பரம்பரை வரி மூலம் அரசுக்கு அதிக வருமானம் வராது

 மோகன் ஆர் லாவி

பட்டயக் கணக்காளர்


ஹிந்து பிசினஸ்லைன்


இந்திய அயல்நாட்டு காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா பரம்பரை வரி குறித்த தனது அறிக்கை மூலம் இந்திய அரசியலில் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கினார். குழந்தைகளுக்காக தனது சொத்தை விட்டுச் செல்லும்  ஒருவரது பணத்தில் ஐம்பத்தைந்து சதவிகிதம் பரம்பரை வரியாக வசூலிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள சட்டத்தை பிட்ராடோ மேற்கோள் காட்டியிருந்தார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் மீண்டும் பரம்பரை வரியை அறிமுகப்படுத்தும் என்ற முடிவுக்கு சிறிது நேரத்திலேயே இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் வந்து சேர்ந்தன. தங்கள் வெளிநாட்டுத் தலைவர் கூறிய கருத்துகளில் இருந்து விலகி நின்று கொண்ட காங்கிரஸ் கட்சி அந்த சர்ச்சையைத் தவிர்த்தது. அந்த விவகாரம் குறித்த சில விஷயங்களை இங்கே காணலாம்.   

சொத்து வரி 

விவசாய நிலம் உள்ளிட்ட அசையா மற்றும் அசையும் சொத்துக்களின் உரிமையாளர் இறந்த பிறகு அந்தச் சொத்துகளின் முதன்மை மதிப்பு மீது அந்தச் சொத்தைப் பெற்றுக் கொள்பவர் செலுத்த வேண்டிய வரியாக இந்தியாவில் 1953ஆம் ஆண்டு முதன்முதலாக சொத்து வரி எனப்படும் எஸ்டேட் வரி அறிமுகப்படுத்தப்பட்டது. சொத்தை வைத்திருந்தவர் வயது வந்தவராக இறந்து போயிருந்தால் மட்டுமே அந்தச் சட்டம் பொருந்துவதாக இருந்தது.      

மேலும் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலக்கு வரம்பைக் காட்டிலும் கூடுதல் மதிப்புள்ள பரம்பரைச் சொத்துகளுக்கு மட்டுமே அந்த வரி பொருந்துவதாக இருந்தது. ஒருவர் இறக்கும் போது உள்ள சந்தை மதிப்பின்படியே வரி விகிதம் கணக்கிடப்பட்டது.    

இந்தியாவில் வசிக்கும் போது இறந்து போனவருக்கு இந்தியா மற்றும் அதற்கு வெளியே இருந்து அவரது வாரிசுக்கு மாற்றித் தரப்பட்ட அசையா மற்றும் அசையும் சொத்துகளுக்கு இந்த வரி செலுத்தப்பட வேண்டும். இந்தியாவில் அவர் இறக்கவில்லையென்றால் இந்தியாவில் உள்ள அசையா சொத்துக்கள்,  அசையும் சொத்துகள் மீது மட்டுமே அந்த வரி விதிக்கப்பட்டது. இந்தியாவிற்கு வெளியே இருந்த அசையா சொத்துகளுக்கு வரி எதுவும் விதிக்கப்படவில்லை. எண்பத்தைந்து சதவிகிதம் என்ற உச்சத்துடன் இருந்த வரி விகிதம் மக்களிடம்  அவ்வளவாக பிரபலமாக இல்லாத காரணத்தால் 1985ஆம் ஆண்டு அது திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.   

அன்பளிப்பு வரி

1958ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் அன்பளிப்பு வரி என்ற சட்டமும் இருந்தது. ஒருவர் மற்றொருவருக்கு வழங்குகின்ற எந்தவொரு அன்பளிப்புக்கும் வரி விதிக்க அந்தச் சட்டம் அனுமதி அளித்தது. தானாக முன்வந்து ஒருவர் மற்றொருவருக்கு மாற்றித் தருகின்ற அசையும் அல்லது அசையா சொத்துகள் அன்பளிப்பு என்று வரையறுக்கப்படுகின்றன. வரி விதிப்பிற்குள்ளாகும் அன்பளிப்புகளுக்கு முப்பது சதவிகித வரி விதிக்கப்பட்டது.

