பரம்பரை வரியை மீண்டும் அறிமுகப்படுத்துவது எளிதல்ல - 2019ஆம் ஆண்டு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு வெளியான கட்டுரை

 விவேக் ஆனந்த்

ஆனந்த் கல்யாணராமன்

ஹிந்து பிசினஸ்லைன்

 

இறந்து போன ஒருவரின் சொத்துகளை வாரிசுரிமையாகப் பெற்றவருக்கு விதிக்கப்படும் பரம்பரை வரி முன்பிருந்த சொத்து வரி, செல்வ வரியைப் போல நிர்வாகரீதியான தடைகளை எதிர்கொள்ளலாம்.   

முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் ஜூலை ஐந்தாம் நாள் பரம்பரை வரி மீண்டும் கொண்டு வரப்படுமா?

முந்தைய அவதாரத்தில் சொத்து வரி (எஸ்டேட் ட்யூட்டி) என்பதாக அறியப்பட்ட பரம்பரை வரி 1985ஆம் ஆண்டு முதல் நிறுத்திக் கொள்ளப்பட்டது. அரசின் வருவாயை அதிகரித்துக் கொள்வதற்காக மீண்டும் அந்த வரி அறிமுகப்படுத்தப்படலாம் என்பதாக சில ஊகங்கள் இருந்த போதிலும்,  செயல்படுத்துவதில் உள்ள சில இடையூறுகள் அதனைத் திரும்பக் கொண்டு வருவதற்கான தடைகளாக இருக்கின்றன.     

இறந்து போன ஒருவரிடமிருந்து சொத்துக்களைப் பெறுபவர் மீது சுமத்தப்படுகின்ற பரம்பரை வரி அதற்கு முன்பிருந்த சொத்து வரி, செல்வ வரியைப் போல நிர்வாகரீதியான தடைகள் அந்த இடையூறுகளில் ஒன்றாக இருக்க நேரிடலாம். மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தன்னுடைய முதலாவது ஆட்சிக் காலத்தில் 2015ஆம் ஆண்டு செல்வ வரியை நீக்கியது. ஆனால் அதற்குப் பதிலாக அந்த அரசு அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மீது வரி மீதான கூடுதல் கட்டணத்தை சுமத்தியது.

வரியை வசூலிக்க அரசு மேற்கொண்ட முயற்சிகளை நியாயப்படுத்தும் வகையில் அந்த வரியின் மூலமாக வருவாய் கிடைக்கவில்லை என்பது சொத்து வரி மற்றும் செல்வ வரி நீக்கப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது. நிர்வாக ரீதியிலான தடைகள் மற்றும் வழக்குகள் போன்றவை அதிக செலவுகள் மற்றும் குறைவான வருவாயைக் குறிப்பதாக இருந்தன.

பரம்பரை வரி அறிமுகப்படுத்தப்பட்டால் அதுபோன்ற சவால்களை மீண்டும் எதிர்கொள்ள வேண்டிய அபாயம் உள்ளது. நாட்டிலுள்ள உண்மையான சொத்துகள் பற்றி விரிவான தரவுகள் இல்லாத காரணத்தால் வரியைச் வசூலிப்பதற்கான சவால்கள் மேலும் அதிகரிக்கவே செய்யும். உரிய தரவுகள் இல்லாமல் பரம்பரை வரியை அறிமுகப்படுத்துவதென்பது வரி ஏய்ப்பை உருவாக்கும் அபாயத்துடனே இருக்கிறது.  

நாங்கியா அட்வைசர்ஸ் (ஆண்டர்சன் குளோபல்) நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நேஹா மல்ஹோத்ரா ‘வரிவிகித நோக்கத்திற்காக சில சொத்துகளை ஒருங்கிணைத்துக் கொள்வது, விரைவான வாரிசு நிவாரணத்தை உறுதிப்படுத்துதல், நன்கொடைகளைக் கையாளுவது, சொத்துகள் மற்றும் வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களை மதிப்பீடு செய்வது, கட்டுப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்பான சிக்கல்கள் போன்றவை 1985ஆம் ஆண்டுக்கு முன்பாக பரம்பரை வரி விதிப்பை நிர்வகித்து வந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை சிரமமானதாக, கடினமானதாக ஆக்கியிருந்தன. அவை மதிப்பீட்டாளர்களுக்கும், துறைக்கும் இடையே நீண்ட காலத்திற்கு இழுக்கப்பட்ட வழக்குகளுக்கே வழிவகுத்துக் கொடுத்தன. அதன் காரணமாகவே அரசு அந்த வரியை ரத்து செய்தது. வரியை நிறுத்தி வைப்பதற்கு முன்பு சொத்தின் அசல் மதிப்பில் பத்து  முதல் எண்பத்தைந்து சதவிகிதம் வரை பல படிநிலைகளில் சொத்து வரி வசூலிக்கப்பட்டது’ என்கிறார்.

