வரலாற்றுரீதியாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தியப் பன்மைத்துவத்தை இல்லாமல் செய்வது எளிதல்ல - ராஜீவ் பார்கவா நேர்காணல்
வி.எஸ்.சம்பந்தன்
தி ஹிந்து மையம்
மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கான அரசியலமைப்பின்
அர்ப்பணிப்பால் பாதுகாக்கப்பட்டு வருகின்ற இந்திய பன்மைப் பாரம்பரியம் தற்போது சவாலான
காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. பெரும்பான்மையின் அடிப்படையில் அரசு, மதம் ஆகியவற்றிற்கு
இடையில் உருவாகியுள்ள இயல்பான உறவின் காரணமாக
பல மதங்களை உள்ளடக்கிய இந்திய தேசத்தின் அடிப்படை லட்சியங்கள் மிக விரைவாக மறுவடிவமைக்கப்பட்டு
வருகின்றன.
வளரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம் (CSDS)
புது தில்லி, ஆக்ஸ்போர்டு பாலியோல் கல்லூரியில் கெளரவ ஆய்வாளர், வளரும் சமூகங்களுக்கான
ஆய்வு மையத்தின் பரேக் இந்தியச் சிந்தனைகள் நிறுவனத்தின் இயக்குனர் என்றிருந்து வரும்
பேராசிரியர் ராஜீவ் பார்கவா தனித்தன்மையுடனான இந்தியாவின் முயற்சியில் என்ன தவறு நேர்ந்துள்ளது
என்பது குறித்து பகுப்பாய்வு செய்கிறார். அரசியல்
மற்றும் பொதுக் கொள்கைக்கான தி ஹிந்து மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வி.எஸ்.சம்பந்தன்
உடனான உரையாடலில் ராஜீவ் பார்கவா ஐரோப்பிய, இந்தியப் பதிப்புகளுக்கு இடையில் உள்ள வேறுபாடுகள்,
இந்தியப் பதிப்பு வழங்கும் பாடங்கள், 'நவீனத்துவம்' 'மதமயமாக்கலை’ எவ்வாறு உருவாக்கியது,
அது இந்தியப் பன்மைத்துவம் சுதந்திரமாகப் பாய்ந்து செல்லும் பாதைகளை எவ்வாறு இடமாற்றம்
செய்துள்ளது, இந்தியாவில் நடைமுறையில் உள்ள மதச்சார்பின்மையில் ஏற்பட்டிருக்கும் திருப்பத்திற்கான
புள்ளிகள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கிறார். மதச்சார்பின்மை செயல்முறைகளிலிருந்து
சாதி விடுவிக்கப்பட்டிருப்பது என்ற முக்கியமான அம்சம் விடுபட்டிருப்பதையும் அவர் குறிப்பிட்டுக்
காட்டுகிறார். மேற்கத்திய சமூகங்களில் தலையீடு செய்வதாக உள்ள தேவாலயத்துடன் இந்திய
சாதிப் படிநிலையை ஒப்பீடு செய்து தனிமனிதனின் சுதந்திரத்தைத் தடுக்கும் சாதி அமைப்பையும்,
ஹிந்து கட்டமைப்பிற்குள் மற்ற சாதிகள் மீது ஆதிக்கம் செலுத்து வரும் சாதிகளையும் எதிர்த்துப்
போராட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.
விசாகப்பட்டினத்தின் உள் துறைமுகத்திற்குச் செல்லும் கால்வாயை
ஒட்டிய மலையில் அமைந்திருக்கும் கோவில், தேவாலயம், மசூதி
மதச்சார்பின்மையுடன் இந்தியாவிற்குள்ள
ஈடுபாட்டிற்கு முன்னால் இருக்கும் பாதையைப் பொருத்தவரை மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தாலும்,
பேராசிரியர் பார்கவா எச்சரிக்கையுடனே இருக்கிறார். அவர் ‘கீழ்நோக்கிய பயணம் நிறுத்தப்படும்’
என்றாலும் ‘வியக்கத்தக்க திருப்பம்’ எதையும் எதிர்பார்க்க முடியாது என்கிறார். அரசியலமைப்பின்
நோக்கங்களிலிருந்து 1980களில் இந்தியா விலகத் தொடங்கியதாக இருக்கின்ற அவரது கணிப்பிலிருந்தே
இந்த மதிப்பீடு எழுகிறது. நிலைமையை ‘மீட்டெடுக்க நீண்ட காலம் எடுக்கும்’ என்றாலும்
அது நிச்சயம் நடக்கும் என்றே அவர் கருதுகிறார்.
2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் பதினெட்டாம் நாளன்று
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் திருத்தப்பட்ட பகுதிகள்:
வி.எஸ்.சம்பந்தன்: பேராசிரியர் ராஜீவ்
பார்கவா, இந்திய அரசு தற்போது மதச்சார்பின்மையுடன் கொண்டுள்ள ஈடுபாடு - உங்களை மேற்கோள்
காட்டுவதென்றால் - அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்து ‘கொள்கையளவிலான தூரத்தில்’ -
மீண்டும் உங்களை மேற்கோள் காட்டுவதென்றால் - ‘பெரும்பான்மை சார்ந்த மதச்சார்பின்மை’
என்றே இருக்கிறது. மதம், அரசியல் ஆகியவற்றிற்கு இடையே சிக்கலான தொடர்புகள் உள்ள நிலையில்
பின்னோக்கிப் பார்க்கும் போது இந்திய மதச்சார்பின்மை ஒரு பிறழ்வாக அரசியலமைப்பில் இடம்
பெற்றிருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?
ராஜீவ் பார்கவா: இல்லை. மதச்சார்பின்மை
குறித்து உலகின் பிற பகுதிகளில் இருந்து வருகின்ற பிற மாதிரிகளுடன் ஒப்பிட்டே நான்
இந்திய அரசியலமைப்பில் இடம் பெற்றிருக்கும் மதச்சார்பின்மையை அடையாளம் காண விரும்புகிறேன்.
எடுத்துக்காட்டாக அமெரிக்க மாதிரி மதச்சார்பின்மை
தேவாலயம், அரசு ஆகியவற்றிற்கு இடையே கண்டிப்பான இடைவெளி இருக்க வேண்டும் என்கிறது.
மாதிரிகளைப் பின்பற்றுகின்ற அல்லது பின்பற்றாத உண்மையான நடைமுறைகளைப் பற்றி நான் பேசவில்லை
என்பதாலேயே 'மாதிரி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். அமெரிக்க மாதிரியில் மத
விவகாரங்களில் அதாவது தேவாலயத்தில் அரசால் தலையிட முடியாது. அரசு விவகாரங்களில் தேவாலயத்தால்
தலையிட முடியாது. அவையிரண்டும் பரஸ்பரம் ஒன்றையொன்று விலக்கிக் கொள்பவையாக உள்ளன என்றே
கூறலாம். ஆரம்பத்தில் இவையனைத்தும் மத பன்மைத்துவத்தைப் பாதுகாப்பதற்காக புராட்டஸ்டன்ட்
மதத்திற்குள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன. அது மெதுவாகத்தான் கத்தோலிக்கம், யூத மதம்
உட்பட மற்ற மதங்களுக்கு இடமளித்தது என்றாலும் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதே அடிப்படைக்
கருத்தாக இருந்தது.
அரசிடமிருந்து
பாதுகாப்பது?
ஆம் அரசிடமிருந்து மத சுதந்திரத்தைப் பாதுகாத்துக்
கொள்வது.
பிரெஞ்சு மாதிரி முற்றிலும் வித்தியாசமானது. பிரெஞ்சு மாதிரியில் மத விவகாரங்களில் அரசு தலையிடலாம்
என்றாலும் மதமானது அரசு விவகாரங்களில் தலையிட முடியாது.
அது
ஒரு வழியிலானது
அதனை ஒருதலைப்பட்சமான விலக்கு என்பேன்.
ஆனால் அதுவும் அரசின் விவகாரங்களில் மதத்தின் தலையீட்டை நீக்கி அவையிரண்டையும் பிரித்தே
வைக்கிறது. மதத்தை வலுவிழக்க அரசு செய்ய விரும்பும் என்றால் எவ்விதத் தடையுமின்றி அதனை
அரசு சுதந்திரமாகச் செய்து கொள்ளலாம். அவ்வாறில்லாமல் மதத்திற்கு உதவ விரும்பும் என்றால்
அரசு அதையும் செய்து கொள்ளலாம். ஆக மதத்தைக் கட்டுப்படுத்துவது மட்டுமே அடிப்படைக்
கருத்தாக இருக்கிறது. கற்பனையில் தான் வரித்துக் கொண்ட குடியுரிமையின் சமத்துவத்திற்காகவே
அரசு அவ்வாறு நடந்து கொள்கிறது. குடிமக்களாக இருப்பது, குடிமக்கள் அனைவருக்கும் சமமான
உரிமைகளை வழங்குவது என்பது உண்மையில் குடியரசின் சிந்தனையாகும். அது மதச் சமூகங்கள்,
மத அடையாளங்களை பொதுக் களத்திலிருந்து - குறிப்பாக
அரசின் விவகாரங்களில் இருந்து – முற்றிலுமாக விலக்கி வைப்பதாகவே உணரப்பட்டது.
அதுபோன்ற மாதிரிகளில் ஏதாவதொன்று தற்போது
இந்தியாவில் இருப்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். அமெரிக்க மாதிரி நம்மிடம் இருக்கும்
என்றால் நம்மால் ஹிந்து மதத்தின் குறிப்பிட்ட வகைப் பண்பாகப் பரவலாகக் காணப்படும் சாதி
அமைப்புடன் முழுமையாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள தீண்டாமையை தடை செய்ய முடியாது.
அமெரிக்க மதச்சார்பின்மை தீண்டாமையை அனுமதிக்காது. எனவே நம்மால் அதில் தலையிட முடியாது.
அதேபோன்று பாலின நீதியை அடிப்படையாகக் கொண்ட சீர்திருத்தங்கள், மத அடிப்படையிலான தனிநபர்
சட்டங்களில் தலையிடுவதற்கான சாத்தியமும் இருக்காது. அதன் காரணமாக அமெரிக்க மாதிரியை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்தியர்களிடம் எப்போதும் மதம் குறித்த
தெளிவில்லாத அணுகுமுறையே இருக்கிறது. அதனால் நம்மால் பிரெஞ்சு மாதிரியையும் ஏற்றுக்
கொள்ள இயலாது. மதம் சார்ந்த பல வகையான உலகக் கண்ணோட்டங்கள், விழுமியங்கள் அரசின் மீது
ஏதோவொரு வகையில் மறைமுகமாகச் செல்வாக்கு செலுத்தலாம்; அனைத்து மதச் சமூகங்களுக்கும்
சமமான மரியாதையை அரசு தர வேண்டும் என்று மதத்திற்கு
மதிப்புமிக்க ஏதோவொன்று இருப்பதாகவே அவர்கள் உணர்கின்றனர். மத விரோதம் எதுவும் அங்கே இருப்பதில்லை. ஆனாலும்
மதங்கள் மீது தலையிடுவதற்கு அந்த மதங்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டியுள்ளது. அனைத்து
மதங்களிலும் சுதந்திரமின்மை, சமத்துவமின்மைக்கான விதைகள் இருப்பதால். பிரெஞ்சுக்காரர்களின்
எதிர்ப்பும் உள்ளே வர வேண்டியிருந்தது. இந்திய மதங்கள் சாதி, பாலின பிரச்சனைகளுடன்
தொடர்புடையதாக பெரும்பாலும் கேடு விளைவிக்கின்ற பல பழக்கவழக்கங்களுடன் இருந்தன. அது
ஹிந்து-முஸ்லீம் பிரச்சனையாகவும் இருக்கலாம்.
