நாளந்தா பல்கலைக்கழகம் (மகாவிகாரை) பக்தியார் கில்ஜியால் அழிக்கப்பட்டதா?

 ராம் புனியானி

கௌண்டர்கரண்ட்ஸ்

மியான்மர், இலங்கை, வியட்நாம், ஜப்பான், கொரியா போன்ற பல நாடுகளின் தூதர்களின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தை 2024ஆம் ஆண்டு ஜூன் பத்தொன்பதாம் நாளன்று முறையாகத் திறந்து வைத்தார். அந்த விழாவில் கலந்து கொண்ட பெரும்பாலான நாடுகள் அசோகப் பேரரசர் அனுப்பி வைத்த துறவிகளால் பௌத்தமதம் பரப்பப்பட்ட நாடுகளாக இருந்தன.  

முதன்மையான உலகளாவிய பல்கலைக்கழகமாக நாளந்தாவைப் புதுப்பிக்கும் திட்டம் ஆரம்பத்தில் அப்போதைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களால் 2006ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. பீகார் சட்டமன்றம் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அந்த திட்டம் பின்னர் அங்கீகரிக்கப்பட்டது. அந்த விழாவில் மோடி அன்னியப் படையெடுப்பாளர்களால் பன்னிரண்டாம் நூற்றாண்டில் அந்தப் பல்கலைக்கழகம் எரிக்கப்பட்டது எனக் கூறினார். அன்றைய தினம் அவர் முகமது கோரியின் அரசவைத் தலைவரான பக்தியார் கில்ஜி அதை எரித்தார் எனப் பொதுவெளியில் உலா வந்து கொண்டிருக்கும் கருத்தையே கிளிப்பிள்ளை போலக் கூறியிருந்தார்.      

ஹிந்துக் கோயில்களை அழித்து இஸ்லாத்தை முஸ்லீம் படையெடுப்பாளர்கள் வலுக்கட்டாயமாகப் பரப்பினர் என்பதாக இருந்து வருகின்ற ‘சமூகத்தின் பொது அறிவுக்கு’ கூடுதல் துணையாகவே அந்தக் கருத்து இருந்து வருகிறது. ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய வகுப்புவாத வரலாற்றிற்குப் பிறகே இதுபோன்ற புரிதல்களுக்கான பிரச்சாரம் துவங்கியது. அந்தக் கருத்துகளை முஸ்லீம் வகுப்புவாதம், ஹிந்து வகுப்புவாதம் போன்ற வகுப்புவாத நீரோட்டங்கள் பின்னர் பேரார்வத்துடன் உள்வாங்கிக் கொண்டன. அதனடிப்படையில் ஹிந்துக்களுக்கு எதிராக முஸ்லீம் லீக் பரப்பிய கட்டுக்கதைகள் பாகிஸ்தானைச் சீர்குலைத்த வேளையில், இந்தியாவில் ஆர்எஸ்எஸ் அவற்றை முன்னெடுத்தது. விளைவாக நமது சமூகத்தில் முஸ்லீம்கள் மீதான வெறுப்பு உருவானது. ஆர்எஸ்எஸ் பற்றி சர்தார் வல்லபாய் படேல் ‘அவர்களுடைய பேச்சுகள் அனைத்தும் வகுப்புவாத விஷம் தோய்ந்தவையாக இருக்கின்றன. ஹிந்துக்களை உற்சாகப்படுத்துவதற்கு, அவர்களுடைய பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்வதற்கு இதுபோன்ற விஷத்தைப் பரப்ப வேண்டிய அவசியமே இல்லை. அந்த விஷத்தின் இறுதி விளைவாகவே காந்திஜியின் விலைமதிப்பற்ற உயிரின் தியாகத்தை நாடு அனுபவிக்க நேர்ந்தது’ என்று அப்போது எழுதினார்.  

முஸ்லீம்கள் மீது வெறுப்புணர்வைப் பரப்புவதற்காகப் பயன்படுத்தப்படும் பொய்யான பொய்களில் ‘அன்னியப் படையெடுப்பாளர்களால் நாளந்தா எரிக்கப்பட்டது’ என்று மோடி சொன்ன பொய்யும் அடங்கும். குப்தர்களால் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராஜ்கிர் பீகாரில் பெரும் பகுதியாகப் பரந்து விரிந்திருந்த நாளந்தா புகழ்பெற்றதொரு குடியிருப்பு பல்கலைக்கழகத்துடன் இருந்தது. பௌத்த மையமாக அது இருந்தது என்று தொல்பொருள் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. முக்கியமாக அது பௌத்த தத்துவத்தைப் படிப்பதற்காக இடமாக இருந்தது என்றாலும் பிராமண வேதங்கள், கணிதம், தர்க்கம், சுகாதார அறிவியல் போன்றவையும் அங்கே கூடுதலாகக் கற்பித்துத் தரப்பட்டன. அங்கே மிகவும் உயர்ந்து காணப்பட்ட வெளிப்படையான விவாதம், தர்க்கத்திற்கான பாரம்பரியமே  பல்வேறு இடங்களிலிருந்து மாணவர்களை, அறிஞர்களை ஈர்ப்பதற்கான  காரணமாக இருந்தது. மன்னர்களால் அந்த இடத்திற்கு முதலில் தரப்பட்ட ஆதரவு பாலா மற்றும் சேனா வம்சத்தின் வருகைக்குப் பின்னர் குறைக்கப்பட்டு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் ஒடந்த்புரி, விக்ரம்சீலா போன்ற புதிய பல்கலைக்கழகங்களுக்கு அந்த ஆதரவு திருப்பி விடப்பட்டது.     

