ஆதார் விவகாரத்தில் தலைகீழாக மாறிய மோடி

 ‘நான்தான் நான்’ என்பதைக் காட்டும் ஆதார் அட்டையின்  குறைபாடுகள் இன்னும் அப்படியேதான் உள்ளன

 

ஜானவி சென்

வயர் இணைய இதழ்

 

ஸ்மார்ட்போன், புல்டோசர், பாதாள சாக்கடை மூடி மற்றும் ஆதார் அட்டையுடன் எளிமையான தக்காளியை இணைக்கும் வகையில் அவற்றிற்கிடையே ஏதேனும் பொதுவாக உள்ளதா? பொருட்கள் பேசக் கூடும் என்றால் அவை நமது வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி என்ன சொல்லும்? வாழ்க்கைக்குத் தேவையான மிகச் சாதாரணமான பொருட்கள் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் பத்தாண்டு கால ஆட்சியின் பின்னணியில் எவ்வாறு பரிணாமம் அடைந்துள்ளன என்பது குறித்து தி வயர் இதழ் ஆழ்ந்து பார்க்கிறது.       

_______________________________________

‘இந்தியாவில் வசிப்பவர்கள் எவரொருவரும் ஆதார் எண்ணைப் பெற்றுக் கொள்ளலாம். ஒருவர் ‘நான்தான் நான்’ என்ற உண்மையை நிரூபித்திட அது உதவும்’   

(நந்தன் நிலகேனி, 2018 அக்டோபர்)

‘ஒருவர் தாமாக முன்வந்து செய்து கொள்ளும் வகையிலேயே பதிவு இருக்கும். இங்கே வசித்து வருபவர்கள் அனைவருக்கும் அது கிடைக்கும். அடையாள அட்டை என்று எதுவும் இருக்காது. அடையாள எண்கள் மட்டுமே இருக்கும். புகைப்படம் மற்றும் பிற பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டிருக்கும் அந்த அட்டை ஒருவரது அடையாளத்தை இணையத்திற்கு அப்பாலும் (ஆஃப்லைனில்) உறுதிப்படுத்திக் கொடுக்கும். ஒருவரைப் பற்றிய தரவுத்தளமாக அது இருக்கும். இந்த அட்டைகள் எதேச்சாதிகாரத்தைப் பரிந்துரைக்கலாம், வாங்கவும் விற்கவும் முடியும் என்பதால் அவை ஒரு சந்தையை உருவாக்குகின்றன’ 

(நந்தன் நிலகேனி, 2011 செப்டம்பர்)

‘பல்வேறு சமூகத் துறை திட்டங்களின் பயனாளிகளை அரசால் ஆதார் எண்ணின் அடிப்படையில் மிகச் சரியாகக் கண்டறிந்து கொள்ள முடியும் என்பதால் ஏழைகள் ஆதார் மூலம் கூடுதல் பயனடைவார்கள்’   

(ப.சிதம்பரம், 2012  அக்டோபர்)

‘மக்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் ஏதோவொரு வகையில் ஆதார் மாயமந்திர இயற்கை சிகிச்சையாக இருக்கும் என்று நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஆதாருக்காகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்… ஆதார் விஷயத்தில் உச்சநீதிமன்றம் அவர்களை இப்போது கடிந்து கொண்டுள்ளது. ஆதார் அட்டைக்காக எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். அந்தப் பணமெல்லாம் எங்கே போனது? ஆதார் அட்டையால் உண்மையில் பயனடையப் போவது யார்?… மக்களுக்கு ஆதார் அட்டைகளைத் தொடர்ந்து வழங்கினால் இந்தியாவிற்குள் ஊடுருவ விரும்புபவர்களுக்கு அது மிக எளிதாகி விடும். அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் நுழைந்து சட்டவிரோதமான வழிகளைப் பயன்படுத்தி நமது உரிமைகளைப் பறித்துக் கொள்வார்கள் என்று மன்மோகன்சிங் அரசை நான் எச்சரித்திருந்தேன்’       

