வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டு விழா விவாதத்தில் மேற்குவங்க மாநில கிருஷ்ணாநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா ஆற்றிய உரை

மஹுவா மொய்த்ரா

நாள்: 08-12-2025

நேரம்: 1745 மணி

நன்றி, மாண்புமிகு.தலைவர் அவர்களே! நாம் அனைவரும் இன்று இங்கே எதற்காகக் கூடியிருக்கிறோம்? தற்போதைய அரசு நமது தேசியப் பாடலான வந்தே மாதரம் பிறந்த 150வது ஆண்டில், அந்தப் பாடல் மீது விவாதம் நடத்த விரும்புகிறது - அதனால்தான் இங்கே கூடியிருக்கிறோம். மிகக் கவனமாக நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்டோம். ராஜ்நாத்சிங், பிரதமர் இருவரும் இந்த அவையில் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.       

‘மிக அழகான சிந்தனைதான் என்றாலும், அது இதயத்திலிருந்து வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்’

இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தியாவில் இளைஞர்களிடையே இருக்கின்ற உண்மையான வேலையின்மை இருபது சதவிகிதத்திற்கும் கூடுதலாக இருக்கின்ற முரண் இங்கே இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நம்மிடம், நாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கோடிக்கணக்கான இந்தியர்களிடம் இருந்து மறைந்து விடப் போவதில்லை. தேசியத் தலைநகரில் AQI அளவுகள் வழக்கமாக 800ஐக் காட்டிலும் அதிகமாகவே  இருந்து வருவதால் மூச்சுத் திணறுகிறது. பாஜக அல்லாத மாநிலங்களுக்கு மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம், வீட்டுவசதி, தண்ணீர் ஆகியவற்றிற்கான நிலுவைத் தொகையை வழங்காமல் ஒன்றிய அரசு வேண்டுமென்றே தவிர்த்து வருகிறது; தங்கள் உரிமைகளைப் பெருமளவிற்குப் பறிக்கின்ற அவசரஅவசரமான, தன்னிச்சையான செயல்முறைகளுக்கு கோடிக்கணக்கான மக்கள் உட்படுத்தப்படுகிறார்கள்.       

எதிர்க்கட்சியில் உள்ளவர்களை மிரட்டி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான பிரச்சனைகளை அவர்கள் எழுப்புவதை ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் தடுத்து வரும் இந்த அரசு ​​திடீரென ஒரு பாடலின் வரலாற்றுச் சிக்கல்களைப் பற்றி விவாதிப்பதை மிகமிக முக்கியம், அவசியம், அவசரம் என்று கருதுகிறது. இன்றைய இந்தியாவில் இருக்கின்ற வெறுப்பு மற்றும் பிரிவினைவாதத்தை இந்தப் பாடலுடன் இணைக்கலாம் எனும் அவர்களின் கூற்று மேலும் முரண்பாடாகவே இருக்கிறது. 

சொல்லப்போனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு 2025 நவம்பர் 24 அன்று... வந்தே மாதரம் என்பது உங்கள் பார்வையில் அநாகரிகமான, மேலோட்டமான முழக்கம்… என்றே கடந்த வாரம் நாடாளுமன்றச் செய்திக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் திடீரென்று அதுபற்றி இந்த அவையில் பத்து மணி நேரம் நீங்கள் விவாதிக்க வேண்டும் என்று  விரும்புகிறீர்கள். ஏன்?

ஏன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்… ஏனென்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை... வந்தே மாதரத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது 2026 வங்காளத் தேர்தலில் பாஜகவிற்கு நன்மை பயக்கும் என்று உங்கள் அன்பிற்குரிய பாஜக ஐடி செல் ஊழியர் யாராவது உங்களுக்குச் சொல்லியிருக்கலாம். இந்த விவாதம் நடக்கின்ற இந்தக் குறிப்பிட்ட காலநேரத்திற்குப் பின்னால் வேறொரு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. அதை நான் உறுதியாகச் சொல்வேன்.

வரலாற்றுப் பாடத்தை உங்களுக்குச் சொல்வதற்கான அற்புதமான வாய்ப்பைப் பெற்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அதுமட்டுமல்லாது வந்தே மாதரத்தை விவாதிப்பது வங்காளத்தின் ஆன்மாவிலிருந்து, வங்காளத்தின் மனங்களிலிருந்து நீங்கள் எந்த அளவிற்கு விலகி இருக்கிறீர்கள் என்பதையும், உங்கள் குறுகிய தேர்தல் இலக்குகளுக்கு பிணைக்கைதியாக ஒருபோதும் எங்கள் 'அன்னை' இருக்க மாட்டாள் என்பதையும் நிரூபித்துக் காட்டும் என்பதை உங்களுக்கு எடுத்துக்காட்டுவதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இப்போது வரலாற்றுப் பாடத்தை நாம் தொடங்கலாம். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? பாடம் தொடங்கட்டும்.         

