இந்த தேசம் முதல் பிரதமருக்கு எந்த வகையில் கடன்பட்டிருக்கிறது?

 கே.எம்.சந்திரசேகர்

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

என்னைப் போ வயதானவர்களுக்கு இந்த உலகம் முற்றிலும் தலைகீழாக மாறியிருக்கிறது. எனது குழந்தைப் பருவத்தில், பதின்ம வயதில் என்று தொடர்ந்து முடிவில்லாத போற்றுதலுக்குரியவராக ஜவஹர்லால் நேரு இருந்து வந்துள்ளார்.  பிரத்தியேகமாக தான் அணிந்து கொள்ளும் நீண்ட கோட், சிவப்பு ரோஜாவால் எங்கே சென்றாலும்  குழந்தைகள் கூட்டத்தைத் தன்வசம் ஈர்த்துக் கொள்பவராகவே நேரு மாமா இருந்திருக்கிறார். அவர் பயணித்த தெருக்களில் அவரைக் காண்பதற்காக வரிசையாகக் காத்து நின்ற மக்களிடம் அவர் மீது, இந்த நாடு, அதன் மக்கள் மீது அவர் கொண்டிருந்த அன்பு, அவரது கற்றல், உயர்ந்த அறிவு, நேர்மை. மீது முழுமையான விசுவாசம், நம்பிக்கை நிரம்பிக் காணப்பட்டது.  

1962ஆம் ஆண்டில் சீனாவுடன் நடந்த போர், 1964ஆம் ஆண்டு அவர் இறந்து போன பின்னர் அவர் மீதான அந்த ஈர்ப்பு கலைந்து போனது. கடந்த சில ஆண்டுகளாக நமது சககுடிமக்களில் ஒரு பிரிவினரிடையே அது கடுமையான வெறுப்பாக மாறியிருப்பதாகவும் தோன்றுகிறது. அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன.     

இந்தியாவையே அழித்தொழிக்கும் வகையில் தன்னுடைய குடும்ப ஆட்சியை அவர் நிறுவினார்  என்பது அவர் மீது வைக்கப்படும் முக்கியமான குற்றச்சாட்டாகும். உண்மையில் நேரு அவ்வாறு செய்தாரா? 1964ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரிசா ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்த போது நேருவின் உடலின் ஒரு பகுதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டது. அந்த வேளையில் ‘நேருவிற்குப் பிறகு யார்?’ என்ற கேள்வி இந்தியாவிற்கு உள்ளும், வெளியிலும் இருந்த அனைவரின் மனங்களிலும் தோன்றியது. நேருவின் வாரிசு யார் என்ற ஊகத்துடன் வெளியான  செய்தித்தாள் கட்டுரைகள் பலவும் இன்னும் நன்றாக என்னுடைய நினைவில் இருக்கின்றன. இந்தியச் செய்தித்தாள்கள் மட்டுமல்லாது, தி டைம்ஸ் ஆஃப் லண்டன், நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட பல பத்திரிகைகளும் பல்வேறான ஊகங்களை முன்வைத்தன. நேரு தேசத்தின் மீது தனது வாரிசைத் திணிக்க முடிவு செய்தார் என்பதான எந்த வகையான கருத்தும் அந்த ஊகங்கள் எதிலும் இடம் பெற்றிருக்கவில்லை.  

    

