வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழா விவாதத்தில் கேரள மாநில வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி வதேரா ஆற்றிய உரை
பிரியங்கா காந்தி வதேரா
நாடாளுமன்ற உறுப்பினர் - வயநாடு தொகுதி
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்
நாள்: 08-12-2025
நேரம்: மாலை 4 மணி
சபாநாயகர் அவர்களே, இன்று இந்த விவாதத்தில் பங்கேற்க எனக்கு
வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இன்று நாம் விவாதிக்கும் தலைப்பு வெறும் தலைப்பு அல்ல -
இந்திய ஆன்மாவின் ஒரு பகுதி... நமது தேசியப் பாடல் இந்திய மக்களை அடிமைத்தனத்தின் உறக்கத்திலிருந்து
எழுப்பிய உணர்வைக் குறிக்கிறது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து நிற்பதற்கான, உண்மை
மற்றும் அகிம்சையின் தார்மீகப் படுகொலையாளர்களை எதிர்கொள்வதற்கான தைரியத்தை அது மக்களுக்கு
அளித்தது.
இன்று இந்த விவாதம் ஓர் உணர்வை மையமாகக் கொண்டுள்ளது. வந்தே
மாதரம் பாடலை உச்சரிக்கும் போது, அந்த உணர்வு நமக்குள் கிளர்ந்தெழுகிறது. வந்தே மாதரம் பாடலை
உச்சரிக்கும் போது நாம், சுதந்திரப் போராட்டத்தின் முழு வரலாற்றை - அதன் துயரை,
அதன் போராரட்டத்தை, அதன் துணிச்சலை, அதன் ஒழுக்கத்தை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை மண்டியிட
வைத்த அதன் வலிமையை நினைவுபடுத்திக் கொள்கிறோம்.
சபாநாயகர் அவர்களே, வந்தே மாதரம் என்பது நவீன தேசியவாதத்தின்
வெளிப்பாடு, இந்திய மக்களை ஒன்றிணைத்த அரசியல், தார்மீக விருப்பம். அது மக்களை ஒரு
பொதுவான விதியின் வாரிசுகளாக, ஒரு பொதுவான எதிர்காலத்தின் சிற்பிகளாகப் பார்த்தது.
ஆனால் இன்றைய விவாதம் சற்று விசித்திரமாகவே எனக்குத் தோன்றுகிறது. நான் சொன்னது போல்,
நாட்டின் ஆன்மாவின் ஒரு பகுதியாக மாறியிருக்கும் இந்தப் பாடல், கடந்த 150 ஆண்டுகளாக
குடிமக்களின் இதயங்களில் நீடித்து நிலைத்திருக்கிறது. 75 ஆண்டுகளாக நமது நாடு சுதந்திர
நாடாக உள்ளது... இன்றைக்கு இந்த விவாதத்திற்கான தேவை என்ன? இங்கே நமது நோக்கம் என்ன?
மக்களால் நமக்கு வழங்கப்பட்ட பொறுப்பு, அவர்களின் நம்பிக்கை, அவர்களிடம் நமக்கிருக்கும்
பொறுப்பு, அதனை எவ்வாறு நாம் பயன்படுத்துகிறோம்
என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் இப்போது, இந்த நேரத்தில், இந்த
அவையில் நமது தேசியப் பாடலைப் பற்றி விவாதிக்கப் போகிறோம்...
இடையூறு...
இதற்கு என்ன காரணம்?
இன்றைக்கு இங்கே இந்த விவாதத்தை நாம் ஏன் நடத்திக் கொண்டிருக்கிறோம்?
இது நமது தேசியப் பாடல் - அது குறித்து விவாதம்
ஏதாவது இருக்க முடியுமா? இந்த விவாதத்தை இன்றைக்கு நாம் இரண்டு காரணங்களுக்காக நடத்திக்
கொண்டிருக்கிறோம். முதலாவதாக, வங்காள மாநிலத் தேர்தல்கள் வரவிருக்கின்றன. நமது பிரதமர்
அதில் தனது பங்கை வகிக்க விரும்புகிறார். இரண்டாவதாக, அவர்களின் நோக்கம் இதுதான்...
