ஆண்டி முகர்ஜி
ப்ளூம்பெர்க்
பிறக்கின்ற குழந்தைக்கு பிறந்து ஐந்து வயது வரையிலும்
உயிர்வாழக் கிடைக்கும் வாய்ப்பு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தையைக் காட்டிலும் தென்னிந்தியாவில்
கேரளாவில் கூடுதலாகவே இருக்கிறது. ஆனால் வட இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் அந்த
நிலைமை ஆப்கானிஸ்தானைக் காட்டிலும் மிக மோசமாக இருக்கிறது.
தனக்கான அடுத்த அரசைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்காக
ஓரிரு வாரங்களில் இந்தியா தேர்தலுக்குச் செல்லவிருக்கும் நிலையில், பண்டிதர்களின்
கவனம் முழுக்க நிலத்தால் சூழப்பட்ட வறுமை நிறைந்த வடக்குப் பகுதியில் ஹிந்து
தேசியவாதப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றப் போகின்ற மயக்க வைக்கும் பேச்சுகள் மீதே
இருக்கப் போகிறது. அந்தத் தலைவரை, அவரது பாரதிய ஜனதா கட்சியை நாட்டின் தெற்குப்
பகுதி முழுமையாக நிராகரிப்பதால் நாட்டின் ஒட்டுமொத்த முடிவு மாறப் போவதில்லை
என்பதால் அவர்கள் நிச்சயம் தென்பகுதியைப் புறந்தள்ளியே வைக்கப் போகிறார்கள்.
உண்மையில் அது பெரும் தவறாகவே இருக்கும்.
அங்குள்ள மக்கள் எண்ணிக்கை காரணமாக வடக்கு அதிகப் பிரபலத்துடன்
இருக்கிறது. பிரேசிலைக் காட்டிலும் அதிக
மக்கள்தொகை கொண்ட, கீழமை-சஹாரா ஆப்பிரிக்காவைக் காட்டிலும் மிகவும் ஏழ்மையான
உத்தரப்பிரதேச மாநிலத்தைக் கட்டுப்படுத்துகிறவர்களுக்கே இந்திய ஒன்றிய
நிர்வாகத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.
வலிமையான அந்த மனிதருக்கு உத்தரப்பிரதேசமும், அதன் அண்டை மாநிலங்களும் மூன்றாவது
முறையாக வாய்ப்பை வழங்கிடத் தயாராக இருக்கின்றன என்பதில் கிட்டத்தட்ட ஒருமித்த
கருத்து நிலவி வருகிறது. தங்களுடைய தலைவர்களைச் சிறையில் அடைத்து, தங்கள் நிதியை
முடக்கி வைப்பதன் மூலமாக தேர்தலை வெல்வதற்கு அந்தத் தலைவர் தயாராகி வருகிறார் என எதிர்க்கட்சிக்
கூட்டணி குற்றம் சாட்டுகிறது. மோடி 3.0 ஆட்சியில் இந்தியாவின் மதச்சார்பற்ற
அரசியலமைப்பு முற்றிலும் தலைகீழாக மாறி விடும் என்ற அச்சம் அந்தக் கூட்டணியிடம்
இருக்கிறது. அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று பிரதமர் மறுக்கின்ற போதிலும்,
ஹிந்து ராஷ்டிரம் அல்லது தேசிய-அரசு போன்ற சொல்லாடல்கள் வடக்கில் நன்றாகவே வேலை
செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை.