மதங்களுக்கு இடையிலான ஆதிக்கம் (ஒரு மதம்
மற்றொன்றின் மீது ஆதிக்கம் செலுத்துவது) அல்லது ஒரு மதத்துக்குள்ளேயே இருக்கின்ற (ஒரு
மதத்தில் உள்ளவர்கள் அதே மதத்தில் உள்ள மற்றவர்கள்
மீது ஆதிக்கம் செலுத்துவது) அதாவது ஹிந்து மதம் அல்லது இஸ்லாத்தில் பெண்கள் மீது செலுத்தப்படுவது
போன்ற ஆதிக்கம் எதுவும் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்து கொள்வதற்காக அரசு தலையிட
வேண்டியுள்ளது. ஒருவகையில் மரியாதை, விமர்சனம் என்று இரண்டையும் இணைத்துக் கொண்டுள்ள
தெளிவற்ற அணுகுமுறையாகவே அது இருக்கிறது. விமர்சனப்பூர்வமான மரியாதை என்று நான் அதனைக்
குறிப்பிடுவேன். அது கொள்கையளவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் கொள்கைரீதியான
தூரத்தைக் கடைப்பிடிக்கும் வகையிலேயே இருக்கிறது. அனைத்து மதங்களிடம் இருந்தும் அரசு
விலகியே நிற்கிறது. சமத்துவம், சுதந்திரம் அல்லது சகோதரத்துவத்தை வளர்க்க உதவும் போது
மதத்தின் மீது அரசு தலையிடுகிறது. அத்தகைய தலையீடு எதுவும் இல்லாமலே அந்த விழுமியங்கள்
பாதுகாக்கப்படும் அல்லது மேம்படுத்தப்படும் என்றால் மதத்தில் குறுக்கிடுதை அரசு தவிர்த்து
விடுகிறது.
அதையே சற்று வித்தியாசமாக நாம் முன்வைக்கலாம்.
இரண்டு வடிவங்களில் இருக்கின்ற மதரீதியான ஆதிக்கத்தை
வலுவிழக்கச் செய்ய வேண்டுமென்று விரும்பினால் அதில் தலையிடுவது அல்லது தலையிடாமல் இருப்பது
என்று அரசிடம் இரண்டு வழிகள் உள்ளன. நெகிழ்வான அணுகுமுறை அரசிற்கு உள்ளது. இந்த இரண்டு
உத்திகளில் எது நிறுவனமயமாக்கப்பட்ட மத ஆதிக்கத்தைக் குறைக்கும் என்பதைப் பொறுத்து
அரசு தலையிடலாம் அல்லது தலையிடாமல் போகலாம். அந்த முடிவு தனித்தன்மை கொண்டதாக இருக்கும். .
மேற்குலகிடம் அதுபோன்ற சிந்தனை எதுவும்
காணப்படவில்லை. ஒட்டுமொத்தமாக எதிராக இருப்பது அல்லது முற்றிலும் நட்புடன் இருப்பது
என்பதாக இது அல்லது அது என்ற நடைமுறையே அங்கே இருந்தது. அமெரிக்க மாதிரி பெரும்பாலும்
மதத்துடன் நட்புடனே இருக்கிறது. மதத்தின் பெயரில் அனைத்து வகையான தீங்கு விளைவிக்கும்
விஷயங்களையும் அமெரிக்க அரசு அனுமதிக்கிறது. மத சுதந்திரத்தைப் பாதுகாப்பது மட்டுமே
பிரதானமான அடிப்படைக் கருத்தாக இருப்பதால் அங்கே மதச் சுதந்திரத்தின் பெயரால் அனைத்து
விதமான காரியங்களும் நடக்கின்றன.
(அமெரிக்காவில்)
கருக்கலைப்புச் சட்டங்கள் உள்ளன
'மதத்தின் அடிப்படைகளைப் பாதுகாக்க வேண்டும்.
மத விவகாரங்களில் அரசு எவ்வாறு தலையிட முடியும்? கிறிஸ்தவ மதம் கருக்கலைப்பை அனுமதிப்பதில்லை.
எனவே அந்த நிலைப்பாட்டிலிருந்து விலகி கருக்கலைப்பை அனுமதிக்கும் எந்தவொரு தலையீட்டையும்
அரசு அனுமதிக்கக் கூடாது’ என்ற அடிப்படையிலேயே அமெரிக்காவில் கருக்கலைப்புச் சட்டங்களுக்கு
எதிர்ப்பு உள்ளது. அதுதான் அமெரிக்க மாதிரி.
அத்தகைய பிரச்சனை எதுவும் பிரான்சில் இருக்கப்
போவதில்லை. அரசு அங்கே தலையிடும். பிரெஞ்சு
அரசு அனைத்து விஷயங்களிலும் தலையிடும். மக்கள் ஹிஜாப் அணிவதை அது தடுக்கும். ஹிஜாப்
என்றால் என்ன? அது முகத்தை மறைப்பதில்லை. தலையை மட்டுமே மறைக்கிறது. அதை அணிந்து கொள்வது
தனிநபர் சுதந்திரத்தின் ஒரு பகுதியாகும். அனுமதி மறுக்கப்பட வேண்டிய காரியமாக அது இருக்கவில்லை.
முகத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் வரை ஹிஜாபை அகற்றச் சொல்ல எந்தவொரு காரணமும் இருக்கப்
போவதில்லை. ஆனால் பிரெஞ்சுக்காரர்கள் பொதுக்களத்தில் இருந்து ஹிஜாப்பை அகற்றும் வழிகளில்
சென்றுள்ளனர். அது சட்டவிரோதமான தலையீடாகவே இருக்கும்.
இந்தியாவில் நமக்கு இந்த இரண்டு பிரச்சனைகளில்
எதுவும் இருக்காது. சொல்லப் போனால் அது நமது அரசியலமைப்பிலே இருக்கிறது. ஆனாலும் நடைமுறையில்
வேறு பல விஷயங்கள் நடக்கும். அது வேறு விஷயம்.
அரசியலமைப்பு
கருத்தாக்கம் ஏன் தோல்வியடைகிறது என்று சுருக்கமாகக் கூறுங்களேன் …
காங்கிரஸுக்கு வெளியில், காங்கிரஸுக்குள்ளே
பெரும் எண்ணிக்கையிலானோர் இந்த வகையான மதச்சார்பின்மை மீது குறைந்த பட்ச அதிருப்தியுடனாவது
உள்ளனர். அனைத்து மதங்களிலும் உள்ள பழமைவாதிகள் யாரும் அரசிடமிருந்து எந்தவொரு தலையீடு வருவதையும் விரும்புவதில்லை.
ஹிந்து தேசியவாதம் எப்போதும் இருந்துள்ளது.
மதச்சார்பற்ற தேசியவாதம் போல அதுவும் மிகப் பழைய சிந்தனைதான். பெரும்பாலான ஹிந்து தேசியவாதிகள்
சமத்துவம், பாரபட்சமற்ற கொள்கைகளை மீறுவதாக இருந்தாலும் ஹிந்துக்களுக்கு ஒருவித முன்னுரிமை
எப்போதும் தரப்பட வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஹிந்து அரசைக் கொண்டு வர விரும்புகின்ற அவர்கள் மதச்சார்பின்மை
மீதுள்ள அதிருப்தியால் அந்த மீறல்களைப் பொருட்படுத்துவதில்லை. இரண்டாவதாக இந்திய மதச்சார்பின்மைவாதிகள் பலரும்
இந்திய மதச்சார்பின்மை குறித்து மிகவும் தவறான புரிதலுடனே இருக்கின்றனர். அவர்கள் மதச்சார்பின்மை
குறித்த மேற்குலகு பாடநூல் வரையறையையே கடைப்பிடித்து வருகின்றனர். மீண்டும் மீண்டும்
மதத்தைத் தனியார்மயமாக்கிட வேண்டும் என்ற கருத்தை மட்டுமே அவர்கள் எழுப்பி வருகின்றனர்.
ஆனால் இந்தியாவில் மதத்தை எப்படி தனியார்மயமாக்க முடியும்? இங்கே மதம் குறித்து அனைத்து
வகையான பொது வெளிப்பாடுகளும் இருந்து வருகின்றன. முகரம் பண்டிகைக்குத் தடை போட முடியுமா?
கும்பமேளாவைத் தடுத்து விட முடியுமா? இதுபோன்ற எதையும் ஒருமித்த கருத்து இல்லாமல் செய்து
விட முடியாது. பிரான்சில் கத்தோலிக்க தேவாலயத்துடன் நடத்தப்பட்ட பெரும் போருக்குப்
பிறகே அவ்வாறு செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவில் மதத்தைத் தனியார்மயமாக்கிட முடியாது.
உண்மையில் நாம் மதச் சமூகங்களின் இருப்பை
நமது அரசியலமைப்பில் அங்கீகரிக்கவே செய்திருக்கிறோம். மதச் சமூகங்கள் மட்டுமல்லாது
மொழி சார்ந்த சமூகங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்கள் பற்றியும் பேசுகின்ற நமது அரசியலமைப்பு
தங்களுக்கென்று சொந்த கல்வி நிறுவனங்களை உருவாக்கி, அவற்றை அந்தச் சமூகங்கள் பராமரித்து
வரலாம் என்கிறது. அது அடிப்படை உரிமையாகவும் தரப்பட்டுள்ளது. ஆக நமது அரசியலமைப்பில்
மதச் சமூகங்களுக்கான அங்கீகாரம் உள்ளது. அதிகாரப்பூர்வமான அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.
இது பிரான்ஸ் அல்லது பல மேற்கத்திய நாடுகளில் நினைத்துப் பார்க்கவே முடியாத காரியமாகும்.
ஐரோப்பாவில் நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும் சிறுபான்மைக்கான உரிமைகள் எந்தவொரு ஐரோப்பிய
அரசியலமைப்பிலும் சிறுபான்மை மதச் சமூகங்களுக்குத் தரப்படவில்லை. அங்கே ஒடுக்கப்படும்
மதச் சமூகங்கள் என்று எதுவுமில்லாத காரணத்தாலேயே அவ்வாறான உரிமைகள் வழங்கப்படவில்லை.
மற்றவர்களால் ஒடுக்கப்படக் கூடாது என்பதாக இந்தியாவில் வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு
உத்தரவாதம் அங்கே கிடையாது. அதன் காரணமாகவே இந்தியாவில் எப்போதும் ஒரு சச்சரவு நிலவி
வருகிறது. மதச்சார்பின்மை எப்பொழுதும் குறைத்தே மதிப்பிடப்படுகிறது. ஹிந்து தேசியவாதம்
அதிகரித்து வரும் நிலையில் மதச்சார்பின்மை என்ற சிந்தனையே அடியோடு அருகி விட்டது.
ராஜீவ் பார்கவா
… வேறு விதமாக மாற்றப்பட்டிருக்கிறது.
யாரும் தங்ககளை மதச்சார்பற்றவர்கள் இல்லை என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். அதை நாம்
இப்போது வெறும் பேச்சளவில்தான் செய்து கொண்டிருக்கிறோம். ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’
(சப்கா சாத், சப்கா விகாஸ்), ‘யாரையும் திருப்திப்படுத்தக்
கூடாது’ என்பது போன்ற முழக்கங்களுடன் உள்ள பாஜகவின் அதிகாரப்பூர்வமான கூற்றுகளும்கூட
மறைமுகமாக வெறுமனே உதட்டளவிலான சேவையையே மதச்சார்பின்மைக்கு ஆற்றி வருகின்றன. அது மதச்சார்பின்மை, நீதி ஆகியவற்றை
மையமாகக் கொண்டுள்ள பாரபட்சமற்ற கொள்கையை உள்ளடக்கி
இருந்தாலும் நடைமுறையில் நிலைமை முற்றிலும் நேர்மாறாகவே இருக்கிறது.