அவர்களின் பழைய நோக்கம். தலைவர் அவர்களே... சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள், நாட்டிற்காகப்
பெரும் தியாகங்களைச் செய்தவர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற்கும், பொதுமக்கள்
எதிர்கொண்டிருக்கும் அழுத்தமான பிரச்சனைகளிலிருந்து நாட்டின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கும்
வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள இந்த அரசு விரும்புகிறது... இதுதான் அவர்களின் ஒரே நோக்கம்.
கடந்த காலத்திற்குள்ளேயே நம்மைத் தக்கவைத்து, என்ன நடந்தது, என்ன கடந்து போனது என்பதைத்
தொடர்ந்து பார்க்க வைப்பதே உங்கள் நோக்கம். ஏனெனில் நிகழ்காலத்தை, எதிர்காலத்தைப் பார்க்க
இந்த அரசிற்கு விருப்பமில்லை; இந்த அரசால் அவ்வாறு செய்யவும் இயலாது.
சபாநாயகர் அவர்களே, உண்மை என்னவென்றால் - மோடி இப்போது
முன்பு இருந்த பிரதமராக இல்லை. அது இப்போது தெளிவாகத் தெரிகிறது. அவரது தன்னம்பிக்கை
குறைந்து வருகிறது. அவரது கொள்கைகள் நாட்டைப் பலவீனப்படுத்தி வருகின்றன. இதனை ஆளும்
கட்சி சகாக்களும் ரகசியமாக ஏற்றுக் கொள்வதால் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள். சபாநாயகர்
அவர்களே, நாட்டு மக்கள் இன்று மகிழ்ச்சியாக இல்லை. அவர்கள் பிரச்சனையில் உள்ளனர். ஏராளமான
பிரச்சனைகள் அவர்களைச் சூழ்ந்துள்ளன, அவற்றையெல்லாம் சரி செய்ய நீங்கள் தவறிவிட்டீர்கள்.
குறுக்கீடு…
சபாநாயகர் அவர்களே, அவரைச் சார்ந்தவர்களே அதிகாரக் குவிப்பால்
நாடு பாதிக்கப்படுவதாக கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையில் கடந்த காலத்தைப்
பற்றிப் பேசவில்லை என்றால், அவர்கள் எதைப் பற்றித்தான் பேசுவார்கள்? அவர்களால் வேறு
எதுவும் செய்ய இயலாது; அவர்கள் பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்ப மட்டுமே விரும்புகிறார்கள்.
அதனால்தான் வந்தே மாதரம் பற்றி இன்று பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த நாட்டின் ஒவ்வொரு
துகளிலும் வந்தே மாதரம் உயிருடன் இருக்கிறது; அது குறித்து எந்தவொரு விவாதமும் இருக்க
முடியாது. ஆனால் நீங்கள் ஒரு விவாதம் வேண்டுமென்று கேட்டீர்கள். நீங்கள் விவாதிக்க
விரும்பினீர்கள்... விவாதம் செய்வோம். பிரதமர் இன்று அந்த விவாதத்தைத் தொடங்கினார்.
அவர் உரையொன்றை நிகழ்த்தினார். நல்ல உரையை
- கொஞ்சம் நீண்டது என்றாலும் நல்ல உரை - அவர் நிகழ்த்தினார் எனச் சொல்வதில் எனக்கு
எந்தவொரு தயக்கமும் இல்லை. அதில் ஒரே ஒரு பலவீனம் மட்டுமே இருந்தது. நீங்கள் அனுமதித்தால்...
ஒரு பலவீனம்...
குறுக்கீடு...
மிகச் சிறந்த உரைகளை அவர் நிகழ்த்துகிறார் என்றாலும் உண்மைகளைச்
சொல்வதில் அவர் தோல்வியே காண்கிறார். உண்மைகளை பொதுமக்களுக்கு முன்வைப்பதில் ஒரு கலை
இருக்கிறது. நான் புதியவள், மக்களின் பிரதிநிதி, ஒரு கலைஞன் அல்ல. அதனால்தான் சில உண்மைகளை
சபையின் முன் வைக்க விரும்புகிறேன் - ஆனால் உண்மைகளாக மட்டுமே...