இந்தியாவின்
வளமான தெற்கைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக மக்கள் வறுமை நிறைந்த வடக்கில்
உள்ளனர்
ஆதாரம்:
இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான
மக்கள்தொகை கணிப்புகள்
அத்தகைய விளைவை உருவாக்குவதற்கான வாய்ப்பு தெற்கை அச்சத்தில் தள்ளுகிறது. மத்திய இந்தியா வழியாக 675 மைல் நீளத்திற்குப் பரவியிருக்கும் மலைத்தொடர் இப்போது வெறுமனே புவியியல் சார்ந்த இடைவெளியாக மட்டும் இருக்கவில்லை. வாக்காளர்கள் அரசிடமிருந்து எதைப் பெற விரும்புகிறார்கள் என்பதற்கும், அவர்கள் அரசிடமிருந்து எதைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கும் இடையே உள்ள இடைவெளி மோடியின் பத்தாண்டு கால துருவமுனைப்பு ஆட்சியில் அதிக அளவிற்கு அதிகரித்துள்ளது. முக்கியமாக பொருளாதார வளம், சமூக முன்னேற்றம் குறித்து நாட்டின் தென்பகுதி கொண்டுள்ள அக்கறைகளுக்கான இடம் வடக்கே சிறிதளவிலும் காணப்படவில்லை. மோடி அங்கே நம்பிக்கைக்கான வெற்றிடத்தை உருவாக்கிடவில்லை என்றாலும் மக்கள் வாழ்வில் உள்ள ஓட்டையை அவர் மதவெறி கொண்டு அடைத்து வைத்துள்ளார். அந்த மதவெறி ஹிந்து அல்லாத மதங்களைச் சேர்ந்தவர்களை - குறிப்பாக பதினான்கு சதவிகித மக்கள்தொகையைக் கொண்ட முஸ்லீம்களைத் துன்புறுத்துவதில் வெளிப்படுகிறது. பெரும்பான்மைவாதத்திற்கு கிடைக்கப் போகின்ற மற்றுமொரு ஐந்தாண்டு கால ஆட்சி இந்திய நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை முழுமையாகச் சிதைத்து, 140 கோடி மக்களுடன் பன்மைத்துவ, தடையற்ற சந்தை ஜனநாயகமாக இருந்து வருகின்ற அதன் எதிர்காலத்தை ஆபத்தில் தள்ளி விடக் கூடும்.
உலக முதலீட்டாளர்கள் இந்தியாவை மதிக்கும் வகையில்
நாட்டில் இருக்கின்ற நவீனமான, வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் பெரும்பகுதி
மிகவும் வெளிப்படையான, சகிப்புத்தன்மை கொண்ட தெற்கில்தான் உயிர்வாழ்கிறது. அங்கே பல
தசாப்தங்களாக நடந்துள்ள சமூக சீர்திருத்தங்கள் ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என்று
மூன்று முக்கிய மதங்களைப் பின்பற்றுபவர்களிடையே குடிமை உணர்வுகள் மலர்வதற்கு வழிவகுத்துக்
கொடுத்துள்ளன. அங்கே குறிப்பிடத்தக்க அளவிற்கு மக்களுடைய வாழ்க்கைத் தரம்
அதிகரித்துள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மோடி முதலமைச்சராக இருந்த நாட்டின்
மேற்கு மாநிலமான குஜராத் மாநிலத்தின் மக்கள்தொகையில் பன்னிரண்டு சதவிகிதம் பேர் ஏழைகளாக
இருப்பதாக கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. அதுபோன்றதொரு நிலையில் வறுமையில்
உழல்பவர்களின் எண்ணிக்கை இரண்டு சதவிகிதம் என்ற அளவிலே இருக்கின்ற தமிழ்நாடு
மோடினோமிக்ஸ் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்க வேண்டிய தேவையே இல்லை.
காலங்காலமாக வடக்கிற்கு முன்னேற்றங்கள் மறுக்கப்பட்டு
வந்துள்ளன. அதுபோன்ற நிலைமையில் நாட்டின் அந்தப் பகுதி முன்னேற்றத்தை நம்புவதையே
நிறுத்திக் கொண்டு விட்டது. பெரும்பான்மைச் சமூகம் இறுதி நாகரிக இலக்காக தனது மத அடையாளத்தைத் தீவிரமாக நிலைநிறுத்திக்
கொள்ளப் பார்க்கிறது. அங்கே இருப்பவர்கள் பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த மசூதியை
1992ஆம் ஆண்டு கூடிய கும்பல் இடித்துத் தள்ளிய அதே இடத்தில் கட்டப்பட்டிருக்கும்
ஹிந்துக் கோவிலை திறந்து வைத்த மோடியை ஒரு மீட்பர் எனவே காண்கின்றனர். தாஜ்மஹாலுக்காகப் பெயர் பெற்று மலர்ந்த முகலாய வம்சத்தின்
வெற்றிகளுக்குப் பழிவாங்குவதன் மூலம் காயப்பட்டுப் போன தங்கள் பெருமையை
மீட்டெடுக்க அவர் வந்திருப்பதாகவும் அவர்கள் காண்கின்றனர். இலவச உணவு, வங்கிக்
கணக்கில் சிறிதளவு பணம் ஆகியவற்றை மக்களுக்கு பிரதமர் தருவதை அவர்கள் போனஸாகக்
கருதுகின்றனர். வடக்கே வாழும் குடிமக்கள் தாங்கள் ‘லாபர்த்தி’ (ஹிந்தியில் பயனாளி
என்று பொருள்படும்) ஆகியிருப்பதிலேயே திருப்தி கொண்டிருக்கிறார்கள்.