(நரேந்திர மோடி, 2013 செப்டம்பர் 26) 

‘ஆதாரால் உருவாகக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த என்னுடைய கேள்விகளுக்கு நான் சந்தித்த குழுவினர் அல்லது பிரதமர் என்று எவராலும் பதிலளிக்க முடியவில்லை. தெளிவான நோக்கம் எதுவுமில்லை. வெறுமனே அரசியல் செப்படி வித்தை  மட்டுமே இருக்கிறது’ 

(நரேந்திர மோடி, 2014 ஏப்ரல்)


‘[ஆதார்] நல்ல நிர்வாகத்திற்கான ஒரு கருவி. இடைத்தரகர்கள் இல்லாமல் ஏழை, எளியவர்களைச் சென்றடைவதற்கான ஒரு வழியாக ஆதார் இருக்கும் ’   

(ரவி சங்கர் பிரசாத், 2015)

‘ஆதார் எண் அல்லது அது வழங்கும் அங்கீகாரம் ஆதார் எண்ணை வைத்திருப்பவருக்கு குடியுரிமை அல்லது குடியுரிமைக்கான எந்த உரிமையையும் வழங்காது அல்லது அதற்கான ஆதாரமாக இருக்காது’

(ஆதார் சட்டம், 2016)

‘...தனியார் ஏஜென்சிகளைக் கொண்டு பயோமெட்ரிக் தரவுகளைச் சேகரிப்பது சிறந்த யோசனையாக இருக்காது’  

(உச்சநீதிமன்றம், 2017 ஜனவரி)

 ‘ஆதார் என்ற கருத்தாக்கத்தில் எங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இருக்கவில்லை. எங்களைப் பொறுத்தவரை ஆதாரின் போதாமையே பிரச்சனையாக இருந்தது. நாங்கள் எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக எதையும் எதிர்த்ததில்லை. அதுபோன்ற அரசியலில் எனக்கு நம்பிக்கையும் கிடையாது. ஐக்கிய முற்போக்கு அரசிற்கு கற்பனைவளம் பிரச்சனையாக இருக்கிறது. அதைக் காட்டிலும் நடைமுறைப்படுத்துவதில் அவர்களுக்கு பெரிய அளவில் பிரச்சனை இருக்கிறது. ஆதார் ஆற்றல் மிக்கது என்பது எனக்குத் தெரியும். பல ஆண்டுகளாக ஆதாரை நடைமுறைப்படுத்தி வந்த போதிலும் அவர்கள் அதற்கான நாடாளுமன்ற ஆதரவைப் பெறவே இல்லை. அல்லது பொதுசேவை வழங்கல் நடவடிக்கைகளுடன் ஆதாரை ஒருங்கிணைத்திடவில்லை’     

(நரேந்திர மோடி, ஜூலை 2017).

‘இன்றைக்கு ஆதார் பற்றி தொடர்ந்து கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆதார் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளது என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். முன்பு தவறான கைகளுக்குச் சென்றவை இப்போது அந்த நோக்கத்திற்கான பயனாளிகளைச் சென்று அடைகின்றன’ 

(நரேந்திர மோடி, 2018 ஜனவரி)

‘பயனர்களைப் பற்றிய குறைவான தகவல்களைக் கொண்டுள்ள ஆதார் பல விதங்களிலும்  எதையும் வெளிப்படுத்தாத அடையாள அட்டையாக மட்டுமே இருந்து வருகிறது. தன்னை வைத்திருப்பவரின் பெயர், பிறந்த நாள், முகவரி, பாலினம் என்று நான்கு தரவுகள் மட்டுமே அதற்குத் தெரியும்.  

(நந்தன் நிலகேனி, 2018 அக்டோபர்).  

