கே. அசோக் வர்தன் ஷெட்டி
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி
இந்திய கடல்சார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
தரவுகள்,
ஆய்வுகள், புள்ளிவிவரப் பகுப்பாய்வுகளை நம்பியே ஆதாரங்களின் அடிப்படையிலான கொள்கைகள்
உருவாக்கப்படுகின்றன. அவை ஒருபோதும் சித்தாந்தங்களை, ஆதாரங்களைக் கொண்டு நிரூபிக்கப்படாத
அனுமானங்களை அல்லது அரசியல் வாய்ப்புகள் மீது நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. ஆதாரங்கள்
அடிப்படையில் உருவாக்கப்படுகின்ற கொள்கைகளே உண்மையான தேவைகளை நிறைவேற்றுவது, செயல்திறனை
அதிகரிப்பது, தேவையற்ற சுமைகளைத் தவிர்ப்பது போன்றவற்றை உறுதி செய்து தரும் வல்லமை
மிக்கவையாகத் திகழ்கின்றன. அந்த அடிப்படையில் காணும்போது, தேசிய கல்விக் கொள்கை -
2020 மூலம் பள்ளிகளில் மூன்றாவது மொழியை அமல்படுத்துவதற்காகத் தரப்படும் அழுத்தமானது,
தனது இலக்கை அந்தக் கொள்கை அடையத் தவறி விட்டதையே வெளிக்கொணர்கிறது.
கணக்கெடுப்புகள்
சொல்வதென்ன?
மூன்றாவது
மொழியைக் கற்பிப்பது குறித்த எந்தவொரு விவாதமும் - இந்தியப் பள்ளி அமைப்பு, பாடங்களைத்
திறம்படக் கற்றுத் தரும் அதனுடைய திறன் குறித்த நேர்மையான மதிப்பீடுகளிலிருந்தே துவங்கப்பட
வேண்டும். பதினைந்து வயதுடையவர்களின் வாசிப்பு, கணிதம் மற்றும் அறிவியல் திறன்களை மதிப்பிடும்
வகையில் சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத் திட்டத்தின் (Programme for International
Student Assessment) மூலம் மூன்றாண்டுகளுக்கொரு முறை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்
மேம்பாட்டு அமைப்பானது உலகளாவித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்தியா அந்த விஷயத்தில்
அதிகம் போராடி வருவதையே அந்தத் தேர்வின் முடிவுகள் எடுத்துக்காட்டின. 2009ஆம் ஆண்டில்
அந்தத் தேர்வில் பங்கேற்ற 74 நாடுகளில் கிர்கிஸ்தானை முந்தி இந்தியாவால் 73ஆவது இடத்தையே
பிடிக்க முடிந்தது. அதற்குப் பிறகு அந்த மதிப்பீட்டில் கலந்து கொள்வதிலிருந்து இந்தியா
தன்னை விலக்கி வைத்துக் கொண்டது. அந்த மதிப்பீட்டில் சிங்கப்பூர், சீனா, தென் கொரியா,
எஸ்டோனியா, பின்லாந்து போன்ற நாடுகள் தொடர்ந்து முதலிடத்திற்கு அருகிலேயே இருந்து வருகின்ற
நிலைமையானது, அந்த நாடுகளில் நடைமுறையிலிருக்கும் பள்ளிக் கல்வி அமைப்பின் வலிமையையே
பிரதிபலித்துக் காட்டுகிறது.
இந்தியாவில்
மோசமான நிலைமை இருந்து வருவதை உள்நாட்டிலேயே நடத்தப்படும் மதிப்பீடுகளும் எடுத்துக்காட்டுகின்றன.
