பேரா.தா.சந்திரகுருவின் ‘கீதா பிரஸ் - விருதுகளும் சர்ச்சைகளும்’ : கோரக்பூர் மர்மங்களைச் சொல்லிடும் நூல்

பெ.விஜயகுமார் 

இமயமலைச் சரிவில் ரப்தி நதிக்கரையில் அமைந்திருக்கும் கோரக்பூர் எனும் நகரில் கீதா பிரஸ் நிறுவனம் 1923ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் நிறுவனர் ஜெய்தயாள் கோயங்கா மற்றும் இந்த நிறுவனம் நடத்திவரும் கல்யாண் இதழின் ஆசிரியராக நாற்பதாண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய ஹனுமன் பிரசாத் போதார் என்ற இருவரும் மார்வாடிகள். இந்தியாவின் மிகப் பெரிய வணிக சமூகமாகத் திகழும் மார்வாடிகளின் நிதிக் கொடையில் கீதா பிரஸ் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் ஹிந்து மதம் சார்ந்த புத்தகங்களான பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், மனுஸ்மிருதி போன்ற புத்தகங்களை அச்சிட்டு, விநியோகம் செய்து சனாதன ஹிந்து மதக் கருத்துகளை பரப்புரை செய்கிறது. 

கீதா பிரஸின் தோற்றம், வரலாறு, செயல்பாடுகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்து தக்க சான்றுகளுடன் ‘கீதா பிரஸும் ஹிந்து இந்தியா உருவாக்கமும்’ என்ற நூலினை அக்சய முகுல் எழுதியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளரான அக்சய முகுல் 2015இல் எழுதிய இந்நூல் அறவணன் மொழிபெயர்ப்பில் தமிழிலும் வெளிவந்துள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனம் ஆண்டுதோறும் சிறந்த நூலுக்கான ‘ராம்நாத் கோயங்கா விருதை’ வழங்கி வருகிறது. அக்சய முகுல் எழுதிய இந்நூலினை 2015ஆம் ஆண்டுக்கான விருதுக்குத் தேர்ந்தெடுத்தது. விருதினை பிரதமர் மோடி வழங்குவார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிவித்தது. இந்துத்துவ சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் மோடியின் கைகளிலிருந்து இவ்விருதைப் பெற அக்சய முகுல் மறுத்து விருது வழங்கும் விழாவைப் புறக்கணித்தார்.

1995ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 125ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய போது மதிப்பு மிக்க சர்வதேச விருதான ’காந்தி அமைதிப் பரிசை’ இந்திய அரசு நிறுவியது. மகாத்மா காந்தி முன்னெடுத்துச் சென்ற லட்சியங்களுக்கு சிறந்த பங்களிக்கும் நபர் அல்லது நிறுவனத்துக்கே இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும். விருதாளரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், மக்களவைத் தலைவர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இருப்பார்கள். 2022ஆம் ஆண்டிற்கான இவ்விருதை கோரக்பூரில் அமைந்திருக்கும் கீதா பிரஸ் நிறுவனத்திற்கு வழங்கிட மோடி தலைமையிலான பாஜக அரசு முடிவெடுத்தது. ஆனால் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸின் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியை அழைக்காமலேயே விருதுக்குழு முடிவெடுத்தது. அண்ணல் காந்தியின் லட்சியங்களுக்கு கிஞ்சித்தும் சம்பந்தம் இல்லாத கீதா பிரஸ் நிறுவனத்துக்கு இவ்விருது வழங்கப்பட்டது மிகப் பெரிய அவமானமாகும். இந்த இரண்டு விருதுகளுக்கும் பின்னால் இருக்கும் சுவையான செய்திகளை பேரா.தா.சந்திரகுரு ‘கீதா பிரஸ் - விருதுகளும் சர்ச்சைகளும்’ எனும் நூலில் விளக்கியுள்ளார்.

