ஷ்…
மகாராஷ்டிராவில் ஜாம்னர் என்ற சிறிய நகரத்தில் சுலைமான் பதான் என்ற முஸ்லீம் இளைஞர்
அடித்துக் கொல்லப்பட்டாரே, அந்த ஊரில் இருக்கும் அந்த அமைப்பைச் சார்ந்தவர்களுடன் இப்போது
நேரம் செலவிட்டு வருகிறேன். ஆண்டு முழுவதற்குமான நிகழ்வுகளுக்கான திட்டமிடலுடன் அந்த
அமைப்பு செயல்பட்டு வருகிறது. மக்களை எப்போதும் அணிதிரட்டி வைத்திருப்பதற்கு அவர்கள்
ஆண்டு முழுவதற்குமான செயல்பாடுகளைத் திட்டமிட்டு வைத்துள்ளனர். சில எடுத்துக்காட்டுகளைச்
சொல்கிறேன். சிவாஜியின் கோட்டைகளுக்குச் செல்வதற்கான மலையேற்றங்களுக்கு அவர்கள் ஏற்பாடு
செய்கிறார்கள். சிவாஜி அனுபவித்த சிரமத்தை மக்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, சிவாஜி
அப்போது சென்ற பாதையிலேயே அவர்கள் செல்கிறார்கள். அந்த மலையேற்றம் அந்தக் காலகட்டத்தில்
சிவாஜியும் அவரது படையினரும் அனுபவித்த போராட்டங்களைத் தாங்களும் அனுபவித்து, சிவாஜியைப்
பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. அது சாம்பாஜி பிடேயின் உரையுடன்
முடிவடைகிறது. மலையேற்றத்தில் ஒரு பகுதியாக அவரது உரை இருக்கிறது.
அந்த மலையேற்றத்தில் கலந்து கொள்ளும் ஏராளமான இளைஞர்கள்
'ஓ… எங்களுக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது' என்கிறார்கள். பின்னர் அவர்களுடைய பிரச்சாரத்தின்
ஒரு டோஸ் அனைவருக்கும் இவ்வாறு வழங்கப்படுகிறது. 'சிவாஜி ஒரு ஹிந்து மன்னர். இந்த முஸ்லீம்கள்
என்ன செய்ய முயல்கிறார்கள் என்று பாருங்கள்' என்று அவர்களிடம் சொல்லப்படுகிறது. அங்குதான்
அந்த டோஸ் மக்களுக்குள் செலுத்தப்படுகிறது.
மலையேற்றம் முடிந்ததும் அதில் கலந்து கொண்டவர்கள், அவுரங்கசீப்பால் சம்பாஜி சித்திரவதை
செய்யப்பட்ட மாதத்தை - ஒரு மாத துக்கமாக, தவமாக அனுசரிக்கிறார்கள். அந்தக் குறிப்பிட்ட
மாதத்தில் உறுப்பினர்கள் காலணிகள் அணியக்கூடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில்
சிலர் தங்கள் தலையை மொட்டையடித்துக் கொள்கிறார்கள். அசைவ உணவு உண்பதில்லை. சிலர் படுக்கையில்
உறங்குவதில்லை. தரையில் படுத்தே உறங்குகிறார்கள். ஒன்றுக்குப் பின் ஒன்றாக அடுத்தடுத்து
பல விஷயங்கள் அவர்களுக்குச் சொல்லித் தரப்படுகின்றன. வேலைக்குச் செல்பவர்கள், குடும்பத்தை
முன்னெடுத்துச் செல்ல வேண்டியவர்கள், குழந்தைகளுடன் உள்ளவர்கள் என்று தொடர்ச்சியான
அணிதிரட்டலை அவர்கள் செம்மைப்படுத்திக் கொள்கின்றனர்.
இந்த அமைப்புக்காகப் பல வேலைகளுக்கிடையிலும் தங்கள் நேரத்தை அர்ப்பணிக்கும் அளவிற்கு
மக்கள் உந்துதல் பெறுகிறார்கள். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், பல விஷயங்களுக்காக
நாம் அவர்களைக் குறை கூறலாம். அவ்வாறு குறைகூறத்தான் வேண்டும். ஆனாலும், இது போன்ற
ஒன்றை நடத்துவதற்குத் தேவைப்படும் அர்ப்பணிப்பின் அளவு மிக அதிகம் என்றே நான் கருதுகிறேன்.
