உத்தரப்பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? - தமிழ்நாடு அமைச்சர் தியாகராஜன் சிறப்பு நேர்காணல்
கரண் தாப்பர்
வயர் இணைய இதழ்
கரண்
தாப்பர்: வணக்கம். வயர் இணைய இதழுக்கான சிறப்பு நேர்காணலுக்கு உங்களை வரவேற்கிறோம்.
ஒன்றிய அரசுக்கும், எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்கள்
மிகச் சாதாரணமாக இருந்து வருகின்ற நிலையில், மோடி அரசையும், தமிழ்நாட்டில் உள்ள மாநில
அரசையும் மோத வைக்கும் வகையில் இரண்டு பிரச்சனைகள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
நமது இன்றைய கவனம் அந்தப் பிரச்சனைகளின் மீதே இருக்கிறது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டின்
மீது ஹிந்தியைத் திணிக்க முயல்கிறதா அல்லது தேசியக் கல்விக்கொள்கை குறித்த தவறான புரிதல்
மாநில முதலமைச்சரிடம் இருக்கிறதா, அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரப் போவதாக பரவலாக எதிர்பார்க்கப்படும்
தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு உள்ளிட்ட மற்ற தென் மாநிலங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படப்
போகின்றனவா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
தமிழ்நாடு
அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரான பி.தியாகராஜன்
இன்று எனது விருந்தினராக வந்துள்ளார்.
திரு.தியாகராஜன்,
தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி பற்றி எதுவொன்றும் குறிப்பிடப்படவில்லை என்று யோகேந்திர
யாதவ் போன்ற வல்லுநர்கள் பத்திரிகைகளில் எழுதி வரும் நிலையில் தமிழ்நாடு போன்ற தென்
மாநிலங்களில் அந்தக் கல்விக் கொள்கை ஹிந்தியைத் திணிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் ஏன்
கருதுகிறார்?
தியாகராஜன்: நீங்கள்
அனுமதிப்பீர்கள் என்றால், ஆரம்ப காலத்திலிருந்து இதனை விளக்கலாம் எனக் கருதுகிறேன்.
எங்களைப் பொறுத்தவரை கல்வி என்பது அரசியல்ரீதியாக மிகவும் உணர்வார்ந்த, மையமான பிரச்சனையாகும்.
சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்குவதற்கான அடிப்படை
என்று கல்வியைக் கருதி, அதன் மீது நாங்கள் அதிக அக்கறையுடன் இருக்கிறோம். அதன் காரணமாகவே
- நாட்டின் பிற பகுதிகளிலிருந்து பொதுவாக தென்னிந்தியா - குறிப்பாக தமிழ்நாடு தனித்து
நிற்கிறது என்று உறுதியாக நம்புகிறோம். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக தொடக்கக்
கல்வி சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் கட்டாயம் என்பதைச் சட்டமாக இயற்றிய 1921ஆம்
ஆண்டு நீதிக் கட்சி அரசிடமிருந்தே கல்வி மீதான எங்கள் கரிசனம் தொடங்கியிருக்கிறது.
அந்தக் காலகட்டத்திலிருந்து நாங்கள் அடைந்திருக்கும் பலன்களே, கல்வி மீதான அந்த அக்கறைக்குக் காரணம் எனக் கருதுகிறோம்.
நெருக்கடிநிலைக்
காலகட்டத்தில் கொண்டு வரப்பட்ட 42ஆவது சட்டத்திருத்தத்தில் கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு
மாற்றப்பட்டதை நாங்கள் மிக உறுதியாக எதிர்த்தோம். கல்வி மாநிலப் பட்டியலில் இருந்திட
வேண்டும் என்ற உணர்வு எங்களிடம் தொடர்ந்து இருந்து வந்துள்ளதையும், கல்வி மூலமாகவே
நாங்கள் இந்த நாட்டில் உள்ள வேறு எந்தவொரு மாநிலத்தைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க
விளைவுகளைச் சாதித்துக் காட்டியுள்ளோம் என்ற நல்ல செய்தியையும் நான் இங்கே கூறிக் கொள்ள
விழைகிறேன். எங்களின் அந்த அணுகுமுறை, கல்வி மீது எங்களுக்கிருந்த அக்கறை, அனைவரையும்
உள்ளடக்கிக் கொள்ளுமாறு இருந்த எங்கள் செயல்பாடுகள் அற்புதமான நல்ல விளைவுகளை எங்களுக்குக்
கொண்டு வந்திருக்கின்றன. இந்த அடிப்படையிலேயே திரு.யோகேந்திர யாதவிடமிருந்து அல்லது
இந்திய அரசின் அமைச்சகத்திடமிருந்து வரும் தகவல்களை நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.
எங்களுக்கான பள்ளிக் கல்விக் கொள்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை எங்களுக்குத் தமிழ்நாட்டிற்கு வெளியிலிருந்து
யாரும் கற்றுத் தர வேண்டிய தேவையில்லை. அவர்களிடமிருந்து நாங்கள் அதை எதிர்பார்க்கவுமில்லை.
ஒத்திசைவுப்
பட்டியலில் கல்வியை வைத்திருப்பதே இங்கே முதல் பிரச்சனையாகும். மழலையர் பள்ளியில் துவங்கி,
தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை அனைத்தும் மாநிலப் பட்டியலுக்குள்தான்
இடம் பெற்றிருந்தன. ஆனால் பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை - பல்கலைக்கழக மானியக் குழு
போன்ற விஷயங்களாலும், நாடு முழுவதும் செல்லுபடியாகக் கூடிய வகையிலான பட்டங்கள் அவசியம்
என்பதாலும் நாங்கள் கல்வியை ஒத்திசைவுப் பட்டியலில் வைத்திருப்பதை ஏற்றுக் கொண்டோம்.
உலகின் அனைத்து இடங்களிலும் கல்வியானது ஒருவகையில் ஒத்திசைவுப் பட்டியல் இடம் பெற்றிருப்பதைக்
காண முடிகிறது. நான் பட்டம் பெற்ற அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம்,
அமெரிக்கக் கூட்டாட்சி அரசின் அதிகாரத்திற்கு அல்லது கூட்டாட்சிக்கு உட்பட்டு இருக்கவில்லை.
தன்னாட்சி கொண்டதொரு பல்கலைக்கழகமாகவே அந்த நிறுவனம் இருந்து வந்தது. பல்கலைக்கழகத்திற்கான
விதிமுறைகள் அனைத்தையும், அந்த மாநில அரசே உருவாக்கி வந்தது. திரு.யோகேந்திரா யாதவ்
ஒருவேளை தேசியக் கல்விக் கொள்கை ஆவணத்தைப் படித்திருக்க மாட்டோரோ என்னவோ - அந்த ஆவணத்தில்
பல இடங்களில் ஹிந்தி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அந்த ஆவணத்தைப் பலமுறை வாசித்திருக்கிறேன்.
