கோலப்பன்
தி ஹிந்து நாளிதழ்
பதினான்கு
தையல்களுக்குப் பிறகு பழனிவேலின் தொடையில் முழங்காலுக்கு சற்று மேலே ஏற்பட்டிருந்த
காயம் ஆறியது. இருப்பினும் கதிர் அறுக்கும் அரிவாளால் வெட்டப்பட்டு அரை வட்ட
வடிவில் ஏற்பட்டிருந்த அந்தக் காயத்தின் ஆறாத வடு ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்குப்
பிறகும் அவருக்கு 1968ஆம் ஆண்டு டிசம்பர் இருபத்தைந்தாம் நாளின் கொடூரமான இரவை நினைவூட்டிக்
கொண்டே இருக்கிறது.
தற்போது
எழுபத்தியேழு வயதாகும் இந்தப் பழனிவேல் இணைந்திருந்த தஞ்சாவூர் மாவட்டத்தில்
கீழ்வெண்மணி கிராமத்தில் செங்கொடியின் கீழ் திரண்டு, ஊதிய உயர்வு கோரியதற்காக நில
உடைமையாளர்களால் இருபது பெண்கள், பத்தொன்பது குழந்தைகள் உட்பட மொத்தம் நாற்பத்தி
நான்கு பேர் ஒரு குடிசைக்குள் அடைக்கப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரமான
படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்தவர் ஆவார். அப்போது கொல்லப்பட்ட அனைவரும்
விவசாயத் தொழிலாளர்களாகவே இருந்தனர்.
‘அவர்களிடமிருந்து
ஓடி என்னால் தப்பிக்க முடிந்த போதிலும் ஜமீன்தார் கோபாலகிருஷ்ண நாயுடுவின்
அடியாட்கள் என் தொடையில் அரிவாளால் வெட்டினர். வேறு சில வேலையாட்களுடன் நான் அப்போதிருந்த
கும்மிருட்டைப் பயன்படுத்திக் கொண்டு அங்கிருந்து ஓடிப்போய் நெல் வயலுக்குள்
ஒளிந்து கொண்டேன்’ என்று அப்போது இருபத்தியிரண்டு வயதில் இருந்த பழனிவேல் இப்போது நினைவு
கூர்ந்தார்.
ஜி.பழனிவேல்
பழனிவேல்
அடுத்த நாள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு ஏற்பட்டிருந்த காயம் பதினான்கு தையல்கள் போட்டு மூடப்பட்டது. ‘ஆறு
துப்பாக்கி குண்டுகளும் என்னுடைய உடம்பில் இருந்தன. கொக்கு மற்றும் பிற நீர்ப்பறவைகளை வேட்டையாடுவதற்காகப்
பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் அவர்கள் என்னையும், மற்றவர்களையும் சுட்டனர். குண்டுகள்
அகற்றப்பட்டு விட்ட போதிலும், இன்னும் அந்த இடங்களில் அரிப்பு இருந்து வருகிறது’ என்று
கூறும் பழனிவேல் ஒவ்வாமை காரணமாக கரடுமுரடான தோலுடன் இருக்கும் கணுக்காலைக்
காட்டினார். அதற்குப் பின்னர் திருவாரூருக்கு மாற்றப்படுவதற்கு முன்பு ஆறு
மாதங்கள் பத்தொன்பது நாட்கள் தஞ்சாவூர் சிறையில் அவர் இருந்திருக்கிறார்.
நாகப்பட்டினத்தில் கீழ்வேளூரில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில் உள்ளூர் கட்சித் தலைவரான ஆர்.முத்தையனுடன் (வலமிருந்து மூன்றாவதாக) படுகொலையில் இருந்து தப்பியவர்கள்
பழனிவேலுக்குப்
பக்கத்தில் ராமய்யாவின் தம்பி சேதுபதி அமர்ந்திருந்தார். நிலவுடைமையாளர்கள்
சூழ்ந்து கொண்ட அந்த இரவில் பட்டியல் சாதியைச் சார்ந்த தொழிலாளர்கள் ராமய்யாவின் குடிசையில்தான் தஞ்சம்
அடைந்திருந்தனர். பாரதி கிருஷ்ணகுமாரின் இயக்கத்தில் ராமய்யாவின் குடிசை என்று அந்தச்
சம்பவம் ஆவணப்படமாக எடுக்கப்பட்டது. இந்திரா பார்த்தசாரதி எழுதி விருது பெற்ற
நாவலான குருதிப்புனலின் கருப்பொருளாகவும் அந்தச் சம்பவமே அமைந்தது.
