வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன்
ஃப்ரண்ட்லைன்
பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு வழங்கப்பட்ட தண்டனையை தனித்துவமான
உணர்வுகளின் கலவையுடனே இந்தியாவின் மிக முக்கியமான கோவில் நகரங்களில் ஒன்றான அயோத்தி
எதிர்கொண்டது. அந்த வழக்கின் உண்மைகளை வழக்கமான விஷயமாக ஏற்றுக் கொண்ட அந்தப் பழமையான
நகரத்திடமிருந்து வெளிப்படையான ஆச்சரியமும் வெளிப்பட்டது. கொலை உள்ளிட்ட பிற வன்முறைகள்,
பாலியல் பலாத்காரங்களில் ஈடுபட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டவராக சிர்சா பாபா கண்டறியப்பட்ட
போது வெளியான தகவல்கள் அயோத்தியில் வசிப்பவர்களுக்கு
எந்தவொரு ஆச்சரியத்தையும் தரவில்லை. அந்தக் கோவில் நகரம் பல்லாண்டுகளாகவே அதுபோன்ற
‘ஆன்மீகவாதிகளால்’ நிரம்பி வழிந்து கொண்டுள்ளது. அயோத்தியில் அவ்வாறானவர்கள் நூற்றுக்கணக்கில்
இருக்கின்றனர். கொலை, பாலியல் பலாத்காரம், நில அபகரிப்பு போன்ற குற்றங்களுக்காக கடந்த சில ஆண்டுகளில்
முந்நூற்றி ஐம்பது சாதுக்கள் (தங்களை ஆன்மீகவாதிகளாக அறிவித்துக் கொண்டவர்கள்) மீது
வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அயோத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் பைசாபாத் மாவட்டத்தின் காவல்
துறைப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய, சிறிய அளவிலான கோவில்கள், ஆசிரமங்கள்,
மடங்கள் (சாதுக்களும், அவர்களது கூட்டாளிகளும் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்ற
கோவில் போன்ற குடியிருப்புகள்) என்று அயோத்தியில்
அதிக எண்ணிக்கையில் இருந்து வருகின்ற ஆன்மீகக் கட்டமைப்புகள் குற்றமிழைக்கும் மையங்களாக
மாறியுள்ளதாக எந்தவொரு சந்தேகத்திற்கும் இடமின்றி ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ‘குற்றவாளிகளாக இருந்து வரும் சாதுக்களுடனே நாங்கள் நீண்ட காலமாக
வாழ்கிறோம். அதனால் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கை இயல்பாக அவர்களில் ஒரு நபராகவே
நாங்கள் காண்கிறோம். அயோத்தியில் வசிப்பவர்கள் என்ற முறையில் நாங்கள் உண்மையில் பாபா
ஒருவர் நீதிமன்றத்தில் தண்டிக்கப்படலாம், அவர்
மீதான தண்டனை அமல்படுத்தப்படலாம் என்பதைக் கண்டு ஆச்சரியம் அடைகிறோம். அதற்கான சாத்தியம்
இருக்கிறது என்றாலும் அது மிகவும் அரிதான காரியமாகவே இருக்கிறது’ என்று பைசாபாத்தில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும்
பிரபல ஹிந்தி நாளிதழான ஜன்மோர்ச்சாவின் ஆசிரியர் ஷீத்லா சிங் கூறுகிறார். குற்றவாளிகளாக உள்ள இந்த சாதுக்கள் மீது முறையான
குற்றச்சாட்டுகள் சட்டரீதியாகச் சுமத்தப்படாமல் இருப்பதற்கு அவர்களுடைய செல்வாக்கு,
பண அதிகாரமே காரணமாக இருக்கிறது என்றும் ஷீத்லா
சிங் கூறினார். அதன் காரணமாக பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உருப்படியான விசாரணைகள்
எதுவும் நடப்பதில்லை. அவர்கள் மீதான வழக்குகள் பொதுவாக நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு
வருவதேயில்லை என்றும் ஒருவேளை அவை விசாரணைக்கு வந்தாலும் எந்தவொரு தண்டனையும் விதிக்கப்படுவதில்லை என்றும்
அவர் தெரிவித்தார்.