அதில் பல இடங்களில் சமஸ்கிருதம் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தக் கல்விக் கொள்கை
ஹிந்தியைத் திணிக்கவில்லை என்று அவர் நம்புகிறார் என்பதற்காக…
கரண்
தாப்பர்: இங்கே ஒரு முக்கியமான விஷயம் - திரு.தியாகராஜன், இந்தக் கல்விக்
கொள்கை ஹிந்தியைத் திணிக்கவில்லை; கற்பிக்க விரும்பும் மூன்று மொழிகளை நீங்களே தேர்வு
செய்து கொள்ளலாம். யோகேந்திர யாதவும், மற்ற வல்லுநர்களும் இதைத்தான் கூறுகிறார்கள்.
தியாகராஜன்: சொந்தக்
கருத்துடன் இருக்கும் உரிமை குடிமக்கள் அனைவருக்குமே உண்டு. 140 கோடிக்கும் மேற்பட்ட
மக்களுடன் ஒப்பிடும்போது, என்னைப் பொறுத்தவரையில் திரு.யாதவின் கருத்திற்கு எந்தவொரு
முக்கியத்துவம் அல்லது மதிப்பும் கிடையாது. நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம்,
சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் எங்கள் அரசை உருவாக்கியிருக்கிறோம், எங்களுக்கென்று
அரசுக் கொள்கை இருக்கிறது, இருமொழிக் கொள்கையே எங்கள் கொள்கையாகும். மும்மொழிக் கொள்கையில்
உடன்பாடில்லை என்பதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். எனவே திரு.யாதவ் கூற வருவதை
நான் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
கரண் தாப்பர்: திரு.தியாகராஜன்,
இதைக் கொஞ்சம் விளக்குங்களேன்… தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் என்பதில் ஏன் இவ்வளவு
பிடிவாதத்துடன் இருக்கிறீர்கள், குழந்தைகள் பல மொழிகளை மிக எளிதாக, விரைவாகக் கற்றுக்
கொள்ளும் திறனுடன் இருக்கும் போது, நீங்கள் ஏன் இவ்வளவு கடுமையாக மும்மொழிக் கொள்கையை
எதிர்க்க வேண்டும், அதிக மொழிகளைக் கற்றுக் கொள்வதால் குழந்தைகளுக்கு நன்மைதானே…
தியாகராஜன்: ஆ… உத்தரப்பிரதேசத்தில்
எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும் என்று சொல்வீர்கள் என்றால், நான் கூடுதல்
மகிழ்ச்சியடைவேன். பீகாரில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? உத்தரப்பிரதேசத்தில்
எத்தனை குழந்தைகளுக்கு குறைந்தது இரண்டு மொழிகளாவது தெரியும்? மூன்று மொழிகளை மிகவும்
எளிதாக குழந்தைகள் அனைவரும் கற்றுக் கொள்வார்கள் என்ற அருமையான சிந்தனை உங்களுக்கு
இருப்பதாலேயே, நான் இதனைக் கேட்கிறேன். கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளில் நமது நாட்டில்
நாம் சாதித்துள்ளவை யாவை? மூன்றாவது மொழிக்கெல்லாம்
அப்புறம் போகலாம் - நம் குழந்தைகளில் எத்தனை சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் இரண்டு மொழிகளில்
சிறப்பான தேர்ச்சியுடன் இருக்கின்றனர்? மொழிகளை குழந்தைகள் மிக எளிதில் கற்றுக் கொள்வார்கள்
என்று நீங்கள் கூறுவதற்குப் பொருள் என்ன? உங்களின் வாதத்திற்கு ஆதரவான முடிவுகளை உங்களால்
காட்ட முடியுமா? இருமொழிக் கொள்கையே எங்களுக்குத் தேவை என்பதில் நாங்கள் மிகவும் தெளிவாக
இருக்கிறோம். இருமொழிக் கொள்கையே இனரீதியாக, கலாச்சாரரீதியாக, பொருளாதாரரீதியாக மிகச்
சிறப்பான முடிவுகளை எங்களுக்கு வழங்கியுள்ள அதிநவீன அணுகுமுறையாக உள்ளது. இந்த நாட்டில்
மும்மொழிக் கொள்கை மூலமாக, தமிழ்நாட்டைக் காட்டிலும் சிறப்பான பலன்களைப் பெற்றுள்ள
ஓரிடத்தை எங்களுக்குக் காட்டுங்கள். மற்றவர்களுக்காக நாங்கள் ஏன் எங்கள் கொள்கையிலிருந்து
மாற வேண்டும் என்பதை விளக்குங்களேன்.
கரண்
தாப்பர்: அதை இப்படிச் சொல்லலாம் என நினைக்கிறேன். உண்மை என்னவென்றால்
- மும்மொழிக் கொள்கை முதலாவது மற்றும் இரண்டாவது கல்விக் கொள்கைகளிலேயே இடம் பெற்றிருந்தது.
மிக முக்கியமாக இப்போதைய கல்விக் கொள்கை யோகேந்திர யாதவ் கூறுவதைப் போல - ஹிந்தியைப்
பற்றி எதனையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. அந்தக் கொள்கை எந்தவொரு வடிவத்தில், சாயலில்
ஹிந்தியைத் திணிக்கவில்லை. உண்மையாகச் சொல்வதென்றால், புதிய தேசியக் கல்விக் கொள்கை
மும்மொழிக் கொள்கையை நீர்த்துப் போகவே செய்கிறது. மும்மொழிக் கொள்கையானது வெகுகாலத்திற்கு
முன்பே ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்ட நிலையில், இப்போது ஏன் அது ஏற்றுக் கொள்ளக் கூடாததாக
உள்ளது?
தியாகராஜன்: மும்மொழிக்
கொள்கையை நாங்கள் எப்போது ஏற்றுக் கொண்டோம்? முதலாவது கல்விக் கொள்கையின் ஆரம்பத்திலேயே
மும்மொழிக் கொள்கை இருந்தது எனச் சொல்கிறீர்கள். ஆனால் நான் 1952ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, அப்போதைய மெட்ராஸ்
மாநில அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அதாவது எழுபத்தைந்து ஆண்டுகளாகவே மும்மொழிக் கொள்கை
எங்களிடம் இருந்ததில்லை என்று சொல்கிறேன். நீங்கள் கூற வருவதிலிருந்து உண்மையில் இப்போது
தெரிய வருவது என்னவென்றால், இதுவரையிலும் எந்தவொரு அரசும் கல்விக் கொள்கை மீதான தன்னுடைய
கருத்துகளை மாநில அரசின் மீது திணிக்காமலே இருந்து வந்துள்ளது; நிதியுதவியை அடிப்படையாக
வைத்து அவை தங்களுடைய கருத்துகளை வலுக்கட்டாயமாகத் திணிக்க, அச்சுறுத்த முயன்றது கிடையாது.
இப்போது அந்த நடைமுறையில்தான் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கல்விக் கொள்கையில் மூன்று
மொழிகள் இருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். இரண்டு மொழிகளுடனே மிகச் சிறப்பாகச்
செயல்பட்டு வருவதாக நாங்கள் கூறுகிறோம். உத்தரப்பிரதேசம்
அல்லது பீகார் அல்லது மத்தியப்பிரதேசத்தில் என்ன செய்திருக்கிறார்கள், அங்கே எத்தனை
சதவிகிதக் குழந்தைகள் குறைந்தபட்சம் ஒரு மொழியிலாவது - மூன்று மொழிகளை விட்டுத் தள்ளுங்கள்
- தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற கேள்விகளையே நான் இங்கே எழுப்புகிறேன்.
