1977ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு தற்போதைய 2024ஆம் ஆண்டு தேர்தல் இந்தியாவைப் பொருத்தவரை மிக முக்கியமான தேர்தலாக இருக்கப் போகிறது
ராமச்சந்திர குஹா
ஸ்க்ரோல் இணைய இதழ்
நாட்டின் பதினெட்டாவது பொதுத் தேர்தலில் இந்தியர்கள் வாக்களிக்கத்
தொடங்கியுள்ளனர். இதற்கு முன்பாக நடைபெற்றுள்ள பதினேழு தேர்தல்களில் இரண்டு
தேர்தல்கள் மிக முக்கியமானவையாக உள்ளன. அந்த இரண்டு தேர்தல்களில் ஒன்றாக 1951-1952இல்
நடைபெற்ற நாட்டின் முதலாவது பொதுத் தேர்தல் இருக்கிறது. அந்த முதல் முயற்சி இந்தியர்கள்
மிக ஏழ்மையானவர்கள், தங்களுக்குள்ளாகப் பிளவுபட்டிருப்பவர்கள், தங்களுக்கான
தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையைப் பெற முடியாத அளவுக்கு
கல்வியறிவற்றவர்கள் என்ற நம்பிக்கையுடன் சந்தேகத்துடன் இருந்தவர்களால்
கேலிக்குள்ளானது.
மிகுந்த தயக்கத்துடன் இந்திய ஒன்றியத்துடன் இணைந்திருந்த
மகாராஜா ஒருவர் தங்கள் பகுதிக்கு வந்திருந்த அமெரிக்கத் தம்பதிகளிடம் ‘படிப்பறிவில்லாததொரு
நாட்டில் அனைவருக்குமான வாக்குரிமையை அனுமதிக்கும் எந்தவொரு அரசியலமைப்பும்
பைத்தியக்காரத்தனத்துடனே இருக்கும்’ எனக் கூறியிருந்தார். மெட்ராஸ்
பத்திரிகையாசிரியர் ஒருவர் ‘முதல்முறையாக மிகப்பெரும்பான்மையினர் தங்கள் வாக்குகளைப்
பயன்படுத்தப் போகின்றனர். அவர்களில் பலருக்கும் வாக்கு என்றால் என்ன, ஏன்
வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி எதுவும் தெரியாது.
இந்த சாகசத்தை வரலாற்றில் மிகப்பெரிய சூதாட்டம் என மதிப்பிடுவதில் ஆச்சரியப்பட
எதுவுமில்லை’ எனக் குறைபட்டுக் கொண்டார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் (ஆர்எஸ்எஸ்)
அமைப்பின் வார இதழான ஆர்கனைசர் பத்திரிகை ‘இந்தியாவில் வழங்கப்பட்டிருக்கும் வயது
வந்தோர் அனவருக்குமான வாக்குரிமையின் தோல்வியை ஒப்புக்கொள்ளும் வரை பண்டிட் நேரு
உயிருடன் இருப்பார்’ என இறுமாப்புடன் எழுதியிருந்தது.
ஆனாலும் அந்தச் சூதாட்டம் நன்றாகவே வேலை செய்தது. பல்வேறு
சித்தாந்தக் கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தி பல்வேறு கட்சிகள், தனிநபர்கள் அந்தத்
தேர்தலில் போட்டியிட்டனர். வயது வந்த ஆண்கள், பெண்கள் என்று அனைவரும் அவர்களிலிருந்து
தங்களுக்கு வேண்டியவரை சுதந்திரமாகத் தேர்வு செய்து கொண்டனர். அந்த முதல் தேர்தலை
வெற்றிகரமாக நடத்தி முடித்த செயல் இந்திய வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது.
1952ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிகளை பின்னர் 1957, 1962, 1967,
1971ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தன.
