விஜய் கே. திவாரி
வயர் இணைய இதழ்
பக் இதழில் 1899ஆம் ஆண்டு வெளியான 'ஸ்கூல் பிகின்ஸ்' என்ற விளக்கப்படம்.
உவமைகளைப்
பயன்படுத்தும் கலை, திறமையுடன் மேற்கொள்ளப்படும் பொதுமேடைப் பேச்சில் மிக முக்கிய அம்சமாக
இடம் பெறுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர
மோடி ஆகியோருக்கு இடையே நடந்த வார்த்தைப் போரில் அந்தக் கலையைக் காண நேர்ந்தது.
உருவகங்கள்
அல்லது அவை தூண்டி விடும் பிம்பங்கள் - ஒருபோதும் நடுநிலையானவையாக இருப்பதில்லை. பெரும்பாலும்
அவை - உள்ளார்ந்த சமூக-அரசியல் அர்த்தங்கள், தீங்கு விளைவிக்கும் சாத்தியக்கூறுகளுடனே
இருக்கின்றன. ராகுல்காந்தியைக் கேலி செய்வதற்கு, 'பாலக் புத்தி' ('குழந்தை அறிவு')
என்ற சொல்லை மோடி அப்போது பயன்படுத்தியிருந்தார்.
அவரது அந்த வார்த்தைப் பயன்பாடு - தன்னுடைய திறனை நிலைநிறுத்தி, பாகுபாட்டை மேற்கொள்ளும்
வகையில் 'வயது வந்தோர் சித்தாந்தத்தை' வலுப்படுத்திக் கொள்வதற்கான எடுத்துக்காட்டாக
இருந்தது என்று ஆஷிஸ் நந்தி கூறுகிறார்.
மக்களவையில்
பிரதமர் தெரிவித்த அதுபோன்ற கருத்துகளைத் தொடர்ந்து ஏராளமாக எழுதப்பட்டன. மோடியின்
அந்த உரையில் பாகுபாட்டிற்கான கருத்துகள் காணப்பட்டன என்று அதில் சிலர் ஒப்புக்கொண்டிருந்தனர்.
‘குழந்தை’ என்ற வார்த்தை இழிவிற்குள்ளாக்கப்பட்டு, ஒருவகையில் மிக மோசமாகச் சித்தரிக்கப்பட்டது
என்று அந்த விவகாரத்தை முன்னிலைப்படுத்தியதில் - ரவீஷ் குமார், ரோஹித் குமார் போன்றோர்
தனித்து நின்றனர். சமத்துவமற்ற நமது சமுதாயத்தில் குழந்தைகள், ஊனமுற்றோர், சிறுபான்மையினர்
அல்லது பெண்கள் என்று கீழ்நிலையில் இருப்பவர்கள் அனைவரையும் எச்சரிக்கும் வகையிலேயே,
அதுபோன்ற உருவகப்படுத்தல்கள் இருக்கின்றன.
காலனித்துவம்,
வளர்ச்சிவாதம் போன்ற மேலாதிக்க சித்தாந்தங்கள் - குறிப்பிட்ட சமூகங்கள், வாழ்க்கை முறைகள்,
அரசியல் முன்னோக்குகளை ஓரங்கட்டி, அவற்றை குழந்தைத்தனமாக்குவதற்கு 'குழந்தை' என்ற கருத்தாக்கத்தை மூலோபாய உத்தியாகப்
பயன்படுத்திக் கொண்டதை வரலாறு நமக்கு வெளிப்படுத்திக் காட்டியுள்ளதாக ஆஷிஷ் நந்தி 'குழந்தைப்
பருவத்தை மறுகட்டமைத்தல்: வயது வந்தோருக்கான சித்தாந்தத்தின் மீதான விமர்சனம்' என்ற
நூலில் தனது வாதத்தை முன்னிறுத்தியுள்ளார். 'குழந்தை' என்பதை முழுமையற்ற உயிரினம் அல்லது முழுமையாக வளர்ச்சியடையாத ‘ஹோமுங்குலஸ்’ என்ற
கருத்தை முன்னிறுத்துவதன் மூலம், வயது வந்தோரின் மேலாதிக்க கலாச்சாரங்களிடமிருந்து
ரட்சிப்பு மற்றும் வழிகாட்டுதல் அவர்களுக்குத் தேவைப்படுவதாக வலியுறுத்தும் அந்தச்
சித்தாந்தங்கள், அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வயதுவந்தோரை மையமாகக் கொண்ட உலகக்
கண்ணோட்டத்தைத் திணிக்கின்றன.
காலனித்துவப்படுத்தப்பட்ட
சமூகங்களை 'பாதி காட்டுமிராண்டிகள், பாதி குழந்தைகள்' என்று முன்னிறுத்தி, மிக மோசமான
காலனித்துவத்தை ஜேம்ஸ் மில்ஸ், செசில் ரோட்ஸ், ருட்யார்ட் கிப்ளிங் போன்ற காலனித்துவவாதிகள்
நியாயப்படுத்தினர். வயது வந்தோர் மற்றும் பாகுபாடு குறித்த சித்தாந்தங்கள் புதிய தூதர்களால்
வெவ்வேறு அவதாரங்களாக வெளிப்படுகின்றன. 'குழந்தை' என்பதை அவர்கள் - 'மற்றவர்களை' இழிவுபடுத்தக்
கூடிய உருவகமாக அரசியல்மயமாக்கிக் கொள்வது இன்றளவிலும் தொடர்கிறது.