குறுக்கீடு...
வந்தே மாதரத்தின் ஆண்டு விழாவில் பெரிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு
செய்திருந்தீர்கள். அதில் பிரதமர் உரையாற்றினார். அந்த உரையில் 1896ஆம் ஆண்டு முதல்
முறையாக குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் இந்தப் பாடலை ஒரு மாநாட்டில் பாடினார் என்று
பிரதமர் சொன்னார்... அது எந்த மாநாடு என்று மட்டும் அவர் குறிப்பிடவே இல்லை... அது
ஹிந்து மகாசபை மாநாடா, ஆர்எஸ்எஸ் மாநாடா... அது காங்கிரஸ் மாநாடு என்று குறிப்பிட அவர்
ஏன் தயங்கினார்... என் உரையைத் தொடர இன்னும் சில எடுத்துக்காட்டுகளை நான் கொடுக்கலாமா...
குறுக்கீடு...
1875ஆம் ஆண்டில் தலைசிறந்த கவிஞர் பங்கிம் சந்திர சட்டோபாத்யாய்
இந்தப் பாடலின் முதல் இரண்டு சரணங்களை இயற்றினார். அதுதான் இப்போது நமது தேசியப் பாடலாக
அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1882இல் தனது ‘ஆனந்தமடம்’
நாவலை வெளியிட்டார். அந்த நாவலில் அதே பாடலை இடம் பெறச் செய்தார். ஆனால் கூடுதலாக நான்கு
சரணங்களை அப்போது சேர்த்தார். முதன்முதலில் 1896இல் காங்கிரஸ் அமர்வில் குருதேவ் ரவீந்திரநாத்
தாகூர் அந்தப் பாடலைப் பாடினார். 1905ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினைக்கு எதிராக நடைபெற்ற
போராட்டத்தின் போது, பொது ஒற்றுமைக்கான அழைப்பாக அனைத்துத் தெருக்களிலும் வந்தே
மாதரம் ஓங்கி ஒலித்தது. குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் போன்ற சிறந்த சுதந்திரப் போராட்ட
வீரர்கள் அந்தப் பாடலைப் பாடியவாறு வங்காளத்தின் தெருக்களில் வந்தனர். மாணவர்கள் முதல்
விவசாயிகள் வரை, வணிகர்கள் முதல் வழக்கறிஞர்கள் வரை அனைவரும் அந்தப் பாடலைப் பாடத்
தொடங்கினர். அந்தப் பாடலின் ஆற்றலைப் புரிந்து கொள்ளுங்கள்... அதைக் கேட்டதும் பிரிட்டிஷ்
பேரரசு நடுங்கியது; அதைக் கேட்டதும் மிகவும் மோசமான அந்தச் சாம்ராஜ்யத்திற்கு எதிராக
எழுந்து நிற்க, உண்மை மற்றும் அகிம்சையின் தார்மீகக் கொலையாளிகளை எதிர்த்துப் போராட,
தியாகிகளாக மாற நம் நாட்டு மக்கள் தங்கள் மனதை ஒன்று திரட்டி, தைரியமடைந்தனர். தாய்நாட்டிற்காகச்
சாகும் உணர்வை அந்தப் பாடல் மக்களிடையே தட்டியெழுப்பியது; அதுதான் அதன் ஆற்றல்… நம்
நாட்டுடனான அதன் தொடர்பு. ஆனால் 1930களில் வகுப்புவாத அரசியல் நம் நாட்டில் தோன்றிய
போது, அந்தப் பாடல் சர்ச்சைக்குரியதாக மாறியது.
1937இல்... இப்போது இன்னுமோர் எடுத்துக்காட்டைத் தருகிறேன். ஏனென்றால் பிரதமர்
தனது உரையில் அதைக் குறிப்பிட்டார். ஆனாலும் அவர் அப்போதும் தவறு செய்தார். அதனால்தான்
உண்மையான தகவல்களை இங்கே முன்வைக்கிறேன். 1937இல் காங்கிரஸ் மாநாடு கல்கத்தாவில் நடைபெறவிருந்தது.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். மோடி அக்டோபர்
20ஆம் தேதியிட்ட கடிதத்தை இந்த அவையில் வாசித்த போது, ஜவகர்லால் நேரு நேதாஜிக்கு கடிதம்
எழுதி அந்தப் பாடலைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் என்று குறிப்பிட்டார்.
