இசட் தலைமுறையினருக்குப் பாதுகாப்பான வெளி இல்லை

 

எக்கனாமிக் டைம்ஸ்

சுருக்கம்

​​பணிக்குள் நுழையும் இந்த வேளையில் இசட் தலைமுறையினர்  - நீண்ட வேலை நேரம், வேலையில் தாக்குப் பிடிக்கும் தன்மை போன்றவற்றை எதிர்பார்க்கும் பழைய தலைமுறையினரிடமிருந்து வரும் சவால்களை  எதிர்கொள்கின்றனர். டிஜிட்டல் உலகில் பிறந்த இந்த இசட் தலைமுறையினர், நேரடியான பணிச் சூழலுக்கு மாறுவதற்குப் போராடுகின்றனர். டிஜிட்டல் புரட்சி உருவாக்கியிருக்கும் தலைமுறைகளுக்கிடையிலான வேறுபாடுகள் பற்றியும், அது எவ்வாறு பணியிடச் செயல்பாடுகளை, எதிர்பார்ப்புகளைப் பாதிக்கிறது என்பது பற்றியும் இக்கட்டுரை ஆராய்கிறது.

பணிக்குள்  நுழையும் இசட் தலைமுறையினர்  - வெற்றிபெற வேண்டுமென்றால், வாரத்திற்கு எழுபது மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று சொல்பவர்களாக, வேலை அழுத்தம் காரணமாக ஒரு குழந்தை இறந்து போகும் போது தோள்களை குலுக்கியவாறு, அத்தகைய குழந்தைகளுக்கு மனவலிமை இல்லை என்று வாதிடுபவர்களாக பூமர்கள் (தாத்தா பாட்டி), எக்ஸ் தலைமுறையினர் (பெற்றோர்), ஒய் தலைமுறையினர் (மூத்த உடன்பிறப்புகள்) இருப்பதாக சமூக ஊடகங்களின் வழி கேட்டறிந்து கொள்கின்றனர். அவர்களுக்கு நிஜ உலகில் பாதுகாப்பான வெளி இல்லை என்பது தெளிவாகிறது. தங்களை வேலைக்கு அமர்த்தி, நிர்வகிப்பவர்களிடமிருந்து செயல்படுத்தும் திறன், செயல்திறன் என்ற சாக்கில் சிறிய அளவிலான தாக்குதலையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.   

இந்த தலைமுறைகள் ஒவ்வொன்றும், டிஜிட்டல் உலகத்துடன் வெவ்வேறு வகையான உறவுடன் வாழ்ந்து வருகின்றன. இசட் தலைமுறையினர் - டிஜிட்டல் உலகில் பிறந்தவர்கள். ஒய் தலைமுறையினர் - டிஜிட்டல் உலகத்தின் தோற்றத்தை, தாங்கள் கல்லூரிக்குச் சென்றபோது கண்டவர்கள். எக்ஸ் தலைமுறையினர் - பணியிடத்திற்குள் நுழைந்த வேளையில் டிஜிட்டல் புரட்சியைப் பார்த்தவர்கள். பூமர்கள் - தங்கள் தொழில் வாழ்க்கையின் நடுப்பகுதியில் டிஜிட்டல் புரட்சியைச் சந்தித்தவர்கள். ஆக இந்த தலைமுறைகள் அனைத்தும் மெய்நிகர் யதார்த்தத்துடன் மாறுபட்ட உறவுடனே இருந்து வருகின்றன. கோவிட் தொற்றுநோய் சமயத்தில் இசட் தலைமுறையினரிடம், வீட்டிலிருந்தே படிக்கலாம், வீட்டிலிருந்தே தேர்வு எழுதலாம், வீட்டிலேயே விளையாடலாம் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது, வீட்டில் இருந்தவாறு வேலை செய்ய முடியாது, இனிமேல் வேலைகள் வேடிக்கையாக இருக்காது. தொழில்நுட்பத்தின் துணையின்றி - உண்மையான மனிதர்கள், உணர்வுகளை நேரடியாகக் கையாள வேண்டும் என அவர்களிடம் சொல்லப்படுகிறது.   