வரி வசூலில் இருந்த ஓட்டைகள்

பரம்பரை வரியைத் திறம்பட நடைமுறைப்படுத்துவதில் பல ஓட்டைகள் இருந்தன. ஹிந்து பிரிக்கப்படாத குடும்பம் (HUF) என்ற வழியைப் பயன்படுத்தி சொத்துகளை குடும்பத்திற்கு மாற்றிக் கொள்வதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட வரி-தவிர்ப்பு நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும்.

‘பரம்பரை வரியைத் தவிர்ப்பதற்காக மக்கள் ஹிந்து பிரிக்கப்படாத குடும்பங்களை உருவாக்கிட முனைந்தார்கள். ஹிந்து பிரிக்கப்படாத குடும்பங்களில் குடும்பச் சொத்துக்களை தனிப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குச் சொந்தமாக வைத்திருக்க மாட்டார்கள். சொத்துகள் அனைத்தும் ஹிந்து பிரிக்கப்படாத குடும்பங்களுக்குச் சொந்தமாகவே இருக்கும். அப்படியான நிலைமையில் எதுவொன்றும் பரம்பரையாக யாருக்கும் கிடைப்பதில்லை. உறுப்பினர்கள் வருவது, போவது தொடர்ந்து இருந்தாலும் சொத்துகள் ஹிந்து பிரிக்கப்படாத குடும்பங்களையே  சார்ந்திருக்கும். இதுபோன்ற நிலைமையில் பரம்பரை வரியை விதிக்க முடிவு செய்வது மிகப் பெரிய சவாலாகவே இருக்கும். சொத்துகளை அறக்கட்டளைகளுக்கு மாற்றிக் கொள்ளும்  ஆபத்தும் இருக்கிறது’  என்று கிளியர்டாக்ஸின் தலைமை ஆசிரியர் ப்ரீத்தி குரானா கூறுகிறார்.

மூலதனம் நாட்டை விட்டு வெளியேறும் ஆபத்து

இது தவிர பொருளாதாரம் சிறப்பாக இல்லாத நேரத்தில் பரம்பரை வரியை விதிப்பதன் மூலம் மூலதன உருவாக்கத்தை ஊக்குவிப்பதை நிறுத்திக் கொள்ள அரசு விரும்பாது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவிற்கு தங்கள் செல்வத்தைக் கொண்டு வருவதைச் சீர்குலைப்பதுடன், இந்தியாவிலிருந்து செல்வம் வெளிநாட்டு அதிகார வரம்புகளுக்கு வெளியேறிச் செல்வதற்கான வழியையும்  வகுக்கும் என்பது பரம்பரை வரிக்கு எதிரான வாதங்களில் ஒன்றாக உள்ளது. எர்ன்ஸ்ட்&யங் இந்தியாவின் அசோசியேட் டேக்ஸ் பார்ட்னரான அஜய் ஆகாஷ் ‘ஜிடிபி வளர்ச்சி குறைந்து வருவதால், இந்தியா ‘மூலதனத்திற்கு வரி விதிக்கப்பட வேண்டும் அல்லது மூலதனத்தை உருவாக்க ஊக்கமளிக்கப்பட வேண்டும்’ என்ற நிலையை எட்டியுள்ளதா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்கிறார். 

பரம்பரை வரிக்கு ஆதரவான, எதிரான வாதங்கள்

செயல்படுத்துவதில் உள்ள இடையூறுகள் ஒருபுறம் இருக்க பரம்பரை வரி விதிப்பிற்கு ஆதரவாக, எதிராக என்று பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. பரம்பரை வரியை ஆதரிப்பவர்கள் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அப்பட்டமாக அதிகரித்து வரும் செல்வச் சமத்துவமின்மையை சுட்டிக் காட்டுகின்றனர். அவர்கள் பரம்பரை வரி இந்த ஏற்றத்தாழ்வைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாது அரசு வருவாயையும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.

பயனுள்ள, சமூக பாதுகாப்பு அமைப்பு இல்லாத நிலையில் பரம்பரை வரி விரும்பத்தக்கதாக இருக்காது என்று பரம்பரை வரியை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள். பரம்பரை வரி என்பது இரட்டை வரிவிதிப்புக்கு சமம் என்ற கருத்தை முன்வைக்கும் அவர்கள் ஏற்கனவே வருமான வரி செலுத்தப்பட்ட பணத்தில் இருந்து உருவாக்கப்பட்ட சொத்துக்கு மீண்டுமொரு முறை வரி விதிப்பது நியாயமாக இருக்காது என்றும் குறிப்பிடுகின்றனர்.

Comments