தங்களுடைய அரசியல் கருத்துக்களை ஆசிரியர்கள் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமா?

அபூர்வானந்த்

ஃப்ரண்ட்லைன்


புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் 2016 மார்ச் மாதம் தேசியவாதம் குறித்து மாணவர்களிடம் உரையாற்றிய வரலாற்றாசிரியர்கள் ரொமிலா தாப்பர், ஹர்பன்ஸ் முகியா

ஆசிரியர் ஒருவர் யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பது பற்றி தன்னுடைய மாணவர்களுக்குச் சொல்லித் தரலாமா?  அவர் வகுப்பறையில் தன்னுடைய தனிப்பட்ட கருத்துகளை, குறிப்பாக அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தலாமா?  ஒருவரின் தனிப்பட்ட அல்லது அரசியல் கருத்துகள் அவருடைய அறிவாற்றலுடன் தொடர்பின்றி இருக்குமா?

இதுபோன்ற கேள்விகளுக்கான விடைகள் குறித்து மக்களிடம் வெவ்வேறான கருத்துகள் இருந்து வருகின்றன. அவற்றிற்குப் பதிலளிக்கும் முன்பாக பேராசிரியர்கள் கைது செய்யப்படுகின்ற, பதவியிலிருந்து விலகுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்ற அல்லது தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்காகப் பணிநீக்கம் செய்யப்படுகின்ற வகையிலான தாக்குதல்களை எதிர்கொண்டு வருகின்ற இந்தியாவிலே அந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை நாம் நினைவிலே கொள்ள வேண்டும்.    

பாரதிய ஜனதா கட்சியை விமர்சிக்கும் ஆய்வுக் கட்டுரையின் சில முடிவுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்த காரணத்தால் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் முற்பகுதியில் அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர்.சப்யசாச்சி தாஸ் தான் வகித்து வந்த பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டியதாயிற்று. அவர் எடுத்த முடிவிலிருந்து பல்கலைக்கழகம் மிகவும் வெளிப்படையாகவே ஒதுங்கிக் கொண்டது. அது மட்டுமல்லாமல் தன்னுடைய ஆசிரியர்களின் சமூக ஊடக செயல்பாட்டைத் தாங்கள் விரும்பவில்லை என்றும் அது அறிவித்தது.  மேலும் அந்த விவகாரம் தங்கள் பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் மற்றும் ஆய்வுகளில் ஆசிரியர்களுக்கு இருக்கின்ற  தேர்வுகள் மீது எந்தவொரு அழுத்தத்தையும் ஏற்படுத்தாது என்றும் அந்தப் பல்கலைக்கழகம் கூறிக் கொண்டது.  

அசோகா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

பிரபல கல்வியாளர் பிரதாப் பானு மேத்தா

எழுத்தாளரும், கல்வியாளருமான பிரதாப் பானு மேத்தா இதே அசோகா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து இதற்கு முன்னர் விலகிக் கொண்டிருந்தார்.  ஊடகங்களில் வெளியிடப்பட்ட மேத்தாவின் கருத்துகள் குறித்து அரசு அதிருப்தி தெரிவித்திருந்தது. மேத்தாவின் அறிவாற்றல் மதிப்பு மிக்கது என்றாலும், அவரது அரசியல் கருத்துகளால் பல்கலைக்கழகத்தின் செயல்பாடு பாதிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக பல்கலைக்கழகம் அப்போது கூறியிருந்தது.

அன்அகாடெமி என்ற இணையவழி கல்வித் தளத்தின் சட்டத்துறை சார்ந்த கல்வியாளரான கரண் சங்வான் அந்தக் கல்வி நிறுவனத்தால் அண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.  ஆசிரியர் ஒருவர் தனிப்பட்ட கருத்துகளை வகுப்பில் வெளியிட்டு மாணவர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்ற தங்களுடைய நிறுவனத்தின் நடத்தை விதிகளை அவர் மீறினார் என்ற குற்றச்சாட்டு பல்கலைக்கழகத்தால் முன்வைக்கப்பட்டது. 

சட்டத்துறை ஆசிரியரான சங்வான் தன்னுடைய வகுப்பில் இருந்த மாணவர்களிடம் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டங்களை மறுசீரமைக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் குறித்து பேசியிருந்தார். மாணவர்கள்  படித்த தலைவர்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டுமென்றும், பின்விளைவுகளைப் பற்றி நன்கு சிந்தித்து முடிவெடுக்கின்ற தலைவர்களையே அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் அவர் மாணவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.  