2011ஆம்
ஆண்டில் நடைபெற்றதொரு கருத்தரங்கிற்காக ‘இந்திய மதச்சார்பின்மையிடமிருந்து ஐரோப்பா
கற்றுக் கொள்ள வேண்டுமா?’ என்ற தலைப்பிலான கட்டுரையை எழுதியிருந்தீர்கள் 1 அல்லவா?
‘தன்னிலை விளக்கம்’ என்பதற்கு மாறாக ‘இந்திய அரசு அடிக்கடி உணரத் தவறுகின்ற கருத்தின்
நியாயமான, அனுதாபமான வெளிப்பாடு’ என்று அந்தக் கட்டுரை இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். சுதந்திர இந்தியாவில்
‘அரசியலமைப்பிலிருந்து கொள்கை ரீதியான தூரம் என்ற கருத்தை இந்திய அரசு அங்கீகரிக்கத்
தவறிய’ வேளையில் எது திருப்புமுனையாக இருந்தது என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
அதில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று
இந்தியாவிடமிருந்து எதை ஐரோப்பா கற்றுக் கொள்ள முடியும் என்பது. இரண்டாவது இந்திய அரசின்
தோல்வி பற்றியது.
மத ஒருமைப்பாடு நிலைமைகளின் கீழ் ஐரோப்பாவில்
மதச்சார்பின்மை உருவானது என்பதை நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும். லத்தீன் கிறிஸ்தவ
உலகு சிதைவடைந்ததைத் தொடர்ந்து நடந்த மதப் போர்களில் மத வேறுபாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட
நீர்த்துப் போயின. ‘ஒரு மன்னர், ஒரு சட்டம், ஒரு நம்பிக்கை’ என்ற கொள்கை கேள்விக்குரியதானது.
மன்னர் தன்னுடைய மதத்தை பகிரங்கமாகக் கடைப்பிடித்தார். அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த
அனைவரும் அதற்கு இணங்கினர் அல்லது அவ்வாறு மாற்றப்பட்டனர். அவ்வாறு இருக்க முடியாதவர்கள்
அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர் அல்லது அழித்தொழிக்கப்பட்டனர். அதனால்தான் ஏதோவொரு
வகையில் வடக்கு ஐரோப்பா முழுவதும் புராட்டஸ்டன்ட்டுகளே இருப்பதைக் காண முடிகிறது. தெற்கு
ஐரோப்பா முழுவதும் பெரும்பாலும் கத்தோலிக்கர்களே இருக்கின்றனர். இடையில் ஒரு மிகச்
சிறிய, சிறிதளவிலான துண்டுப் பகுதியில் அதாவது ஜெர்மனியில் இரு மதங்களையும் சார்ந்த
கத்தோலிக்கர்களும், புராட்டஸ்டன்ட்டுகளும் இருக்கின்றனர். இருவருக்கும் அரசின் ஆதரவு
இருக்கிறது.
ஸ்பெயினில் இருந்து 1492ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட
பின்னர் ஐரோப்பாவில் இஸ்லாம் கிட்டத்தட்ட மறைந்தே விட்டது. யூதர்களுக்கு அது மிகவும்
கடினமான காலமாக இருந்தது. அவர்கள் கண்களுக்கு அகப்படாதவர்களாகினர். பெரும்பாலான யூதர்கள்
தொடர்ந்து மிக ஆபத்தான நிலையிலேயே இருந்து வருகின்றனர்; சில நேரங்களில் வரவேற்கப்பட்ட
அவர்கள் சில நேரங்களில் வெளியேற்றப்பட்டனர். பதினேழாம் நூற்றாண்டில் போலந்தில் உள்ள
ஒரு சிறிய பகுதி, ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் உள்ள கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளுக்கு
யூதர்களில் பெரும்பாலானோர் அனுப்பி வைக்கப்பட்டனர். மேற்கு ஐரோப்பா கிட்டத்தட்ட பிற
மதங்கள் எதுவுமில்லாமல் சுத்தப்படுத்தப்பட்டது.
பிற மதப்பிரிவுகளில் துன்புறுத்தலுக்குள்ளான
மக்கள் பலரும் அமெரிக்காவிற்குத் தப்பிச் செல்ல வேண்டியதாயிற்று. ஆக மத அரசுகளுடன்
உள்ள (அதிகாரப்பூர்வமாக குறிப்பிட்ட மதத்தை நடைமுறைப்படுத்தும்/ஆதரிக்கும் அரசுகள்)
மத ரீதியாக ஒரே மாதிரியான சமூகங்களாக அவை மாற்றம் கண்டன. அரசு, தேவாலயத்திற்கு இடையே
மிக நெருக்கமான இணைவு இருந்தது. இவையனைத்தும் நடந்த பிறகுதான் மதச்சார்பின்மைக்கான
செயல்முறை தொடங்கியது. மதச்சார்பின்மை அரசியல் திட்டமாக மாறியது. ஆதிக்க மதம் ஒன்றின்
சூழலிலேயே அது நடந்தது. அரசியல்ரீதியாக தலையிடுவதாக, சமூக ஒடுக்குமுறை கொண்டதாக அந்த
மதத்தின் தேவாலயம் மாறியதால் அரசிடமிந்து அதனைப் பிரிக்க வேண்டியிருந்தது. (மேற்கத்திய)
மதச்சார்பின்மை என்பது பிரதான ஒற்றை-மத சமுதாயத்திற்குள் தேவாலயம்-அரசு ஆகியவற்றிற்கிடையிலான
பிரிவினை என்ற அளவிலேயே இருந்தது.
முன்னாள் காலனிகளில் இருந்து வந்த மக்கள்
இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் குடியேறத் தொடங்கினர். அதற்கு முன்னெப்போதும்
இல்லாத வகையில் நவீன நிலைமைகளின் கீழ் முதன்முறையாக
நவீன ஐரோப்பா பன்முகத்தன்மையைக் கண்டது. அதன் மதச்சார்பின்மை அந்தப் பன்முகத்தன்மைக்கு
ஏற்றதாக இருக்கவில்லை. ஒருமைப்பாட்டிற்கு
ஆதரவாக, பன்முகத்தன்மைக்கு எதிராகப் பிறந்த ஐரோப்பாவின் மதச்சார்பின்மை இப்போது பன்முகத்தன்மையை
எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு வந்தது. ஆனால் இந்தியாவில் இருக்கும் மதப் பன்மை தனித்துவம்
கொண்டது. அது எப்போதும் நமது நிலப்பரப்பின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. உண்மை
எனக் கருதப்பட்டு ஒரு பொருட்டாக அது எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்திய மதச்சார்பின்மை
பன்முகத்தன்மைக்கு ஆதரவாகப் பிறந்தது. இந்த பன்முகத்தன்மைக்கு கடந்த இருநூற்றாண்டுகளில்
ஒரு குறிப்பிட்ட இன-தேசியவாதம் மட்டுமே சவால் விடுத்து வருகிறது. அதற்கு முன்பெல்லாம்
அது ஒரு பிரச்சனையாக இருந்ததே இல்லை. ஆக எந்த நாடுகள் யாரிடமிருந்து கற்றுக் கொள்ள
வேண்டும்? ஐரோப்பா இந்தியாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஐயோ! மிகவும் அசலான
ஒன்றை, மிக உயர்ந்த ஒன்றை நாமே கைவிடுகிறோம்...
இந்திய
மதச்சார்பின்மை தனித்தன்மையுடையது என்பீர்களா?
அது தனித்தன்மை வாய்ந்ததுதான். அசலாக இருப்பது
மட்டுமல்லாது போற்றத்தக்கதாகவும் இருக்கிறது. உலகமே எதிர்நோக்கிய ஒன்றாக அது இருந்தது.
ஆனால் அதனை இப்போது நாம் கைவிடுகிறோம். பதினாறு மற்றும் பதினேழாம் நூற்றாண்டு ஐரோப்பாவைப்
பின்பற்றுகிறோம். ஐரோப்பிய மாதிரியின் வழியில் ஒரு மதத்திற்கான ஏகபோகத்தை உருவாக்கி
நமது சொந்த சமூகத்தையே இன-மத ரீதியாகத் தூய்மைப்பபடுத்த முயன்று வருகிறோம். ஆனால் நடக்க
வேண்டியவை வேறு வழியிலேயே நிகழ வேண்டும். இந்தியர்கள் தங்களுடைய மதச்சார்பின்மையை ஐரோப்பாவிற்கு
அனுப்பி வைக்க வேண்டும். உண்மையில் அதையே அறிவாளிகள் அங்கீகரிக்கிறார்கள். அதனால்தான்
இந்தியச் சோதனை மீது அவர்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் இந்திய மதச்சார்பின்மையை
விரும்புகின்ற அதே நேரத்தில் இந்தியர்களோ தங்கள் சொந்த மதச்சார்பின்மையை நடைமுறையில்
செயல்படுத்த சில நேரங்களில் தவறுகிறார்கள்.
இந்தக்
கண்ணோட்டத்தில் தற்போதைய கற்பனைகளில், விவாதங்களில் இங்கிலாந்து அதிகாரப்பூர்வ கிறிஸ்தவ
நாடாக இருக்குமென்றால், இலங்கை அதிகாரப்பூர்வ பௌத்த நாடாக இருக்குமென்றால், அந்த நாடு அதிகாரப்பூர்வமாக அப்படி இருந்தால் - இந்தியாவும்
ஏன் அதிகாரப்பூர்வ ஹிந்து நாடாக இருக்கக் கூடாது என்ற ஒப்பீடு இருந்து வருகிறது. அதற்கு
உங்கள் பதில் என்ன?
அதிகாரப்பூர்வமாக பௌத்த நாடாக, சிங்களர்களுக்கானதாக
இலங்கை மாறிய போது அங்கு ஏற்பட்ட அழிவைக் கவனியுங்கள். அந்த நாடு உள்நாட்டுப் போரால்
சிதைக்கப்பட்டது. எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? இஸ்லாமிய நாடாகத் தன்னை அறிவித்துக்
கொண்ட பாகிஸ்தானைப் பாருங்கள். அங்கே இருக்கின்ற சிறுபான்மையினருக்கு அது மோசமான நாடாகவே
இருக்கிறது. ஹிந்துக்கள், சீக்கியர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல - தன்னுடைய
சொந்த மக்களுக்கே...
…
சொந்த முஸ்லீம் சிறுபான்மையினருக்கே…
ஆம். முஸ்லீம் சிறுபான்மையினருக்கே…. அகமதியாக்களைப்
பாருங்கள், ஷியாக்களைப் பாருங்கள். அவர்கள் அனைவரும் மோசமாக நடத்தப்படுகிறார்கள். அவை
இஸ்லாம் மதத்தின் வேறு வடிவங்களாகவே இருக்கின்றன. அவர்கள் தங்களைச் சார்ந்த உள் மற்றும்
'வெளி' சிறுபான்மையினருக்கு இழைத்து வரும் காரியங்கள் மிகக் கொடூரமானவையாக இருக்கின்றன.
பாகிஸ்தான் அரசு எவ்வளவு பலவீனமாக இருக்கிறது
என்று பாருங்கள். இலங்கையில் நடந்துள்ள பேரழிவைப் பாருங்கள். நாமும் அந்த வழியில் செல்ல
வேண்டும் என்று ஏன் விரும்புகிறீர்கள்?
நீங்கள்
நன்கு அறிந்து வைத்துள்ள இங்கிலாந்தை ஏன் பார்க்கக்கூடாது? நீங்கள் அங்கே பல்லியோல்
கல்லூரியில் இருந்தீர்கள்...
முதலாவதாக பன்முகக் கலாச்சாரம் இங்கிலாந்தில்
மிக வெற்றிகரமான நிகழ்வுகளில் ஒன்றாகும் என்பதைச் சொல்வேன். சற்றே கற்பனை செய்து பாருங்கள்
- இந்தியாவால் கூட அதைச் செய்ய முடியவில்லை. ரிஷி சுனக் பிரதமர், பாகிஸ்தான் முஸ்லீம்
ஒருவரே ஹிந்து. ஸ்காட்டிஷ் கட்சியின் தலைவராக இருக்கிறார். லண்டன் மேயராக பாகிஸ்தானியர்
இருக்கிறார். உலகின் அனைத்து இடங்களிலிருந்தும் வந்துள்ள ஏராளமானோர் அங்கே பாராளுமன்றத்தில்
இடம் பெற்றிருக்கின்றனர்.