ஐந்து இந்திய
தென் மாநிலங்கள் வளர்ச்சியை விரும்புகின்றன - ஆனால் ஏழ்மை நிரம்பிய வடக்கே நாடாளுமன்றத்தில்
பெருத்த குரலுடன் இருக்கிறது.
ஆதாரம்:
தேசிய பல பரிமாண வறுமைக் குறியீடு
ஆக்கிரமிப்பதைக் காட்டிலும் கடல்வழி வணிக நோக்குடன்
மட்டுமே இஸ்லாம் வந்து சேர்ந்த தென்பகுதி தனக்கென்று பல பிரமாண்ட கோவில்களைக்
கொண்டு, நூற்றாண்டுகளாக விளிம்புநிலை மக்களின் வழிபாட்டு உரிமைகளை நிலைநாட்டி
வந்திருந்தது. அந்த நிலையில் இன்னொரு கோவில் குறித்து உருவாக்கப்பட்ட சர்ச்சையை அதனால்
புரிந்து கொள்ளவே முடியவில்லை. பெரியார் என்று அழைக்கப்பட்ட ஈ.வெ.ராமசாமியின்
தலைமையில் அப்படித்தான் 1925ஆம் ஆண்டில் ஹிந்து மதத்தின் சாதிப் படிநிலை அமைப்பை
எதிர்த்து தனது சமூகத்தை தமிழ்நாடு ஜனநாயகப்படுத்தத் தொடங்கியது.
ஆங்கிலேயர்களிடமிருந்து 1947ஆம் ஆண்டு இந்தியா
சுதந்திரம் பெற்ற பிறகு, விவசாய நிலங்கள் அதிக அளவில் மறுபங்கீடு செய்யப்படப்
போவதில்லை என்பதை தமிழ்நாடு மிக விரைவிலேயே புரிந்து கொண்டது. நிலவுடைமையாளர்களுக்கான
நலன்கள் அதிக ஆற்றல் மிக்கவையாக இருந்த நிலையில் அரசியல் கட்சியைத் தோற்றுவித்த
பெரியாரின் சுயமரியாதை இயக்கம் கல்வி, சுகாதாரம், விவசாயம் சாராத வேலைகள் மக்களுக்குக்
கிடைப்பதை விரிவுபடுத்துகின்ற முடிவை மேற்கொண்டது. நவீனமயமாகும் பொருளாதாரத்தில் அவை
சமூக நீதியை அடைவதற்கான பாதைகளாக இருக்கும் என்பதை அந்த இயக்கம் மிகச் சரியாகக்
கணித்தது.
அதுவே ‘திராவிட மாடல்’ என அறியப்பட்டது என்று அதே
பெயரில் புத்தகத்தை எழுதியுள்ள ஆசிரியர்கள் விளக்குகின்றனர். அவர்களுடைய மொழிக்கான
தமிழ்ப் பெயரின் ஏழாம் நூற்றாண்டு வழித்தோன்றலாகவே திராவிடம் என்ற சொல்
இருக்கிறது. மொழியியல் சார்ந்த பெருமை திராவிடக் கொள்கைகள், அரசியல்வாதிகளுக்கு மக்கள்
ஆதரவைப் பெற்றுக் கொடுத்தாலும், பொருளாதார மாடலே பெரும்பாலும் பொது அறிவாக இருக்கிறது.