பொருத்தமான கேள்விகள்

இந்தச் சம்பவம் இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்பி விவாதத்தைத் தூண்டியது.  படித்தவர்களுக்கு மட்டுமே வாக்களித்து பதவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பரிந்துரைப்பது சரிதானா?  கல்விக்கும், எழுத்தறிவிற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்பதை நாம் நன்கு அறிவோம்.  பட்டம் பெறாதவரை படிக்காதவர் என்றும் படித்தவர் விவேகமான, பகுத்தறிவு சார்ந்த முடிவுகளை எடுக்கக்கூடியவராக இருப்பார் என்றும் சொல்வது தவறாகவே இருக்கும்.

தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராசர் முறையான கல்வி கற்றவரில்லை என்ற போதிலும் திறமையான நிர்வாகி என்றே பரவலாக அறியப்பட்டிருந்தார்

சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த காமராசர் முறையான கல்வி பெற்றவரில்லை.  ஆனாலும் இன்றுவரையிலும் இந்திய வரலாற்றில் மிகத் திறமையான, வெற்றிகரமான முதலமைச்சர் என்று அவர் கருதப்படுகிறார்.  மாநிலத்தில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை ஏழு சதவிகிதத்திலிருந்து முப்பத்தியேழு சதவிகிதம் என்ற அளவிற்கு அவரது ஒன்பது ஆண்டு கால ஆட்சியில் அதிகரித்தது.  பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அவர்தான் முதன்முதலாகத் தொடங்கி வைத்தார்.  சமகாலத்தில் இருந்த மற்ற தலைவர்களைப் போல ஆங்கிலம் பேசாதவராக இருக்கலாம் என்றாலும் தமிழ்நாட்டிற்கு மிகச் சிறந்த நிர்வாகத்தை காமராசர் வழங்கியதைப் போல வேறு யாரும் செய்ததில்லை என்று ஜவஹர்லால் நேரு ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். காமராசரை படித்தவர் என்று சொல்லலாமா அல்லது கூடாதா?  கல்வி என்பது வெறுமனே பட்டப்படிப்புகளால் நிரூபிக்கப்படுகின்ற, எழுத்தறிவு அடிப்படையிலான கல்வியாக மட்டுமே இருப்பதில்லை.       

இரண்டாவது முக்கியமான விவாதம் ஆசிரியர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்பதை மாணவர்களுக்குச் சொல்லித் தர வேண்டுமா என்பது குறித்து இருந்தது. ஆசிரியர்கள் தங்களுடைய சொந்த அரசியல் கருத்துக்களை மாணவர்களிடம் தெரிவிக்கலாமா அல்லது கூடாதா?  அசோகா பல்கலைக்கழகம், அன்அகாடமி போன்ற கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்கள் தங்களுடைய தனிப்பட்ட கருத்துக்களை மாணவர்களிடம் வெளிப்படுத்தக்கூடாது, அவர்களுடைய வேலை தரமான கல்வியை வழங்குவது மட்டுமே என்று கூறுகின்றன.   

அந்தக் கருத்து பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கும் சேர்ந்து பொருந்துமா?  பள்ளி மாணவர்கள் எவராலும் ஈர்க்கப்படக்கூடிய மனம் கொண்டவர்களாக இருப்பதால் அவர்கள் மீது ஆசிரியர்களால் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால் ஆசிரியர்கள் அவர்கள் மீது தங்கள் கருத்துகளைத் திணிக்கக் கூடாது என்ற பொதுவான கருத்து இருந்து வருகிறது.  ஆனால் அதை இவ்வாறு வித்தியாசமாகப் பார்க்க வேண்டும். ஆசிரியர் தன்னுடைய கருத்தை மாணவர்களிடம் தெரிவிக்கின்ற வேளையில் அந்த மாணவர்கள் தாங்கள் ஆசிரியருடன் சமமானவர்கள் என்ற உணர்வைப் பெறுகிறார்கள். ஆம், ஆசிரியர்கள், மாணவர்கள் இருவருமே தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான சமமான வாய்ப்பைப் பெற்றிருப்பது மிகவும் அவசியம்.  மாணவர்கள் ஆசிரியர் முன்பாக அமைதியுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் ஆசிரியரிடம் தனக்கிருக்கும் கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தலாம் என்று மிகவும் நம்பிக்கையுடன் மாணவர் உணரும் அளவிற்கு வகுப்பறைக்குள் தன்னுடன் மாணவர்கள் கலந்துரையாடும் சூழ்நிலையை ஆசிரியர் உருவாக்கி இருந்தால், மாணவர்களிடம் ஆரோக்கியமான விவாதத்தை ஆசிரியரின் இதுபோன்ற முயற்சிகளால் நிச்சயம் தொடங்கி வைக்க முடியும். கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பது, மாறுபட்ட பார்வைகளை எதிர்கொள்வது போன்றவையும் நாம் கற்றுக் கொள்கின்ற அல்லது கற்றுத் தருகின்ற பாடங்களாகவே இருக்கின்றன.         