ஸ்ரீபங்கிம் சந்திர சட்டர்ஜியின் இரண்டு சரணங்களைக் கொண்ட வந்தே மாதரம், முதன்முதலாக 1875 நவம்பர் ஏழாம் நாளில் 'வங்க தர்ஷன்' என்ற இலக்கிய இதழில் வெளியானது. அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக தேசபக்த வங்காளிகளான ஷிஷிர் கோஷ், ஆனந்த் மோகன் போஸ், சுரேந்திரநாத் பானர்ஜி ஆகியோரால் கல்கத்தாவில் நிறுவப்பட்ட இந்திய லீக்கைத் தவிர, இந்தியாவில் வேறு எந்தவொரு தேசபக்தி சங்கமோ அல்லது தேசியவாத அமைப்போ இருக்கவில்லை. அப்போது ஆர்எஸ்எஸ், பாஜக எல்லாம் எங்கும் தென்படவில்லை. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 1925இல்தான் ஆர்எஸ்எஸ் உருவாக்கப்பட்டது; பாஜக 105 ஆண்டுகளுக்குப் பிறகு 1980இல் உருவாக்கப்பட்டது.

வந்தே மாதரம் பாடலை ஆளும் கட்சி, சங்பரிவார் பாடுவதில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். 2017ஆம் ஆண்டு நடந்த நகைச்சுவையான சம்பவம் நன்றாக என்னுடைய நினைவிலிருக்கிறது, அது தொலைக்காட்சியில் என்று நினைக்கிறேன் அங்கே வந்திருந்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஒருவரிடம் வந்தே மாதரம் பாடலைப் பாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. தனது மொபைல் போனையே பார்த்துக் கொண்டிருந்த அவரால் அந்தப் பாடலைப் பாட முடியவில்லை. மேலும் 2017 ஆகஸ்ட் மாதத்தில், உத்தரப் பிரதேச அரசில் இருந்த கேபினட் அமைச்சரால் அந்தப் பாடலை ஒரு தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியில் சரியாகப் பாட முடியவில்லை என்பதும் எனது நினைவில் நீங்காதிருக்கிறது.

2019 ஜனவரியில் கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு பாஜக தலைவர்கள் ஒரு போராட்டத்தை நடத்தினர். அங்கே அவர்கள் முஸ்லீம்களைப் பாட வைக்க முயன்றனர். அந்தப் பாடலை அவர்களாலேயே சரியாகப் பாட முடியவில்லை. அதனால் அந்தக் கூட்டம் குழப்பத்திலே முடிந்து போனது. பாஜக தலைவர்களும், அவர்களைப் பின்பற்றுபவர்களும் ‘இந்த நாட்டில் வாழ விரும்பினால், நீங்கள் வந்தே மாதரம் பாட வேண்டும்’ என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர். ஆக வெளிப்படையாகச் சொல்வதென்றால், இந்தப் பாடல் மீதான பாஜகவின் அர்ப்பணிப்பு மிக மோசமாக எழுதப்பட்ட நகைச்சுவை நாடகமாகவே இருக்கிறது.

'வந்தே மாதரம்' என்ற முழக்கத்தைப் பயன்படுத்துவதைத் தேசத்துரோகச் சட்டங்களின் கீழ் தடை செய்த ஆங்கிலேயர்கள், அந்தப் பாடலை எந்தவொரு பொது இடத்தில் பாடுவதையும் அனுமதிக்கவில்லை.  இந்தியாவின் இளைய சுதந்திரப் போராட்ட வீரரும், வங்காளத்தின் துணிச்சல் மிக்க மகனுமான குதிராம் போஸ் 1908ஆம் ஆண்டு தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, ​​ வந்தே மாதரம் பாடல் அவரது உதடுகளில் இடம் பெற்றிருந்தது. 1927ஆம் ஆண்டு ராம் பிரசாத் பிஸ்மில் கோரக்பூர் சிறையில் தூக்குமேடைக்கு நடந்து சென்ற போது, பைசாபாத் சிறையில் ​​அஷ்பகுல்லா கான் தூக்குமேடைக்கு நடந்து சென்ற போது என்று அவர்கள் அனைவரின் உதடுகளிலும் வந்தே மாதரம் முழக்கம் நிறைந்திருந்தது. ஆனால் உங்கள் நாடாளுமன்றக் குறிப்பில் அந்த முழக்கம்தான் அநாகரிகமானது, மேலோட்டமானது என்று கடந்த வாரம் குறிப்பிடப்பட்டது. 'வந்தே மாதரம்' பாடலின் பாதுகாவலர்கள் என்று கூறிக் கொண்டு, அந்தப் பாடலின் முக்கியத்துவத்தை எங்களுக்கு குறிப்பாக வங்காளிகளுக்கும் மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களுக்கும் கற்றுத் தர நீங்கள் புறப்பட்டிருக்கும் இந்த நிலையில் - சுதந்திரப் போராட்டத்துடன் தங்களுக்கு ஏதோவொரு வகையில் தொடர்பு இருப்பதாக பாஜகவில், ஆர்.எஸ்.எஸ்-ஸில் அல்லது ஆளுங்கட்சி வரிசையில் உள்ளவர்களில் யாராலாவது உரிமை கோர முடியுமா?

1909 மற்றும் 1938 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்தமான் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்களில் சுமார் 68 சதவிகிதம் பேர் அதாவது 398 பேர் வங்காளிகள். 95 புரட்சியாளர்களுடன் இரண்டாவது பெரிய குழு பஞ்சாபைச் சார்ந்தது. பரின் கோஷ், உல்லாஸ்கர் தத், இந்துபூஷண்ராய் போன்றோரின் பெயர் ஏன் அந்தத் தனிமைச் சிறைச்சாலைக்கு வைக்கப்படவில்லை? வங்காளத்திற்கு நீங்கள் செலுத்தியிருக்கும் மரியாதை என்ன? வந்தே மாதரம் தந்த பூமிக்கு என்ன மரியாதையை நீங்கள் தந்திருக்கிறீர்கள்? ஆனால் அதைப் பற்றி இன்றைக்கு நீங்கள் விவாதிக்கிறீர்கள்.