நூலின் முன்னுரையில் நூலாசிரியர் சந்திரகுரு கீதா பிரஸ் பற்றியும், மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு விருதுகள் குறித்த சர்ச்சைகளையும், விவாதங்களையும் விளக்குகிறார். சாவர்க்கரின் ஒருங்கமைத்த ஹிந்துத்துவக் கருத்துகளை மக்களிடையே எடுத்துச் செல்வதற்கென்றே 1923இல் உருவாக்கப்பட்ட நிறுவனம் கீதா பிரஸ். கீதா பிரஸின் வெற்றி அதன் நிறுவனர் ஜெய்தயாள் கோயங்கா மற்றும் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக கல்யாண் இதழின் ஆசிரியராகப் பணியாற்றிய ஹனுமன் பிரசாத் போதார் ஆகிய இருவரையுமே சாரும். 1920களில் நடந்த ஹிந்து-முஸ்லீம் கலவரங்கள் குறித்த கல்யாண் இதழின் நிலைப்பாடு அதன் முதல் தலையங்கத்திலேயே வெளிப்பட்டது. கலவரங்களுக்கு முழுக் காரணமும் முஸ்லீம்களே என்ற குற்றச்சாட்டை போதார் முன்வைத்தார். அகிம்சை என்ற பெயரால் ஹிந்துகள் கோழைகளாக இருந்துவிடக் கூடாது. ஹிந்துக்கள் அனைவரும் தங்கள் உடல் வலிமையை வெளிக்காட்ட முன்வர வேண்டும் என்றெழுதி மிக மோசமான வன்முறைக்கு போதார் வித்திட்டார்.

கீதா பிரஸ் இந்தியில் கல்யாண் இதழையும், ஆங்கிலத்தில் கல்யாண் கல்பதரு எனும் இதழையும் வெளியிடுகிறது. பகவத் கீதை, இராமாயணம், மகாபாரதம், மற்றும் ஹிந்து மதம் தொடர்பான நிறைய வெளியீடுகளை நேர்த்தியாக அச்சிட்டு குறைந்த விலைக்கு வெளியிடுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தத்தை எடுத்துச் செல்லும் வாகனமாக கீதா பிரஸின் பிரசுரங்கள் இருக்கின்றன. அனைத்து ரயில்வே நிலையங்களிலும் கல்யாண் இதழும், கீதா பிரஸின் மற்ற புத்தகங்களும் கிடைக்கின்றன. வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலான ஹிந்து குடும்பங்கள் கல்யாண் இதழை வாங்குகின்றன.

’பெண்களுக்கான கடமைகள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு ஆண்களின் அடிமைகளாகச் செயல்பட பெண்களை நிர்பந்தித்தும், விதவை மறுமணத்திற்கு எதிராகவும், இருதார மணம் மற்றும் உடன்கட்டை ஏறுவதற்கு ஆதரவாகவும் எழுதியது. ’கல்யாண் கல்பதரு’ எனும் ஆங்கில இதழில் ‘பகவத் கீதை சொல்லும் கம்யூனிசம்’ என்ற கட்டுரை 1934இல் வெளிவந்தது. ‘இன்றைய தலைமுறை கம்யூனிசத்தைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது. அனைவரையும், அனைத்து விதத்திலும் சமத்துவமாக நடத்த வேண்டும் என்பதே கம்யூனிசத்தின் இறுதிக் கருத்து என்ற நம்பிக்கை அவர்களிடம் இருக்கிறது. பலவகையான வேறுபாடுகளுடன் இருக்கும் இந்த உலகில் அனைவரும் ஒரே மாதிரியாக இருப்பதென்பது இயலாத காரியம் என்பதை தீவிரப் பரிசீலனை செய்து நம்மால் புரிந்து கொள்ள முடியும். இடம், பொருள், நேரம் ஆகியவற்றில் சமத்துவம் என்பதற்கான சாத்தியம் இல்லாததே கம்யூனிசம் தோல்வியடைய முக்கியக் காரணமாகும்’ என்ற அபத்தனமான விளக்கத்தை கோயந்த்கா இந்நூலில் எழுதியுள்ளார்.