தன்னுடைய அரசியல் கருத்தை வெளிப்படுத்துகின்ற ஆசிரியர் தகாத வழியில் மாணவர்கள் மீது செல்வாக்குச் செலுத்த முயல்கிறாரா?  பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு அரசியல் சார்பு கொண்ட ஆசிரியர்கள் இருந்து வருகின்றனர்.  அவர்களிடமுள்ள வெவ்வேறான கருத்துகளை ஒப்பிட்டுப் பார்த்தே மாணவர்கள் தங்களுக்கான கருத்துகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.  துறை, வகுப்பு மீது ஆசிரியருக்கு இருக்கும் சிரத்தையின் காரணமாக மிகச் சிறந்த ஆசிரியராக இருப்பவரின் கருத்து மற்றவர்களின் கருத்துகளைக் காட்டிலும் அதிக அளவில் தாக்கம் கொண்டதாக இருக்கும் என்பது ஓரளவிற்கு உண்மைதான் என்றாலும், அந்த ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தங்கள் செல்வாக்கைச் செலுத்துவதென்பது அவ்வளவு எளிதான காரியமாக இருப்பதில்லை.     

நேர்மைக்கான கொள்கை

வகுப்பறைக்கான நேர்மை என்ற கொள்கை இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்களிடையே விவாதப் பொருளாக இருந்து வருகிறது.  எடுத்துக்காட்டாக அறிவியல் வகுப்பில் பூமியின் தோற்றம் அல்லது பரிணாமக் கோட்பாடு குறித்த விவாதத்தின் போது ஆசிரியரிடம் உள்ள பாரபட்சமற்ற தன்மைக்கு என்ன பொருள் இருக்கும்?  அத்தகைய விவாதம் அமெரிக்காவைப் பொறுத்தவரை ஆசிரியருக்கு ஆபத்தானதாகவே இருக்கும். இங்கே அரசியல் சர்ச்சைக்குரியதாகிறது.  ஆசிரியர் தனது கருத்தை வெளிப்படையாகச் சொன்னால்தான் அவரது அரசியல் சித்தாந்தம் மாணவர்களுக்குத் தெரிய வரும் என்பதே உண்மையில் தவறான கருத்தாகும். ஆசிரியரின் அரசியல் சார்புகளை அவர் கற்பிக்கும் முறையைக் கொண்டே மாணவர்களால் எளிதில் ஊகித்து அறிந்து கொள்ள முடியும்.  

எழுத்தாளர்கள், நூல்கள் போன்றவற்றை ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறையே அவர்களை வெளிப்படுத்திக் காட்டுவதற்குப் போதுமானவையாக இருக்கின்றன. மாணவர்களிடம் கருத்துகளை உருவாக்குவதில் ஆசிரியர் அல்லது கல்வி நிறுவனத்திற்கு பங்கு இருக்கிறது என்று தேவையற்ற முக்கியத்துவத்தைத் தரும் நாம் மாணவர்கள் தங்களுடைய குடும்பம், நண்பர்கள் மற்றும் பரந்த சமூகம் எனத் தங்கள் மீது செல்வாக்கு செலுத்துகின்ற பல வெளிகளில் வாழ்ந்து வருவதை எளிதில் மறந்து விடுகிறோம்.  மாணவர்களுடைய அந்தப் பிரபஞ்சத்தில் ஒரு பகுதியாக மட்டுமே ஆசிரியர்கள் இருக்கின்றனர்.    

பிரச்சனை உண்மையில் மாணவர்களிடம் இல்லை, பெற்றோரிடம் அல்லது சமூகத்தில்தான் அது இருக்கிறது என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். தங்களுடைய குழந்தைகள் வழிதவறிப் போய்விடுவார்களோ என்ற பயம் பெற்றோர்களுக்கு இருக்கிறது. அவர்கள் தங்களுடைய சொந்தக் கருத்துகள், சார்புகளை கல்வி நிறுவனம் அல்லது ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளிடம் உறுதிப்படுத்தித் தர வேண்டும் என்றும், தங்கள் குழந்தைகளை கேள்வி கேட்க ஊக்குவிக்கும் வகையில் ஆசிரியர்கள் எதையும் செய்யவோ அல்லது சொல்லவோ கூடாது என்றும் விரும்புகின்றனர்.