ஆனால் அதற்கு மூன்று நாட்களுக்கு
முன்பு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பண்டிட் ஜவகர்லால் நேருவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்
- அதைப் பிரதமர் குறிப்பிடவே இல்லை. அந்தக் கடிதத்தில்...
குறுக்கீடு...
சுபாஷ் சந்திர போஸ் எழுதியிருந்ததைக் கேளுங்கள்… ‘என் அன்பு ஜவகர், குறிப்பு: வந்தே மாதரம் - கல்கத்தாவில்
ஒருமுறை பேசுவோம், அதை நீங்கள் செயற்குழுவிற்குக் கொண்டு வந்தால் அங்கேயும் விவாதிப்போம்.
நீங்கள் சாந்திநிகேதனுக்குச் செல்லும்போது இந்த விஷயம் பற்றி உங்களுடன் விவாதிக்க வேண்டுமென்று
டாக்டர்.தாகூருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். சாந்திநிகேதனுக்குச் செல்லும்போது தயவுசெய்து
அவருடன் இதைப் பேச மறந்து விடாதீர்கள்’. இந்தக் கடிதம் அக்டோபர் 17 அன்று எழுதப்பட்டது.
அக்டோபர் 20ஆம் தேதி நேருஜி அந்தக் கடிதத்திற்குப் பதிலளித்தார்.
அந்தப் பதிலின் ஒரு வரியைத்தான் பிரதமர் வாசித்துக் காட்டினார். அதை ஏன் அவர் முழுமையாக
வாசிக்கவில்லை? ஏனென்றால் நேருஜி அதில் என்ன சொல்கிறார் என்றால் - ‘வந்தே மாதரத்திற்கு
எதிரான தற்போதைய கூக்குரல் பெரும்பாலும் வகுப்புவாதிகளால் உருவாக்கப்பட்டது என்பதில்
எந்தவொரு சந்தேகமும் இல்லை. நாம் என்ன செய்தாலும், அது வகுப்புவாதிகளின் உணர்வுகளுக்கு
இணங்குவதாக இருந்து விடக் கூடாது. நமது செயல் உண்மையான குறைகளை அவை இருக்கும் இடத்தில்
நிவர்த்தி செய்வதாகவே இருக்க வேண்டும். 25ஆம் தேதி காலை கல்கத்தா சென்றடைவது என்று
இப்போது முடிவு செய்துள்ளேன். டாக்டர் தாகூரையும் மற்ற நண்பர்களையும் பார்ப்பதற்கு
எனக்கு நேரம் கிடைக்கும்’. இப்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பிரதமர் அமைதியாக
இருக்கிறார், அதனால் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
அடுத்து என்ன நடந்தது? நேரு பின்னர் கல்கத்தாவிற்குச் சென்று
குருதேவைச் சந்தித்தார். மறுநாள் குருதேவ் ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் அவர் எழுதுகிறார்...