அதுவே நாளந்தாவின் வீழ்ச்சிக்கான ஆரம்பமாயிற்று. லட்சக்கணக்கான புத்தகங்கள், கையெழுத்துப் பிரதிகள், அரிய சேகரிப்புகள் அடங்கிய மிகப் பெரிய அளவிலான நூலகத்தை தீயிட்டுக் கொளுத்தியது யார்? கில்ஜிதான் அதற்குக் காரணம் என்று ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு கூறப்பட்டாலும், அதற்கான எந்தவொரு முக்கியமான ஆதாரமும் இல்லை என்பதே உண்மை. கொள்ளையடிப்பது, சூறையாடுவது மட்டுமே கில்ஜியின் முதல் குறிக்கோளாக  இருந்தது. அயோத்தியில் இருந்து வங்கத்திற்கு செல்லும் வழியில் செல்வம் நிறைந்த கோட்டை என்று கருதியே அவரால் கிலா-இ-பீகார் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. அவர்கள் சென்ற வழியில் இருந்த செல்வம் அனைத்தும்  கொள்ளையடிக்கப்பட்டு மக்கள் கொல்லப்பட்டனர். ஆனாலும் நாளந்தா அவர்கள் சென்ற பாதையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடைய பாதையில் இருந்து வெகு தொலைவிலே நாளந்தா அமைந்திருந்தது. மேலும் அந்தப் பல்கலைக்கழகத்தைத் தாக்குவதற்கான எந்தவொரு காரணமும் அவர்களிடம் இருக்கவில்லை. அந்தக் காலகட்ட வரலாறு தொடர்பான பெரும்பாலான முதன்மையான ஆதாரங்கள் எதிலும் கில்ஜி நாளந்தாவிற்கு வந்தார் என்று குறிப்பிடுகின்ற சான்றுகள் தென்படவில்லை. அதுபோன்று எந்தவொரு குறிப்பும் மின்ஹாஜ்-இ-சிராஜ் எழுதிய தபகத்-அ-நசிரியில்க் நூலிலும் காணப்படவில்லை. பௌத்தத்துடன் தொடர்புடைய இந்திய வரலாற்றை  அதிக  ஆர்வத்துடன் ஆய்வு செய்து எழுதப்பட்ட தர்மஸ்வாமின், சும்பா என்ற இரண்டு திபெத்திய அறிஞர்களின் புத்தகங்களிலும் நாளந்தாவிற்கு வந்தவர் அல்லது அதை எரித்தவர் என்று கில்ஜியைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை. திபெத்தைச் சார்ந்த மற்றொரு புகழ்பெற்ற பௌத்த அறிஞரான தாராநாத் என்பவரும் அத்தகையதொரு உண்மையைக்  குறிப்பிடவில்லை.   

அஜந்தா, எல்லோரா, சாஞ்சி ஸ்தூபி போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பௌத்த கட்டமைப்புகள் எதுவும் இந்த அன்னியப்  'படையெடுப்பாளர்களின்' கோபத்திற்கு ஆட்பட்டவில்லை! கில்ஜியால் நாளந்தா அழிக்கப்பட்டது என்று கூறப்படுவதை இந்திய வரலாற்றாசிரியர்களான ஜதுநாத் சர்க்கார், ஆர்.சி.மஜும்தார் போன்றவர்களும் ஆதரிக்கவில்லை. அப்படியென்றால் அந்தப் பல்கலைக்கழகம் எவ்வாறு எரிந்து போனது? எவ்வாறு அது தன்னுடைய வரலாற்று முக்கியத்துவத்தை இழந்தது? கில்ஜி அதை அழித்தார் என்று கூறுவதற்கு அப்பாற்பட்ட கதைகள் பல இருக்கின்றன.   

திபெத்திய துறவி தாராநாத் எழுதிய ‘இந்திய புத்த மத வரலாறு’ என்ற புத்தகத்தில் இந்த விவகாரத்துடன் தொடர்புடையதாக வெளியாகியிருந்த பகுதியின் சுருக்கத்தை பண்டைய இந்திய வரலாறு குறித்த நிபுணத்துவம் கொண்ட பேராசிரியர் டி.என்.ஜா தனது கட்டுரைகளின் தொகுப்பில் 'ஒரு வகுப்புவாதிக்குப் பதில்' என்ற கட்டுரையில் (தானியத்திற்கு எதிராக, மனோகர் 2020, பக் 185 முதல்) குறிப்பிட்டுள்ளார்.