கீதா பிரஸ் நிறுவனம் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கான பிரச்சார வாகனமாக மாறி காந்தி படுகொலை நோக்கி முன்னேறியது. காந்தி படுகொலையின் போது குற்றம் சாட்டப்பட்டு வளைக்கப்பட்டவர்களில் கீதா பிரஸ் நிறுவனர் ஜெய்தயாள் கோயந்த்கா, கல்யாண் இதழ் ஆசிரியர் போதார் இருவரும் இருந்தனர். காந்தி மீது இவர்கள் இருவரும் வெளிப்படுத்திய வன்மமே போதுமான சாட்சியாக இருந்தது. கீதா பிரஸின் பின்னணி, நோக்கம் பற்றியெல்லாம் தெரிந்திருந்தும் காந்தி உட்பட பல காங்கிரஸ் தலைவர்களும் கல்யாண் இதழில் கட்டுரைகள் எழுதியது நம்மால் புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது. நேரு ஒருவர் மட்டுமே இதிலிருந்து முற்றிலும் விலகியிருந்தார். அவரின் ஆழ்ந்த அறிவும், சிந்தனைத் தெளிவும் இதற்குக் காரணமாக இருந்திருக்கும்.

காங்கிரஸ் தலைமையிடமிருந்து அடுத்து வந்த அதிர்ச்சியளிக்கும் செய்தி அன்று உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த் வல்லப் பந்த் கல்யாண் இதழ் ஆசிரியர் போதாருக்கு பாரத ரத்னா விருது அளிக்க முன்மொழிந்ததாகும். ஆனால் போதார் விருதை ஏற்றுக் கொள்ள மறுத்ததால் அந்த அவமானத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி தப்பித்தது. ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவிடச் செயல்படும் ஒருவருக்கு பாரத ரத்னா விருது அளித்திட ஒரு காங்கிரஸ் தலைவர் முன்வந்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது. 1992இல் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு போதார் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டது - அடுத்த அதிர்ச்சியளிக்கும் முடிவாக இருந்தது. இந்நிகழ்வுகள் காங்கிரஸ் கட்சிக்குள் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள் அல்லது மென்மையான வகுப்புவாதிகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது.

’மனித அவலத்தின் கீழ்நிலைக்கு இந்தியாவைக் கொண்டு செல்லும் ஆர்எஸ்எஸ்-பாஜக ஆட்சியாளர்கள்’ எனும் சம்சுல் இஸ்லாமின் கட்டுரை மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டுள்ளது. 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கீதா பிரஸ் தொடர்ந்து பாராட்டுதலைப் பெற்றுக் கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம். அதன் உச்சகட்டமாக மோடி தலைமையிலான பாஜக அரசு 2023ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதிக்கான விருதை கீதா பிரஸ் அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் நேரத்தில் கொடுத்துள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2022இல் கீதா பிரஸ் நிறுவனத்துக்குச் சென்று அதனை வானுயரப் புகழ்ந்துள்ளார். சதி, பெண்களை அடிப்பது போன்ற செயல்களைப் போற்றுகின்ற பிற்போக்கு இலக்கியங்களைப் பிரசுரித்து வரும் கீதா பிரஸை இந்தியக் குடியரசுத் தலைவர் பாராட்டுவது இந்திய அரசமைப்பு உயர்த்திப் பிடிக்கும் விழுமியங்களை அவமதிப்பதாகும். 2017இல் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரது நியமனம் சாதிவெறி தகர்க்கப்பட்டதற்கான அடையாளமாகவும், தலித்துகளைப் பெருமைப்படுத்துவதாகவும் கொண்டாடப்பட்டது. கீதா பிரஸைப் பாராட்டியதன் மூலம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலித்துகளுக்குத் துரோகம் இழைத்துள்ளார் என்பதை சம்சுல் இக்கட்டுரையில் உணர்த்துகிறார். 


கல்யாண் இதழ் அதன் கேள்வி-பதில் பகுதியில், ‘மனைவியைக் கணவன் அடித்து தொந்தரவு செய்தால் அந்த மனைவி என்ன செய்ய வேண்டும்?’ என்ற கேள்விக்கு, ‘அடி வாங்கி தனது பூர்வ ஜென்மக் கடன்களைத் தீர்த்துக் கொண்டதாகவும், அதன் மூலம் தனது பாவங்கள் அனைத்தும் தொலைந்துபோய் இப்போது தூய்மை அடைந்திருப்பதாகவும் அந்த மனைவி நினைத்துக் கொள்ள வேண்டும்’ என்ற அதிர்ச்சியளிக்கும் பதிலைக் கூறியுள்ளதை சம்சுல் சுட்டிக் காட்டுகிறார். ‘பெண் ஒருவர் மறுமணம் செய்து கொள்ளலாமா?’ என்ற கேள்விக்கு கல்யாண் இதழ்,‘ஒரு முறை ஒரு பெண்ணை அவளுடைய பெற்றோர் திருமணம் செய்து கொடுத்துவிட்டால், அதற்குப் பிறகு அவள் கன்னியாக இருக்க முடியாது எனும் போது அவளை வேறு ஒருவருக்கு எவ்வாறு மறுமணம் செய்து கொடுக்க முடியும்?’ என்று பதில் அளிக்கிறது.

