மன்னிக்கவும்… பேரரசர் ஆகும் விருப்பம் எனக்கு இல்லை, அது என்னுடைய வேலையும் கிடையாது - தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தின் இறுதி உரை

தா.சந்திரகுரு

 

‘நாஜிக்கு எதிராக இருக்க ஒருவர் யூதராக இருக்க வேண்டியதில்லை. ஒரு சாதாரண மனிதனாக இருந்தாலே போதும்’  என்று சாப்ளின் தனது சுயசரிதையில், தன்னையே மேற்கோள் காட்டியிருக்கிறார். சாப்ளினும் (16.04.1889), ஹிட்லரும் (20.04.889) ஒரு வார கால இடைவெளிக்குள் பிறந்தவர்கள். ‘நான்கு நாட்கள் இடைவெளிக்குள் சார்லஸ் சாப்ளின், அடால்ஃப் ஹிட்லர் இருவரும் இந்த உலகிற்குள் நுழைய வேண்டும் என்று கட்டளையிட்டபோது, ஒரு முரண்பாடான மனநிலையில் கடவுள் இருந்திருக்கிறார்.... சமூகத்தின் மேல் மற்றும் கீழ் மட்டத்திற்கு இடையில் உள்ள லட்சக்கணக்கான போராடும் குடிமக்களின் அபிலாஷைகளைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் அவரவர் வழியில் கருத்துக்களை, உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்(...) நவீன சமுதாயத்தில் எளிய மனிதர்களின் இக்கட்டான நிலை என்று ஒரே யதார்த்தத்தையே அவர்கள் வெவ்வேறாகப் பிரதிபலித்தனர். நன்மைக்கான ஒன்று, சொல்லவியலாத தீமைக்கான மற்றொன்று என முரண்பட்ட பிம்பங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக அவர்கள் இருவரும் இருந்தனர்’ என்று 1939 ஏப்ரல் 21 நாளிட்ட தி ஸ்பெக்டேட்டர் பத்திரிகையில் வெளியான கட்டுரையைக் குறிப்பிட்டு சாப்ளின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் டேவிட் ராபின்சன் எழுதியுள்ளார்.   

‘தி கிரேட் டிக்டேட்டர்’ - சாப்ளின் நடித்த முதல் பேசும் படம். 14,03,526 டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட அந்தத் திரைப்படம், மிக அதிக செலவில் தயாரிக்கப்பட்ட சாப்ளினின் திரைப்படங்களில் ஒன்றாகும். ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பா, தென் அமெரிக்காவின் சில பகுதிகள், ஐரிஷ் சுதந்திர அரசில் இந்த திரைப்படம் வெளியாவது தடைசெய்யப்பட்டது. எனவே சாப்ளினின் மற்ற மௌனப் படங்களுக்கு இருந்த சர்வதேச அளவிலான விநியோகம் இந்தப் படத்திற்கு கிடைக்கவில்லை. ஆக அந்தப் பொருட்செலவு மிகப்பெரிய சூதாட்டமாகவே இருந்தது. ஆனால் உலகளவில் ஐம்பது லட்சம் டாலர்களைச் சம்பாதித்து அதிக லாபம் ஈட்டிய சாப்ளின் திரைப்படமாக தி கிரேட் டிக்டேட்டர் மாறியது. 

தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்திற்காக சாப்ளின் வேலை செய்து கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட அடால்ஃப் ஹிட்லர் கலக்கமடைந்தார். ‘அந்தத் திரைப்படத்தின் ஒரு பிரிண்ட்டை நாஜி அதிகாரிகள் வாங்கினர். அதை ஒருநாள் மாலையில் ஹிட்லருக்குத் திரையிட்டுக் காட்டினர். மறுநாள் மாலை ஹிட்லர் மீண்டும் தனியாக அந்தத் திரைப்படத்தைப் பார்த்தார்’ –நாஜி கலாச்சார அமைச்சகத்தின் திரைப்படப் பிரிவில் பணிபுரிந்த பிறகு, ஜெர்மனியை விட்டு வெளியேறிய ஏஜெண்ட் ஒருவரால் சாப்ளினுக்கு இந்தத் தகவலை மட்டுமே சொல்ல முடிந்தது. அவர் கூறியதைக் குறிப்பிட்டுப் பேசிய சாப்ளின் ‘படத்தைப் பற்றி ஹிட்லர் என்ன நினைத்தார் என்பதை அறிந்து கொள்ள, எதை வேண்டுமானாலும் நான் தருவேன்’ என்றார். தி கிரேட் டிக்டேட்டர் பற்றி ஹிட்லர் என்ன நினைத்தார் என்பது யாருக்கும் தெரியது. ஆனாலும் அந்தத் திரைப்படம், சினிமாவின் உச்ச நையாண்டியாக, சாப்ளினின் மிக முக்கியமான, நீடித்து நிலைத்து நிற்கும் படைப்புகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