அந்தக் கடிதம் ஆங்கிலத்தில் உள்ளது. அதன் ஒரு
பகுதியை நான் இப்போது ஹிந்தியில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். எப்போதும் பாடப்பட்டு
வரும் இரண்டு சரணங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று குருதேவ் கூறுகிறார். அந்தச்
சரணங்களை மீதமுள்ள கவிதையிலிருந்து, புத்தகத்தில் உள்ள பகுதிகளிலிருந்து பிரிப்பதில்
அவருக்கு எந்தச் சிரமமும் இல்லை. அந்த இரண்டு சரணங்களே சுதந்திரப் போராட்டத்தின் போது
பாடப்பட்டன என்றும், அவற்றைப் பாடும்போது தங்கள் உயிரைத் தியாகம் செய்த நூற்றுக்கணக்கான
தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக அவற்றைப் பாடுவது பொருத்தமானதாகவே இருக்கும்
என்றும் அவர் கூறினார். அந்த இரண்டு சரணங்களுடன் சேர்க்கப்பட்ட மற்ற சரணங்கள் வகுப்புவாதம்
கொண்டவையாக விளக்கப்படலாம் என்றும், அந்தக் காலச் சூழலில் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது
பொருத்தமற்றதாகவே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து 1937 அக்டோபர் 28 அன்று காங்கிரஸ் காரியக்
கமிட்டி அதன் தீர்மானத்தில் வந்தே மாதரத்தை தேசியப் பாடலாக அறிவித்தது. செயற்குழுக்
கூட்டத்தில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பண்டிட் நேரு, ஆச்சார்ய நரேந்திர
தேவ், சர்தார் படேல், குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த
மாமனிதர்கள் அனைவரும் அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டனர். அடுத்து நடந்ததை உங்களுக்குச்
சொல்கிறேன். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1950ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சபையில்
டாக்டர் ராஜேந்திரபிரசாத் இந்த இரண்டு சரணங்களையும் இந்தியாவின் தேசியப் பாடலாக அறிவித்த
போது கிட்டத்தட்ட அந்த மாமனிதர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பி.ஆர்.அம்பேத்கரும்
கலந்து கொண்டார். ஆளும் கட்சி சகாக்களின் தலைவரான சியாமா பிரசாத் முகர்ஜியும் கலந்து
கொண்டார். அந்த இரண்டு சரணங்களும் தேசியப் பாடல் என்று அறிவிக்கப்பட்டன; யாரும் எந்த
ஆட்சேபணையும் எழுப்பவில்லை.
இந்த உண்மைகளுடன் தொடர்புடைய மற்றொரு உண்மையையும் இங்கே
உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்று நமது தேசியப் பாடலைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம். நமது தேசிய கீதமும் ஒரு கவிதையின் பகுதியே ஆகும்.
அது ஒரு நீண்ட கவிதையின் ஒரு பகுதியே. தேசியப் பாடல், தேசிய கீதத்தின் பகுதி என்று
இரண்டையும் தேர்ந்தெடுப்பதில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் மிகப்பெரிய பங்கு ஆற்றியிருந்தார்....
அரசியலமைப்பு நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வந்தே
மாதரத்தின் வடிவத்தைக் கேள்விக்குட்படுத்துவது, தங்கள் ஆழ்ந்த ஞானம் கொண்டு அந்த முடிவை
எடுத்த பெரிய ஆளுமைகளை அவமதிப்பதாகவே இருக்கும். அதுமட்டுமல்லாமல் அத்தகைய கேள்விகள்
அரசியலமைப்புக்கு எதிரான நோக்கத்துடன் இருப்பதையும் அது அம்பலப்படுத்தும். மகாத்மா
காந்தி, ரவீந்திரநாத் தாகூர், ராஜேந்திர பிரசாத், பாபாசாகேப் அம்பேத்கர், மௌலானா ஆசாத்,
சர்தார் படேல், சுபாஷ் சந்திர போஸை விடத் தங்களைப் பெரியவர்கள் என்று கருதும் அளவுக்கு
ஆளும் கட்சி சகாக்கள் கர்வத்துடன் இருக்கிறார்களா?
மோடி தனது உரையில், நாட்டைப் பிளவுபடுத்தும் மனநிலையாலேயே தேசியப் பாடல் வெட்டிச் சுருக்கப்பட்டது
என்று கூறியது, இந்த நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்காகத் தங்கள் ஒட்டுமொத்த
வாழ்க்கையையும் அர்ப்பணித்த பெரிய மனிதர்கள் அனைவரையும் அவமானப்படுத்தும் செயலேயாகும்.
வந்தே மாதரம் துண்டாடப்பட்டதாகக் குற்றம் சாட்டுவதன் மூலம், ஒட்டு மொத்த அரசியலமைப்பு
நிர்ணய சபை மீதே நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். அந்தச் சபையின் தலைவர்கள் அனைவர்
மீதும் குற்றம் சாட்டுகிறீர்கள். நமது அரசியலமைப்பு நிர்ணய சபை, நமது அரசியலமைப்பின்
மீதான வெளிப்படையான தாக்குதலாகவே உங்கள் செயல் இருக்கிறது.