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கும், அவள் கணவனுக்கும் கல்யாண் இதழ் வழங்கும் ஆலோசனை அதிர்ச்சியளிக்கிறது. ‘பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண் கூடுமானவரை மௌனமாக இருப்பதே நல்லது. அவருடைய கணவரும் அமைதியாக இருக்க வேண்டும்.’ மறுமணம் செய்து கொள்வதற்கான அனுமதி எந்தவொரு விதவைக்கும் கிடையாது. இருப்பினும் ஆண்கள் தங்களுக்கான ஆசைநாயகியாக விதவைகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்கிறது கல்யாண் இதழ். ‘நாரி தர்மம்’ எனும் கீதா பிரஸின் வெளியீடு, ‘சதியைப் பெருமைப்படுத்துவதுடன், பெண்கள் சுதந்திரத்தை அனுபவிக்கும் திறனற்றவர்கள்’ என்கிறது.

காந்தி, கீதா பிரஸ் இடையிலான தோல்வியடைந்த உறவு எனும் அக்சய் முகுலின் கட்டுரை (இந்தியன் எக்ஸ்பிரஸ்) காந்தி-போதார் இடையிலிருந்த முரண்களை விளக்குகிறது. காந்தி கொலையில் கைதாகியிருந்த போதாரும், ஜெய்தாள் கோயங்காவும் தங்களின் விடுதலைக்காக பிர்லாவின் உதவியை நாடியபோது பிர்லா, ‘இவர்கள் இருவரும் சனாதன தர்மத்தைப் பரப்புவர்களாக இல்லாமல் சைத்தான் தர்மத்தைப் பரப்புவர்களாகவே இருந்தனர்’ என்று அவர்களுக்கு சுளீரென்று அறைந்தது போல் பதிலளித்தார்.

சனாதன தர்மத்தை ஏற்றுக்கொண்ட காந்தி முற்போக்குக் கருத்துகளுக்குச் செவிசாய்ப்பவராகவும் இருந்ததால் போதார் அவரை வெறுத்தார். பகவத் கீதைக்கு காந்தி எழுதிய மொழிபெயர்ப்பான ‘அனாசக்தி யோகம்’ கீதா பிரஸினால் நிராகரிக்கப்பட்டது. அதேபோல் காந்தி ‘ஹிந்து மதத்திற்கு முரணாக மிகவும் மோசமான முறையில் கீழ்சாதியினரை உருவாக்கியுள்ள சாதி ஹிந்துக்களே அதற்கான பிராயச்சித்தத்தை மேற்கொள்ள வேண்டும்’’ என்று சொன்னதையும் போதாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘இந்திய உடையில் உள்ள மேற்கத்திய சிந்தனையாளராக காந்தி இருக்கிறார். அவரது பல சிந்தனைகளில் எனக்கு உடன்பாடில்லை’ என்று போதார் தெரிவித்தார். 1946இல் தலித் ஒருவர் பூசாரியாகத் தலைமை தாங்கி நடத்திய திருமணத்தில் காந்தி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியதையும் போதார் கடுமையாக விமர்சித்தார். தன்னை ஒரு சனாதன ஹிந்து என்று சொல்லிக் கொள்ளும் காந்தி ஹிந்து மத சாஸ்திரங்களுக்கு எதிராக எவ்வாறு இதுபோன்று செயல்படலாம் என்று கோபமுற்றார்.

