ராம் புனியானி
கௌன்டர்கரண்ட்ஸ் இணைய இதழ்
ஜனவரி இருபத்தியிரண்டாம்
நாள் நடைபெறவிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான மாபெரும் பிரச்சாரம், அணிதிரட்டல்
நடைபெற்று வருகின்ற வேளையில் இந்திய ஜனநாயகம், மதச்சார்பற்ற நெறிமுறைகளைச் சுயபரிசோதனை
செய்து பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் நமக்குத் தேவைப்படுகிறது. நாடு சுதந்திரம்
அடைந்த உடனேயே இந்திய அரசு பதினோராம் நூற்றாண்டில் முகமது கஜினியால் சூறையாடப்பட்ட
சோம்நாத் கோவிலை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை சில தரப்பினரிடமிருந்து எழுந்ததை
இங்கே நினைவுகூரலாம். தானும், பட்டேலும் கோவிலைப் புனரமைப்பது தொடர்பாக மகாத்மா காந்தியைக்
காணச் சென்றதாகவும், ஆனால் அந்த வேலைக்காக அரசு பணமாக எந்தவொரு பங்களிப்பையும் செய்யக்கூடாது
என்று காந்தி கருதியதகவும் நேரு தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அதன்
அடிப்படையில் இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற தனது அதிகாரபூர்வ நிலையிலிருந்து அந்தக்
கோவிலைத் திறந்து வைக்க வேண்டாம் என்று குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம்
அப்போதைய பிரதமர் நேரு கேட்டும் கொண்டார். அதற்குப் பின்னர் அணைகள், பொதுத்துறை தொழிற்சாலைகள்,
சுகாதார உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் என்று 'நவீன இந்தியாவின்
கோவில்களை' நேரு கட்டினார்.
‘ஒருவருக்கு ஒரு வாக்கு’ என்ற அடிப்படையில் நாட்டின் ஜனநாயகம் வலுப்பெற்றது.
தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் சமூகத்தின் பிற பிரிவுகள் நடத்திய சமூக இயக்கங்கள்
ஜனநாயக வெளியை, விழுமியங்களை அதிகரித்தன. இடைக்காலத்தில் கொண்டு வரப்பட்ட
நெருக்கடி நிலையைத் தவிர்த்து, சுதந்திரப் போராட்டத்துடன் தோன்றிய ‘இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கு’
ராமர் கோவில் இயக்கம் குழிபறிக்கும் வரையிலும் ஜனநாயக நெறிமுறைகளைப் படிப்படியாக வலுப்படுத்துகின்ற
திசையிலேயே நாடு நகர்ந்து சென்றது. பாபர் மசூதிக்குள் ராம் லல்லா சிலையை நிறுவிடத்
திட்டமிட்டது, பைசாபாத் ஆட்சித்தலைவர் கே.கே.நய்யார் சிலையை அகற்ற மறுத்தது போன்ற
செயல்களே இந்திய அரசியலமைப்பின் விழுமியங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறவிருந்த
பிரச்சனைகளுக்கான விதைகளை விதைத்தன.
டிசம்பர்
ஆறாம் நாள் பாபர் மசூதியை நன்கு திட்டமிட்டு இடித்த செயல் வரவிருக்கும் பெரிய ராமர்
கோவிலுக்கு வழி வகுத்துக் கொடுத்தது. இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்திருக்கும் அரசியல்
கட்சி உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. மேலும் நாட்டின்
ஜனநாயக வெளிகளையும் அது கட்டுப்படுத்தி வருகிறது. ராமர் கோவில் இயக்கத்தில் முக்கியப்
பங்காற்றிய லால் கிருஷ்ண அத்வானியே தற்போதைய காலகட்டத்தை ‘அறிவிக்கப்படாத நெருக்கடி
நிலை’ என்று ஒருமுறை கூறியிருக்கிறார். உணர்வுப்பூர்வமான பிரச்சனைகள் மட்டுமே ஒட்டுமொத்தமாக
நடைமுறையில் இருந்து வரும் நிலையில் ஜனநாயகப்பூர்வமான, சிறந்த வாழ்க்கை நிலைமைகளுக்கான
தேவைகள் அனைத்தும் அரசால் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. நாம் இப்போது
மிகச் சாதாரணமான மக்கள் மீது விலைவாசி உயர்வு, மோசமான வாழ்வாதாரக் குறியீடுகள் கடுமையான
பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள மோசமான காலகட்டத்திலேயே வாழ்கின்றோம்.
