லட்சத்தீவு மாலத்தீவுகளல்ல…மாலத்தீவுகளைப் போல இருக்க வேண்டிய தேவையும் லட்சத்தீவிற்கு இல்லை

 அனன்யா பட்டாச்சார்யா

இந்தியா டுடே

லட்சத்தீவில் பிரதமர் நரேந்திர மோடி


லட்சத்தீவு-மாலத்தீவுகள் குறித்து எழுந்த பிரச்சனைகள் அனைத்தும் LOL எமோஜியுடனே தொடங்கின. அந்த LOL எமோஜி LOL எமோஜிகளின் வரலாற்றிலேயே விலை மதிப்பற்றதாக இருக்கலாம். இதுவரை நட்புடன் இருந்து வந்த இரண்டு நாடுகள் கேலி, ஏளனச் சிரிப்புகளால் குறுக்கு வழியில் எதிரெதிராக நின்று கொண்டிருக்கின்றன.  

லட்சத்தீவில் தான் தங்கியிருந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட புகைப்படங்களை, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பிரதமர் விரும்பிய இந்தியாவின் மற்றொரு இடம் என்று கடந்து சென்றிருக்கலாம். அங்கிருந்த தூய்மையான தண்ணீரைப் பாராட்டிய மோடி இந்தியர்களிடம் ‘உங்கள் தேசத்தைப் பாருங்கள்’ என்று வலியுறுத்தியிருந்தார். ஒரு நோட்டுப் புத்தகத்துடன் அமர்ந்து லட்சத்தீவு குறித்த  தனது எண்ணங்களை எழுதிய மோடி தெளிவான அந்த நீல நீரில் மூழ்கிப் பார்த்தார்.   

லட்சத்தீவிலிருந்து வெகு தொலைவில் இல்லாத ஒரு நாட்டில் அப்போது சுனாமி உருவானது. 


லக்கடீவ் கடலில் லட்சத்தீவைப் போன்று அதே தீவுச் சங்கிலியின் ஒரு பகுதியாக உள்ள மாலத்தீவுகள் பிரதமரின் அந்த இடுகைகளை தனக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே கருதியது.     

திரைப்படங்களைக் காட்டிலும் மாலத்தீவுகள் விடுமுறைகளால் அதிகம் அறியப்பட்ட பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள் இந்தியத் தீவுகளுக்குச் செல்லுமாறு மக்களிடம் வலியுறுத்தத் தொடங்கினர்.  தனது அண்டை நட்பு நாட்டிற்கு கடிதங்களை எழுதி மன்னிப்புக் கோரிய மாலத்தீவுகள் அமைச்சரவையில் இருந்து மூன்று அமைச்சர்களை இடைநீக்கமும் செய்தது.     

இதற்கிடையில் மாலத்தீவுகளில் உள்ள தலையாய தலைவன் அமைதியாக இருந்தான். மாலத்தீவுகள் பற்றி இன்னும் 'அதிகாரப்பூர்வமாக' எதையும் சீனா செய்யவில்லை என்றாலும் அரேபியக் கடலில் உருவாகப் போகின்ற அலைகளை அனைவரும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.  

மாலத்தீவுகளைக் காட்டிலும் லட்சத்தீவே சிறப்பானது என்ற போர் முழக்கம் இந்திய ட்விட்டர் உலகில் எழுந்தது. எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள அந்தச் சிறிய தீவுகள் மீது அனைவருக்கும் ஆர்வம் அதிகரித்தது. லட்சத்தீவு குறித்த தேடல் அதிகரித்த வேளையில் அதனைக் கையாள்வதில் கூகுள் மிகுந்த சிரமத்திற்குள்ளானது. லட்சத்தீவு நாட்டின் பிரதான நிலப்பகுதியிலிருந்து வரப் போகும் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்திற்குத் தயாராகத் தொடங்கியது.  

லட்சத்தீவில் தங்கியிருந்த புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்


லட்சத்தீவு மாலத்தீவுகளுக்கு மாற்றாக இருக்குமா? இதுதான் இந்த இடத்தில் எழும் மிகப் பெரிய கேள்வியாகும். இந்தக் கேள்விக்கு மிகச் சுருக்கமான பதில் இல்லை என்பதாகவே இருக்கும். ஆனால் நெடிய பதில் - இல்லை, ஒருபோதும் அது அவ்வாறு இருக்கக்கூடாது என்றே இருக்க வேண்டும்.