மூன்றாண்டுகளுக்கொரு முறை நடத்தப்படும் தேசிய சாதனை கணக்கெடுப்பு (National
Achievement Survey) 2001ஆம் ஆண்டிலிருந்து 3,5,8 மற்றும் 10ஆம் வகுப்புகளில் கற்றல்
விளைவுகளை மதிப்பீடு செய்து வருகிறது. 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய சாதனை கணக்கெடுப்பில்,
பிராந்திய மொழி அல்லது ஹிந்தியில் ஒரு எளிமையான பத்தியை எட்டாம் வகுப்பு மாணவர்களில்
48% பேரால் மட்டுமே வாசிக்க முடிந்தது, 47% பேரால் மட்டுமே கட்டுரை அல்லது கடிதத்தை
எழுத முடிந்தது, மொழியிலக்கணம் குறித்த நல்ல புரிதல் 42% பேரிடம் மட்டுமே இருந்தது
எனக் கண்டறியப்பட்டது. 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் அத்தகைய செயல்பாடுகள்
முறையே 56%, 49% மற்றும் 44% எனச் சிறிய அளவில் முன்னேற்றம் கண்டிருந்தது தெரிய வந்தது.
2018ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களிடம் மட்டும் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் ஆங்கிலப் புலமையில்
மிக மோசமான நிலைமையில் இருப்பது கண்டறியப்பட்டது. தேசிய சாதனை கணக்கெடுப்பு மூன்றாவது
மொழியில் மாணவர்களுக்குள்ள புலமையை மதிப்பீடு செய்வதில்லை என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.
மூன்றாவது மொழியில் மாணவர்களின் செயல்திறனை ஆராய்வதில் கொள்கை வகுப்பாளர்கள் காட்டி
வருகின்ற தயக்கம் கவலையளிப்பதாகும்.
பிரதம்
என்ற அரசு சாரா நிறுவனம், கிராமப்புற இந்தியப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும்
கற்றல் விளைவுகளை மதிப்பீடு செய்து வருகிறது. அந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஆண்டுதோறும்
கல்வி நிலை ஆண்டறிக்கை (Annual State of Education Report) அந்த நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
தங்கள் பிராந்திய மொழியில் அல்லது ஹிந்தியில் உள்ள இரண்டாம் வகுப்பு பாடத்தைக்கூட சரிவரப்
படிக்க முடியாத நிலையில் எட்டாம் வகுப்பு மாணவர்களில் 27% பேர் இருப்பதாக 2018ஆம் ஆண்டு
கல்வி நிலை ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிலைமை 30.4% என 2022ஆம் ஆண்டில்
மேலும் மோசமடைந்தது. 2016ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் உள்ள எளிய வாக்கியங்களைக் கூட படிக்க
முடியாத எட்டாம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை 73.8% என்ற அளவில் இருந்த நிலைமை
2022இல் 53.3% என்ற அளவிற்குக் குறைந்திருந்தது.
தேசிய சாதனை கணக்கெடுப்பைப் போல, மூன்றாவது மொழியில் மாணவர்களுக்குள்ள தேர்ச்சியை
கல்வி நிலை ஆண்டறிக்கையும் மதிப்பீடு செய்வதில்லை.
இந்தியப் பள்ளி மாணவர்கள் பலரும், தங்களுடைய தாய்மொழியைக் கற்றுக் கொள்வதற்கே மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதுபோன்ற நிலையில் அவர்கள் ஆங்கிலத்தை மிக அரிதாகவே கையாள்கின்றனர். மூன்று மொழிகளை மோசமாகக் கற்பிப்பதைக் காட்டிலும், இரண்டு மொழிகளை மட்டும் சிறப்பாகக் கற்பிப்பது சிறந்ததல்லவா என்ற கேள்வியையே இந்த நிலைமை எழுப்புகிறது. மூன்றாவது மொழியில் மாணவர்களின் தேர்ச்சி குறித்து நம்பகமான தரவுகள் எதுவுமில்லாத நிலைமை, மும்மொழிக் கொள்கை ஆய்வுக்கு உட்படுத்தப்படுவதைத் தடுக்கிறது. தேசிய கல்விக் கொள்கை-2020யும் இந்தத் தரவு இடைவெளியைக் களையத் தவறியுள்ளது.