‘விண்ணப்பதாரர் அளிக்கும் விவரங்களைச் சரிபார்ப்பதற்கான எந்தவொரு அமைப்பும் இல்லை. எனவே ஆதார் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு ஆதார் வைத்திருப்பவர்கள் அனைவரும் நாட்டின் ‘குடியிருப்பாளர்கள்’  என்று உறுதியாகச் சொல்ல முடியாது’  

(தலைமை கணக்குத் தணிக்கையாளர், 2022 ஏப்ரல்)

‘[ஆதார்] அடையாளச் சான்று மட்டும்தான். அது குடியுரிமை அல்லது பிறந்த நாளுக்கான ஆதாரம் கிடையாது’

(ஆதார் அட்டைகள், 2024 ஜனவரி முதல்)

§

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு  - இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலகேனியின் வழிகாட்டுதலுடன் - இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தை (UIDAI) உருவாக்கியது. ஒருவரது பயோமெட்ரிக் தரவுகளுடன் இணைக்கப்பட்ட பன்னிரண்டு இலக்க தனிப்பட்ட எண், மற்றவர்களிடமிருநhந்து அவரை வேறுபடுத்துகின்ற எண், நிலகேனியின் வார்த்தைகளில் கூறுவதானால் நீங்கள் நீங்கள்தான் என்பதை நிரூபிப்பதற்கான எண்ணை இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ‘அடித்தளம்’ அல்லது ‘ஆதார்’ என்ற வகையில் வழங்குவதே அவர்களுடைய குறிக்கோளாக இருந்தது.  

ஆனால் அதுபோன்று ஒருபோதும் அது இருந்ததே கிடையாது. மேலும் சொல்வதென்றால் உண்மையில் அவ்வாறாக அது கற்பனை செய்யப்பட்டும் இருக்கவில்லை. அரசு நலத்திட்டங்களின் ‘போலி’ பயனாளிகளைக் களையெடுப்பது, அரசு மற்றும் அது சேவையளிக்க வேண்டிய மக்களுக்கு இடையிலான தொடர்பை டிஜிட்டல் மயமாக்குவது, அரசு நலத்திட்டங்களில் சாத்தியமான ஊழலை நீக்குவது, ஒருவரது வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளுக்கு (அவர்களுடைய தொலைபேசிகள், வங்கி கணக்குகள், வருமான வரி செலுத்துதல் போன்றவை) இடையே எளிதான தொடர்பை உருவாக்கித் தருவது என்று ஆதார் திட்டம் ‘மிகத் திறனுடைய இந்தியாவிற்கான பாதை’ என்பதாகவே முன்னிறுத்தப்பட்டது.    

ஆரம்பம் முதலே அந்த முயற்சி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. பல்வேறு எதிர்ப்புகளை முன்வைத்த அந்தரங்க உரிமை குறித்த நிபுணர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அந்தரங்க உரிமையைப் பாதுகாக்கும் வகையில் தரவுகள் எவ்வாறு சேகரிக்கப்பட்டு சேமிக்கப்படும், டிஜிட்டல் கல்வியறிவு அல்லது உள்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் என்னவாகும், இந்த மாபெரும், ஆடம்பரமான முயற்சியால் பயனடையப் போகிறவர்கள் யார் என்பது போன்ற கேள்விகளை எழுப்பினர்.    

ஆதார் ஓர் அட்டையாக இருக்காது என்று 2011ஆம் ஆண்டு நிலகேனி வலியுறுத்தியிருந்த நிலையில், ‘அவர்களுடைய ஆதார் எண்ணை ஒருவருக்குச் சொல்வதைத் தவிர வேறு எந்த நோக்கமும் அந்த அட்டைக்கு இல்லை’ என்று 2017ஆம் ஆண்டில் பிரசாந்த் ரெட்டி எழுதினார். அரசு அதிகாரிகள் அப்போதிருந்து திட்டம்  செயல்படுவதற்கான பொருளாகவே அந்த அட்டையைக் குறிப்பிட்டு வந்தார்கள்.     