ஹர்ஷ் மாந்தர்: அர்ப்பணிப்பு,
ஈடுபாடு, ஆக்கத்திறன்…
அக்சய முகுல்: தனது சக்திக்கு
அப்பாற்பட்ட வேலைகளையும் விடாமல் தொடர்ந்து செய்வது.
குணால் புரோஹித்:
ஆமாம், அவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை.
ஹர்ஷ் மாந்தர்: சிவாஜி,
மலையேற்றம் என்பது ஒரு... அதுபோன்ற யோசனையைக் கற்பனை செய்து பாருங்கள்…
குணால் புரோஹித்:
மக்களிடம், இளைஞர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்துவது... அந்த அமைப்பில் சேர்ந்திருந்த,
அந்த அமைப்பில் மிக முக்கிய உறுப்பினர்களாக இருந்த சிலரிடம் பேசியபோது 'அவர்களைப் பற்றி நாங்கள்
கேள்விப்பட்டதே இல்லை. ஆனாலும் எங்களுக்கு சிவாஜி கோட்டைகளுக்கு மலையேற்றம் என்ற அந்த
யோசனை மிகவும் பிடித்திருந்தது. அதனாலேயே அந்த மலையேற்றத்தில் நாங்கள் அவர்களுடன் இணைந்தோம்.
பின்னர் சாம்பாஜி பிடே எங்களிடம் பேசினார். அவர் அந்த உரையை நிகழ்த்திய போது, நாங்கள் முற்றிலுமாக
ஈர்க்கப்பட்டோம். முஸ்லீம்கள் இவ்வளவு மோசமானவர்கள் என்று எங்களிடம் யாருமே ஏன் சொல்லவில்லை
என்று நினைத்தோம்' என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர் போட்ட அந்தத் தூண்டிலைப்
பாருங்கள், அவர் அந்த அமைப்பின் பாதைக்குள் அவர்களைக் கொண்டு சென்று விடுகிறார். தங்கள்
நோக்கத்திற்காக அவர்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள். அவர்கள் முழுமையாகக்
காட்டியிருக்கும் அர்ப்பணிப்பை, இந்தத் தரப்பில் சிலர் மட்டுமே காட்டியிருக்கிறார்கள்
என்பதைப் புரிந்து கொண்டு, அதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன்.
நான் உங்களைப் போன்று தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்டிருப்பவர்களை அவமதிக்க விரும்பவில்லை.
ஆனாலும் அவர்களிடம் உள்ள அர்ப்பணிப்பின் தன்மையைப் பார்க்கும் போது, நாம் அனைவரும்
அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள ஏராளம் இருக்கிறது என்றே நினைக்கிறேன்.
ஹர்ஷ் மாந்தர்: நீங்கள்
சொல்வதை முழுமையாகப் புரிந்து கொண்டேன். இது ஓர் அற்புதமான உரையாடல். இந்த அளவிற்கு
ஆற்றல் மிக்கதாக ஆர்.எஸ்.எஸ் ஏன் இருக்கிறது என்று நினைத்துப் பார்க்கிறேன். முற்போக்கான,
நெறிமுறை சார்ந்த கருத்துகள் சென்றடையாத பல இதயங்கள், மனங்களுக்குள் அதனுடைய சித்தாந்தம்
ஏன் சென்றடைந்துள்ளது என்பதை உங்கள் இருவராலும் வெளிப்படுத்திக் காட்ட முடிந்துள்ளது
என்றே கருதுகிறேன். அருமையான இளம் பேரன் எனக்கு இருக்கிறான். அவன் வளர்வதைப் பார்த்து
வருகிறேன். நான் வளர்ந்த இந்தியாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதோர் இந்தியாவில் அவன்
வளர்கிறான் என்றே நினைக்கிறேன். அதாவது, அவனுக்கு ஒவ்வோர் அடியிலும் வெறுப்பு கற்பிக்கப்படுகிறது.