இதுபோன்றதொரு
நிலைமை நீடித்து வருகின்ற நிலையில், ஏற்கனவே பற்றாக்குறையுடன் இருக்கும் அரசின் வளங்களை
கணிதம், அறிவியல் போன்ற முக்கியமான பாடங்களை வலுப்படுத்துவதற்கும், செயற்கை நுண்ணறிவு
(AI) போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கும் ஒதுக்குவதே புத்திசாலித்தனமாக காரியமாக
இருக்கும். நாட்டிலுள்ள 184 பள்ளிகளில் ஆறு வயது குழந்தைகளுக்கு செயற்கை நுண்ணறிவைக்
கற்றுத் தருவதில் சீனா ஏற்கனவே முன்னோடியாக இருந்து வருகிறது. எஸ்டோனியா, கனடா, தென்
கொரியா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் இடைநிலைக் கல்வியுடன் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைத்துள்ளன.
ஆய்வுகள்
சொல்வதென்ன?
மிகவும்
சிக்கலானதொரு பிரச்சனையை தேசிய கல்விக் கொள்கை-2020இல் இடம் பெற்றுள்ள மும்மொழிக் கொள்கை
அதிகம் எளிமைப்படுத்துகிறது. உலகளாவி நடைமுறையில் உள்ள சிறந்த நடைமுறைகளைப் பற்றிய
குறிப்புகள் எதுவுமே இல்லாமல், இந்தக் கல்விக் கொள்கை ஒற்றை வாக்கியத்தில் மும்மொழிக்
கொள்கைக்கான ஒப்புதலை வழங்குகிறது.
மூன்றாவது
மொழியைக் கற்பவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகமாக இல்லாத காரணத்தால், அறிவாற்றல்
பலன்கள் கிடைக்கிறது என மூன்றாவது மொழியைக் கையகப்படுத்திக் கொள்வதற்கான கேம்பிரிட்ஜ்
கையேடு குறிப்பிடுகிறது. மூன்றாவது மொழியைக் கற்றுக் கொள்வதென்பது, அறிவாற்றல் பெறுவதற்கான
சுமையை நிச்சயம் அதிகரிக்கவே செய்யும். முதலாவது மற்றும் இரண்டாவது மொழிகளுடன் மாணவர்கள்
போராடிக் கொண்டிருக்கின்ற நிலைமையில், மூன்றாவது மொழியைக் கூடுதலாகக் கற்பதென்பது அவர்களுடைய
அறிவாற்றல் திறனுக்கு அப்பாற்பட்ட காரியமாகவே இருக்கும். அதன் காரணமாக மனச் சோர்வு
ஏற்பட்டு, அவர்களுடைய கற்றல் திறன் குறைய நேரிடலாம். மூன்றாவது மொழியைக் கற்றுக் கொள்வதால்,
முதலாவது மற்றும் இரண்டாவது மொழி வகுப்புகளுக்கான பயிற்சி நேரம் குறைந்து விடும் என்பதால்,
மாணவர்கள் அந்த மொழிகளில் தேறாமல் போவதற்கான
ஆபத்து அதிகரித்திடும். மூன்றாவது மொழிக்கான வகுப்புகளால் முதலாவது மற்றும் இரண்டாவது
மொழி வகுப்புகள் அதிகப் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும். கூடுதலாக மொழிகளைக் கற்பதன் விளைவாக உச்சரிப்பு, இலக்கணம், சொல்வளம் ஆகியவற்றில் குழப்பங்கள்
மாணவர்களிடையே ஏற்படலாம். அவர்களைப் பொறுத்தவரை, மூன்று மொழிகளிலும் சமமான சரளத்தை
அடைவதென்பது அரிதான செயலாகவே இருக்கும்.