ஹிந்து சட்ட மசோதாவிற்கு எதிரான பழமைவாதச் சவால்களை கீதா பிரஸ் எவ்வாறு கட்டமைத்துக் கொடுத்தது என்று அக்சய் முகுல் ‘காரவான்’ இதழுக்கு எழுதிய கட்டுரையில், 1926இல் வெறும் மூவாயிரம் பிரதிகளை விற்ற கல்யாண் இதழ் இன்று இரண்டு லட்சம் பிரதிகளையும், ஆங்கிலத்தில் வெளிவரும் கல்யாண் கல்பதரு ஒரு லட்சம் பிரதிகளையும் விற்பது குறித்த தன் வியப்பைத் தெரிவிக்கிறார். லாபத்தை எதிர்பாராமல் அழகிய தாள்களில் நேர்த்தியாகவும், குறைந்த விலையிலும் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் கீதா பிரஸால் வெளியிட முடிவதற்குக் காரணம் மார்வாடிகள் அள்ளிக் கொடுக்கும் நிதிவுதவியே என்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தி மொழி வடமாநிலங்களின் பொது மொழியாக வளர்ச்சி பெற்றது கல்யாண் இதழ் பெரும்பகுதி மக்களை சென்றடைவதை ஏதுவாக்கியது.

1920களில் தொடங்கிய ஹிந்து - முஸ்லீம் மோதல்கள் இன்றுவரை தொடர்ந்து நடந்து வருவதைத் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு, ஹிந்து மதவெறியை கீதா பிரஸ் தூண்டிவிடுகிறது எனும் உண்மையை அக்சய முகுல் விளக்குகிறார். இந்திய சுதந்திரத்தில் பங்கேற்காத இந்துவவாதிகள் கீதா பிரஸை தங்களுக்கான இதழாக வரித்துக் கொண்டு அதில் கட்டுரைகள் படைத்து அதன் வளர்ச்சிக்கு உதவுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ஆனால் கல்யாண் இதழில் காந்தி உட்பட பல காங்கிரஸ் தலைவர்களும் கட்டுரைகள் எழுதி அதன் வெற்றிக்குக் காரணமாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது.

1948 ஏப்ரல் மாதம் ஹிந்து சட்ட முன்வரைவு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது கல்யாண் இதழ் நேரடியாகவே களத்தில் இறங்கியது. 1948 ஜூன் மாத இதழ் ஹிந்துக் கலாச்சாரத்தை அழிப்பதற்காகவே ஹிந்து சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்று எழுதியது. ஹிந்து சாஸ்திரங்களை அறிந்திராத மேற்கத்திய கலாச்சாரத்தின் தாக்கத்தில் இருப்போரின் கைகளில் ஹிந்து சட்ட மசோதாவை வரையும் பணி இருப்பது நல்லதல்ல என்றது. அன்று சட்ட அமைச்சராக இருந்த அம்பேத்கரை தனது தாக்குதலுக்கான முதன்மை இலக்காக எடுத்துக் கொண்டது. தீண்டத்தகாதவர்களுக்கு சமத்துவ உரிமை கோரிய அம்பேத்கரை கல்யாண் இதழ் கடுமையாக விமர்சனம் செய்தது.

ஹிந்து மசோதா குறித்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டறிய உருவாக்கப்பட்ட ராவ் தலைமையிலான குழுவின் அறிக்கையில் மசோதாவுக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்திருந்த முன்னாள் கல்கத்தா உயர்நீதி மன்ற நீதிபதியான துவாகரநாத் மித்தரின் வாதம் இந்துத்துவவாதிகளுக்கு சாதகமாக இருந்தது. மாளவியா, கைலாஷ் நாத் கட்ஜூ போன்ற பழமைவாத அரசியல்வாதிகள், வங்காளத்தின் பெண் நாவலாசிரியர் அனுரூபாதேவி போன்றோரின் எதிர்ப்பையும் கல்யாண் இதழ் வெளியிட்டது. ஹிந்து சட்ட மசோதா ‘ஹிந்துக்கள் மீதான இஸ்லாமியர்களின் தாக்குதல்’ என்று சித்தரித்தது. ஹிந்துக் குடும்பங்களின் பரம்பரை உரிமையை மகள்களுக்கும் கொடுப்பது ஆபத்தானது என்றது. ‘குடும்பங்களில் இப்போது சகோதரர்களுக்கு இடையிலான சண்டை இனி சகோதரன் - சகோதரிகளுக்கு இடையிலான சண்டையை உருவாக்கி குடும்பங்களில் குழப்பத்தை விளைவிக்கும்’ என்றெழுதியது.