மேலும் ஜவகர்லால் நேருவைப் பொறுத்தவரை... அவர் நம் நாட்டின்
பிரதமராக 12 ஆண்டுகள் இருந்துள்ளார். கிட்டத்தட்ட
அதே எண்ணிக்கையிலான ஆண்டுகள் அவர் சிறையில் இருந்திருக்கிறார்... ஏன்? இந்த நாட்டின்
சுதந்திரத்திற்காக... அதன் பிறகு அவர் 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தார்... அவரை நீங்கள்
அதிகம் விமர்சிக்கிறீர்கள். ஆனால் இஸ்ரோவை அவர் உருவாக்கவில்லை என்றால், இன்று மங்கள்யான்
நம்மிடம் இருக்காது. டிஆர்டிஓவை அவர் உருவாக்கவில்லை என்றால், தேஜாஸ் உருவாக்கப்பட்டிருக்காது.
ஐஐடிகள், ஐஐஎம்கள் அவரால் உருவாக்கப்படவில்லை என்றால், இன்று தகவல் தொழில்நுட்பத்தில்
நாம் முன்னேறியிருக்க முடியாது. எய்ம்ஸ் உருவாக்கப்படவில்லை என்றால், கொரோனாவின் மிகப்பெரிய
சவாலை நாம் எவ்வாறு எதிர்கொண்டிருப்போம்?...
இடையூறு...
பிஹெச்இஎல், கெயில், செயில், பக்ரா நங்கல் - நீங்கள் விற்றுக்
கொண்டிருக்கும் இவையனைத்தையும் அவர் உருவாக்கவில்லை என்றால், இந்த வளர்ந்த இந்தியா
எவ்வாறு உருவாகியிருக்கும்?
பண்டித ஜவகர்லால் நேரு இந்த நாட்டிற்காக வாழ்ந்து, நாட்டிற்காகவே
இறந்தார். இன்னும் கேளுங்கள்… எனது ஆலோசனையை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு ஓர்
ஆலோசனை வழங்குகிறேன். நமது பிரதமர் பன்னிரண்டு ஆண்டுகளாக இந்த அவையில் இருக்கிறார்,
நான் பன்னிரண்டு மாதங்களாக மட்டுமே இங்கே இருக்கிறேன்.
இருப்பினும் இது ஒரு சிறிய ஆலோசனைதான். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்பு தேர்தல்கள்
நடந்தன. எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சித் தலைவர்களும் தனக்கு எத்தனை அவமானங்களை இழைத்திருக்கிறார்கள்
என்பதற்கான பட்டியலைப் பிரதமர் வெளியிட்டார். அவர் 90-99 அவமானங்களுக்கான பட்டியலைத்
தொகுத்துக் கொடுத்தார். நான் இப்போது அவருக்கு ஒரு சிறிய ஆலோசனையை வழங்கலாம் என்று
நினைக்கிறேன்: நேரு மீது உங்களுக்கு என்ன புகார்கள் இருந்தாலும், அவர் என்ன தவறுகள்
செய்திருந்தாலும், உங்கள் மனதில் என்ன இருந்தாலும் - அவரை நோக்கி வீச விரும்பும் அனைத்து
அவமானங்களுக்கான பட்டியலை நீங்கள் தயாரியுங்கள்... இல்லை, இல்லை, அது இன்னும் போதாது
என்றால் 999 அவமானங்கள், 9,999 அவமானங்கள்... என்று ஒரு பட்டியலைத் தயாரியுங்கள். அதற்குப்
பிறகு ஒரு நேரத்தை நிர்ணயித்துக் கொள்வோம். இன்றைக்கு வந்தே மாதரம் பற்றி பத்து மணி
நேரம் விவாதித்த மாதிரி, சபாநாயகரிடம் அனுமதி பெற்று ஒரு நேரத்தை நிர்ணயித்துக் கொள்வோம்
- பத்து மணி நேரம், இருபது மணி நேரம், நாற்பது மணி நேரம் - உங்கள் புகாருக்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்
விவாதிப்போம்... நீங்கள் அமைதியாக இருங்கள், நாங்கள் விவாதம் பண்ணுகிறோம்.