மனதை மாற்றிக் கொண்ட மோடி

இதுபோன்ற கேள்விகளை எழுப்பியவர் வேறு யாருமல்ல - அப்போது குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிதான். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக - பிரதமர் அலுவலகத்திற்குள் நுழையும் வழியை நிரூபிப்பதற்கான - பிரச்சாரம் செய்த வேளையில் தான் மீண்டும் மீண்டும் மன்மோகன்சிங்கிற்கு இதுகுறித்து கடிதம் எழுதியதாகவும், ஆனால் அவரிடமிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை என்றும் மோடி தனது கவலைகளை வெளிப்படுத்தினார். 

அடுத்த பிரதமராக அப்போது நம்பப்பட்ட அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது ​​ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை மட்டுமல்லாது நிலகேனியையும் விமர்சித்தார். வரி செலுத்துவோரின் கோடிக்கணக்கான பணம் ஆதார் திட்டத்திற்கெனச் செலவளிக்கப்பட்டுள்ளதாக 2014 ஏப்ரல் 8 அன்று பெங்களூரில் (நிலகேனியின் நிறுவனமான இன்ஃபோசிஸைத் தலைமையிடமாகக் கொண்ட நகரம்) நடைபெற்ற பேரணியில் மோடி பேசினார். இந்த நாட்டிற்கு தகவல் தொழில்நுட்பத்தைத் தாங்கள் கொண்டு வந்ததாக நினைப்பவர்கள் என்னைப் போன்ற சாமானியர்கள் சொல்வதையெல்லாம் கேட்பதில்லை என்று நிலகேனியை அவர் கிண்டல் செய்தார்.

அந்த உரை நிகழ்த்தி சுமார் ஆறு வாரங்களுக்குப் பிறகு 2014 மே இருபத்தியாறாம் நாளன்று மோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். ஒரு மாதம் கழித்து 2014 ஜூலை முதல் நாளில் நிலகேனியை (நிலகேனியின் வேண்டுகோளின் பேரில்) அவர் சந்தித்தார். அந்தச் சந்திப்பு மிகவும் வெற்றிகரமாக இருந்த காரணத்தால் அந்தத் திட்டத்தை உடனடியாகப் புதுப்பிப்பது என்று மோடி முடிவு செய்தார் என்று கூறப்பட்டது.

நிலகேனியால் ‘தரவு பாதுகாப்பு குறித்து பிரதமரிடமிருந்த அச்சத்தைப் போக்க முடிந்தது. மேலும் ஆதார் மூலம் மானியங்களைக் குறிவைப்பது, ஊழலைக் கட்டுப்படுத்துவது போன்ற  பல சிக்கல்களை எவ்வாறு தீர்க்க முடியும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்’ என்று ‘ஆதார்: இந்தியாவின் 12 இலக்கப் புரட்சியின் பயோமெட்ரிக் வரலாறு’ என்ற புத்தகத்தில் சங்கர் அய்யர் எழுதியுள்ளார். மிக விரைவிலேயே மோடி ஆட்சி இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் சட்டம் இயற்றப்படும் என அறிவித்தது. அரசுநலத் திட்டங்களில் ஆதாரின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் தொடர்பான மனுக்களை ஏற்கனவே உச்சநீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருந்த வேளையில் அந்த அறிவிப்பு வெளியானது. (சில அதிகார அமைப்புகள் ஆதார் அட்டை கட்டாயம் என்று சுற்றறிக்கை வெளியிட்டிருந்த போதிலும், 2013 செப்டம்பர் 23  அன்று நீதிமன்றம் ஆதாரைப் பெற்றுக் கொள்ளாத யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனக் குறிப்பிட்டிருந்தது).       