கரண்
தாப்பர்: இப்படிப் பதிலளிக்கிறேன். உத்தரப்பிரதேசம், பீகாரில் கல்விக் கொள்கை
அல்லது கற்பிக்கும் முறை மிக மோசமாக இருப்பதால், அங்குள்ள குழந்தைகளால் குறைந்தபட்சம்
ஒரு மொழியில்கூட தேர்ச்சி பெற முடியவில்லை;
அவர்களால் கூடுதல் மொழிகளைப் படிக்க
முடியாது என்றே வைத்துக் கொள்வோம். அந்தக் குழந்தைகள் இரண்டு அல்லது மூன்று மொழிகளை
கற்றுக் கொள்வதைத் தவிர்த்து விடுவோம். ஆனால் அதுபோன்ற நிலைமை அதிக மொழிகளைக் கற்றுக்
கொள்ளக்கூடிய திறனுடைய தமிழ்நாட்டிற்கு ஏன் தடையாக இருக்க வேண்டும்?
தியாகராஜன்: மும்மொழிக்
கொள்கை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லபப்டுவதை எந்தவொரு ஆதாரமுமில்லாமல்
எவ்வாறு நம்புகிறீர்கள்? இருமொழி மட்டும் போதும் என்ற அடிப்படை நம்பிக்கையை உங்களுக்காக
நாங்கள் கைவிட வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? அவ்வாறு சொல்வதற்கான தகுதியுள்ளவராக
நீங்கள் இல்லை என்றே நான் கூறுகிறேன்… நீங்கள் கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவரோ அல்லது
பல ஆண்டுகள் ஆய்வுகளை மேற்கொண்டவரோ இல்லை. மும்மொழிக் கொள்கை சரியானது என்று நீங்கள்
நினைக்கலாம், ஆனால் அந்தக் கொள்கை எனக்குப் போதுமானதாக இல்லை என்றே நான் சொல்கிறேன்.
எங்களிடம் எழுபதாண்டுக் காலத் தரவுகள் உள்ளன. எழுபதாண்டுக் காலத்திற்கான பலன்கள் எங்களிடம்
உள்ளன. உங்களுக்கு, யோகேந்திர யாதவுக்கு அல்லது இந்த ஒன்றிய அரசில் உள்ள எவரொருவருக்கும்
அறிவியல்பூர்வமான தகுதிகள் எதுவும் கிடையாது. போதுமான நிதி வசதிகள் இல்லாத நிலைமையில்
உள்ள நமக்கு மும்மொழிக் கொள்கை வேண்டும் எனச் சொல்வதற்கு இந்த தேசியக் கல்விக் கொள்கையை
உருவாக்கியவர்களிடமும்கூட, நம்மைச் சுற்றியுள்ள உலகம் முழுமைக்குமான தரவுகள் எதுவுமிருக்கவில்லை
என்பதே உண்மை. வளர்ந்து வருகின்ற நாடாக நாம் இருப்பதால், பள்ளி அமைப்பில் நமக்கென்று
சில வரம்புகள் உள்ளன. நீங்கள் சொல்வதாலேயே நாங்கள் ஏன் அந்தக் கொள்கைக்கு மாற வேண்டும்?
கரண்
தாப்பர்: சரி, மீண்டும் ஒரு முறை இதனை மேற்கோளிட்டுக் காட்டுகிறேன். யோகேந்திர
யாதவ் எழுதியுள்ள கட்டுரையில், தற்போதைய தேசியக்
கல்விக் கொள்கையை நீங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ளலாம் என்பது குறித்த யோசனையை அவர் முன்வைத்துள்ளார்.
அதற்கான உங்கள் பதில் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். தேசியக் கல்விக்
கொள்கை மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த மூன்று மொழிகளையும் கற்றுக்கொடுக்கலாம்
என்று சொல்கிறது - திரும்ப ஒருமுறை கூறுகிறேன்… மாநில அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று
மொழிகள் - அவற்றில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்று மட்டுமே
கல்விக் கொள்கை கூறுகிறது. தமிழ், அத்துடன் ஹிந்தி அல்லது சமஸ்கிருத மொழி என்றில்லாமல்,
செவ்வியல் தமிழைத் தமிழ்நாடு தேர்வு செய்து கொள்ளலாம் என அவர் குறிப்பிடுகிறார். அவ்வாறான தேர்வு உங்கள் அரசுக்கும், உங்கள் மாநிலத்திற்கும்
மிகச் சிறந்த தீர்வாக இருக்கும் என அவர் பரிந்துரைக்கிறார்.
தியாகராஜன்: அவர் முதலில்
உள்ளாட்சி மன்ற உறுப்பினராக அல்லது மாநிலச் சட்டமன்ற அல்லது பாராளுமன்ற உறுப்பினராகத்
தேர்ந்தெடுக்கப்படட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அவர் தன்னுடைய கருத்துகளை
முன்வைக்கட்டும். எங்களுக்கு இருமொழிக் கொள்கையைத் தவிர வேறு எதன் மீதும் துளி ஆர்வமும்
இல்லை. யோகேந்திர யாதவ் என்ன சொல்கிறார் என்பது எனக்குப் பொருட்டே அல்ல. தன்னிடம் தனித்துவமான
நுண்ணறிவு இருப்பதாக அவர் நம்புவார் என்றால் - முதலில் அவர் தேர்தலில் நிற்கட்டும்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசை உருவாக்க முயன்று பார்த்து, தன்னுடைய கொள்கையை
அவர் செயல்படுத்திக் கொள்ளட்டும் என்றே நான் கூறுகிறேன். அவருடைய பார்வை மீது எங்களுக்குச்
சிறிதளவு ஆர்வம்கூட இல்லை. கூடுதல் விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவது மிகவும்
கடினமான பணி என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். தேசிய சராசரியைக் காட்டிலும் எங்கள்
கல்வி விளைவுகள் அதிகமாக இருக்கின்றன என்றாலும், நாங்கள் விரும்பும் அளவிற்கு அவை இருக்கவில்லை.