பதினாறு வயதிற்கு மேற்பட்ட பெண்கள் விருப்பப்படி யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற சுதந்திரம் அவர்களை முஸ்லீம்களுடனான திருமணத்திற்கு இட்டுச் செல்லும் என்று சொல்லியது. ஹிந்துக் குடும்பங்களின் ஒரு மூலையில் குரானும், மற்றொரு மூலையில் பகவத் கீதையும் இருக்கப் போகிறது. ஹிந்து வீடுகளில் மாட்டுக் கறி சமைக்கப்படும் அபாயமும் உள்ளது என்றது. ஒரே கோத்திரத்துக்குள் நடக்கும் திருமணங்களை அனுமதிப்பது. விவாகரத்தை அனுமதிப்பதெல்லாம் பேராபத்தில் முடியும் என்று பயமுறுத்தியது. ஹிந்து குடும்பங்களில் திருமணம் என்பது ஆன்மீக பந்தமாக இருக்கும் நடைமுறை மாறி விவாகரத்து எனும் சமூக வியாதியைத் திணிப்பதற்கான முயற்சியே ஹிந்து சட்ட மசோதா என்று சொன்னது.

கல்யாண் இதழ் ஹிந்து சட்ட மசோதாவை எதிர்த்த சக்திகளை எல்லாம் ஒன்றிணைக்கவும் செய்தது. ஜெயினர்கள், ஆர்ய சமாஜ் உறுப்பினர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட மசோதாவை எதிர்ப்பவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது. சன்மார்க் எனும் இதழின் ஆசிரியரான சுவாமி கர்பத்ரி, மசோதாவுக்கு எதிராக தன்னுடைய இதழில் வெளியிட்ட கட்டுரையை கல்யாண் இதழில் போதார் மறுபிரசுரம் செய்தார். மசோதாவை எதிர்த்து குடியரசுத் தலைவருக்கு அனைத்து இந்துக்களும் கடிதம் எழுத வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தார்.

அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்த வரையிலும் போதாரின் இந்த விரோதப் போக்கைச் சந்திக்க வேண்டியிருந்தது. அம்பேத்கர் பதவி விலக வேண்டும் என்ற முழக்கத்தையும் முன்வைத்தது கல்யாண் இதழ். ஹிந்து சட்ட மசோதாவைக் காட்டிலும் முக்கியமான அவசரப் பணிகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று போதார் கேட்டுக் கொண்டார். கடுமையான எதிர்ப்பின் காரணமாக மசோதா கிடப்பில் போடப்பட்டது. அதனால் மனம் உடைந்து போன அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். பெரும்பான்மை சமூகத்துக்கு எதிராகச் செயல்பட்டவர் என்று முத்திரை குத்தி நேருவின் மீதும் போதார் தொடர்ந்து தாக்குதலை நடத்தினார். அன்று நேரு மீது போதார் நடத்திய தாக்குதலை இன்று மோடி தொடருகிறார்.

கீதை, கடவுள், ஹிந்துத்துவா எனும் கட்டுரை ‘ஃபௌண்டன் இங்க்’ இதழுக்காக அக்சய முகுலுடன் நந்தினி கிருஷ்ணன் மேற்கொண்ட நேர்காணலாகும். கீதா பிரஸ் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை நடக்கும் சம்பவங்களைத் தொடர்ந்து கவனித்தால் இந்தியாவில் ஹிந்துராஷ்டிரத்தை நிறுவும் பணி இடைவிடாது தொடர்வது போல் தெரிகிறது எனும் நந்தினி கிருஷ்ணனின் கணிப்பு சரியானது என்று அக்சய் முகுல் ஏற்றுக் கொள்கிறார். ஆர்எஸ்எஸ், ஹிந்து மகாசபை, பாஜக ஆகியவற்றால் மட்டும் ஹிந்துராஷ்டிரம் அமைக்கும் பணி நிறைவேறாது என்பதை இந்துத்துவவாதிகள் நன்கறிவர். இக்கருத்தை மிகச் சாதாரண ஹிந்துக்களின் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல கீதா பிரஸ் போன்ற ஊடகத்தின் பணி தேவை என்பதை அறிந்து திட்டமிட்டே அதை வளர்த்தனர் என்கிறார் முகுல். கல்யாண் இதழ் வாசகர்கள் ’ஹிந்து தேசியம்’ என்ற கட்டிடத்தைக் கட்டி எழுப்புவதற்கான செங்கற்களாக மாறுவார்கள் என்பதை ஆர்எஸ்எஸ் அறிந்திருந்தது.

