இந்தியாவில் பரம்பரை வரியின் வரலாறு

 அபிஜீத் குமார்

பிசினஸ் ஸ்டாண்டர்டு


இந்தியாவில் பரம்பரை வரி இல்லாதது குறித்து இந்திய அயல்நாட்டு காங்கிரஸின் தலைவர் சாம் பிட்ரோடா சமீபத்தில் தெரிவித்திருந்த கருத்துகள் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்கு  மத்தியில் சர்ச்சையைக் கிளப்பின. பரம்பரை வரி என்ற கருத்து இந்தியாவவைப் பொருத்தவரை புதிதல்ல. எஸ்டேட் வரி அல்லது ‘மரண வரி’ என்று சில நாடுகளில் குறிப்பிடப்படும் அத்தகைய வரி நாற்பதாண்டுகளுக்கு முன்பாக 1985ஆம் ஆண்டு ஒழிக்கப்படும் வரையிலும் இந்தியாவில் நடைமுறையில் இருந்து வந்துள்ளது.      

பிட்ரோடா இந்தப் பிரச்சனையை முதன்முதலாக எழுப்புவராகவும் இருக்கவில்லை. அவரது அறிக்கையை காங்கிரஸுக்கு எதிராகப் பயன்படுத்திக் கொள்ள பாரதிய ஜனதா கட்சி  இப்போது முயல்கிறது என்றாலும், பாஜக மூத்த பிரமுகராக இருந்த அருண் ஜேட்லி பரம்பரை வரியை ஆதரிப்பதாக 2017ஆம் ஆண்டு கூறியிருந்தார் என்ற உண்மை கவனிக்கப்பட வேண்டியதாகவே இருக்கிறது.      

2014ஆம் ஆண்டில் மோடியின் தலைமையில் பாஜக அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த ஜெயந்த் சின்ஹா பரம்பரை வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பதை வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தற்போதைய தலைவர் அமித் மாளவியா அப்போது ஆதரவு அளித்திருந்தார். எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) இப்போது நீக்கப்பட்டிருக்கும் ட்வீட்டில் ‘பரம்பரை சொத்துக்கு வரி விதிக்கும் @ஜெயந்த் சின்ஹாவின் யோசனையை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்’ என்று மாளவியா குறிப்பிட்டிருந்தார்.       

பரம்பரை வரி என்றால் என்ன, அது ஏன் பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது?

ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய சொத்துகள் மற்றும் பொறுப்புகள் இறந்தவரின் சொத்து என்பதாக அழைக்கப்படும். இறந்து போனவரின் அந்தச் சொத்திற்குள் அவரது சொத்துகள், முதலீடுகள் முதல் தனிப்பட்ட உடமைகள், கடன்கள் வரை உள்ள அனைத்தும் அடங்கும். அந்தச் சொத்துகள், கடன்களுக்கு என்ன நேரும் என்பது அந்தப் பகுதியில் உள்ள சட்டங்கள் மற்றும் இறந்தவருக்கு உயில் இருக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்து மாறுபடும்.     

இறந்தவரின் விருப்பத்திற்கேற்ப அவரது சொத்துக்களை நிர்வகிப்பது, விநியோகிப்பது இறந்தவரின் கட்டளைகளை நிறைவேற்றுபவர் அல்லது நிர்வாகியின் (இறந்தவர் அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்படுபவர்) பொறுப்பில் இருக்கும். உயில் எழுதவில்லை என்றால் அது சட்டத்தின் பொறுப்பாகி விடும்.

சில நாடுகளில் எஸ்டேட் வரி அல்லது மரண வரி என்றும் பரம்பரை வரி அழைக்கப்படுகிறது. இறந்தவர்களிடமிருந்து அவர்களுடைய வாரிசுகளுக்கு மாற்றித் தரப்பட்ட சொத்துகளுக்கு விதிக்கப்படும் வரியாக பரம்பரை வரி உள்ளது. இறந்தவரிடமிருந்து மாற்றித் தரப்பட்ட சொத்துகளின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் அந்த வரி விதிப்பானது இறந்தவர் மற்றும் பயனாளிக்கு இடையிலான உறவு, சொத்தின் மொத்த மதிப்பு, அந்தப் பகுதியின் வரிச் சட்டங்களைப் பொறுத்து மாறுபடும்.  

பரம்பரை வரி எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

இறந்தவரின் சொத்தின் மொத்த மதிப்பைத் தீர்மானிப்பதே அந்தச் சொத்தக் கையாள்வதில் உள்ள முதல் படியாகும். இறந்தவருக்குச் சொந்தமான அசையா சொத்து, முதலீடுகள், வங்கிக் கணக்குகள், வாகனங்கள், தனிப்பட்ட உடமைகள் உட்பட அனைத்து சொத்துகளின் மதிப்பையும் ஒருசேர மதிப்பிடுவது அந்த முதல் படிக்குள் அடங்கும்.