வெளிப்படையான, போட்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து
சர்வாதிகார ஆட்சியின் கீழ் வந்திருந்த எண்ணற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் வரிசையில்
இந்தியாவை இடம் பிடிக்க வைத்தது என்றே பிரதமர் இந்திராகாந்தி 1975ஆம் ஆண்டு ஜூன்
மாதம் நெருக்கடிநிலையை அமல்படுத்திய செயல் பலராலும் கருதப்பட்டது. அதன் காரணமாகவே 1977ஆம்
ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தல் இந்திய வரலாற்றில் இரண்டாவது
முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படுகிறது. 1976ஆம் ஆண்டின் பிற்பகுதியில்
தெருக்கள் அனைத்தும் அமைதியாக இருந்ததை எனது தனிப்பட்ட அனுபவத்திலிருந்து என்னால்
உறுதியுடன் கூற முடியும். அப்போது இந்திராகாந்தியின் ஆட்சிக்கு எந்த வகையான சவாலோ
அல்லது அச்சுறுத்தலோ இருக்கவில்லை. நெருக்கடிநிலையை அகற்றி விட்டு புதிய தேர்தலுக்கான
அழைப்பை விடுப்பதற்கான தேவையும் அப்போது இருக்கவில்லை. ஆனாலும் இந்திராகாந்தி
அதைச் செய்தார்.
1977ஆம் ஆண்டு தேர்தலின் மூன்று முக்கிய அம்சங்கள்
கவனிக்கத்தக்கவையாக உள்ளன என்று வரலாற்றாசிரியர்கள் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
முதலாவது அந்த தேர்தல் நடத்தப்பட்டது. இந்திரா காந்தி வெற்றி பெறுவார் என்று
பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கருத்துக் கணிப்பாளர்களைக் குழப்பிய தேர்தல் முடிவுகள் இரண்டாவது அம்சமாகும்.
திருமதி.காந்தி மிகப் பிரபலமானவராக இருந்தார். அவரைச் சுற்றி 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு
எதிராகப் பெற்ற ராணுவ வெற்றியின் ஒளி இன்னும் ஜொலித்துக் கொண்டிருப்பதாக
நம்பப்பட்டது. இவை தவிர பெரும்பாலான பெருந்தொழிலதிபர்கள் நெருக்கடிநிலைக்கு ஆதரவளித்த
காரணத்தால் இந்திராகாந்தியின் கட்சியமைப்பானது சிறப்பான நிதியுதவியுடன் நல்ல
நிலைமையில் இருந்தது. மறுபுறத்தில் மிகக் குறைவான நிதியாதாரத்துடன் எதிர்க்கட்சிகள்
துண்டு துண்டாகக் கிடந்தன. எதிர்க்கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் சிறைகளுக்குள்
நீண்ட காலத்தை கழித்திருந்த நிலைமை அப்போது நிலவியது. ஆயினும்
கருத்துக்கணிப்பாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக காங்கிரஸால் பெரும்பான்மையைப்
பெற முடியாமல் போனது. திருமதி.காந்திகூட தனது தொகுதியில் தோற்றுப் போனார். சுதந்திர
இந்திய வரலாற்றில் புதுதில்லியில் முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத வேறொரு கட்சி
ஆட்சிக்கு வந்தது.
தேர்தல் நடத்தப்பட்டது, காங்கிரஸ் தோல்வியடைந்தது,
தனிக்கட்சி ஆட்சியில் உள்ள நாடாக இந்தியா இனிமேலும் இருக்கப் போவதில்லை என்ற
1977ஆம் ஆண்டு தேர்தலின் மூன்று குறிப்பிடத்தக்க அம்சங்களுடன், நீண்ட காலம்
ஆதிக்கத்தில் இருந்த காங்கிரஸை ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட்ட எதிர்க்கட்சி கூட்டணி
தோற்கடித்தது என்ற நான்காவது அம்சமும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.
எதேச்சதிகாரத்தைத் தோற்கடித்து ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் ஒற்றைக் குறிக்கோளுடன்
பல்வேறு வகையான தோற்றம், நம்பிக்கைகளுடன் இருந்த நான்கு கட்சிகள் ஒன்றிணைந்த
கூட்டணியாக காங்கிரஸைத் தோற்கடித்த ஜனதா கட்சி இருந்தது.