கல்விக்கான மாதிரியை ஆழமாக மாற்றும் அலைவரிசை அல்லது திறன் எங்களிடம் இல்லை என்றாலும்,
நாங்கள் அடைந்திருக்கும் சாதனைகளைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை
எங்களுக்கு இருக்கிறது. தத்துவார்த்தரீதியாக, கலாச்சாரரீதியாக எழுபது ஆண்டு கால அனுபவங்களை
அடிப்படையாகக் கொண்டுள்ள நாங்கள் தெளிவுடன் இருக்கிறோம். எங்களுடைய இருமொழிக் கொள்கையில்
நாங்கள் திருப்தியாக இருக்கிறோம். அந்தக் கொள்கைதான் இந்தியாவின் வேறெந்தப் பகுதியைக்
காட்டிலும் மிகச் சிறப்பான பலன்களை எங்களுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளது. அறிவாளிகள்
என அழைக்கப்படுபவர்கள் தங்களுக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அரசமைப்புரீதியாக அனுமதிக்கப்படாத கொள்கையை ஏற்றுக் கொள்ளுமாறு மிரட்டுவதால், எங்களுக்கு
அதில் துளியும் ஆர்வம் ஏற்படவில்லை. சிறிதளவு ஆர்வம்கூட எங்களுக்கு இல்லை. எங்களுடைய
கடந்தகால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். எங்கள் விழுமியங்களின்
அடிப்படையில், தங்கள் பிரதிநிதிகளாக எங்களைத் தேர்ந்தெடுத்துள்ள மக்களின் ஆணையின்படியே
நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
கரண்
தாப்பர்: இதுவரையிலும் நீங்கள் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டேன். கல்வித்துறை
இணையமைச்சர் ஜெயந்த் சௌத்ரி கூறியதை நான் இப்போது உங்களுக்குச் சொல்கிறேன். அவ்ர் சொன்னது
தி ஹிந்து செய்தித்தாளில் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது என நினைக்கிறேன். அவர்
சொல்லியிருந்ததை இங்கே மேற்கோளிட்டுக் காட்டுகிறேன். திரு.ஸ்டாலினுக்கு நான்கு மொழிகள்
தெரியும் என்றும் அவர் பன்மொழிகளைப் பேசுபவர் என்றும் அமைச்சர் கூறியிருந்தார். குழந்தைகள்
மூன்று மொழிகளைக் கற்றுக் கொள்வதை மட்டும் அனுமதிக்க அவ்வாறான முதலமைச்சர் ஏன் தயங்குகிறார்
என்று அவர் கேட்கிறார். உண்மையில் அந்தக் கருத்தை அவர் தனிநபர் சார்ந்தே வெளிப்படுத்தியிருக்கிறார்.
நான்கு மொழிகள் தெரிந்த் வைத்துள்ள முதலமைச்சர் குழந்தைகள் மூன்று மொழிகளைக் கற்றுக்
கொள்வதை அனுமதிக்க ஏன் தயங்குகிறார் என அவர் கேட்கிறார்.
தியாகராஜன்: தனிநபர்
சார்ந்த வாதங்கள் பலவீனமானவையாகவே இருக்கும். நான் பொதுவான வாதத்தையே முன்வைக்கிறேன்.
குழந்தைகள் அனைவரும் பதினைந்து மொழிகளைக்கூட கற்றுக் கொள்ளும் சுதந்திரத்துடனே இருக்கிறார்கள்.
ஆனால் அந்தக் குழந்தைகள் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் நடக்கின்ற, மாநிலக் கல்வி
வாரியத்தின் கீழ், தமிழ்நாடு அரசின் நிதியுதவி மற்றும் கட்டமைப்புடன் அமைக்கப்பட்டுள்ள
பள்ளிக் கல்வி முறையை விரும்புவார்களேயானால் - அவர்களுக்கு இருமொழிக் கொள்கையே தேவைப்படும்
என்பதில் நாங்கள் மிகத் தெளிவாக இருக்கிறோம். கற்றுத் தருகின்ற பல பாடங்களில் இரண்டு
மொழிகளுக்கு மேல் கற்றுத் தருவதற்கான வசதிகள் எங்களிடம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை.
அதிக மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எவரொருவர் விரும்பினாலும், அதற்கு எந்தவொரு
தடையும் கிடையாது. அதுபோன்ற தடை இங்கே கிடையாது. தனியார் பள்ளிகளில் அல்லது தமிழ்நாட்டு
கல்வி வாரியத்தைத் தவிர வேறு கல்வி வாரியங்களைச் சார்ந்த பள்ளிகளில் இரண்டு மொழிகளுக்கு
மேல் இருக்கக் கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. அனைவரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றனர்.
தாங்கள் விரும்புகின்ற எதை வேண்டுமென்றாலும் அவர்கள் கற்றுக் கொள்ள முடிவதில் நாங்களும்
மகிழ்வுடன் இருக்கிறோம். மாநிலத்தின் ஒழுங்குமுறை
மாதிரி மற்றும் மாநிலக் கல்வி முறை மூலம் சிறப்பான பலன்களை மிகப்பரந்த அளவிலான மக்கள்
பெற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் மாநிலத்தின் வளங்களைச் செலவிட்டு வருகிறோம். யாராவது
எங்களிடம் வந்து, இது உங்களைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதற்கான குறைந்தபட்ச
ஆதாரங்களைக் காட்டும் வரையிலும், எங்களுடைய கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள நாங்கள் தயாராக
இல்லை. அவ்வாறு காட்டும் போது, மாநிலத்திற்கென இருக்கின்ற வரையறுக்கப்பட்ட வளங்களை
பிரச்சனையின் மையமாக இருக்கின்ற மொழிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காகத் திருப்பிவிட
வேண்டுமா என்பது பற்றி நாங்கள் பரிசீலனை செய்வோம்.
இதில் தடைசெய்வது என்ற பிரச்சனை எதுவுமில்லை. தாங்கள் விரும்பும் எந்தவொரு மொழியையும்
யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். அது கூடாது என்று நாங்கள் ஒருபோதும் தடுக்கவில்லை.
மாநில அரசின் பணத்திலிருந்து நிதியளிக்கப்படும் மாநிலக் கல்வி வாரியப் பள்ளிகளில் இரண்டு
மொழிகளுக்கு மேல் கற்பிக்க வேண்டும் என்பதை அரசு கட்டாயப்படுத்தாது என்றே நாங்கள் கூறி
வருகிறோம்.
கரண் தாப்பர்: உங்கள் கருத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்றால் - அரசு நிதியுதவியுடன் நடந்து வரும் பள்ளிகளில் இரண்டு மொழிகளுக்கு மேல் கற்றுத் தருவதற்கான வசதிகள் உங்களிடம் இல்லை, இரண்டாவதாக இருமொழிக் கொள்கை தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகவும், உங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டியதற்கான காரணம் எதுவும் இல்லை என்றும் நீங்கள் சொல்கிறீர்கள் எனக் கொள்கிறேன். மூன்றாவதாக, இரு மொழிக் கொள்கையைக் காட்டிலும் மும்மொழிக் கொள்கை சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாக ஒரேயோர் ஆதாரத்தை யாராவது உறுதியுடன் எடுத்துக்காட்டுவார்கள் என்றால், மூன்று மொழிகளைக் கருத்தில் கொள்வதற்கும் நீங்கள் தயாராகவே இருக்கிறீர்கள். அத்தகைய ஆதாரங்கள் எதுவுமில்லை என்பதாலேயே, இதுவரையிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வந்துள்ள ஒன்றை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்ற உறுதியுடன் இருக்கிறீர்கள் என்ற எளிமையான கருத்தை நீங்கள் சொல்ல வருவதைப் புரிந்து கொண்டிருக்கிறேன் என்று கொள்ளலாம்.
