கம்மின்ஸை மகிழ்வித்த அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தின் அமைதி உலகின் பார்வையில் இந்தியாவின் பெருமைக்கு களங்கத்தையே விளைவித்துள்ளது

 பிரதீப் மேகசின்

தி வயர் இணைய இதழ்


மூச்சுவிட மறுத்து அமர்ந்திருந்த பெருந்திரளான மக்களின் மௌனத்தைக் காட்டிலும்  வேறெதுவும் பெருங்கவலையை  ஏற்படுத்தித் தரப் போவதில்லை   

உலகக் கோப்பை இறுதிப் போட்டியைக் காண நேரில் செல்லவில்லை என்றாலும், அன்றைய தினம் தொலைக்காட்சிப் பெட்டி முன்பாக இந்திய அணியின் சரணாகதியைக் கண்டு துக்கம் அடைந்தவனாகவே  அமர்ந்திருந்தேன். எனக்குள் இருந்த இந்தியன் மிகுந்த சோகத்துடன் இருந்த  போதிலும், இந்தியாவின் கனவோட்டத்தைத் தகர்த்து ஆஸ்திரேலியர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றதைக் கண்ட போது எனக்குள் இருந்த கிரிக்கெட் ரசிகன் வியப்பில் ஆழ்ந்து போயிருந்தான். பேட் கம்மின்ஸ் மற்றும் அவரது குழுவினர் புலியை அதன் சொந்த குகைக்குள்ளேயே  அடைத்து வைத்ததன் மூலம் பலரும் சாத்தியமற்றது என்று நம்பிய செயலைச் செய்து காட்டியிருந்தனர். இது ஒரு விளையாட்டுப் போட்டி, போர் அல்ல என்று கருதியதால் கனத்த இதயத்துடன் என்றாலும்  ஆஸ்திரேலிய அணியை என்னால் கைதட்டி பாராட்ட முடிந்தது.            

மைதானத்தில் கூடியிருந்த பெரும்பான்மையானவர்கள் அமைதியாகி விட்ட போதிலும், லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்த அந்த மைதானத்திலிருந்து வெளியான சித்திரங்கள் உரத்த குரலில் பேசவே செய்தன. இந்திய அணியின் தோல்வி அங்கே கூடியிருந்தவர்களின் வாயை முழுமையாக அடைத்து விட்டது. அங்கே கூடியிருந்தவர்கள் ஆஸ்திரேலியர்களின் கொண்டாட்டங்களைக் காண முடியாது பார்வையற்றவர்களாகிப் போயிருந்தனர். தங்களுடைய துக்கத்தை வெளிப்படுத்திய பார்வையாளர்கள் எதிரணியினரின் திறமைகள், புத்திசாலித்தனமான உத்திகளை ஏற்றுக் கொள்ள மறந்து போனவர்களாக அங்கே இருந்தனர். தோற்கடிக்க முடியாதது என்ற இந்திய அணியின் பிம்பம் முற்றிலுமாகச் சிதறிப் போனது. அது மட்டுமல்லாது அந்த அணிக்கான  அடையாளத்தின் சாராம்சமும் முழுக்க நொறுங்கிப் போனது.      

‘இந்த இந்திய அணி இந்தியா இதுவரையிலும் கண்டிராத மிகச் சிறந்த வெள்ளைப் பந்து அணியா’ என்ற கேள்வியுடன் நடைபெற்ற தொலைக்காட்சி செய்தி விவாதத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நான் கலந்து கொண்டேன். அந்த விவாதத்தில் இருந்த அனைவரின் ஒருமித்த கருத்தும் ஆம் என்று அதனை ஆமோதிக்கும் வகையிலேயே இருந்தது. இறுதிப் போட்டி குறித்து செய்தி சேனல்கள் பல விவாதங்களை நடத்தின. அவற்றில் ஒன்றில் பணக்கார இந்திய கிரிக்கெட் ரசிகர் ஒருவரை நான் சந்தித்தேன். சிக்ஸர் அடித்து 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றெடுத்துக் கொடுத்த தோனியின் கிரிக்கெட் மட்டையை வாங்கியவர் என்பதாலேயே பணக்காரர் என்று நான் அவரைக் கருதுகிறேன். அந்த மட்டையைப் நினைவுச்சின்னமாகப் பெறுவதற்காக ஒரு லட்சம் பவுண்டுகள் (சுமார் ஒரு கோடி ரூபாய்) அவர் செலவிட்டிருந்தது  இங்கே குறிப்பிடத்தக்கது.    