இருநூறாண்டுகளுக்கு முன்பு தொழில்துறைப் புரட்சி ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்கியது. இப்போது இருபதாண்டுகளுக்கு முன்பு அதைப் போலவே டிஜிட்டல் புரட்சியும் புதிய உலக ஒழுங்கை உருவாக்கியிருக்கிறது. எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான வேளாண் புரட்சி இந்த உலகை முற்றிலுமாக மாற்றியமைத்து - அரசுகளை, பேரரசுகளை உருவாக்கியது. காலனிகளை உருவாக்கிய தொழில்துறைப் புரட்சி இறுதியாக, ஜனநாயக தேசிய அரசுகளை உருவாக்கிக் கொடுத்தது. உலகளாவிய வலையமைப்பு மூலம் நம் அனைவரையும் டிஜிட்டல் புரட்சி ஒன்றிணைத்திருக்கிறது. படிப்பதற்கு, வேலை செய்வதற்கு, கடைக்குச் செல்வதற்கு, விற்பதற்கு, வங்கி வேலைகளுக்கு, விளையாடுவதற்காக இன்றைக்கு யாரும் பயணம் செய்ய வேண்டிய தேவையே இருக்கவில்லை. மனிதர்கள் செய்து வந்த பெரும்பாலான காரியங்களை, கணினிகள் இப்போது செய்து வருகின்றன. கணினிகள் வேகமாக, கணிக்கக்கூடியதாக, நம்பகமானதாக, அதிக அளவு எதிர்வினையாற்றுவதாக இருப்பதாகவே தோன்றுகிறது.        

கோட்பாட்டளவில் நாம் இப்போது - ஸ்மார்ட்போன் உள்ள அனைவருக்கும் அனைத்து தகவல்களும் கிடைக்கும் உலகில் வாழ்ந்து வருகிறோம். எல்லையற்ற தகவல்களைப் பெறும் யாரும்  புத்திசாலிகளாக அல்லது சூட்டிகையுடன் செயல்படுபவர்களாக மாறிடவில்லை. இசட் தலைமுறையினர் சிந்திக்கும் விதத்தைக் கண்டு தொழில்துறை திகைத்துப் போயிருக்கிறது. டிஜிட்டல் புரட்சியில் பூமர்கள், எக்ஸ், ஒய் தலைமுறையினர் மிகவும் பிஸியாக இருந்த காரணத்தால், ஒருவேளை அவர்களால் இசட் தலைமுறையினர் மீது பெற்றோர்களாகக் கவனம் செலுத்த முடியாமல் போயிருக்கலாம்.         

இசட் தலைமுறை உருவான வேளையில், உலகமயமாக்கல் பற்றி இந்த ​​உலகம் பேசிக் கொண்டிருந்தது. இப்போது இசட் தலைமுறையினர் பணியிடத்திற்கு வந்து சேரத் தயாராகியுள்ள நிலையில், இந்த உலகம் மிக மோசமான தேசியவாதம், அடையாள அரசியலால் துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. பருவநிலை மாற்றம், சியோனிசம், இஸ்லாமோஃபோபியா குறித்த தகவல்கள் இந்த தலைமுறையினரிடம் மிக அதிகம் வந்தடைகின்றன. உலகத் தலைவர்கள் ஒருவரையொருவர் மிரட்டிக் கொள்வதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். எது உண்மை, எது பொய்யான செய்தி என்ற குழப்பம் அவர்களுக்கு இருக்கிறது. எனவே அவர்கள், தங்களைப் போலவே சிந்திக்கும், தங்களுடைய தனித்துவமான மொழியைப் பேசும் நண்பர்களின் பாதுகாப்பான குமிழுக்குள் சென்று தஞ்சம் அடைகின்றனர்.  

பாரம்பரிய இந்திய மாடல் - புதிய தலைமுறைக்குப் பழைய தலைமுறை வழிகாட்ட வேண்டும் என்றே இருந்தது. அந்தப் பழைய ஆசிரம முறை - பேரக்குழந்தைகள் பிறந்தவுடன் ஓய்வுபெறுவது, பேரக்குழந்தைகள் திருமணம் செய்துகொண்டால் இந்த உலகைத் துறந்து விடுவது என்று வீட்டிலிருந்த மூத்தவர்களை ஊக்குவித்து வந்தது. ஆனால் இப்போது, ஓய்வு பெற அல்லது உலகைத் துறக்க விரும்பாத உலகிலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறைக்கு வழிவிடாமல் ஒருவரால் இளமையுடன் மிக நீண்ட காலத்திற்கு - மருந்துகள், அறுவை சிகிச்சை, போடோக்ஸ் மூலம் வாழ முடிகிறது. பூமர்கள், எக்ஸ், ஒய், தலைமுறையினர் தங்களுடன் போட்டியிடுவதைப் பார்க்கும் இசட் தலைமுறையினர் - இளமையாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் மொழியைப் பேச முயல்கின்றனர். ஆனால் அதே அனுபவங்களை அவர்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை.  