மூன்று
மொழிகளில் ஒன்று பொதுவாக ஆதிக்கம் செலுத்தும் வகையிலேயே இருக்கும். எனவே மற்ற இருமொழிகள்
பலவீனமடையக் கூடும். மொழிகளுக்கிடையிலான ஒற்றுமை அந்த மொழிகளைக் கற்றுக் கொள்வதை எளிமையாக்கும்
என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இலக்கணம், சொல் வளம், உச்சரிப்பில் இருக்கும்
ஒற்றுமை காரணமாக மராத்தி, பஞ்சாபி, ஒடியா போன்ற மொழிகளைச் (இந்தோ-ஆரிய மொழி குடும்பத்தைச்
சேர்ந்தவை) சார்ந்தவர்களுக்கு ஹிந்தியை மூன்றாவது மொழியாகக் கற்பது மிகவும் எளிதாகவே
இருக்கும். ஆனால் தமிழ் (திராவிட), சந்தாலி (ஆஸ்ட்ரோ-ஆசியா) மற்றும் மிசோ (சீன-திபெத்திய)
மொழி பேசுபவர்களுக்கு ஹிந்தி கற்பதென்பது எளிதாக இருக்காது. ஹிந்தி மொழியைக் கற்றுக்
கொள்வது அவர்களைப் பொறுத்தவரை கடினமான காரியமாகவே இருக்கும் என்பதால், சமச்சீரற்ற கற்றல்
சுமை மாணவர்களிடையே உருவாகும். இதுபோன்ற சிக்கல்களை தேசியக் கல்விக் கொள்கை 2020-ன்
கடுமையான மும்மொழிக் கொள்கை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறது.
மும்மொழிக்
கொள்கையைச் செயல்படுத்துவதில் உள்ள சவால்கள்
மாணவர்களால்
பல மொழிகளைத் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொள்ள முடியும் என்றாலும், பொதுப்பள்ளிகளில்
இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைக் கற்றுத் தருவதற்குத் தேவைப்படும் நிதிச்செலவு மிகவும்
அதிகமாகவே இருக்கும். இரண்டு மொழிகளில் அடிப்படைத் தேர்வு பெறுவதற்கே இந்தியப் பள்ளிகள்
போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தெளிவான பலன்கள்
கிடைக்கும் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் - மூன்றாவது மொழியைத் திணிப்பது
நிச்சயம் தவறான நடவடிக்கையாகத்தான் இருக்கும்.
மூன்றாவது
மொழியைக் கற்றுத் தருவதற்குத் தேவைப்படுகின்ற ஆசிரியர்களைப் பணியிலமர்த்துவது, அவர்களுக்குப்
பயிற்சியளிப்பது மற்றும் தேவையான பாடப்புத்தகங்கள், தொழில்நுட்பத்திற்கென்று குறிப்பிடத்தக்க
அளவில் தேவைப்படும் கூடுதல் முதலீடுகள் கிராமப்புறப் பள்ளிகள் மற்றும் பட்ஜெட்-பற்றாக்குறை
உள்ள மாநிலங்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
மாநிலங்கள்
மீது எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது, மூன்று மொழிகளை - அவற்றில் இரண்டு மொழிகள்
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை - தேர்வு செய்து கொள்கின்ற சுதந்திரம் மாணவர்களுக்கு
இருக்கிறது என்று தேசிய கல்விக் கொள்கை-2020 கூறுகிறது. ஆனால் அதுபோன்றதொரு ‘தேர்வு’
வெறுமனே மாயையாக மட்டுமே இருக்கும். தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களில்
30% பேர் தெலுங்கு, 20% பேர் மலையாளம்,
20% பேர் கன்னடம், 10% பேர் ஹிந்தி, 10% பேர் சமஸ்கிருதம் என்று வெவ்வேறு மொழிகளை மூன்றாவது
மொழியாகக் கற்றுக் கொள்ளும் விருப்பத்துடன் இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அதுபோன்ற
பல்தரப்பட்ட விருப்பத்தேர்வுகள் மாணவர்களுக்கு இருந்தால், அவர்கள் விரும்பும் அனைத்து
மொழிகளையும் கற்றுத் தரப் போதுமான தகுதிவாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பது நடைமுறைக்குச்
சாத்தியமாகாது. அதனால் ஏற்படும் செலவினங்கள் உள்ளிட்டு வேறு மொழிகளைக் கற்றுத் தருவதில்
உருவாகும் பல்வேறு தடைகளின் காரணமாக, ஹிந்தி பேசாத மாநிலங்களைப் பொறுத்தவரை ஹிந்தி
அல்லது சமஸ்கிருத மொழிகள் மீது மறைமுகமான உந்துதல் நிச்சயம் இருக்கவே செய்யும். இவற்றில்
ஒன்றை மூன்றாவது மொழியாக அல்லது இவையிரண்டையும் வழங்க வேண்டிய கட்டாயத்திற்குப் பள்ளிகள்
உள்ளாக நேரிடும். நிஜ உலகின் சவால்களை தேசிய கல்விக் கொள்கை-2020இன் மும்மொழிக் கொள்கை
அறவே புறக்கணிக்கிறது.