பங்கிம் சந்திர சட்டோபாத்யாயின் ஆனந்தமடம் நாவல் 1882ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த நாவலில் சேர்க்கப்படும் வரை வந்தே மாதரம் பாடல் அதிகமாகப் பிரபலமடையவில்லை. ​​ அந்தப் பாடலை நாவலில் இணைத்து வெளியிட்டபோது, ​​ பங்கிம்  அதில் நான்கு கூடுதல் சரணங்களைச் சேர்த்தார். 1875இல் எழுதிய முதல் இரண்டு சரணங்கள் தாய்நாட்டிற்கான பாடல் வரிகளாக இருந்தன. ‘பேரின்பத்தை அளிக்கும் அழகு' என்று அது குறிப்பிடுகிறது. 1881-82இல் நாவலுடன் இணைக்கப்பட்ட பாடல் அசல் பாடலின் தொனியிலிருந்து மாறுபட்ட தொனியுடனே இருந்தது.    

இனிமையும் வெளிச்சமும் நிறைந்திருந்த அந்த உருவம் அப்போது பயங்கரமான சூழலுடனான நாடகத்தன்மையுடன்,  போரின் அலங்காரங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனாலும் அது சன்னியாசி கிளர்ச்சி பற்றிய நாவலின் கதையுடன் ஒத்துப் போனது.   

தான் எழுதிய அடுத்த நான்கு சரணங்களில், ஏழு கோடி என்று பொருள்படும் சப்த கோடி என்ற சொற்களைப் பங்கிம் சந்திர சட்டோபத்யாய் பயன்படுத்தியது இங்கே கவனிக்கத்தக்கது. ​​ ஏழு கோடி என்ற அந்த எண்ணிக்கை  1871 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கிடைத்த பிரிக்கப்படாத வங்காளம், பீகார், ஒடிசா, அசாமின் மக்கள்தொகையே ஆகும். அந்தப் பாடல் வங்காளத்தைப் பற்றி எழுதப்பட்டது என்பதே அதன் பொருளாகும். அவர் குறிப்பிட்ட அந்தத் தாய் வங்காளத்துடன் தொடர்புடைய கருத்தாக, வங்காளத்தின் சூழலுடனே இருக்கிறாள். ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான பாடலாக அந்தப் பாடல் முதலில் எழுதப்படவில்லை. அது அவ்வாறாக இல்லை. அது குறித்து நாம் மிகத்  தெளிவுடன் இருக்க வேண்டும்.     

சரி, அந்தப் பாடல் எப்படித் தேசியப் பாடலாக மாறியது? 1997-இல் ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி அதனைப் பாடினார்? எப்படி என்று சொல்ல முடியுமா? 1885வாக்கில் 'தேஷ் ராகினி' பாடலை அடிப்படையாகக் கொண்டு அதனை முதல் இசை அழைப்பாக இயற்றியவர் வேறு யாருமல்ல - விருது பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்தான். அந்தப் பாடலை, அதன் இசையை மிகவும் விரும்பிய ரிஷி பங்கிம் 1886இல் தனது 'ஆனந்தமடம்' நாவலின்  மூன்றாவது பதிப்பில் அதனைச் சேர்த்துக் கொண்டார். ‘ஆசிரியர் உயிருடன் இருந்த போது அதன் முதல் சரணத்திற்கு இசையமைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது’ என்று 1937இல் தாகூர் நேருவுக்கு எழுதினார். பங்கிம் 1894இல் மரணமடைந்தார். ‘பங்கிம் உயிருடன் இருந்தபோது நான்தான் அதற்கு இசையமைத்தேன். அதைப் பாடிய முதல் நபர் நான்தான்’ என்று தாகூர் கூறினார். ஆக 1896இல் கல்கத்தா காங்கிரஸின் பொதுக் கூட்டத்தில் அதைப் பகிரங்கமாகப் பாடிய முதல் நபர் தாகூரே. அந்தப் பாடலுக்கு இசையமைத்துக் கொடுத்த தாகூர், அதனை ரஹிம்துல்லா சயானி, தாதாபாய் நௌரோஜி, சுரேந்திர நாத் பானர்ஜி ஆகியோர் முன்னிலையில் பகிரங்கமாகப் பாடினார்.

அந்தப் பாடல் எப்போது பெரும் புகழ் பெற்றது? 1905ஆம் ஆண்டு கர்சன் பிரபு கொண்டு வந்த வங்கப் பிரிவினைக்கு எதிர்வினையாக சுதேசி இயக்கம் நடந்த பிறகுதான் அது பிரபலமடைந்தது. தினமும் காலையில் நடைபெற்ற ஊர்வலங்களில் மக்களிடம் தேசிய உணர்வை அதிகரிப்பதற்காகப் பாடகர்கள் அதைப் பாடினர். 1905 அக்டோபர் 16ஆம் நாள் ரக்ஷா பந்தன் தினத்தன்று நடைபெற்ற மிகப் பிரபலமான பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்திற்கு ரவீந்திரநாத் தாகூர் தலைமை தாங்கினார். ஹிந்துக்களும், முஸ்லீம்களும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொண்டு வந்தே மாதரம் முழங்கினர்.  