பரம்பரை வரி பொருந்துமா இல்லையா என்பது சொத்தின் மொத்த மதிப்பு, அந்தப் பகுதியில் உள்ள சட்டங்கள் உட்பட பல காரணிகளைப் பொறுத்ததாக இருக்கும். சில இடங்களில் மனைவி அல்லது குழந்தைகள் போன்ற சில பயனாளிகளுக்கு பரம்பரை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம் அல்லது குறைவான வரி விகிதத்தை அவர்கள் செலுத்த வேண்டியிருக்கலாம். 

சொத்து/பரம்பரை வரி குறித்து இந்தியா மேற்கொண்ட சோதனை

பொருளாதாரரீதியான சமத்துவமின்மையைக் குறைப்பதற்காக சொத்து வரிச் சட்டம் 1953ஆம் ஆண்டில் பரம்பரை வரியை அறிமுகப்படுத்தியது. அதிக அளவிலான செல்வத்தை தங்கள் வாரிசுகளுக்குக் கடத்திய பெரும் செல்வந்தர்கள் மீது வரி விதிக்கின்ற வழிமுறையாக அது மேற்கொள்ளப்பட்டது.

தான் இறந்து போன பிறகு தனது சொத்து மதிப்பு முழுவதையும் வாரிசுகளுக்கு மாற்றும் போது தனிநபர் ஒருவருக்கு விதிக்கப்படும் வரியாக சொத்து வரி உள்ளது.  இந்த வரி இந்தியாவிற்குள் அல்லது வெளியில் உள்ள அசையா மற்றும் அசையும் சொத்துகளுக்குப் பொருந்தும்.

தனிநபரின் மரணத்தின் போது உள்ள சந்தை மதிப்பின் அடிப்படையில் சொத்து மதிப்பு தீர்மானிக்கப்பட்டு, ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துகளுக்கு ஏழரை சதவிகிதம் என்று தொடங்கி இருபது  லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துகளுக்கு எண்பத்தைந்து சதவிகிதம் என்ற அளவில் அந்த வரி விகிதம் இருந்தது. அதிகமான வரி விகிதங்கள் காரணமாக பொதுமக்களின் எதிர்ப்பை அந்த வரி விதிப்பு எதிர்கொள்ள நேர்ந்தது.

பரம்பரை வரி இந்தியாவில் ஏன் ரத்து செய்யப்பட்டது?

அரசின் வருவாயை அதிகரிப்பது, பொருளாதாரரீதியான சமத்துவமின்மையைக் குறைப்பது போன்ற நோக்கங்களை முன்னிறுத்தி இயற்றப்பட்ட அந்தச் சட்டம் அமலில் இருந்த முப்பதாண்டு காலத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு துறைகளிடமிருந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. 

மேலும் பல்வேறு வகையான சொத்துக்களுக்கான வேறுபட்ட மதிப்பீட்டு விதிகள் அந்தச் சட்டத்தைச்  சிக்கல் மிகுந்ததாக மாற்றின. அதன் விளைவாக சொத்து மதிப்பீடு குறித்து நீண்டகால நீதிமன்ற வழக்குகள், அதிக அளவிலான நிர்வாகச் செலவுகள் ஏற்படவும் வழி பிறந்தது.  அரசால் வசூலிக்கப்படும் மொத்த நேரடி வரிகளில் மிகக் குறைவான பகுதியே சொத்து வரி வசூலில் கிடைப்பதாக தணிக்கை அறிக்கை வெளிப்படுத்திக் காட்டியது.  

1984-85ஆம் ஆண்டில் மொத்த சொத்து வரி வசூல் இருபது கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. அவ்வாறு வசூலிக்கப்பட்ட தொகை அந்த வரியை வசூல் செய்வதற்குச் செய்யப்பட்ட செலவுகளைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.  

பரம்பரைச் சொத்துக்களை மறைப்பது, பினாமி சொத்து பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது உள்ளிட்ட வரி ஏய்ப்புக்கான வழிகளை தனிநபர்கள் நாடியதால் பரம்பரை வரி மூலமாகக் கிடைத்த வரி வசூல் மிகக் குறைவாகவே இருந்தது.

மேலும் செல்வ வரியுடன் சேர்த்து சொத்து வரியையும் விதிப்பது இரட்டை வரிவிதிப்பாகப் பார்க்கப்பட்ட காரணத்தால் பொதுமக்களிடையே கடும் அதிருப்தி உருவானது.

1985ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் வி.பி.சிங்கால் அந்த வரி ரத்து செய்யப்படுவதற்கு  இதுபோன்ற காரணிகள் அனைத்தும் சேர்ந்து பங்களித்தன.   

பரம்பரை வரியைத் திரும்பக் கொண்டுவர காங்கிரஸ், பாஜக இரண்டு கட்சிகளுமே முயற்சிகளை மேற்கொண்டன

பரம்பரை வரியை மீண்டும் அறிமுகப்படுத்துவது என்ற கருத்து ஏறத்தாழ பத்தாண்டு காலத்திற்கும் மேலாக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து புழக்கத்தில் இருந்து வருகிறது.  