ராமய்யாவின் மனைவி பாப்பா, மகள் சந்திரா, மகன் ஆசைத்தம்பி, மூன்று வயது
குழந்தை வாசுகி ஆகியோர் குடிசைக்கு வைக்கப்பட்ட தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். அப்போது உயிர் பிழைத்த மற்றொருவரான செல்வராஜ் தனது பாட்டி, அத்தை
ஆகியோரை அந்தப் படுகொலையில் இழந்தவர். நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது
இருக்கின்ற கீழ்வெண்மணிக்குள் முதல் வெளியாளாக அப்போது நுழைந்த மறைந்த கம்யூனிஸ்ட்
தலைவர் மைதிலி சிவராமன் ‘அந்தக் காட்சி சுடுகாட்டில் உள்ள தகனக் களத்தை நினைவூட்டியது.
ஆனாலும் அது வலியற்று தங்கள் அழிவை உடல்கள் தேடும் வழக்கமான தகன மேடையைப் போன்றிருக்கவில்லை. மாறாக மென்மையான குழந்தைப் பருவம், துடிப்பான இளமை, அன்பான தாய்மை ஆகியவை வேதனையிலும் விரக்தியிலும்
திடீரென்று தங்கள் கொடூர முடிவைச் சந்தித்த விசித்திரமான இடமாகவே அது இருந்தது’ என்று
எழுதியிருக்கிறார்.
மைதிலி சிவராமன்
திடீரென்று மாறும் தமிழ்நாட்டு அரசியலின் போக்கு கம்யூனிஸ்டுகளும்,
திராவிட இயக்கமும் களமிறங்கியிருந்த தஞ்சாவூர்ப் பகுதியில் சற்று அதிகமாகவே
வெளிப்பட்டிருந்தது. ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த நெல் வயல்கள் அனைத்தும்
ஒரு சில நிலப்பிரபுக் குடும்பங்களுக்கு மட்டுமே சொந்தமானவையாக இருந்தன. தங்கள் கட்டளைகளை
ஏற்க மறுத்து, எதிர்த்து நின்ற தொழிலாளர்களை அவர்கள் சாட்டையால் அடித்தும், மாட்டு
சாணத்தை தண்ணீரில் கலந்து வலுக்கட்டாயமாகக் குடிக்கவும் வைத்தனர். நிலப்பிரபுக்கள்
பெருமளவில் காங்கிரஸில் இருந்த நிலையில் பி.சீனிவாசராவ், மணலி கந்தசாமி,
காத்தமுத்து, ஜி.வீரய்யன், கே.ஆர். ஞானசம்பந்தம், அமிர்தலிங்கம் உள்ளிட்ட கம்யூனிஸ்ட்
தலைவர்களால் ஒன்று திரட்டப்பட்டு, போராட்டக் கொடியை உயர்த்தி ஊதிய உயர்வு கோரி
போராட்டங்களை விவசாயத் தொழிலாளர்கள் நடத்தி வந்தனர்.
நிலமற்ற தொழிலாளர்கள் அதிகபட்சமாக …
நிலமற்ற
தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் தஞ்சாவூரில் இருந்தனர் என்று மைதிலி சிவராமன் குறிப்பிட்டிருந்தார்.
1961ஆம் ஆண்டில் விவசாயம் செய்யும் ஒருவருக்கு ஒன்பது என்ற எண்ணிக்கையில் தொழிலாளர்கள்
அங்கே இருந்தனர்.
1971ஆம்
ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் மூலம் நிலமற்ற தொழிலாளர்கள் கிராமப்புற மக்கள்
தொகையில் 41 சதவிகிதம் என்ற அளவில் இருந்ததாகத் தெரிய வந்தது. மாநில அளவில் அந்த
தொழிலாளர்களின் எண்ணிக்கை 29 சதவிகிதமாக இருந்தது. தஞ்சாவூரில் இருந்த அவ்வாறான நிலமற்ற
தொழிலாளர்களில் ஹரிஜனங்களே மிக அதிகமாக இருந்தனர். நிலப்பிரபுக்கள் அவர்கள் மீது ஆட்சி
செலுத்தி வந்தனர். பழனிவேல் ‘தலித்துகளுக்கென்று தனியாக அலுமினியக் கோப்பைகள் தேநீர்க்
கடைகளில் இருந்தன.... ஏற்கனவே எனது சகோதரர் உள்ளூர் நில உரிமையாளரிடன் நிலத்தில்
விவசாயம் செய்து கொண்டிருந்தார். பள்ளிக்குச் செல்லாமல் அவரது கால்நடைகளை
கவனித்துக் கொள்ள வர வேண்டும் என்று அவர் என்னையும் வற்புறுத்தினார்... எனக்கு வேறு
வழி எதுவுமில்லை’ என்று நினைவு கூர்ந்தார்.