வந்தே மாதரத்தை இன்றைக்கு ஊக்குவிப்பதாகக் கூறும் பாஜக அரசு ரக்ஷா பூர்ணிமாவின் நிலவு, ஈத்-தின் நிலவு பிரிக்கப்படுவதை உறுதி செய்துள்ளது. தங்கள் கூரையில் நிலவைக் கண்டு ஹிந்துப் பெண்கள் கர்வ சவுத் விரதத்தை முடித்துக் கொள்ளலாம். ஆனால் பாஜக ஆளும் மாநிலத்தில் முஸ்லீம் ஒருவர் அதே நிலவிற்குத் தன்னுடைய கூரையில் ஈத் கா நமாஸ் செய்வது தடுக்கப்படுகிறது. மேலும் இந்தியாவைப் பிளவுபடுத்தியதற்கு ஒரு பாடல் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

தாகூரின் மருமகள் சரளா தேவி சௌதுராணி 1905ஆம் ஆண்டு பனாரஸில் நடந்த காங்கிரஸ் அமர்வின் போது அந்தப் பாடலை மீண்டும் பாடினார். அவர் சப்தகோடி - ஏழு கோடிகள் என்பதை டிரிங்ஷோ கோடி என்று அப்போது மாற்றிக் கொண்டார். அதாவது முப்பது கோடி என்று மாற்றினார். அது 1901ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில்  இந்தியாவின் மக்கள்தொகையாகும். ஒட்டுமொத்த இந்தியாவிற்கானது என்ற ஈர்ப்பை அந்தப் பாடல் பெற்றது அதுவே முதல் முறையாகும். 1905 டிசம்பரில்  இந்தியன் ஒபினியன் பத்திரிகையில் காந்திஜி ‘இந்தப் பாடல் மிகவும் பிரபலமானது, நாம் நம் தாயை வணங்குவது போல; இந்தப் பாடல் இந்தியாவிற்கான ஒரு உணர்ச்சிமிக்க பிரார்த்தனை’ என்று எழுதினார்.

தாகூர் தான் இயற்றிய பாடல்கள் சிலவற்றில் ‘வந்தே மாதரம்’ என்ற பல்லவியை ஒரு முழக்கமாகவே தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். தனது பல பாடல்களில் ‘ஒரு காரணத்திற்காக ஆயிரம் உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன’ என்று அவர் அதனைக் குறிப்பிடுகிறார். வந்தே மாதரம் என்ற சொல் அவரது பல பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

1905 மற்றும் 1908-ஆம் ஆண்டுகளில் நடந்த சுதேசி இயக்கத்தில் வந்தே மாதரம்  ஒரு வீர முழக்கமாக ஒலித்தது. மகாகவி சுப்பிரமணிய பாரதி 1905-இல் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும், கடலோர ஆந்திரப் பிரதேசம், விஜயவாடா முதல் பஞ்சாபின் கால்வாய்கள் மற்றும் ராணுவ முகாம்கள் வரை அனைத்துக் கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும் மக்கள் அந்தப் பாடலைப் பாடத் தொடங்கினர். அங்கிருந்த அனைவரும் சமஸ்கிருத-வங்காள கீதம் என்று அதனைக் கருதாமல், பொதுவான எதிர்ப்பு முழக்கம் என்றே கருதினர்.   

இன்றைய அரசில் இருக்கும் நீங்கள் உங்களை வந்தே மாதரத்தின் உண்மையான ஆதரவாளர்கள், பாதுகாவலர்கள் என்று கூறிக் கொள்கிறீர்கள். ஒரு மணி நேரம் நாங்கள் பிரதமரின் பேச்சைக் கேட்டோம்; தாங்கள் எப்படி வந்தே மாதரத்தை உண்மையில் தாங்கிப் பிடித்துக் கொள்பவர்களாக இருக்கிறோம் என்பதை ஒரு மணி நேரம் எங்களுக்குப் பாதுகாப்பு அமைச்சர் விளக்கியதையும் கேட்டோம். உண்மையான வங்காளியாக, பெருமைமிக்க வங்காளியாக, இந்த அரசு வங்காள தேசத்தவர் என்றும், ரோஹிங்கியாக்கள் என்றும் அழைக்கின்ற இன்றைய பத்து கோடி வங்காளிகளுக்காக நான் பேசுகிறேன். எங்களை இந்த அரசு தெருக்களில், குடியிருப்புகளில் துன்புறுத்தி வருகிறது. இந்த அரசு கர்ப்பமாக இருக்கும் பெண்களை எல்லைக்கு அப்பால் வெளியேற்றுகிறது. இந்தப் பாடலைப் பத்தி பத்தியாகப் பிரித்து ஆராய்ந்து, 1937க்கு அப்பால் எந்தவொரு தீர்மானமும் செய்யாத அளவிற்கு வந்தே மாதரம் பாடலின் உணர்வை, ஆன்மாவை இந்த அரசு எப்படிப் படுகொலை செய்கிறது என்பதை நான் இங்கே நிரூபித்துக் காட்டப் போகிறேன்.  

சுஜலாம் சுபலாம் மலயஜ சீதலாம் ஷஸ்யஷியாமளாம் மாதரம் ...