கடந்த
காலத்திலிருந்து மீள முடியாத கொள்கை
மொழியைக்
கற்றுக் கொள்வதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து மேலோட்டமாக தேசிய கல்விக்
கொள்கை-2020 குறிப்பிடுகிறது என்றாலும், செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இயங்கும் மொழிபெயர்ப்பிற்கான
வசதிகளின் பயன்பாட்டுத் திறனை அந்தக் கொள்கை வடிவம் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத்
தெரியவில்லை. மொழிபெயர்ப்பிற்கான அத்தகைய வசதிகளைக் கொண்டு உரைகள், படங்கள் மற்றும்
கேட்பொலிகளை உடனடியாக எந்தவொரு மொழியிலும் மொழிபெயர்த்துக் கொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாது,
எந்தவொரு மொழியிலும் உள்ள உரையை வேறொரு மொழியில் கேட்பொலியாக, அல்லது கேட்பொலியிலிருந்து
உரையாக மாற்றிக் கொள்ளவும் முடிகிறது. அதுபோன்ற
மொழிபெயர்ப்பு வசதிகள், பன்மொழிக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான தேவையைக் குறைத்துள்ளன.
தாய்மொழி
அல்லது பிராந்திய மொழியுடன் அடிப்படை எழுத்தறிவிற்காக ஆங்கிலத்தையும் கற்றுக் கொள்வது
அவசியமாக இருக்கும் காரணத்தால், அந்த மொழிகளை நவீன டிஜிட்டல் கருவிகளை, மேம்படுத்தப்பட்ட
பாரம்பரிய வகுப்பறை முறைகளைப் பயன்படுத்தி மாணவர்களுக்குக் கற்பிக்கலாம். ஆனால் மூன்றாவது
மொழிக்கு அதுபோன்ற செயல்திறமை அல்லது வகுப்பறை கற்பித்தல் முறை தேவைப்படாது. அத்தகைய
கற்பித்தல் முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நாம் ஏன், தங்களுடைய தேவைகளின் அடிப்படையில்
அவரவருக்கான வேகத்துடன் கூடுதல் மொழிகளை மாணவர்கள் கற்றுக்கொள்வதை எளிதாக்கித் தருகின்ற
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? அத்தகைய அணுகுமுறை நிச்சயம் செலவு
குறைவாக, கூடுதல் நெகிழ்வுடன் இருக்கும்.