லட்சத்தீவு என்றால் அது சமஸ்கிருதத்தில் ஒரு லட்சம் தீவுகளைக் குறிக்கும். ஏற்கனவே இருந்த தீவுகளில் ஒரு தீவை கடல் விழுங்கிய பிறகு அங்கே தற்போது மொத்தம் முப்பத்தைந்து தீவுகள் இருக்கின்றன. இந்த முப்பத்தைந்து தீவுகளில் பத்து தீவுகளில் அறுபத்தைந்தாயிரத்திற்கும் குறைவில்லாத எண்ணிக்கையில் மக்கள் வசித்து வருகின்றனர்.  

திப்பு சுல்தானின் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த அந்தத் தீவுகள் பிரிட்டிஷ் ஆட்சியின் போது மெட்ராஸ் மாகாணத்துடன் இணைக்கப்பட்டன. பின்னர் 1956ஆம் ஆண்டில் லட்சத்தீவு சுதந்திர இந்தியாவின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமாக மாறியது.

லட்சத்தீவு மாலத்தீவுகளை எதிர்கொண்டு நிற்பதற்கான சாத்தியம் ஒருபோதும் இல்லை. அவை இரண்டுக்குமிடையில் வெள்ளை மணல் கடற்கரைகள், 'வெப்பமண்டலச் சொர்க்கம்’ என்ற அடைமொழி ஆகியவற்றைத் தவிர வேறு எந்தவொரு ஒப்பீடும் இல்லை என்று கூறும் அளவிற்கு அவையிரண்டும் பல மைல்களுக்கு அப்பால் இரு துருவங்களாகப் பிரிந்து வெவ்வேறாகவே இருந்து வருகின்றன.    

சுற்றுலா அமைச்சகத்தின் தரவுகளின்படி 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலும் மாலத்தீவுகளுக்கு மொத்தம் 17,57,939 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். கோவிட் உச்சத்தில் இருந்த 2020ஆம் ஆண்டில் மாலத்தீவுகள் மட்டுமே விசா இல்லாமல் இந்தியர்கள் செல்லக்கூடிய ஒரே நாடாக இருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கடற்கரை நகரான அலிபாக்குக்குச் செல்வதைப் போல பாலிவுட் பிரபலங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் கூட்டம் கூட்டமாக  மாலத்தீவுகளுக்குச் சென்று வந்துள்ளனர்.    

எளிமையான பயணத்தைப் பொருத்தவரை மாலத்தீவுகளே அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றன. அதில் லட்சத்தீவிற்கு எந்த மதிப்பெண்ணும் கிடைக்கப் போவதில்லை.   

மாலத்தீவுகள் கடைப்பிடித்த தீவிரமான விரிவாக்கக் கொள்கைகளே சுற்றுலா தரவரிசையில் அந்த நாடு முதலிடத்திற்குச் செல்ல உதவின.   

இந்திய உள்நாட்டுப் பயணிகளைப் பொருத்தவரை மும்பை, திருவனந்தபுரம், கொச்சி போன்ற நகரங்களில் இருப்பவர்களுக்கு லட்சத்தீவுப் பயணம் சற்று எளிதாக இருக்கும். மாலத்தீவுகளில் ஓரளவு வசதியுடைய ஓய்வு விடுதிகளில் தங்குவதைக் காட்டிலும் லட்சத்தீவில் தங்குவது மிகவும் மலிவானதாகவே உள்ளது.

மாலத்தீவுகள் -  லட்சத்தீவு: சிறு குறிப்புகள்

• மாலத்தீவுகளுக்கு நாற்பது உலகத் தலைநகரங்களில் இருந்து நேரடி விமானச் சேவை இருக்கிறது.  

மாலேவில் ஏர்போர்ட் எனப்படும் மிகப் பெரிய விமான நிலையம் உள்ளது. ஆனால் லட்சத்தீவில் ஏரோட்ரோம் எனப்படும் மிகச் சிறிய விமான நிலையமே உள்ளது

 