தியாகராஜன்: ஆம்… ஆதாரம்
இருந்தாலும், அதற்கு அப்பால், என்னிடமிருந்து
அந்தக் கொள்கை மீது இன்னுமொரு கேள்வி நிச்சயம்
எழும். அறிவியல்பூர்வமாகப் பேசும் போது, கல்வி அமைப்பின் பலன்கள் முழுமையாக இருப்பதில்லை என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்கிறோம். தாங்கள்
அடைய வேண்டிய நிலையை பல மாணவர்கள் இன்னும் எட்டவில்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
உண்மையில் அதுபோன்ற நிலைமையே தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி என்று
அனைத்து இடங்களிலும் இருக்கிறது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், படிக்க முடியாத
அல்லது பள்ளியை விட்டு இடையிலேயே வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மிகமிகக்
குறைவாக இருப்பது குறித்து நாங்கள் மகிழ்கிறோம். ஆனாலும் நாங்கள் செய்ய வேண்டிய காரியங்கள்
இன்னும் ஏராளம் இருக்கின்றன. எங்கள் கல்வி அமைப்பை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து பாடுபட்டுக்
கொண்டிருக்கிறோம். எங்களிடம் இருக்கின்ற வரையறுக்கப்பட்ட
வளங்களைக் கொண்டு, வேறு எங்கிருந்தோ சொல்லப்படும் கருத்தின் அடிப்படையில் எங்களிடமுள்ள
அமைப்பை நாங்கள் நீர்த்துப் போகச் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லவில்லை என்றே
கருதுகிறேன். அவ்வாறு சொல்வது - கதவை மூடி தடுத்து நிறுத்தி வைப்பதே சிறந்தது என்ற
கருத்துக்கே ஆதாரமாக அமையும். அது ஒரு சரியான முடிவல்ல என்றாலும் அதுபோன்ற முடிவையே
நான் முடிவு செய்ய வேண்டியிருக்கும். தேவைப்படுவதைக் காட்டிலும் எங்களிடம் குறைவாக
உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு, எங்களால்
குறைவான பலன்களையே எட்ட முடிந்துள்ளது. அதுபோன்ற நிலைமையில், உறுதியான காரணங்கள் எதுவுமில்லாமல்
எங்களிடமுள்ள அமைப்பை நீர்த்துப்போகச் செய்வது மதிப்புக்குரிய செயலாக இருக்குமா? உறுதியான
ஆதாரங்கள் எதுவுமில்லாமல், கதவைத் திறந்து விடுவதற்கான சாத்தியமில்லை. அது மூடியேதான்
இருக்கும்.
கரண்
தாப்பர்: ஆனால் உறுதியான ஆதாரங்கள் இருந்தாலும்கூட, அது மிகச் சிறந்தது
என்று உங்களிடம் நம்பிக்கை பிறக்க வேண்டியிருக்கும் என்பதால், நீங்கள் சுட்டிக்காட்டியபடி
அந்தக் கதவு நிச்சயம் திறக்காது என்றே நினைக்கிறேன்.
தியாகராஜன்: சிந்தனைத்
திறனுடையவர்கள் அதுகுறித்த விவாதத்தைத் தொடங்க வேண்டும். இங்கே பாருங்கள்… நாம் இப்போது
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இருக்கிறோம்… அதன் காரணமாக கணினி அறிவியலை முதல் வகுப்பிலேயே
கற்பிக்கத் தொடங்கி, இயந்திரவழிக் கற்றல், படிமுறை செய்நிரலாக்கத்தை மாணவர்களுக்குச்
சொல்லித் தரலாம் என்று நான் ஏன் கூறக் கூடாது? மொழிக்கான மாதிரிகளை முதல் வகுப்பிலேயே
மாணவர்களுக்குக் கற்றுத் தருவது அவர்களின் எதிர்காலத்திற்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும்
என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். ஆசிரியர்கள், கட்டிடங்கள், பணம் மற்றும்
கற்றுக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை என்று இருக்கின்ற வளங்களைக் கருத்தில் கொண்டு
பார்க்கும் போது, விவாதங்கள் இதுவரையிலும் சாதிக்கப்பட்டிருப்பவை குறித்தே இருக்க வேண்டுமே
தவிர, அடிப்படையான பாடத்திட்டம் குறித்த ஆதாரமான கருத்தையே மீண்டும் விவாதிக்கத் தொடங்க
வேண்டுமா?
கரண்
தாப்பர்: அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த நேர்காணலைப் பார்த்துக்
கொண்டிருக்கும் பார்வையாளர்களின் மனதில் - கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவாதத்தைக்
கேட்டுக் கொண்டிருப்பவர்களின் மனதில் ஆழ்ந்து தோன்றக் கூடிய கேள்வியை நான் இப்போது
உங்களிடம் கேட்கிறேன். ஹிந்தி பிரச்சனையானது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வெறும் மொழி
மீதான எதிர்ப்பு என்றில்லாமல், ஏறக்குறைய ஒரு வகையான உள்ளார்ந்த சித்தாந்த மறுப்பாக
இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதைக் கொஞ்சம் விளக்க முடியுமா?
தியாகராஜன்: அது குறித்து
தெளிவான விளக்கத்தை என்னால் தர முடியும். இந்திய அரசை நடத்து வருபவர்கள் - ஆரம்ப காலத்தில் அது ஆங்கிலேயர்களாகவே
இருக்கட்டும் - தொடர்ந்து குறிப்பிட்ட வகையிலேயே ஹிந்தியைப் பார்த்து வந்துள்ளார்கள்
என்றே எனக்குத் தோன்றுகிறது. ஹிந்தி மொழி சில நூறு ஆண்டு காலப் பழமை கொண்ட மொழி என்பது
உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாட்டைச் சிறப்பாக நிர்வகிப்பதற்கு அனைவரையும் ஒன்றிணைக்கும்
மொழியாக, பொதுவான மொழி தேவை என்று ஆங்கிலேயர்கள் கருதியதாலேயே, அவர்கள் காலத்தில் ஹிந்தி மொழி கொண்டு வரப்பட்டது.
நமக்கென்று தேசிய மொழி இருக்க வேண்டுமா, அது ஹிந்தியாக இருக்க வேண்டுமா என்பது குறித்து
அரசமைப்பு நிர்ணய சபையில் பல விவாதங்கள் நடைபெற்றன. அதிகாரப்பூர்வ மொழியாக ஹிந்தியைக்
கருதுவதற்கு குறைந்தபட்சம் 1965ஆம் ஆண்டு வரை
கால அவகாசம் தரப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1965ஆம் ஆண்டு
எழுந்த எதிர்ப்பால்தான் பிராந்திய மொழிகள் அனைத்தையும் அதிகாரப்பூர்வ மொழிகளாக்கிய
சட்டத்திருத்தங்கள் சாத்தியமாகின.