அதற்குப் பிறகு அங்கிருந்து திரும்பிப் பார்க்கப்படவே இல்லை. 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆதார் (நிதி மற்றும் பிற மானியங்கள், பலன்கள் மற்றும் சேவைகளின் இலக்கு விநியோகம்) சட்டம் இயற்றப்பட்டது. பாஜகவிற்குப் பெரும்பான்மை இல்லாத மாநிலங்களவையில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமில்லாத பண மசோதாவாக சர்ச்சைக்குரிய வகையில் அது அரசால் கொண்டு வரப்பட்டது. ஆதார் அட்டையை வைத்திருப்பதை தவிர்க்க முடியாதது என்று குறிப்பிட்ட அந்தச் சட்டத்தின் ஏழாவது பிரிவு இறுதியில் அது கட்டாயமாக்கப்படும் எனப் பரிந்துரைத்தது.  

‘மத்திய அரசு அல்லது, மாநில அரசுகளிடமிருந்து மானியம், பலன்கள் அல்லது சேவைகளுக்கான செலவினம் அல்லது இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியத்திடமிருந்து ஒரு பகுதியாக பெறப்பட்ட செலவு ஆகியவற்றைப் பெறும் ஒருவர் அதற்கான நிபந்தனையாக தன்னுடைய அடையாளத்தை நிறுவுகின்ற வகையில் சான்றைப் பெற வேண்டும் அல்லது ஆதார் எண்ணை வைத்திருப்பதற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும். ஆதார் எண் வழங்கப்படாத ஒருவரைப் பொறுத்தவரை ஆதார் எண் பதிவிற்கு அவர் விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்’


உச்ச நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆதார் சட்டம் மற்றும் திட்டத்தின் செல்லுபடியை உறுதி செய்தது. ஆனாலும் அது தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக தரவுகளைப் பகிர அனுமதிக்கும் பிரிவுகள், பயோமெட்ரிக் அங்கீகார முறையைத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்துவதை அனுமதிப்பது உள்ளிட்ட சட்டத்தின் சில விதிகளை ரத்து செய்தது. ஆதார்-வங்கி கணக்குகளைக் கட்டாயம் இணைப்பது ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது’ என்று கூறிய நீதிமன்றம்  வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது ஆதார் எண் அவசியம் என்று உறுதி செய்தது. ஆதார் அங்கீகாரம் தருவதை தனியார் நிறுவனங்கள் (வங்கிகள் மற்றும் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள்) மேற்கொள்ள அனுமதிப்பது உட்பட ஆதார் சட்டத்தில் மத்திய அரசு 2019ஆம் ஆண்டு கொண்டு வந்த திருத்தம் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இருப்பதாக நிபுணர்கள் வாதங்களை முன்வைத்தனர்.  

இந்தியாவில் பல சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை வைத்திருக்க வேண்டியதன் அவசியம் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதில் மதிய உணவு, வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்தல், பல்கலைக்கழக மானியம் வழங்கும் உதவித்தொகை, இழப்பீட்டுத் திட்டங்கள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட வேலை, அரசு திட்டங்கள், இறப்பு பதிவு, ஆழ்கடல் மீன்பிடித்தல் ஆகியவை அடங்கும். ஆதாரை மக்கள் தங்கள் விருப்பத்தின்படி தேர்வு செய்து கொள்ளும் திட்டம் என்று கூறுவதை மிகுந்த கவனத்துடன் பராமரித்து வருகின்ற இந்த அரசு ஆனாலும் ஆதார் என்பது கட்டாயம் என்பதை அனைத்து வழிகளிலும் மெதுவாக ஆனால் நிச்சயமாக உறுதி செய்து காட்டியிருக்கிறது.      

ஆனால் அதற்கெனத் தரப்பட்டிருக்கும் விலை என்ன? நம் அன்றாட வாழ்வில் நம்மால் கண்டு கொள்ள முடியாத அளவிற்கு வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் ஆதார் சமூகநல நடவடிக்கைகளில் ஒதுக்கி வைத்தலுக்கு வழிவகுக்கிறது, அது மக்களின் அந்தரங்க உரிமையை ஆக்கிரமிக்கிறது என்று இந்த திட்டத்தின் மீது வைக்கப்படும் இரண்டு கடுமையான விமர்சனங்களுக்கு பதில் இன்னும் தேவைப்படுவதாஅக்வே இருக்கிறது.  