மொழியைக்
கற்றுக் கொள்வது குறித்த தேசிய கல்விக் கொள்கை-2020இன் அணுகுமுறை, பெற்றோர்கள் மற்றும்
மாணவர்களின் ஆசைகளுடன் விளையாடிப் பார்க்கிறது. அது மொழிகளைக் கலாச்சார நோக்கங்களாகக்
கருதுவது மட்டுமல்லாது, வேலைவாய்ப்புச் சந்தையில் மொழிகளுக்கென்றிருக்கின்ற நடைமுறை
மதிப்பையும் புறக்கணிக்கிறது. ஆங்கிலத்தைக் காட்டிலும் மிகச் சிறிய அளவிலான நடைமுறைப்
பயன்பாடு, மிகக் குறைவான தொழில் வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் சமஸ்கிருத மொழி மீது
அதிக அளவிலான அர்ப்பணிப்பைக் காட்டுவதன் மூலம், இந்தக் கல்விக்கொள்கை தன்னுடைய கருத்தியல்
சார்புகளை கூடுதலாக வெளிப்படுத்துகிறது. ரஷ்யா, சீனா, தென் கொரியா, ஜப்பான், பிரேசில்
மற்றும் ஐரோப்பா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகள் ஆங்கிலக் கல்வியைத்
தீவிரமாக ஊக்குவித்து வருகின்ற வேளையில், உயர்கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும்
உலகளாவிய வேலைச் சந்தைகளில் ஆங்கிலக் கல்விக்கு இருக்கின்ற முக்கியமான பங்கை அங்கீகரிப்பதற்கு
இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை-2020 தவறியுள்ளது.
சிங்கப்பூரிடமிருந்து
கிடைக்கும் பாடங்கள்
சிங்கப்பூரின்
தேசிய மொழியாக மாண்டரின் மொழியை மட்டுமே அறிவிக்க வேண்டும் என்று பெரும்பான்மையாக உள்ள
சீனர்களிடமிருந்து (மக்கள்தொகையில் 74.3%) வந்த கடுமையான அழுத்தத்தைத் தான் எதிர்கொண்ட
விதம் பற்றி சீன வம்சாவளியைச் சேர்ந்த லீ குவான் யூ ‘மூன்றாம் உலகிலிருந்து முதலாம்
உலகிற்கு’ என்ற தனது புத்தகத்தில் விவரித்துள்ளார். தேசிய மொழியாக மாண்டரின் மொழியை
அங்கீகரிப்பது மலாய்க்காரர்கள் (13.5%), தமிழர்கள் (9%) மற்றும் பிற சிறுபான்மையினரை
அந்நியப்படுத்தி விடும் என்பதை நன்கு உணர்ந்திருந்த காரணத்தால், அனைத்து மக்களுக்குமான
நியாயத்தை உறுதிப்படுத்தும் வகையில் அவர் காலனித்துவ மரபு மொழியாக இருந்த போதிலும்
- நடுநிலை மொழியாக இருந்த ஆங்கிலத்தை சிங்கப்பூரின் தொடர்பு மொழியாகத் தேர்ந்தெடுத்துக்
கொண்டார்.
சிங்கப்பூர்
இருமொழிக் கல்விமுறையையே ஏற்றுக் கொண்டுள்ளது. அங்குள்ள மாணவர்கள் ஆங்கிலத்தை முதல்
மொழியாகவும், தாய்மொழியை (மாண்டரின், மலாய் அல்லது தமிழ்) இரண்டாவது மொழியாகவும் கற்று
வருகின்றனர். பெற்றோர்களும் சிறந்த தொழில் வாய்ப்புகளைக் கருதி ஆங்கிலவழிக் கல்வி முறையை
ஆதரிக்கின்றனர். அவர்களுடைய கலாச்சார அடையாளத்தை தாய்மொழி வலுப்படுத்தியது. லீயின்
கொள்கை இனப் பதட்டங்களைத் தடுத்து நிறுத்தி, சமூக ஒற்றுமையை வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல்
கலாச்சாரப் பாதுகாப்பையும் உறுதி செய்து கொடுத்துள்ளது. சிங்கப்பூரின் பொருளாதார எழுச்சியை
ஆங்கில மொழி உந்தித் தள்ளியது. பன்னாட்டு நிறுவனங்கள், நிதி மற்றும் புதுமைகளுக்கான
உலகளாவிய மையமாக சிங்கப்பூரை அந்த மொழியே மாற்றிக் காட்டியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள
பள்ளிக் கல்விமுறை உலகிலேயே மிகச் சிறந்ததாகத் திகழ்கிறது. சர்வதேச மாணவர் மதிப்பீட்டுத்
திட்டத்தின் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் 2015இல் முதலிடத்தையும், 2018இல் இரண்டாமிடத்தையும்,
2022இல் மீண்டும் முதலிடத்தையும் பெற்றது.