அந்தப் படத்தில் மிக எளிய யூத முடிதிருத்துபவர் மற்றும் டொமைனியாவின் சர்வாதிகார ஆட்சியாளரான ஹிங்கெல் என்று இருவேடங்களில் சாப்ளின் நடித்திருந்தார். ஹிங்கெல் என்று தவறுதலாகக் கருதப்படும் முடிதிருத்தும் இளைஞர் விடுக்கும் அமைதிக்கான அறைகூவலாக -  திரைப்படத்தின் முடிவிற்கான உரையை வரைவதிலும், அதனை மீண்டும் மீண்டும் எழுதுவதிலும் சாப்ளின் பல மாதங்களைச்  செலவிட்டார். அந்த உரை திரைப்படத்திற்குத் தேவையற்று மிகையாக இருந்தது என்று கூறி அந்தப் பேச்சைப் பலரும் விமர்சித்த வேளையில், மற்றவர்கள்  அந்த உரை எழுச்சியூட்டுவதாக இருந்தது என்றனர்.

தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தின் இறுதி உரை

மன்னிக்கவும் - பேரரசர் ஆகும் விருப்பம் எனக்கு இல்லை. அது என்னுடைய வேலையும் கிடையாது. யாரையும் ஆளவோ அல்லது வெல்லவோ நான் விரும்பவில்லை. யூதர் – யூதரல்லாதோர், கருப்பர் - வெள்ளையர் என்று முடிந்தால் அனைவருக்கும் உதவவே நான் விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வதையே விரும்புகிறோம். மனிதர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள். மற்றவரை மகிழ்ச்சிப்படுத்தி வாழவே நாம் விரும்புகிறோம் – துயரப்படுத்தி அல்ல.  நாம் ஒருபோதும் மற்றவர்களை வெறுக்க அல்லது அவமதிக்க விரும்புவது கிடையாது. ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் ஓர் இடம் இருக்கிறது. மிகவும் வளமான இந்த பூமி அனைவருக்கும் வளங்களை அள்ளி வழங்கக் கூடியது. இந்த வாழ்க்கைப் பாதை கட்டற்று, அழகாக இருக்கிறது என்றாலும், நாம் நமது வழியைத் தொலைத்து நிற்கிறோம்.     

மனிதர்களின் ஆன்மாக்களை பேராசையே தவறாக வழிநடத்துகிறது. அது இந்த உலகிற்கு முட்டுக்கட்டை போடுகிறது. நம்மை துயரம், ரத்தக்களரிக்குள் தள்ளிவிடுகிறது. வேகத்தை அதிகரித்துக் கொண்ட போதிலும் நாம், தனியே முடங்கிக் கிடக்கிறோம். மிகுதியாக உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் இருந்தாலும், இன்னும் வறுமையில்தான் உழன்று கொண்டிருக்கிறோம். நமது அறிவு நம்மை இழிபிறவியாக்கி இருக்கிறது. நம்முடைய புத்திசாலித்தனம் இரக்கமற்றவர்களாக, கருணையற்றவர்களாக நம்மை மாற்றியிருக்கிறது.  

அதிகமாகச் சிந்திக்கும் நாம், யாருக்காகவும் கவலை கொள்வதில்லை. இயந்திரங்களைக் காட்டிலும், இப்போது நமக்கு மனிதநேயமே தேவைப்படுகிறது. புத்திசாலித்தனத்தைக் காட்டிலும், இப்போது தயவும், தன்மையுமே தேவைப்படுகின்றன. இத்தகைய குணங்கள் இல்லாத வாழ்க்கை மிகக் கொடூரமாக இருக்கும். அனைத்தையும் இழக்க நேரிடும்…

விமானமும், வானொலியும் நம் அனைவரையும் நெருக்கமாகப் பிணைத்துள்ளன. மனிதர்களின் நற்குணங்களை, உலகளாவிய சகோதரத்துவத்தை, நம் அனைவரின் ஒற்றுமையை வேண்டுவதாகவே இந்தக் கண்டுபிடிப்புகளின் அடிப்படைத் தன்மை இருக்கிறது. என்னுடைய குரல் இப்போது, மனிதர்களைச் சித்திரவதை செய்து, அப்பாவி மக்களைச் சிறையில் அடைத்து வைக்கும் அமைப்பால் பாதிக்கப்பட்டு - இந்த உலகம் முழுவதும் நம்பிக்கையிழந்து விரக்தியுடன் இருக்கும் ஆண்கள், பெண்கள், சிறு குழந்தைகள் என்று கோடிக்கணக்கானவர்களைச் சென்றடைந்து கொண்டிருக்கிறது.    