அதிகாரத்தை
மையப்படுத்திக் கொண்ட ஆட்சியாளர்களின் கனவாக இருந்த - இந்தியாவின் மிகப் பரந்த பிரதேசங்களை
ஒன்றிணைப்பதற்கான மொழி இருக்க வேண்டும் என்ற கருத்தின் மையத்திலிருந்தே எனது பதிலைத்
தொடங்குகிறேன். அவர்களிடம் நாட்டிற்கென பொதுவான மொழி இருக்க வேண்டும், அதனை அடிப்படையாகக்
கொண்ட மையக் கட்டுப்பாட்டின் மூலம் நாட்டில் உள்ள அனைவரையும் நிர்வகிக்கலாம் அல்லது
அடிமைப்படுத்தலாம் என்ற விருப்பம் காணப்பட்டது. அதுவே தமிழ்நாட்டில் 1930களில் ஹிந்தி
திணிப்புக்கு எதிராக மக்கள் உயிரிழக்கக் காரணமானது. 1960களில் நூற்றுக்கணக்கான மக்கள்
பாதிப்படையும் வகையில் உருவான கலவரங்களுக்கும் அதுவே வழிவகுத்துக் கொடுத்தது. மொழிப்போர்
தியாகிகள் தினத்தை நாங்கள் இன்றுவரையிலும் கொண்டாடி வருகிறோம். ஏற்கனவே கற்றுக் கொண்டவற்றிலிருந்து,
வரலாற்றில் எங்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய பாடத்திலிருந்து இப்போதுள்ள நிலைமையும்
அதுபோன்ற விளைவுகளுக்கு வழிவகுக்கப் போகிறது என்றே கருதுகிறோம். ஒருங்கிணைந்த மொழியை
ஏற்றுக் கொண்ட ஹிந்தி மையப் பகுதிகள் தங்கள்
தாய்மொழிகளை இழந்து நிற்கின்றன. போஜ்புரிக்கு என்ன நேர்ந்தது, அவாதிக்கு என்ன நேர்ந்தது?
ஒரு வாரத்திற்கு முன்பாக எங்கள் முதலமைச்சரின்
சமூக ஊடகப் பதிவைப் பார்த்திருப்பீர்கள். இந்தியாவின் பண்டைய மொழிகளான முப்பதுக்கும் மேற்பட்ட தாய்மொழிகள்
நடைமுறையில் மறைந்து போயிருப்பதை அவர் தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
கரண்
தாப்பர்: ஒரு விஷயத்தை இங்கே சொல்லட்டுமா? மறைந்து விட்டது என்று அவர் கூறுகின்ற
மொழிகள் உண்மையில் மறைந்து போய் விடவில்லை. தினமும் என்னைச் சுற்றிலும் அமர்ந்து பேசிக்
கொண்டிருக்கும் அலுவலர்களிடமிருந்து மைதிலி, குர்மாலி, முண்டாரி என்று மூன்று மொழிகளை
நான் கேட்டுக் கொண்டுதானிருக்கிறேன். அந்த மொழிகள் மறைந்து விட்டதாக அவர் சொல்கின்ற
போதிலும், உண்மையில் அவை எதுவும் மறைந்து போய் விடவில்லை.
தியாகராஜன்: அவை அடக்கி
ஒடுக்கப்பட்டுள்ளன. அந்த மொழிகள் எதுவும் பொதுவான பயன்பாட்டில் இருக்கவில்லை. உண்மையில்
அந்த மொழிகள் இருந்த போதிலும், அவற்றை நம்மால் அறிய முடியாமல் போனதற்கு, பொதுவான அன்றாடப்
பயன்பாட்டில் அவை இல்லாமல் போனதே காரணமாகும். அந்த மொழிகள் நடைமுறையில் இருக்கின்றன
என்றால், அவற்றை நிச்சயம் நம்மால் கேட்க முடியும். ஆனால் எங்கள்
மொழி பொதுவான அன்றாடப் பயன்பாட்டில் இருக்கிறது. அது பேசப்படுவதை அனைவராலும் கேட்க
முடிகிறது. உலகின் மிகப் பழமையான வாழும் மொழியாக எங்கள் மொழி இருக்கிறது. அது எங்கள்
கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. எங்களுடைய இலக்கியம், கலையின் உச்சமாக அது
இருக்கிறது. எங்களின் உயிருள்ளவரை நாங்கள் அதனைப் பாதுகாப்போம். எனவே எங்களுக்குத்
தேவையில்லை… …
கரண்
தாப்பர்: பள்ளிகளில் கற்பிக்கப்படக்கூடிய சாத்தியமான மொழிகளில் ஒன்றாக ஹிந்தி
இருக்கும் வகையில் தேசியக் கல்விக் கொள்கையைத் திணிக்கும் முயற்சியானது, உங்களை அடிபணிய
வைக்க மேற்கொள்ளப்படும் முயற்சி என்றே உங்களுடைய கருத்து இருக்கிறது -இதுவே உங்களிடமிருந்து
வருகின்ற செய்தியாக இருக்கிறது.
தியாகராஜன்: பள்ளிக்
கல்விக் கொள்கையை மாநிலங்களில் அமல்படுத்துவதற்கான அரசமைப்பு உரிமை ஒன்றிய அரசுக்கு
இருக்கிறது என்று நாங்கள் கருதவில்லை. அதனாலேயே தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
கடந்த காலங்களில் ஒருபோதும் நாங்கள் ஏற்றுக் கொண்டிராத மும்மொழிக் கொள்கையை, இப்போது
ஏற்றுக் கொள்வதற்கான காரணம் எதுவும் புதிதாக இல்லை. அதனை எதிர்காலத்திலும் நாங்கள்
விரும்பி ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கான தத்துவார்த்த
காரணம், நடைமுறைக் காரணம் அல்லது ஆதாரத்துடனான காரணங்கள் என்று எதுவுமே இல்லை. மேலும்
எங்களுக்கான வளங்களில் கடுமையான பற்றாக்குறை இருக்கிறது. இவையனைத்திற்கும் அப்பால்,
ஒன்றிய அரசிடம் ஹிந்தி தொடர்பாக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அளித்த வேளையில்,
ஒன்றிய அரசின் பக்கமிருந்து எழுந்த குரல்களை நாங்கள் கேட்டிருக்கிறோம். அப்போது ஹிந்தி
பற்றி உள்துறை அமைச்சர் பல விஷயங்களைத் தெரிவித்திருந்தார். வேறு பலரும் ஹிந்தியைத்
தேசிய மொழியாக்கி அதனை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்த முயன்றார்கள்.
இதுபோன்ற காரணங்களுக்காகவே மும்மொழிக் கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறோம்.
ஆனாலும் இந்த மாநிலத்தில் ஹிந்தியைக் கற்றுக் கொள்ள யாராவது விரும்புவார்கள் என்றால்,
எங்களுக்கு அதில் எந்தவொரு பிரச்சனையும் இல்லை. ஹிந்தி வகுப்புகளை நாங்கள் தடை செய்திடவில்லை. தனியார் பள்ளிகள் அல்லது ஒன்றிய அரசுப் பள்ளிகளில்
ஹிந்திப் பாடமே இருக்கக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. அதேபோல அரசு நிதியுதவியுடன்
நடைபெறும் பள்ளிகளில், அரசுப் பாடத்திட்டத்தில், ஹிந்தியை ஒரு பாடமாக நாங்கள் நிச்சயம்
அறிமுகப்படுத்த மாட்டோம்.
கரண்
தாப்பர்: நிச்சயமாக… நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். தேசியக் கல்விக் கொள்கையை
அமல்படுத்த தமிழ்நாடு இப்போது மறுத்திருப்பதற்குப் பதிலளிக்கும் விதமாக, கல்வியமைச்சர்
தேவேந்திர பிரதான் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் மாநிலத்திற்குத் தர வேண்டிய
சுமார் 2,400 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி வைத்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கையை
அமல்படுத்துவதில்லை என்ற மாநில அளவிலான உங்கள் முடிவுக்கு ஒன்றிய அரசின் எதிர்வினை இது போன்றிருக்கிறது. ஒன்றிய அரசு செய்திருப்பதற்கு
உங்களுடைய பதில் என்ன?