குற்றவாளிச் சாதுக்கள்
- மூன்று பிரிவினர்
ஷீத்லா சிங் இந்த குற்றவாளி
சாதுக்களை மூன்று பரந்த பிரிவினராக வகைப்படுத்துகிறார். ‘நிலம், சொத்துக்கள், கோவில்கள்
மற்றும் பிற மத நிறுவனங்களின் செல்வங்களை அபகரித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருக்கின்ற
பணம் தொடர்பான குற்றங்கள் முதல் வகை குற்றவாளிகளை உருவாக்குகின்றன. பெருமளவிற்கு பணத்தைக்
கடனாகக் கொடுத்து மத நிறுவனங்கள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்ற வணிகமும் பணம் தொடர்பான குற்றங்களுக்கு
வழிவகுத்துக் கொடுக்கிறது. மதம் சார்ந்து உயர் பதவியில் இருப்பவர்கள், குறிப்பாக கோவில்கள்,
ஆசிரமங்கள், மடங்களின் தலைவர்களாக இருப்பவர்கள் தங்களிடம் உள்ள இளைய சாதுக்களால் கொல்லப்படுவது,
அடிபணிய வைக்கப்படுவது போன்ற அதிகாரம் சார்ந்து இழைக்கப்படும் குற்றங்கள் இரண்டாவது
வகை குற்றவாளிகளை உருவாக்குகின்றன. சாதுக்களிடம் கணிசமான எண்ணிக்கையில் இருக்கின்ற
சீடர்கள் பெரும்பாலும் அதிகாரத்தைப் பெறுவதற்கான பொறுமையை இழந்தவர்களாகவே உள்ளனர்.
மூத்த சாது இயற்கையாக இறந்து போகும் வரையிலும் அவர்களால் காத்திருக்க முடிவதில்லை.
இந்தப் பொறுமையின்மையே திட்டமிட்ட கொலைகளைச் செய்ய அல்லது மடங்களிலிருந்து மூத்த சாதுக்களை
வெளியேற்ற அவர்களைத் தூண்டி விடுகிறது. மூன்றாவது வகை குற்றங்கள் பாலியல் தொடர்பானவை.
இந்த வகை குற்றங்களை இழைக்கின்ற சாதுக்கள் தங்கள் காமப் பசியைத் தீர்த்துக் கொள்வதற்காக
பாலியல் பலாத்காரம், கடத்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற குற்றங்களைச்
செய்கின்ற சாதுக்கள் பலரும் மிகப் பெரிய நான்கு சக்கர வாகனங்கள் அல்லது மிகவும் ஆடம்பரமான மோட்டார் சைக்கிள்களில்
நகரில் வலம் வருவதைக் காண முடியும். மிகவும் வெளிப்படையாக துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை
ஏந்திச் செல்வதன் மூலம் அவர்கள் தங்களுடைய அதிகாரத்தை, பணபலத்தை வெளிப்படுத்துகின்றனர்.
அதுவே சில கோவில்கள், ஆசிரமங்கள், மடங்களில் உள்ளவர்களால் வழிநடத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகின்ற
மிகவும் சுறுசுறுப்பான சட்டவிரோதமான கள்ளத்துப்பாக்கி விற்பனை மோசடியை
ஊக்குவிக்கிறது. இவையனைத்தின் ஒட்டுமொத்த விளைவாக சில சாதுக்கள் மிகவும் அப்பட்டமாக
குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். தாங்கள் அணிந்திருக்கும் ஆன்மீகப் போர்வை சட்டப்பூர்வமான
வழக்குகள் தொடரப்படுவதிலிருந்து உறுதியான பாதுகாப்பைத் தங்களுக்கு வழங்கும் என்பதை
அவர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்’ என்று ஷீத்லா சிங் ஃப்ரண்ட்லைனிடம் கூறினார்.