‘சுஜலம்’ - அதாவது அழகான ஏராளமான நீர். இந்திய மேற்பரப்பு நீரில் எழுபது சதவிகிதத்திற்கும் அதிகமான நீர் இன்று குடிப்பதற்கு ஏற்றதாக இல்லை. நீருக்கான தரக் குறியீட்டில் 122 நாடுகளில் இந்தியா 120ஆவது இடத்தில் உள்ளது, தில்லி, பெங்களூரு உட்பட 21 முக்கிய நகரங்கள் 2030ஆம் ஆண்டுக்குள் தங்கள் நிலத்தடி நீர் இருப்புகளை இழந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இதுபோன்ற தரவுகள் இருக்கின்ற நிலையிலும், அனைத்து மாநிலங்களுக்கும் தரப்பட வேண்டிய ஜல் ஜீவன் மிஷன் பணத்தை இந்த அரசு குறைக்கிறது. வங்காளத்திற்கு ஜல் ஜீவன் மிஷன் பணத்தில் ரூ.3,000 கோடி தர வேண்டியுள்ளது. இதைத்தான் நீங்கள் ‘சுஜலம்’-க்காகச் செய்து வருகிறீர்கள்.

‘மலையஜ சீதலம்’ அதாவது குளிர்ந்த புத்தம்புதுக் காற்று. உண்மையில் இது ஒரு நகைச்சுவைதான். தேசியத் தலைநகரில் இன்று காற்றின் தரக் குறியீடு வழக்கமாக 800 முதல் 1,000 என்ற அளவிலே இருந்து வருகிறது. நமது குழந்தைகள் மூச்சுத் திணறுகிறார்கள், முதியவர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய அரசு என்ன செய்துள்ளது தெரியுமா? முக்கியமாகத் தேவைப்படும் மாசு-விலக்கு அமைப்புகளை நிறுவுவதில் இருந்து 78 சதவிகித அனல் மின் நிலையங்களுக்கு விலக்கு அளித்துள்ளது. 2024-25ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் அமைச்சகம் தன்னுடைய  ரூ.858 கோடி மாசு நிதியில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாகவே செலவிட்டுள்ளது. புதைபடிவ எரிபொருள் சார்ந்த மாசுபாடு இந்தியாவில் 17.2 லட்சம் உயிர்களைப் பறிக்கிறது. வெளிப்புறக் காற்று மாசுபாட்டால் ஏற்படும் அகால மரணங்களால் இந்தியாவிற்கு 33900 கோடி டாலர் செலவாகிறது. நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 9.5 சதவிகிதமாக இருக்கிறது. நாம் இதைத்தான் ‘மலையஜ சீதலம்’-க்காக செய்து வருகிறோம்.    

‘ஷஸ்யஷியாமளாம்’ அதாவது ஆசீர்வதிக்கப்பட்ட மண்ணின் வளம் - அதற்காக இந்த அரசு என்ன செய்துள்ளது? இந்த ஆண்டு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் தனது பட்ஜெட்டில் இரண்டரை சதவிகிதத்தைக் குறைத்துள்ளது. ஏழை விவசாயிகளுக்கான பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தில் ரூ.3,600 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 37 சதவிகித நிலம் மண் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளில் மூன்றில் இரண்டு பங்கு மாதிரிகள் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் குறைபாடுடன் இருக்கின்றன. 85 சதவிகித மாதிரிகள் செயல்படக்கூடிய மண் அமைப்புகளுக்குத் தேவையான அளவிற்கு மிகக் குறைவான கார்பனையே கொண்டிருக்கின்றன.

‘சுஹாசினிம் சுமதுர பாஷினிம்’ - அதாவது இனிமையான புன்னகை, இனிமையான பேச்சு. ஆளும் கட்சியினராக இருப்பவர்கள், வெறுப்புப் பேச்சால் முஸ்லீம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஹரித்துவாரில் விடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கான அழைப்புகள், பேரணிகளில் விடப்பட்ட வெளிப்படையான அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுடன் 'வாக்கு வங்கி', ஊடுருவல்காரர்கள், குஸ்பைத்தியா போன்ற சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். மேலும் அதிக குழந்தைகளைப் பெற்றவர்களை நாய் விசில்களாக விவரிக்கிறார்கள். எங்கள் மீது ஹிந்தியைத் திணிக்கிறார்கள். வங்க மொழியை வங்காளதேசத்து மொழி என்கிறார்கள். தில்லித் தெருக்களில், குர்கான் தெருக்களில் தங்கள் தாய்மொழியைப் பேசுவதற்குப் பயப்படும் மக்கள் மீது மிக மோசமான மொழிசார் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இன்றைய பாஜகவிடம் ‘சுமதுர பாஷினிம்’ என்பது அறவே இல்லை.

‘சுகதாம் வரதாம் மாதரம்’  என்றால் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள் என்று பொருள். இன்று உங்கள் தன்னிச்சையான, அவசரமான நடவடிக்கைகளால், தேர்தல் ஆணையம் தரும் பணிச்சுமை அதிகமாகி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தேர்தல் ஆணையம் நம்மிடம் என்ன சொல்கிறது? அவர்கள் ‘அது அவர்களின் கடமையாகும். அதை அவர்கள் மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும்’ என்கிறார்கள். 2025ஆம் ஆண்டு உலக மகிழ்ச்சி அறிக்கையில் இடம் பெற்றுள்ள 147 நாடுகளில் இந்தியா 118ஆவது இடத்தில் உள்ளது.  