தாங்கள் காலனித்துவப்படுத்தி வைத்திருந்த
கலாச்சாரங்களிலிருந்து ஏராளமானவற்றை ஆங்கிலேயர்கள் மிகச் சாதாரணமாகக் கற்றுக் கொண்டனர்
என்றே நான் உணர்கிறேன். இந்தியாவில் தங்களுக்கு முன்பிருந்த முகலாயப் பேரரசிடமிருந்தும்,
இந்தியாவில் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்களிலிருந்தும் அவர்கள் ஏராளமாகக் கற்றுக்
கொண்டனர். அதை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், இன்றைக்கும் அவர்களுடைய நடைமுறையில்
அது பிரதிபலித்துக் கொண்டுதானிருக்கிறது. மேலும் இங்கிலாந்தில் மதம் மிகவும் பலவீனமாகி
விட்டது. தேவாலயத்திற்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அங்கே மிகக் குறைவாகவே இருக்கிறது.
நம்பிக்கைக்கான அமைப்பு என்ற வகையில் கிறிஸ்துவம் மீதான நம்பிக்கை அங்கே நடைமுறையில்
இருக்கவில்லை. மதச்சார்பற்ற மனிதநேய நெறிமுறையே இருந்து வருகிறது. இந்த வகையான பன்முகக்
கலாச்சாரம் மற்றும் மதச்சார்பற்ற மனிதநேயம்
கொண்ட நாட்டில் கடந்த காலத்தில் இருந்த ஏதோவொன்றின் எச்சங்கள் இன்னும் எஞ்சியுள்ளன
- அவை ஏதோ...
சம்பிரதாயமானவை
என்று சொல்வீர்களா…
ஏறக்குறைய அவை சம்பிரதாயமானவைதான். இங்கே
பாருங்கள்… அங்கேயும் தற்போதைய மன்னர் அனைத்து மதங்களுக்கும் தான் மன்னராக இருக்க விரும்புவதாக
ஆரம்பத்தில் கூறத் தொடங்கினார். அது நேரடியாக இந்திய அனுபவத்திலிருந்து கற்றுக் கொண்டதில்லை
என்றாலும் மறைமுகமாக இந்தியாவிடம் கற்றுக்கொண்டவற்றின் பிரதிபலிப்பாகவே இருக்கிறது.
ஆக முன்னாள் காலனியிடமிருந்து கற்றுக் கொள்ள முயலுகின்ற நாட்டிற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாக
பிரிட்டன் இருக்கிறது என்றே கருதுகிறேன். இதுபோன்ற ஐரோப்பிய நாடுகளில் பெரும்பாலானவை
மதச்சார்பற்ற மனிதநேய நெறிமுறைகளையே தங்களிடம் கொண்டுள்ளன. ஒரு மதத்துடன் அவர்கள் நிறுவன
ரீதியாக இணைக்கப்பட்டிருக்கிறார்களா இல்லையா என்பது முக்கியமில்லை என்று கூறுமளவிற்கு
அவர்களுடைய மதம் அங்கே பலவீனமடைந்திருக்கிறது.
கடந்த பத்து அல்லது இருபது ஆண்டுகளாக வலுவான
வலதுசாரி இயக்கங்கள் ஐரோப்பாவில் தோன்றியுள்ளன. ஐரோப்பாவில் நிலவுகின்ற இஸ்லாமிய வெறுப்பு
நிச்சயம் கவலையளிப்பதாகவே இருக்கிறது. பிரிட்டனில் அது குறைவாக இருப்பதாகவே சொல்வேன்.
அது மிகவும் நல்லது, அதற்கு கடவுளுக்கே நன்றி சொல்ல வேண்டும்! பிரெஞ்சுக்காரர்கள் வித்தியாசமானவர்கள்.
மிகவும் பிடிவாதமான மதச்சார்பற்றவர்கள். முறைப்படியாக அல்லது முறைசாராது குடியேறியுள்ள
அனைவரிடமும் அவர்கள் காட்டுகின்ற அணுகுமுறை மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது. பல நாடுகளிலும்
இதே நிலைமைதான் உள்ளது. ஸ்வீடனைப் பாருங்கள். அங்கே மிக நன்றாகவே அது தொடங்கியது. அவர்கள்
தங்களுடைய சொந்த தேவாலயக் குழுவைக்கூட குலைத்தனர். ஆனால் இப்போது வலதுசாரி வழியில்
சென்று கொண்டிருக்கிறார்கள். எனவே இவையனைத்தும் ஆபத்தான, நிலையற்ற விஷயங்களாகும். அவற்றை
எதிர்த்து நாம் எப்போதும் போராட வேண்டும்.
ஆக
பிரிட்டிஷ் கூட்டரசு போன்ற நாடுகள் அதிகாரப்பூர்வமாக கிறிஸ்தவ நாடுகளாக இருக்கின்றன
என்ற பிரபலமான கற்பனை தவறான கருத்துடன் உள்ளதா?
ஆம். அதிகாரப்பூர்வமாக அவர்கள் கிறிஸ்தவர்களாக
இருப்பது உண்மைதான். ஆனாலும் நடைமுறையில், வேறு பல வழிகளில் அது மட்டுமே போதாது. மீள
முடியாதது என்று அதனைச் சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. புலம்பெயர்ந்தோருக்கு எதிராக,
ஹிந்து அல்லது இஸ்லாத்திற்கு எதிராக மாறி பத்து ஆண்டுகளில் இன்னும் வலுவாக கிறிஸ்தவத்திற்கு
ஆதரவாக மாறி விடும் வலதுசாரி இயக்கங்களைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள். இதுபோன்ற
பலவீனத்துடன் (அரசுக்கும் மதத்திற்கும் இடையில்) உள்ள நிறுவனம் மேலும் வலுவடைந்து இங்கிலாந்திற்கு
பிரச்சனைகளை உருவாக்கத் துவங்கலாம். அது நடைபெறலாம். எனவே அந்த நிறுவனத்தை முற்றிலுமாக அகற்றுவது
அல்லது குறைந்த பட்சம் இந்தியாவில் இருப்பதைப் போல பல்வேறு வகையிலான நிறுவனங்களை உருவாக்குவதே
சிறந்தது எனக் கருதுகிறேன். அங்கே அனைத்து மதங்களும் அங்கீகரிக்கப்படும். இந்தியாவில்
அனைத்து மதச் சமூகங்களையும் குடியரசுத் தலைவர் பாதுகாக்க வேண்டும் என்றிருப்பதைப் போல
அங்கே மன்னர் அனைத்து மதங்களுக்கும் தலைவராக இருக்கட்டும். ஒரு மதத்திற்கானவராக இல்லாமல்,
நாம் முயன்று வருவதைப் போல அவர் அனைத்து மதங்களுக்கான சின்னமாக இருக்கட்டும்.
அனைத்து
மதங்களைச் சார்ந்த மதத் தலைவர்களும் பங்கேற்ற சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவும்
கூட அந்தத் திசையையே சுட்டிக்காட்டியது. அதுபோக இந்திய ஆளும் கட்சி பெரும்பாலும் பாரம்பரிய
விழுமியங்களைப் பற்றி பேசி வருகிறது. உலக அரசியலில் ‘பாரம்பரிய விழுமியங்களுக்குத்
திரும்பிச் செல்வது’ குறித்த அழைப்பு பல இடங்களிலிருந்தும் அடிக்கடி வருகிறது. இந்தியச்
சூழலில் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தை எவ்வாறு வரையறுப்பது அல்லது மறுவரையறை செய்து
கொள்வது?
இந்த பாரம்பரியம்-நவீனத்துவம் குறித்த
கட்டமைப்பு இப்போது அதிகம் சோர்வையே ஏற்படுத்துகிறது. இந்தக் கட்டமைப்பு பத்தொன்பதாம்
நூற்றாண்டிலே நடைமுறைக்கு வந்தது. சில வழிகளில் கல்வியாளர்களாகவும் இருந்த பிரிட்டிஷ்
காலனித்துவ அதிகாரிகளே அதனைக் கண்டறிந்தனர். 'இந்தியாவை விட்டு நாம் வெளியேற வேண்டும்.
தங்களுடைய சொந்த நடைமுறைகளின்படி இயங்குவதற்கு நாம் அவர்களை அனுமதிக்க வேண்டும் அவர்கள் பாரம்பரியம் மிக்கவர்கள். அதனை நம்மால் எதுவும்
செய்து விட முடியாது' என்று அவர்களில் சிலர் வாதிட்டனர்.. கூடுதலாக இந்தியப் பாரம்பரியம்
சீர்திருத்தப்பட வேண்டும் என்று நினைத்த தாராளவாதிகளும் இருந்தனர்.
…‘வெள்ளைக்காரர்களின்
சுமை’? …
… ஆமாம். அவர்கள் ‘இந்தியர்களை நாகரீகப்படுத்த
வேண்டும்’ என்று எண்ணியவர்கள். ஆக குறைந்தபட்சம் இந்தியாவில் - நவீனத்துவம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றுக்கு
இடையிலான ஒட்டுமொத்த வேறுபாடும் பிரிட்டிஷ் காலனித்துவ மானுடவியலாளர்கள், நிர்வாகிகளாலேயே
கண்டறியப்பட்டது. இப்போது அது குறித்து எனக்கு ஆர்வம் இல்லை. அதாவது நாம் நீண்ட கால
அளவிலே சிந்திக்க வேண்டும் என்கிறேன். அவை எப்பொழுது தோன்றின, எந்த அளவிற்குத் தொடர்ச்சியானவை
என்பதைப் பொருட்படுத்தாத பல முன்னோக்குகள், உலகக் கண்ணோட்டங்கள் இருப்பதாகவே கருதுகிறேன்.
நீண்ட காலமாக இந்தியாவில் கடந்த காலங்களில்
மேற்கொள்ளப்பட்டு வந்தவை மீதான விமர்சனக் கண்ணோட்டத்தை அல்லது இந்தியாவின் ஒரு பகுதியாக
இல்லாத வகையில் அவற்றை முறித்துக் கொள்வதை ஏதாவதொரு காலகட்டத்தில் நாம் மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் அந்த நேரத்தில் அது மக்கள் அனைவரின் கூட்டுத் தேர்வாக இருக்க வேண்டும்.
எனது சமீபத்திய புத்தகத்திற்கு என்னை இது
இட்டுச் செல்கிறது. இந்தியாவிற்கென்று மத-தத்துவ நடைமுறைகள், அனுபவங்கள் இருந்தன என்று
நான் கருதுகிறேன். நமக்கென்று பல பாதைகள், மார்க்கங்கள் இருந்தன. அவற்றில் சில ஒரேயொரு
கடவுளைச் சார்ந்தும், வேறு சில ஒன்றுக்கு மேற்பட்ட
கடவுளர்களைச் சார்ந்தும் இருந்தன. மேலும் பலர் சுயாதீனமாக கடவுள், தெய்வங்கள் அல்லது
பெண் தெய்வங்கள் என்ற சிந்தனைகளே இல்லாமல் இருந்தனர். வேதங்களுக்கான மீமாம்சா விளக்கங்களில்கூட
கடவுள் என்று எதுவும் காணப்படவில்லை. பௌத்தம், சமணம், சார்வாகம் ஆகியவை கடவுள் இல்லாதவை.
பொது சகாப்தத்தின் முதல் ஆயிரம் ஆண்டுகளின் இரண்டாம் பாதி வரையிலும் இந்திய சமய-தத்துவக்
கண்ணோட்டங்களின் மிகப் பெரும்பகுதி கடவுள்கள் என்று எதுவும் இல்லாமல் சுதந்திரமாக …
நிறுவனமயமாக்கப்பட்ட
மதம் இல்லாமலா?