இதை 2017ஆம் ஆண்டு மே மாதத்தில் புகாரளிக்கப்பட்ட கூட்டுப் பாலியல்
பலாத்காரப் புகார் தெளிவாகக் காட்டுகிறது. அயோத்தியில் உள்ள ஜானகி நிவாஸ் மந்திரின்
ஐந்து சாதுக்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தாங்கள் அளித்த புகாரைப் பதிவு செய்ய காவல்துறை மறுப்பதாகக் கூறி பைசாபாத்தில் உள்ள தலைமை மாவட்ட நீதிமன்றத்தை நடுத்தர
வயது பெண்ணும், அவரது மகளும் அணுகினர். அந்தப்
புகாரை பதிவு செய்ய மூன்று மாதங்களாக அந்தப் பெண்கள் முயன்றிருந்தனர். காவல்துறையினர்
அவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை. பல மாதங்களாக அந்தத் தாய் பலமுறை பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டதாகவும், மோசமான விளைவுகள் குறித்து அச்சுறுத்தி எச்சரித்த அந்தச் சாதுக்கள்
அவரைப் பேச விடாமல் செய்ததாகவும் அந்தப் பெண்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்
குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தச் சித்திரவதையைச் சகித்துக் கொண்ட
தாய் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அந்த ஐந்து சாதுக்கள் தனது மகளையும் பாலியல்
பலாத்காரம் செய்தபோது இனிமேலும் மௌனமாக இருந்து கஷ்டப்பட வேண்டாம் என்று முடிவு செய்தார்.
காவல்துறையை அணுகினார். அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது என்றாலும்
அதன் பிறகு பெரிய அளவிலான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.
சாதுக்களின் கொலை
2013-14ஆம் ஆண்டில் நான்கு சாதுக்கள் கொல்லப்பட்டது தொடர்பாகப் பதிவான வழக்குகளின்
நிலையும் வேறுபட்டதாக இல்லை. அந்த நான்கு கொலைகள் 2013ஆம் ஆண்டு ஜூலை முதல் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2014 வரையிலும் நடந்திருந்தன.
வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சில கைதுகளும் நடந்திருந்த போதிலும் குற்றம் சாட்டப்பட்ட
முக்கிய நபர்கள் பலரும் பாதுகாப்பான புகலிடங்களுக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் சிலர்
காணாமல் போய் விட்டதாக அதிகாரப்பூர்வப் பதிவுகளில் குறிக்கப்பட்டது. நான்கு கொலைகளும்
வெளிப்படையாக ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகவே இருந்தன. ஆன்மீக மையங்கள் என்று அழைக்கப்படுகின்ற
இடங்களின் சொத்து, செல்வங்களுக்கான சண்டைகளே அந்தக் கொலைகளுக்கான மையமாக இருந்தன. சாது
அதிகாரத்தை அதிக அளவில் பெற்றுக் கொள்வதற்கான தூண்டுதலும் அந்தக் குற்றங்களில் முக்கிய
பங்கைக் கொண்டிருந்தது.
அவற்றின் மையத்தில் தலைமைப் பூசாரி நிருத்ய கோபால் தாஸ் தலைமையிலான மணிராம் தாஸ் சாவ்னி சேவா அறக்கட்டளையால் நடத்தப்படும் கங்கா பவன் கோவில் இடம் பெற்றிருந்தது. நிருத்ய கோபால் தாஸ் ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம்) தலைமையிலான சங் பரிவாரத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீராம ஜென்மபூமி நியாஸின் தலைவராகவும் உள்ளார். 1992ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் நாள் வரையிலும் அயோத்தியில் பாபர் மசூதியாக இருந்த இடத்தில் மிகப் பெரிய ராமர் கோவிலைக் கட்டும் நோக்கத்துடன். அயோத்தியில் மிகப்பெரிய மற்றும் பணக்கார அறக்கட்டளையாக மணிராம் தாஸ் சாவ்னி சேவா அறக்கட்டளை இருந்து வருகிறது. கோவில்கள், ஆசிரமங்கள், மடங்கள், மருத்துவமனைகள், சமஸ்கிருத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட பல நிறுவனங்களை அந்த அறக்கட்டளை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்த சொத்துக்கள், நிறுவனங்களில் கணிசமானவை அயோத்தியில் மட்டுமே இருக்கின்றன என்றாலும் அந்தக் கோவில் நகரத்திற்கு அப்பாற்பட்டு உத்தரப்பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் அந்த அறக்கட்டளை கால் பதித்து வளர்ந்துள்ளது.
