பழைய தரவுகளும், மாறுபட்ட புதிய பார்வையும் - இந்திய மக்கள் தொகை குறித்த பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கை: உண்மை சரிபார்ப்பு
பன்ஜோத்
கவுர்
தி
வயர் இணைய இதழ்
தேர்தல்
நேரத்தில் முஸ்லீம் மக்கள்தொகைப் பெருக்கம் மீண்டும் செய்திகளில் இடம்
பிடித்திருக்கிறது. இந்திய மற்றும் உலக மக்கள்தொகை வரலாறு மக்கள்தொகை நிலைப்படுத்தப்படுவதென்பது
பெண்களுக்கான கல்வி, அவர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பிற சமூக-பொருளாதார காரணிகளுடனே
- மதத்துடன் அல்ல - மிக நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது
என்று ஏற்கனவே நிறுவியுள்ளது.
பழைய
தரவுகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு (PM-EAC)
அறிக்கை மாறுபட்ட புதிய பார்வையுடன் தலைப்புச்
செய்திகளை உருவாக்கியுள்ளது. அந்த ஆய்வறிக்கை 1950 மற்றும் 2015 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட
காலகட்டத்தில் இந்திய மக்கள்தொகையில் சிறுபான்மையினரின் பங்கு அதிகரித்திருக்கும் அதே
நேரத்தில் ஹிந்து மக்கள்தொகை குறைந்துள்ளதாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.
ஆனாலும் 1950-2011 காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மதக் குழுக்களின் மக்கள்தொகை
தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பதை முன்னிலைப்படுத்துவதற்கான முயற்சிகள் எதையும் குறிப்பிட்ட
அந்த அறிக்கை மேற்கொள்ளவே இல்லை.
ஆதாரம்:
பியூ ஆராய்ச்சி மையம்
முஸ்லீம்களுக்கு
எதிராக வெளிப்படையான பிரச்சாரத்தை மேற்கொண்டு அந்த மக்களைப் பயமுறுத்துவதில் பாரதிய
ஜனதா கட்சி ஈடுபட்டு வரும் வேளையில், 2024 மக்களவைத் தேர்தலுக்கு இடையில் களமிறக்கப்பட்டுள்ள
இந்த அறிக்கை வெளியாகியிருக்கும் நேரம் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. பல்வேறு ஊடகங்களில்
இந்த அறிக்கை மேற்கோள் காட்டப்படும் விதம் பாஜக முன்வைத்து வருகின்ற தவறான கதையை மேலும்
மேம்படுத்துகின்ற முயற்சியாகவே இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியே கடந்த மாதம் நடைபெற்ற
அரசியல் பேரணியில் ‘அதிக குழந்தைகளைப் பெறுகின்றவர்கள்’ என்று முஸ்லீம்களைக் குறிப்பிட்டது
மட்டுமல்லாது, அவர்களே இந்திய வளங்களில் பெரும் பகுதியை எடுத்துக் கொள்கிறார்கள்
என்றும் பேசியிருந்தார். அவர் பாஜக தலைவர்கள் இதற்கு முன்பாகத் தொடர்ந்து பயன்படுத்தி
வந்துள்ள அவதூறுகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். முன்னதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்
ஒருவர் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் ‘கட்டுப்படுத்துவதற்கான’ சட்டம் வேண்டும் என்று
கோரும் தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
மக்கள்தொகை
வளர்ச்சி/நிலைப்படுத்துதல் நேரடியாக பெண்களின் கல்வியறிவு, பெண்களுக்கு அதிகாரமளித்தல்,
குழந்தை இறப்பு விகிதம் மற்றும் பிற சமூக-பொருளாதார நிலைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது
என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு மேற்கோள் காட்டியுள்ள
தரவுகளை (பழைய மக்கள்தொகை கணக்கெடுப்பு) மக்கள்தொகை குறித்த தீவிரமான ஆய்வாளர்கள் பயன்படுத்துகின்ற
வகையில் பார்த்தால், தென்னிந்தியாவைக்
காட்டிலும் வட இந்தியாவில் 'ஹிந்துக்கள்' மற்றும் 'முஸ்லீம்கள்' ஆகிய இரு
சமூகங்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருப்பதைக் கண்டறிந்து கொள்ள
முடியும். எனவே இப்போது மீண்டும் சூடுபடுத்தப்பட்டிருக்கும் இந்த விவகாரத்தில் 'மதரீதியான'
சாயம் பூசப்பட்டிருப்பது குறித்து ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
இந்த
விவகாரம் குறித்து ஆராயும் வகையில் குழுவை அமைப்பது பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
தேர்தலுக்கு முன்னதாகத் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் உரையில்
குறிப்பிட்டிருந்தார். தேர்தலின் போது மக்கள் தொகைப் பெருக்கம் விவாதத்தின் மையப் புள்ளியாக
மாறும் என்பதற்கான முன்னோடியாகவே அவரது உரை இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.