உண்மையில் நகர்ப்புற, முதலாளித்துவப் பொருளாதாரத்திற்குள் மூழ்குவதற்கான திட்டம்
எதுவும் வடக்கிலிருக்கும் தாழ்த்தப்பட்டவர்களின் பாதுகாவலர்களிடம் இல்லாததால் அந்த
தந்திரத்தை வடக்கு தவற விட்டு விட்டது. முடிவுகள் அதையே காட்டுகின்றன. பதினெட்டு
முதல் இருபத்தி மூன்று வயதுக்குட்பட்டவர்களில் கிழக்கே பீகாரில் பதினேழு சதவிகிதம்
பேர் மட்டுமே உயர்கல்வி பயின்று வரும் நிலையில், அதைக் காட்டிலும் மிக அதிகமாக நாற்பத்தியேழு
சதவிகிதத்திற்கும் அதிகமானோர் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
அதிக அளவிலான வறுமை, மிக மோசமான
கல்வியுடன் பீகார் போராடி வருகிறது
மாவட்ட மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில் நான்கில் ஒரு
பகுதியைப் பணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்வோருக்கு ஒதுக்கிட மத்திய
இந்தியாவில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலம் முனைகிறது. தனிப்பட்ட வசதிகளைப் பணம்
கொடுத்து வாங்க முடியாத பழங்குடிச் சமூகங்கள், நகர்ப்புற ஏழைகளைப் பொருத்தவரை அதுபோன்ற
முடிவு கிட்டத்தட்ட விதிக்கப்பட்ட மரண தண்டனையாகவே இருக்கிறது. தமிழ்நாடு மாநிலம்
1990களில் பொது சுகாதாரத்தில் செலவுகளைக் குறைத்தது என்றாலும் பற்றாக்குறையை அது முற்றிலுமாக
நீக்கியது. மாநிலத்தின் சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த ஆர்.பூரணலிங்கம் தரமான
மருந்துகள் கொள்முதலை அப்போது மையப்படுத்தினார். செலவுகள் குறைந்தன. மருந்துகள்
கிடைப்பது அதிகரித்தது. மாநிலத்தின் உற்பத்தியில் அதிக அளவு தொகையை வட மாநில
அரசுகள் சுகாதாரத்திற்காக ஒதுக்கின. ஆனாலும் தமிழ்நாட்டில் மக்களுடைய மருத்துவச்
செலவுகள் உத்தரப்பிரதேச மாநிலத்தைக் காட்டிலும் இருபத்தி நான்கு சதவிகிதம்
குறைவாகவே இருந்தன. ‘மனித மூலதனத்தை அதிகரித்துக் கொள்வதற்கான இரண்டு முக்கிய
துறைகளான கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தக் கூடிய அரசியல்வாதிகள் வடக்கை
ஆள வேண்டும்’ என்று பூரணலிங்கம் சமீபத்தில் ஒரு பயணத்தின் போது என்னிடம் கூறினார்.
கேரளா, தமிழ்நாடு இரண்டு மாநிலங்களும் மிகவும் நெருங்கிய
தொடர்புடையவை. குழந்தை மருத்துவ நிபுணரான ஆண்டனி கொல்லனூரை நான் கேரளாவில் சந்தித்தேன்.
யுனிசெஃப் முன்னாள் அதிகாரியான அவர் போலியோ ஒழிப்பு, குழந்தைகள் உயிர்வாழ்தல்,
பாதுகாப்பான தாய்மை போன்ற முக்கிய பிரச்சாரங்களில் நாடு முழுவதும் பணியாற்றியவர். வடக்கே
உள்ள பெண்கள் பொதுவெளியில் கூட்டங்களில் பேசுவதில்லை என்பதை அப்போது அவர் என்னிடம்
நினைவு கூர்ந்தார். ஆனால் கேரளாவில் அவரது சொந்த ஊரில் தங்களுடைய மதம் அல்லது
பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் உண்மைகள், புள்ளிவிவரங்கள் மற்றும்
பொறுப்புக்கூறல்களுடன் தீவிரமான விவாதங்களில் பெண்கள் பங்கேற்பது வடக்கே பெண்களின்
நிலைமையிலிருந்து முற்றிலும் வித்தியாசமாகவே இருக்கிறது. வாக்காளர்கள் கல்வியறிவு
இல்லாமல் இருக்கும் போது - உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொல்லனூர் காலத்தில் போலியோவால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கையில் செய்ததைப் போல, மிக
சமீபத்தில் அதே மாநிலத்தின் கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை, ஆக்சிஜன் பற்றாக்குறை
குறித்த தகவல்களில் செய்ததைப் போல அதிகாரிகள் பொய்களைக் கூறி உண்மைகளை
மூடிமறைக்கிறார்கள்.