கடைசி கொலை 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் இருபத்தியெட்டாம் நாள் நடந்தது.
நாற்பத்தைந்து வயதான பூசாரி விஜய் ராம் தாஸ் அதில் கொல்லப்பட்டார். நிருத்ய கோபால் தாஸால் கங்கா பவனின்
சாது மேலாளராக (வியவஸ்தபக் சாது) நியமிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு கங்கா பவன்
கோவிலில் விஜய் ராம் தாஸ் கொலை செய்யப்பட்டார். முக்கியமான நன்கொடைகள் மற்றும் பிற
ரசீதுகள் கோவில் மேலாளர் மூலமே அனுப்பப்படும். எனவே நூறு ஆண்டுகளுக்கும் மேலான கங்கா
ராம் கோவிலின் வியவஸ்தபக் சாது அயோத்தியில் அதிகாரம் மிக்கவராகக் கருதப்படுகிறார். அந்தக் கொலையில் உள்ளிருப்பவர்களின் தொடர்பு இருந்ததாக
ஆரம்பகட்ட விசாரணைகளில் தெளிவாகத் தெரிய வந்தது. கங்கா பவனில் வசித்து வந்தவர்களில்
ஒருவரான துர்கேஷ் திவாரி என்பவரை 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் காவல்துறையினர் கைதும் செய்தனர்.
துர்கேஷ் திவாரி பூசாரி விஜய் ராம் தாஸுடன் பணரீதியான தொடர்பு வைத்திருந்ததாகவும்,
பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அவர்களுக்கிடையே சர்ச்சைகள் இருந்ததாகவும் விசாரணை அறிக்கைகள்
தெரிவித்தன. அறக்கட்டளையின் உயர்மட்டத்திற்கு தான் வர வேண்டுமென்று விரும்பிய துர்கேஷ் திவாரி அதற்கு பூசாரி விஜய் ராம்
தாஸ் தடையாக இருப்பார் என்று கருதினார் என்ற கருத்தும் நிலவியது.
மற்ற மூன்று கொலைகளின் பின்னாலும் இதுபோன்ற அதிகாரம், பணம் தொடர்பான சண்டைகளே
இருந்தன என்று பைசாபாத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஃப்ரண்ட்லைனிடம் தெரிவித்தார்
. அந்தச் சண்டைகள் 2013ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில்
கும்பல் மோதல்களாக வெளிப்பட்டிருந்தன என்று அவர் கூறினார். அந்தச் சண்டை பூசாரி பவ்நாத்
தாஸ் மற்றும் சாகரியா பட்டியின் பூசாரி பல்ராம் தாஸ் தலைமையிலான கும்பல்களுக்கு இடையிலான
மோதல்களுடனே தொடங்கியது. அந்த மோதல்களுக்கிடையே
பூசாரி பல்ராம்தாஸின் சீடரான ராம் பரத் என்பவரை ரமேஷ் தாஸ் என்பவர் சுட்டுக் கொன்றார்.
ரமேஷ் தாஸ் கைது செய்யப்பட்டார், ஆயினும் மோதல்களைத் தூண்டிய பூசாரி பவ்நாத் தாஸ் கைது செய்யப்படவில்லை.