ஒதுக்கி வைத்தல்

2018ஆம் ஆண்டு செப்டம்பரில் ஜார்கண்டின் சிம்தேகா மாவட்டத்தில் பதினோரு வயதான சந்தோஷி குமாரி எட்டு நாட்கள் சாப்பிட முடியாமல் போனதால் இறந்து போனார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் தகுதி பெற்றவர்களாக இருப்பதற்கான தங்கள் குடும்பத்து ரேஷன் அட்டையை ஆதாருடன் இணைக்காத காரணத்தால் உள்ளூர் ரேஷன் கடைக்காரர் அவர்களுடைய ரேஷன் அட்டையை ரத்து செய்தார். அதன்னை முன்னிட்டு அவர் அந்தக் குடும்பத்தினருக்கு தானியத்தை விற்க மறுத்து விட்டார். துர்கா பூஜை விடுமுறை என்பதால் சந்தோஷியால் அவரது பள்ளியிலிருந்தும் மதிய உணவு சாப்பிட முடியாமல் போனது.

சிறுமியின் மரணம் புயலை உருவாக்கியது. அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதை இதுபோன்று ஆதார் மூலம் ஒதுக்கி வைத்த பல நிகழ்வுகளை மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் அந்த மரணத்திற்கு முன்பே விவரித்திருந்தனார். ஆனாலும் அப்போது நிகழ்ந்த பதினோரு வயது சிறுமியின் மரணம் அரசு நிர்வாகத்தால் புறக்கணிக்க முடியாத வழிகளில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பிரச்சனையைத் திசைதிருப்பும் வகையில் அதிகாரிகள் சந்தோஷி மலேரியாவால் இறந்தார் - பசியால் அல்ல என்று கூறினர். ஆனால் களத்தில் கிடைத்த ஆதாரங்கள் அவர்களுடைய கருத்திற்கு ஆதரவாக இருக்கவில்லை. அதற்கு அடுத்த ஆண்டில் உணவு உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில்  நாடு முழுவதும் பசி தொடர்பாக நிகழ்ந்த நாற்பத்தியிரண்டு மரணங்களைப் பட்டியலிட்டுக் காட்டினர். அவற்றில் இருபத்தைந்து மரணங்கள் அரசு நலத்திட்டப் பலன்களைப் பெறுவதை ஆதார் திட்டம் ஒதுக்கி வைத்ததால் எழுந்த பிரச்சனைகளுடன் தொடர்புடையவை என்று அவர்கள் கூறினர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (MGNREGA) போன்ற திட்டங்களிலும் இவ்வாறு ஒதுக்கி வைப்பதன் மூலம் எதிர்பார்க்கப்பட்ட (ஆனால் நிரூபிக்கப்படாத) செயல்திறன் குறைவானதற்கு கட்டாய ஆதார் இணைப்பு எவ்வாறு வழிவகுத்தது என்பதை ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர். தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் பணம் வழங்கப்படுவது ஆதார் அடிப்படையிலே கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசு முடிவு செய்த பிறகு - ஆதார் அட்டை மற்றும் வேலை அட்டை ஆகியவற்றிற்கு இடையே பெயரில் இருந்த சிறிய எழுத்துப்பிழைகள்,  சிறிய வித்தியாசங்கள் என்று பல்வேறு காரணங்களுக்காக - இருபத்தியொரு மாதங்களில் ஏழு கோடியே அறுபது லட்சம் தொழிலாளர்களின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் கிடைக்கின்ற வேலைக்கான அட்டைகள் நீக்கப்பட்டன என்று LibTech India தெரிவித்துள்ளது. அட்டைகளை இழந்த தொழிலாளர்கள் ஆதார் அடிப்படையில் பணம் பெறுவதற்குத் தகுதியற்றவற்றுப் போயினர்.      