சொத்து வரியைச் செயல்படுத்தும் போது எதிர்கொள்ளப்பட்டதைப் போன்ற இடையூறுகள் காரணமாக இந்த வரியும் 1998ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் அன்பளிப்புகளுக்கு (பணம் அல்லது ரொக்கம் அல்லாத) வரி விதித்து 2004ஆம் ஆண்டு மீண்டும் அன்பளிப்பு வரி அறிமுகப்படுத்தப்பட்டது. வரிக்கான விதிவிலக்குகளுக்குள் நன்கொடையாகப் பெறப்படும் அன்பளிப்புகள், திருமணத்தின் போது அல்லது வாரிசு உரிமையாகப் பெறப்படும் அன்பளிப்புகள் அடங்கும்.

செல்வ வரி

ஒருவரின் நிகர சொத்து மதிப்புக்கு வரி விதிக்கும் வகையில் இந்தியாவில் 1957ஆம் ஆண்டிலிருந்து செல்வ வரி என்ற வரியும் இருந்தது. ஒருவர் அந்த நிதியாண்டில் சம்பாதித்த முப்பது லட்சம் ரூபாய்க்கு மேலான வருமானத்திற்கு அந்த வரியின் கீழ் ஒரு சதவிகித வரி விதிக்கப்பட்டது. இந்திய குடிமக்களின் அனைத்து சொத்துகளுக்கும், குடியுரிமை இல்லாத இந்தியர்களுக்கு (என்ஆர்ஐ) இந்தியாவில் உள்ள சொத்துக்களுக்கு மட்டும் அந்த வரி விதிக்கப்பட்டது. தங்கம், வெள்ளி, பிளாட்டினத்தாலான ஆபரணங்கள், தனியார் விமானம், கப்பல்கள் மற்றும் கார்கள் போன்ற போக்குவரத்து வாகனங்கள், ஒருவர் குடியிருக்கும் இடத்தைத் தவிர பிற சொத்துகள், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள ரொக்கப் பணம் போன்ற சொத்துகளுக்கு அந்த வரி விதிக்கப்பட்டது. நிறைவேற்றப்படுவதில் இருந்த அதிக செலவுகள் காரணமாக 2015ஆம் ஆண்டு செல்வ வரி ரத்து செய்யப்பட்டது.  

கடந்த பத்தாண்டுகளாகவே மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய வாரங்களில் பரம்பரை வரியை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்த வதந்திகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தியாவில் இல்லாத அளவிற்கு அதிக அளவில் மேற்கத்திய நாடுகளில் மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் இருப்பதற்கு பரம்பரை வரியே காரணம் என்று 2018ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.  

எந்த விதமான பரம்பரை வரியும் அரசிற்கு மிகக் குறைவான வருவாயை மட்டுமே பெற்றுத் தரும் என்பதற்கு வரலாறே சான்றாக உள்ளது. இந்தியாவில் பரம்பரை வரி விதிப்பு கொண்டு வரக்கூடிய பலன்களைக் காட்டிலும் அதனைச் செயல்படுத்துவதற்கு ஆகும் செலவுகள் அதிகமாகவே இருக்கும். இந்தியர்களின் சொத்து கடந்த பத்தாண்டுகளில் அதிகரித்து இருக்கலாம் என்றாலும், பரம்பரை வரிகளால் அதிகரிக்கக் கூடிய வருவாய் குறைவாகவே இருக்கும். பரம்பரை வரிகள் குடும்பங்களிலிருந்து கிடைக்கும் வருவாய் மீது விதிக்கப்படும் நிலையில் குடும்ப அமைப்பு, சமூக அமைப்பு, விழுமியங்களில் நம்மிடமிருந்து அதிகம் வேறுபட்டிருக்கும் நாடுகளின் பரம்பரை வரிகளை மேற்கோள் காட்டுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்காது.      

சட்டங்களைக் காட்டிலும் அரசியல் விவாதங்களில் ஒரு பகுதியாக பரம்பரை வரிகள் குறித்த விவாதங்கள் இருக்குமென்றால் இந்திய வரி செலுத்துவோர் அதிகம் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது மட்டும் உறுதி.

https://www.thehindubusinessline.com/opinion/inheritance-tax-wont-rake-in-much-for-govt/article68122354.ece



Comments