பூசாரி பவ்நாத் தாஸ் ஆன்மீக நடவடிக்கைகளை வெளிப்படையாக, சோசலிசக் கருத்துகளுடன் இணைக்க முயலும் சமாஜ்வாதி சந்த் சபாவின்
நிறுவனர்-தலைவராக இருந்தது தற்செயலானதுதான். அதனைத் தொடர்ந்து, ஆயராம்ஜி அகாரா உதசீன்
கோவிலின் வியவஸ்தபக் சாதுவாக இருந்த ராம்தேவ் தாஸ் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில்
சுட்டுக் கொல்லப்பட்டார். மூன்றரை மாதங்களுக்குப் பிறகு வசுதேவ்காட் பகுதியில் உள்ள
கோவிலின் பூசாரி அயோத்தி தாஸ் லால் மர்மமான சூழ்நிலையில் காணாமல் போனார். காவல்துறை
அவர் இறந்துவிட்டதாகப் பின்னர் அறிவித்தது. அனைத்து கொலைகளுக்கும் பொதுவான விஷயமாக
கொலை செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய ஆன்மீக நிறுவனங்களின் மிகப் பெருமளவிலான செல்வம்
மட்டுமே இருந்தது. பொருள் செல்வம் மற்றும் அதிகாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன்
நடத்தப்பட்ட சண்டைகளே ஒவ்வொரு கொலையிலும் முக்கியமான
காரணமாக இருந்தன என்று ஆரம்பகட்ட விசாரணைகள் வெளிப்படுத்தின. ஆனாலும் அந்தக் கண்டுபிடிப்புகளுக்கு
அப்பால் இன்னும் உறுதியான சட்ட முடிவுகள் எதுவும் அந்த வழக்குகளில் எட்டப்படவில்லை.
அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடுகளின்படி அயோத்தியில் கடந்த பத்தாண்டுகளில் சுமார் இருநூறு
சாதுக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அயோத்தி மற்றும் பைசாபாத்தில் அதிக காலத்தைக் கழித்துள்ள
ஓய்வுபெற்ற காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் ‘1990களின் முற்பகுதியில்
அவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களில் அயோத்தி ராம் கோவிலின் பூசாரி லால்
தாஸ் போன்ற சாதுக்களும் அடங்குவர். அந்தப் பகுதியில் வகுப்புவாத நல்லிணக்கத்தை, அமைதியை பாதுகாப்பதில் அவர்
மிக உறுதியாக இருந்தார். அந்தக் காரணத்திற்காகவே கிரிமினல் சாது குற்றவாளிகளால் அவர் வேட்டையாடப்பட்டார். சாதுக்களின்
அட்டூழியங்கள் பரவலாக, தாங்க முடியாத அளவிற்கு மாறியிருந்த போதிலும் போதுமான சாட்சியங்கள்
இல்லாத காரணத்தால் காவல்துறையால் உறுதியான சட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட சாதுக்களும் உள்ளனர்’
என்றும் அவர் கூறினார்.
சட்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கத்துடன் கோவில் நகரத்தில்
மிகவும் மோசமான குற்றவாளிகள் சாதுக்களாகத் தஞ்சம் அடைகின்றனர் என்பது போன்ற கதைகளும் அயோத்தியில் ஏராளமாக உள்ளன. ஒரு ஆசிரமம், மடம் அல்லது கோவில் அல்லது ஒரு
பூசாரியால் இணைத்துக் கொள்ளப்படும் போது, தங்களுடைய பெற்றோர்கள், பிறந்த இடங்கள்
உட்பட முந்தைய அடையாளங்கள் அனைத்தையும் நீக்கிக் கொள்வதற்கு 'சாதுக்கள்' என அழைக்கப்படுபவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பல்வேறு நிறுவனங்களின் பொறுப்பில் இருக்கும் வெவ்வேறு சாதுக்கள், பூசாரிகளின்
சீடர்களாக மட்டுமே அடையாளம் காணப்படுகிறார்கள்.
மோசமான வேலைகளைத் தங்களுக்காகச் செய்து கொடுப்பதற்காக சாதுக்களும்,
பூசாரிகளும் இதுபோன்ற குற்றவாளிகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அது 1998 ஆம் ஆண்டு
அயோத்தியில் சரயு ஆற்றின் அருகே குப்தர் காட் என்ற இடத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு
தொடர்பான வழக்கில் தெளிவாகத் தெரிய வந்தது. அந்த துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். பலருக்கு காயங்கள் ஏற்பட்டன.