ஆனால் எங்களை இங்கே அனுப்பி வைத்திருக்கும் பொதுமக்களின்
பிரச்சனைகளை விவாதிக்க, தீர்க்கவே இந்த அவையின் விலைமதிப்பற்ற நேரத்தைப் பயன்படுத்த
வேண்டும். அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்புறம்தான்
மற்றவையெல்லாம்… ‘இத்துடன் இந்த விவகாரத்தை முடித்துக் கொள்வோம்’ என்பதை ஆங்கிலத்தில் ‘Once and for all, let's
close the chapter’ என்று சொல்வதைப் போல… அத்துடன் இதனை முடித்துக் கொள்வோம். இந்த
நாடு எல்லாப் புகார்களையும் கேட்கட்டும். யார் என்ன செய்தார்கள்? இந்திரா காந்தி என்ன
செய்தார்? ராஜீவ் காந்தி என்ன செய்தார்? உறவினர்களுக்குச் சலுகை என்றால் என்ன? நேரு
என்ன தவறுகள் செய்தார்? நான் உங்களுக்குச் சொல்கிறேன் - அத்துடன் அது முடிந்து விடும்.
அதற்குப் பிறகு வேலையின்மை, பணவீக்கம், பெண்கள் பிரச்சனைகள், பிரதமர் அலுவலகத்தில்
என்ன நடக்கிறது, என்ன விவாதிக்கப்படுகிறது, பந்தயச் செயலி தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்குள்
என்ன நடக்கிறது...
குறுக்கீடு...
உங்கள் அமைச்சரின் பெயர் வந்திருக்கிறது. அதைப் பற்றி விவாதிக்கலாம்...
குறுக்கீடு...
சபாநாயகர் அவர்களே, நான் உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.
ஆனால் அவர்கள் எந்த உண்மைகளும் இல்லாமலேயே பல ஆண்டுகளாக எங்கள் மீது குற்றம் சாட்டி
வருகின்றனர். நாங்கள் அமைதியாகக் கேட்டு வந்திருக்கிறோம், அந்த அமைதி அவர்களுக்கும்
கொஞ்சம் மீதம் இருக்கட்டும். அவ்வாறு அமைதியாகக் கேட்பதற்கான தைரியம் அவர்களுக்கு வேண்டும்.
இது அரசியல்... நாங்கள் பேசுவோம், நீங்களும் பேசலாம்.
இன்றைய விவாதம் வெறுமனே கவனத்தைத் திசைதிருப்புவதற்காக
மட்டுமே நடத்தப்படுகிறது. ஏனென்றால் இந்த அரசு நாட்டின் தற்போதைய நிலைமையின் யதார்த்தத்தை
மறைக்க விரும்புகிறது. இளைஞர்கள் இன்று அதிகம் சிரமப்படுகின்றனர். அவர்கள் அதிகச் சிக்கலில் மாட்டிக்
கொண்டிருக்கின்றனர்... ஆவணங்கள் தொடர்ந்து கசிந்து வருகின்றன, வேலையின்மை அதிகரித்து
வருகிறது, பணவீக்கம் மிக அதிக அளவிற்கு உயர்ந்துள்ளது. இவற்றையெல்லாம் இந்த அவையில்
நாம் ஏன் விவாதிக்கவில்லை?
இடஒதுக்கீடு தொடர்பாக நடந்து வரும் தவறுகளைப் பற்றி நாம்
ஏன் இங்கு விவாதிக்கவில்லை? பெண்களைப் பற்றிப் பேசி, அதனைத் தொடர்ந்து பெரிய அறிவிப்புகள்
வெளியிடப்படும். ஆனாலும் அவர்களின் நிலைமைகளை மேம்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எதுவும்
எடுக்கப்படவில்லையே - ஏன்? இந்தக் கதவுகளுக்கு வெளியே நின்று கொண்டு, பத்திரிகையாளர்களே...