கீதா பிரஸ் ஏதோ ஹிந்து ஆன்மீகத்தை வளர்த்திட நடக்கும் அச்சகம் என்று மட்டுமே என்று பலரும் நினைத்தது தவறாகியுள்ளது. அதற்கு ஓர் அரசியல் காரணம் இருந்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளீர்கள் என்று நந்தினி கிருஷ்ணன் அவரைப் பாராட்டுகிறார். அக்சய் முகுல் நிறுவனத்தின் காப்பகத்திற்கே சென்று ஆய்வு நடத்தியுள்ளார். காப்பகத்தின் பொறுப்பாளராக இருந்த துஜாரி என்பவரிடமிருந்து பல உண்மைகளைத் தெரிந்து கொண்டதை முகுல் தெரிவிக்கிறார்.

கல்யாண் இதழ் இந்தி பேசும் மாநிலங்களில் பெருமளவில் வலம் வருவதுபோல் கல்யாண் கல்பதரு எனும் ஆங்கிலப் பத்திரிகை தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல நாடுகளிலும் வாசிக்கப்படுகிறது என்பதை ஆய்வில் அறிந்ததாகச் சொல்கிறார். புத்தகம் வெளிவந்ததும் முகுலின் மார்வாடி நண்பர்கள் மார்வாடிகளைப் பற்றி இப்புத்தகத்தில் குறிப்பிடக் காரணம் என்ன சற்றுக் கோபத்துடனேயே கேட்டுள்ளனர். ‘மார்வாடிகளுக்கும், கீதா பிரஸ் நிறுவனத்துக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பு காரணமாகவே அதை நான் எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’  என்று சொல்லி அவர்களை முகுல் சமாதனப்படுத்தியுள்ளார். 

புத்தகம் வெளியானதற்குப் பின்னர் பனராஸ் ஹிந்து பல்கலைகழகத்தில் புத்தகம் குறித்த உரையாட சில நண்பர்கள் ஏற்பாடு செய்வதாகக் கூறினார்கள். பின்னர் அவர்களே அங்கு தற்போதுள்ள நிலைமையில் இதுபோன்ற கூட்டங்களுக்குச் சாத்தியம் இல்லை என்பதைச் சொன்னார்கள். கார்ல் மார்க்ஸ் ‘கம்யூனிஸம் எனும் பூதம் ஐரோப்பா முழுவதும் கவ்வியுள்ளது’ என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் குறிப்பிடுவதுபோல் கம்யூனிச பயம் கீதா பிரஸையும் பிடித்தாட்டியதை முகுல் குறிப்பிடுகிறார். இதனாலேயே கர்பத்ரி மகராஜ் எழுதிய ‘மார்க்சிசமும் ராமராஜ்யமும்’ என்ற புத்தகத்தை கீதா பிரஸ் வெளியிட்டது. கம்யூனிச நாடுகளில் அனைவருக்குமான சொத்து என்ற வகையில் பெண்கள் நடத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் மிக அபத்தமாக எழுதப்பட்ட புத்தகம் அது என்கிறார் முகுல்.