• மாலேயில் உள்ள வேலனா சர்வதேச விமான நிலையம் 4.2 கிலோமீட்டர் ஓடுபாதை கொண்டது. உலகம் முழுவதிலுமிருந்து வருகின்ற மிகப் பெரிய விமானங்கள்கூட மிக எளிதாக அங்கே தரையிறங்குவதைக் காணலாம். அதனுடன் ஒப்பிடுகையில் லட்சத்தீவில் ஒன்றரை கிலோமீட்டர் நீளத்துடன் உள்ள அகட்டி விமானநிலைய ஓடுதளத்தில் சுழல்விசையுடன் இயங்கும் மிகச் சிறிய விமானங்கள் மட்டுமே தரையிறங்கிப் புறப்பட முடியும். தற்போதைக்கு கொச்சி, பெங்களூரு மற்றும் அகட்டி இடையே ஏடி7 விமானத்தை அலையன்ஸ் ஏர் நிறுவனம் மட்டுமே அன்றாடம் இயக்கி வருகிறது. ஆமைகளின் வாழ்விடம் பாதிக்கப்படும் என்பதால் அகட்டி விமான நிலைய விரிவாக்கத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.    

• இத்துடன் மாலத்தீவுகள் வழங்கும் விசாவின் எளிமையையும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தியா, ரஷ்யா, சீனா, கஜகஸ்தான் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் நுழைய மாலத்தீவுகள் அனுமதிக்கிறது. இந்த நாடுகளில் முதலில் உள்ள மூன்று நாடுகளே மாலத்தீவுகளுக்கு அதிகபட்ச சுற்றுலாப் பயணிகளை அனுப்பி வைக்கின்றன. உலகெங்கிலும் உள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளின் நுழைவுத் தேவைகளை நிறைவேற்றும்  விசாவை மாலத்தீவுகள் அனுமதிக்கிறது.

மாலத்தீவு உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தேனிலவு செல்வோருக்கு எப்போதும் பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது


• மாலத்தீவுகளில் மொத்தம் 172 ஓய்வு விடுதிகள் உள்ளன. அங்குள்ள பல்வேறு தீவுகளில் உலகின் மிகப்பெரிய சொகுசு ஹோட்டல் சங்கிலிகள் இடம் பிடித்துக் கொண்டுள்ளன. சுற்றுலா தொடர்பாக மொத்தம் உள்ள 1,220 வசதிகளில் 152 சஃபாரி கப்பல்கள், 883 விருந்தினர் இல்லங்கள், 13 ஹோட்டல்கள், 172 ஓய்வு விடுதிகள் அடங்கியுள்ளன. லட்சத்தீவைப் பொருத்தவரை தற்போது அங்கே ஐந்து நட்சத்திர ஓய்வு விடுதி எதுவுமில்லை. இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (IHCL) இரண்டு தாஜ்-வகையிலான ஓய்வு விடுதிகளை வரும் ஆண்டுகளில் லட்சத்தீவில் (சுஹேலி, கத்மத் தீவுகளில்) கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளது. ஆனால் அதற்கு குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகும்.      

• உலகம் முழுவதிலுமிருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளை பல ஆண்டு காலம் உபசரித்த அனுபவம் மாலத்தீவுகளுக்கு இருக்கிறது. அங்குள்ள 172 ஓய்வு விடுதிகளும் மாலேயில் இருந்து அதிவேகப் படகுகள் அல்லது கடல் விமானங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அதனால் சுற்றுலாப் பயணிகளால் அந்தத் தீவு நாட்டிற்கு உள்ளே, வெளியே மிக எளிதாகச் செல்ல முடிகிறது.  மாலத்தீவுகளுக்குச் செல்லும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இந்தக் குறிப்பிட்ட ஓய்வு விடுதிகளுக்கே செல்கின்றனர். லட்சத்தீவில் அதற்கான சாத்தியம் எதுவும்  இல்லை.   

• சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு லட்சத்தீவில் மது அனுமதிக்கப்படுவதில்லை. எனவே அழகான இந்தியப் பெருங்கடலின் பின்னணியில் சூரியன் மறையும் வேளையில் மது விருந்திற்கான வாய்ப்புகள் அங்கே கிடைக்காது. ஆனால் இஸ்லாமிய நாடான மாலத்தீவுகளில் ஓய்வு விடுதிகள் மற்றும் சுற்றுலா வசதிகளில் மது அருந்துவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படுவதில்லை.

• சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் இடம்பிடிப்பதற்கு லட்சத்தீவு முதலில் உள்நாட்டுப் பயணிகளையே இலக்கு வைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக மும்பை-கோவா-லட்சத்தீவு பயணத்தை கார்டீலியா குரூய்ஸ் நடத்தி வருகிறது.