பலராலும் நன்கு அறியப்பட்டிருந்த கட்டுரையாளரான ஃபிராங்க் மோரேஸ் ‘தனது குடும்பத்தின் ஆட்சியை உருவாக்க நேரு முயன்றார் என்று கூறுவதற்கு எந்தவொரு காரணமும் இருக்கவில்லை; அவ்வாறு கூறுவது அவரது குணம், வாழ்க்கை முறைக்கு முற்றிலும் முரணாகவே இருக்கும்’ என்று 1960ஆம் ஆண்டில் எழுதினார். அதை வலியுறுத்தும் வகையில் நேருவை அதுவரையிலும் கடுமையாக விமர்சித்து வந்த டி.எஃப்.கரகா ‘தன்னுடைய வாரிசு தொடர்பாக எந்தவொரு விருப்பத்தையும் நேரு வெளிப்படுத்தவில்லை. அது தனக்குப் பின்னால் இருப்பவர்களின் விருப்பம் என்ற நிலைப்பாடே நேருவிடம் இருந்தது. அவரிடம் தன்னுடைய வாரிசு குறித்து எந்தவொரு அக்கறையும் இருக்கவில்லை’ என்றார். நேருவின் மரணத்திற்குப் பின்னர் அவரது வாரிசாக பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி மென்மையாக, அடக்கமாகப் பேசக்கூடியவராக இருந்த போதிலும் எஃகு போன்ற மனவுறுதி கொண்டவராகவே இருந்தார். அவர் மட்டும் மிகக் குறுகிய காலத்திற்குள் மரணமடைந்திருக்கா விட்டால் இந்திய வரலாறு முற்றிலும் வித்தியாசமாக இருந்திருக்கும்.       

நாடாளுமன்ற நடைமுறை மூலம் சோசலிசத்தை நிறுவ முயலும் ஃபேபியன் சோசலிசம் மீது நேருவிற்கிருந்த ஆர்வம், சோவியத் பாணியிலான மையப்படுத்தப்பட்ட திட்டமிடலின் மீது அவருக்கிருந்த அபிமானம் ஆகியவையே இந்தியாவைப் பின்னோக்கி இட்டுச் சென்று நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு குறுக்கே நின்றன என்ற குற்றச்சாட்டும் நேரு மீது சுமத்தப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டு அந்த நேரத்தில் நிலவிய பொருளாதார, சமூக நிலைமைகள் குறித்த தவறான புரிதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது.  

ஜே.ஆர்.டி.டாடா, ஜி.டி.பிர்லா, அர்தேஷிர் தலால், ஜான் மத்தாய் போன்ற வணிக முன்னோடிகள், தொழில்நுட்ப வல்லுநர்களால் 1944-45 காலகட்டத்தில் பம்பாய் திட்டம் உருவாக்கப்பட்டது.  அது பொருளாதாரப் பாதையில் நாடு விரைந்து பயணிப்பதை உறுதி செய்வதற்கு அரசின் பங்கேற்பு, மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் ஆகியவை முக்கியமென வலியுறுத்தியது. அந்த பம்பாய் திட்டமே நேருவால் பின்னர் கொண்டு வரப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களுக்கான முன்னோடியாகவும் இருந்தது. 

விவசாயத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தொழில்துறைக்கு மாறுவது, அடிப்படைத் தொழில்களைக் கட்டமைப்பது, மையப்படுத்தப்பட்ட திட்டமிடல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு ஒவ்வொன்றும் ஐந்து ஆண்டுகள் என்று மூன்று தொகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பதினைந்து ஆண்டுகளுக்குள் தனிநபர் வருமானத்தை இரட்டிப்பாக்குவதை அந்த திட்டம் முன்மொழிந்தது. அடிப்படை மற்றும் கனரகத் தொழில்கள் அரசிடம் விடப்படும் வேளையில் நுகர்வோர் தொடர்பான தொழில்கள் தனியார் நிறுவனங்களிடம் விடப்படும் என்று அந்தத் திட்டம் இருந்தது.         

நேரு காலத்தில் அடித்தளம் இடப்பட்ட அந்தக் கட்டிடம், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இன்னும் சில ஆண்டுகளுக்குள் இந்தியா மாறுவதைத் தவிர்க்க முடியாது என்று உறுதியாக நம்பலாம் என்று கூறுகின்ற வகையில், இன்று வரையிலும் பல முன்னேற்றம், பின்னடைவு காலக்கட்டங்களைக் கடந்து பல்வேறு வேதனைகளுடன் மிகப் பொறுமையாகக் கட்டப்பட்டிருக்கிறது.    