பெரும்பாலான உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளுக்குச் சென்றுள்ள அவர் அகமதாபாத்தில் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டிக்குச் செல்லவும் திட்டமிட்டிருப்பதாக என்னிடம் கூறினார். இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் கறுப்புச்சந்தையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமான விலையில் விற்கப்படுவதையும், தங்கும் விடுதிகளின் கட்டணம் சாதாரண மக்களுக்கு எட்டாத வகையில் இருப்பதையும் நன்கு அறிந்தவராக அந்த ரசிகர் இருந்தார். இந்திய அணி வலுவாக இருப்பதால் மட்டுமல்ல, அனைவருக்கும் உத்வேகம் அளித்து வருகின்ற மோடியின் இருப்பின் காரணமாகவும் இந்தியா தான் ஏற்கனவே வென்றுள்ள இரண்டு உலகக் கோப்பைகளுடன் இந்தக் கோப்பையையும் சேர்த்துக் கொள்வதற்கு மிகச் சிறந்த வாய்ப்பு இப்போது இருப்பதாக அவர் உறுதியாக நம்பினார்.   

மோடி, இந்திய அணி தவறி விடப் போவதில்லை என்ற அவரது உறுதியான நம்பிக்கை தில்லியில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை இந்தியா வீழ்த்திய பிறகு நான் சந்தித்த கிரிக்கெட் ரசிகர் ஒருவரை எனக்கு நினைவூட்டியது. அந்த ரசிகர் அகமதாபாத்தில் இறுதிப் போட்டியில் இந்தியா இடம் பெறும் என்பதில் உறுதியுடன் இருந்தார். மோடியின் சொண்ட மாநிலத்தில் இந்திய அணியை யாரும் தோற்கடிப்பதற்கான சாத்தியமில்லை என்பதால், உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவரிடம் எந்தவொரு கவலையும் இருக்கவில்லை. அன்றைய தினம் அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கானவர்களின் கூட்டு ஆற்றலால் அந்த மைதானம் சூடாக இருந்ததைப் பார்த்த நான் இந்தியா தோல்வியடைந்தால் இவர்கள் எல்லாம் எவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று யோசித்துப் பார்த்தேன்.   

கொல்கத்தா ஈடன் கார்டனில் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம் அப்போது என்னுடைய நினைவிற்கு வந்து சென்றது. அந்தப் போட்டியின் போது இந்திய அணியைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட விளம்பரங்களும், பிரச்சாரங்களும் அந்த உலகக் கோப்பை இந்தியாவிற்கென்றே உருவாக்கப்பட்டது என்று மக்களை அதீதமாக நம்ப வைத்திருந்தன. இறுதியில் வெற்றி அணியாக மாறிய இலங்கை அணிக்கு எதிராக இந்தியாவின் பேட்டிங் முழுமையாகச் சரிந்த அந்த இரவில் சொர்க்கம் என்று ரசிகர்களால் கருதப்பட்ட ஈடன் கொடூரமான நரகமாக மாறிப் போனது. இந்திய அணியின் பேட்டிங்கைக் கண்டு ஆத்திரமடைந்த மக்கள் வெறித்தனத்துடன் நடந்து கொண்டனர். எரிக்கப்பட்ட செய்தித்தாள்களால் அந்த மைதானமே ஒளிர்ந்தது. அனைத்து வகையான குப்பைகளும் பார்வையாளர்களால் ஆடுகளத்திற்குள் வீசியெறியப்பட்டன. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டதால் அந்த ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் இந்திய அணியைக் காட்டிலும் முன்னேறியிருந்த இலங்கை அணி வெற்றி பெற்ற அணியாக  அறிவிக்கப்பட்டது.        

ஆனால் இப்போது இந்த 2023ஆம் ஆண்டு அந்த 1996ஆம் ஆண்டைப் போல இருக்கவில்லை என்பதே உண்மை. இப்போதுள்ள கிரிக்கெட் ரசிகர் பெருமளவிற்கு அரசியல்வயப்பட்டிருக்கிறார். அவரிடம் இந்திய அணி வெல்லவே முடியாத அணி என்பதான நம்பிக்கை கிரிக்கெட்டைத் தாண்டிய காரணங்களால் உருவாகியுள்ளது. தன்னம்பிக்கைக்கும், மாயைக்கும் இடையிலான வேறுபாடுகள் மயங்கிப் போயிருக்கும் இந்தப் ‘புதிய இந்தியா’வில் விளையாட்டே ஒரு கதையின் நீட்சியாகவே இருக்கிறது.   

நவம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை - கிரிக்கெட்டும், தங்கள் அரசியல் தலைமையும் இந்திய அணியின் வெற்றிக்கான சாத்தியங்களை மிகக் கச்சிதமாக அமைத்துக் கொண்டிருப்பதால் இந்திய அணியின் தோல்வி என்பது நினைத்துப் பார்க்கவே முடியாதது என்ற உறுதியான நம்பிக்கை அகமதாபாத் மைதானத்திற்கு அணிவகுத்துச் சென்ற பல்லாயிரக்கணக்கானோரிடம் காணப்பட்டது.    