எடுத்துக்காட்டாக ராமகாதையை எடுத்துக் கொள்ளுங்கள்.  ராமரின் கதை குறித்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருந்து வருகின்ற வெவ்வேறு பதிப்புகள் மீது தனக்குள்ள பார்வையை ஆசிரியர் மாணவர்களிடம் சொல்ல வேண்டுமா?  வெவ்வேறு கவிஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ராம கதையின் வெவ்வேறு பதிப்புகள், சிந்தனைகளைப் பற்றி ஆசிரியர் மாணவர்களிடம் பேச வேண்டுமா? அல்லது தான் அதிகம் விரும்புகின்ற பதிப்பைப் பற்றி மட்டுமே  அவர் விவாதிக்க வேண்டுமா?         

ஒரு கவிதையைக் கற்பிக்கும் போது ​​அந்தக் கவிதையைப் பற்றிய பல்வேறு விமர்சகர்களின் கருத்துகளை மாணவர்களுக்குத் தெரிவிப்பது ஆசிரியரின் கடமையாகாதா?  சில நேரங்களில் அவ்வாறு விளக்கிய பிறகும், அதைப் பற்றி அந்த ஆசிரியர் என்ன நினைக்கிறார் என்பதையும் தெரிந்து கொள்ள மாணவர்கள் விரும்பலாம்.  ஆசிரியர் பகிர்ந்து கொள்ளக்கூடிய கருத்தை ​​மாணவர்கள் மதிப்பீடு செய்யலாம், நிராகரிக்கலாம் என்பதால் தன்னுடைய சொந்தக் கருத்தை அல்லது அந்தக் கவிதை குறித்த மதிப்பீட்டை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத ஆசிரியர் மாணவர்களின் விமர்சனத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்பவராகவே இருக்கிறார்.  

முரண்படுகின்ற சிந்தனைகள்

அரசியலைப் பொறுத்தவரை இது கூடுதல் உண்மையாக இருக்கிறது தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பதன் மூலம் ஆசிரியர்கள் விவாதம் ஒன்றைத் தொடங்கலாம். அவரது திறனாய்வை அதனுடன் முரண்படுகின்ற சிந்தனைகளுடன் ஒப்பிடுவதற்கான வாய்ப்பை மாணவர்களுக்கு அவர் அளிக்கலாம்.  எடுத்துக்காட்டாக கரண் சங்வான் அவ்வாறு கூறியதற்குப் பிறகு, ஜனநாயகத்தில் தலைவர்களுக்கான கல்வியின் அவசியம் குறித்து அவரது மாணவர்கள் அவருடன் விவாதம் நடத்தியிருக்கலாம். அந்த விவாதம் அரசியலமைப்புக் கோட்பாட்டின் வளர்ச்சியின் பின்னணியைப் புரிந்து கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தியிருக்கக் கூடும்.   

சங்வானின் தாக்கத்தால் அந்த  மாணவர்கள் நரேந்திர மோடிக்குப் பதிலாக ராகுல் காந்திக்கு வாக்களித்து விடுவார்கள் என்று கருதுவது முட்டாள்தனமான காரியம் என்ற அளவிலேயே இருக்கும்.  உண்மையாகச் சொல்வதென்றால் பெரும்பாலான மாணவர்கள் சங்வானைப் புறக்கணிக்கவே செய்திருப்பார்கள். தனது கருத்தை கரண் சங்வான் வகுப்பறையில் மாணவர்களிடம் தெரிவித்திருக்கவில்லை என்றால், அவர் தனது தொழிலில் நேர்மையாக இல்லை என்றே ஆகியிருக்கும்.  கருத்து தெரிவிப்பது அவரது உரிமை.  அது அவருடைய கடமையும்கூட.  அதே போல் ஆசிரியரின் கருத்தை அறிந்து கொள்வது மாணவர்களின் உரிமையாகும். இத்தனைக்குப் பிறகும் மாணவர்கள் ஆசிரியரின் கருத்துக்களைக் கட்டாயமாக  ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை என்பதைச் சொல்லத் தேவையில்லை.  

