காலச்சுவடு தலையங்கம்
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை தமிழகப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சிக் கல்லூரிகள் அனைத்துக்கும் பொதுப் பாடத்திட்டம் ஒன்றை வேகவேகமாக அறிமுகப்படுத்த முனைந்திருக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் உள்ளிட்ட 'ஒரேவைக் கடுமையாக எதிர்க்கும் தமிழக அரசு ஏன் 'ஒரே' பாடத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறது ?
ஏற்கெனவே இருக்கும் பாடத்திட்டத்தில்
அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவான கூறுகள் ஐம்பது விழுக்காட்டுக்கு
மேல் இருக்கின்றன. எந்த ஒரு முதன்மைப் பாடத்திற்கும் அடிப்படையான தாள்கள்
என்றிருப்பவற்றை எந்தப் பல்கலைக்கழகமும் தவிர்க்க முடியாது. வேறுபடுபவை விருப்பத்
தாள்கள், சிறப்புத் தாள்கள் ஆகியவைதான். அப்படியிருக்கப் பொதுப் பாடத்
திட்டத்தின் அவசியம்தான் என்ன ?
அதுவும் உயர்கல்வி மன்றம்
கொடுத்திருக்கும் பாடத்திட்டம் படுமோசமானதாக இருக்கிறது என ஒவ்வொரு துறையைச்
சார்ந்த ஆசிரியர்களும் தெரிவிக்கின்றனர். அவசரகதியில் பல
பாடத்திட்டங்களிலிருந்து உருவியெடுத்துப் புதிது போல ஒன்றைக் கட்டியிருப்பதாகச்
சொல்கின்றனர். பாடத்திட்டம் காலந்தோறும் ஏற்படும் மாற்றங்களைக் கணக்கில்
கொண்டு பொலிவு பெற வேண்டும். சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும்
பாடத்திட்டத்தைச் சமூகநீதியை முன்வைக்கும் அரசு அறிமுகப்படுத்தலாமா ?
உயர்கல்வி மன்றம் வகுத்துக்
கொடுத்திருக்கும் 'மாதிரிப் பாடத்திட்டத்தில் இருபத்தைந்து விழுக்காடு மாற்றம்
செய்து கொள்ளலாம் என்றொரு விலக்கு இருப்பதாகச் சொன்னார்கள்; அதிலும்
தெளிவில்லை. பின்னர் ஐம்பது விழுக்காடு மாற்றிக்கொள்ளலாம் என்றார்கள்; அதுவும்
தெளிவில்லை. பல்கலைக்கழகங்களைவிடத் தன்னாட்சிக் கல்லூரிகள் தடுமாறிப் போயின.
தன்னாட்சி மதிப்பு என்பதன் முதன்மைக் கூறு பாடத்திட்டத்தை அக்கல்லூரியே
தீர்மானித்துக்கொள்ளலாம் என்பதுதான்.
கல்லூரி அமைந்திருக்கும்
வட்டாரத்திற்கேற்றவை, வேலைவாய்ப்புக்கு உகந்தவை, உலக அளவில் ஏற்பட்டிருக்கும்
துறை சார்ந்த புதிய வளர்ச்சிகள் ஆகியவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு
பாடத்திட்டம் வகுத்துக்கொள்வது தன்னாட்சிக் கல்லூரிகளில் எளிதாகச் சாத்தியமாகும்
என்பது உண்மை. தனிப் பாடத்திட்டம் வகுத்துக்கொள்வது, தேர்வு நடத்திச் சான்றிதழ்
வழங்குவது முதலிய பணிகளை மேற்கொள்ளும் வசதியும் திறனும் அக்கல்லூரிக்கு
இருக்கிறதா என்பதை ஆராய்ந்துதான் தன்னாட்சி மதிப்பு வழங்குகின்றனர். அப்படி
இருக்கும் போது அடிப்படை நோக்கத்தில் தலையிடுவது போலப் 'பொதுப் பாடத்திட்டத்தை ஏன் தன்னாட்சிக்
கல்லூரிகளில் அமுல்படுத்த வேண்டும் ?
ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளில்
குறைபாடுகள் இருப்பதாகக் கருதினால் அவை எத்தகையவை, இப்போது இருக்கும் அமைப்பு
முறைக்குள்ளேயே அவற்றைக் களைய வழிவகைகள் உள்ளனவா, வேறு வழிமுறைகள் தேவையா
என்பனவற்றை எல்லாம் விரிவான ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை பெற்று நடவடிக்கை
மேற்கொண்டிருக்க வேண்டும். ஏன் அப்படி நடக்கவில்லை?