ஆம் மதமே இல்லாமல்
மதமே
இல்லாமலா?
ஆம். மதம் இல்லாமல்தான்... மதம் என்றால்
என்ன? ஐரோப்பாவில் மதம் ஆரம்பத்தில் பதினாறு-பதினேழாம் நூற்றாண்டில் (அ) பரஸ்பரம் விலக்கி
வைத்துக் கொண்டு ஆனால் தங்களுக்குள் அவசியம் முரண்படுவதாக (ஆ) விரிவானதாக (இ) மெய்மை
குறித்து தங்களிடமுள்ள கருத்திற்கு மட்டும் பிரத்தியேகமான விசுவாசத்தை வேண்டுவதாக
(ஈ) அதே நேரத்தில் அரசுடன் வலுவான கூட்டணியுடன் இருந்த கூட்டு நிறுவனங்களை (நிறுவனமயமாக்கப்பட்ட
சமூகங்களை) குறிப்பதாகவே இருந்தது. இந்தப் பொருளில் இந்தியாவில் பதினாறு-பதினேழாம்
நூற்றாண்டில்கூட மதம் என்று எதுவும் இருக்கவில்லை.
இரண்டாவதாக மதம் என்பது ஒரு லத்தீன் சொல்.
தத்துவம் என்பது கிரேக்கச் சொல். ஆரம்பகாலத்து இந்தியச் சிந்தனைகள், செயல்முறைகள் எதுவும்
இந்த இரண்டுடனும் பொருந்திப் போகவில்லை. பௌத்தம் ஒரு மதமா அல்லது தத்துவமா? உங்களால்
அதைச் சொல்ல முடியாது...
அந்தக்
காலகட்டத்தில் நடந்தவற்றை எதிர்த்து நடந்த போராட்டம் அது.
இல்லை- நான் அவ்வாறு சொல்லமாட்டேன். அதாவது
அது பிராமண வேதச் சடங்குகளுக்கு எதிரான போராட்டம்தான்
என்றாலும் பொதுவான எதிர்ப்பு அல்லது இயக்கம் என்று அதனைக் கூற மாட்டேன். அதாவது ஆரம்பகால
பௌத்தம் உண்மையில் கூடிவாழ விரும்பாத சமூகமாகவே இருந்தது. அது நிச்சயமாக பிராமண வேத
சடங்குகளுக்கு எதிராக இருந்தது என்றாலும் சமூக எதிர்ப்பு இயக்கமாக இருந்ததா எனத் தெரியவில்லை.
அசோகர் பிராமணர்கள்-சாமனர்கள் என்ற ஒரு சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்தினார். சாமனர்கள்
தங்கள் உலகத்திலிருந்து விலகி அலைந்து திரிபவர்கள். அதில் சடங்குகளில் ஏமாற்றமடைந்த
சில பிராமணர்களும் அடங்குவர். அவர்கள் பெரும்பாலும் பௌத்தர்கள், ஜைனர்கள், அஜீவிகர்களாக
இருந்தனர். வேத சடங்குகள் உள்ளிட்ட பல சடங்குகளைப் பின்பற்றுபவர்களாக பிராமணர்கள் இருந்தனர்.
‘இருவரையும் நான் சமமாகவே மதிக்கப் போகிறேன்’ என்று அசோகர் இன்னும் ஒரு படி மேலே சென்றார்.
அசோகரால் அதிகம் ஈர்க்கப்பட்டு அவருடைய அரசியல்
சிந்தனைகள் குறித்து நான் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.
எந்தவொரு
தரநிலை கொண்டும் அவரை 'நவீனமானவர்' என்று கருத
முடியும்.
ஆம். இப்படிச் சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு
முன்பு வாழ்ந்திருந்தாலும் அசோகர் நவீனம் என்று நாம் இன்றைக்குக் கருதுகின்ற சிந்தனையின்
உருவகமாக இருக்கிறார். நவீனத்துவம் குறித்து நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏற்கனவே
‘பண்டைய இந்திய மதச்சார்பற்ற யுகம்?’2 என்ற
தொகுப்பில் நான் கட்டுரை எழுதியிருக்கிறேன். மதச்சார்பின்மை, நவீனத்துவம் ஆகியவை ஒன்றிலிருந்து
மற்றொன்று பிரிக்கப்பட வேண்டும் என்ற வாதத்தை அதில் முன்னிறுத்தியிருந்தேன். ஏன் எப்போதும்
நவீனமாக்கலும், மதச்சார்பின்மையும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டவை என்றே கருதுகிறீர்கள்
(அதாவது) 'நவீனத்துவத்தைக் கொண்டு வரும் தருணத்தில் மதச்சார்பின்மையையும் கொண்டு வருகிறீர்கள்'.
‘நவீனத்துவம்’இல்லாத ஆனாலும் மதச்சார்பற்று
இருந்த கடந்த கால மதச்சார்பின்மை பற்றி ஏன் உங்களால் சிந்திக்க முடியவில்லை? அது அவ்வாறாக இருந்தது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். அது ஆய்வு செய்யப்பட வேண்டிய கருதுகோளாக
இருக்கிறது. ‘பண்டைய இந்திய மதச்சார்பற்ற யுகம்?’ என்ற தொகுப்பில் நான் எழுப்பியுள்ள
சவாலான கேள்வி இது. அது நவீனத்துவமும், மதச்சார்பின்மையும் மிக நெருக்கமாகப் பின்னிப்
பிணைந்துள்ளன என்ற கருத்துடன் சார்லஸ் டெய்லர் 2007ஆம் ஆண்டில் எழுதிய ‘ஒரு மதச்சார்பற்ற
யுகம்’3 என்ற புத்தகத்திற்கு நான் எழுதிய பதிலாகும். அவரது கருத்துக்கு எதிர்வினையாற்றியிருந்தேன்.
இப்போதும் நவீனத்துவம் இல்லாத மதச்சார்பற்ற இந்திய யுகத்தை நம்மால் நினைத்துப் பார்க்க
முடியும் என்று அதில் கூறியிருந்தேன். அதற்கு மாறாக நாம் நவீனத்துவம் என்ற கருத்தை
மறுபரிசீலனை செய்திட வேண்டும்.
பேராசியர்
பார்கவா, நீங்கள் ‘நவீனமானவை அனைத்தும் சிறப்பாக இருக்க வேண்டிய தேவையில்லை, பாரம்பரியமானவை
எல்லாம் கெட்டதாகவும் இருக்க வேண்டியதில்லை...’ என்று அப்போது சொன்னீர்கள்
எது பாரம்பரியமானது, எது நவீனமானது என்பதே
இங்கே வெளிப்படையாக கேள்விக்குரியதாக இருக்கிறது.
…
ஆனால் பாரம்பரியமான பண்டைய இந்தியாவே முழுமையான தீர்வைக் கொடுத்தது என்று கூறப்படுவது
பற்றி என்ன சொல்கிறீர்கள்..
கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக
இதுபோன்று வெளியிடப்படும் மிக எளிமையான கருத்துகளைப் பற்றி என்ன சொல்வது? தாங்கள் விரும்பும்
எதை வேண்டுமானாலும் மக்கள் கூறலாம். அவர்களுக்கு அவ்வாறு சொல்வதற்கான உரிமைகள் அனைத்தும்
இருக்கின்றன. ஆனாலும் பாருங்கள், இந்தியர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய, இந்த
உலகமே பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடிய பல விஷயங்கள் இந்தியாவில் இருக்கின்றன - இல்லையா?
ஆனால் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு அவற்றில் இடம் இருக்காது... இந்தியாவில் வலுவாக இருந்து
வரும் சில நாத்திக மரபுகளைக் கவனியுங்கள்; அல்லது கணிதம், வானியல், இலக்கிய மரபுகளைக்
கவனியுங்கள்; காவியங்கள் பின்னர் கபீர், ரவிதாஸின் கவிதைகளைக் கவனியுங்கள். ஆரம்பகட்ட
வேத காலத்திலும்கூட - நல்லது அல்லது கெட்டது என்று நான் இதைக் கூறவில்லை - ஒரு வாழ்க்கை, ஒரு பிறப்பு, ஓர் இறப்பு என்ற சிந்தனையே
நிச்சயம் இருந்தது.
இறப்பிற்குப்
பிறகு மறுமை வாழ்வு இல்லை
இறப்பிற்குப் பிறகான வாழ்க்கை எதுவுமில்லை.
பொது சகாப்தத்திற்கு முன் ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டில் கர்மா கோட்பாடு இல்லை என்ற
புத்த மதம் சார்ந்த ஒரு வகையான மகத சிந்தனை பிறந்தது. நவீனத்தை ஒத்த ஏராளமான விஷயங்கள்
கடந்த காலத்திலும் இருந்துள்ளன - அவற்றில் சில போற்றுதலுக்குரியவையாகவும் இருந்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டில் அல்லது இருபத்தியோராவது நூற்றாண்டில் மட்டுமே நினைத்துப் பார்க்கக்
கூடிய, அதற்கு முன்னர் நடந்திருக்கவே முடியாத விஷயங்களைக் கண்டறிய வேண்டிய தேவை நமக்கு
இல்லை. இது என்ன வகையிலான தாழ்வு மனப்பான்மை? உங்களுடையவையாக இல்லாதவற்றை நீங்கள் ஏன்
உங்களுக்குச் சொந்தமானவையாக்கிக் கொள்ள வேண்டும்? நாம் ஏன் அதைச் செய்ய வேண்டும்? உங்களுக்கு
மேலும் ஒரு விஷயத்தையும் சொல்கிறேன்: எந்தவொரு கலாச்சாரமும் தங்களுக்கே முழுவதுமாகச்
சொந்தம் என்று எவரும் உரிமை கோர முடியாது. கருத்துகளின் கலப்பு, புழக்கம், பிராந்தியங்களைத்
தாண்டி நகர்வது போன்று ஏராளமாக நடைபெறுகின்றன. தொடர்ந்து எப்போதும் அவை நடைபெற்றுக்
கொண்டேதான் இருக்கின்றன! ஆரம்ப காலகட்ட உலகளாவிய வரலாறை குறைத்து மதிப்பிடத் தேவையில்லை.
தற்கால
இந்திய ஜனநாயகத்தில் அனைத்தும் எண்கள் விளையாட்டாகவே இருக்கின்றன. உத்தரப் பிரதேசம்
மற்றும் அதன் அண்மைப் பகுதிகள் போதுமான நாடாளுமன்ற இடங்களைக் கொண்டுள்ளதால் அரசியல்ரீதியாக
அவை அதிகாரத்திற்கான பாதையாக இருக்கின்றன. அந்தப் பகுதி வடகிழக்கு மலைகளிலிருந்து தெற்கு
முனை வரை பரவியுள்ள இந்தியா போன்றதொரு பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் மதச்சார்பின்மை
குறித்த உரையாடலை வடிவமைத்து தேசிய அளவிலான உரையாடல், கூட்டு எதிர்வினை மீது தாக்கத்தை
ஏற்படுத்தியிருக்கிறதா?
இது கடினமான கேள்வி. இதில் நான் சொல்லக்கூடியது
ஒன்றே ஒன்றுதான்: உத்தரப் பிரதேசம் மற்றும் அதன் அண்மைப் பகுதிகளில் உள்ள பிராமண மரபு
மிகவும் வலிமையானது.
இப்போதுமா?
இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. உத்தரப்
பிரதேசம் மற்றும் பிற வட இந்திய மாநிலங்களில் சாதி அமைப்பின் இறுக்கம் மிக வலுவாக உள்ளதை
நாம் அறிவோம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தெற்கில் தொடங்கிய இயக்கம் கிட்டத்தட்ட
ஒரு நூற்றாண்டுக்குப் பிறகே வட இந்தியாவில் நடக்கிறது. அதுவும் வெற்றிகரமாக இருக்கவில்லை.