ஒரு நாட்டில் அல்லது சமூகத்தில் சில விதிவிலக்கான சூழ்நிலைகளில் ஆசிரியர்கள் தங்கள் அறிவு உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளும் போது பாரபட்சமற்ற தன்மையைக் கைவிட வேண்டியிருக்கும். எடுத்துக்காட்டாக அமெரிக்க உளவியலாளர்கள் தொழில்முறை சார்ந்த தங்கள் கருத்தின் அடிப்படையில்  டிரம்ப் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவராகத் தோன்றுவதால் அவரைப் பற்றிய தங்கள் கருத்துகளை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தப் போவதாக டொனால்ட் டிரம்ப் முதன்முறையாகப் போட்டியிட்ட போது கூறினர்.  ஒருவரை நேரடியாக ஆய்வு செய்யாமல் அவரைப் பற்றி உளவியல்ரீதியான கருத்து எதனையும் தெரிவிக்கக் கூடாது என்ற தங்கள் தொழில் சார்ந்த  கட்டுப்பாடுகளை (கோல்ட்வாட்டர் விதி) மீறி அந்தக் கருத்தைத் தாங்கள் வெளியிடுவதாக அவர்கள் அப்போது கூறினர்.   

டிரம்ப் அல்லது அரசியல்வாதிகளின் மனநலம் குறித்து கோல்ட்வாட்டர் விதியைப் புறக்கணித்து பகிரங்கமாக விவாதிப்பதற்கு அமெரிக்க உளவியல் பகுப்பாய்வு சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு விலக்கு அளித்தது. டிரம்பின் வேட்புமனுவால் உருவாகியிருந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த முடிவை அவர்கள் எடுக்க நேர்ந்தது.  அவர்கள் விடுத்த எச்சரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாததன் விளைவுகளை அமெரிக்க மக்கள் இன்னமும் எதிர்கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அறிவும் மேற்கொள்ள வேண்டிய பொறுப்பாகவே இருக்கிறது.

படித்த தலைவர்களுக்கு வாக்களிக்குமாறு மாணவர்களிடம் கேட்டுக் கொண்டதால் நிறுவனத்தின் நடத்தை விதிகளை மீறியதற்காக அன்அகாடமி நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட கரண் சங்வான் ஆசிரியராக தனது கடமையைச் சரிவர ஆற்றியவராகவே இருந்தார்

அதேபோல பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற பொறுப்பற்ற முடிவுகளை எடுத்து, அல்லது நான்கு மணி நேர முன்னறிவிப்பில் நாடு முழுவதற்குமான பொதுமுடக்கத்தை அறிவித்து அதன் காரணமாக நாட்டில் உள்ள மக்களின் வாழ்க்கை முற்றிலும் குழப்பம் நிறைந்ததாக மாறிய போது, ​​​​ஆசிரியர் ஒருவர் பாரபட்சமற்ற தன்மையைக் கைவிட்டு விட்டு அந்தத் தலைவரின் செயல்கள் நாட்டுக்கு ஏன் தீங்கானவை என்பதை மாணவர்களிடம் அவசியம் விளக்கிச் சொல்ல வேண்டும்.  அத்தகைய உரையாடல்கள் ஆசிரியத்தொழில் நீடித்திருப்பதற்கும் தேவைப்படுகின்றன. அதைத்தான் கரண் சங்வான் தன்னுடைய வகுப்பறைக்குள் செய்து கொண்டிருந்தார். 

https://frontline.thehindu.com/the-nation/education/controversy-should-teachers-share-their-political-opinions-with-students-sabyasachi-das-ashoka-university-karan-sangwan-unacademy/article67223267.ece?utm_source=clevertap&utm_medium=mailer  

Comments

Vijayakumar said…
என்னுடைய 36 ஆண்டு கால ஆசிரியப் பணியில் மாணவர்களிடம் அரசியலை வெளிப்படையாகப் பேசியுள்ளேன்.மாணவர்கள் என்னுடன் உயிரோட்டமான உரையாடலை நிகழ்த்தி உள்ளனர். உரையாடல் வழிக் கல்வியே உயர்ந்ததாகும்.
NAGARATHAN said…
மாணவர்களிடம் உரையாடலை அனுமதிக்கும் ஆசிரியர்கள்தான் சிந்திக்கக்கூடிய, திடமான, தரமான சமூகத்தின் வழிகாட்டிகள். தன்னுடைய கருத்தைத் திணிக்கும் ஆசிரியர்கள் சமூக சீர்கேட்டின் அவலம்.