2018ஆம் ஆண்டு செப்டம்பரில் ஆதார் சட்டத்தின் செல்லுபடியை உறுதிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்ட (சந்தோஷியின் மரணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது) உச்ச நீதிமன்றத்தின் பெரும்பான்மைத் தீர்ப்பில் தீர்ப்பில் நீதிபதி ஏ.கே.சிக்ரி, ஆதார் அடிப்படையிலான தொழில்நுட்பத்தின் காரணமாக மக்களுக்கு உரிமைகள் மற்றும் ரேஷன்கள் மறுக்கப்படுவது கவலையளிக்கிறது என்றாலும், அந்தவொரு காரணத்திற்காக ஒட்டுமொத்த சட்டத்தையும் தூக்கி எறிவது சரியான நடவடிக்கையாக இருக்காது என்று கூறினார். 

ஆதாரை இணைப்பதில் உள்ள பிரச்சனைகளால் அரசின் நலத்திட்டங்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவதை மிகச் சாதாரணமான பிரச்சனையாக ஒதுக்கித் தள்ளுவது தவறானது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 'கட்டாயமாக' ஆதார் அடிப்படையில் பணத்தை வழங்கிட தனிப்பட்ட முறையில்’ விலக்குகள் தேவைப்படலாம் என்று ஒப்புக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த ​​மோடி அரசாங்கமும் இதை அங்கீகரிப்பது போன்றே தோன்றுகிறது.

பல நீட்டிப்புகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜனவரி முதல் நாள் முதல் கட்டாய ஆதார் முறை நடைமுறைக்கு வந்தது. அந்தக் காலகட்டத்தில் தங்கள் தரவுத்தளங்களை மாநிலங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே நாளில் ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ‘மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் உள்ள எந்தவொரு கிராம பஞ்சாயத்திலும் தொழில்நுட்பச்சிக்கல்கள் அல்லது ஆதார் தொடர்பான சிக்கல்கள் இருந்தால், அந்தப் பிரச்சனை தீர்க்கப்படும் வரை தனிப்பட்ட முறையில் கட்டாய ஆதார் பணம் செலுத்தும் முறையிலிருந்து இந்திய அரசு விலக்கு அளித்திட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தரங்க உரிமை குறித்த கவலைகள்

ஆதார் குறித்து நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் - தற்போது இந்தியத் தலைமை நீதிபதியாக இருக்கிறார் – இந்த திட்டம் ஒட்டுமொத்தமாக ஒருவரது அந்தரங்க உரிமையை மீறுகிறது என்று கூறியிருந்தார். அரசியலமைப்பு அளித்துள்ள உத்தரவாதங்களை நிகழ்தகவு வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்ப மாறுபாடுகளுக்கு உட்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார். நீதிபதி சந்திரசூட் பெரும்பான்மைக் கருத்தில் இருந்து ஓரளவுக்கு மாறுபட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார்.   

  

அப்போது நீதிபதி சந்திரசூட் தெரிவித்தவை இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து அந்தரங்க உரிமை ஆர்வலர்கள் வாதிட்டவற்றுடன் ஒத்துப் போயின. தரவுகளின் பாதுகாப்பு பற்றி நீதிமன்றத்தில் வாதிடுகையில் ஒன்றிய அரசு பதின்மூன்று அடி உயரம், ஐந்து அடி தடிமன் கொண்ட சுவர்களால் ஆதார் தரவுகள் பாதுகாக்கப்படுகின்றன என்று கூறியது. ஒன்றிய அரசின் அந்தக் கூற்று நகைச்சுவை என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. தரவுகள் தொடர்ந்து கசிந்து கொண்டே இருப்பது தரவுகளுக்காக தடிமனான அந்தச் சுவர்களை இடிக்க வேண்டிய தேவையில்லை என்பதையே நிரூபித்துள்ளது. தங்களைப் பற்றிய தரவுகளை தங்களுடைய ஒப்புதல் இல்லாமல் வெளியுலகிற்கு வெளிப்படுத்தியவர்கள் மீது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் பதில்களை வழங்க முடியவில்லை. பொருளாதார வல்லுனர் ஜீன் ட்ரேஸ் ‘உங்கள் அடையாளம் குறித்த தகவல்கள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்துவதற்குப் பதிலாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அந்தத் தரவுகளை உங்கள் எண்ணை வைத்திருக்கும்,  கட்டணத்தைச் செலுத்த விரும்புகின்ற எவருக்கும் விற்று வருகிறது (குறைந்தபட்சம் அதை விற்பதற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது). பயோமெட்ரிக்ஸ் தரவுகள் மட்டுமே பாதுகாக்கப்படுகின்றன’ என்று  எழுதியுள்ளார்.   