இன்று எப்போதும் சந்தேகத்திற்கு உள்ளாகின்றவர்களாக, இரண்டாம் தரத்தவராக, கீழ்ப்படிந்து செல்பவர்களாகவே சிறுபான்மையினர் இந்தியாவில் இருந்து வருகின்றனர். அந்தச் சிறுபான்மையினர் மகிழ்ச்சியுடன் இருப்பதற்குப் பதிலாக, அரசின் பாதுகாப்பு இருக்கிறது என்று உணர்வதற்கு மாறாக அச்சமே கொள்கிறார்கள்...

'துமி வித்யா, துமி தர்மா' - 'வித்யா' பற்றி முதலில் பேசலாம். இந்த அரசில் கல்விக்கான ஒதுக்கீடு இன்னும் 3.8 சதவிகிதம் என்ற அளவிலேயே இருக்கிறது, தேசிய கல்விக் கொள்கையால் திட்டமிடப்பட்டிருக்கும் ஆறு சதவிகிதத்தைக் காட்டிலும் அது குறைவு, பிற வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் மிகமிகக் குறைவு. கடந்த இரண்டு ஆண்டுகளில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலுக்கான மானியங்கள் கிட்டத்தட்ட 61 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியக் குழுவின் பட்ஜெட் 47 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. தில்லி பல்கலைக்கழகத்தை எடுத்துக்காட்டாகக் கொண்டால், தில்லி பல்கலைக்கழகம் இந்த நிதியாண்டில் ரூ.250 கோடி நிதி பற்றாக்குறையுடன் போராடி வருகிறது. பல்கலைக்கழகத்திற்கு ரூ.544 கோடி தேவைப்படுகிறது. ஆனால் பல்கலைக்கழக மானியக்குழு ரூ.313 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. ‘துமி வித்யா’ அப்படியிருப்பதாகத் தெரியவில்லை.    

இப்போது ‘துமி தர்மம்’ என்பதற்கு வருவோம். 1909ஆம் ஆண்டு கர்மயோகினில் ‘வந்தே மாதரம்’ பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ரிஷி அரவிந்தர் அப்போது ​​ தர்மத்தை மதம் என்று இல்லாமல், நடத்தை என்பதாகவே மொழிபெயர்த்தார். ‘வந்தே மாதரம்' என்ற பாடலை வகுப்புவாத, தேசியவாத விளக்கத்திற்கும், அரசியல்ரீதியாக போர்க்குரலாகப் பயன்படுத்திக் கொள்வதற்கும் உள்ள வித்தியாசத்தின் வேர் இதுதான். இது ஒரு வகுப்புவாத விளக்கமல்ல. இது ஒரு தேசியவாத விளக்கம். ரிஷி பங்கிமின் தர்மம் என்பது நடத்தையைக் குறிக்கிறது. ஆளும் கட்சிக்கு, ஒரு பிரதமருக்கு, அது வெறும் தர்மமாக இருக்கக் கூடாது - அது ராஜ தர்மமாக இருக்க வேண்டும்.

மறைந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியை இந்த அவைக்கு நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது. குறிப்பிட்ட முதலமைச்சர் என்ன செய்ய வேண்டும் என்று 2002 மார்ச் மாதம்  அவரிடம் கேட்கப்பட்ட போது, ‘அரசாட்சிச் சட்டத்தைப் பின்பற்றுங்கள். அரசாட்சிச் சட்டம் அரசருக்கானது, ஆட்சியாளருக்கானது. குடிமக்களிடையே மதம், சாதி அல்லது பிரிவின் அடிப்படையிலான எந்தவொரு பாகுபாடும் இருக்க முடியாது’ என்று அவர் கூறியது மிகவும் பிரபலமானது.   

நெஞ்சில் கை வைத்து இந்த அவைக்குச் சொல்லுங்கள் - இந்த அரசு தனது தர்மத்தை நிறைவேற்றி வருகிறதா? நிச்சயமாக இல்லை. 

உங்கள் கரங்களில் அன்னை சக்தி, உங்கள் இதயத்தில் அன்னை பக்தி. நம்பிக்கை உங்கள் இதயத்திலும், வலிமை உங்கள் கைகளிலும் இருக்க வேண்டும் என்றார் ரிஷி பங்கிம். ஆனால் இந்த அரசு நம்பிக்கையைத் தனது கரங்களுக்குள் கொண்டு சென்றுள்ளது. உங்கள் கொடூரமான பலத்தால் நீங்கள் 'அதிக பக்தியை' உருவாக்கியுள்ளீர்கள். மதச்சார்பற்ற தேசியக் கட்டமைப்பை உங்கள் பலாத்காரம் கொண்டு நசுக்கி வருகிறீர்கள். எதிரிகள் மீண்டும் மீண்டும் தாக்கி வருவதால் உங்கள் இதயம் மிகப் பலவீனமாக இருக்கிறது. இருப்பினும் அன்னிய நாட்டு அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்து, அவர்களை போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள வைத்தோம் என்று பெருமையுடன் மீண்டும் மீண்டும் அறிவித்துக் கொள்ள நாம் அனுமதித்து வருகிறோம்.