பகத்சிங்,
சுபாஷ் போஸ், காந்தி மற்றும் தங்கள் இன்னுயிரை நாட்டுக்காகத் தியாகம் செய்த எண்ணற்ற
தலைவர்களின் கனவாக இருந்த சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் மைய உணர்வான 'இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கான’
பாதையை உருவாக்கிடும் சிறந்த எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஏதாவது இப்போது நம்மிடையே இருக்கிறதா?
மறைந்திருந்த
ஜனநாயகத்தின் பலம் வெளிப்படும் சில காட்சிகள் கடந்த சில ஆண்டுகளாகத் தென்படுகின்றன.
மூன்று அடக்குமுறை வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது பெரும் எண்ணிக்கையில்
விவசாயிகள் தில்லிக்கு அணிவகுத்துச் சென்று மாதக்கணக்கில் அங்கேயே தங்கினர். அந்தப்
போராட்டத்தில் ஏறக்குறைய அறுநூறு சக விவசாயிகளை அவர்கள் தியாகம் செய்தனர். வேளாண் சட்டங்களைத்
திரும்பப் பெற வைத்த அவர்கள் சமூகத்தின் எதிர்காலத்தை ஜனநாயகப் போராட்டங்களால் வடிவமைக்க
முடியும் என்பதை நிரூபித்தனர். பெரும்பகுதி முஸ்லீம்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்காக
குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றைக் கொண்டு வந்த
ஒன்றிய அரசின் சாதுரியமான நடவடிக்கையையும் நாம் அண்மையில் கண்டோம். நாட்டை உருவாக்கி,
இந்திய எதிர்காலத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையாக ஜனநாயகப் போராட்டங்கள்
இருப்பதைக் காட்டும் வகையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாக அரசின் நடவடிக்கைகளுக்கு
எதிராக நடத்தப்பட்ட ஷாஹீன் பாக் இயக்கம் உருவானது.
மக்கள்
படும் வேதனைகள் ஓராண்டிற்கு முன்பாக ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்தியாவை ஒன்றிணைக்கும்
யாத்திரை) வடிவில் வெளிப்படுத்தப்பட்டன. பல்வேறு மதங்கள், இனங்களுக்கு
அப்பாற்பட்டு நாட்டின் ஒற்றுமை குறித்த செய்தியை அந்த யாத்திரை மக்கள் அனைவரிடமும்
கொண்டு போய்ச் சேர்த்தது. அது அவநம்பிக்கையுடனிருந்த சமூகச் சூழலை நம்பிக்கை
நிறைந்ததாக மாற்றிக் காட்டியது. சமூகத்தின் உண்மையான பிரச்சனைகளான
பசி, தங்குமிடம், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சனைகள் மீது தேசத்தின் கவனத்தை ஈர்த்தது.
தங்களின் வலிகளை, குறைகளை ஜனநாயக வழியில் வெளிப்படுத்துவதற்காக
இப்படி ஒரு நிகழ்வு நடக்க வேண்டும் என்று காத்திருந்ததைப் போல மக்கள் உடனடியாக எதிர்வினையாற்றினர்.
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகின்ற, அனைவரையும் உள்ளடக்கும் சமுதாயத்திற்கான நம்பிக்கை
மீண்டும் எழுச்சி பெற்றது. தேசிய அளவிலான உரையாடலுக்கான புதிய தளம் வெளிப்பட்டது.
அந்த
யாத்திரை தன்னுடைய அடையாளத்தைப் பதித்தது. ஆயினும் இனவாத சக்திகள் உயிர்வாழ்வதற்கான
மக்களின் உண்மையான பிரச்சனைகளுடன் எந்தவொரு தொடர்பும் இல்லாத பிரிவினைப் பிரச்சனைகளுடன்
தொடர்புடைய தங்களுடைய பிரச்சாரத்தைப் பரப்புவதற்கான மிகத் திறமையான இயந்திரத்தை உருவாக்கியுள்ளன.
அதன் அடிப்படையிலேயே ராமர் கோவில் திறப்பு விழா பெரிய நிகழ்வாக முன்னிறுத்தப்படுகிறது.
ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கான அழைப்பாக
‘அக்சதை’ (புனித மஞ்சள் அரிசி) மூலம் மக்களைத் திரட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் அனைத்துப்
பிரிவுகளும் தங்கள் ஆற்றலை முழுமையாகச் செலுத்தி வருகின்றன. ராமர் கோவில் மீது ஒட்டுமொத்த
தேசிய கவனத்தையும் ஈர்க்கின்ற வகையில் கூடுதல் பேருந்துகள், ரயில்களை இயக்குவதற்கான
திட்டங்களும் தயாராகி வருகின்றன.