தியாகராஜன்: இரண்டு,
மூன்று கேள்விகளை முதலில் கேட்டு விடுகிறேன். நீங்கள் கூறியவாறு… நீங்கள் தெரிவித்தவாறு
மும்மொழிக் கொள்கைய்னது பல ஆண்டுகளாக ஒவ்வொரு தேசியக் கல்விக் கொள்கையிலும் இடம் பெற்றுள்ளது
என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் இன்று வரையிலும் எந்தவோர் ஒன்றிய அரசும் நிதியுதவி
திட்டங்களின் கீழ் எங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைத்ததில்லை. இப்போது
அதுபோன்ற செயல் நடத்திக் காட்டப்படுகிறது. அத்தகைய நிதிகள் அனைத்தும் ஒன்றிய பட்ஜெட்டில்
நிறைவேற்றப்பட்டு, பாராளுமன்ற அவையால் அங்கீகரிக்கப்பட்டிருப்பவை என்றே நான் கருதுகிறேன்.
ஒன்றிய அரசின் சில திட்டங்கள் பதினந்தாவது நிதி ஆணையத்தின் ஒதுக்கீட்டின் கீழ் நிதியுதவி
பெறுகின்றன. அதுபோன்ற ஒதுக்கீடுகளும் பாராளுமன்ற அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டே செயல்படுத்தப்படுகின்றன.
எனவே, ஒரு பட்ஜெட் நிறைவேற்றப்பட்டு, நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்ட
பின்னர், கூடுதலாகச் சில நிபந்தனைகள் நிறைவேற்றப்படாவிட்டால் - அந்த நிதியை விடுவிக்க
மாட்டோம் என்று கூறுவதற்கு அவர்களுக்கு எந்தவோர் உரிமையும் கிடையாது. அதனால்தான் நான்
மிகத் தெளிவாக, இது பணம் தர மறுக்கும் மிரட்டல் தவிர வேறில்லை, அரசமைப்புச் சட்டத்தை
மீறி பணம் தர மறுக்கும் மிரட்டல் என்று கூறினேன். அரசமைப்புச் சட்டம் அல்லது பட்ஜெட் ஒதுக்கீட்டில் எந்தவொரு நிபந்தனைகளும்
குறிப்பிடப்படாத நிலையில், ஒன்றிய அரசின் நிதியுதவித் திட்டங்களில் இந்த அரசு நடந்து
கொள்வது, நூற்றுக்கும் மேற்பட்ட வழிகளில் அரசமைப்பை மீறுவதாகவே இருந்து வருகிறது. இந்த
அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னர் நிபந்தனைகளை அறிமுகப்படுத்தத் தொடங்குகிறது.
இதனை அது பல வழிகளில் தொடர்ந்து செய்து வருகிறது. மிரட்டுவதற்காக மக்களின் பணத்தை,
வரி வருவாயை அரசியல் கருவியாகப் பயன்படுத்திக் கொள்ளும் இந்த அரசைப் போன்ற வேறு எந்தவோர்
அரசையும் இந்திய வரலாற்றில் கண்டதில்லை. இந்த அரசு ஒவ்வொரு வாய்ப்பையும், ஒவ்வொரு கோணத்தையும்,
ஒவ்வோர் அணுகுமுறையையும் மிரட்டுவதற்காகவே பயன்படுத்திக் கொள்கிறது என்பதே எனது புரிதலாகும்.
எந்தவொரு மசோதாவிலும் - நிதிமசோதாவில் அவர்கள் கூறுவதைப் போன்ற நிபந்தனைகள் எதுவும் இடம் பெறுவதில்லை. ஆனாலும் மசோதா நிறைவேற்றப்பட்ட
பிறகு, இதனை நீங்கள் மறுக்காமல் ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது போன்ற கூடுதல் நிபந்தனைகளை
அவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். அதுபோன்ற உரிமை அவர்களுக்கு இருப்பதை ஒன்றிய அமைச்சர்
தெளிவாக்க வேண்டும் என்று கோரி மாநில அரசு நீதிமன்றத்திற்குச் சென்று, அமைச்சரைப் பொறுப்பேற்றுக்
கொள்ளச் செய்ய வேண்டும் எனக் கருதும் பலரில்
நானும் ஒருவன்.
கரண்
தாப்பர்: இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். மாநில அரசு நீதிமன்றத்திற்குச்
செல்ல வேண்டும் என்று கருதும் நீங்கள் மாநில அரசின் அமைச்சராக இருக்கிறீர்கள். நீங்கள்
நீதிமன்றத்திற்குச் செல்வீர்களா?
தியாகராஜன்: என்னுடையதல்லாத
ஒரு துறைக்காக நான் பேச முடியாது. நான் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருக்கிறேன்.
கல்வி அமைச்சராக இருந்திருந்தால் இந்தக் கேள்விக்கு என்னால் நேரடியாகப் பதிலளித்திருக்க
முடியும்.
கரண்
தாப்பர்: இந்தப் பிரச்சனையை, அதற்கான சாத்தியத்தை நீங்கள் அமைச்சரவையில்
எழுப்பியிருக்கிறீர்களா…
தியாகராஜன்: பல பொதுமேடைகளில் அதை நான் பகிரங்கமாக
எழுப்பியிருக்கிறேன். எங்கள் கூட்டங்களிலும்
எழுப்பியுள்ளேன். அனைத்துக் கூட்டங்களிலும் நான் இது அரசமைப்புக்கு அப்பாற்பட்ட
செயல் என்றே கூறி வருகிறேன். அரசமைப்புக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளுக்காக ஆளுநரை மாநில
அரசு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றதைப் போல, அரசமைப்புக்குப் புறம்பான செயல்களுக்காக
மாநில அரசு அமைச்சரை நீதிமன்றத்திற்கு அழைக்க
வேண்டும். இந்த ஒன்றிய அரசு அனைத்து வகையான வழிமுறைகளையும் பயன்படுத்தி இவ்வாறு நடந்து
கொள்வதன் மூலம் மக்களின் விருப்பத்தைத் தொடர்ந்து தகர்த்து வருகிறது. அதன் மூலம் ஒன்றிய
அரசுக்குச் சமமாக உள்ள மாநில அரசை அடிபணிய வைக்க முயன்று வருகிறது. தாங்கள் பெற்றிருக்கும்
வெற்றியைக் கொண்டு ஒரு நகராட்சியைப் போன்று எங்களை நடத்துவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள்…
கரண்
தாப்பர்: நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறேன்.
ஆனாலும் திரு.பிரதான் கூறியிருப்பதை மாற்றிக் கொள்ளும் வரை, ஒன்றிய அரசிடமிருந்து வர
வேண்டிய 2400 கோடி ரூபாயை விட்டுத் தர நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இருமொழிக் கொள்கையைப்
பின்பற்றுவதை வலியுறுத்தும் நீங்கள் இழக்கப் போகின்ற பணம் ஒரு சிறிய தொகை கிடையாது.