அந்தப்
பகுதியில் இருந்த தலித் விவசாயத் தொழிலாளர்களின் இழிநிலையை கம்யூனிஸ்ட் இயக்கமே மாற்றிக்
காட்டியது. அந்தக் கட்சியினரும், தொழிலாளர்களும் அதற்காகப் பேரிழப்புகளைச்
சந்திக்க வேண்டியிருந்தது. ‘தாங்கள் கூலியாகப் பெற்று வந்ததைக் காட்டிலும் அரைப்
படி கூடுதல் நெல்லை மட்டுமே தொழிலாளர்கள் அப்போது கோரினர். ஆனால் அந்த தொழிலாளர்கள்
அனைவரும் முதலில் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை அகற்றி விட்டு நெல் உற்பத்தியாளர்கள்
சங்கத்தில் சேர வேண்டும் என்று நில உரிமையாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் நிலப்பிரபுக்களின்
அந்தக் கோரிக்கையை தலித் விவசாயிகள் முற்றிலுமாக நிராகரித்தனர்’ என்று
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நினைவு
கூர்ந்தார்.
நிலப்பிரபுக்களின்
பிரதிநிதியாக இருந்த நாகப்பட்டினம் தாலுகா நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் நிறுவனர்
கோபாலகிருஷ்ண நாயுடு உள்ளூர் விவசாயத் தொழிலாளர்கள் அதிக கூலி கேட்டு நில
உரிமையாளர்கள் நிர்ணயித்த கூலிக்கு வேலை செய்ய மறுக்கும் போதெல்லாம் வெளியில்
இருந்து தொழிலாளர்களை அறுவடைக்காக அனுப்பி வைப்பார். பல ஆண்டுகளாக தொடர் மோதல்கள்,
சில கொலைகளுக்கு உள்ளாகி வந்த தொழிலாளர்கள் நெல் உற்பத்தியாளர் சங்கத்தில் சேர
வேண்டிய அழுத்தத்திற்கு உள்ளாகி இறுதியாக உச்சகட்டத்தில் கீழ்வெண்மணி படுகொலையைச்
சந்திக்க நேர்ந்தது.
படுகொலை
நடந்த அன்று முத்துசாமி, முனியன் என்ற இரண்டு விவசாயத் தலைவர்கள் அடித்து
உதைக்கப்பட்டு ஒரு வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டனர். விவசாயிகள் ஓரணியாகச்
சென்று அவர்களை விடுவித்தனர். அதன் விளைவாக நில உரிமையாளரின் ஏஜெண்டாக
இருந்து வந்த பக்கிரிசாமி என்பவர் கொல்லப்பட்டார். அன்றைய தினம் இரவில் அதற்கான பதிலடி
தொடங்கியது.
‘தீயால் நிகழ்த்தப்பட்ட பெருந்துயரம்: சாதி, வர்க்கம், ஆய்வு மற்றும் விடுதலை’
என்ற புத்தகத்தை எழுதியுள்ள மைதிலி சிவராமன் ‘நிலப்பிரபுக்களிடம் உருவான
விரக்தியும், ஹரிஜனங்களிடம் புதிதாகக் காணப்பட்ட அடையாளத்துடன் சமரசம் செய்து
கொள்ள இயலாத தன்மையும் இணைந்தே 1968 டிசம்பர் 25 அன்று கீழ்வெண்மணியில் வெளிப்பட்டன’
என்கிறார்.
செஷன்ஸ்
நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த போதிலும் நாற்பத்தியிரண்டு பேர் உள்ளே
இருப்பது தெரியாமலே குடிசைக்குத் தீ வைக்கப்பட்டது என்று கூறி கோபாலகிருஷ்ண நாயுடு
உள்ளிட்டோரை உயர்நீதிமன்றம் விடுவித்தது. நாயுடு பின்னர் இடதுசாரி கட்சியினரால்
கொல்லப்பட்டார்.
‘தொழிலாளர்கள்
படுகொலை குறித்து விசாரணை மேற்கொள்ள கணபதியா பிள்ளை ஆணையத்தை நியமிக்க வேண்டிய கட்டாயம்
அரசுக்கு ஏற்பட்டது. அந்த ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட
குறைந்தபட்ச ஊதியச் சட்டம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டது. தலித்
விவசாயிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப் பரிந்துரை செய்யப்பட்டதன் விளைவாக 1,80,000
குடும்பங்கள் பயனடைந்தன’ என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறுகிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு
1970ஆம் ஆண்டில் நினைவிடம் அமைக்கப்பட்டது. திராவிடக் கட்சிகளும், அவை ஆளும்
கட்சிகளாக உருவானதும் பெரும் சவாலாக இருந்த போதிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள்
தொடர்ந்து தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.
பழனிவேல்
‘இன்று சாதி அடிப்படையிலான பாகுபாடு வெகுவாகக் குறைந்துள்ளது. மற்ற சமூகக் குடும்பங்களின்
திருமணங்கள், பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நல்லுறவைப் பேணி வருகிறோம். ஆனால் கம்யூனிஸ்ட்
கட்சிகள் வலுவாக இல்லாத இடங்களில் அதற்கான சாத்தியம் காணப்படவில்லை’ என்கிறார்.
Comments