தன்னுடைய உரையில் ‘வேகமான மக்கள்தொகை வளர்ச்சி,
மக்கள்தொகை மாற்றங்கள் போன்றவற்றால் எழும் சவால்களை விரிவான பரிசீலனைக்கு உட்படுத்திட
உயரதிகாரம் கொண்டதொரு குழுவை அரசு அமைத்திடும். ‘விக்சித் பாரத்’ இலக்கு தொடர்பாக இந்தச்
சவால்களை விரிவாகக் கையாள்வதற்கான பரிந்துரைகளை அளிக்குமாறு அந்தக் குழு பணிக்கப்படும்’
என்று அமைச்சர் கூறியிருந்தார்.
எந்தவொரு
குறிப்பிட்ட மதமும் அவரது உரையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் சிறுபான்மையினரையே
அவரது அறிக்கை குறிவைத்துள்ளது என்று இதுவரையிலும் பாஜக நடந்து வந்திருக்கும்
விதத்தைக் கருத்தில் கொண்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ‘அடுத்த இருபதாண்டுகளில்
மக்கள்தொகை வளர்ச்சியில் இந்தியா கடுமையான மந்தநிலையைக் காண உள்ளது’, ‘அடுத்த இருபது
ஆண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி கடுமையாக குறைந்து மக்கள்தொகை மாற்றத்தின் அடுத்த கட்டத்திற்குள்
இந்தியா நுழைந்திருப்பதை 2041ஆம் ஆண்டு வரையிலான தேசிய மற்றும் மாநில அளவிலான மக்கள்தொகை
கணிப்பு காட்டுகிறது’ என்று தனது அமைச்சகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் தாக்கல்
செய்த 2018-19ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்த
தகவல்களுக்கு முரணான கருத்துகளே அவரது பட்ஜெட் அறிக்கையில் இடம் பெற்றிருந்தன.
2019ஆம்
ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் மக்கள்தொகை வளர்ச்சியில் கடுமையான
மந்தநிலை இருக்கும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், மக்கள்தொகை வேகமாக அதிகரித்து
வருவதாக 2024ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் உரை வித்தியாசமாக இருந்தது. இந்திய
மக்கள்தொகை வளர்ச்சி விகிதத்திலிருந்த மந்தநிலை 2019 மற்றும் 2024க்கு இடைப்பட்ட
காலத்தில் தலைகீழாக மாறி விட்டது என்று கூறுவதற்கு எந்தவொரு மக்கள்தொகை தரவும் இருக்கவில்லை.
மக்கள்தொகை
வளர்ச்சியின் சரிவுப் போக்கிலிருந்து முஸ்லீம்கள் தனித்து விலகியிருக்கிறார்கள்
என்று எந்தவொரு கவலையும் 2019ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில்
தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் 'மத சிறுபான்மையினரின் பங்கு: நாடுகள் தழுவிய பகுப்பாய்வு
(1950-2015)' என்ற தலைப்பில் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான ஷமிகா
ரவி மற்றும் பிற ஆசிரியர்கள் 2024 மே ஏழாம் நாள் வெளியிட்ட ஆய்வறிக்கையில்
அவ்வாறான கவலை இடம் பெற்றிருந்தது. அதையே ஷமிகா ரவி ஊடகங்களுக்கு அளித்த
பேட்டியிலும் திரும்பத் திரும்பக் கூறியிருந்தார். சில ஊடகங்கள் அவர் கூறியவற்றை அப்படியே எடுத்துக் கொண்டு வார்த்தை மாறாமல்
பரப்பின.