யக்ய ஷாலா ஆசிரமத்தின் பூசாரியாக இருந்த மௌனி பாபா தலைமையிலான சாதுக்கள் குழுவால் உள்ளூர்
மீனவர் சமூகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது; அது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்ட
போது, குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேர் மௌனி பாபாவின் சீடர்கள் என்று
மட்டுமே குறிப்பிடப்பட்டனர்.
அயோத்தியில்
உள்ள நன்கு அறியப்பட்ட கோவில்கள், ஆசிரமங்கள், மடங்கள் அனைத்தும் தங்களிடம் குற்றவாளிகள்
தஞ்சம் அடைவதை ஊக்குவித்து வருவது அனைவரும்
அறிந்ததே. மணிராம் தாஸ் சாவ்னி சேவா டிரஸ்ட், திகம்பர் அகாரா, ராம்-ஜானகி நிவாஸ் போன்ற
மிகப் பெரிய நிறுவனங்கள் ஆர்எஸ்எஸ், பாரதிய ஜனதா கட்சி, சங் பரிவார அமைப்புகளை ஆதரித்து
வருகின்றன. சமாஜ்வாடி கட்சியும், காங்கிரஸும் அதில் விதிவிலக்காக இருக்கவில்லை. சங்பரிவார்
1980களின் மத்தியில் அயோத்தி ராமர் கோவில் போராட்டத்தைத் தொடங்கிய பிறகு இதுபோன்ற குற்ற
நடவடிக்கைகள் மிகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று ஷீத்லா சிங் சுட்டிக்காட்டுகிறார்.
‘ராமர் கோவிலுக்கான அந்த இயக்கம் தொடக்கத்தில் பூசாரி ராமச்சந்திர பரம்ஹன்ஸ் என்பவரால்
வழிநடத்தப்பட்டது. 1949ஆம் ஆண்டில் ராமர், சீதை, லட்சுமணன் சிலைகளை பாபர் மசூதிக்குள்
கொண்டு செல்வதற்கு அவர் தலைமை தாங்கினார். தன்னுடைய அமைப்பு சார்ந்த குறைபாடுகளைச்
சமாளிப்பதற்காக 1980களின் நடுப்பகுதியில் வகுப்புவாத அடிப்படையில் சமூகத்தை துருவமுனைப்படுத்தும்
சங் பரிவாரத்தின் முயற்சியாகவே அந்தக் குற்றச் செயல் நடத்தப்பட்டது. ஆர்எஸ்எஸ், விஎச்பி,
பாஜக ஆகிய அமைப்புகள் அப்போது இதுபோன்ற குற்றவாளிகளுக்கு அந்த ஒரு நோக்கத்திற்காகவே
முன்னெப்போதும் இல்லாத வகையில் ஆதரவளித்தன. பின்னர் அது வேரூன்றி நிலைத்து விட்டது,
இப்போது பொதுவான வழக்கமாக, அமைப்பாக அது மாறி விட்டது’ என்று ஷீத்லா சிங் கூறினார்.
‘அயோத்தியிலிருந்து
கிடைக்கும் சித்திரங்கள்’ என்ற
தலைப்பில் 2012ஆம் ஆண்டு தான் எழுதிய புத்தகத்தில் வாய்வழி வரலாற்றைப் பதிவு செய்து
கோவில் நகரம் குறித்த கதைகளை எழுத்தாளர் ஸ்கரதா துபே விவரித்துள்ளார். தலைமைப் பூசாரி
நிருத்ய கோபால் தாஸ் இதுபோன்ற குற்றம் சார்ந்த வழிகளில் சங்பரிவாரத்தின் முதன்மை வீரராக
எவ்வாறு உருவெடுத்தார் என்பதை அவரது புத்தகம் எடுத்துக் காட்டுகிறது. நிறுவன ரீதியாக
அவரை எதிர்த்து வந்தவர்கள், அவருக்குத் தங்களுடைய நிலம் அல்லது சொத்துகளைத் தர மறுத்தவர்களின்
மர்மமான மரணங்கள் போன்ற பல நிகழ்வுகள் அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. ஆனாலும்
வழக்கம் போல அயோத்தியில் இந்த வழக்குகள் எவற்றாலும் தர்க்கரீதியான முடிவை எட்ட முடியவில்லை.