2400 கோடி ரூபாய் என்பது நிச்சயம் உங்கள் பள்ளிக்கூடங்களில் உள்ள ஆய்வகங்களைப் பாதிக்கும்;
பாடப்புத்தகங்களைப் பாதிக்கும்; ஆசிரியர்களுக்குத் தரப்பட வேண்டிய பயிற்சிகளைப் பாதிக்கும்.
அதற்கெல்லாம் நீங்கள் உங்கள் பட்ஜெட்டில் வேறு எங்காவது பணத்தைத் தேட வேண்டி வரும்.
அதன் காரணமாக உங்கள் கல்வி அமைப்பு பாதிக்கப்படும்.
தியாகராஜன்: நீங்கள்
இதுபோன்ற கேள்வியை முன்னிறுத்துவது கொஞ்சம் விசித்திரமாகவே இருக்கிறது. ஒரு தொழிலை
நான் நடத்தி வருகிறேன் என்று கொள்ளுங்கள். மாஃபியா கும்பலிலிருந்து ஒருவர் வந்து, எனது
நெற்றியில் துப்பாக்கியை வைத்து அழுத்தி, உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால்
எனக்குப் பணத்தைக் கொடுங்கள், இல்லையெனில் உங்கள் தொழிலை மேற்கொண்டு நீங்கள் நடத்த
முடியாது என்று கூறுவதாகக் கொள்ளுங்கள். பத்தாயிரம் கோடி ரூபாய் நான் எனது தொழில் மூலம் சம்பாதிக்கிறேன் என்று கொள்ளலாம். அவர்கள் கேட்கும்
பணம் இரண்டாயிரம் கோடி ரூபாய். இரண்டாயிரம் கோடி கொடுத்து உங்களைப் பாதுகாத்துக் கொண்டு,
பத்தாயிரம் கோடி ரூபாய்க்கான உங்கள் தொழிலை ஏன் நடத்தக் கூடாது என்று இப்போது நீங்கள்
என்னிடம் கேட்பதாகத்தான் உங்கள் கேள்வி இருக்கிறது. மிகவும் அசாதாரணமான இந்தக் கேள்வி
என்னிடம் வேறுமாதிரியகக் கேட்கப்பட்டிருக்க வேண்டும். சட்டப்படி எனக்குத் தரப்பட்டிருக்க
வேண்டிய பணம் எனக்கு மறுக்கப்படுகிறது. எனக்கான கொள்கையைப் பின்பற்ற விரும்புகின்ற
என்னிடம், எனது உரிமையை நான் ஏன் விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற கேள்வியை நீங்கள் எழுப்புகிறீர்கள்.
அரசமைப்புச் சட்டம் எங்களுக்கு உரிமை அளித்திருக்கிறது. நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம்.
நாங்கள் எந்தக் கல்விக் கொள்கையைச் செயல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை
எங்களுக்கே இருக்கிறது. இதைச் செயல்படுத்தவில்லையென்றால், இந்தப் பணம் உங்களுக்குக்
கிடைக்காது என்று நிதி மசோதாவில் எதுவும் சொல்லப்படவில்லை. திடீரென அரசமைப்பிற்கு அப்பாற்பட்ட,
சட்டப்பூர்வமற்ற நிபந்தனையைக் கொண்டு வந்து அமைச்சர் திணிக்கிறார்.
அரசமைப்புச்
சட்டத்திற்குப் புறம்பாக இதை உங்களால் எப்படிச் செய்ய முடிகிறது என்று அமைச்சரிடம்
கேட்பதற்குப் பதிலாக, பணத்தை விட்டுக்கொடுக்கத் தயாரா, மிரட்டலை எதிர்கொள்ளத் தயாராக
இருக்கிறீர்களா என்று நீங்கள் என்னிடத்தில் கேட்கிறீர்கள். மிரட்டலை எதிர்கொண்டு நிற்பதற்கு
நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அதை இரண்டு வழிகளில் என்னால் சொல்ல முடியும். எங்கள்
முதலமைச்சர் கூறியதைப் போல எங்கள் மொழி, எங்கள் கொள்கைகள், எங்கள் விழுமியங்கள் நிச்சயம்
2400 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடையவை - விலைமதிப்பற்றவை. ஒன்றிய அரசு 2400
கோடி ரூபாயை நிறுத்தி வைப்பது அல்லது அரசியலுக்காகப் பணத்தைப் பயன்படுத்துவது என்று
செயல்படுவது, தங்களுக்குப் பிடித்தமான திட்டங்கள் அனைத்தையும் குஜராத்திற்கு வழங்குவது,
கடந்த பத்தாண்டு கால வளர்ச்சிப் போக்குடன் ஒப்பிடும்போது ஒரு லட்சம் கோடி கூடுதல் பணத்தை
உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு ஒதுக்கியது போன்ற முடிவுகள் மூலம் மக்களை மிரட்டி, அவர்களை
அடிபணிய வைக்க முடியும் என்று அவர்கள் நம்புவார்களேயானால், அவர்கள் தவறான புரிதலுடன்
இருக்கிறார்கள் என்பதே இரண்டாவதாக நான் சொல்ல விரும்பும் விஷயமாகும். மிக முக்கியமாக
இந்தப் பணத்திலிருந்து கிடைக்கும் பொருளாதாரப் பலன்களை அல்லது முன்னேற்றங்களை அவர்களால்
எடுத்துச் சொல்ல முடியவில்லை. அதுவே அறியாமையால் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து போவதைக்
காட்டிலும் நிதியைப் பெறுவதற்காக சரியான பாதையில் செல்வதே பொருளாதாரரீதியாக மிகச் சிறந்த
செயலாக இருக்கும் என்ற நம்பிக்கையை எங்களுக்குத் தருகிறது.
கரண்
தாப்பர்: அடுத்து தொகுதி மறுசீரமைப்பு குறித்த விவாதத்திற்குச் செல்வதற்கு
முன்பாக தேசியக் கல்விக் கொள்கை பற்றிய எனது கடைசி கேள்விக்கு வருகிறேன். ஒன்றிய அரசுக்கும்,
மாநில அரசுக்கும் இடையில் கிட்டத்தட்ட தீர்க்க முடியாத, முழுமையான மோதல் இருப்பதாகவே
நான் கருதுகிறேன். வேறொரு சொற்றொடரைப் பயன்படுத்துவது
என்றால் முட்டுக்கட்டை இருப்பதாக…
தியாகராஜன்: ஆம்… அது
ஒரு முட்டுக்கட்டைதான். இந்த நாட்டில் சட்டம் சரியாகச் செயல்படவில்லையென்றால், அரசமைப்புச்சட்டம்
உயிர்ப்புடன் இல்லாவிட்டால் அது ஒரு முட்டுக்கட்டைதான். அரசமைப்புச் சட்டத்தைச் சரியான
முறையில் சட்டத்தின் ஆட்சி அமல்படுத்துகின்ற போது, ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
நிதி மசோதாவில் அல்லது பதினைந்தாவது நிதி ஆணையத்தால் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில்
கூடுதல் நிபந்தனைகளைத் திணிப்பதற்கான உரிமை இருப்பதில்லை என்பதால், இந்திய அரசு உடனடியாக தான் வழங்க வேண்டிய நிதியை விடுவிக்க வேண்டியிருக்கும்.
Comments