ஆனால் அவர்களுடைய அறிக்கை தவறானதாக,
பீதியைப் பரப்பும் வகையில் இருக்கிறது என்று இந்திய மக்கள்தொகை அறக்கட்டளை கூறியுள்ளது.
‘முஸ்லீம் மக்கள்தொகை அதிகரிப்பை முன்னிலைப்படுத்துவதற்காக ஊடகங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட தரவு சித்தரிக்கும் வேலை
பரந்த அளவிலான மக்கள்தொகைப் போக்குகளைப் புறக்கணிக்கின்ற தவறான சித்தரிப்பிற்கான
எடுத்துக்காட்டாகவே இருக்கிறது’ என்று இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர்
பூனம் முத்ரேஜா கூறினார்.
மேலும் ‘இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி
முஸ்லீம்களின் பத்தாண்டு மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் கடந்த மூன்று
பத்தாண்டுகளாகக் குறைந்து கொண்டே வந்துள்ளது. குறிப்பாக 1981-1991 காலகட்டத்தில் 32.9%
என்றிருந்த முஸ்லீம் மக்கள்தொகையின் பத்தாண்டு வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில்
24.6% என்று குறைந்தது. அந்தச் சரிவு ஹிந்து
மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவைக் காட்டிலும் அதிகமாக இருந்தது. ஹிந்து
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் அதே காலகட்டத்தில் 22.7%இலிருந்து 16.8% ஆகக் குறைந்திருந்தது.
1951ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரையிலும் கிடைக்கின்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு
தரவுகள் இந்த ஆய்வில் உள்ள தரவுகளுடன் அதிகம் ஒத்திருப்பது அந்த எண்கள் புதியவை அல்ல
என்பதையே குறிப்பிட்டுக் காட்டுகிறது’ என்று அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை தொடர்ந்தது.
முஸ்லீம்
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பற்றிய உண்மைகள்
ஒரு சமூகத்தை - முஸ்லீம்களை - தனியாகக்
குறிப்பிட்டுக் காட்டி இந்திய மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு அவர்களை மட்டும் பொறுப்பாக்கும்போது
மோடி போன்ற பாஜக தலைவர்கள் பாரபட்சம் எதையும் காட்டுவதில்லை. அவர்கள் கூறுகின்ற இதுபோன்ற
தகவல்கள் அறிவியல்பூர்வமாக இல்லாமல், தவறானவையாகவும் இருக்கின்றன. கடந்த சில பத்தாண்டுகளில்
மற்ற மதத்தினரைப் போல முஸ்லீம்களிடையேயும் மொத்த கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளது
என்பதையே அனைத்து பகுப்பாய்வுகளும் காட்டுகின்றன.
1951-61 மற்றும் 2001-2011 மக்கள்தொகைக்
கணக்கெடுப்புக் காலகட்டங்களுக்கு இடையே இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரிடையே முஸ்லீம்களிடமே
அதிகபட்ச மக்கள்தொகை வளர்ச்சி இருந்தது என்று மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல்
நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், பிரபல மக்கள்தொகை ஆய்வாளருமான கே.எஸ்.ஜேம்ஸ் 2021ஆம்
ஆண்டு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். ஆனாலும் முஸ்லீம் மக்கள்தொகை வளர்ச்சி
விகிதம் ஏழு சதவிகித அளவிற்கு குறைந்திருந்த நிலையில் ஹிந்து மக்கள்தொகை வளர்ச்சி விகிதம்
மூன்று சதவிகித அளவிற்கு மட்டுமே குறைந்திருந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மற்ற மதத்தினருடன் ஒப்பிடுகையில் பாரம்பரியமாக
முஸ்லீம்களிடமே மொத்த கருவுறுதல் விகிதம் அதிக அளவில் இருந்ததை இங்கே தெளிவுபடுத்த
வேண்டியுள்ளது. கருவுறுதல் விகிதத்தில் ஏற்பட்டிருக்கும் சரிவைக் கணக்கிடுவதற்காக
எடுத்துக் கொள்ளப்படும் அடிப்படை அளவு அதிகமாக உள்ளது. எனவே முஸ்லீம்களின் மொத்த கருவுறுதல்
விகிதத்தில் ஏற்படுகின்ற எந்தவொரு சரிவும் மற்ற எந்த மதத்தினரைக் காட்டிலும் இயல்பாக
அளவு கூடுதலாகவே இருக்கும். ‘மிக அதிக எண்ணிக்கையில்
குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்கள்’ என்று முஸ்லீம்கள் குறித்து பிரதமர் மோடி தரும் விளக்கத்தில்
உள்ள உண்மையை அது மறுப்பதில்லை.