கொல்லனூர் என்னை கொச்சியில் தனது வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள
சமுதாய சுகாதார நிலையத்திற்கு வருமாறு அழைத்தார். இந்தியாவின் தென்மேற்கு
கடற்கரையில் அமைந்துள்ள அந்த துறைமுக
நகரம் கி.பி.1500ஆம் ஆண்டில் நாட்டில் ஐரோப்பியக் குடியேற்றத்திற்கான முதல் இடமாக
இருந்தது. மீன்பிடிச் சமூகத்திற்கு ஆதரவளித்து வருகின்ற அந்த நகரம் மருத்துவர்கள்,
செவிலியர்கள், மருந்துகள், படுக்கைகள், நவீன நோயறிதல் வசதிகள், தீவிர
நோய்த்தடுப்புத் திட்டம், பல் மருத்துவத் துறை ஆகியவற்றுடன் அமைந்துள்ளது. வடக்கே உள்ள மக்கள் மருத்துவச் சேவைக்காக தனியார்
நிறுவனங்களை நோக்கித் தள்ளப்படுகின்ற நிலைமையில், மருத்துவச் சேவை இலவச பொதுச்
சேவையாக கேரளாவில் மக்களுக்குக் கிடைக்கிறது. (தில்லி மாநிலத்தின் முதலமைச்சராக
தெற்கின் மாடலைப் பின்பற்ற முயன்ற வடநாட்டு அரசியல்வாதியான அரவிந்த் கெஜ்ரிவால்
தேர்தலுக்கு முன்பாக ஒன்றிய அரசின்
அமைப்புகளால் கைது செய்யப்பட்டார்).
தெற்கின் மனநிலை இருண்டு போயுள்ளது. தியாகராஜன்
நியூயார்க் மற்றும் சிங்கப்பூரில் பணிபுரிந்த முதலீட்டு வங்கியாளர் ஆவார். தற்போது
தமிழ்நாடு மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருக்கும் தியாகராஜன்
ஒருசார்பாக நாட்டின் வளங்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்து எழுகின்ற கேள்விகளில்
முதன்மையான குரலாக இருக்கிறார். மத்திய அரசின் வரி வருவாயை தமிழ்நாடு, கேரளா,
கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய ஐந்து தென் மாநிலங்களைக் காட்டிலும்
உத்தரப் பிரதேச மாநிலமே அதிகம் எடுத்துக் கொள்கிறது.
மோடியின்
பாஜகவால் ஆளப்படும் வடக்கில் தனிநபர் உள்நாட்டு உற்பத்தி தெற்கில் அவரது கட்சி
ஆட்சியில் இல்லாத எந்தவொரு மாநிலத்தைக் காட்டிலும் பெரும்பாலும் மிகக் குறைவாகவே
உள்ளது.
ஆதாரம்: இந்திய புள்ளியியல் மற்றும்
திட்ட அமலாக்க அமைச்சகம்
குறிப்பு: பாஜக பீகாரில் ஆளும்
கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. 2022-23 நிதியாண்டில் அமெரிக்க டாலர் விலை 80.4 ரூபாயாக இருந்தது.
வடக்கே செல்லும் பணத்தைக் கண்டு மனக்கசப்பு கொண்டவராக தியாகராஜன்
இருக்கவில்லை. அவ்வாறு செல்லும் பணம் அங்கே வாழ்க்கைத் தரத்தில் எந்தவொரு
ஒருங்கிணைப்பையும் உருவாக்கிடவில்லை என்ற கவலையே அவருக்கு இருக்கிறது.
தியாகராஜனின் மதிப்பீட்டில் உத்தரப்பிரதேச மாநிலம் தமிழ்நாட்டைக் காட்டிலும்
இரண்டு சதவிகிதப் புள்ளிகள் மெதுவாகவே வளர்கிறது. தென் மாநிலத்தைக் காட்டிலும்
இரண்டு சதவிகிதப் புள்ளிகள் வேகமாக விரிவடையும் போது அறுபத்தி நான்கு ஆண்டுகளில் அந்த
மாநிலம் தமிழ்நாட்டிற்கு இணையான தனிநபர் வருமானத்துடன் இருக்கும் என்கிறார்.
ஹைதராபாத்
அமேசான் வளாகம். வறுமையான வடக்கிலிருந்து
முற்றிலும் விலகியுள்ள உலகம்
பொருளாதாரரீதியான போட்டி முடிவடைந்து விட்டது என்றாலும்
சமூக ரீதியாக தான் முன்னேற வேண்டியுள்ளதாகவே வடக்கு இன்னும் கருத வேண்டியுள்ளது.