• லட்சத்தீவுக்குள் நுழைவது வரையறைக்கு உட்பட்டே இருந்து வருகிறது. சுற்றுலாப் பயணிகள் தங்களுடைய சுற்றுலா விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். விமானங்களை இன்றைக்கு முன்பதிவு செய்து நாளைக்குச் சென்று தரையிறங்கலாம் என்று மாலத்தீவுகளில் உள்ளதைப் போன்ற நிலைமை லட்சத்தீவில் இல்லை.     

இந்தியத் தீவுகள் முற்றிலும் மாறுபட்டவை என்பதால் லட்சத்தீவு மாலத்தீவுகளைப் போல இருக்கக்கூடாது.

லட்சத்தீவு சுற்றுலாத்துறையில் தடம் பதித்துள்ள போதிலும், அது முழுக்க சுற்றுலாப் பயணிகளை மட்டுமே சார்ந்திருக்கவில்லை.

இந்திய அரசு இந்த தீவுக் குழுவில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் பழங்குடி வாழ்க்கை முறைகளைப் பாதுகாப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.

முப்பத்தியிரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் முப்பத்தைந்து தீவுகளைக் கொண்டதாக லட்சத்தீவு இருக்கிறது. அந்தத் தீவுகள் அனைத்தும் பெரும்பாலும் சிறிய தீவுகளாகவே இருக்கின்றன. அகட்டி, பங்காரம், காத்மத் தீவுகளில் மட்டுமே சுற்றுலா நடவடிக்கைகள் அதிகமாகக் காணப்படுகின்றன.  சிறப்பு அனுமதி பெற்ற வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இந்த மூன்று தீவுகளுக்குள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்திய சுற்றுலாப் பயணிகளால் சிறப்பு அனுமதி பெற்று அனைத்து தீவுகளுக்கும் செல்ல முடியும். ஆனால் சுற்றுலா மற்றும் பிற செயல்பாடுகள் பெரும்பாலும் மேற்கூறிய மூன்று தீவுகளில் மட்டுமே குவிந்துள்ளன.

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளைப் பொருத்தவரை சூழ்நிலை சற்றே வித்தியாசமானது. உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வரைபடத்தில் அது நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்தத் தீவுகளில் சில ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் மட்டுமே உள்ளன. விமானசேவை நிறுவனங்கள் கொல்கத்தா, சென்னையிலிருந்து போர்ட் பிளேயருக்கு பல வணிக விமானங்களை நாள் முழுவதும் அனுப்பி வருகின்றன.  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 8,250 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்குப் பரவியிருக்கின்றன. ஆனால் சுற்றுலாப் பயணிகளால் அங்கே உள்ள அனைத்து இடங்களுக்கும் செல்ல முடியாது. அந்தமான் மற்றும் நிக்கோபார் அமைந்துள்ள இடம் அரசு மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதன் காரணமாக இந்த தீவுகளில் சுற்றுலா வசதிகளின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.    

மனிதர்களுடன் தொடர்பிலே இல்லாத சில பழங்குடியினரின் கடைசித் தாயகமாக அந்தமான் இந்தப் பூமியில் அமைந்துள்ளது. நிக்கோபார் முழுக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை செய்யபட்டுள்ளது. அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கே வருவது அதிக தலைவலியையே உருவாக்கும்.  

இதற்கிடையில் மாலத்தீவுகளின் நிலப்பரப்பு அந்த நாட்டிற்குச் சாதகமாக இருக்கிறது. 1,200 தீவுகள் கொண்ட குழுவில் 26 இயற்கையான பவளப்பாறைகள் உள்ளன. நீர் சார்ந்த செயல்பாடுகள் என்று வரும்போது இந்த பவளப்பாறைகள் தனித்துவமான நன்மை பயக்கின்றன. பவளப்பாறைகள், அல்லது வளைய வடிவ பவளப்பாறைகள் கடற்காயல் ஒன்றைச் சூழ்ந்துள்ளன. அதன் மூலம் நீர் இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றே கொள்ளலாம். அதே தீவுச் சங்கிலியின் ஒரு பகுதியாக உள்ள லட்சத்தீவு பன்னிரண்டு பவளப்பாறைகள், மூன்று திட்டுகள் மற்றும் நீரில் மூழ்கி விட்ட ஐந்து கரைகளுடன் உள்ளது.


லட்சத்தீவின் வசீகரம் அதன் தனிமையிலேயே உள்ளது. கடற்கரையில் உள்ள மணல் துகள்களைக் காட்டிலும் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இருக்கும் கோவா அல்லது தாய்லாந்து போன்று லட்சத்தீவு இருக்கவில்லை.