மொத்த கருவுறுதல் விகிதத்தில் ஹிந்துக்களுக்கும்,
முஸ்லீம்களுக்கும் இடையிலான வேறுபாடு காலப்போக்கில் குறைந்துள்ளதும், அதன் மூலம் வெவ்வேறு
மதக் குழுவினருக்குப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் உள்ள வேறுபாடு மிகக்
குறைவாக இருப்பதும் 'ஐடியாஸ் ஃபார் இந்தியா' என்ற அமைப்பு கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்விலிருந்து
தெரிய வந்துள்ளது. இந்த உண்மையின் அடிப்படையில் மோடி, அவரது கட்சிக்காரர்கள்
பேசுவதை எவ்வாறு புரிந்து கொள்வது?
மக்கள்தொகை கட்டுப்பாடு தொடர்பாக
அமைக்கப்பட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவில் - அந்தக் குழு 1994ஆம் ஆண்டு தனது அறிக்கையைச்
சமர்ப்பித்திருந்தது - உறுப்பினராக இருந்த பாஸ்கர ராவ் ‘அரசியல் தலைவர்கள் குறுகிய
எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றனர்... அவர்களுக்கு இதுபோன்ற கதைகள் மிக நன்றாகப் பொருந்துகின்றன.
இந்தச் சிக்கலைச் சுற்றிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகைப்படுத்தல் அவர்களுக்கு மக்கள்தொகை
வளர்ச்சி பற்றிய கவலை குறித்து தெரிவுநிலையை வழங்குகிறது’ என்று தி வயர் இணைய
இதழிடம் கூறினார்.
இந்திய
மக்கள்தொகை செல்லும் பாதை ஆச்சரியப்பட வைப்பதாக இல்லை
2011ஆம் ஆண்டிற்குப் பிறகு மக்கள்தொகை
கணக்கெடுப்பை இந்தியா நடத்தவில்லை என்றாலும், நம்பகமான உலகளாவிய ஆய்வுகளிலிருந்து இந்திய
மக்கள்தொகை சீனாவை சமீபத்தில் முந்தி விட்டது, இந்தியா இப்போது உலகின் அதிக மக்கள்தொகை
கொண்ட நாடாக உள்ளது என்பது போன்ற தகவல்கள் கிடைத்துள்ளன. உலகம் இதை அறிந்து கொண்டபோது
இந்தியா, சீனா நாடுகளின் மக்கள்தொகைப் போக்குகள் குறித்த ஆச்சரியங்கள் காலப்போக்கில்
உருவாகின.
அதே நேரத்தில் மக்கள்தொகை வளர்ச்சியில்
‘மாற்றீட்டு நிலையை’ இந்தியா எட்டிய நிகழ்வும் நடந்தேறியது. சராசரியாக ஒரு பெண்
2.1 குழந்தைகளைப் பெற்றெடுக்கும் நிலை 'மாற்றீட்டு கருவுறுதல் விகிதம்' என்றழைக்கப்படுகிறது.
மாற்றீட்டு கருவுறுதல் விகிதத்தை ஒரு நாடு அடைவதென்பது மக்கள்தொகை வளர்ச்சியை மாறாது
வைத்து உறுதிப்படுத்துவதில் மிக முக்கியமான நிகழ்வாக இருக்கிறது.
மொத்த கருவுறுதல் விகிதம் என்பது ஒரு
பெண் பெற்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையாகும். இந்தியாவின் தற்போதைய மொத்த கருவுறுதல் விகிதம் 2.0
என்ற அளவில் இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS)-5 குறிப்பிடுகிறது. இந்த
அளவிலான மொத்த கருவுறுதல் விகிதம் இந்தியாவை மாற்றீட்டு கருவுறுதல் நிலைக்குத் தேவைப்படும்
மாற்றீட்டு நிலைக்குக் கீழான நிலைக்கு சிறிது சிறிதாக மாற்றிச் செல்கிறது.