கசிவுகள் குறித்த கவலைகள் மற்றும் அடையாள திருட்டுடன் தொடர்புடைய சிக்கல்கள் தவிர கண்காணிப்பு குறித்த கவலைகளும் இருந்து வருகின்றன. சட்டவிரோத நடவடிக்கைகளை  அம்பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு வரும் அமெரிக்கச் செயற்பாட்டாளர் எட்வர்ட் ஸ்னோடென் ‘வெகுஜன கண்காணிப்பு அமைப்பு’ என்றே ஆதாரைப் பற்றி 2018ஆம் ஆண்டு கருத்து வெளியிட்டிருந்தார். குளோபல் டிஜிட்டல் உரிமைகள் அமைப்பான அக்சஸ் நௌ (Access Now) உலகம் முழுவதிலும் உள்ள மிகப் பெரிய அடையாள அமைப்புகளில் ஒன்றாக ஆதாரை வகைப்படுத்தியுள்ளது. ஆதார் தனக்கான சட்டம், வடிவமைப்பு மூலம் குறிப்பாக பல தரவுத்தளங்களுடன் ஆதார் எண்களை இணைப்பதன் மூலம் கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. அரசின் கண்காணிப்பு என்று வரும்போது குடிமக்களுக்கான தெளிவான பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாமல் இருப்பது குறித்து நிபுணர்கள் கவலை கொள்கின்றனர். அவர்களுடைய கவலைகளை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் மெட்டாடேட்டாவை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆதார் நீக்க வேண்டும் என்று கூறியது.   

ஆதார் திட்டம் கற்பனையில் உதித்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு மிக சமீபத்தில் ‘தேவைக்கேற்ப’ என்ற நழுவலுடன் விமான நிலையங்களில் மற்றொரு திட்டத்தின் கீழ் ஆதார் கட்டாயமானது என்று கூறியதன் மூலம் நமது தனிப்பட்ட தரவுகளை நம்மிடமிருந்து கோருவது அதிகரித்தது. இந்தத் தரவுகளுக்கு என்ன நடக்கும் என்பது குறித்த சிறிதளவிலான மேற்பார்வை அல்லது ஒழுங்குமுறை என்று எதுவுமே இல்லாமல் தனியார் நிறுவனங்கள் அவற்றைச் சேமித்து வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. தரவுகளை நானே வழங்குகின்ற தொனியுடனே  - என்னை நான் அடையாளம் காண விரும்புகின்ற - ‘நான்தான் நான்’ என்று ஆதாரை வரையறுக்கும் எளிய, கவர்ச்சியான சொற்றொடர் வருகிறது. ஆனால் நம் வாழ்விற்குள் பல ஆண்டுகளாக ஊடுருவி அந்தச் சொற்றொடர் உருவாக்கியிருக்கும் திட்டமும், உலகமும் தொடர்ந்து அது இருப்பதற்கும், தாங்களாகவே அதனை அறிவித்துக் கொள்ளவும் நம் அனுமதி இனி தேவையில்லை என்ற நிலைமையையே உருவாக்கியிருக்கிறது.    

 

https://thewire.in/government/modi-took-a-180-degree-turn-on-aadhaar-but-the-i-am-me-cards-flaws-remain

 

Comments