தங்களுக்கு
எது சிறந்தது என்பதை 'பழமையான' சமூகங்கள் அறிந்திருக்கவில்லை என்று இன்றைய உலகின் வளர்ச்சி நிபுணர்கள் கருதுகிறார்கள். புதிய தாராளவாத
குறைபாடு வல்லுநர்களோ - குறைபாடுடன் உள்ளவர்களை, செயல்திறன் மற்றும் உற்பத்தித் திறன்
கொண்டவர்களாக, சந்தை சக்திகளால் உருவாக்கப்படும் உதவும் தொழில்நுட்பங்கள் மாற்றுகின்றன
என நம்புகின்றனர். இத்தகைய சர்வாதிகார உலகக் கண்ணோட்டங்களில், 'மற்றவர்' என்ற மாற்று
இருப்பு புறக்கணிக்கப்படுகிறது அல்லது அடக்கி
ஒடுக்கப்படுகிறது. மேலும் சில அரசியல் சித்தாந்தங்கள், இன்றைய உலகில் பன்முகத்தன்மையை
முடக்குகின்ற, ஒற்றைக்கூறு கொண்ட கதையை நிலைநிறுத்துகின்றன. அந்த ஒற்றைக்கூறு நெறிமுறையின்
மிக முக்கியமான நங்கூரங்களாக உள்ள குரோனி முதலாளித்துவம், ஹிந்து வலதுசாரிகளின் சித்தாந்தம்
போன்றவை - சித்தாந்த வேறுபாடுகளைச் சகித்துக் கொள்ள முடியாத, பிரத்யேகமான உலகக் கண்ணோட்டத்தை
ஊக்குவிக்கின்றன.
இந்தப்
பின்னணியில், எதிர்க்கட்சித் தலைவருக்கு ‘குழந்தை புத்தி’, இந்திய தேசிய காங்கிரஸுக்கு
‘ஒட்டுண்ணி’ போன்ற வார்த்தைகளைப் பிரதமர் பயன்படுத்தியிருப்பது அதிகக் கவனத்தை ஈர்க்கிறது.
பள்ளியில் கொடுமைப்படுத்தப்படும் குழந்தையைக் கேலி செய்து, அதுகுறித்து புகார் தெரிவிக்கின்ற
வகையிலான கதையையும் பிரதமர் கூறினார். குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவது, அவர்களுக்கு
உடல்ரீதியான தண்டனை வழங்குவதை இவ்வாறு பிரதமர்
இயல்பாக்கம் செய்தது கவலையையே அளித்தது.
இதுவொன்றும்
முதன்முறையாக நடந்த சம்பவம் கிடையாது. 2019ஆம் ஆண்டில், ஐஐடி-காரக்பூர் மாணவர்களுடன்
உரையாடிய போது, டிஸ்லெக்ஸியா எனப்படும் வாசிப்புக்
குறைபாடு குறித்து, பிரதமர் மோடி மிகச் சிக்கலான கருத்தை வெளியிட்டிருந்தார். ‘40-50
வயது குழந்தை’ என்று ராகுல் காந்தியை விமர்சித்த அவர் - அதன் மூலம், இருக்க வேண்டிய நிலையில் தான் இருப்பதாக, 'வயது
வந்தவராக' தன்னைக் காட்டிக் கொண்டார். பாரதிய ஜனதா கட்சி, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின்
சித்தாந்தம் 'வயது வந்தோர்', 'முதிர்ச்சியடைந்தோர்'களுக்கானது, அனைவரும் விரும்ப வேண்டியது
என்றும் காட்டிக் கொண்டர். சாவர்க்கரை விமர்சித்த ராகுல்காந்தி மீது அதிருப்தியடைந்த
மோடி, ராகுல்காந்திக்கு சமீப காலத்தில் பல்வேறு சட்ட வழக்குகள் மூலம் தரப்பட்ட இடையூறுகளை
நியாயப்படுத்திட முயன்றார். ராகுல்காந்தியைக் குறிப்பிட அவர் அந்தச் சூழலில் - மற்ற
குழந்தைகள், ஆசிரியர்களால் அடிபடும் ஒரு குழந்தை என்ற பிம்பத்தையே பயன்படுத்திக் கொண்டிருந்தார்.
கோட்டா
தொழிற்சாலைகள் நமக்கான வெற்றியை உருவாக்கித் தரும் சமூகத்தில் - 543 இடங்களில் 99 இடங்களை
மட்டுமே பெறுவதில் மகிழ்ச்சியடையும் மாணவர் என்று மோடியால் முன்னிறுத்தப்பட்ட உருவகம்
பெரும் பிரச்சனையாகத் தோன்றுகிறது. சமத்துவமற்ற சமுதாயத்தில், தகுதி என்பது பெரும்பாலும்
சமூக மற்றும் பொருளாதாரச் சலுகைகளுடனே இணைக்கப்பட்டுள்ளது.