2022ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று மாநிலங்களவையில்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜான் பிரிட்டாஸின் கேள்விக்குப் பதிலளித்த
சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவின் பவார் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டை எட்டுவதில்
ஒன்றிய அரசு வெற்றி பெற்றிருப்பதாகக் கூறியிருந்தார். தற்போதைய மொத்த கருவுறுதல் விகிதம்,
மாற்றீட்டு நிலை கருவுறுதல் விகிதம், கருத்தடை சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பு, பிறப்பு
விகிதம் குறைவது பற்றி அவர் ‘மக்கள்தொகை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதில் அரசு
மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன’ என்று குறிப்பிட்டிருந்தார். கடந்த பத்தாண்டுகளில்
பாராளுமன்றத்தில் மக்கள்தொகைப் பெருக்கம் குறித்து அளிக்கப்பட்ட பதில்களில் ‘பிரச்சனை’
என்று முஸ்லீம்களை அடையாளம் காட்டி ஒருமுறை
கூட எந்தவொரு பதிலும் அளிக்கப்பட்டதில்லை.
இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம்
குறைந்து வருவதை உலகம் கவனத்தில் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம்
(UNFPA) 2022ஆம் ஆண்டு நவம்பரில் ‘இந்திய மக்கள்தொகை வளர்ச்சி நிலையாக இருப்பதாகத்
தோன்றுவது நல்ல செய்தி…நாட்டின் மக்கள்தொகையில் 69.7% கொண்டுள்ள முப்பத்தியொரு மாநிலங்கள்
மற்றும் யூனியன் பிரதேசங்கள் மாற்றீட்டு நிலை 2.1ஐக் காட்டிலும் குறைவான கருவுறுதல்
விகிதத்தை அடைந்துள்ளன’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் தி லான்செட்டில்
வெளியான கட்டுரையில் இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் மேலும் குறையப் போகிறது,
2027ஆம் ஆண்டில் அது 1.75 என்ற அளவை எட்டும்
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மைகளைப்
பொருட்படுத்தாத பாஜக அரசியல்
அமைச்சர் ஒருவர் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில்
பெற்ற வெற்றியை கொண்டாடிய அதே வேளையில் அந்தக் கட்சியைச் சார்ந்த மற்றவர்கள் தாங்கள்
மேற்கொண்டு வரும் துருவமுனைப்பு அரசியலை இன்னும் மேம்படுத்துகின்ற வகையில் மக்கள்தொகை
அதிகரித்து வருவது கவலைக்குரியது எனப் பேசி வருகின்றனர்.
முன்னதாக பாஜக உறுப்பினரான ராகேஷ் சின்ஹா
‘மக்கள்தொகை ஒழுங்குமுறை மசோதா- 2019’ என்ற தலைப்பில் தனிநபர் மசோதா ஒன்றை மாநிலங்களவையில்
தாக்கல் செய்தார். அந்த மசோதா இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு எதிராக தண்டனை
நடவடிக்கை, அவ்வாறானவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகரீதியான, நிதி சார்ந்த சலுகைகளை
திரும்பப் பெற்றுக் கொள்வது, அரசு வேலைகளுக்கு விண்ணப்பிப்பது அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்கு
அவர்களுக்குத் தடை விதிப்பது போன்ற நடவடிக்கைகளைக் கோரியது.
நாடாளுமன்ற நூலகத்தின் குறிப்புரைப்
பிரிவில் உள்ள மக்கள்தொகைக் கட்டுப்பாடு குறித்த குறிப்பு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர்
மன்சுக் மாண்டவியாவின் வலியுறுத்தலின் பேரில் சின்ஹா அந்த மசோதாவைத் திரும்பப்
பெற்றுக் கொண்டார் எனக் கூறுகிறது. மேலும்
‘ஏழைகள், பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளியை விரிவுபடுத்தும் என்று அந்த மசோதா
மீதான விமர்சனம் முன்வைக்கப்பட்டது’ என்றும், ‘பொது விநியோகத் திட்டங்கள் அல்லது பிற அரசு நிதியுதவி
திட்டங்களின் கீழ் கிடைக்கின்ற பலன்கள் பறிக்கப்பட்டால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள்’
என்றும் அந்தக் குறிப்பு விளக்கியது.