புதுதில்லியில் 1977 மற்றும் 2014க்கு இடைப்பட்ட
காலகட்டத்தில் எந்தவொரு கட்சியோ அல்லது கூட்டணியோ இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து ஆட்சியில்
இருந்ததில்லை. அதுபோன்ற அதிகார மாற்றம் இந்திய ஜனநாயகத்திற்கு உதவுவதாகவே
இருந்தது. ஒரு தனிக் கட்சி நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தி வந்த காரணத்தால் உருவான
அச்சத்திலிருந்து விடுபட்ட அந்தக் காலகட்டத்தில் பத்திரிகைத்துறை அதிகச்
சுதந்திரத்துடனும், குடிமைச் சேவைகள் சார்பற்றும், நீதித்துறை உறுதியுடனும்
இருந்தன. எந்தவொரு கட்சியும் தொடர்ந்து அதிகாரத்திற்கு வர இயலாமல் நிலவிய அந்தப் போட்டி
அரசியல் இந்திய கூட்டாட்சித்தன்மைக்கு அதிகம் உதவியது. தங்கள் தனிப்பட்ட
பொருளாதார, சமூக நலத் திட்டங்களை மேற்கொள்வதற்கான கூடுதல் வழியை மாநிலங்கள் பெற்றிருந்தன.
தற்போது நடைபெறும் தேர்தல்கள் அத்தகைய போக்கை மாற்றி
அமைத்திடுமா? பெரும்பாலான கருத்துக்கணிப்பாளர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். நரேந்திர
மோடியும், பாரதிய ஜனதா கட்சியும் மூன்றாம் முறையாகப் பெரும்பான்மையைப் பெறப் போவது
கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது என்றே அவர்கள் நம்புகின்றனர். அப்படி நடந்தால் என்ன
நடக்கும்? நான் மிகவும் மதிக்கின்ற பரகலா பிரபாகர் ‘மூன்றாவது முறையாக மோடியும்,
பாஜகவும் வெற்றி பெற்றால், இனிமேல் எந்த தேர்தல்களும் நாட்டில் நடக்காது’ என்கிறார்.
இந்திராகாந்தியைப் போல எதேச்சதிகார உள்ளுணர்வு, ஆதிக்கம்
மீதான ஆர்வம் மோடியிடமும் இருப்பது உண்மைதான். ஆனாலும் இந்திராகாந்தி காலத்து அரசியல்
சூழலுக்கும், மோடி காலத்து அரசியல் சூழலுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இருக்கிறது.
அதாவது 1977ஆம் ஆண்டு ஒரேயொரு மாநிலத்தைத் தவிர (தமிழ்நாடு - அந்த மாநில
முதலமைச்சர் அப்போது புதுதில்லியுடன் இணக்கமற்றே
இருந்தார்) மற்ற அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில்
இருந்தது. ஆனால் இப்போது பாஜக 2024ஆம் ஆண்டில் தென்னிந்தியாவில் முழுமையாக,
கிழக்கு, வட இந்தியாவில் உள்ள பல முக்கியமான மாநிலங்களில் ஆட்சியில் இல்லை.
