பி.கே.ராஜன்
பொதுச்செயலாளர். மூட்டா
மதுரை பல்கலைக்கழக ஆசிரியர் மன்றத்தின் (மூட்டா) மூன்றாவது
மாநாடு பல்கலைக்கழக மானியக் குழு ஊதிய விகிதம் அமல்படுத்துதல், நேரடியாக அரசே ஊதியம் தருவது, பயிற்றுநர், விளக்குநர்களை
பதவி உயர்த்துவது, குடும்ப உதவித் திட்டத்தில் இணைத்துக் கொள்வது போன்ற கோரிக்கைகளை
முன்னிறுத்தி மதுரையில் 1976ஆம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்தியோராம் நாள் நடைபெற்றது.
மதுரையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் ‘ரோஜாவில் முள்
இருக்கிறதே என்று கவலைப்படாதே; முள்ளில் ரோஜா இருக்கிறதே என்று திருப்திப்படு என்று
ஒரு கவிஞன் சொன்னதாக ஞாபகம். இந்த மலரை விரிக்கும் போது உங்களுக்கும் அந்த ஞாபகம் வரலாம்’
என்ற குறிப்புடன் கவிஞர் மீரா தயாரித்த சிறப்பு மலர் அனைத்து பல்கலைக்கழக ஆசிரியர்
சங்கத்தின் தலைவர் சுவாமிநாதனால் வெளியிடப்பட்டது.
அப்போதைய மூட்டா பொதுச் செயலாளர் பி,கே.ராஜன் எழுதிய
‘தொழிற்சங்கவாதம்’ என்ற ஆங்கிலக் கட்டுரை அந்த மலரில் வெளியாகி இருந்தது.
பி.கே.ராஜன்
தொழிற்சங்கவாதம்
உண்மையில் நமது நோக்கம் குறித்து வேறுவகையிலான பிம்பத்தைக் கொடுப்பதற்காகவே நமது செயல்பாடுகளை இழிவுபடுத்தி தொழிற்சங்கவாதம் குறித்த போலியான அச்சம் நம்மை விமரிசிப்பவர்களிடமிருந்து அடிக்கடி வெளிப்படுகிறது. கல்லூரிகளின் முக்கிய வளங்களைத் தின்று கொழுக்கும் ஊழல்வாதிகளை எதிர்த்து கேள்விகளை எழுப்பும் ஆசிரியர்களின் கூட்டு உரிமையைச் சகித்துக் கொள்ள முடியாதவர்களே இது போன்று ஆவேசப்படுகிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது. போலியான வார்த்தைகளால் இந்த தேசத்தின் தலைவிதியை வடிவமைக்கின்ற ஆசிரியர்களின் நிலை மற்றும் நல்லொழுக்கம் குறித்து அக்கறை கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொள்வதற்காகவே அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். அவர்களுடைய நிலைப்பாடு மிகத் தெளிவாக முன்னிறுத்தப்படுகையில் அவர்களுடைய வாதம் எந்த அளவிற்கு வெற்றுத்தனமானது என்பதையும், வேண்டுமென்றே யதார்த்தத்தைச் சிதைக்க அவர்கள் முயன்று வருவதையும் நாம் எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது.
ஆசிரியர்கள் தொழிற்சங்கவாதிகளாக இருக்கலாமா? மூட்டா
ஒரு தொழிற்சங்கமா? போராட்டப் பாதையில் சங்கம் பயணித்து வருவதை இதுவரையிலான அதன் செயல்பாடுகள்
நிரூபித்துக் காட்டியுள்ளனவா?
மூட்டா ஒரு தொழிற்சங்கம் என்று நான் நினைக்கவில்லை.
ஆனால் அதே நேரத்தில் அது ஒரு தொழிற்சங்கம் இல்லை என்றும் நான் கருதவில்லை. மூட்டா ஒரு
தொழிற்சங்கமா இல்லையா என்பது ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்வியல்ல. அந்தக் கேள்வி தொடர்ந்து ஆசிரியர்கள் நலன்களுக்கு எதிராக நின்று கொண்டிருப்பவர்கள் பதிலளிக்க வேண்டிய கேள்வியாக மட்டுமே இருக்கிறது.
தொழிற்சங்கம் என்றால் என்ன? தொழிற்சங்கங்கள் வெற்றிடத்திலிருந்து உருவாவதில்லை என்பதே உண்மை. அவை ஒரு சிலரின் விருப்பங்கள், கற்பனைகளின் விளைவுகளாகவும் உருவாவதில்லை. அறிவியல்பூர்வமாகப் பார்த்தால், திட்டவட்டமான, ஊடாடுகின்ற சமூக-பொருளாதார யதார்த்தங்களே தொழிற்சங்கங்கள் உருவாக எப்போதும் காரணமாக இருக்கின்றன. தொழிற்சங்கங்கள் உருவாகக் காரணமாக இருக்கும் பொதுவான புறச்சூழல் நிலைமைகளே அந்தச் சங்கங்கள் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கான பாதையையும் உருவாக்கித் தருகின்றன.