ராமர் சிலைக்கு
பிரதமர் மோடி உயிர் கொடுக்கப் போகின்ற (பிராண பிரதிஷ்டை) ஜனவரி இருபத்தியிரண்டாம்
நாளுக்காக நாடு காத்திருக்கும் நிலையில் ஏற்கனவே மற்றொரு நிகழ்வு இங்கே நடைபெற்று வருகிறது.
அது மணிப்பூரிலிருந்து மும்பைக்கு ஜனவரி பதினான்காம் நாள் முதல் மார்ச் இருபதாம்
நாள் வரை நடைபெறப் போகின்ற ‘பாரத் ஜோடோ நியாய்
யாத்ரா’. நடை மற்றும் பேருந்து மூலம் கலவையாக
நடக்கப் போகின்ற இந்த யாத்திரை கடந்த ஏழு மாதங்களாக இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு
ஒன்றிய அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ள மாநிலமான மணிப்பூரில் இருந்து தொடங்கியுள்ளது.
மணிப்பூர் மக்களின் அமோக வரவேற்பு இந்த யாத்திரைக்குக் கிடைத்துள்ளது.
அநியாயம்
நம்மைச் சுற்றிலும் காணப்படும் நிலைமையில் நீதியை மையப்படுத்தி நடக்கப் போகின்ற இந்த
யாத்திரை வேலையின்மை, விவசாயிகள் பிரச்சனைகள், அதிகரித்து வரும் வறுமை, பெண்களின் கண்ணியம்,
ஆதிவாசிகளின் உரிமைகள் போன்றவற்றின் மீது கவனம் செலுத்தப் போகிறது. மக்கள் பிரச்சனைகளை
ஜனநாயக வழியில் முன்னிலைப்படுத்துவதற்கு இதுவே சிறந்த வழியாக இருக்கும். பெரும்பாலான
ஊடகங்கள் ராமர் கோவில் விவகாரத்தைச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த
நீதி யாத்திரை குறித்த செய்தியை வெகுதூரம் கொண்டு சென்று பரப்ப வேண்டிய தேவை நமக்கு
உள்ளது. ராமர் கோவில் பிரச்சனை ஆர்எஸ்எஸ்-பாஜகவின் திட்டத்தை, எதேச்சாதிகார அரசியலை
வலுப்படுத்துவதாக உள்ளது. ஆனால் பாரத் ஜோடோ நீதி யாத்திரை அரசியலமைப்பு அறநெறி தொடர்பான
விழுமியங்களை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. எந்தவொரு குறிப்பிட்ட கட்சியின் வேலைத்திட்டமாக
இந்த யாத்திரையைப் பார்க்கத் தேவையில்லை. சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் தேவைகள்,
உரிமைகளின் வெளிப்பாடுகளின் தொகுப்பாக இந்த யாத்திரை இருக்கப் போகிறது. அனைவரையும்
உள்ளடக்கிக் கொள்ளும் இந்தியாவிற்குப் பதிலாக குறிப்பிட்ட அமைப்பால் ஹிந்து ராஷ்டிரத்தை
அடைவதற்காக அதிகரித்து வரும் வகுப்புவாத துருவமுனைப்பிடம் சிக்கிக் கொண்டிருக்கும்
ஜனநாயக வெளியைப் பறித்தெடுக்கும் முயற்சியாகவே இந்த யாத்திரை உள்ளது.
இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிக் கொள்ளும் விழுமியங்களைப் பாதுகாப்பதிலும், செய்திகளை வெகுதூரம் சென்று செலுத்துவதிலும் யாத்திரைகள் மிக முக்கியமான பங்குடன் இருந்துள்ளன. சிந்தனைகள் மற்றும் அரசியல் விழுமியங்களைப் பரப்புவதற்கான வழிமுறைகள் பிற்போக்கு அரசியலால் கட்டுப்படுத்தப்பட்டு வரும் தற்போதைய காலகட்டத்தில் நீதிக்கான இந்த யாத்திரை இந்திய தேசியம் என்ற விளக்கை ஏற்றி வைப்பதாக, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் புதிய காற்றின் சுவாசமாக வந்துள்ளது.
https://countercurrents.org/2024/01/sustaining-democratic-spirit-movements-and-yatras/
Comments