ஜனநாயகத்தின் மீது உறுதியான அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவராக நேரு இருந்தார்.  இந்தியாவிற்கான மெக்சிகோ நாட்டின் தூதராக சில ஆண்டு காலம் இருந்த மெக்சிகன் கவிஞர் ஆக்டேவியோ பாஸ் 1966ஆம் ஆண்டில் ‘இந்த நூற்றாண்டின் பெரும்பான்மையான அரசியல் தலைவர்களைப் போல வரலாற்றின் திறவுகோல் தன்னிடம் இருப்பதாக நேரு கருதவில்லை. அதன் காரணமாகவே அவர் தனது நாட்டை அல்லது இந்த உலகைக் குருதியால் கறைப்படுத்தவில்லை’ என்றார்.      

பாகிஸ்தான் மற்றும் இருபதாம் நூற்றாண்டில் புதிதாகச் சுதந்திரம் பெற்ற பல நாடுகளின் வழியில் செல்லாமல் வாக்குப்பெட்டிகள் மூலம் வெளிப்படுகின்ற மக்களின் விருப்பம் மீது இந்தியா உறுதியுடன் இருந்ததற்கான பெருமை முற்றிலும் நேருவையே சாரும். குடியரசுத் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி ‘சுதந்திரத்திற்குப் பின்னர் நாடாளுமன்ற ஜனநாயகத்தை நிறுவியது, நீண்ட கால காலனித்துவத்திலிருந்து புதிதாகத் தோன்றிய இந்திய தேச வரலாற்றில் மிக முக்கியமான படியாகும். புதிதாகச் சுதந்திரம் பெற்றதொரு தேசத்தில் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பெரும் ஆபத்தாக இருக்கும் என்று கருதப்பட்டு வந்த நிலையில் அந்தச் செயல்முறையை வெற்றியடையச் செய்து காட்டியதில் நேருவிற்கு முக்கிய பங்கு இருந்தது. நேருவிடமிருந்த அந்தப் பார்வையே ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட பிரதிநிதித்துவ அரசை இந்திய குடிமக்களுக்கு ஏற்றவாறு துடிப்பான, ஆற்றல் மிக்க நிறுவனமயமாக்கப்பட்ட கட்டமைப்பாக மாற்றியமைத்தது. சுதந்திரமான சிந்தனை, கருத்து வெளிப்பாடு, நாட்டின் நிர்வாகத்தில் மக்களுடைய  பங்கேற்பு ஆகியவற்றின் மீது மிகவும் உறுதியான நம்பிக்கையுடன் நேரு இருந்தார். அவரைப் பொருத்தவரை ஜனநாயகம் மற்றும் குடிமை உரிமைகள் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கான வழிமுறையாக மட்டுமில்லாமல் நிறைவான விழுமியங்களுடன் இருந்தன’ என்று 2014ஆம் ஆண்டில் ஆற்றிய பத்தாவது நேரு நினைவு உரையில் குறிப்பிட்டார்.  

எந்தவொரு வகையிலான வகுப்புவாதத்தையும் வெறுப்பவராகவே நேரு இருந்தார். ‘மதம் அல்லது குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட மதம் என்று இந்தியாவில், பிற இடங்களில் அழைக்கப்படுவது என்னை அச்சுறுத்துகிறது. தொடர்ந்து அதனைக் கண்டித்து வந்துள்ள நான் அது முற்றிலுமாகக் களையப்பட வேண்டுமென்ற விருப்பமும் கொண்டுள்ளேன். குருட்டு நம்பிக்கை மற்றும் எதிர்வினை, கோட்பாடு மற்றும் மதவெறி, மூடநம்பிக்கை, சுரண்டல், சொந்த நலன்களைப் பாதுகாத்துக் கொள்வது ஆகியவற்றையே அது எப்போதும் குறிக்கிறது’ என்று நேரு குறிப்பிட்டார். வகுப்புவாதம் சமூகத்தை அரிக்கும் போது, நம்மை சுதந்திரமானவர்களாக, அச்சமற்றவர்களாக மாற்றிய விழுமியங்கள் குறித்த சுயபரிசோதனையை மேற்கொண்டு நாம் ஒன்றிணைய வேண்டும்.    