ஒருங்கிணைப்பு
மொழியாக ஹிந்தியால் ஏன் செயல்பட முடியாது?
இந்தியர்களில்
43.63% பேர் ஹிந்தி பேசுவதாக 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கூறுகிறது. இருப்பினும்
53 பிற மொழிகளை ஹிந்தி மொழியின் ‘பேச்சுவழக்குகளாகச்’ சேர்த்துக் கொண்டதன் மூலமாகவே
அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று ‘இந்தியா: மொழியியல் நாகரிகம்’ என்ற
தலைப்பில் எழுதிய புத்தகத்தில் அறிஞர் ஜி.என். தேவி வெளிப்படுத்தியுள்ளார். முற்றிலும்
சுதந்திரமாக இயங்கி வருகின்ற அவதி, போஜ்புரி, பிரஜ்பாஷா, மகதி, சத்தீஸ்ஹரி, ராஜஸ்தானி
போன்ற பல மொழிகள் ஹிந்தியைக் காட்டிலும் மிகப் பழமையானவையாகும். அந்த மொழிகள் அனைத்தையும்
தவிர்த்து விட்டுப் பார்த்தால், மக்கள் தொகையில் 25% மட்டுமே ஹிந்தி பேசுபவர்களாக இருப்பர்.
இந்தியர்களில் 63.46% பேர் இதுவரையிலும் தங்கள் பிறந்த இடத்தை
விட்டே வெளியேறியதில்லை, 85.27% பேர் தங்கள் சொந்த மாவட்டத்திற்குள்ளேயே இருந்து வருகின்றனர்,
95.28% பேர் தங்கள் சொந்த மாநிலத்தை விட்டு வெளியேறியதே இல்லை என்று 2011 மக்கள்தொகை
கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்தது. வேலை வாய்ப்புகள் தெற்கு, மேற்கு இந்தியா மற்றும்
புதுதில்லி என்று ஹிந்தி பேசாத மாநிலங்களிலேயே குவிந்துள்ள காரணத்தால், மாநிலங்களுக்கு
இடையேயான இடப்பெயர்வு பெரும்பாலும் ஹிந்தி மையப்பகுதியிலிருந்து வெகு தொலைவிற்கு அப்பாலும்
நடைபெறுகிறது. 29% இந்தியர்கள் மட்டுமே ஹிந்தி பேசுகிறார்கள், தங்கள் சொந்த மாநிலங்களுக்குள்
மட்டுமே வாழ்ந்து வரும் 95% இந்தியர்கள் தங்கள் தாய்மொழிகளை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள்
எனும் போது, பொதுவான தேசிய மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்ற நேரடியான அல்லது மறைமுகமான
கோரிக்கை எதுவும் முற்றிலும் தவறானதாகவே இருக்கும்.