அதிகரித்து வரும் மக்கள்தொகையே சமூகத்தில்
உள்ள பல பிரச்சனைகளுக்கு மூல காரணம் என்று உலக மக்கள்தொகை தினமான 2021 ஜூலை 11 அன்று
உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தின் அலுவலகம் வெளியிட்ட செய்தியறிக்கையில்
குறிப்பிடப்பட்டிருந்தது. அதே ஆண்டில் உத்தரப்பிரதேச மக்கள்தொகை (கட்டுப்பாடு, உறுதிப்படுத்தல்
மற்றும் நலன்) மசோதாவின் வரைவு நகலை உத்தரப்பிரதேச மாநில சட்ட ஆணையம் வெளியிட்டதை அடுத்து
முதலமைச்சரின் அந்த அறிக்கை வெளியானது. 'மக்கள்தொகைப் பெருக்கத்தின் தீமைகள்' குறித்து
குறிப்பிட்டிருந்த முதலமைச்சர் அலுவலக அறிக்கை வெளியாகி எட்டு நாட்களுக்கு அதாவது ஜூலை
பத்தொன்பதாம் நாள் வரை பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக அந்த வரைவு மசோதா பொதுவெளியில்
வைக்கப்பட்டது.
அந்த மசோதாவிலும் பாஜக எம்பி சின்ஹா
கொண்டு வந்த மசோதாவைப் போல இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில்
போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இரண்டு குழந்தை விதிமுறைகளைப்
பின்பற்றாதவர்களுக்கு பொதுவிநியோக முறையின் மூலம் வழங்கப்படும் ரேஷன் உட்பட அரசாங்கத்தின்
சமூகரீதியான, நிதி சார்ந்த பலன்கள் கிடையாது என்றும் அந்த மசோதா தெளிவுபடுத்தியது. உத்தரப்பிரதேச மாநில அரசால் கொண்டு வரப்பட்ட அந்த
மசோதாவும் பெண்களுக்கான கருத்தடையே மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி
என்று கூறி பெண்கள் மீது பொறுப்பைச் சுமத்தியது. குறைவான குழந்தைகளைப் பெற்றெடுத்துக்
கொள்வதற்கான சுமை அதிக அளவில் பெண்கள் மீது சுமத்தப்படுகிறது என்று கூறுவதற்குப் போதுமான
தரவுகள் இருந்து வரும் நிலைமையிலேயே அந்த மசோதா அவ்வாறு கொண்டு வரப்பட்டிருந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே மக்கள்தொகைப்
பெருக்கப் பிரச்னையைச் சமாளிப்பதற்குச் சட்டப்பூர்வமான நடவடிக்கையைக் கொண்டு
வருவது பற்றி பாஜக அரசியல்வாதிகள் தங்கள் சிந்தனையை முன்வைத்து வருகின்ற போதிலும்,
மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா கொண்டு வருவதற்கான
உத்தேசம் எதுவுமில்லை என்றே நாடாளுமன்றத்தில் அளித்த பதில்களில் பல சந்தர்ப்பங்களில்
தெரிவித்து வந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக அரசால் தரப்பட்ட அனைத்து பதில்கள்
குறித்து தி வயர் இணைய இதழ் மேற்கொண்ட பகுப்பாய்வு அதனை வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.
அந்த பதில்கள் அனைத்தும் உண்மையில் எந்தவொரு மதக் குழுவையும் தனிமைப்படுத்தாமல் கருவுறுதல்
விகிதங்களைக் குறைப்பதில் மோடி அரசின் முயற்சிகளைப்
பாராட்டுகின்ற வகையில் இருந்தனவே தவிர பாஜக தலைவர்கள் தங்கள் அரசியல் உரைகளில் குறிப்பிட்ட
வகையான வெற்றியாக இருக்கவில்லை.
தற்போது பாஜக கூட்டணியில் இருக்கின்ற
பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார் பல சந்தர்ப்பங்களில் பெண்கள் கல்வி கற்பதுதான் மக்கள்தொகையை
நிலைநிறுத்துவதற்கான சிறந்த வழி என்று கூறியுள்ளார். இதனை அவர் அடிக்கடி திரும்பத்
திரும்பக் கூறி வந்துள்ளார். ஆனால் மகாகத்பந்தன் கூட்டணியில் இருந்த போது கடைசியாக
சட்டமன்றத்தில் அவ்வாறு கூறிய போது பாஜகவிடம் இருந்து ஏளனங்களை, அவமானங்களை மட்டுமே
அவர் பெற்றுக் கொண்டார். .