வடபகுதி தனது உபரி உழைப்பாற்றலை தெற்கிற்கு அனுப்புவதால் மொழி, மதம், சாதி,
பாலினம் சார்ந்த பேரினவாதத்தை விட்டு அந்தத் தொழிலாளர்கள் வெளியேற வேண்டியுள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பெறுகின்ற தனது ஊதியத்தைக் கொண்டு பீகார்
கிராமப்புறத்தில் உள்ள தனது குடும்பத்தைக் கவனித்து வர அர்ஜுன் யாதவ் முயன்று
வருகிறார். தங்களுக்கான சிறிதளவு நிலத்தில் கடந்த ஆண்டு மேற்கொண்ட நெல் அறுவடைக்குப்
பிறகு மீண்டும் ஓட்டுநர் வேலைக்கு அவர் செல்வதை அவரது மனைவி விரும்பவில்லை.
தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள்
தாக்கப்படுவதாக போலியான செய்திகள் வெளியாகி விரைந்து பரவின. அந்த தொழிலாளர்களின்
பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொடுக்கும் வகையில் தியாகராஜனின் தலைவரும், மாநில
முதலமைச்சருமான - திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவரான அவரது தந்தையால் சோவியத்
தலைவரின் பெயரால் பெயரிடப்பட்ட - மு.க.ஸ்டாலின் தலையிடும் அளவிற்கு அந்தப்
பிரச்சனை தீவிரமானது. தவறான தகவல்களை பரப்பியதற்காக யூடியூபர் ஒருவர் கைது
செய்யப்பட்டார். யாதவ் மீண்டும் சென்னை திரும்பினார்.
வட இந்தியத் தொழிலாளர்களைச் சந்தித்த தமிழ்நாட்டு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழிலாளர்களை அனுப்பி
வைப்பதில் மிக முக்கிய மாநிலமாக நீண்ட காலமாக இருந்து வரும் கேரள மாநிலம் அங்குள்ள
படித்த இளைஞர்கள் கோவிட் தொற்றுநோய்க்குப் பிறகு புதிய அலையாக மேற்குலக
நாடுகளுக்குக் குடியேறுவதை எதிர்கொண்டு வருகிறது. முழுமையான கல்வியறிவு,
பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவை கேரளாவில் கருவுறுதல் விகிதத்தை வெகுவாகக் குறைத்துள்ள
நிலையில் வடக்கே இருந்து மாநிலத்திற்கு வந்து குடியேறுபவர்களுக்குப் பாதுகாப்பான
சூழலை வழங்குவதன் மூலம் தனக்குத் தேவைப்படும்
தொழிலாளர்களை உருவாக்கிக் கொள்வது - அதாவது முஹம்மது தில்ஷத் போன்ற
வெற்றிக் கதைகளை உருவாக்குவது - மாநிலத்திற்கான பெரும் சவாலாக உள்ளது. பீகாரைச்
சார்ந்த படிப்பறிவற்ற முஸ்லீம் தொழிலாளி ஒருவரின் மகனான தில்ஷாத் கேரள உள்ளூர்
மொழியில் தேர்ச்சி பெற்று 2019ஆம் ஆண்டு மாநில
உயர்நிலைப் பள்ளித் தேர்வில் முதலிடம் பிடித்தார். வடக்கில் உள்ள இன்னும்
பல தில்ஷாத்களின் வாழ்க்கை அவர்களது பெற்றோரிடமிருந்து வேறுபட்டு இருக்கப்
போவதில்லை.
தில்ஷத் தன்னுடைய தந்தையுடன்
கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூரு இந்தியாவின் தொழில்நுட்ப
நகரமாக விளங்கி வருகிறது. அங்கே முனைவர் பட்டம் பெற்ற பெண் பொறியாளர் ஒருவரை -
தெற்கே உள்ள தனது கிராமத்தில் இருந்து முதன்முதலாக வந்திருப்பவர், டொயோட்டா
ப்ரியஸ் காரைப் போல மின்சாரத்தைப்
பயன்படுத்தி வானில் பறக்கும் விமானங்களை இயக்குகின்ற சவாலை எதிர் கொண்டவர் - நான் சந்தித்தேன். அதற்கு முற்றிலும் மாறாக உத்தரப்பிரதேச
மாநில பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்களால் சுதந்திரத்தைக் கையாள முடியாது,
அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என்றே நம்புகிறார்.
தேர்தலில் மோடிக்கு முக்கிய சவாலாக இருக்கும் காங்கிரஸ்
கட்சி வேலைவாய்ப்பில் பெண்கள் நுழைவதில் தடைகள் இருப்பதை அங்கீகரிக்கிறது. கடந்த
ஆண்டு நடைபெற்ற கர்நாடகா மாநிலத் தேர்தலில் பாஜகவிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிக்
கொண்ட காங்கிரஸ் அரசுப் பேருந்துப் பயணங்களை பெண்களுக்கு இலவசமாகத் தந்தது.