(அ) பாஜகவின் எண்ணிக்கை (ஆ) இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகளுக்கு நடந்து
கொண்டிருப்பவை (இ) தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்குள் பிரிவினை (ஈ) அந்தப்
பிரிவினைக்கு உயர்சாதி அரசியல் அமைப்புகள் எவ்வாறு ஆதாரமாக உள்ளன போன்றவை பிராமணிய
மரபுவழி ‘கீழ்’சாதிகளை ஏறக்குறைய தன்னுடன் ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பதையே பிரதிபலிக்கின்றன.
அதனால்தான் அது வெற்றிகரமாக இருக்கவில்லை. எனவே ஆம் – உத்தரப்பிரதேசம் ஒரு பெரிய, மிகப்
பெரிய பிரச்சனை என்றே சொல்வேன். அவ்வாறு சொல்லும் போதும் அதனை உத்தரப்பிரதேசத்துடன்
மட்டுமே இணைந்த பிரச்சனை என்றும் நான் கூற
மாட்டேன்.
திருப்பத்தின்
இரண்டு குறிப்பிட்ட புள்ளிகளை எடுத்துக் கொள்ளாலாம். ஒன்று - 1980களில் திருமதி காந்தி
ஹிந்து அடையாளத்தை முன்னிறுத்தினார் என்று உங்கள் எழுத்துகளில் இதைக் குறிப்பிட்டுள்ளீர்கள்,
நான் தவறாகச் சொல்கிறேன் என்றால் தயவுசெய்து என்னைத் திருத்துங்கள். பின்னர் ஷா பானோ
(மத்தியப் பிரதேசம்), மற்றும் பாபர் மசூதி
(உத்தரப்பிரதேசம்) விவகாரங்கள் தேசிய அளவிலான உரையாடல்களாக மாறின.
நீங்கள் சொல்வது சரிதான். அதை நான் நினைவில்
கொண்டிருந்திருக்க வேண்டும். அவை உத்தரப்பிரதேசத்துடன் இணைந்தவை. ஆனால் பஞ்சாப், ஜம்முவிலும் ஹிந்து அடையாளம் (திருமதி.காந்தியால்
1980களில்) முன்னிறுத்தப்பட்டதை மறந்து விட வேண்டாம். என்னுடைய நினைவு சரியாக இருக்குமென்றால்
சங்பரிவார் பிரிவுகள் ஆபரேஷன் புளூஸ்டார் நடவடிக்கையை மறைமுகமாக ஆதரித்தன. ஹிந்துக்களின் பெருத்த ஆதரவு
அப்போது அந்த நடவடிக்கைக்கு இருந்தது.
அது (ஆபரேஷன் ப்ளூஸ்டார்) மிகவும் கலவையான
செயல். ஒரு வகையில் அது மிகச் சிறப்பான மதச்சார்பற்ற
செயலாகவும் இருந்தது. அனைத்திற்கும் மேலாக காலிஸ்தானிகள் பொற்கோவிலை ஒரு கோட்டையாக
மாற்றியிருந்தனர். வெடிமருந்துகளுக்கான சேமிப்பு (ஆயுதங்களுக்கான பெட்டகம்) இடமாக அது
இருந்தது. கோவிலை அதுபோன்று கோட்டையாக மாற்றும் போது அரசு அதனைக் கண்டு கொள்ளாமல் இருக்க
வேண்டும் என்று யாராலும் சொல்ல முடியாது. அவ்வாறு திட்டமிடப்பட்டதோ இல்லையோ ஆனால் அது
கோவிலை அழிப்பதிலே சென்று முடிந்த போது சங்கடத்தை ஏற்படுத்தியது அதுவே. சீக்கியர்களை
அதிகம் பாதித்தது. போராளிகளிடம் இருந்து பொற்கோவிலை விடுவிக்க வேண்டும் என்பதை பெரும்பான்மையான
சீக்கியர்கள் ஆதரித்தே இருந்திருப்பார்கள். ஆனால் அப்போது அதைக் காட்டிலும் கூடுதலாக
நடந்தது. அதற்கு யார் பொறுப்பு? அதுபற்றி எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் ஹிந்து
அடையாளம் முன்னிறுத்தப்பட்டது. தொடர்ந்து அது முன்னிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து
உத்தரப்பிரதேசம் மற்றும் அதன் அண்மைப்பகுதிகளிலும் அது தொடர்ந்தது. ஆனால் அது அந்தப்
பகுதியில் தொடங்கவில்லை. வேறு இடத்திலேயே தொடங்கியது.
ஷா பானோ தீர்ப்பு மாறியது, பாபர் மசூதி/ராம
ஜென்மபூமி பிரச்சனை தொடங்கி வைக்கப்பட்டது, சாத்தானின் வேதங்கள் நூல் மீது விதிக்கப்பட்ட
தடை - ஈரான் தடை செய்வதற்கு முன்பே அந்த நூலைத் தடை செய்த முதல் நாடுகளில் ஒன்றாக இந்தியா
இருந்தது - இவையனைத்தும் மிகவும் முட்டாள்தனமான உண்மையில் அரசியல்ரீதியாக மிகக் கொடூரமான
செயல்களாக இருந்தன. அங்கேதான் காங்கிரஸின் அழிவு தொடங்கியது.
பாரதிய ஜனசங்கம் (பாரதிய ஜனதா கட்சியின்
முன்னோடி) 1970களின் பிற்பகுதியிலிருந்து எண்பதுகளின் முற்பகுதி வரை மாறிக் கொண்டே
இருந்ததை மறந்து விடக் கூடாது. ஜனதா கட்சியின் அங்கமாக மாறிய அந்தக் கட்சி தன்னுடைய
ஹிந்துத்துவா கொள்கையை மென்மையாக்கிக் கொண்டது. (மறைந்த பிரதமர்) வாஜ்பாய் மற்றும்
(முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர்) அத்வானி போன்றவர்களும்கூட தங்களுடைய நிறங்களை மாற்றிக்
கொண்டு ஜனதா அரசில் பங்கேற்றனர். சோசலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் உடனும் அவர்களுக்கு
ஒரு கலப்பு ஏற்பட்டது. மாற்றத்திற்கான வாய்ப்பு உருவானது. ஆனால் திருமதி.காந்தி ஹிந்து
அடையாளத்தை முன்னிறுத்தியதால் அந்த மாற்றம் தடைபட்டது. திருமதி.காந்தி அந்த அடையாளத்தை
முன்னிறுத்திய போது, பாரம்பரியமாக அதனை முன்னிறுத்தி வந்தவர்கள், அந்த அடையாளத்தை எப்போதும்
தொடர்ந்து முன்னிறுத்தி வந்தவர்கள் மீண்டும் அந்த அடையாளத்தை நோக்கிச் செல்ல நினைத்தார்கள்.
திருமதி.காந்தி அதைச் செய்யப் போகிறார் என்றால், அதை இன்னும் சிறப்பாக இவர்களால் செய்ய
முடியும். எண்பதுகளின் அந்த முழுப் பத்தாண்டையும் இன்னும் ஆழமாகப் படிக்க வேண்டும்.
அதுதான் உண்மையில்…
...திருப்பத்திற்கான
முதல் புள்ளி?
…மீண்டும் நேற்று (சென்னையில் ஆகஸ்ட்
17, 2023 அன்று நடந்த பொது விவாதத்தின் போது) நான் குறிப்பிட்டதுதான். அதே போன்று 1979ஆம்
ஆண்டு நடந்ததையும் நாம் மறந்து விடக்கூடாது. அது அரசியல் இஸ்லாம் பிறந்த காலகட்டம்.
ஆயதுல்லா
(கொமேனி) தருணம்?
ஆயதுல்லா, வெளிப்படையாக நடைபெற்ற சன்னி-ஷியாவின்
பிரிவு என்று சவூதி அரேபியாவில் மாற்றங்கள் தொடர்ந்தன. அரசியல் இஸ்லாத்தின் மேலாதிக்கக்
குரலாக யார் இருக்கப் போகிறார்கள்? அப்போதுதான் அந்த விஷயம் துவங்கியது. அந்த வகையான
மறுமலர்ச்சி - உண்மையில் தெற்காசியாவின் பிற பகுதிகளில் மதம் தேசியவாத வடிவத்தை எடுத்துக்
கொண்ட இடமாற்றம் அப்போது நிகழ்ந்தது. உலகளாவிய மற்றும் தேசிய அளவிலான அந்த உத்வேகம்
ஒன்றாக வருவதைத் தவிர்த்திருக்க முடியும் என்று நான் கருதவில்லை. ஆனால் பின்னோக்கிப்
பார்க்கும் போது அப்போது ஆரம்பித்தவையே பின்னர் பெரும் வேகத்துடன் முன்னோக்கி நகர்ந்து,
இப்போது நாம் இருக்கும் திசைக்கு அழைத்துச் சென்றுள்ளன என்று கூற முடியும்.
கடந்த
மாதம் வெளியான உங்களின் மிகச் சமீபத்திய புத்தகத்தின்4 தலைப்பின் அடிப்படையில் இந்திய
மதச்சார்பின்மையை எவ்வாறு மறுபரிசீலனை செய்வீர்கள்?
மதங்களுக்குள் இருப்பவற்றிடமிருந்து மதங்களுக்கு
இடையிலானவற்றைத் துண்டிக்காமல் இருப்பது எந்த அளவிற்கு முக்கியமாக உள்ளது என்பது பற்றி
பேசிய போது இந்தப் புதிய சிந்தனை துவங்கியது. மதச்சார்பின்மையைப் பாதுகாக்கும் சுமை
முஸ்லீம் சார்பு மதச்சார்பின்மைவாதிகள் மற்றும் முஸ்லீம்கள் மீது மட்டுமே இருப்பது
போலத் தோன்றுவதால் மதங்களுக்கு இடையிலான பிரத்தியேகக் கவனம் துரதிர்ஷ்டவசமானது என்றே
நினைக்கிறேன். முஸ்லீம்கள் மீதான ஹிந்து ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவது, சிறுபான்மையினரின்
உரிமைகளைப் பாதுகாப்பது போன்றவற்றை மதங்களுக்கு இடையிலான முக்கியமான பிரச்சனை என்றாக்கும்
போது மதச்சார்பின்மை ஹிந்துக்களுக்கானதில்லை,
அது முஸ்லீம்களுக்கு மட்டுமேயானது என்பது போலத்
தோன்றி விடுகிறது.
மேற்கு ஐரோப்பாவுக்கு மீண்டும் திரும்பலாம்.
அங்கே எப்போதும் தேவாலயத்திற்கு எதிராகவே மதச்சார்பின்மை போராடி வந்திருக்கிறது. இந்தியாவில்
அந்தத் தேவாலயத்திற்கு நிகராக எது இருக்கிறது? சாதி, மதங்களுக்கு இடையிலான ஆதிக்கமே
முக்கியமானதாக உள்ளது. ஐரோப்பாவில் அடக்குமுறை சமூகங்களிடமிருந்து தனிநபர்களைப் பாதுகாப்பது,
தலையீடு செய்யும் தேவாலயத்திடமிருந்து அரசின் பாதுகாப்பைப் பெறுவதாகவே மதச்சார்பின்மை இருந்தது.
தனிமனிதரின் தனியுரிமையைத் தகர்க்கின்ற
சாதி அமைப்பையும், ஹிந்து ஒழுங்கமைப்பில் ஒரு சாதி மற்றொரு சாதி மீது செலுத்தி வரும்
ஆதிக்கத்தையும் எதிர்க்க வேண்டும். அதற்காக பெரும்பான்மையினருக்கு எதிரான இயக்கத்துடன்
சாதிய எதிர்ப்பு இயக்கங்கள் இணைய வேண்டும். பெரும்பான்மையினருக்கு எதிரான இயக்கம் சாதிய
எதிர்ப்பு இயக்கங்களிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ளக் கூடாது. உண்மையில் அவை
தங்களுக்குள் அடிக்கடி சண்டையிட்டுக் கொள்கின்றன. தலித்துகள் முஸ்லீம்களுக்கு எதிராகக்
குரல் கொடுப்பதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.