அந்தக் கேள்வி நேரடியாக புறச்சூழலின் பங்கு என்ற முக்கிய அம்சத்தை நோக்கி அழைத்துச் செல்கிறது. உண்மையிலேயே ஆசிரியர் இயக்கங்கள் தொழிற்சங்கப் போக்குகளைக் கைவிட வேண்டும் என்று விரும்புபவர்கள் தங்கள் கவனத்தை நமது மாநிலத்தில் ஆசிரியர் இயக்கங்கள் தோன்றி, இன்றுள்ளதைப் போன்ற தன்மையைப் பெற்றிருப்பதற்கான புற யதர்த்தங்கள் குறித்த ஆய்வுகள் மீது திருப்பிக் கொள்ள வேண்டும். ஆசிரிய இயக்கங்களை மட்டுமே தாக்கிக் கொண்டிருப்பதை நிறுத்தி வைத்து விட்டு அவர்கள் தொழிற்சங்கப் போக்குகளுக்குக் காரணமாக உள்ள புற யதார்த்தங்களை மாற்றும் முயற்சிகளில் திறம்படப் பங்கேற்க முன்வர வேண்டும். அதன் மூலம் ஆசிரிய இயக்கங்களின் தொழிற்சங்கப் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது அவர்களுக்கு மிகவும் எளிதாகி விடும். நிழலுடன் போராடி யதார்த்தங்களை மாற்றி விட முடியாது.
பல தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் யதார்த்த நிலைமை என்ன என்பதை ஆராய்ந்து பார்க்கலாம். பணிப் பாதுகாப்பின்மை குறித்து ஆசிரியர்களிடம் பரவலாக இருக்கும் உணர்வு, ஒன்றுக்கும் உதவாத காரணங்களுக்காக அடிக்கடி பணிநீக்கம் செய்யப்படுதல், மீண்டும் பணியில் அமர ஆசிரியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அதுபோன்ற முயற்சிகளில் ஏற்படும் தோல்விகள், நிர்வாகங்களின் திமிர்பிடித்த ஆதிக்கம், ஒப்பீட்டளவில் மிகக் குறைவான ஊதியம், மாதக்கணக்கில் ஊதியம் வழங்குவதில் ஏற்படுத்தப்படும் தாமதம். பல்வேறு வகைகளில் மிகக் குறைவாக வழங்கப்படும் ஊதியம், அதன் விளைவான வறுமை, அவமானங்கள், பணியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான தொடர் போராட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள்; வீட்டு உரிமையாளர், மளிகைக் கடைக்காரர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் வருகின்ற இடைவிடாத 'கவன ஈர்ப்பு' தகவல்கள், பணிநிலையில் உள்ள தேக்கத்தால் ஏற்படும் விரக்தி மற்றும் அதிருப்தி, பணி மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் கிடைக்காததன் விளைவாக சுய முன்னேற்றத்திற்கான ஆர்வம் குன்றுவது, கேள்வி கேட்டால் சில சந்தர்ப்பங்களில் உயிருக்கு விடப்படும் அச்சுறுத்தல் என்று இவையனைத்தும் சேர்ந்து அதிகரிக்கும் மன அழுத்தம், சோர்வை ஏற்படுத்துகின்ற சூழ்நிலையையே இன்று பல கல்லூரிகளும் உருவாக்கியுள்ளன. அதுபோன்ற சூழ்நிலையே தொழிற்சங்கப் போக்குகள் செழிப்பதற்கான வளமான நிலமாக இருக்கிறது. எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள காரணிகள் அனைத்தையும் களைந்து, கல்வித் திறனை வளர்த்தெடுக்கும் வளமான மண்ணை வெற்றிகரமாக உருவாக்குவது மட்டுமே ஆசிரியர் இயக்கத்தின் தொழிற்சங்கப் போக்குகளை மாற்றியமைப்பதற்கான ஒரே வழியாக இருக்கும்.
குறைந்தபட்சம் ஒரு சில கல்லூரிகளாவது லட்சிய நோக்குடன் இயங்கி வருவது என்னவோ உண்மைதான் என்றாலும் அது எந்த வகையிலும் யதார்த்தத்தின் இருளை நீக்குவதற்கான வழியாக இல்லை (ஊதியம் வழங்குவதில் தாமதம் அல்லது மிகக் குறைவான ஊதியம் என்ற நிலைமையே நமது பல்கலைக்கழகப் பகுதியில் உள்ள ஏறத்தாழ ஐம்பது சதவிகிதக் கல்லூரிகளில் இருந்து வருகிறது!).
ஆக ஒருபுறத்தில் அன்றாட வாழ்க்கையின் முக்கியமான
பிரச்சனைகள் அனைத்தையும் எதிர்கொள்ளும் ஆசிரியர் மறுபுறத்தில் கல்வி சார்ந்த தனது பொறுப்புகளை நிறைவேற்றிக்
கொள்ளத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய நிலையிலும் இருக்கிறார். அதுபோன்றதொரு சூழலில்
சிக்கிக் கொண்டுள்ள ஆசிரியர் முந்தையதில் வெற்றி பெறாமல் பிந்தையது சாத்தியமற்றது என்பதை நன்கு உணர்ந்தே இருக்கிறார்.