2011ஆம் ஆண்டு அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பரம்பரை வரியை மீண்டும் அறிமுகப்படுத்துவது என்ற கருத்தை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற திட்டக் குழுக் கூட்டத்தில் முன்வைத்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது ஆட்சிக் காலத்தின் ஆரம்ப நான்கு ஆண்டுகளில் நிதியமைச்சராகப் பணியாற்றிய சிதம்பரம் வரி வளங்களை அதிகரிப்பதற்கு, குறைந்து வரும் வரி-ஜிடிபி விகிதத்தை அதிகரிப்பதற்கு என்று அந்த யோசனையை முன்மொழிந்தார்.    

ஓராண்டு கழித்து 2012ஆம் ஆண்டில் தேசிய பொது நிதி மற்றும் கொள்கை நிறுவன நிகழ்வில் மீண்டும் அந்த முன்மொழிவை வலியுறுத்திப் பேசிய சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்பிட்ட சிலரிடையே செல்வம் குவிவதைத் தடுப்பதற்கு பரம்பரை வரி அவசியமாகிறது என்றார். ஆனால் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது.  

அதே ஆண்டில் பாஜக அரசில் நிதியமைச்சராக இருந்த ஜெயந்த் சின்ஹா பரம்பரையாக வணிகம் செய்து வரும் பிரமுகர்கள் அனுபவித்து வருகின்ற பலன்களைக் குறைத்து, சிறந்த பொருளாதார வளத்தை அதிகரிக்கும் திறனை வளர்த்தெடுப்பதைக் காரணம் காட்டி பரம்பரை வரியை மீண்டும் கொண்டு வருவதற்கு பகிரங்கமான ஒப்புதலை வழங்கினார்.  

பரம்பரை வரியை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து அரசு சிந்தித்து வருவதற்கான அறிகுறிகள் 2017ஆம் ஆண்டில் அதிகம் காணப்பட்டன. பரம்பரை வரிகள் மூலம் கணிசமான அளவில் கிடைத்த பணத்தாலேயே வளர்ந்த நாடுகளில் உள்ள மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் பயனடைந்தன என்பதை எடுத்துக்காட்டி 2018ஆம் ஆண்டில் அப்போது நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி பரம்பரை வரி மீண்டும் கொண்டு வரப்படும் யோசனையை ஆதரித்தார். பரம்பரை வரி இல்லாமையால் தொண்டு பங்களிப்புகளில் அதன் தாக்கம் குறைவாக இருக்கின்ற காரணத்தாலேயே அமெரிக்காவில் உள்ளதைப் போன்ற போக்கு இந்தியாவில் காணப்படவில்லை என்று ஜேட்லி அடிக்கோடிட்டுக் காட்டினார்.    

பரம்பரை வரியைத் திரிம்பக் கொணர்வது என்று வெவ்வேறு அரசுகளில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள் அளித்து வந்த ஒப்புதல்கள் தனிப்பட்ட முறையிலான ஒப்புதல்களாக மட்டுமே இருந்தன. அதனை காங்கிரஸ் அல்லது பாஜக கட்சிகள் கொள்கையாக ஏற்றுக் கொள்ளவில்லை.  

அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் பரம்பரை வரி

உலகளவில் இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், பின்லாந்து போன்ற நாடுகளில் பரம்பரை வரிகள் பரவலாகக் காணப்படுகின்றன. பிட்ரோடா குறிப்பிட்ட பரம்பரை வரி அமெரிக்காவிற்குள் ஆறு மாநிலங்களில் மட்டுமே அமலில் இருப்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். அமெரிக்கா நாற்பது சதவிகித வரி விகிதம் என்று மிக அதிகமான பரம்பரை வரி விகிதத்தைக் கொண்டிருக்கிறது. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, அயோவா, கென்டக்கி, மேரிலாந்து, நெப்ராஸ்கா, நியூ ஜெர்சி, பென்சில்வேனியா மாநிலங்களில் மட்டுமே பரம்பரை வரி விதிக்கப்படுகிறது. வரிவிதிப்புத் தொகையானது சொத்தின் மதிப்பு, இறந்தவருடன் பயனாளிக்கு உள்ள உறவு, உள்ளூர்ச் சட்டம் போன்ற காரணிகளைப் பொறுத்ததாக உள்ளது. அத்துடன் கூடுதலாக இறந்தவர் வாழ்ந்த அல்லது சொத்து வைத்திருந்த மாநிலமும் பரம்பரை வரியை விதிக்கலாம் என்ற நிலைமை உள்ளது.   

ஜப்பான் ஐம்பத்தைந்து சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ள நிலையில், தென் கொரியாவில் ஐம்பது சதவிகிதம், பிரான்ஸில் நாற்பத்தைந்து சதவிகிம் என்ற அளவில் பரம்பரை வரி இருந்து வருகிறது.

https://www.business-standard.com/politics/decoded-the-history-and-political-relevance-of-inheritance-tax-in-india-124042500736_1.html

Comments