தலைமைப்
பூசாரி நிருத்ய கோபால் தாஸ், அவர் தலைமையிலான மணிராம் தாஸ் சாவ்னி சேவா அறக்கட்டளை
ஆகியவற்றின் மேலாதிக்கம், அவை கைப்பற்றப்பட்ட விதம் பற்றி யாரும் கேள்விகளை எழுப்புவதில்லை
என்ற நிலையில் இந்தக் கோவில் நகரத்தை அவர்கள் முழுமையாக ஆளுகின்றனர். தங்களால் இயன்றவரை
இந்த தலைவர்களின் பயிற்சியின்
கீழ் அவர்களுடைய சீடர்களும் சிறப்பாகவே ஆட்சி செய்து வருகிறார்கள்.
https://frontline.thehindu.com/the-nation/a-tale-of-criminal-sants/article23596083.ece
தெஹல்கா இதழில் வெளியான கூடுதல் தகவல்கள்...
ராமஜென்ம பூமி நியாஸின் தலைவர் நிருத்ய கோபால்
தாஸ்
ராமஜென்ம பூமி நியாஸின் தலைவரும், ராம சந்திர பரமஹம்சாவின் வாரிசுமான தலைமைப் பூசாரி நிருத்ய
கோபால் தாஸ் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. உயிருக்குப் பயந்து தன்னுடைய பெயரைக்
கூற விரும்பாத அயோத்தியின் பெரிய தலைமைப் பூசாரி ஒருவர் ‘அந்த மனிதன் துறவியே கிடையாது.
அயோத்தியில் இன்று நடக்கின்ற குற்றம், அராஜகம் அனைத்திலும் அவர் குண்டராக, நில மாஃபியாவாக
தொடர்பில் இருந்து வருகிறார். அவர்கள் உங்களுடைய நிலம் அல்லது கோவிலை விரும்பினால், அவர்களிடம் அவற்றை ஒப்படைப்பதைத்
தவிர உங்களுக்கு வேறு வழி எதுவும் கிடையாது. உங்கள் நிலத்தை அவர்களிடம் கொடுத்து விட வேண்டும் அல்லது இறந்து
போவதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும் என்ற நிலைமையே இன்றைக்கும் இருந்து வருகிறது’
என்கிறார்.
'அயோத்தி பிரமோத் வனப்பகுதியில் இருந்த, ஓய்வுபெற்ற அரசு பெண் ஊழியர்
ஒருவரின் வீட்டை நிருத்ய கோபால் தாஸ் மிகவும் விரும்பினார். அந்த வீட்டை தான் வாங்கிக் கொள்வதாக
வீட்டு உரிமையாளரான ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு அவர் பலமுறை தகவல் அனுப்பி வந்தார்.
ஆனால் தன்னுடைய வீட்டை விற்க அந்தப் பெண் விரும்பவில்லை. சில நாட்களுக்குப் பிறகு அடையாளம்
தெரியாத சிலர் அந்தப் பெண்மணியைத் தாக்கியதாகச் செய்தி வெளியானது. அந்தப் பெண் அந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப்
பிறகு தன்னுடைய குடும்பத்துடன் வேறு மாநிலத்திற்குச் சென்று விட்டார்’ என்று நிருத்ய
கோபால் தாஸுடன் தொடர்புடைய அந்தச் சம்பவம் குறித்து 'அயோத்தியிலிருந்து
கிடைக்கும் சித்திரங்கள்' (போர்ட்ரெய்ட்ஸ் ஃப்ரம் அயோத்யா) என்ற தனது புத்தகத்தில்
சாரதா துபே குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.
மற்றொரு சம்பவம் மணிராம் தாஸின் முகாமிற்கு அருகே அமைந்துள்ள பிந்து சரோவர் கோவிலுடன் தொடர்புடையது.