ஆனால் ஆஸ்திரேலிய அணி வேறுவிதமாகச் செயல்பட்டது. அவர்கள் இந்திய அணியின் பலம், பலவீனங்களை அனைத்தையும் குறித்து ஆய்வு செய்து பிரித்தெடுத்து வைத்திருந்தனர். ஆடுகளத்தின் நிலைமைகளை மட்டுமல்லாது, ஒருசார்பான கருத்துடன் அங்கே கூடியிருந்த கூட்டத்தின் உளவியலையும் அவர்கள் நன்கு மதிப்பிட்டு வைத்திருந்தனர். இந்திய அணி எவராலும் மறுக்க முடியாத திறமையைக் கொண்டிருந்த போதிலும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய தருணங்களில் அந்த அணி எவ்வாறு செயல்படும் என்பது உண்மையில் அதுவரையிலும் சோதித்துப் பார்க்கப்படவேயில்லை என்ற நிலைமையில் ஆஸ்திரேலியர்கள் தங்களுடைய திறன்கள், திட்டமிடல், உத்திகள் அனைத்தையும் கட்டவிழ்த்து விட்டனர். அது வலுவான இந்திய அணியை வீழ்த்துவதற்குப் போதுமானதாக இருந்தது.

கதை சொல்லும் அகமதாபாத் மைதானத்து சித்திரங்கள் 

குத்துச்சண்டை மொழியில் சொல்வதென்றால், எடுத்தவுடன் தாக்காமல் ஆஸ்திரேலிய அணி முதலில் வெற்றுக் குத்துகளை விட்டுப் பார்த்தது. இந்திய அணியின் தற்காப்பு உத்திகள் அம்பலமானவுடன், சரமாரியான குத்துக்களை அந்தாணி இந்திய அணி மீது கட்டவிழ்த்து விட்டது. ஆஸ்திரேலிய அணியின் அந்த உத்தி எதிரிகளைப் பலத்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்திய அணியிடம் அதுவரையிலும் தோன்றியிராத பீதியும், அழுத்தமும் திடீரென வெளிப்பட்டது. அலறிக் கொண்டிருந்த மக்கள்கடல் மெதுவாக தன்னுடைய குரலை இழந்தது. இந்தியப் பிரதமர் மைதானத்திற்கு வந்து சேர்ந்த நேரத்தில், இந்தியா ஆட்டத்தை முழுமையாக இழந்த நிலையில் இருந்தது. ஒருவருக்கொருவர் என்று உருவாக்கப்பட்ட கிரிக்கெட்டும், இந்திய அணியும் விடைபெற்றுக் கொள்ளத் துவங்கியிருந்தனர்.   

ஆஸ்திரேலிய அணி ஆக்ரோஷத்துடன் இந்திய அணியைத் தாக்கியது. அந்த மைதானத்திற்கு வந்திருந்த கூட்டம் கிரிக்கெட் போட்டியைக் காண வரவில்லை. அவர்கள் அனைவரும் இந்திய வெற்றியைக் கொண்டாடுவதற்காக மட்டுமே அங்கே வந்திருந்தனர் - ஆஸ்திரேலியர்கள் ஆடிய அற்புதமான கிரிக்கெட்டைப் பாராட்டுவதற்காக அல்ல.


இந்தியாவின் வெற்றியை உறுதி செய்து தரும் மந்திரக் காப்பு என்று அவர்கள்  நம்பிக்கை வைத்திருந்த மோடியால்கூட அவர்களுடைய ஆர்வத்தை அதிகரிக்க இயலாமல் போனது. அவர்களுடைய உலகம் முற்றிலுமாகச் சரிந்து நொறுங்கிப் போனது; கனவுகள் துண்டு துண்டாகச் சிதறிப் போயின. அவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்திருக்க வேண்டும். எனவே பவுண்டரி, சிக்ஸர் அடிக்கப்பட்டதை, சதம் அடிக்கப்பட்டதை, நிலைமை சாதகமாக இல்லாத நிலையிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதைப் பாராட்ட அவர்கள் மறுத்தனர்.   

விளையாட்டில் வேறெதைக் காட்டிலும் மைதானத்திற்கு வரும் கூட்டத்தின் அமைதியே திருப்திகரமாக இருக்கும். நாளைய தினம் அதுவே எங்கள் நோக்கமாக இருக்கும்’ என்று இறுதிப் போட்டிக்கு முந்தைய நாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு வெற்றிக் கோப்பையை அவர் உயர்த்திப் பிடித்த போது மைதானத்தில் நிலவிய அமைதி அவருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கலாம் - ஆனால் நிச்சயமாக உலகின் பார்வையில் இந்தியாவின் பெருமைக்கு அந்த அமைதி களங்கம் ஏற்படுத்தி  விட்டது என்பதே உண்மை.    

  

https://thewire.in/sport/india-cricket-world-cup-2023-final-pradeep-magazine

Comments