மோடியை ஆட்சி அமைக்க அழைத்ததில் வழக்கமான நடைமுறைக்கு மாறாக குடியரசுத் தலைவர் முர்மு ஏன் நடந்து கொண்டார்?
எஸ்.என்.சாஹு
தி
வயர் இணைய இதழ்
பாரதிய
ஜனதா கட்சியின் சார்பில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 240 மக்களவை உறுப்பினர்கள்
ஒன்றுகூடி தங்களுடைய தலைவராக நரேந்திர மோடியைத் தேர்ந்தெடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நம்பிக்கை
வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளாமலே இந்தியப் பிரதமராகப்
பதவியேற்குமாறு மோடியை அழைத்த செயல் சட்டத்தின் வலிமையுடன் காலங்காலமாகக்
கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழக்கத்திற்கு மாறாகவே இருந்தது.
அரசை அமைப்பதற்கான, பிரதமராகப் பதவியேற்றுக் கொள்வதற்கான அழைப்பை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடிக்கே குடியரசுத் தலைவர் முர்மு விடுத்திருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மொத்த மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 293 ஆகும். கூட்டணியில் முதன்மையான கட்சியாக 240 மக்களவை உறுப்பினர்களுடன் பாஜக இருந்த போதிலும், பெரும்பான்மைக்குத் தேவையான 272 மக்களவை உறுப்பினர்களை அந்தக் கட்சி தனித்துப் பெற்றிருக்கவில்லை. பெரும்பான்மைக்குத் தேவையான பலத்தை கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகள் பெற்றிருந்த இடங்களை உள்ளடக்கியே அந்தக் கூட்டணி பெற்றது.
தேசிய
ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தவிர்த்து விட்டுப்
பார்த்தால், 2014ஆம் ஆண்டு மே இருபதாம் நாள் பழைய பாராளுமன்ற கட்டிடத்தின் மத்திய
மண்டபத்தில் பாஜகவைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட வகையில்
தங்களுடைய தலைவராக மோடியை தற்போதைய பாஜக
உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்திருப்பதை குடியரசுத் தலைவர் முர்மு அரசு அமைக்க அவரை அழைப்பதற்கு
முன்பாக உறுதி செய்திருக்க வேண்டும்.
2014ஆம் ஆண்டில் பாஜக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக மோடியின் பெயர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ், வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லி, நிதின் கட்கரி ஆகியோரால் முன்மொழியப்பட்டு ஆதரிக்கப்பட்டது. மோடியை அப்போது பாஜக நாடாளுமன்றக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட முன்னுதாரணம் 2024ஆம் ஆண்டில் கைவிடப்பட்டது புரியாத புதிராகவே உள்ளது.
பிரதமராகப்
பதவியேற்று புதிய அரசை அமைக்குமாறு குடியரசுத் தலைவரால் அழைக்கப்படும் ஒருவர்
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் அடங்கிய அவரது கட்சியின்
நாடாளுமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். புதிய அரசை
அமைப்பதில் மிக முக்கியமான, கட்டாயமான நடைமுறையாக அந்த தேர்வு நமது குடியரசின்
வலிமை, மகத்துவத்திற்குச் சாட்சியமளிக்கின்ற வகையில் முக்கிய அங்கமாகும்.
சம்பந்தப்பட்ட
நாடாளுமன்றக் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை பிரதமராகப் பதவியேற்க அழைக்கும் வழக்கத்தை நமது
குடியரசின் தலைவரான முர்மு மிகத் துல்லியமாகக் கடைப்பிடித்திருக்க வேண்டும்.
மேலும் அவர் மோடியை அழைத்த தன்னுடைய முடிவின் பின்னணியில் உள்ள நியாயத்தையும்
நாட்டு மக்களுக்குத் தெரிவித்திருக்க வேண்டும்.
முன்னாள் குடியரசுத் தலைவர்
வெங்கடராமன் உருவாக்கிய முன்னுதாரணம்
தனது
முன்னோடிகளான ஆர்.வெங்கடராமன், கே.ஆர்.நாராயணன் போன்றவர்கள் உருவாக்கி வைத்துள்ள சிறப்பான
முன்மாதிரியை குடியரசுத் தலைவர் முர்மு கட்டாயம் பின்பற்றியிருக்க வேண்டும். மக்களவையில்
பெரும்பான்மையைப் பெற முடியாத கட்சிகளின் தலைவர்களை தங்களுடைய தலைவர்களாக கூட்டணிக்
கட்சியினர் தேர்ந்தெடுத்து ஆதரவை வழங்கிய நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர்கள்
இருவரும் நிலையான அரசை அமைப்பதற்காக அந்த தலைவர்களை அழைத்த முடிவுகளுக்குப் பின்னிருந்த
வலுவான காரணங்களை பத்திரிகைக் குறிப்புகள் மூலம் வெளியிட்டிருந்தனர்.