திருமதி.காந்தியும் காங்கிரஸும் 1975 மற்றும் 1977க்கு இடைப்பட்ட காலத்தில் ஜனநாயக எதிர்க்கட்சிகளிடம் முழுமையான மௌனத்தை சாதித்துக் காட்டியிருந்தனர். நாடாளுமன்றத்தில் 370 இடங்களை வெல்வது என்ற தங்களுடைய கற்பனையை இப்போது மோடியும், பாஜகவும் நிறைவேற்றிக் கொண்டாலும், அவர்களைப் பொருத்தவரை திருமதி.காந்தி செய்த அந்தச் சாதனையை சாதிப்பது கடினமாகவே இருக்கும். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், தெலுங்கானா போன்ற பெரிய மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளே இருக்கும் நிலையில் மோடியும் அமித்ஷாவும் அவர்களை என்ன செய்வார்கள்? பொறுப்பற்ற முறையில் 356ஆவது சட்டப்பிரிவைத் திணிப்பார்களா? அல்லது சட்டமன்ற உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக விலைக்கு வாங்கிக் கொள்வார்களா? அறம் எதுவுமற்ற அவர்களுடைய நடைமுறைகள் இதுபோன்ற நடவடிக்கைகளைத் தூண்டுவதாகவே இருக்கும். ஆனால் மோடி வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாத அல்லது பாஜகவிற்கு வாக்களிக்காத மாநிலங்களில் உள்ள கோடிக்கணக்கான குடிமக்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை மிகக் கடுமையாக எதிர்ப்பார்கள் என்பது நிச்சயம்.
நாட்டின் பெரும் பகுதி பாஜகவின் மேலாதிக்கத்தை இன்னும் ஏற்றுக்
கொண்டிராத நிலைமையில் நெருக்கடிநிலைக் காலத்து எதேச்சதிகாரத்திற்கு இந்தியா முழுமையாகத்
திரும்புவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவே.
இந்த விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமில்லை என்றாலும், வெறுப்பு
நிறைந்த ஹிந்துத்துவாவின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தை பாஜக தன்னுடன் கொண்டு
வருவதால் நிச்சயமாக எவரொருவரும் மனநிறைவுடன் இருந்து விடக்கூடாது.
தரமிழந்து போன ஜனநாயகம்
நரேந்திர மோடி ஆட்சியில் இருந்த இந்தப் பத்து ஆண்டுகளில்
மதச் சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லீம்கள் இந்திய அரசியலில் விளிம்பு நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளனர். அன்றாட வாழ்வில் தெருக்களில், சந்தைகளில், பள்ளிகள்,
மருத்துவமனைகள் மற்றும் அலுவலகங்களில் அவர்கள் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். இந்திய
முஸ்லீம்களை பாஜக எம்.பி.க்கள், அமைச்சர்கள் தொடர்ந்து கேலியும், கிண்டலும் செய்து
வருகின்றனர். அவர்களுடைய ஆதரவாளர்கள் வாட்ஸ்ஆப், யூடியூப்பில் அவர்களுடைய
செய்திகளை ஊதிப் பெருக்குகின்றனர். ஹிந்துக்கள் அல்லாத சக குடிமக்கள் மீதான
பகைமையை பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்துக் கொடுக்கும் வகையில் பாடப்புத்தகங்கள்
திருத்தி எழுதப்படுகின்றன.
மூன்றாவது முறையாக நரேந்திர மோடியும், பாஜகவும்
ஆட்சிக்கு வருவார்கள் என்றால் முஸ்லீம்களை இழிவுபடுத்தும் செயல் மேலும் தொடரவே
செய்யும். ஒருவேளை அது இன்னும் கூர்மையாக நடக்கலாம். மற்றுமொரு வெற்றி - குறிப்பாக நாடாளுமன்றத்தில் மோடி, அவரது
கட்சிக்கு மிகவும் வசதியான பெரும்பான்மையுடன் கிடைக்கும் என்றால் ஊடகங்கள் மீது அவர்கள்
தரும் அழுத்தங்கள் மேலும் இறுகலாம். குடிமைச் சேவைகள், நீதித்துறை, அரசு
ஒழுங்குமுறை நிறுவனங்களின் சுதந்திரத்தை மேலும் இழிவுபடுத்த அத்தகைய வெற்றி ஊக்கம்
தரலாம். மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடிகள், ஐஐஎம்கள் ஹிந்துத்துவப்
பிரச்சாரத்திற்கான மையங்களாக மாற்றப்படலாம். இந்தியக் கூட்டாட்சி கட்டமைப்பை அது மேலும்
பலவீனப்படுத்தக் கூடும்.