தொகுப்பின் இறுதியில் ‘ஹிந்து இந்தியா உருவாக்கம்’ என்ற தலைப்பில் ‘ஃபேர் அப்சர்வர்’ பத்திரிகையின் நிலஞ்சனா சென்னுடனான உரையாடல் இடம் பெற்றுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னுடைய சங்பரிவாரங்களை மட்டுமல்லாமல் கீதா பிரஸ் போன்ற நிறுவனங்களையும் பயன்படுத்தி வருகிறது என்பதை முகுல் தெரிவிக்கிறார். கீதா பிரஸ் ஹிந்து தேசியவாதத்திற்கு அறிவார்ந்த ஆதாரங்களை வழங்கி வருகிறது. சில நேரங்களில் களத்தில் இறங்கியும் செயல்படுகிறது. ஆர்எஸ்எஸ் தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்று சொல்லிக் கொண்டாலும் தன்னுடைய அரசியல் பிரிவான பாஜக மூலம் இந்திய அரசியலில் முழு வீச்சில் ஈடுபடுவதை முகுல் சுட்டிக்காட்டுகிறார். வீட்டை நன்கு கவனித்துக் கொண்டு, தேசத்திற்காக மிகச் சிறந்த ஆண் குழந்தைகளைப் பெற்றுத் தருவதே பெண்களின் வேலை என்று கீதா பிரஸ் ‘நாரி ஆங்க்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. நவீன கல்வி மேலை நாட்டுப் பெண்களின் வாழ்வைச் சீரழித்துள்ளது என்றும் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. கிறித்தவர்கள், முஸ்லீம்கள்ளைப்போல் இல்லாமல் ஹிந்துக்கள் தங்களுக்குள் பிளவுபட்டிருக்கிறார்கள் என்று கீதா பிரஸ் தொடர்ந்து ஆதங்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி மீது ஹிந்து வலதுசாரிகள் எப்போதும் சந்தேகத்துடன் பார்த்தனர். காந்தி அப்போது மாபெரும் ஆளுமையாக உருவாகிக் கொண்டிருந்தார். காந்தி கொண்டிருந்த கருத்துகளுக்காக 1940களில் கல்யாண் இதழ் அவரை நேரடியாகத் தாக்கத் தொடங்கியது. இந்தியா பிளவுபட்டதற்கு காந்தியைக் காரணமாக்கி கீதா பிரஸ் அவரை கடுமையாகத் தாக்கியது. 1946இல் கோரக்பூரில் ஹிந்து மகாசபைக் கூட்டத்தில் புதிய இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஹிந்துக்களின் தேசமாகவே இந்தியா இருந்திட வேண்டும். அது ஹிந்துஸ்தான் அல்லது ஆரியவர்த்தனா என்றழைக்கப்பட வேண்டும்; அதற்கான கொடி காவிக் கொடியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கூட்டம் தீர்மானித்தது. அன்று ஹிந்து வலதுசாரிகள் திட்டமிட்டது போலவே இன்று பாஜக நினைப்பதும், அமல்படுத்தத் துடிப்பதும் தற்செயலானது அல்ல என்பதை நாம் நேரடியாகப் பார்க்கிறோம்.

கீதா பிரஸின் உண்மை முகம் அறியாதிருந்தவர்களுக்கு இந்நூல் அதிர்ச்சியளிக்கும் என்பதில் ஐயமில்லை. பிரச்சனையின் ஆழத்தை அக்சய் முகுல் நமக்கு ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். இதற்கான அவரின் உழைப்பு பாராட்டுதலுக்குரியது. குஜராத்தில் மோடி - அமித்ஷா இணையர்கள் நரவேட்டையாடி இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த தகல்வகளை மாறுவேடத்தில் சென்று அவர்களிடமிருந்தே தகவல்களைப் பெற்று ராணா அயூப் என்ற எழுத்தாளர் ‘குஜராத் ஃபைல்ஸ்’ என்ற ஆய்வு நூலை எழுதினார். அதேபோல் அக்சய முகுலும் கீதா பிரஸுக்கே நேரில் சென்று உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளார். இது போன்ற துணிச்சலும், திறமையும் கொண்ட பத்திரிகையாளர்கள் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. தங்கள் உயிரைப் பணயம் வைத்து உண்மையை வெளிக்கொண்டு வரும் இவர்கள் போற்றுதலுக்குரியவர்கள்.

நாள்தோறும் புதுப்புது வடிவங்களில் ஆர்எஸ்எஸ் இந்தியாவை ஹிந்துராஷ்டிரமாக உருவாக்கிட எடுத்து வரும் முயற்சிகள் கவலையளிக்கின்றன. இதை எதிர்கொள்ள மக்களுக்குத் தேவை மதநல்லிணக்கமும், விழிப்புணர்வும் ஆகும். எப்போதும் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே நாம் பெற்ற சுதந்திரத்தைக் காப்பாற்ற முடியும்.

அணிந்துரையில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் குறிப்பிடுவதுபோல் பேரா.தா.சந்திரகுரு தொடர்ந்து இதுபோன்ற நல்ல நூல்களை எழுதிட வாழ்த்துவோம். இந்த நூலை பேரா.சந்திரகுரு தன் மகனின் திருமண விழாவில் (சித்தார்த்-விசாலி திருமணம்) கலந்து கொண்டவர்களுக்குப் பரிசாக வழங்கியுள்ளார்.

 


Comments