தங்கள் குடும்பங்களில் ஒற்றைக் குழந்தைகளாகவே பெரும்பாலான இசட் தலைமுறையினர் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு, தங்கள் வேலைகளுக்கு முன்னுரிமை அளித்து வேலையில் ஈடுபட்டு வரும் பெற்றோர்களே இருக்கின்றனர். அனைத்தும் கிடைக்கக்கூடிய வளமான யுகத்தில் அவர்கள் வாழ்கின்றனர். மகிழ்ச்சியைத் தரும் பொருட்கள், தங்கள் விருப்பங்களை - தங்கள் பெற்றோர்களுக்குப் பெருங்கனவாக இருந்த விருப்பங்களை - நிறைவேற்றிக் கொள்ளும் வாய்ப்பு போன்றவற்றால் மகிழ்ச்சியடைகிறார்கள் என்றால், அதற்காக டிஜிட்டல் புரட்சிக்கே அவர்கள் நன்றி சொல்ல வேண்டியிருக்கும். தங்கள் பொம்மைகளை, தங்களுக்கான வெளியை அவர்கள் பகிர்ந்து ஒருபோதும் யாரிடமும் கொள்ள வேண்டியிருப்பதில்லை. தங்களுடைய பெரும்பாலான தொடர்புகளை டிஜிட்டலாக, ஸ்மார்ட்போன்கள் வழியாகவே மேற்கொள்ளும் அவர்களின் பெரும்பாலான உரையாடல்கள், போன்கள் வழியிலான சாட்களாக மட்டுமே உள்ளன. மனிதர்களைக் காட்டிலும், தொடுதிரையை அதிகம் தொட்டு வளர்பவர்களாக இருக்கும் அவர்கள் - தங்கள் முன்னோடிகளுடன் ஒப்பிடுகையில், எந்தவிதத்திலும் வடிகட்டப்படாத தகவல்களுடனே வளர்கின்றனர்.    

இந்த இசட் தலைமுறை தொழில்நுட்பத்தால் கற்பிக்கப்படுகிறது, வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது, தொழில்நுட்பத்தின் வழி அணுகப்படுகிறது, வேலையிலிருந்து தொழில்நுட்பத்தாலேயே வெளியேற்றப்படுகிறது, தொழில்நுட்பமே அவர்களை மயக்கி வைத்துள்ளது. மற்றவரின் உணர்வுகளை எதிர்கொண்டு கையாள வேண்டிய நிஜ உலகத்தைக் காட்டிலும், அவர்கள் மெய்நிகர் யதார்த்தத்தால் கட்டமைக்கப்பட்ட உலகில்தான் அதிகம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள். அவர்களால் அந்த உலகில் ஆன்லைனில் டேட்டிங் செய்து கொள்ள முடிகிறது. ஆன்லைனில் செக்ஸைப் பார்க்க முடிகிறது. எதையும் விலைக்கு வாங்கலாம், விற்கலாம் என்று ஆன்லைன் உலகம் அவர்களுக்குச் சொல்லித் தருகிறது. அவர்களைப் பொறுத்தவரை - எல்லாமே சரக்குதான். எல்லோரும் நுகர்வோர்கள்தான். பாதிப்பிற்கு உள்ளாபவர்களாக இருக்கும் அவர்கள், மற்றவர்கள் மீது செல்வாக்கு செலுத்துபவர்களாக இருக்க விரும்புகின்றனர். அனைவரும் தங்களைக் கவனிக்க வேண்டும், விரும்ப வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களிடம் எந்தவொரு போக்கும், எண்ணவோட்டமும் நிரந்தமாக நிலைத்திருப்பதில்லை.   

பூமர்கள், எக்ஸ், ஒய் தலைமுறையினர் சேர்ந்து உலகம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அந்த உலகில் மிகப்பெரிய தண்டனை அல்லது மிகப்பெரிய சோகம் என்பது, ஒருவரது உறவுகளை இழப்பது அல்லது மனித உயிரை இழப்பது என்றிருக்கவில்லை. ஸ்மார்ட்போனை இழப்பது அல்லது வைஃபை வசதி இல்லாமலிருப்பது மட்டுமே அவர்களைப் பொறுத்தவரை பெரும் இழப்பாக, சோகமாகத் தோன்றுகிறது. அளவீடுகள், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றால், ஆகச் சிறந்த உலகத்தை நிறுவலாம் என்று கருதியே அறிவியலாளர்கள், பொறியாளர்கள்  இந்த டிஜிட்டல் உலகத்தைக் கட்டமைத்தனர். அவர்கள் எல்லாம் இப்போது - பணியாளர்கள், நுகர்வோர் என்ற வகையில், இசட் தலைமுறையினரை போதுமான கீழ்ப்படிதல், உற்பத்தித்திறனுடன் இருக்க வைக்கக்கூடிய செயலியை யாராவது உருவாக்கித் தருவார்கள் என்ற நம்பிக்கையுடனே இருக்கின்றனர்.  

https://economictimes.indiatimes.com/news/india/view-no-safe-space-for-gen-z/articleshow/113748034.cms?from=mdr



Comments