மிகவும் உணர்வுப்பூர்வமான, சிந்தனையாற்றல் மிக்கவனாக அவன் இருந்தாலும், இதுபோன்ற விஷயங்களை
மட்டுமே சமூக ஊடகங்களில், அவனது நண்பர்களிடமிருந்து, அவன் படிக்கும் இடங்களில், தலைவர்களிடமிருந்து…
அவனால் நிச்சயம் கேட்க முடியும். அன்பு, சமத்துவம் கொண்ட கருத்துக்களை உறுதியாக, நம்பகத்தன்மையுடன்
அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதில் நாம் தோல்வியடைந்துள்ளோம். இந்தக் காலத்தில்… இந்த
நேரத்தில் எனது அன்பை, வெளிப்படையாக தீவிரமான சிந்தனையாக நான் காட்ட வேண்டும் என்றே கருதுகிறேன். எந்தக் கடவுளை
வணங்கினாலும், சாதி, மொழி, பாலினம் எதுவாக இருந்தாலும், குடிமக்கள் அனைவரும் சமமாக
இருக்கின்ற நாட்டிற்கு ஆதரவாக நிற்கிறோம் என்று சொல்வதற்கு மிகவும் தற்காப்பு நிலையிலேயே
நாம் இருக்கிறொம். அதனாலேயே மக்கள் அதனை ஆபத்தான, நாசகாரமான கருத்து என்கிறார்கள்.
அதற்கு ஆதரவாகத்தான் நிற்கிறோம் எனும் போது, நாம் ஏன் தற்காப்பு நிலையில் இருக்க வேண்டும்?
நம்மிடம் அவர்களிடம் உள்ளதைப் போன்ற அர்ப்பணிப்பு, தைரியம் ஏன் இல்லை? அன்பின் அடிப்படையிலே
ஒரு நாடு வேண்டும் என்று சொல்வதற்கு நமக்கு ஏன் தார்மீகத் துணிச்சல் தேவைப்படுகிறது?
குணால் புரோஹித்:
ஆர்.எஸ்.எஸ்காரர் ஒருவர் என்னிடம் மிக அழகாகச் சொன்னார். இதைத்தான் அவர் மிகச் சரியாக
விளக்கினார். அவர் சொன்னதை உங்களுக்குச் சொல்கிறேன். ‘குணால், கடந்த முப்பது ஆண்டுகளில்
ஆர்.எஸ்.எஸ் அல்லது இந்தச் சித்தாந்தம் இந்திய அரசியலில் கொண்டு வந்திருக்கும் மாற்றம்
என்னவென்றால், தொன்னூறுகளின் முற்பகுதியில் - நீங்கள் உங்களை காங்கிரஸ்காரர் என்று
சொல்லிக் கொண்டால் அது பரவாயில்லை. ஆனால் பா.ஜ.ககாரர்
என்று உங்களைக் கூறிக் கொள்வீர்கள் என்றால் மக்கள் அது அருவருக்கத்தக்கது என்றே சொல்லியிருப்பார்கள்.
அதுபோன்ற நிலைமை இப்போது தலைகீழாக மாறிவிட்டது. தலைகீழாக மாறியிருக்கும் மற்றோர் அம்சம்...
காங்கிரஸ்காரர் என்று ஒருவரைச் சொல்வது இப்போது கேலிக்குரிய விஷயமாகி விட்டது. நீ ஒரு
காங்கிரஸ்காரனா, உனக்கு என்ன தெரியும்?’ என்று கேட்கிறார்கள்… அவர் சொன்ன மற்றோர் அம்சம்
- அது மிகவும் உண்மை. ‘குணால், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, மதச்சார்பற்றவர் என்று
ஒருவரைக் குறிப்பிட்டால், மிகவும் பெருமையாக இருக்கும். அவ்வாறு சொல்வது அவரைப் பாராட்டுவதாக
இருக்கும். மதவாதி என்பது ஒருவரை நிந்திப்பதாகவே இருந்தது. மதச்சார்பற்றவர் என்ற வார்த்தை
இன்று மக்களிடம் அவமானம் என்பதைப் போல் இருக்கிறது என்றே காண்கிறேன்’. மேலும் அவர்
‘நாடு முழுக்க இப்போது இந்த மொழியில்தான் பேசிக் கொண்டிருக்கிறது...’ என்றார்.
அக்சய முகுல்: அது எப்படி
மாறியிருக்கிறது என்பதை நமது வீடுகளிலேயே பார்க்கலாம்,
நமது குடும்பத்தின் வாட்ஸ்ஆப் குழுக்களில் பார்க்கலாம்.