மேலும் மதங்களுக்கு இடையிலான ஆதிக்கம்
மற்றும் மதங்களுக்குள் இருக்கும் ஆதிக்கம் ஆகியவற்றிடமிருந்து பெண் விடுதலைக்கான இயக்கத்தை
எவ்வாறு பிரிக்க முடியும்? அவர்கள் அனைவரும் ஒரு பிரிவின் கீழ் ஒன்றிணைய வேண்டும்.
அப்படிச் சொல்வதால் தங்களுடைய தனித்தன்மைகளை அவர்கள் மறந்து விட வேண்டும் அல்லது அவை
களையப்பட வேண்டும் என்று நான் கருதுவதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர்கள் ஒன்றிணைய
வேண்டும். இருப்பினும் மதச்சார்பின்மையை சிறுபான்மையினரின் குறிப்பாக முஸ்லீம்களின்
உரிமைகளைப் பாதுகாப்பது என்று அடையாளப்படுத்தி, குறைத்து மதிப்பிடுவதன் மூலம் மதச்சார்பின்மையின்
ஒட்டுமொத்த சுமையை நாம் அவர்கள் மீதே சுமத்துகிறோம்.
ஹிந்துக்கள் ‘அது எங்களுக்கானது இல்லை’ என்று தவறாக உணர ஆரம்பிக்கலாம். இதுபோன்ற சிந்தனையை அவர்கள் ’அது நமக்கு எதிரானது’ என்று அதற்குப் பிறகு
திரித்துக் கொள்ளக் கூடும். அதன் விளைவாக ‘மதச்சார்பின்மை
நமக்கு எதிராகச் செயல்படுகிறது’ என்று ஒட்டுமொத்த ஹிந்துக்களும் உணரத் தொடங்கலாம்.
அது
அவ்வாறில்லை...
அது அவ்வாறில்லைதான். மதச்சார்பின்மை ஹிந்துக்களிலேயே
வெறியர்களாக, தீவிரவாதிகளாக இருப்பவர்களிடமிருந்து, சொந்த சாதிக் குழுக்களிடமிருந்து,
சாதிகளின் ஆதிக்கத்திடமிருந்து, பழமைவாதத்திடமிருந்து இருந்து ஹிந்துக்களைப் பாதுகாக்கும்
அளவிற்கே உள்ளது. அதுவே ஐரோப்பாவில் மதச்சார்பின்மை முன்வைக்கும் உண்மையான நோக்கமாக
இருக்கிறது. இந்தியா போன்ற பரந்துபட்டதொரு
நாடு வேறு ஒன்றையும் - மதங்களுக்கு இடையில்
ஆதிக்கம் செலுத்துகின்ற வாய்ப்பையும் அத்துடன் கூடுதலாகச் சேர்த்துக் கொண்டுள்ளது.
ஐரோப்பாவில் அந்த நிலைமை அதிகம் இருப்பதில்லை. நம்மிடம் அந்த நிலைமை உள்ளது என்றாலும்,
உள்ளிருக்கும் படிநிலைகளை எதிர்த்துப் போராடும் மதச்சார்பின்மையின் உண்மையான நோக்கத்தை
நாம் மறந்து விடக் கூடாது. இவையிரண்டையும் நாம் ஏன் பிரித்து வைத்துள்ளோம்? அது ஏன்
முஸ்லீம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமே ஆனதாக மாறிவிட்டது? இதனை அவசியம் நாம்
மறுபரிசீலனை செய்தாக வேண்டும்.
அதற்கு
மக்கள் மனதில் மறுவரையறை தேவைப்படும்.
ஆம்! என்னுடைய புதிய புத்தகத்தில் நவீன
மதமே நம்மைப் பொருத்தவரை அந்நிய வகைதான் என்று இன்னொரு கருத்தும் இடம் பெற்றுள்ளது.
நமக்குச் சொந்தமான சமய-தத்துவ அனுபவங்களை, நடைமுறைகளை மாற்றி, அவற்றை மத விளக்கம் என்ற
சட்டகத்தின் வழியாகப் பார்க்கத் தொடங்கிய பிறகுதான் மதமயமாக்கலுக்கான செயல்முறை தொடங்கியது.
அதற்குப் பின்னரே இந்தியாவில் மதம் தோன்றியது. நான் முன்பு கூறியதை இங்கே நினைவுபடுத்திக்
கொள்ளுங்கள் - ஐரோப்பாவில் பதினாறு-பதினேழாம் நூற்றாண்டில் மதம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதற்கு முன்பு அது ஆபிரகாமிய மரபுகளில் 'ஆதாரமாக' வேரூன்றி இருந்தது. அதற்குப் பின்னர்
'மதம்' என்ற வகை இந்தியாவிற்குப் பயணித்ததும் மக்கள் நவீன ஐரோப்பிய மத வகையின் மூலமாகத்
தங்கள் மத-தத்துவ நடைமுறைகளைப் பார்க்கத் தொடங்கினர். மதமயமாக்கலுக்கான
செயல்முறை அப்போது துவங்கியது. அந்தச் செயல்முறை துணைக் கண்டத்தில் ஏற்கனவே நிலவி வந்த
கலாச்சாரச் சமநிலையை சீர்குலைத்தது. நமது சமூக-கலாச்சாரக் கற்பனையில் பேரழிவை ஏற்படுத்தியது.
மற்றவர்களை ஒதுக்கி வைக்கும் பிரத்தியேகவாதத்தை அது உருவாக்கியது. மதரீதியாக 'மற்றவர்கள்’
எதிரிகள் என்ற சிந்தனையை வலுப்படுத்தி வன்முறையின் புதிய வடிவங்களை அறிமுகப்படுத்தியது.
ஆனால் நல்வாய்ப்பாக அந்தச் செயல்முறை முழுமையடையவில்லை. அது இன்றளவிலும் ஓரளவிற்கே
நிறைவேறியிருக்கிறது என்றாலும் நாம் அந்த அழுகல் நோய் பரவிடாது தடுத்திட வேண்டும்.
நம்மை மதமயமாக்கல் செயல்முறைக்குள் நாம் ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. கடும் முயற்சிகளை
மேற்கொண்டு அதனை மாற்ற வேண்டும்.
மதச்சார்பற்று இருப்பதற்கான திட்டத்தின்
ஒரு பகுதியாக மதமயமாக்கலுக்கு எதிராக நாம் போராட வேண்டும். மதமயமாக்கப்படும்போது மட்டுமே
மதங்களுக்கு இடையிலான, மதங்களுக்குள்ளான ஆதிக்கம் பற்றி பேச முடியும். ஆனால் அதைச்
செய்வதற்கு முன்பாக கடந்த காலத்திற்கு நாம் செல்ல வேண்டும். கடந்த காலம் என்று சொல்லும்போது
கடந்த காலத்திற்கே திரும்பிச் சென்று விடுவதை நான் குறிப்பிடவில்லை. ‘இந்திய மக்களுக்கு
பல மதங்கள் இருந்தன, மற்றவர்களை ஒதுக்கி வைக்கும் பிரத்தியேகமான மதம் என்று எதுவும்
இல்லை. இரண்டையும் தழுவிக் கொள்ள முடியும் என்பதால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாற
வேண்டிய அவசியமும் இருக்கவில்லை’ என்றொரு பழைய அனுமானம் உள்ளது.
ஒருவர்
மற்றவரை ஒதுக்கி வைப்பதில்லை
ஆமாம். இதுபோன்ற நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன.
அலியை (நான்காவது கலிஃபா) விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்று நிஜாரி இஸ்மாயிலியர்களான
ஆகா கான்கள் நம்பினார்கள் என்பதை நீங்கள் நம்புவீர்களா?
அல்லது
பேரரசர் அக்பர் …
அக்பர் பற்றி கூறுவதற்கு நம்மிடம் இப்போதும்
ஏராளமாக உள்ளன. மேவாட்டில் நடப்பதைப் பாருங்கள். ஏராளமான இந்தியர்கள் மற்றும் மேற்கில்
உள்ள பலரும் மேவாட்டி முஸ்லீம்களை வழக்கமான முஸ்லீம்களிடமிருந்து வேறுபட்டவர்கள் என்றே
கற்பனை செய்து வைத்துள்ளனர். ராம் முகமது என்ற பெயருள்ளவர்கள், ராமாயணம், குர்ஆன் இரண்டையும்
படிப்பவர்கள், பின்பற்றுபவர்கள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்துள்ளனர் என்று எனது
சக ஊழியரான ஷைல் மாயாராம் தன்னுடைய ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற பன்மைத்தன்மை
என்பது நவீன மதத்தில் ஒருவரது விசுவாசத்தில் சாத்தியமில்லாத ஒன்றாகும். மதத்தில் மிகக்
கடுமையான எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒரு மதம் மற்றொன்றிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அல்லது அதற்கு மட்டுமே ஒருவர் சொந்தம் கொண்டாட முடியும். யாராலும் இரண்டிற்கும்
சொந்தமானவர்களாக இருக்க முடியாது. ஆனால் நம்மிடம் பல மதங்களுடன் இணைந்து கொள்ளும் பாரம்பரியம்
உள்ளது.
நம்முடைய ஆலயங்களைப் பாருங்கள். இன்றைக்கும்
ஹிந்துக்களும், முஸ்லீம்களும் அங்கே செல்கின்றனர். ஷீரடியில் உள்ள சாய்பாபாவைப் பாருங்கள்.
அனைவரும் அவரைப் பின்பற்றுகிறார்கள். ஹிந்துக்கள், முஸ்லீம்கள் என்ற வித்தியாசமின்றி
அனைவரும் பின்பற்றி வருகின்றனர். அனைத்து வகையான சாதியினரும் அதுபோன்றே இருக்கின்றனர்.
அவர்கள் சாதி அடிப்படையில் அல்லது மதத்தின் அடிப்படையில் எந்தவொரு பாகுபாடும் காட்டுவதில்லை.
இதுபோன்ற விஷயங்களை நாம் பாதுகாத்திட வேண்டும். நவீன மதம் இதுபோன்ற உள்ளார்ந்த விஷயங்களை,
மதங்களுக்கிடையிலான தொடர்பை, நீண்ட காலமாக இருந்து வருகின்ற இதுபோன்ற தத்துவார்த்த
சாய்வுகளைத் தன்வசமாக்கிக் கொள்வதற்கு நாம் அனுமதித்து விடக் கூடாது. இவற்றை பாரம்பரியம்
என்று கூற நான் விரும்பவில்லை என்றாலும் அவை சமூகத்தில் நீண்ட காலமாக இருந்து வருகின்றன,
மிக நீண்ட காலமாக உயிர் வாழ்கின்றன என்றே கூற விழைகிறேன். வந்து சேர்ந்துள்ள புதிய
விஷயங்களுடன் இவற்றையும் நாம் சமகால நவீன உலகின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்க வேண்டும்.
இந்திய
மதச்சார்பின்மை அதன் அரசியலமைப்பு கருத்திலிருந்து கொள்கை ரீதியான தூரத்திற்கு எவ்வாறு
விலகிச் சென்றது என்பது பற்றி பேசினோம். அந்த திருப்பம் ஏற்பட்ட புள்ளிகளைப் பற்றி
பேசினோம். வருங்காலத்தில் இந்தியாவை மேல்நோக்கி அல்லது இன்னும் கீழே எடுத்துச் செல்லும்
அளவிற்கான திருப்பங்களுக்கான புள்ளிகள் இருப்பதாக நீங்கள் பார்க்கிறீர்களா?