தேசிய
ஒற்றுமைக்கு ஒரேயொரு மொழி பொதுவாக இருக்க வேண்டும் எனக் கூறப்படுவது, ஐரோப்பாவிலிருந்து
இறக்குமதி செய்யப்பட்ட கருத்துருவாக்கமாகும். பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில்
ஜெர்மனி, இத்தாலி, போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் மொழியியல்
தேசியவாதத்தை ஏற்றுக் கொண்டன. அதுபோன்றதொரு மாதிரியை மொழியியல்ரீதியாக வேறுபட்ட உலக
நாகரிகங்களில் ஒன்றாக இருந்து வருகின்ற இந்தியாவிற்குப் பயன்படுத்துவது ஏற்புடையதாக
இருக்காது. அதுபோன்ற செயல்பாடு துடிப்பான, பன்முகத்தன்மையுடன் உள்ள காட்டை, மலட்டு
ஒற்றை கலாச்சாரத்தன்மை கொண்டதாக மாற்றும் காரியமாகவே இருக்கும். உருதுவை ஒரே தேசிய
மொழியாக திணித்ததன் மூலம் வங்காளிகளை அந்நியப்படுத்தி வங்கதேசம் உருவாக வழிவகுத்த பாகிஸ்தானைப்
போலல்லாமல், மொழி நெகிழ்வுத்தன்மையே இந்தியாவின் ஒற்றுமைக்குக் காரணமாக இருந்தது என்று
‘மிட்நைட்ஸ் டிசென்டன்ட்ஸ்’ என்ற தனது புத்தகத்தில் வரலாற்றாசிரியர் ஜான் கீ இந்திய
நடைமுறையைப் பாராட்டி எழுதியுள்ளார். அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகளை
அங்கீகரித்து, மொழிவாரியாக மாநிலங்களை மறுசீரமைத்து, ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாகத்
தக்கவைத்துக் கொண்டதன் மூலம் முரண்பாடுகளைத் தவிர்த்து, ஒற்றுமையைப் பாதுகாத்துக் கொண்டதாலேயே
இந்தியாவில் கூட்டாட்சி வலுவாக உள்ளது.
சித்தாந்தத்திற்கு
எதிரான ஆதாரங்கள்
ஆதாரங்களை
அழித்தொழிப்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகவே தேசிய கல்விக் கொள்கை-2020இன்
கட்டாய மும்மொழிக் கொள்கை சித்தாந்தம் திகழ்கிறது. இரண்டு மொழிகளில் அடிப்படைத் தேர்ச்சிக்காக
இந்தியப் பள்ளிகள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தெளிவான நன்மைகளை
அல்லது அறிவாற்றலுக்கான அழுத்தங்கள், நிதி மற்றும் செயல்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள்
என்று எதனையும் கருத்தில் கொள்ளாமல் மூன்றாவதொரு மொழியை பலவந்தமாகத் திணிப்பது ஏற்றுக்
கொள்ளத்தக்க காரியமல்ல.
பொருளாதார ரீதியாக ஹிந்தி மையப்பகுதியை, ஹிந்தி பேசாத தென் மாநிலங்கள் - குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் விஞ்சி நிற்பதற்கு, அவை ஆங்கிலத்தை ஏற்றுக் கொண்டதே காரணமாகும். மொழி நடைமுறைவாதம் முன்னேற்றத்தைத் தூண்டும் என்பதையே 1968ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இருமொழிக் கொள்கை நிரூபித்துக் காட்டியுள்ளது. ஆனாலும் அந்த வெற்றிகளை, உலகளாவிய சிறந்த நடைமுறைகளைப் புறக்கணிக்கும் தேசிய கல்விக் கொள்கை-2020 மும்மொழிக் கொள்கையைப் பலவந்தமாகத் திணிக்கவே முயல்கிறது.
ஆங்கிலத்தை
உலகளாவிய போட்டிக்கு, பிராந்திய மொழிகளை கலாச்சாரப் பாதுகாப்பிற்கு என்று சிங்கப்பூரிடமிருந்து
கற்றுக் கொண்டு ஏற்றுக் கொள்வதன் மூலம், நடைமுறைக்கு ஏற்ற இருமொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்க
இந்தியா முன்வர வேண்டும். மொழி தேசியவாதமானது மாணவர்களுக்கு அதிகாரத்தை வழங்கக்கூடிய
கொள்கைகளுக்கு வழிவகுத்துத் தர வேண்டும்.
https://www.thehindu.com/news/national/the-flawed-push-for-a-third-language/article69381299.ece
Comments