வெங்கடராமன் இது குறித்து ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகம் 1994ஆம் ஆண்டு வெளியிட்ட ‘எனது குடியரசுத் தலைவர் ஆண்டுகள்’ என்ற புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். எட்டாவது மக்களவையில் நானூறுக்கும் மேற்பட்ட இடங்களை வென்றிருந்த ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி 1989ஆம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது மக்களவைக்கான பொதுத் தேர்தலில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையைக் காட்டிலும் மிகக் குறைவாக 194 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. ஆனாலும் மக்களவையில் அது தனிப் பெரும் கட்சியாக இருந்ததையே தேர்தல் முடிவுகள் காட்டின. தேசிய முன்னணியில் இருந்த ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 145 இடங்களிலும். பாஜக 82 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 55 இடங்களிலும் அந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தன. ஆட்சியமைப்பதற்கான உரிமையைக் கோரப் போவதில்லை என்று தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தனது நினைவுக் குறிப்பில் வெங்கட்ராமன் எழுதியுள்ளார். வி.பி. சிங் தலைமையிலான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப் போவதாக பாஜக மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தனர்.
அரசு
அமைப்பது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் மேற்கொண்ட உரிய
ஆலோசனைகளுக்குப் பிறகு தேசத்திற்கு தனது முடிவையும், வி.பி.சிங்கை பிரதமராகப்
பதவியேற்க அழைத்த காரணத்தையும் விளக்கும் வகையில் வெங்கட்ராமன் 1989ஆம் ஆண்டு
டிசம்பர் முதல் நாளன்று பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
‘ஒன்பதாவது
மக்களவைக்கு அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ்
(ஐ) கட்சி அரசு அமைப்பதற்கான உரிமையைக் கோரவில்லை என்பதால், ஜனதா தளம்/தேசிய
முன்னணி என்ற இரண்டாவது பெரிய கட்சி/குழுவின் தலைவரான வி.பி.சிங்கை ஆட்சி அமைக்க -
பதவியேற்ற முப்பது நாள்களுக்குள் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட
வேண்டும் என்று குறிப்பிட்டு - அழைத்திருந்தேன்’ என்று வெங்கடராமன் தனது
புத்தகத்தில் மேற்கோள் காட்டியிருந்த அவரது அறிக்கையுடன் தொடர்புடைய இந்தப்
பத்தி தன்னிலை விளக்கத்துடன் இருந்தது.
இரண்டாவது
பெரிய கட்சி/குழு, அதாவது ஜனதா தளம்/தேசிய முன்னணியின் தலைவர் என்ற வி.பி.சிங்கின்
தகுதியை முன்னிறுத்தி, பதவியேற்ற முப்பது நாள்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பில்
கலந்து கொள்ள வேண்டும் என்று வெங்கட்ராமன் கூறியிருந்தது முக்கியத்துவம் வாய்ந்த
செயலாகும்.
பெரும்பான்மையை
நிரூபிப்பதற்கான கால அளவைக் குறிப்பிடும் வகையில் நமது அரசியலமைப்பில் எந்தவொரு
விதியும் இருக்கவில்லை என்ற அடிப்படையில் ஒரு சிலர் முப்பது நாள்களுக்குள்
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற குடியரசுத் தலைவரின் முடிவை
எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். குடியரசுத் தலைவர்
நிர்ணயித்த கால அவகாசம் நன்கு அறியப்பட்ட மரபுகளுடன் ஒத்துப் போவதாகக் கூறி அந்த
மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து
கொள்ளுமாறு மோடியிடம் குடியரசுத் தலைவர் முர்மு ஏன் வலியுறுத்தவில்லை?
அரசு
அமைக்குமாறு மோடியை அழைத்த இன்றைய குடியரசுத் தலைவரின் முடிவை வெங்கட்ராமன்
உருவாக்கியிருந்த முன்னுதாரணத்தின் வெளிச்சத்தில் பார்க்கும் போது பல கேள்விகள் நம்மிடையே
எழுகின்றன. தனிப்பெரும் கட்சியான பாஜக/தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவராக மோடியின்
நிலையை குடியரசுத் தலைவர் எவ்வாறு உறுதி செய்து கொண்டார்? பாஜக இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன்
வெற்றி பெறவில்லை. அந்தக் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக மட்டுமே பெரும்பான்மையுடன்
இருந்தது. எனவே வி.பி.சிங்கைப் பொறுத்தவரை வெங்கடராமன் செய்ததைப் போல, தற்போது
குடியரசுத் தலைவர் முர்மு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பில்
கலந்து கொள்ள வேண்டுமென்று மோடியை ஏன் வற்புறுத்தவில்லை?