‘அமலாம் அதுலாம்’ - களங்கமில்லாதது, ஒப்பிட முடியாதது - இன்றைக்கு இந்த அரசு நம்மையெல்லாம் எங்கே கொண்டு வந்து சேர்த்துள்ளது? சில முக்கிய உலகளாவிய குறியீடுகளை 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். சமத்துவமின்மை இந்தியாவின் மனித மேம்பாட்டு குறியீட்டை 31 சதவிகிதம் குறைத்துள்ளதாக ஐ.நா.அறிக்கை கூறுகிறது. இந்தப் பிராந்தியத்தில் இது மிக அதிகமான இழப்பாகும். உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில், 2014இல் 140ஆம் இடத்திலிருந்த இந்தியா இன்று 151ஆம் இடத்திற்குச் சென்றுள்ளது. உலகப் பொருளாதாரமன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டில், 2014ஆம் ஆண்டில் 114ஆம் இடத்தில் இருந்த இந்தியா இன்று 131ஆம் இடத்திற்குச் சென்று விட்டது. மிக முக்கியமாக, குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டை அளவிடும் உலகளாவிய பசி குறியீட்டில் 2014 இல் 76 நாடுகளில் 55ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இன்றைக்கு 123 நாடுகளில் 102ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஆக நிச்சயமாக நாம் களங்கமில்லாமல் இல்லை.   

துண்டாடப்பட்ட பாடல் அவமானமாகவே இருக்கும் என்ற ஆளும் கட்சியின் தவறான கூற்றை நான் முற்றிலுமாக நிராகரிக்கிறேன். 'ஜன கண மன' பாடல் முதலில் 1911ஆம் ஆண்டில் பிரம்மோ கீதமாகவே எழுதப்பட்டது. முதலில் அது ஐந்து சரணங்களுடன் இருந்தது. அது பாரதோ பாக்யோ பிதாதா என்றழைக்கப்பட்டது. ராஜாராம் மோகன் ராய்தான் பிரம்ம சமாஜத்தை உருவாக்கியவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மதமாற்றத்திற்காகப் பாடுபடுகின்ற பிரிட்டிஷ் ஏஜண்ட், தரகர் என்று மத்தியப்பிரதேச மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் இந்தர் சிங் பர்மர் அழைத்த அதே ராஜாராம் மோகன் ராய்தான். தரகர் என்று ராஜாராம் மோகன் ராயை அழைக்கும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவரால் உயர்கல்விக்கு எந்த வகையில் பொறுப்பேற்க முடியும் என்பதை எண்ணும் போது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது.

'ஜன கண மன' என்பதும் ஒரு சுருக்கப்பட்டப் பாடல்தான். அந்த ஐந்து சரணங்களில், முதல் சரணம் மட்டுமே தேசிய கீதமாகப் பாடப்படுகிறது. இரண்டாவது சரணம் 'ஹிந்து, பௌத்த, சமண, பாரசீக, முஸ்லிம், கிறிஸ்தவ அன்பானவர்களே, நான் உங்களை அழைக்கிறேன், உங்கள் தாராளமான வார்த்தைகளைக் கேட்கிறேன்’ என்றிருக்கிறது. ஒப்பீட்டளவில் அது எளிமையாகவே இருக்கிறது. தாகூர் இந்தியாவின் விதியை உருவாக்குபவரான பாரதோ பாக்யோ விதாதோவை அழைக்கிறார். பிளவுபடுத்தலுக்கு எதிரான வலுவான சின்னமாக, வலுவான சமிக்ஞையாக இந்தப் பத்தியை மீட்டெடுப்பது அமைகிறது. ஆனால் அதனை உள்ளடக்கிய தீர்மானத்தை நீங்கள் கொண்டுவரவில்லை. எவ்வாறான மதச் சூழல் கொண்டு 'வந்தே மாதரம்' பாடலைப் பார்க்கலாம் என்பது பற்றி மட்டுமே நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.  

பிரதமர் அவர்களே, நீங்கள் மிகப்பெரிய தவறைச் செய்த இடம் இதுதான். உங்கள் அரசின் தோல்விகளில்ருந்து கவனத்தைத் திருப்புவதாகக் கருதி இந்த ஒட்டுமொத்த விவாதத்தை நீங்கள் துவங்கி வைத்தீர்கள். வந்தே மாதரம் பாடலின் வரிகளையே திறவுகோலாகப் பயன்படுத்தி உங்கள் தோல்விகளை நான் நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். அத்துடன் நீங்கள் நின்று விடவில்லை. பாஜகவின் தலைமைச் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரும், இங்கே சக எம்.பி.யுமாக இருப்பவர் ஒரு படி மேலே சென்று பாட்டைத் துண்டாடிய செயல் நேருவின் கட்டளைப்படியே மேற்கொள்ளப்பட்டது என்கிறார். வரலாற்றாசிரியர் சச்சிவ் பட்டாச்சார்யாவின் புத்தகத்தை வாசித்ததன் மூலம் அதைத் தான் கற்றுக் கொண்டேன் என்று அவர் இங்கே கூறினார். அவைத்தலைவர் அவர்களே, அப்படியொரு புத்தகமே இல்லை. வந்தே மாதரத்தின் வரலாறு குறித்து சச்சிவ் பட்டாச்சார்யா என்ற வரலாற்றாசிரியர் ஒருவர் புத்தகம் எதையும் எழுதியதில்லை. உண்மையில் அவ்வாறு யாரும் கிடையாது. எம்.பி.யின் கற்பனையை உருவாக்குவதற்கான வளமான எருவாகவே அவ்வாறு ஒருவர் இருக்கிறார்.

