காந்திஜியின் எழுபத்தியாறாவது ஆண்டு நினைவு தினம் - இந்திய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேலால் அடையாளம் காணப்பட்ட கொலையாளிகள்

 சம்சுல் இஸ்லாம்

கௌண்டர்கரண்ட்ஸ்


காந்திஜியின் கொலை குறித்து சர்தார் பட்டேலின் உள்துறை அமைச்சகம் மேற்கொண்ட கடிதப் பரிமாற்றங்கள்  மற்றும் நேரு, சியாமா பிரசாத் முகர்ஜி, கோல்வால்கர் ஆகியோருக்கு பட்டேல் எழுதிய கடிதங்கள் இங்கே காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன. இந்த காலவரிசை விளக்கம் காந்திஜியின் படுகொலையில் ஆர்எஸ்எஸ், ஹிந்து மகாசபையின் பங்கு குறித்து தனக்கிருந்த புரிதலை சர்தார் பட்டேல் அதிகரித்துக் கொண்டதை (அதிகாரிகளால் வழங்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் இருந்திருக்க வேண்டும்) தெளிவாகக் காட்டுகிறது.      

காந்திஜி கொலையாளிகளுக்கு ஆர்எஸ்எஸ் உடன் இருந்த தொடர்புகள் குறித்து சமகால மூத்த ஐசிஎஸ்  அதிகாரியின் கருத்தையும் இந்த ஆவணங்கள் காட்டுகின்றன. மோடியின் (அப்போதைய குஜராத் முதல்வர்) வாழ்த்துச் செய்தியுடன் ஹிந்து தேசத்தை முன்னிறுத்தி 2013ஆம் ஆண்டு ஹிந்து ஜன்ஜக்ருதி சமிதியால் கோவாவில் துவங்கிய மாநாட்டில் காந்திஜியின் கொலை கொண்டாடப்பட்டது  மற்றுமொரு அதிர்ச்சியூட்டும் ஆவணமாக உள்ளது.  

1948ஆம் ஆண்டு பிப்ரவரி நான்காம் நாள்

ஆர்எஸ்எஸ்ஸைத் தடை செய்த அரசு ஆவணம்

‘விரும்பத்தகாத, ஆபத்தான நடவடிக்கைகளையும்கூட சங்க உறுப்பினர்கள்  மேற்கொண்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் தீ வைப்பு, திருட்டு, கொள்ளை, கொலை போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தனிநபர்கள் சட்டவிரோத ஆயுதங்கள், வெடிமருந்துகளைச் சேகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. பயங்கரவாதச் செயல்முறைகளைத் தேடிச் செல்ல, துப்பாக்கிகளைச் சேகரிக்க, அரசிற்கு எதிராக அதிருப்தியை உருவாக்க, காவல்துறை மற்றும் ராணுவத்தை அடிபணியச் செய்வதற்கு மக்களைத் தூண்டி விடும் துண்டுப் பிரசுரங்களை அவர்கள் பரப்பி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’    

(‘விசாரணைக்குள்ளான நீதி’  என்ற வெளியீட்டில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, ஆர்எஸ்எஸ், பெங்களூர், 1962, பக்.65-66)

1948ஆம் ஆண்டு பிப்ரவரி இருபத்தியேழாம் நாள்

சர்தார் பட்டேல் நேருவுக்கு எழுதிய கடிதம்

‘தங்கள் நடவடிக்கைகளைப் பற்றி மிக நீண்ட, விரிவான அறிக்கைகளை முக்கியமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் அளித்துள்ளனர். அதில் ஒருவரது அறிக்கை தொண்ணூறு தட்டச்சு பக்கங்களுக்கும் அதிகமாக உள்ளது. சதித்திட்டத்தின் எந்தவொரு பகுதியும் தில்லியில் நடக்கவில்லை என்பது அவர்களுடைய அறிக்கைகளிலிருந்து தெளிவாகத் தெரிய வருகிறது... அந்த அறிக்கைகளிலிருந்து ஆர்எஸ்எஸ்-க்கு கொலையில் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பது தெளிவாகத் தெரிய வருகிறது. நேரடியாக சாவர்க்கரின் கீழ் இருந்த ஹிந்து மகாசபையின் வெறி கொண்ட பிரிவுதான் அந்தச் சதித்திட்டத்தை (உருவாக்கி) நிறைவேற்றியிருக்கிறது. அந்தச் சதித்திட்டத்தில் சுமார் பத்து பேருக்கு மேல் ஈடுபடவில்லை எனவும் தெரிகிறது. அவர்களில் இருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பிடிபட்டுள்ளனர்.  (சர்தார் எழுதிய இந்தக் கடிதத்தின் மேற்கூறிய பகுதியை மேற்கோள் காட்டும் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர்கள், அந்தக் கடிதத்தின் மிக முக்கியமான பிற்பகுதியை மறைத்து விடுகின்றனர்)

மேலும் ‘பதிவேடுகள், பதிவுகள் போன்று எதுவுமே இல்லாத ஆர்எஸ்எஸ் போன்றதொரு ரகசிய அமைப்பில் குறிப்பிட்ட நபர் தீவிரமாக இயங்கி வரும் தொண்டரா, இல்லையா என்பது குறித்த உண்மையான தகவல்களைப் பெறுவது மிகவும் கடினமான பணியாக உள்ளது’ என்று அந்தக் கடிதம் தொடர்கிறது.