தற்போது
எந்தவொரு பத்திரிகை அறிக்கையையும் குடியரசுத் தலைவர் வெளியிடவில்லை. எனவே நமது
ஜனநாயக அமைப்பில் அனைத்து அதிகாரங்களையும், வல்லமையையும் பெற்றுள்ள மக்கள் மோடியை
ஆட்சி அமைக்க அழைத்த குடியரசுத் தலைவரின் முடிவின் பின்னணியில் உள்ள காரணங்கள்,
நேரம் குறித்து எதுவும் அறிந்து கொள்ள முடியாத நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர்
கே.ஆர்.நாராயணன் உருவாக்கிய முன்னுதாரணம்
பாஜகவின் அடல் பிஹாரி வாஜ்பாயை ஆட்சி அமைக்குமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் 1998ஆம் ஆண்டு அழைப்பு விடுத்தார். அது குறித்து அவர் அந்த ஆண்டு மார்ச் மாதம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டார். மக்களவையில் தனிப்பெரும் கட்சியாக வாஜ்பாயின் கட்சி இருந்தது என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மட்டுமே பெரும்பான்மையைப் பெற முடியும் என்ற நிலையே அதற்கு இருந்தது. தான் திருப்தி அடையும் வகையிலே உறுதியான ஆட்சி அமைக்கப்படும் என்பதற்கான உறுதியை அளித்து, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் வாஜ்பாய்க்கு ஆதரவு தெரிவித்து கடிதத்தைத் தர வேண்டும் என்று அப்போது நாராயணன் வலியுறுத்தியிருந்தார்.
தனது
செய்திக் குறிப்பில் அனைத்து விஷயங்களையும் நாராயணன் குறிப்பிட்டுக்
கூறியிருந்தார்: ‘எந்தவொரு கட்சிக்கு அல்லது தேர்தலுக்கு முந்தைய கட்சிகளின்
கூட்டணிக்கு தெளிவான பெரும்பான்மை கிடைத்திராத நிலையில் குடியரசுத் தலைவர் அதிக
எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்ற கட்சிகளின் கூட்டணித் தலைவருக்கே முதல் வாய்ப்பை
வழங்குவார். அவ்வாறு நியமிக்கப்படும் பிரதமர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பெரும்பான்மை
ஆதரவை நிருப்பித்துக் காட்ட வேண்டும். ஆனாலும் இந்த நடைமுறை அனைத்து நேரங்களிலும்
கடைப்பிடிக்கப்பட வேண்டிய சூத்திரம் அல்ல. ஏனெனில் தனிப்பெரும் கட்சி அல்லது
கூட்டணியில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கூட்டு அமைப்பாக,
தனிப்பெரும் கட்சியைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கை உறுப்பினர்களைப் பெறும் சூழல்
உருவாகலாம். தான் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றிருப்பதாக பிரதமராகப் போகிறவர்
முன்வைக்கின்ற கோரிக்கையின் அடிப்படையிலேயே குடியரசுத் தலைவரின் பிரதமர் தேர்வு இருக்கும்.
ஒரு
கட்சியின் தலைவரை அல்லது கூட்டணியின் தலைவரைப் பிரதமராகப் பதவியேற்க அழைக்கலாம், அவர்
குறிப்பிட்ட காலத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று நாட்டு
மக்களுக்கு, இந்த தேசத்திற்கு நாராயணனும் அறிவித்திருப்பது இதன் மூலம் தெளிவாகிறது.
வெங்கடராமன்,
நாராயணன் போன்ற குடியரசுத் தலைவர்கள் உருவாக்கிய முன்னுதாரணங்கள், மரபுகளை தற்போதைய குடியரசுத்
தலைவர் முர்மு மோடியை அரசு அமைக்க அழைத்த போது முழுமையாகப் பின்பற்றவில்லை என்பது
தெளிவாகிறது. பாஜகவிற்குப் பெரும்பான்மையான மக்களவைத் தொகுதிகள் கிடைக்கவில்லை
என்பதைத் தெளிவாக அறிந்திருந்த போதிலும், மோடியிடம் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள்
நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு குடியரசுத்தலைவர் கேட்டுக் கொள்ளவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்த
முறை வழக்கமான நடைமுறையில் இருந்து விலகி குடியரசுத் தலைவர் முர்மு செயல்பட்டிருப்பது
நமது ஜனநாயகத்திற்கு, அரசை அமைத்துக் கொடுக்கும் அரசியலமைப்புத் திட்டத்திற்கு உகந்ததாக
இருக்கப் போவதில்லை.
https://thewire.in/government/president-murmu-convention-modi-240-mps
எஸ்.என். சாஹு முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனின் சிறப்புப்
பணி அதிகாரியாகப் பணியாற்றியவர்.
Comments