கீழ்நோக்கிய பாதை இத்துடன் நின்று விடும்
என்றே கருதுகிறேன். அதனை உறுதியாக நம்புகிறேன். மிகப் பரந்த, வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த இந்திய பன்மைத்துவத்தை மிக எளிதில் அகற்றி விட முடியாது என்றே நினைக்கிறேன்.
ஆனால் அது மிக மோசமான காலத்தைக் கடந்து சென்று கொண்டிருப்பது தெரிகிறது. என்னால் இது
எவ்வளவு காலம் தொடரும், ஏதேனும் மாற்றத்தை அடுத்த தேர்தல்கள் ஏற்படுத்துமா என்பதைக்
கூற முடியாது. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று தற்போதைய அரசு தோற்றாலும் வியக்கத்தக்க
வகையிலான திருப்பத்தை எதிர்பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன். சில காலமாகவே இதுபோன்று
தொடர்ந்து நடந்து வந்து கொண்டிருப்பதால் மீண்டெழ நீண்ட காலம் ஆகலாம். பன்மைத்துவத்தின்
மீதான இந்த நெருக்கடி நீண்ட காலத்திற்கு ஒரு சிறு பிரச்சனையாகவே இருந்து வரும் என்பதால்,
மீண்டு வர முப்பது அல்லது நாற்பது ஆண்டுகள் ஆகலாம் என்றே கருதுகிறேன்.
இந்தச்
செயல்பாட்டில் இந்தியா ஏராளமாக இழந்திருக்கிறது இல்லையா?
ஏராளமாக இழந்திருக்கிறது என்றாலும் இன்னும் அழிந்து போய் விடவில்லை. மிக விரைவில் அழிந்து விடவும் போவதில்லை. இந்தியா பிழைத்திருக்கும் வரை நம்பிக்கையுடன் இருக்கலாம் என்றே நினைக்கிறேன். அடுத்த தேர்தல் பற்றி எதையும் கூற முடியாது. அந்த தேர்தலில் என்ன நடந்தாலும், வாழ்நாளுக்குள் ஒரு முக்கியமான திருப்பத்தை நம்மால் எதிர்பார்க்க முடியாது என்றே கருதுகிறேன். திரும்பப் பெறுவது, மீட்டெடுப்பது, மறுவடிவமைக்கப்பட்ட மதச்சார்பின்மைக்கான அடிப்படை மாற்றங்களைப் பற்றி மட்டுமே நான் பேசுகிறேன். அது (நம்முடைய வாழ்நாளில்) நடைபெறும் என்று நினைக்கவில்லை என்றாலும் அது நிச்சயம் நடக்கும். உலகளாவி அனைத்து விதமான சக்திகளும் நமது பூமியை அழிப்பதற்கான தீவிரமான முயற்சிகளுடன் இருந்து வருவதால், உலகமே அழிந்தாலொழிய அது நடைபெறாமல் இருக்கப் போவதில்லை.
இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருக்கும் பல விஷயங்கள் உலக அளவிலும் நடந்து கொண்டிருக்கின்றன. வலதுசாரி இயக்கங்களை உருவாக்குகின்ற பல விஷயங்கள் இந்தியாவில் மட்டுமல்லாது, அமெரிக்காவில், இத்தாலியில், ஹங்கேரியில், போலந்தில் அல்லது ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் நடந்து வருகின்றன. உலகம் முழுக்க குறிப்பாக மூலதனச் சார்பு, வெறுப்பைத் தூண்டுகின்ற அல்லது அதற்கு வலுவூட்டுகின்ற சிந்தனைக் குழுக்கள் ஒன்றுக்கொன்று தொடர்ந்து தொடர்பில் இருக்கின்றன. ஒன்றின் மீது ஒன்று என்று அவை செல்வாக்கு செலுத்தி வருகின்றன. தங்களுக்குள் திட்டத்திற்கான வரைபடங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. ஏராளமான விஷயங்களைச் செய்து வருகின்றன. அனுபவமற்ற, முற்றிலும் அதிகம் பேசப்படாத நிகழ்வு என்றே இந்தக் காலப்போக்கை நான் கருதினேன். ஆனால் அப்படி இருக்கவில்லை. உலகளாவி ஒன்றோடொன்று இணைந்திருப்பதாலேயே அது வெளிப்படுகிறது. ஓரிடத்தில் உருவாகின்ற கருத்துகள் இடைத்தொடர்பு கொண்ட வலைப்பின்னல்களால் இன்னொரு இடத்திலும் வளர்கின்றன. தற்போது தகவல் தொடர்பு அதிவேகத்துடன் இருப்பதால் அமெரிக்காவில் நடக்கின்ற ஏதோ ஒன்று உடனடியாக இங்கேயும் நடப்பதைக் காண முடிகிறது.
தாட்சர்-ரீகன்
காலத்தில்தான் அரசியல் ஊசல் நாம் இப்போது இருக்கும் இடத்தை நோக்கி ஊசலாடத் தொடங்கியது
என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
ஆம். அந்த ஊசல் மீண்டும் திரும்பி வர வேண்டும்.
அது நடந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கிறீர்களா? அது நடக்கும். ‘பகுத்தறிவின் தந்திரம்’
என்று அதனை ஹெகல் அழைத்தார். ஏதோவொரு காரியத்தைச் செய்வதாக நாம் அனைத்து வழிகளிலும்
நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் உண்மையில் நாம் வேறு ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருப்போம்.
சில நேரங்களில் பகுத்தறிவின்றி அல்லது பகுத்தறிவற்ற முறையில் செயல்படுவதாகத் தோன்றினாலும்
நாம் நினைத்ததைக் காட்டிலும் சிறப்பான வேலையைச் செய்து முடித்திருப்போம். ஆனால் பகுத்தறிவுடன்
வேலை செய்யும் போது மிகப் பெரிய தவறைச் செய்திருப்போம்.
எதிர்பாராத விளைவுகளையும் நமது செயல்கள்
உருவாக்கித் தரலாம். நாம் அதுபோன்ற விளைவுகளை ஒருபோதும் எதிர்பார்த்திருக்க மாட்டோம்.
இன்றைக்கு நாம் செய்வது எதிர்பார்த்திராத விளைவுகளை நமக்கு ஏற்படுத்தித் தரலாம். மிக
மோசமானவையாக அந்த விளைவுகள் இருக்கலாம் என்றாலும், அவை அற்புதமாகவும் இருக்கக் கூடும்.
யாருக்குத் தெரியும்? தற்போது நாம் நிச்சயமற்ற உலகிலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த
நிச்சயமற்ற சூழ்நிலையில்தான் நாம் முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது. விஷயங்களை ஒருபோதும் நம்மால் முழுமையாகக் கட்டுப்படுத்த
முடிவதில்லை. அதீத-மனிதாபிமான சிந்தனையை முழுமையாகச் செயல்படுத்த நாம் ஏதாவது திட்டமிடுகிறோம்.
அது அதிக நம்பிக்கையுடன் மேற்கொண்டதாக மட்டுமல்லாது தவறாகவும் இருந்து விடுகிறது. உலகம்
செல்லப் போகின்ற திசையை நம்மால் முழுமையாகக் கணிக்க முடியாது.
ஆனாலும்
நீங்கள் மதச்சார்பின்மை குறித்து நம்பிக்கையுடனே இருக்கிறீர்கள்?
ஆமாம் நம்பிக்கையுடனே இருக்கிறேன்... அது
நன்மை, தீமைக்கு இடையிலான வாதமாக இருப்பதை உங்களால் காண முடியும். எந்தவொரு எளிய சிந்தனையை
வெளிப்படுத்துவதைக் காட்டிலும் அது மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. என்னைப் பொருத்தவரை
அதனை முன்னிலைப்படுத்துவது கடினம் என்றாலும் என் இதயம் அதையே சொல்கிறது, என் உள்ளமும்
அதைத்தான் சொல்கிறது…
உங்கள்
கோட்பாடும் அதைச் சொல்கிறதா?
என் கோட்பாடும்கூட அதையே சொல்கிறது. நான்
சொன்ன மற்ற விஷயங்கள் குறித்து எங்களைப் போன்றவர்களிடமிருந்து அதிகம் வேறுபடுபவர்களும்
இன்னொரு பக்கத்தில் ஏதோ திட்டமிடுகிறார்கள். ஆனால் என்ன நடக்கும்? அது அவர்களுக்கும்
தெரியாது. உண்மையில் அவர்கள் இன்னும் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு தங்களை அரசியல்ரீதியாக
அழித்தொழித்து விடும் பின்னடைவைக்கூட உருவாக்கிக் கொண்டிருக்கலாம். அது யாருக்குத்
தெரியும்? ஆயிரம் ஆண்டு காலத்திற்கு நீடித்திருக்கப் போகின்ற ஏதோவொன்றின் விதைகளை விதைக்கிறோம்
என்று நினைத்துக் கொண்டிருக்கும் அவர்கள் தங்களுடைய செயல்களால் தங்களுக்கான (சித்தாந்த)
புதைகுழியையே தோண்டிக் கொண்டிருக்கலாம். உங்களால் அதைச் சொல்ல முடியாது. வலது அல்லது
இடது என்று அவர்கள் எப்படியிருந்தாலும் அதுவே உண்மை. சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த
1989 அல்லது 1991ஆம் ஆண்டில் நடந்ததை யாராவது முன்கூட்டியே கணித்திருப்பார்களா? அதை
யாராலும் கணிக்க முடியவில்லை. அது திடீரென்று நடந்தது. அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
உலக ஒழுங்கே மாறிப் போனது.
நிகழ்காலத்திற்கு நெருக்கத்தில் 2011ஆம்
ஆண்டு செப்டம்பர் 11க்கு (9/11) முன்பு அந்த திசையில் நாம் செல்லப் போகிறோம் என்று
யாரால் கூறியிருக்க முடியும்? உலகம் இப்போது சென்று கொண்டிருக்கும் பாதையில், இந்த திசையில் செல்லும்
என்று யாராலும் கணித்திருக்க முடியாது. ஆனால் ஒட்டுமொத்த உலகமும் மக்கள் மேற்கொண்ட
சில தேர்வுகளின் விளைவுகளை எதிர்கொண்டு வருகிறது. பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகக் கூறியதுதான்
முதன்முதலாகக் கூறப்பட்ட மிகப் பெரிய பொய்ச் செய்தியாகும். அந்தப் பொய்யை எல்லோரும்
நம்பினார்கள். முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் பிளேயர், முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் ஆகியோர் அந்தப் பொய்ச் செய்தியை நிலைநிறுத்தினார்கள்.
ஆனால் மக்கள் இப்போது அதை உணர்ந்திருக்கிறார்கள். எந்த அளவிற்கு அதிகமாகப் படிக்கிறார்களோ
அந்த அளவிற்கு மக்களால் வெளிப்படையாகக் காண
முடிகிறது. அவர்களால் அதிகமாகப் பேசவும் முடிகிறது. ஆனால் இன்னும் அது வரையறுக்கப்பட்டே இருக்கிறது.
அனைத்தும் அறிந்தவர்களாக மக்களால் இருக்க முடியாது; அதேபோல் எங்கும் நிறைந்திருக்கவும்
அவர்களுக்கு இயலாது. அவர்களுக்கு அது தெரியாது. என்ன நடக்கப் போகிறது என்பது உண்மையில் யாருக்குமே தெரியாது.
References:
1.
Bhargava, R. 2011. Should Europe Learn from Indian Secularism?, Seminar #621,
May. [https://www.india-seminar.com/2011/621/621_rajeev_bhargava.htm].
Return To text.
2.
Bilgrami, A. 2016., Beyond the Secular West. Columbia University Press.
(Chapter 8). pp. 188-214. Return to Text.
3.
Taylor, C. 2007. A Secular Age. Harvard University Press. Return to Text.
4.
Bhargava, R. 2023. Reimagining Indian Secularism. Seagull Books. Return to
Text.
Comments