இந்தியாவின் அடிப்படை தரவு சேகரிப்பு
நடவடிக்கையான மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு மூன்று ஆண்டுகள் தாமதமாகியிருக்கும்
நிலையில் மக்கள்தொகை குறித்த துல்லியமான விவரங்களை முழுமையாகப் பெறுவதற்கான சாத்தியம்
எதுவும் இருக்கவில்லை. ஆனால் ஒன்றிய நிதியமைச்சர் தனது இடைக்கால பட்ஜெட் உரையிலும்,
மற்ற பாஜக தலைவர்கள் தங்கள் உரைகளிலும் 'அதிகரித்து வரும் மக்கள்தொகை வளர்ச்சி' பற்றி
குறிப்பிட்டுப் பேசியுள்ளனர்.
தொற்றுநோய்க்குப் பிறகு, மக்கள் தொகை
கணக்கெடுப்பு எந்த காரணமும் இல்லாமல் தாமதமானது. நாட்டின்
வரலாற்றில் அதுவே முதல் முறையாகும். கனக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்று குடிமக்களுக்குத்
தெரிவிக்கப்படவே இல்லை. ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் எதுவும் இல்லாமல் நிதி அமைச்சர்
வெளியிட்டுள்ள அறிக்கை குருட்டுத்தனமானதாக, வெறும் அரசியல் அறிக்கையாக மட்டுமே இருந்தது’
என்று பாஸ்கரராவ் கூறினார்.
வாய்ச்சவடால் ஒருபுறத்தில் இருக்க -
கொள்கை எங்கே?
பல பத்தாண்டுகளாகத்
தொடர்ந்து அதிகரித்து வந்த சீன மக்கள்தொகை பின்னர் குறையத் தொடங்கியது - இந்தியாவிலும்
அவ்வாறு மக்கள்தொகை குறைவது இறுதியில் நடக்கலாம்.
இந்திய
மக்கள்தொகை குறையத் தொடங்குவதை 2067ஆம் ஆண்டுக்கு முன்பாக எதிர்பார்க்க முடியாது
என்று மேலே உள்ள படம் காட்டுகிறது. இந்தியா பல்வேறு முனைகளில் முக்கியமான கொள்கைரீதியான
சவால்களை எதிர்கொள்ளப் போகிறது. இந்தியா இளைஞர்களின் தேசமாக இருக்கப் போகிறது.
பியூ
ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு ‘இருபத்தைந்து வயதுக்குட்பட்ட வயதினரில் இந்தியர்களே ஏராளமாக
உள்ளனர் - உலகளவில் அந்த வயதுக்குட்பட்டவர்களாக இருப்பவர்களில் ஐந்தில் ஒருவர் இந்தியாவில்
வாழ்ந்து வருகிறார்கள்’ என்று தெரிவிக்கிறது. மேலும் இந்திய மக்கள்தொகையில் நாற்பது
சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இருபத்தைந்து வயதிற்குட்பட்டவர்களாக இருப்பதாக அந்த
ஆய்வு கூறுகிறது.
‘அந்த
இளைஞர்கள் தங்களுக்கான வேலைகளை எவ்வாறு பெறப் போகிறார்கள், குழந்தைகள் மற்றும் இளைய
தலைமுறையினருக்கு எவ்வாறு கல்வியை வழங்குவது என்பது குறித்து உயரதிகாரம் கொண்ட குழு
கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று பாஸ்கரராவ் கூறினார். ராவ் மட்டுமே அது குறித்த கவலை
கொண்டவராக இருக்கவில்லை. மேலே குறிப்பிடப்பட்ட 2018-19ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வும்கூட
அதுபோன்ற கவலைகளை வெளிப்படுத்தியிருந்தது.
அந்தப்
பொருளாதார ஆய்வறிக்கையில் ‘2021-41 காலகட்டத்தில் தொழிலாளர் பங்கேற்பின் பாதையைப் பொறுத்து
ஆண்டுதோறும் உழைக்கும் வயது மக்கள்தொகையில் எதிர்பார்க்கப்படும் அதிகரிப்பிற்கு ஏற்ப
கூடுதல் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உழைக்கும் வயது
மக்கள்தொகை 2021-31 காலகட்டத்தில் ஆண்டுக்கு 97 லட்சம், 2031-41 காலகட்டத்தில் ஆண்டுக்கு
42 லட்சம் என்று அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கை கணித்துள்ளது.