வெளியுறவுக் கொள்கை, சர்வதேச உத்திகளில் தன்னுடைய காலத்திற்குப் பிறகு யாராலும் அடைய முடியாத உயரங்களை நேரு அடைந்தார். யூகோஸ்லாவியாவின் டிட்டோ, எகிப்தின் நாசர், கானாவின் என்க்ருமா, இந்தோனேசியாவின் சுகர்னோ ஆகியோருடன் இணைந்து உலகளாவி தெற்கில் உள்ள நூற்றியிருபது நாடுகளை ஒன்றிணைத்து அணிசேரா நாடுகள் என்ற ஆற்றல் மிக்க அணியை நேரு உருவாக்கினார். தனது ஆட்சியின் முடிவில் இந்தியாவிற்குள் சீனத் துருப்புக்கள் ஊடுருவிய அவமானத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்த போதிலும் 1950களில் உலகளாவிய உத்திகளில் அவரது ஆதிக்கமே காணப்பட்டது.    

அமைதிக்கான ஆற்றலாக, ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நேரு அங்கீகரிக்கப்பட்டார். நேருவின் மரணத்திற்குப் பின்னர் அடுத்த ஆண்டு வெளியான ‘நேருவின் மரபு: நினைவு அஞ்சலி’ என்ற நூலில் ‘உண்மையான நாகரீக நிலைக்கு உயர மனிதகுலம் மேற்கொண்ட போராட்டங்கள் அனைத்திலும் கண்ணுக்குத் தெரியாமல் நேருவின் உயர்ந்த உருவம் அமர்ந்திருக்கிறது. அனைத்து குழுக் கூட்டங்களிலும் அவர் நிச்சயம் உணரப்படுகிறார். உலகம் அவரை இழந்து நிற்கின்ற நிலையில் அனைவருக்கும் மிகவும் தேவைப்படுவராக இருக்கின்ற அவர் நிலையற்ற இன்றைய உலகில் வாழும் சக்தியாக இருக்கிறார்’ என்று மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் குறிப்பிட்டிருந்தார்:     

இந்தியா இன்று பெரிய தேசமாக வளர்வதற்கான களத்தை சுதந்திரத்திற்குப் பிறகான முதல் பதினாறு ஆண்டுகளே அமைத்துக் கொடுத்தன. அப்படியானதொரு நிலைமையில் இப்போது ஏன் நேரு கேலி செய்யப்படுகிறார்?

இந்த இடத்தில் 1894ஆம் ஆண்டு விவேகானந்தர் கூறியதை மேற்கோள் காட்டாமல் இருக்க முடியாது: ‘சகோதரரே, நம்மால் அனைத்திலிருந்தும் விலகிக் கொள்ள முடியும் - சபிக்கப்பட்ட பொறாமையைத் தவிர... மற்றவர்களைத் தவறாகப் பேசுவது, மற்றவர்களின் மகத்துவம் குறித்து எரிச்சலடைவது, நான் மட்டுமே மகத்துவமானவன் - எனக்கு இணையாக வேறு யாரும் உயர்ந்து விடக்கூடாது என்று நினைப்பது நம்முடனே காலம்காலமாக இருந்து வரும் தேசிய அளவிலான பாவமாகும்’.

அவருடைய அந்தக் கருத்திலிருந்து நாம் ஒன்றும் பெரிதாக மாறி விடவில்லை என்பதே உண்மை.    

https://www.newindianexpress.com/opinions/2024/Mar/12/what-the-nation-owes-its-first-prime-minister

 

Comments