உண்மைகள் இல்லாமல் குற்றச்சாட்டுகளைச் சொல்ல வேண்டாம் என்று நீங்கள் சொன்னீர்கள். அப்படியென்றால்
நான் பேச வேண்டுமா?... விரைவில் பேசுவேன். பிறகு நீங்கள் அதை முடித்துக் கொள்ளலாம்.
பெருநகரங்களில் மாசுபாடு அதிகமாக உள்ளது என்றாலும் இந்த
அவையில் நாம் மிகச் சிறிய விஷயங்களை மட்டுமே விவாதிப்போம். திரும்பத் திரும்ப நாங்கள்
திரும்பிப் பார்க்க வேண்டுமென்று நீங்கள் விரும்பு அந்தக் கடந்த காலத்து விஷயங்களை
மட்டுமே விவாதிப்போம். எதிர்காலம், நிகழ்காலம், உண்மையான பிரச்சனைகளைப் பற்றி எதுவும்
விவாதிக்க மாட்டோம். அவையெல்லாம் மிகச் சிறிய பேச்சு என்ற அளவிலேயே இருக்கும். தைரியம்
இருந்தால் எதிர்காலத்தைப் பற்றிப் பேசுங்கள். தைரியம் இருந்தால் வேலையின்மை ஏன் இருக்கிறது,
ஆவணங்கள் ஏன் கசிகின்றன என்பது பற்றிப் பேசுங்கள்.
சரி, நான் இப்போது எனது பேச்சை முடிக்கிறேன். சபாநாயகர்
அவர்களே, உண்மை என்னவென்றால் - அவர்களின் ஆட்சி ஒடுக்குமுறை ஆட்சி, அவர்களது அரசியல்
என்பது காட்சி அரசியல், நிகழ்வு மேலாண்மை அரசியல், தேர்தலுக்குப் பின் அடுத்த தேர்தல்
என்ற அரசியல், பல்வேறு கவனச்சிதறல்களுக்கான அரசியல். உங்கள் அரசு ஒவ்வொரு நாளும் நிராகரித்து
வருகின்ற இந்த நாட்டின் நம்பிக்கைகள் மீதான வேண்டுகோள் என்பதாகவே வந்தே மாதரம் இருக்கிறது.
இன்றைக்கும்கூட நமது எல்லையில் எதிரியை எதிர்கொள்ளும் சிப்பாயின்
இதயத்தில் வந்தே மாதரம் எதிரொலிக்கிறது. இன்றைக்கும்கூட நமது விளையாட்டு வீரர்கள் சர்வதேச விளையாட்டுகளில்
பங்கேற்கும் போது, அவர்களின் இதயத்
துடிப்பில் வந்தே மாதரம் இருக்கிறது. இன்றைக்கும்கூட தேசியக் கொடி பறப்பதைக் காணும்
இந்த நாட்டின் கோடிக்கணக்கான குடிமக்கள் வந்தே மாதரம், வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்றே முழக்கமிடுகின்றனர். 1905 முதல் ஒவ்வொரு காங்கிரஸ் கூட்டத்திலும் வந்தே மாதரம்
கூட்டாகப் பாடப்பட்டு வருகிறது. உங்கள் கட்சிக் கூட்டங்களில் அது பாடப்படுகிறதா இல்லையா
என்பதை நீங்கள் கூறுங்கள்.
நமது நாட்டின் ஆன்மாவின் இந்த மகத்தான மந்திரத்தை மறுப்பதன்
மூலம், நீங்கள் பெரும் பாவத்தைச் செய்கிறீர்கள். அந்தப் பாவத்திற்கு காங்கிரஸ் கட்சி
ஒருபோதும் உடந்தையாக இருக்காது. இந்தத் தேசியப் பாடல் - வந்தே மாதரம் எங்களுக்கு மிகவும்
பிரியமானது. அது எப்போதும் எங்களுக்குப் புனிதமானது. என்றென்றைக்கும் அது எங்களுக்குப்
புனிதமானதாகவே இருக்கும்.
.jpg)

.jpg)


Comments