அறிவுத்
துறையில் பெரும்பாலும் 'கற்றறிந்தவர்' என்ற நிலையானது, உறுதியான உடலமைப்பு கொண்ட வெள்ளை
நிற ஆண்களுடன் தொடர்புடையது என்று கருத்தை பெண்ணிய வழக்கறிஞரான மார்கரெட் டேவிஸ் தெரிவிக்கிறார்.
அத்தகையவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், விளிம்புநிலை அடையாளங்களுடன் இருப்பவர்களின்
அறிவு மற்றும் வாழ்வனுபவங்களை அடிபணியச் செய்கின்றன. உலகெங்கிலும் உள்ள அரசியல் விவாதங்களில்
இதுவே உண்மையாக இருக்கிறது.
இந்தியாவில்
அரசியல் உரையாடல் ஊடகங்கள் மற்றும் பிற நிறுவனங்களைப் பயன்படுத்தி உயர்சாதி ஆண்களால்
உருவாக்கப்படுகிறது. அந்தச் செயல்முறை ஹிந்து உரிமைகள் குறித்த சித்தாந்தத்தை - அரசின் மேலாதிக்க, நெறிமுறைக் கருத்தியலாகத்
திறம்பட நிறுவுகிறது. அத்தகைய அரசியல் உரையாடல்களால் நமது அரசியல்சார் சொற்களஞ்சியத்தில்
இருந்து ‘மதச்சார்பின்மையை’ சமகாலத்தில் அகற்ற முடிந்துள்ளது. அது சிறுபான்மையினரின்,
குறிப்பாக முஸ்லீம்களின் நிலைப்பாட்டை மிக மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளது, ஏறக்குறைய
பத்தாண்டு காலமாக, சிறுபான்மையினரின் பிரச்சனைகளை - அரசியல் கட்சிகள் ‘அரசியல் சுமை’
என்றே கருதி வருகின்றன. குடிமைச் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள்,
சிறுபான்மையினர் மற்றும் தலித் அடக்குமுறை
குறித்த கவலைகளை எழுப்பி வருகின்றனர். ஆயினும் ஆஷிஷ் நந்தி கூறுவதைப் போல - அவையனைத்தும்
'குழந்தை', 'பகுத்தறிவற்றது' மற்றும் கருத்து வேறுபாடுகளின் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்கு
அப்பாற்பட்டவை என்று கூறி நிராகரிக்கப்பட்டுள்ளன.
குடிமைச்
சமூகம் மற்றும் அரசியல் பிரதான நீரோட்டத்தில் எழுப்பப்பட்டு வரும் எதிர்க்குரல்கள்
சிறைத்தண்டனை, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தல், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இருந்து
கருத்துகளை நீக்குதல் போன்ற பல இக்கட்டான நிலைகளையே எதிர்கொண்டு வந்துள்ளன. வன்முறை,
ஆண்தன்மை, பாகுபாடு மற்றும் வயது வந்தோருக்கான பதிப்பாக நமது நாடாளுமன்ற ஜனநாயகம் இருப்பதையே இன்றைக்கு நம்மால் காண முடிகிறது. எண்கள்
அதிக முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த அமைப்பில், கருத்தியல் கட்டமைப்பை அரசின் நெறிமுறைக்
கட்டமைப்பாக மாற்ற ஒட்டுமொத்த அமைப்பும் கீழ்ப்படிகிறது. அத்தகைய நெறிமுறைக்கு எதிராக
எழுகின்ற எதிர்ப்புக் குரல்கள் அனைத்தும் - சீர்குலைப்பது, பாகுபாடானது, குழந்தைத்தனமானது
என்று கூறி நிராகரிக்கப்படுகின்றன. குழந்தை உளவியலாளர்கள் - குழந்தைகள் உளவியல் மீது
பிரதமரின் உரை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அக்கறையுள்ள
குடிமக்கள் என்ற வகையில் நாம் - ‘குழந்தை’ மற்றும் ‘குழந்தைத்தனம் கொண்டது’ என்று கூறி அரசியல்ரீதியான எதிர்க் குரல்களை நிராகரிக்கும்
போக்கை அம்பலப்படுத்த வேண்டும். நச்சுத்தன்மை கொண்ட வயது வந்த பருவம் நம் அனைவரையும்
திணறடிக்கிறது. அது நமது ஜனநாயகத்தை முடக்கி விடக் கூடும்.
விஜய்
கே. திவாரி, கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்க தேசிய நீதி அறிவியல் பல்கலைக்கழகத்தில்
உதவிப் பேராசிரியராக உள்ளார். மாற்றுத் திறனாளியான அவர் மாற்றுத் திறன் குறித்த ஆய்வுகளை
மேற்கொண்டு வருகிறார்.
Comments