அவர் ‘நலேந்திரா(நாளந்தா)வில் காகுத்சித்தனால் கட்டப்பட்ட கோவில் குடமுழுக்கு விழாவின் போது ​​'இளம் குறும்புக்கார ஷாமன்கள் தீர்த்திக பிச்சைக்காரர்கள் (பிராமணர்கள்) மீது கழிவுநீரை வீசினர்... அதனால் கோபமடைந்த அவர்களில் ஒருவர் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளச் சென்று விட்டார். மற்றொருவர் ஆழமான குழியில் அமர்ந்து  'சூர்ய சாதனா'வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்... வேள்வியை மேற்கொண்ட அவர் வேள்வித் தீயில் விளைந்த கனன்று கொண்டிருந்த தீக்கங்குகளை, சாம்பலை சுற்றிலும் வீசியெறிந்தார்’ என எழுதியுள்ளார்.

இந்த நிகழ்வு பௌத்த, பிராமண மதவாதிகளுக்கு இடையில் உண்மையில் நடந்த சண்டையை பீகாரில் உள்ள ‘பழங்கால எச்சம்’ குறிப்பதாக டி.ஆர்.பாட்டீல் மேற்கோள் காட்டியுள்ள ‘இந்திய தர்க்கத்தின் வரலாறு’ (பக்கங்கள்  516) கூறுகிறது. சூரியக் கடவுளைச் சாந்தப்படுத்துவதற்காக பிராமண மதவாதிகள் யாகம் செய்தனர்.  அந்த  யாகக் குழியிலிருந்து  எடுத்த சாம்பலை புத்த கோவில்கள் மீது வீசியெறிந்தனர். அதுபோன்ற செயல்களே அன்றைய காலகட்டத்தில் அங்கே இருந்த புத்தகங்களின் பெரும் தொகுப்பை எரிப்பதற்கான வழியை வகுத்துக் கொடுத்தன.  

பிராமணியத்தின் மீள்எழுச்சி பெருமளவிற்கு உருவாகி வந்த நிலையில் பௌத்தத்திற்கு எதிரான தாக்குதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது என்பதையும் இங்கே பதிவு செய்ய வேண்டும். அசோகர் காலத்திற்குப் பிறகு இந்தியா பெரிய அளவில் பௌத்த நாடாக மாறியது. சமத்துவக் கருத்துக்கள் பெருமளவிற்கு ஆட்சி செய்தன. பிராமணச் சடங்குகள் அதன் காரணமாகக் குறைந்து போனது  பிராமணர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. சிறிது காலம் கழித்து அசோகரின் பேரன் பிருத்ரதன் ஆட்சி செய்த போது அவனுடைய தளபதி புஷ்யமித்ர ஷுங் அவனைக் கொன்று, பௌத்த எதிர்ப்பு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு ஆட்சியாளர் ஆனார்.   

அந்த நூலகத்தை பழிவாங்கும் நோக்கில் பிராமணர்களே எரித்தததாக அனைத்து நம்பகமான ஆதாரங்களும் சுட்டிக் காட்டுகின்றன. இந்த விவகாரத்தில் பக்தியார் கில்ஜியை நுழைப்பது முஸ்லீம்களுக்கு எதிரான பொதுவான இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்துடனே பொருந்திப் போகிறது. அதே நேரத்தில் அந்தக் காலகட்டத்தில் பௌத்த மதம் துன்புறுத்தப்பட்ட உண்மைக் கதையையும் அத்தகைய கூற்று  மறைத்து விடுகிறது.     

பௌத்த காலத்தில் கல்வியின் அடிப்படைத் தளமாக இருந்த சுதந்திரமான விவாதம், தர்க்க உணர்வு போன்றவற்றை நாம் பாதுகாக்க வேண்டியுள்ளது. தற்காலத்தில் கல்வியைப் பொறுத்தவரை கீழ்ப்படிதல், பணிவுக் கலாசாரத்தைத் திணிப்பதன் மூலமாக நமது பல்கலைக்கழகங்கள் நசுக்கப்படுகின்றன. அதுபோன்ற நிலைமைகளில் அறிவை உள்வாங்கிக் கொள்ள அல்லது வளர்த்த்தெடுக்க  முடியாது. பௌத்தத்திற்கும், பிராமணியத்திற்கும் இடையில் இந்தியாவில் நடந்த போராட்டத்தின் சோகமான வரலாற்றிலிருந்து இதனைக் கற்றுக்கொள்ள முடியுமென்றால், அதுவே நாட்டின் கல்வித்துறை வளர்ச்சியில்  முக்கிய அம்சமாக இருக்கும்.

https://countercurrents.org/2024/06/nalanda-mahavihar-did-bakhtiar-khilji-destroy-it/​​

Comments