பிரதமர் மோடியோ ‘இலவசங்கள்’ சரியான அரசுக்
கொள்கை கிடையாது என்கிறார். ஆனால் பணியில் இல்லாத இந்தியப் பெண்களில் நான்கில்
மூன்று பேரை வெளியில் கொண்டு வருவதற்கு உதவியாக இருக்குமென்றால், அவர்களுடைய பயணத்திற்காகச்
செலவிடுவது வீணாகி விடப் போவதில்லை.
தமிழ்நாடு, கேரளாவில் உள்ள வாக்காளர்கள் பாஜகவை
நிராகரிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சிக்கான வெற்றி மற்ற
தென் மாநிலங்களிலும் குறைவாகவே இருக்கும். கருத்துக்கணிப்பாளர்களின் கணிப்புகளில் அதுபோன்ற
முடிவுகளே சுட்டிக் காட்டப்படுகின்றன. இருப்பினும்
நாடாளுமன்ற மக்களவையில் உள்ள பீகாரின் நாற்பது இடங்களை உத்தரப்பிரதேசத்தின் எண்பது
இடங்களுடன் சேர்த்தால், இந்த ஆண்டு புது தில்லிக்கு ஐம்பத்தொன்பது நாடாளுமன்ற
உறுப்பினர்களைப் அனுப்பப் போகும் தமிழ்நாடு, கேரளாவைக் காட்டிலும் இரண்டு மடங்கு
வலுவான அரசியல் பிரதிநிதித்துவம் அவர்களுக்கு இருப்பதால் அவர்கள் தெற்கை ஒரு
பொருட்டாகவே கருதப் போவதில்லை. 2029ஆம் ஆண்டில் புதிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப்
பின்னர் 545 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் விரிவாக்கப்படும் போது தெற்கின்
குரல் இன்னும் நலிந்து போகும் வாய்ப்பே அதிகம் உள்ளது.
ஏற்கனவே ஒன்றிய அரசின் அத்துமீறலால் தென்பகுதியின் முன்னேற்றம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. கேரளாவில் உள்ள மாநில அரசுடன் மோடி நிர்வாகம் முரண்படுகிறது. நான் சென்றிருந்த அந்த மருத்துவ மையத்தின் பெயரை ‘ஆரோக்கியத்திற்கான சிறந்த கோவில்’ என்று மாற்றிட புது தில்லி விரும்பியிருக்கிறது.
கேரள மாநிலம் 1957ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டுகள் தேர்தலில்
வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் மாநிலமாக இருக்கிறது. கோவில் என்று ஏன் அதனை அழைக்க வேண்டும் என
மாநிலத்தின் சுகாதார அமைச்சர் கேள்வியெழுப்புகிறார். கோவிட்-19 தொற்றுநோயைக்
கையாண்ட விதத்தில் உலக அளவிலே பாராட்டுகளைப் பெற்ற தற்போதைய மார்க்சிஸ்ட்
அரசாங்கம் ஒன்றிய அரசின் கருத்திற்கு அடிபணிய மறுக்கிறது. மருத்துவ மையம் என்று
கூறுவதில் என்ன தவறு இருக்கப் போகிறது? மோடி அரசை கர்நாடகா, கேரளா ஆகிய இரு
மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்துக்கு இழுத்துள்ளன. பேரழிவைத் தந்திருக்கும்
வறட்சியைச் சமாளிப்பதற்கான ஒன்றிய அரசின் நிதியைத் தராதது குறித்து கர்நாடகா
மாநிலம் கசப்புணர்வுடன் இருக்கையில், தான் இயற்றிய சட்டங்கள் அரசியலமைப்பிற்கு
முரணாக ஏன் தடுக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ள கேரள மாநிலம் விரும்புகிறது.
பிரதமரின் அட்டை கட்அவுட்டுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும்
வகையில் ரேஷன் கடைகளில் மோடி செல்ஃபி பாயிண்ட்டுகளை வைக்க கேரள மாநிலம்
மறுத்திருக்கிறது.