தற்சமயம்
வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவால் ஒரு தேசமாக பெருமளவிலான
மக்களுக்கு எவ்வாறு வேலைகளை வழங்க முடியும் என்பதைக் கற்பனை செய்வது கடினமாகவே
இருக்கும் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும் பல அமைப்புகளின் சமீபத்திய அறிக்கைகளில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியப்
பட்டதாரிகளில் கிட்டத்தட்ட பாதிப் பேர் தற்போது வேலையில்லாமல் இருந்து வருவதாக இந்தியா
திறன் அறிக்கை - 2021 போன்ற அரசின் சொந்த ஆய்வுகள் உள்ளிட்ட பல அறிக்கைகள் கூறுவது
தற்போது நிலவி வருகின்ற மோசமான நிலையையே காட்டுகிறது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல்
பிரச்சாரத்தில் வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்சனையை அவ்வப்போது எழுப்புகின்ற எதிர்க்கட்சிகள்,
ஆக்கப்பூர்வமான தீர்வுகளை மோடி ஆட்சியால் கொண்டு வர முடியவில்லை என்று குறை கூறி
வருகின்றன.
இடைநிலைக்
கல்வி, உயர் கல்வி ஆகியவற்றை வழங்குவது மற்றுமொரு பெரிய சவாலாகும். மொத்த மாணவர் சேர்க்கை
விகிதம் 50%க்கும் சற்று அதிகமாகவும், உயர்கல்வியைப் பொறுத்தவரை (18-23 வயது) அது வெறுமனே
27.3% ஆகவும் இருப்பதாக அரசின் சமீபத்திய மதிப்பீடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள்தொகை
குறையத் தொடங்குவதற்கு முன், பின் என்று இரண்டு சூழ்நிலைகளிலும் சுகாதாரப் பாதுகாப்பைக்
கையாள்வதும் குறிப்பிடத்தக்க சவாலாகவே இருக்கும். ‘இந்திய மருத்துவமனை வசதிகள் தற்போதைய
நிலையிலேயே இருந்தால், மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மந்தமாக இருந்தாலும் அடுத்த இரண்டு
பத்தாண்டுகளில் அதிகரித்து வரும் மக்கள்தொகை தனிநபருக்குக் கிடைக்கும் மருத்துவமனை
படுக்கைகளின் எண்ணிக்கையைக் கடுமையாகக் குறைக்கும்’ என்று பொருளாதார ஆய்வு எச்சரித்துள்ளது.
2060களுக்குப்
பிறகு இந்திய மக்கள்தொகை குறையத் தொடங்கியவுடன் இந்தியா முதியோர்களின் நாடாக மாறும்
- சீனாவும் ஜப்பானும் அந்த நிலைமையை இப்போது அனுபவித்து வருகின்றன. வயதானவர்களைப் பராமரிப்பதற்கென்று
சிறப்புக் கொள்கைகள் தேவைப்படும்.
தனது
மக்களை தனது பலமாக அங்கீகரித்து அதிகரிக்கும் உழைக்கும் மக்கள்தொகையிடமிருந்து பலன்களைப் பெறுவதில் இந்தியா ஏற்கனவே தனது வேகத்தை
இழந்திருக்கிறது. இப்போது 'முஸ்லீம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதங்கள்' என்ற அதன் கருத்தியல்
முன்கணிப்புகளால் கண்மூடித்தனமாக உண்மைகளைப் புறக்கணித்து, போதுமான தரவுகளைச் சேகரிக்காத
காரணத்தால் அறிவியல் பார்வையை இழந்து இந்தியா வயதானவர்களைக் கொண்ட எதிர்காலத்திற்குத்
தயாராக இருக்கப் போவதில்லை. அந்தக் காரணத்தால் தனக்கான வாய்ப்பை இழக்க இந்தியா தயாராகிக்
கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.
https://thewire.in/health/fact-check-old-data-new-spin-in-pm-eac-report-on-indias-population\
Comments