மனிதகுல வரலாற்றில் இரண்டு மிக மோசமான தவறுகள்

ஜேரட் டயமண்ட், மேத்யூ ஓலெம்மன் 

தமிழில்: தா. சந்திரகுரு

ஏன் நாம் விவாதிக்க வேண்டும்...

மனிதகுலத்தின் அறிவியல்பூர்வமான வரலாற்றில் மிக முக்கியமான இரண்டு நகர்வுகளை, புரட்சிகரமான மாற்றங்களை இந்தப் புத்தகம் விவாதத்துக்கு உட்படுத்துகிறது.

பொழுதெல்லாம் அடுத்த வேளைக்கான உணவுத் தேடலில், அச்சத்தோடும் அலைச்சலோடும் பசியோடும் இருந்த வேட்டைச் சமூகம், அந்தக் கட்டத்திலிருந்து அதற்கு அடுத்த நகர்வாக ஒரு இடத்தில் தங்கி, அல்லது நிலையாக இருந்து பயிர் செய்யக் சுற்றுத் தேர்ந்து, விவசாயம் செய்யும் அனுபவத்தில் பல ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்தது.

இன்று, நமது விவசாய மரபுகள் என்னென்ன...? மரபணுவை மாற்றாத பயிர்கள் வேண்டும் ஏன்... ? உணவு உற்பத்தியில் நமது இடம் என்ன...? அதன் மூலம் அனைவருக்கும் மூன்று வேளை பசியில் வாடாது உணவளிக்கும் தன்னிறைவை அடைந்து விட்டோமா...? என்று சிந்திக்கும் இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம்.

அப்படியிருக்கும் இப்பொழுதில் தான் இந்த விவாதம்.

பெருகிய மக்கள்தொகைக்கு உணவைத் தந்தது இந்த விவசாயம். விதைகளைப் பத்திரப்படுத்தி தலைமுறைக்கு கொடுத்து ஒரு விவசாயப் பண்பாட்டைத் தொடங்கி வைத்தது இந்த விவசாயம். பட்டினியை மெல்ல மெல்ல குறைத்தது இந்த விவசாயம். ஒரு புதிய நாகரிகத்தை அதன் மூலம் தினசரிகளில் புதிய பழக்கவழக்கங்களை கொண்டு வந்தது இந்த விவசாயம். அறிவியல், சமூக அறிவியல் பார்வைகள் இப்படி நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும்போது, ஜேரட் டயமண்ட் விவசாயம் நம்மை முன்னேற்றம் பெறச் செய்யவில்லை. மாறாக, நம்மை வீழ்த்தி இருக்கிறது என்கிறார். விவசாயத்திற்கு முன்னர் மனிதரின் சராசரி ஆயுட்காலம் 26 ஆண்டுகள் என்றும், அதிலிருந்து விவசாயத்திற்கு மாறிய பின்னர் தான் மனிதரின் சராசரி ஆயுட்காலம் 19 ஆண்டுகளாக மாறியிருந்தது என்றும் சொல்கின்றன ஜேரட் டயமண்ட்டின் ஆய்வுகள். அதாவது, விவசாயத்தை தொடர்ந்த பின்னர் தான் ஊட்டச்சத்துக் குறைவும் நோய்களும் தண்டுவடப் பாதிப்பும் உருவாயின. கூடவே, மனிதர்களின் சராசரி உயரம் கூட குறைந்திருப்பதாக தொல்நோயியல் வல்லுனர்களுடைய சான்றுகளின் படி ஜேரட் டயமண்ட்டின் ஆய்வுகள் வாதிடுகின்றன.

ஜேரட் டயமண்ட் தனது ஆய்வுகளின் வழியே சிறிதும் பெரிதுமான அதிர்ச்சிகளைக் கொடுக்க, அதை யோசித்துக் கொண்டிருக்கும்போதே, டிஜிட்டல் புரட்சி உண்டாக்கியிருக்கும் பேரழிவு எத்தகையது என மேத்யூ ஓ லெம்மன் அடுத்த சூறாவளிக்குள் நம்மை நிறுத்துகிறார்.

நமது மொபைலில் எதைப் பார்க்கிறோம், ஒரு படத்தை எதன் பின்னணியில் வைத்து நம்மை நாம் எடுக்கத் துடிக்கிறோம் என்பது வரை நமது மனங்களுக்குள் ஒரு குகைப் பயணமாக அழைத்துக் காட்டுகிறார்.

மிக முக்கியமான ஒரு பண்பாட்டின் பரிணாம வளர்ச்சி ஒரு கட்டத்துக்கு வருவதற்கு, பல சில நூறு ஆண்டுகளாகும். ஆனால், "உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்ற வெவ்வேறு சோதனைகளின் தொகுப்பாக உருவான விவசாயத்தைப் போல" தற்போதைய டிஜிட்டல் புரட்சி இருக்கவில்லை. அது இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் சில பத்தாண்டுகளில் உருவானது தான் என்கிறார் ஓ லெம்மன். ஆனால், அது இன்று அத்தனை மனங்களையும் ஆட்டுவிக்கிறது என்றால், அதன் இயல்பு தான் என்ன என்று நம்மை பகுத்துப் பார்க்கத் தூண்டுகிறார்.

டிஜிட்டலின் வருகை மனித யத்தனங்களின் எண்ணற்ற சாத்தியங்களை திறந்து கொண்டே இருக்கிறது இக்காலத்தில். அப்படியிருக்கையில் "விவசாயம் என்பது, அதிலிருந்து நாம் ஒரு போதும் மீளவே முடியாத பேரழிவு" என்று ஜேரட் டயமண்ட் சொல்வதைப்போல, டிஜிட்டலைச் சொல்லிவிட முடியுமா... - என்ற கேள்வியும் நமக்கு எழுகிறது.

உணவுக்கான போராட்டம்தான் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டதா? அதாவது, விவசாயம் என்ற மீளவே முடியாத பெரிய செக்குமாட்டுச் சுழலுக்குள் நம்மை வீழ்த்தியதா என்ற கேள்வியும் பிறகு எழுகிறது.

இந்த நேரத்தில், விவசாயம், டிஜிட்டல் - இந்த இரண்டும் மனித சமூகத்தில் உருவான சரியான முன்னேற்றங்கள் தானா? அல்லது இல்லையா? - என்று ஏற்றுக்கொள்வதற்கு சற்று திணறலைத் தரும் இந்தத் தலைப்பை புரிந்துகொள்ள நாம் கொஞ்சம் உரையாடலாம்.

அறிவியலை மண்டியிட்டு அப்படியே வணங்காது, வரலாற்றை, மானுடவியலின் தொடர்ச்சியை, மற்றும் பரிணாமத்தின் நகர்வினை/கண்டுபிடிப்பினை - என்ற நீண்ட அறிவியலின் பாதையைப் புரிந்து கொள்வதற்காக கேள்வி கேட்கும் இன்னுமொரு அறிவியல் கேள்வியாகவே இந்த இரண்டு கட்டுரைகளும் இருக்கின்றன.

நம் அன்றாட விசயங்கள் தாண்டி, ஒட்டுமொத்த மனித குலத்துக்காக நம்மை யோசிக்கத் தூண்டவும் சில கேள்விகள் வேண்டாமா... அவை நிகழ்காலத்தில் நாம் அவசியம் அடைய வேண்டிய தெளிவுகளைப் பெற உதவலாம். அவை தான் இந்தப் புத்தகமெல்லாம் விரவிக் கிடக்கின்றன.

வாசல்

vasalviji@gmail.com

+91 98421 02133


Comments