ஹர்ஷ் மாந்தர்: பாராளுமன்றத்திலும்…
இப்போதுள்ள நிலையை மாற்றக்கூடாது என்ற 1991-ஆம் ஆண்டு சட்டம் குறித்த விவாதத்தை வாசித்துக்
கொண்டிருந்தேன். உண்மையில் அது... மிக அழகான வாசிப்பு, மதச்சார்பின்மை பற்றி இன்றைக்கு
உங்களால் கேட்கவே முடியாத உரைகளை ஒருவருக்குப் பின் ஒருவராக தலைவர்கள் உறுதியுடன்,
சொல்லாற்றலுடன் அன்று பேசினார்கள். ஆம், அந்த உரையாடலில் இருந்து நான் எடுத்துக் கொள்வது
என்னவென்றால், முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள், நெறிமுறைகள், கருணை, அன்பு மீது உறுதிப்பாடுடையவர்கள்
அனைவரும் தங்கள் நம்பிக்கைகள் மீது இன்னும் அதிகமான தைரியத்துடன் இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் நம்பிக்கைகளைப்
பற்றி இன்னும் உரக்கப் பேச வேண்டும். இன்னும் அதிகமாக உரையாடிச் செயல்பட வேண்டும்.
அப்போதுதான் என்னுடைய இளம் பேரனைப் போன்ற ஒருவரால் மற்ற குரல்களையும் கேட்டு முடிவெடுக்க
முடியும்.
குணால் புரோஹித்:
என்னிடம் ஏராளமானோர் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் காந்தியின் வாழ்க்கை
அல்லது அவரது கதைகளைப் பற்றி மட்டுமே பேசி, தாக்கத்தை ஏற்படுத்தும் ஒருவரைக் கவனித்துப்
பார்க்க விரும்பி இன்ஸ்டாகிராமிற்குச் செல்வதற்கு அல்லது ஒட்டுமொத்த இணைய உலகிலும்
நம் குழந்தைகளுக்காக அல்லது நமக்காக காந்தியின் வாழ்க்கையை ஊடாடும் வடிவத்தில் புரிந்து
கொள்வதற்கு எங்கே செல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள். அது போன்றவர்களை எங்கே கண்டுபிடிப்பது?
எச்-பாப் உலகத்தால் செய்ய முடிந்துள்ள வேலையைப் போன்று, இந்த விஷயங்கள் அனைத்தையும்
பிரித்தெடுத்து, மக்களை எளிதில் அணுகக்கூடியவையாக மாற்றம் செய்து தரக்கூடியவர்கள் நம்மிடையே
போதுமான அளவிற்கு இல்லை. அதுவே நமது மிகப் பெரிய குறைபாடு என்று நினைக்கிறேன்.
ஹர்ஷ் மாந்தர்: அதனை எப்படிச்
செய்யலாம் என்பதை 1950கள், 60களின் திரைப்படங்கள், பாடல்கள் நமக்குக் காட்டுகின்றன.
பிரபலமான வழிகளில் அதனைச் செய்ய முடியும். உங்களுக்கு இந்தப் பாடல் தெரிந்திருக்கும்…
‘நீ ஒரு ஹிந்துவாக, ஒரு முஸ்லீமாக ஆகலாம். ஆனால் ஒரு மனிதனின் குழந்தையான நீ ஒரு மனிதனாக
மாற வேண்டும்’ என்ற சாஹில் சிங்கின் பாடல். இதுபோன்ற கருத்துகளை எப்படிக் கடத்துவது
என்பது நாம் அறிந்திராததல்ல. ஆழ்ந்த நம்பிக்கை நம்மிடம் போதுமான அளவிற்கு இல்லை என்றே
நினைக்கிறேன். இந்த இடத்தில் இப்போது அதனைக் கண்டறிய வேண்டும் என்று கருதுகிறேன். அதுவரையிலும்
சூரியன் உதிப்பதை, மீண்டும் மீண்டும் அது உதிப்பதை மட்டுமே நாம் பார்த்துக் கொண்டிருப்போம்.
மிக்க நன்றி. இந்தக் கலந்துரையாடலுக்காக உங்கள் இருவரையும்
இங்கே வரவழைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நன்றி.
https://www.youtube.com/watch?v=Kq6ffi92x5k&t=2s

Comments