இந்த இடத்தில்தான் சங்கம் அடியெடுத்து வைக்கிறது. தனிப்பட்ட
ஆசிரியருக்கு பொருள் சார்ந்த சிறப்பான நிலைமைகளைச் சங்கத்தால் தர முடியாது என்றாலும், அது அந்த நிலைமையை உருவாக்குவதற்கான பணியை ஏற்றுக் கொள்கிறது. ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும் கல்லூரிகளின் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துகின்ற பொருள்
சார்ந்த நிலைமைகளிலிருந்து முழுமையாக வெளியே நின்று கொண்டு கல்விசார் சிறப்பு பற்றி பேசுவது
அர்த்தமற்றதாகவே இருக்கும் என்றே நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
பொருள் சார்ந்த இந்த நிலைமைகள் பெரும்பாலும் இன்று நமது சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற சக்திகளாலேயே தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. இந்த சக்திகளில் பலரும் இன்னும் நிலப்பிரபுத்துவ கடந்த காலத்து விழுமியங்களையே நிலைநிறுத்தி வருகின்றனர். சமூக மாற்றங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் அவர்கள் முற்போக்கான சிந்தனைகள் மற்றும் புதுமைகள் என்று அனைத்தையும் சந்தேகத்துடன், பழிவாங்கும் போக்குடனே பார்க்கிறார்கள். முற்போக்கான மாற்றங்களுக்கு ஆதரவாக நிற்கும் ஆசிரியர்களும், மாணவர்களும் இயல்பாகவே அவர்களுடைய தாக்குதல்களுக்கான இலக்குகளாக மாறி விடுகிறார்கள். அந்த தாக்குதல் எந்த வடிவத்தில் இருந்தாலும், அதனைத் தூண்டி விடும் காரணங்கள் எதுவாக இருந்தாலும் - அது ஒரு மோதலில் சென்றே முடிவடைகிறது. அத்தகைய மோதலுக்கான அடிநாதமாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வது, ஊதியம் வழங்காமல் இருப்பது, கல்லூரிகளை மூடுவது போன்ற நடவடிக்கைகளே இருக்கின்றன.
கமுதி, சிவகங்கையில் நடந்த நிகழ்வுகள் வரும் கல்வியாண்டில் நமது பல்கலைக்கழகப் பகுதியில் உள்ள பல கல்லூரிகளில் மீண்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. நமது பல்கலைக்கழகப் பகுதியில் உள்ள முப்பத்தியிரண்டுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் மாதக்கணக்கில் தாமதமாக ஊதியம் பெற்று வரும் ஆசிரியர்கள் ஊதியத்தை அரசே நேரடியாக வழங்க வேண்டுமென்று கோரி கூட்டு இயக்கத்தைத் தொடங்க வேண்டியிருக்கலாம். பணி மேம்பாடின்றி ஒரே பணிநிலையில் காலவரையறையின்றி நீண்ட காலம் தேங்கியிருக்கின்ற பயிற்றுநர்களும், ஆசிரியர்களும் தங்கள் குறைகளை விரைந்து களையக் கோரி தெருவிற்கு வரலாம். அரசாணை அமல்படுத்தப்படாததால் பணிப் பாதுகாப்பின்றி இருக்கின்ற கல்லூரி ஆசிரியர்கள் அனைவரும் பணிப் பாதுகாப்பிற்கான இயக்கத்தில் ஒன்றிணையலாம். நமது கல்விச் சூழலில் இவையனைத்தும் சேர்ந்து ஒருவித அமைதியின்மையை உருவாக்கிடலாம்.
அதைப் போன்ற நிலைமை உருவாகாமல் தடுத்திட வேண்டும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப் போவதில்லை. ஆனால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான வழி வெறுமனே ஆசிரியர்களின் போராட்டத்தை, ஆசிரியர் இயக்கத்தைக் கண்டிப்பதாக மட்டுமே இருந்து விடக் கூடாது. நிலைமையை மீட்டெடுக்க ஆசிரியர்களின் அவலநிலை மீது கவனத்தைச் செலுத்தி தீவிர முயற்சிகளை அரசு மேற்கொண்டால் மட்டுமே உயர்கல்வி விழுமியங்களின் வளர்ச்சிக்கு உகந்த சூழல் உருவாகிடும்.
தோழர். பி.கே.ராஜன்
2024 ஜனவரி 14
பதினெட்டாம் ஆண்டு நினைவஞ்சலி
பி,கே.ராஜன் நினைவைப் போற்றுவோம்
கண்ணூர்பல்கலைக்கழகத் துணைவேந்தரும், தொழிற்சங்கப் போராளியும்

.jpg)
Comments