மக்களவைத் தொகுதிகளை மக்கள்தொகைக்கு ஏற்ப மறுஒதுக்கீடு
செய்யும் போது பாஜக பலவீனமாக இருக்கும் தெற்கை அரசியல்ரீதியான அடிமையாக
மாற்றுவதற்கு பாஜக வலுவுடன் இருக்கின்ற வடக்கின் மக்கள்தொகை சாதகமாக இருக்கும். தெற்கு
பாஜகவின் ஒடுக்குமுறைக்கு சாந்தமாக அடிபணிந்து போவதற்கான வாய்ப்பு எதுவுமில்லை
என்றாலும், மோடியும், பாஜகவும் எதையும் பொருட்படுத்தாமல் தங்கள் திட்டங்களைத்
தொடரலாம்.
‘50-50 ஜனநாயகம்’ என்று 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட
புத்தகத்தில் நான் இந்தியாவை வகைப்படுத்தியிருந்தேன். ஒரு தசாப்தத்திற்குப் பிறகு
அந்தப் புத்தகத்தைப் புதுப்பித்த போது அதனை ‘30-70 ஜனநாயகம்’ என்று நான் தரமிறக்கம்
செய்தேன். மோடிக்கும், பாஜகவிற்கும் மூன்றாவது முறையாகக் கிடைக்கும் தொடர்
பெரும்பான்மை அந்தச் சரிவை இன்னும் விரைவுபடுத்தும். நமது சமூகக் கட்டமைப்பு, பொருளாதார
வாய்ப்புகள், இன்னும் பிறந்திடாத இந்திய தலைமுறைகளின் எதிர்காலத்திற்கு அது தீங்கையே
விளைவிக்கும்.
இந்திராகாந்தி 1970களில் எதேச்சதிகாரத்தை குடும்ப ஆட்சி
மீதான பக்தியுடன் இணைத்தார்; இப்போது நரேந்திர மோடியோ எதேச்சதிகாரத்தை ஹிந்து
பெரும்பான்மைவாதத்தின் மீதான பக்தியுடன் இணைக்கிறார். குடும்பவாதம் (பரிவார்வாதம்)
மோசமானது என்றாலும், பெரும்பான்மைவாதம் (பஹுசங்க்யவாதம்) அதைக் காட்டிலும் இன்னும்
மோசமாகவே இருக்கும். அதை பல்வேறு வகையான இஸ்லாமிய, பௌத்த பெரும்பான்மைவாதத்தால் கைக்கொள்ளப்பட்ட
நமது அண்டை நாடுகளின் தலைவிதி நிரூபித்துக் காட்டியுள்ளது. அவற்றிலிருந்து ஹிந்து
பெரும்பான்மைவாதத்தின் விளைவு மட்டும் வேறுவிதமாக இருக்கும் என நம்புவதற்கு
நிச்சயம் எந்தவொரு காரணமும் இல்லை.
சர்வாதிகாரம் ஆன்மாவை நசுக்குகிறது; மனதை, இதயத்தை பெரும்பான்மைவாதம்
நஞ்சாக்குகிறது. அது உண்டாக்கும் வெறுப்பும், மதவெறியும் அரசியல் மூலம் புற்று
நோயாகப் பரவி, தனிமனிதர்கள் மற்றும் சமூகத்தின் நாகரிகம், கண்ணியம், இரக்கம், மனித
நேயம் ஆகியவற்றைக் கொள்ளையடிக்கிறது. அதன் காரணமாகவே அதன் எழுச்சியை நாம் இன்னும் நமக்குக் கிடைத்துக்
கொண்டிருக்கும் ஜனநாயக வழிமுறைகளைக் கொண்டு தடுத்து நிறுத்த வேண்டியுள்ளது. அதனாலேயே
இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற பொதுத் தேர்தல் 1977க்குப் பிறகு நடைபெறுகின்ற
மிக முக்கியமான தேர்தலாக இருக்கிறது.
Comments