ஆனால் இந்தியாவின் மோடி எதிர்ப்பிற்கான கோட்டையாக
ஆப்பிள் நிறுவனத்திற்காக ஐபோன் 15s ஐ உருவாக்குகித் தருகின்ற தமிழ்நாடு மாநிலம்
இருக்கிறது. நாட்டின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முப்பது
சதவிகிதம் அதிகமாக தமிழ்நாட்டில் உள்ளது. சமீபத்திய முதலீடுகள் மோடியின் சொந்த
மாநிலமான குஜராத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உருவாக்கப்பட்ட போதிலும்
இந்தியாவின் வளர்ச்சி குன்றிய உற்பத்தி தமிழ்நாட்டில்தான் நன்கு ஆரோக்கியமாக வளர
முடியும். அதற்கான காரணம் மிக எளிமையானதாக இருக்கிறது - குஜராத்தைக் காட்டிலும்
தமிழ்நாடுதான் தாங்கள் விரும்பியவாறு சாப்பிட, பிரார்த்தனை செய்ய, காதலிப்பதற்கு
தனிநபர்களை அனுமதிக்கிறது. சந்தை விலைகளைச் செலுத்தி பாதுகாப்பு வசதிகள் கொண்ட
அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க முடியாத உடலுழைப்பைச் செலுத்தி வேலை செய்யும்
தொழிலாளர்களுக்கு அந்த மாநிலமே விடுதலையைத் தருகிறது.
சென்னையில்
ரெனால்ட் கார் தயாரிப்பு நிறுவனம்
ஆழ்ந்து மதம் சார்ந்திருக்கும் நாட்டிலும் வளர்ச்சிக்கான
மற்றொரு பாதைக்கான சாத்தியம் இருப்பதைக் காண முடியாமல் சாதி ஏணியின் அடிக்கட்டையில்
உள்ள பெண்கள், சிறுபான்மையினர் மற்றும் குழுக்களை ஒடுக்கி வைக்கின்ற சமூகப்
படிநிலை என்ற பழமையான கருத்தாக்கங்களுக்குள் இந்தியாவின் வடக்குப் பகுதி மூழ்கிக்
கிடக்கிறது. ஆனால் முதலீட்டாளர்களுக்கு இந்த வித்தியாசங்கள் நன்கு தெரியும்.
ஹிந்துப் பெண்களைக் காதலித்ததற்காக இஸ்லாமிய இளைஞர்களை தண்டிக்கும் வகையில் ‘லவ்
ஜிஹாத்’ சட்டங்களைப் பிரகடனப்படுத்துகின்ற
அரசியல்வாதிகள் மற்றும் தேவாலயங்களைத் தாக்குகின்ற விழிப்புணர்வுக் குழுக்கள்
இருக்கின்ற பிராந்தியத்தை அவர்களில் யார் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்?
பதினான்கு சதவிகிதம் உள்ள முஸ்லீம்கள், இரண்டு சதவிகிதம் என்ற எண்ணிக்கையில் இருக்கின்ற கிறிஸ்தவர்களிடமிருந்து இந்தியாவில் எண்பது சதவிகிதம் அளவிற்கு இருக்கின்ற ஹிந்து மக்களுக்கு பாதுகாப்பு தேவைப்படாது என்பது மிக எளிய உண்மையாகும். உண்மையில் அந்த ஹிந்து மக்கள் மோசமான கல்வி, பொது சுகாதாரம், அதிக வேலையின்மை, மிகவும் மோசமாக நசுக்கிப் பிழியும் வறுமை ஆகியவற்றிடமிருந்து காப்பாற்றப்படப்பட வேண்டியவர்களாகவே இருக்கின்றனர்.
ஜூன் நான்காம் நாள் வெளியாகப் போகும் தேர்தல் முடிவுகள் முட்டாளாக்கப்
போகின்றன என்பதை நன்கு அறிந்திருந்தும் வடக்கில் வளர்ந்த என்னைப் போன்ற இந்தியன் ‘மாற்றம்
என்பது இன்னும் சாத்தியம்’ என்ற நம்பிக்கை கொள்ளவே விரும்புகிறான். அதற்குக்
காரணம் எனது சொந்த ஊரைச் சேர்ந்த வாக்காளருக்கு கேரளாவில் இருப்பதைப் போன்ற மருத்துவமனைக்குள்
கால் வைப்பதற்கான வாய்ப்பே கிடைக்கப் போவதில்லை. மேலும் உத்தரப்பிரதேசத்தில்
புதிதாகப் பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஐந்து வயதுக்கு முன்பாகவே இறக்கப் போகின்ற
அந்த அறுபது குழந்தைகள் வாக்களிக்க ஒருபோதும் வரப் போவதில்லை.
Comments