பல நூற்றாண்டுகளாக வெளியுலகத்தின் எந்தவொரு தாக்கமும் இல்லாமலே லட்சத்தீவு இருந்து வருகிறது. அது அப்படியே இருக்க வேண்டும். ஒருபோதும் அது சுற்றுலாத் தலமாக மாறி விடக் கூடாது.     

புதிதாக உருவாகும் ஓய்வு விடுதிகள் நிலப்பரப்பில் இருந்து பெருமளவில் வரும் கூட்டத்தை வெளியேற்றும் வகையில் அதி-சொகுசுப் பிரிவினரைக் கவனித்துக் கொள்வதாக இருக்க வேண்டும்.  

இதுவரையிலும் லட்சத்தீவின் அமைதியை, புனிதத்தைப் பாதுகாப்பதே அரசின் கவனமாக இருந்து வந்துள்ள நிலையில் லட்சத்தீவின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உருவாகப் போகும் ஓய்வு விடுதிகள் அந்தத் தீவின் பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பை ஈடுசெய்ய முடியாத வகையில் பாதிப்பதாகவே இருக்கும்.

நீடித்த நிலைத்த வளர்ச்சி ஒன்றே ஒரே வழியாகும்

லட்சத்தீவு உலகின் மிக அற்புதமான கடல் சுற்றுச்சூழல் அமைப்பாகக் கருதப்படுகிறது. இந்திய ஒன்றியத்தில் பவளப்பாறைகள் அங்கு மட்டுமே உள்ளன. கடற்கரையோரம் உள்ள புவியியல் மற்றும் பருவநிலை மாறுபாடுகள் மிகவும் பன்முகத் தன்மை கொண்ட கடல் சுற்றுச்சூழல் அமைப்பை அங்கேஎ ஏற்படுத்தியுள்ளன.  

இந்த கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய கூறுகளாக பவளப்பாறைகள், தடாகங்கள், கடற்புற்கள், கடற்பாசிகள், பாசிகள் மற்றும் சதுப்புநிலங்கள் இருக்கின்றன. லட்சத்தீவின் இந்த நுட்பமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் சூரை மீன்கள், ஆக்டோபஸ்கள், மெல்லுடலிகள், கடற்பஞ்சுகள், முட்தோலிகள், திமிங்கலங்கள், டால்பின்கள் போன்றவை வாழ்ந்து வருகின்றன.  

2023ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தன்று இந்திய அரசு லட்சத்தீவில் கடலின் அடிப்பகுதியில் உள்ள குப்பைகளைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டது

 

இந்தப் பல்லுயிர் மையத்தில் சுற்றுலா சார்ந்த எந்தவொரு வளர்ச்சியும் லட்சத்தீவின் பலவீனத்தை மேலும் பாதிக்கும் வகையிலேயே இருக்கும்.

லட்சத்தீவு ஒருபோதும் மாலத்தீவுகளாக மாறி விடக் கூடாது

தீவுச் சுற்றுலா என்பது இந்தியாவின் பலம் கிடையாது. இவ்வளவு பெரிய நாட்டிற்கு அது தேவையும் இல்லை.

இந்திய நிலப்பரப்பு 6,100 கிலோமீட்டர் கடற்கரை கொண்டது. கடற்கரை சுற்றுலாவிற்கான பல இடங்கள் இந்தியாவின் மேற்கு, கிழக்கு கடற்கரைகளில் அமைந்துள்ளன. அந்தமானையும் அந்தக் கடற்கரையுடன் சேர்த்தால் இன்னும்  கூடுதலாக ஆயிரம் கிலோமீட்டர் கடற்கரை கிடைக்கும்.   

இந்திய நாட்டைப் பொருத்தவரை தீவுகளுக்கான மிகப் பெரிய அளவிலான முக்கியத்துவத்தில் சுற்றுலா என்பது ஒரு பகுதி மட்டுமே. சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இந்தியத் தீவுகளுக்கு ஒருபோதும் வரக்கூடாது. லட்சத்தீவு மாலத்தீவுகளைப் போன்றதல்ல. ஒருபோதும் அது அவ்வாறாக ஆகி விடவே கூடாது.  

https://www.indiatoday.in/lifestyle/travel/story/lakshadweep-is-not-maldives-it-does-not-need-to-be-2485959-2024-01-09

 


 

Comments

மாலத்தீவு பற்றி கூடுதலான புரிதல் கிடைத்துள்ளது.
நன்றி 🙏