வந்தே மாதரம் பற்றி புத்தகம் எழுதிய வரலாற்றாசிரியர் ஒருவர் இருக்கிறார் - அவரது பெயர் சப்யசாச்சி பட்டாச்சார்யா, சச்சிவ் பட்டாச்சார்யா இல்லை. இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பேசப் பாஜக துணிவதில்லை. ஏனென்றால் அவ்வாறு பேசினால், அந்தக் குறிப்பிட்ட புத்தகம் பிரிவினைவாத நடவடிக்கைகளைத் தூண்டி விடாமல் இருப்பதற்காகவே வந்தே மாதரத்தைச் சுருக்கப்பட்ட பதிப்பில் பாட வேண்டும் என்று பரிந்துரை செய்தவர் நேரு அல்ல என்று கூறுவதை ஒப்புக் கொண்டாக வேண்டும். அவர் போஸ் அல்ல - குரு ரவீந்திரநாத் தாகூர்.

சரி, சரியானதை நாம் சொல்வோம். பட்டாச்சார்யா மிகத் தெளிவாகச் சொல்கிறார். முதலில் சுபாஷ் போஸ், பின்னர் காங்கிரஸ் காரியக் குழு உறுப்பினர்கள், 1937இல் கல்கத்தாவில் காங்கிரஸ் மாநாட்டைக் கூட்டிய போது இந்தப் பாடல் குறித்த கருத்துகளைத் தெரிவிக்குமாறு தாகூருக்கு எழுதினர். தாகூர் தனது பதிலைப் பின்வருமாறு எழுதினார்: ‘வந்தே மாதரத்தின் மையக்கரு துர்கா தேவியைப் போற்றிப் பாடும் பாடல். அது தெளிவாக இருப்பதால், அது குறித்து எந்தவொரு விவாதமும் இருக்க முடியாது. ஆனந்தமடம் நாவல் ஓர் இலக்கியப் படைப்பாக இருப்பதால், அந்தப் பாடல் அதற்குப் பொருத்தமானதே. ஆனால் நாடாளுமன்றம் அனைத்து மதக் குழுக்களையும் ஒன்றிணைக்கும் இடம். அங்கே அந்தப் பாடல் பொருத்தமானதாக இருக்காது. 1937 அக்டோபர் 26 அன்று, காங்கிரஸ் அமர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, குருதேவ் அந்தப் பிரச்சினை குறித்து மீண்டும் நேருவுக்கு எழுதினார். வந்தே மாதரத்துடன் சிறப்புத் தொடர்புடன் இருக்கும் வகையில், பாடலின் முதல் இரண்டு சரணங்களை  மட்டும் ஏற்றுக் கொள்ளலாம் என்று பரிந்துரைத்தார். அவரது அந்தக் கடிதமே காங்கிரஸ் தீர்மானத்தை மிக ஆழமாகப் பாதித்தது.

கடைசிப் பத்தியை மட்டும் வாசித்து விட விரும்புகிறேன். ரிஷி பங்கிம் மிகச் சிக்கலான மனம் கொண்டவர். ஆனந்தமடம் சமூக வரலாறு குறித்த அவரது இறுதி வார்த்தையாக இல்லை.  அவரது கடைசி நாவலான சீதாராம் - வீரம் செறிந்த, லட்சியவாத மன்னரால் நிறுவப்பட்ட ஹிந்து சாம்ராஜ்யத்தைக் கற்பனை செய்து கொள்கிறது, அந்த மன்னர் முஸ்லீம் எதிரிகளைத் தோற்கடிக்கிறார். இருப்பினும், அவர் முஸ்லீம்கள் மீது கூறப்பட்ட தீமைகள் அனைத்தையும் உள்ளடக்கி அவற்றையெல்லாம் மீறுகிறார். அவரது ஹிந்துக் கூட்டாளிகள் அனைவரும் அவரைக் கைவிட்டுச் செல்கின்றனர்.

இந்தப் பிரச்சனையில் இறங்குவதற்கான தைரியம் உங்களுக்கு இருக்குமானால், இந்தப் பாடலை மிகப் புத்திசாலித்தனமாகத் திருத்தியவரை நீங்கள் குறிவையுங்கள். அவர் நேருவோ அல்லது போஸோ அல்ல - ரவீந்திரநாத் தாகூர். உண்மையைத் தாங்கிக் கொள்கின்ற தைரியம் உங்களுக்கு இருந்தால், இந்தியாவைப் பிரிப்பதற்கு தாகூர்தான் காரணம் என்று கூறி  வங்காளத்தில் 2026இல் தேர்தலில் போட்டியிடுங்கள். உங்களை அது எங்கு அழைத்துச் செல்லும் என்று பார்க்கலாம். 'வந்தே மாதரம்' பாடலைப் பகிரங்கமாகப் பாடியவர் தாகூர். நம் நாட்டின் மனசாட்சியில் அந்தப் பாடலை அவர் நங்கூரமிட்டுப் பாய்ச்சினார். அது வங்காளத்தின் அறைகூவல். தேர்தலுக்கு முன்பு பாஜக பறிமுதல் செய்து கொள்கின்ற ஜும்லா அல்ல. அதை நீங்கள் முயன்று பாருங்கள். அதன் விளைவுகள் என்ன என்பதை நீங்கள் காண்பீர்கள். வந்தே மாதரத்தின் உண்மையான அர்த்தத்தை உங்களுக்குக் கற்றுத் தர பத்து கோடி வங்காளிகள், இருபது கோடி ஆயுதங்களுடன் எழுவார்கள்.

வந்தே மாதரம்!

 


Comments