[வி.சங்கர், சர்தார் படேல்: தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதப் பரிமாற்றங்கள் 1945-50, நவஜீவன் பப்ளிஷிங் ஹவுஸ்,  அகமதாபாத், 1977, பக். 283-285]

1948ஆம் ஆண்டு ஜுலை பதினெட்டாம் நாள்

சர்தார் பட்டேல் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடிதம்

‘காந்திஜியின் கொலை தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் ஆர்எஸ்எஸ், ஹிந்து மகாசபை என்ற இரு அமைப்புகளின் பங்கேற்பு குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் எங்களுக்குக் கிடைத்துள்ள அறிக்கைகள் இந்த இரண்டு அமைப்புகளின் குறிப்பாக முதலில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பின் நடவடிக்கைகளின் விளைவாகவே அத்தகைய பயங்கரமான சோகத்தைச் சாத்தியமாக்கிய சூழல் உருவாக்கப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஹிந்து மகாசபையில் உள்ள தீவிரவாதப் பிரிவு கொலைச்சதியில் ஈடுபட்டது பற்றி எனக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை. ஆர்எஸ்எஸ்சின் செயல்பாடுகள் அரசு மற்றும் அரசாங்கத்தின் இருப்புக்கு தெளிவான அச்சுறுத்தலாக இருந்துள்ளன. தடை விதிக்கப்பட்ட போதிலும் அந்த நடவடிக்கைகள் இன்னும் ஓயவில்லை என்பதையே எமக்குக் கிடைத்துள்ள அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில் காலம் கடந்து செல்லச் செல்ல அந்தத் தவறுக்காக எதுவும் வருந்தாத வகையிலேயே ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் அதிக அளவில் நாசகார நடவடிக்கைகளில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்’.     

[சர்தார் பட்டேல் எழுதிய கடிதம் 64, சர்தார் படேல்: தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதப் பரிமாற்றங்கள் 1945-50, நவஜீவன் பப்ளிஷிங் ஹவுஸ், அகமதாபாத், 1977, பக். 276-277)

1948ஆம் ஆண்டு செப்டம்பர் பத்தொன்பதாம் நாள்

சர்தார் பட்டேல் அப்போதைய ஆர்எஸ்எஸ் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கருக்கு எழுதிய கடிதம்

‘ஹிந்துக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு உதவி செய்வது வேறு … ஆனால் தனக்கு நேர்ந்த துயரங்களுக்காக அப்பாவிகளை, ஆதரவற்ற ஆண்கள், பெண்கள், குழந்தைகளைப் பழிவாங்குவதென்பது வேறு... அதற்கு அப்பால் காங்கிரஸ் மீது அவர்கள் காட்டும் எதிர்ப்பு, அதுவும் ஆளுமை, கண்ணியம், நடத்தை என்று அனைத்தையும் புறக்கணித்து அதனை இத்தகைய கொடூரம் மூலம் செய்து காட்டியிருப்பது மக்களிடையே ஒருவித அமைதியின்மையையே ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடைய பேச்சுக்கள் அனைத்தும் வகுப்புவாத விஷம் தோய்ந்தவையாக உள்ளன. ஹிந்துக்களை உற்சாகப்படுத்துவதற்கு, அவர்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளுக்கு இதுபோன்று விஷத்தைப் பரப்ப வேண்டிய தேவையில்லை. அந்த விஷத்தின் இறுதி விளைவாக காந்திஜியின் விலைமதிப்பற்ற உயிர்த்தியாகத்தை நாடு அனுபவிக்க வேண்டியதாயிற்று. அரசின் அல்லது மக்களின் அனுதாபத்தில் ஒரு சிறு துளி கூட ஆர்எஸ்எஸ்-க்கு எஞ்சியிருக்கவில்லை. உண்மையில் அவர்கள் மீது எதிர்ப்பே அதிகரித்துள்ளது. காந்திஜியின் மரணத்திற்குப் பிறகு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆர்எஸ்எஸ்காரர்கள் இனிப்புகளை வழங்கிய வேளையில் அந்த எதிர்ப்பு இன்னும் தீவிரமானது. அதுபோன்ற நிலைமையில் அரசு ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது... அதற்குப் பிறகு  இப்போது ஆறு மாதங்களுக்கு மேல் கடந்து விட்டது. இந்தக் காலகட்டத்தில் முழுமையான, சரியான பரிசீலனையுடன் ஆர்எஸ்எஸ்காரர்கள் சரியான பாதைக்கு வந்து சேருவார்கள் என்றே நாங்கள் நம்பினோம். ஆனால் தங்களுடைய பழைய செயல்பாடுகளுக்கு புதிய வாழ்வளிப்பதற்கான முயற்சிகளையே அவர்கள் செய்து வருவதாக எனக்குக் கிடைக்கும் அறிக்கைகளில் இருந்து தெரிய வருகிறது.      