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்திற்கான நூல்களை வெளியிட்டு விற்பனை செய்வதைத் தொழிலாகச் செய்து வரும் சில பதிப்பகங்களுக்கு இப்போதைய நடைமுறை கடினமாக இருக்கிறது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் தனித்தனிப் பாடத்திட்டக் குழுக்கள் உள்ளன; அதில் பல பேராசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்; எல்லோரையும் சென்று பார்த்து உரிய முறையில் கவனித்துத் தாம் சொல்லும் நூலைப் பாடத்தில் வைப்பதற்குச் சிரமப்பட வேண்டியிருக்கிறது. அதை எளிமைப்படுத்திக் கொள்ளப் பொதுப் பாடத்திட்டம் உதவும். பொதுப் பாடத்திட்டத்தை உருவாக்கும் உயர்கல்வி மன்றப் பாடத்திட்டக் குழு ஒன்றே ஒன்றைக் கவனித்துவிட்டால் போதும். தமிழ்நாடு முழுக்கத் தடை இல்லாமல் தம் நூல்களை விற்பனை செய்யலாம். அத்தகைய பதிப்பக உரிமையாளர்களின் ஆசையை, லாப நோக்கை உயர்கல்வித் துறை நிறைவேற்ற முனைந்திருக்கிறது என்றே தோன்றுகிறது. பாட நூல் வணிகம் சாதாரணமானதல்ல. அது பல கோடி புரளும் பெருவணிகம். அவ்வணிகத்தை ஒருசில தனியார்களே கைப்பற்றும் முயற்சிதான் பொதுப் பாடத்திட்டத்திற்குள் புதைந்திருக்கும் உண்மை என்று தோன்றுகிறது.
இந்தக் கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் உயர்கல்வித் துறை காட்டிய மெத்தனப் போக்கால் போதுமான எண்ணிக்கையில் மாணவர்கள் சேரவில்லை. தனியார் கல்லூரிகளுக்கு மாணவர்களை விரட்டும் வகையில் சேர்க்கைக் கொள்கையைக் கடைப்பிடித்தனர். மருத்துவம், பொறியியல் முதலிய தொழில்கல்வி மாணவர் சேர்க்கை முறையில் ஒளிவுமறைவற்ற ஒற்றைச் சாளர முறை வந்து பல்லாண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் கலைக்கல்லூரிச் சேர்க்கை முறையில் கல்லூரி அளவில் மட்டும் இருந்த ஒற்றைச் சாளர முறையையும் ஒழித்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்த தேர்வுப் பட்டியல், காத்திருப்புப் பட்டியல் ஆகியவற்றைத் தயாரித்து ஓரிடத்திற்கு இருவர் வீதம் மட்டுமே மாணவர்களை அழைக்க வேண்டும் என உயர்கல்வித் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது. அதைப் பின்பற்றியதால் பெருத்த தாமதம் ஏற்பட்டு இடம் கிடைக்காதோ என்னும் அச்சத்தில் பல மாணவர்கள் தனியார் கல்லூரிகளை நோக்கிச் சென்றுவிட்டனர். தனியார் கல்லூரிகளுக்கு ஆதரவாக உயர்கல்வித் துறை செயல்பட்டு வருவதன் சமீபத்திய உதாரணம் இது.
பொதுப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதிலும் உயர்கல்வித் துறை ஏராளமான குழப்பங்களைக் கொண்டிருக்கிறது. முதலாண்டு வகுப்புகள் தொடங்கிய பின்னரும் பொதுப் பாடத்திட்டமா, பழைய பாடத்திட்டமா என்பதில் தெளிவில்லை. உயர்கல்வி மன்றத்திலிருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான அறிக்கை. 'எல்லாப் பல்கலைக்கழகங்களும் பொதுப் பாடத் திட்டத்தையே பின்பற்றுகின்றன' என்று ஒரு அறிவிப்பு. 'பொதுப் பாடத்திட்டம் என்பது மாதிரிக்கானதுதான். பல்கலைக்கழகங்கள் தீர்மானித்துக்கொள்ளலாம்' என்று மற்றொரு அறிவிப்பு. ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது சொல்வது ஒன்றாகவும், பின்னர் நடப்பது வேறொன்றாகவும் இருக்கிறது. குழப்பங்களைத் தவிர்க்கச் சொல்லி ஆசிரியர் சங்கங்கள் போராட்ட அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
ஆசிரியப் பிரதிநிதிகளுடன் பேசியதற்கு
மாறாக அடுத்த நாள் உயர்கல்வி மன்றம் அறிக்கை வெளியிடுகிறது. இத்தகைய இரட்டை
நிலைப்பாடு நிர்வாகக் குழப்பத்தின் அறிகுறி.
லட்சக்கணக்கான மாணவர் வாழ்வைத்
தீர்மானிக்கும் பாடத்திட்ட விஷயத்தில் இத்தனை குளறுபடிகளும் நிர்வாகச்
சீர்கேடுகளும் நிலவுவது உயர்கல்வித் துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் அழகல்ல.
உயர்கல்வி அமைச்சர் மீது அமலாக்கத்துறை
நடவடிக்கை மேற்கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் தலையிட்டு பொதுப் பாடத்திட்ட விவகாரத்தில் தெளிவு தர வேண்டியது
அவசியம். அது தனியார் வணிக நலனை அல்ல மாணவர் நலனைக் கருத்தில் கொண்டிருக்க
வேண்டும்.
Comments