அங்கே திரிவேணி தாஸ் என்பவர் தலைமைப் பூசாரியாக இருந்தார். கோவில் தொடர்பான சில விஷயங்களில் நிருத்ய கோபால் தாஸுடன் அவர் இயைந்து
போகாததால் அதிருப்தி உருவானதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு
திரிவேணி தாஸ் வழக்கம் போல் அதிகாலை நான்கு மணிக்கு சரயு நதியில் குளிக்கச் சென்ற வழியில்
வந்த லாரி அவர் மீது மோதியது. அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அயோத்தியில் உள்ள
பலரும் அந்தச் சம்பவத்தின் பின்னணியில் கோபால் தாஸ் இருந்ததாகச் சொல்கின்றனர்.
நிருத்ய கோபால் தாஸ் மற்றவர்களின் சொத்துக்களைப் பறித்தார் என்று
அவர் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் மிகப் பெரியதாக மார்வாரி தர்மசாலாவின்
உடைமை தொடர்பான குற்றச்சாட்டு உள்ளது. ‘இந்த தர்மசாலாவில் அயோத்தியைச் சுற்றியுள்ள
கிராமங்களைச் சேர்ந்த எழுபது முதல் எண்பது சிறுவர்கள் 1990களில் தங்கியிருந்தனர். அவர்கள்
அனைவரும் கல்லூரிக்குச் சென்றிருந்த ஒருநாள் பிற்பகலில் ஆயுதமேந்திய சாதுக்கள் அந்த தர்மசாலாவைக்
கைப்பற்றிக் கொண்டனர். மாணவர்களின் புத்தகங்கள், ஆவணங்கள், உடைகள் என்று அங்கிருந்த
பல பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டன’ என்று அந்தச் சம்பவத்திற்கு சாட்சியாக இருந்த
சாது பிரேம் சங்கர் தாஸ் கூறுகிறார். அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதற்காக நிருத்ய கோபால்
தாஸ் மற்றும் பலருக்கு எதிராக 347, 348 மற்றும் 436 பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு
செய்யப்பட்டது. இதே போன்று கோபால் தாஸுக்கு எதிராகப் பிற வழக்குகளும் இருக்கின்றன என்று பிரேம்
சங்கர் தாஸ் கூறுகிறார்.
இவ்வாறு அயோத்தியில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த கோபால்
தாஸுமே அங்கே நடந்து வருகின்ற வன்முறையால் பாதிக்கப்பட்டார். 2001ஆம் ஆண்டு மே மாதத்தில்
ஒரு நாள் அதிகாலை ஐந்து மணியளவில் தனது சீடர்களுடன் சரயு நதியில் குளிக்கப் போன அவர்
மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அந்த தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார்.
அந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ
இருந்தது என்று அவர் கூறிக் கொண்டார். ஆயினும் தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே
அவரது சொந்த சாது சமாஜ் சமூகத் துறவிகளில் ஒருவரான தேவராம் தாஸ் வேதாந்திக்கு அந்த
தாக்குதலில் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அந்தத் தாக்குதல் நடப்பதற்கு முன்பாக
தனது செல்வாக்கைப் பயன்படுத்தி வேதாந்தியை ராம் வல்லப கோவிலின் தலைமைப் பூசாரி பதவியில்
இருந்து நிருத்ய கோபால் தாஸ் நீக்கியிருந்தார். அதற்குப் பழிவாங்குவதற்காகவே வேதாந்தி நிருத்ய கோபால் தாஸைத் தாக்கினார்
என்று சொல்லப்படுகிறது. வேதாந்தியும் சளைத்தவரல்ல. ஒரு சிறுமியுடன் பீகார் பகல்பூரில்
உள்ள ஹோட்டலில் இருந்த அவரை 1995ஆம் ஆண்டில் காவல்துறையினர் கைது செய்தனர். அந்தச்
சிறுமியைக் கடத்திச் சென்றதாக வேதாந்தி மீது குற்றம் சுமத்தப்பட்டது. அப்போது ஸ்பானிஷ்
கைத்துப்பாக்கி அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.
https://iqbalsoofi.blogspot.com/2013/12/the-guns-godmen-of-ayodhya.html
Comments