(‘விசாரணைக்குள்ளான நீதி’  என்ற வெளியீட்டில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, ஆர்எஸ்எஸ், பெங்களூர், 1962, பக். 26-28)

உத்தரப்பிரதேசத்தின் முதல் உள்துறை செயலாளராக இருந்த மூத்த ஐசிஎஸ் அதிகாரி தெரிவித்த கருத்து

அமைதியின் தூதராக இருந்த மகாத்மா 1948ஆம் ஆண்டு ஜனவரி முப்பதாம் நாளில் ஆர்எஸ்எஸ் வெறியன் ஒருவனால் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார்.  அந்தச் சோகமான நிகழ்வால் என் இதயம் நொறுங்கியது’.

(ராஜேஷ்வர் தயாள், நமது காலத்திய வாழ்வு, ஓரியண்ட் லாங்மேன், 94)

காந்திஜி மீது வெறுப்பை உண்டாக்கும் இது போன்ற கார்ட்டூன்கள் ஹிந்துத்துவா வெளியீடுகளில் வெளியிடப்பட்டன

காந்தி ‘வதம்’ கொண்டாடப்பட்ட கோவா ஹிந்து தேச மாநாட்டிற்கு (2013) குஜராத்தின் முதல்வராக இருந்த மோடி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அது இன்றைக்கும் காந்திஜி மீது ஆர்எஸ்எஸ் கொண்டிருக்கும் வெறுப்பையே காட்டுகிறது.    

2013ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஹிந்து ஜனஜக்ருதி சமிதியின் (HJS) ஏற்பாட்டில் நடைபெற்ற  ‘ஹிந்து தேசத்தை நிறுவுவதற்கான அகில இந்திய ஹிந்து மாநாட்டிற்கு’ வாழ்த்துச் செய்தியை அப்போதைய குஜராத் முதல்வர் மோடி அனுப்பி வைத்தார். ‘ஹிந்துக்கள் அனைவரும் அன்பு, கருணை மற்றும் கடவுளிடம் நெருக்கம், அகிம்சை, உண்மை மற்றும் சாத்விக்தத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்களாக இருக்கின்ற போதிலும், அரக்கத்தனமான போக்குகளை எதிர்த்து நின்று விரட்டியடிப்பதே நம் தலைவிதியாக உள்ளது. எச்சரிக்கையுடன் இருந்து துன்புறுத்தலுக்கு எதிராகக் குரல் எழுப்புவதே நமக்கான பாரம்பரியம்... நமது கலாச்சாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே தர்மம், ஒற்றுமைக்கான கொடியை நம்மால் உயர்த்திப் பிடிக்க முடியும். தேசியவாதம், தேசபக்தி, ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட அமைப்புகளே மக்கள் அதிகாரத்தின் உண்மையான வெளிப்பாடுகளாக இருக்கும்’ என்று அந்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.   

மோடியின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்ட மூன்றாவது நாளில் அந்த மாநாட்டு மேடையில் முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக இருந்த கே.வி.சீதாராமையா காந்தியைக் குறிப்பிட்டு ‘பயங்கரமானவர், பொல்லாதவர், பாவச்செயல் புரிந்தவர்’ என்று பேசினார். காந்தி கொலையில் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய சீதாராமையா ‘நல்லவர்களைப் பாதுகாக்க, தீயவர்களை அழிக்க, சன்மார்க்கத்தை நிலைநாட்ட ஒவ்வொரு யுகத்திலும் பிறப்பேன்… என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர்  கூறியுள்ளார். 1948 ஜனவரி முப்பதாம் நாள் மாலை நாதுராம் கோட்சேவின் வடிவத்தில் ஸ்ரீராமன் வந்து காந்தியின் வாழ்க்கையை முடித்து வைத்தார்’ என்றார்.    

கே.வி.சீதாராமையா எழுதியுள்ள 'காந்தி தர்மத்தின் துரோகி, தேசத்துரோகி' என்ற தலைப்பிலான புத்தகத்தின் பின் அட்டையில் மகாபாரத இதிகாசத்தை மேற்கோள் காட்டி 'தர்மத்தின் துரோகிகள் கொல்லப்பட வேண்டும்', 'கொல்லப்பட வேண்டியவர்களைக்  கொல்லாமல் இருப்பது  மகா பாவம்', ‘தர்மத்தைக் கொல்கின்ற, உண்மையைப் பொய்யாக அனுமதிக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிரற்றவர்களாகவே கருதப்படுவார்கள்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை இங்கே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  

ஹிந்து ஜனஜக்ருதி சமிதிக்கு குஜராத் முதல்வர் மோடி அனுப்பி வைத்த பாராட்டுக் கடிதம்

https://countercurrents.org/2024/01/76th-anniversary-of-gandhijis-martyrdom-killers-identified-by-sardar-patel-the-then-home-minister-of-india/

 

Comments