என்னுடைய குரலைக் கேட்கக்கூடியவர்களுக்கு நான் சொல்வது இதுதான் - விரக்தியடைய வேண்டாம். பேராசையை, மனித முன்னேற்றத்தைக் கண்டு அஞ்சுகின்ற மனிதர்களின் கசப்புணர்வைக் கடந்து செல்வது மட்டுமே இப்போது நம்மை ஆட்கொண்டிருக்கும் துயரமாகும். மனிதர்களின் வெறுப்பு கடந்து போகும், சர்வாதிகாரிகள் இறந்து போவார்கள். மக்களிடமிருந்து அவர்கள் பறித்துக் கொண்ட அதிகாரம் மக்களிடமே மீண்டும் திரும்பும். மனிதர்கள் உயிரிழக்கத் தயாராக இருக்கும் வரை, சுதந்திரம் என்பது அழியாது...

படைவீரர்களே! உங்களை இழிவுபடுத்தும், அடிமைப்படுத்தும், உங்கள் வாழ்க்கையைக் கட்டுப்படுத்தும், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன நினைக்க வேண்டும், என்ன உணர வேண்டும் என்பதை  உங்களுக்குச் சொல்லும் மிருகங்களுக்கு இரையாகி விடாதீர்கள்! அவர்கள் உங்களுக்குப் பயிற்சியளிப்பவர்கள், உணவளிப்பவர்கள் உங்களைக் கால்நடைகளைப் போல நடத்துபவர்கள், பீரங்கிகளுக்கான இரையாக உங்களைப் பயன்படுத்திக் கொள்பவர்கள். இயந்திர மனம், இதயங்களைக் கொண்ட - இயற்கைக்கு மாறான இந்த இயந்திர மனிதர்களிடம் நீங்கள் உங்களை இழந்து விடாதீர்கள்!

நீங்கள் இயந்திரங்கள் அல்ல! கால்நடைகள் அல்ல! நீங்கள் மனிதர்கள்! உங்கள் இதயங்களில் மனித நேயம் வீற்றிருக்கிறது! உங்களிடம் வெறுப்பு இல்லை! மற்றவரை நேசிக்காத வெறுப்பு யாராலும் விரும்பப்படாது,   அது இயற்கைக்கு மாறானது! படைவீரர்களே! அடிமையாவதற்காகப் போராடாதீர்கள்! விடுதலைக்காகப் போராடுங்கள்!

‘தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறது’ என்று புனித லூக்காவின் பதினேழாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது. அது ஒரு மனிதனிடம் அல்லது ஒரு மனிதக் குழுவிடம் மட்டும் இருப்பதல்ல. அனைத்து மனிதர்களுக்குள்ளும் இருப்பது! உங்களிடத்தில்! மக்களாகிய உங்களிடம் ஆற்றல் - இயந்திரங்களை உருவாக்கும் ஆற்றல் இருக்கிறது. மகிழ்ச்சியை உருவாக்கித் தரும் ஆற்றல்! இந்த வாழ்க்கையை கட்டற்றதாக, அழகானதாக மாற்ற, இந்த வாழ்க்கையை அற்புதமான சாகசமாக மாற்ற, மக்களாகிய உங்களிடம் ஆற்றல் இருக்கிறது.

அந்த ஆற்றலைப் பயன்படுத்தி, புதிய உலகத்தை - இளைஞர்களுக்கு எதிர்காலத்தையும், முதியவர்களுக்குப் பாதுகாப்பையும் ஏற்படுத்தித் தரும் வேலை வாய்ப்பை மனிதர்களுக்கு வழங்கக்கூடிய கண்ணியமான உலகத்தை -உருவாக்குவதற்காக நாம் அனைவரும் ஜனநாயகத்தின் பெயரால் ஒன்றுபடுவோம். இந்த மிருகங்கள் இதுபோன்ற வாக்குறுதிகளை அளித்தே அதிகாரத்திற்கு வந்தன. அவர்கள் சொன்னது அனைத்தும் பொய்! அவர்கள் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதை ஒருபோதும் அவர்கள் நிறைவேற்றப் போவதில்லை!   

வாக்குறுதியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளும் அதே நேரத்தில், சர்வாதிகாரிகள் மக்களை அடிமைப்படுத்துகிறார்கள்! வாக்குறுதிகளை நிறைவேற்றிட நாம் அனைவரும் இப்போது போராடுவோம்! இந்த உலகத்தை விடுவிக்க, தேசிய தடைகளை அகற்ற, பேராசை, வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையை அகற்றப் போராடுவோம். அறிவியலும், முன்னேற்றமும் அனைத்து மனிதர்களையும் மகிழ்ச்சியை நோக்கி இட்டுச் செல்கின்ற பகுத்தறிவு உலகத்துக்காகப் போராடுவோம். படைவீரர்களே! ஜனநாயகத்தின் பெயரால் நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்!      

*****

1940ஆம் ஆண்டில் சாப்ளின் பேசிய அந்த வார்த்தைகள்

இன்றைக்கும் பொருத்தமாக இருப்பது வருத்தமே அளிக்கின்றன.     


Comments